மெல்லினம்…மேலினம்…03

IMG-20230118-WA0010

மெல்லினம்…மேலினம்…03

மெல்லினம் 03

அன்னையின் விடா உழைப்பில், மகளும் அப்போ அப்போ அவருக்கு உதவி செய்து கொடுத்தாள்.

அன்னை படும் கஷ்டத்தை கண் கூட பார்க்கும் ரோஜா, அவளின் மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்தி, அதில் வெற்றியும் காணத்துவங்கினாள்.

ஆனால் பேச்சியோ ரோஜா எது செய்தாலும் பேசியப்படியே தான் இருந்தார்.

அவர் பேசும்போதெல்லாம் அமைதியாக கேட்டபடியே நிற்பாள்.

சுந்தரி கர்ப்பமான நாளிலிருந்து பேரன் தான் பிறப்பான் என நம்பி இருந்தவருக்கு, பிறந்தது என்னவோ ரோஜாவாக இருக்க மனதோரம் ஒருவித சுணக்கம்.

அதிலும் சுந்தரியின் கர்ப்பப்பை ரோஜா பிறந்ததில் பலவீனமாகிட, அடுத்த குழந்தை வேணாம் என முடிவெடுத்து சங்கரன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டார்.

முதலில் சுணக்கம், பின் வருத்தம் அடுத்ததாக ஆத்திரம் என அனைத்திற்கும் காரணமான ரோஜாவின் மீதே காட்டத் துவங்கினார்.

அது இப்போது வரையிலும் தொடர்கிறது.

சென்னையிலோ அன்னையை நல்ல வசதியான மருத்துவமனைக்கு மாற்றல் செய்தவன், தாத்தா பாட்டியிடம் அன்னையை ஒப்படைத்து விட்டு சரவணனுடன் கல்லூரி திரும்பினான்.

கல்லூரிக்கு வந்தவன், அவனுக்கு தெரிந்த நம்பகமான ஒரு ஆளை வைத்து சங்கரின் குடும்பத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்தான்.

அவர்களின் ஒவ்வொரு செயலையும் சொல்ல சொல்லியிருந்தான் சிம்மன்.

அவனால் எங்கேயும் நகர முடியாத அளவிற்கு வேலைகள் இழுத்து கொள்ள, அமைதியாக கல்லூரி மற்றும் மருத்துவமனை என வாசம் புரிந்தான்.

இதனாலயே இவன் அவர்களை சென்று பார்க்க வேண்டும் என நினைத்த போதெல்லாம் போக முடியாமல் போனது.

அதிலும் சங்கரனின் விபத்தை பற்றி அவர்களுக்கு வேறுவிதமாய் கூறப்பட்டிருக்க, அவனால் அவர்களை நெருக்க முடியவில்லை.

அதைவிடவும் சிம்மன் அவர்களை சந்திக்கவே பயந்தான். ஊரையே எதிர்த்து நிற்பவனால் இவர்களை நேர்பட சந்திக்க முடியவில்லை.

தவறு இவனிடம் இல்லையென்றாலும், அதை இழைத்தது அன்னையாக இருப்பின் குற்றவுணர்வில் தத்தளித்தான்.

பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பார்களே, அதேதான் இங்கேயும் நடந்தது.

அன்னை செய்த செயலுக்கு இவன் தண்டனை அனுபவிக்க முடிவு செய்திருக்க, அங்கே ரோஜாவோ செய்தா தவறுக்கு தண்டனை அனுபவித்தாள்.

அவளை கொஞ்சம் கொஞ்சமாக உயிருடனே சாகடித்து கொண்டிருந்தார் பேச்சி.

காலம் செல்ல செல்ல அவரின் பேச்சுக்கள் கூடியதே ஒழிய குறையவில்லை.

முதலில், அன்னையிடமோ தந்தையிடமோ ‘இப்படி அப்பாயி திட்டுகிறார்’ என்று சொல்லி அழுதவள், தந்தையின் இறப்பிற்குப் பின் எல்லாவற்றையும் தாங்கி கொள்ள ஆரம்பித்தாள்.

தாய் படும் கஷ்டத்தை நேரில் காண்பவளுக்கு, இது ஒன்றும் அத்தனை பெரிதாக தெரியவில்லை.

இத்தனைக்கும் வயதிற்கு வந்த போதும் அவளை கரிச்சு கொட்டியிருந்தார் பேச்சி.

மகன் இறந்த ஆறு மாதத்திலே ரோஜா வயதிற்கு வந்திருக்க, கிழவிகள் எல்லாம் சேர்ந்து ஒன்றுபோல்,” கெட்டது நடந்த வீட்ல ஒரு நல்லது நடந்திருக்கு” சொல்ல, கடுப்பாகிய பேச்சி அவர்களை உண்டில்லையென செய்துவிட்டார்.

“என்ன இதுல நல்லது நடந்திருக்கு. எம் மவனை கொன்ன பாவி. இந்த சனியன் பொறந்து தொலச்சதுனால தான் எம் மவன் இப்போ உசுரோட இல்ல. இது பிறந்து எங்க உசுரை எடுக்கிறதுக்கு பிறக்காமலே இருந்திருக்கலாம். என் குலத்தை அழிச்சவ” ஆத்திரம் தாங்காமல் கையை ஓங்கிவிட்டார்.

ஒவ்வொரு முறையும் பேச்சி தந்தையின் இறப்பிற்கு ரோஜாவின் பிறப்பும் ராசியும் தான் காரணம் சொல்லி சொல்லியே திட்ட, அது ரோஜாவின் மனதில் ஆழமாய் நுழைந்து அழுத்தமாய் பதிந்தது.

அவளும் அவர்கள் கூறுவது சரியென நினைத்து, அனைவரிடத்தும் ஒரு ஒதுக்கத்தை கடைப்பிடித்ததும்‌ இல்லாமல் தனக்குள் சுருண்டு கொண்டாள்.

இப்படியே நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாய் மாறி சென்றது.

சங்கரன் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.

பத்தாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தவளுக்கு, அடுத்ததாக அவளின் தலையில் இடி விழுந்தது போலானது அன்னையின் உடல்நலக் குறைவு.

மகளுக்காக… மகளுக்காக என ஓடியவர் அவரின் உடல்நிலையை கவனிக்க மறந்துவிட்டார்.

அது அவருக்கு ஆஸ்துமா என்ற நிலையில் விட்டுவிட்டது.

அன்னையின் நிலையில் உடைந்து போனாள் ரோஜா.தந்தையிடம் தினமும் அன்னையின் நலனுக்காக வேண்டுபவளுக்கு, இப்படியான செய்தி அவளை உடைய செய்தது.

பதினாறு வயதிலே அனைவரின் வாயிலும் ராசியில்லாதவள் என்று விழுந்தாள்.

மனம் வலித்தது தான் இருந்தாலும் பொறுத்து போனாள்.

இவற்றை எல்லாம் அவ்வப்போது அறிந்து கொண்டே தான் இருந்தான் நரசிம்மன்.

அவனுக்கு இவர்கள் படும் துன்பத்தை கேட்கும் போதெல்லாம் மனம் வலித்தது.

விபத்து நடந்த தருவாயில் சிம்மன் மூன்றாம் வருட பி.ஏ. எல்.எல்‌.பி படிப்பில் இருக்க, இப்போது இறுதி ஆண்டை முடித்து அடுத்து என்ன என்பது போல் பேசிய நேரம் அவனின் இத்தனை காலமாய் மனதினுள் வைத்திருந்த திட்டத்தை சொல்ல நினைத்தான்.

“எப்படியோ அரியர் இல்லாம பாசாக்கியாச்சி” சரவணன் சொன்னப்படி பெருமூச்சொன்றை விட்டான்.

“ஆமா டா…” என அவனுடன் இருந்தவர்கள் ஆமா சாமி போட்டனர்.

“அதிலும் இந்த இன்டெலக்ஷ்வல் ப்ராபர்ட்டி லா சப்ஜெக்ட்க்கு வேற நான் புது படத்துக்கு போய்ட்டேன். அடுத்தநாள் எக்ஸாம் வந்து கொஸ்டின் பேப்பரை பார்த்தா ஒன்னுமே தெர்ல. நைட் பார்த்த படம் தான் ஞாபகத்துக்கு வந்தது. என்னத்தையோ எழுதி வச்சிட்டு வந்தேன்” சிரிக்காமல் நண்பன் ஒருவன் சொல்ல, அவனை மொத்தி எடுத்தனர் நண்பர்கள் கூட்டம்.

இதில் எதிலும் கலந்து கொள்ளாது கல்பென்ச்சில் அமர்ந்து தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்த சிம்மனை காணும்போது நண்பனாய் கவலையுற்றான்.

இந்த இரண்டு வருடங்களாய் இவன் இப்படி தான் உயிர்ப்பை தொலைத்து நிற்கிறான்.

தந்தை இருந்தும் இல்லாமல் இருக்க, இப்போது தாயும் அதேப்போல் ஒரு நிலையில் இருக்க, நண்பனுக்கு ஆதரவாய் தோள் கொடுத்தான் சரவணன்.

“மச்சான்..!!!” அவன் அருகில் தோளில் கைப்போட, அவனை பார்த்தவன் அமைதியாய் கையில் வைத்திருந்த டீயை அருந்தலானான்.

“ஏன் டா இப்படி இருக்க? உன்னைய இப்படி பார்க்கவே எங்களுக்கு கஷ்டமா இருக்கு?” வேதனையுடன் பேச, வெற்று புன்னகை தான் அவனிடத்தில்.

“மச்சான்… இப்படி இருக்காதே டா. அது ஏதோ தெரியாம நடந்த விபத்து. அதை நினைச்சே உன்னை நீ அழிச்சிக்கிறது சரியா இல்ல டா” அறிவுரை வழங்க, அவன் எங்கே பேசினான் அமைதியாய் தான் இருந்தான்.

“டேய்! ஏதாவது பேசித்தொல டா. இப்படி உம்முனாங் கொட்டையாட்டம் இருக்காத” கத்தவே தொடங்கிவிட்டான் சரவணன்.

இவனின் சத்தமான பேச்சில் அங்கிருந்தோர் திரும்ப, நண்பர்கள் பட்டாளமோ” என்ன டா?” என்றனர்.

“ஒன்னுமில்லை டா” பதில் சொன்னவன் சிம்மனை இழுத்து கொண்டு ஆள் அரவமற்ற இடமாய் பார்த்து வந்தான்.

“எனக்கு ஒரு விஷயம் நீ சொல்லு, உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” ஆற்றாமையுடன் கேட்க,

பெருமூச்சொன்றை விட்ட சிம்மன், சரவணனை நிதானமாக திரும்பி பார்த்து அவன் அடுத்த செய்ய நினைத்த செயலை கூறினான்.

“நான் ப்ராக்டிஸ் செய்ய போறது இல்லை டா.அதுக்கு பதிலா அசிஸ்டன்ட் ப்ரோஃபசராக போறேன்” பெரிய குண்டாய் தூக்கி அவன் மண்டையில் மெதுவாய் இறக்க, அவனால் தான் அதன் பாரத்தை தாங்க முடியவில்லை.

“நீ என்ன பேசுறன்னு புரிஞ்சி தான் பேசுறீயா டா? ப்ராசிக்யூட்டரா ( prosecutor ) ஆகணும்ன்றது உன்னோட கனவு டா. அதை விடுறேன்னு சொல்ற?” கேட்டவன் பல்லை கடித்தான்.

“எல்லாத்தையும் யோசிச்சு தான் பேசுறேன் டா. அங்க ஒரு குடும்பமே எங்களால கஷ்டப்பட்டிட்டு இருக்கு. அவங்களோட வலியை என்னால உணர முடியல மச்சான். அதான் அதேப்போல நானும் அனுப்பவிக்கனும்னு நினைக்கிறேன். அதுக்கு நான் நேசிக்கிறதை இழக்கனும் டா. அப்போ தான் அதோட வலி எனக்கு புரியும்”சிம்மன் சொல்ல, நெற்றியை நீவினான் சரவணன்.

“நீ செய்றது எதுவும் சரியில்லை டா. ஏதோ நடந்தது, அதுக்காக அதை நினைச்சிட்டு உன் வாழ்க்கையை வீண் பண்ணுவீயா”   

“நீ என்ன வேணாலும் சொல்லு டா. ஆனா நான் என்னோட முடிவுல இருந்து மாறப் போறது இல்லை. ஏன் அம்பேத்கர் காலேஜ்ல பிஜிக்கு அப்ளை கூட செய்திட்டேன்” என்றவனை வெட்டவா குத்தவா ரேஞ்சில் தான் பார்த்து வைத்தான் சரவணன்.

அவனுக்கு புரிந்தது இவனை மாற்ற முடியாதென்று. இவன் ஒன்றை முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து பின்வாங்கி பார்த்ததில்லை. எது செய்தாலும் யோசித்து அதனை ஆராய்ந்த பிறகே அவனின் நூறு சதவீதத்தயையும் போடுவான்.

இதுவரை உண்மையாகவும் நேர்மையாகவும் மனசாட்சிக்கு புறமாக எதையும் செய்திட கூடாதென உறுதியாக இருப்பதனால் தான் அவனின் தந்தை செய்த செயலிற்காக இன்றளவும் அவரிடம் பேசாமல் இருப்பதுமட்டுமல்லாது, அவரை தந்தையென கூட யாரிடமும் அறிமுகம் செய்ததில்லை.

அதையும் மீறி யாரேனும் கேட்டால் கூட, “இருந்தாரு… இப்போ இல்லை” சொல்லி கடந்து விடுவான்.

மொத்தத்தில் அவன் ஒரு விடாக்கண்டன். பிடித்த பிடியில் நின்று அதனை நடத்தி முடிப்பவன்.

இத்தகைய குணத்தை கொண்டவர்கள் அவர்கள் நினைத்ததை சாதிக்க எத்தகைய செயல்களை வேண்டுமானாலும் செய்வார்கள். அதில் இவன் மட்டும் கொஞ்சம் வித்தியாசம். இவனின் பிடிவாதம் யாரையும் பாதிக்கும் வகையில் இருக்காது.

அவன் சொன்னதுப்போல் டாக்டர்.அம்பேத்கர் கல்லூரியில் பிஜி ஜாயின் செய்து விட, சரவணனோ சென்னையில் உள்ள ஒரு பெரிய அட்வக்கேட்டிடம் லாயராக சேர்ந்தவன், அதனுடனே அட்வகேட் ஆவதற்காக AIBE ( All India Bar Examination) தேர்விற்கு தயராக ஆரம்பித்தான்.

அந்த தேர்வு எழுதி பதிவு செய்த பிறகே, அவர்களால் நீதிமன்றத்தில் நின்று வாடிக்கையாளர்களுக்காக வாதாட முடியும். அதுவரைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் மட்டுமே வழங்க இயலும்.

சென்னையிலே கல்லூரி சேர்ந்ததனால், அன்னையை தினமும் பார்த்து வந்தான் சிம்மன்.

அவரை காணும் போதெல்லாம் அவனின் மனக்குமுறலை சொல்லி அன்னை மடித்தேடுவான்.

அன்னை தனக்கு ஆறுதல் சொல்லவாது எழுந்திட மாட்டாரா என்ற நப்பாசையும் இருந்தது மகனுக்கு.

தீனதயாளனுக்கு அன்னபூரணியின் நிலை உரிய காலம் கடந்த பிறகே தெரிய வந்திருக்க, அவரை பார்க்க சிம்மன் அனுமதிக்கவே இல்லை.

அவனிடம் எத்தனையோ முறை கேட்டுவிட்டார் பார்க்க அனுமதி தரும்படி, ஆனால் அவனோ விடாப்பிடியாக நின்று மறுத்துவிட்டான்.

தீனதயாளனிற்கு கவலையாக இருந்தது. இப்போது அவர்களுக்குள் பந்தம் இல்லையென்றாலும் உறவிருந்தது. அவர் மீது பாசமும் இருந்தது.

பார்க்க முடியவில்லை என்றாலும் விரைவில் சரியாக வேண்டுமென வேண்டுதல் வைத்தார்.

இவருக்கு ஒன்று தெரியவில்லை. இவர்கள் இப்போது இந்நிலையில் இருக்கவே இவர் தான் முழுமுதற் காரணமென….

காலம் தான் யாருக்கும் காத்திருக்காமல் சென்றது.

நான்கு வருடங்கள் கழித்து…

அரசர்குளும்

ரோஜா அன்று காலையில் சீக்கிரமே எழுந்து இரண்டு வேளைக்கும் சேர்த்து சமையல் செய்து முடித்தவள், வேக வேகமாய் கிளம்பினாள்.

பரபரப்பாய் அந்த குடிசை வீட்டில் சுற்றி திரிய, பேச்சியும் வாய் ஓயாமல் அவளை பேசினார்.

“பாப்பா! எதுக்கு இத்தனை பதறு பதறிட்டு இருக்க, அதெல்லாம் நீ நல்லா தான் பண்ணுவ. பயப்படாம போ” மகளுக்கு தைரியம் சொல்ல,

“சரி மா…”என்றாள்.

எதற்கும் அனைத்தும் எடுத்திருக்கிறோமா என்று ஒரு பார்வை பார்த்துக்கொண்டாள்.

“ம்மா, நான் கிளம்புறேன். நீங்க பார்த்து பத்திரமா இருங்க” அக்கறையுடன் சொல்லி அப்பாயியை ஒருமுறை பார்த்தவள், தந்தையின் படத்திற்கு முன்பு நின்றாள்.

“அப்பா..!! என்னைய ஆசிர்வாதம் பண்ணுங்க ப்பா. இன்னைக்கு எனக்கு ரொம்ப முக்கியமான நாள்”என்று மனதார தந்தையிடம் வேண்டுதல் வைத்தாள்.

“சரி மா,  நான் கிளம்புறேன்” என்று நின்றவளை கண்டதும்,

“நீ போறதுக்கு முன்னாடி ஐயா வீட்டுக்கு போய் ஆசிர்வாதம் வாங்கிட்டு போ டி. அவரால தான் இது எல்லாமே” சொல்ல, மெலிதாய் புன்னகைத்தாள்.

பின்னர், அன்னை சொன்னதுபோல் அவளின் பாசமிகு ஐயா வீட்டிற்கு வந்தாள்.

கனகவேல், வீட்டிற்கு வந்தவளை இன்முகத்துடன் வரவேற்றார்.

“வா மா”அன்பொழுக அழைக்க,

“வரேங்க ஐயா. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க ” என அவரின் காலில் விழுந்தாள்.

“நீ நல்லப்படியா பரிட்சை எழுதுவ மா.முதல எழுந்திரு”ஆசிர்வாதம் செய்தவர் அவளை எழ செய்தார்.

“சின்னம்மாவை பார்க்க கிளம்பிச்சியாச்சா ஐயா?”

“ஆமா மா. நாங்க திரும்பி வர எப்படியும் ஒரு மாசமாகும். அதுவரைக்கும் நீ தான் மாடு, ஆடு, கோழியை எல்லாம் பார்த்துக்கணும்” அவர் சொல்ல, அதனை கேட்டுக்கொண்டாள்.

“சரி நேரமாச்சு பாரு நீ கிளம்பு. நல்ல படியா எல்லா பரிட்சையும் எழுதணும்” சொல்ல, அவள் இதழில் மெலிதான புன்னகை தோன்றியது.

ரோஜாவும் நேரமாவதை உணர்ந்து கிளம்பிவிட்டாள்.

அன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வின் முதல் நாள்.

சங்கரியின் உடல்நிலை குறைவால் பத்தாம் வகுப்பு இறுதியில் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு அன்னையை கவனித்து கொண்டாள்.

அதிலும் பத்தாம் வகுப்பு பொது தேர்வின் போது அவரின் உடல்நிலை மோசமடைய, அவளால் தேர்வு எழுத முடியவில்லை. அடுத்த வருடம் தான் அவளால் அதனை எழுத முடிந்தது.

அதற்கு பின்பும் அவளால் ஒருவருடம் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. பேச்சி தான் அவளை பள்ளிக்கு செல்லக்கூடாது என்று நிறுத்திவிட்டார்.

சுந்தரி, முத்தையன்,கௌரி என அனைவரும் அவளை பள்ளிக்கு அனுப்பும் படி சொல்ல, அவரோ முடியவே முடியாது என ஒரே நிலையில் நின்றுவிட்டார்.

சுந்தரி ஒருநாள் அவள் வேலை பார்க்கும் இடத்தில் இதனை சொல்லி அழுக, கனகவேல் நேரவே வந்துவிட்டார்.

ஊர் பெரியவர் அனைவரும் போற்றும் ஒருவர் தன் வீடு தேடி வந்திருக்க, பேச்சிக்கு ஒன்றும் புரியவில்லை.

“இங்க பாரு ஆத்தா, படிக்கிற புள்ளையோட படிப்பை ஏன் நிப்பாட்ட பாக்குற, அதிலும் ரோசா நல்லா படிக்கிற புள்ள. அதோட படிப்பை ஏன் நிப்பாட்டனும். நீ அவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விடு”நிதானமாக அவர் சொல்ல,

“ஐயா! இப்போ மருமவளும் ஒடம்பு சரியில்லாம நோவு வந்து கிடக்கிறா. இவளையும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டா கஞ்சிக்கு வழியில்லாம போயிடும்”என,

“அது தான பிரச்சனை. ரோசா பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வந்து என்னோட வீட்ல வேலை பார்க்கட்டும்.நான் அவளுக்கு சம்பளம் தரேன்” சொல்லி பேச்சியின் வாயை அடைத்து விட்டார்.

பேச்சிற்கு கடுப்பாய் இருந்தாலும் அமைதியாய் இருந்தார்.

அதன்பின் தான் ரோஜாவால் பள்ளிக்கு செல்ல முடிந்தது.

அதனாலே என்னவோ கனகவேலின் மீது பெரும் நன்மதிப்பை கொண்டுள்ளாள்.

தேர்வு நடக்கும் இடத்திற்கு வந்தவள், பகவானை ஒருமுறை கும்பிட்டு விட்டு பரிட்சை எழுதும் இடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

அந்த பரிட்சையை அவள் நல்லப்படியாக எழுதி இருக்க, அடுத்தடுத்து வந்த பரிட்சையையும் நன்றாக எழுதியிருந்தாள்.

எப்போதும் ரோஜாவிற்கு துணை நிற்கும் கனகவேலும் இப்போது ஊரில் இல்லாது போக, கொண்டாட்டமாக இருந்தது பேச்சிக்கு.

பரிட்சை முடிந்து ஒருவாரம் முடிந்த நிலையில் அன்னையை தேடி வந்த ரோஜா,

“அம்மா! எனக்கு மேல படிக்கணும்னு ஆசையா இருக்கு. படிக்கட்டு மா” எனும்போதே இடையிட்ட பேச்சி,

“நீ கெட்ட கேட்டுக்கு ஒனக்கு படிப்பு ஒன்னு தான் கேடு. சின்ன வயசுலயே உன் அப்பனை முழுங்கின. இப்போ உன் ஆத்தாக்காரியையும் படுக்கையில படுக்க வச்சாச்சி. எந்த நேரத்துல பொறந்து தொலச்சியோ, இந்த வூட்டுக்கு சாபமா வந்து நிக்கிற” ஈவ்வு இரக்கமில்லாமல் பேத்தியை வசைப்பாடினார்.

இதனை கேட்ட ரோஜாவின் விழிகளில் கண்ணீர் தேங்கியது.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் பேச்சியின் பேச்சுக்கள் அவளை உயிரோட கொல்லும்.

மனமோ,’அப்பா என்னைய மன்னிச்சிடுங்க. நான் உங்களுக்கு பொண்ணா பிறக்காம இருந்திருந்தா நீங்க என்னைய விட்டு போயிருக்க மாட்டீங்கள’ என வேதனையுடன் கதறினாள்.

“இப்படியே அழுது அழுது தான் இந்த வீட்ட நாசம் பண்ணின, அது பத்தாதா ஒனக்கு. இன்னும் வேற எங்களை கஷ்டப்படுத்தனுமா?” என்றவர் அடுத்ததாக,

“ஒன்னைய  நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க. கிளம்பி இரு” என பேச்சி பேச்சோடு போச்சாக சொல்ல, ஸ்தம்பித்தாள் ரோஜா.

“அப்பாயி, எனக்கு இப்போ கல்யாணம் வேணாமே”கதற,

“இத்தனை வருஷம் ஒன்னைய வச்சிக்கிட்டதே பெருசு. இதுக்கு மேலயும் ஒன்னைய இங்க வச்சிக்க முடியாது. முன்னாடியே கல்யாணத்தை முடிச்சிருக்கனும். இதுவே தாமதம் தான். ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு தயாராகுற” மிரட்டலோடு சொல்லி செல்ல, அப்படியே திக்கு திசையறியாது நின்றாள் ரோஜா.

பேச்சி சொன்னதோடு மட்டுமல்லாமல் அனைத்தையும் வேகமாய் செய்ய, ஒருவராலும் ஒன்றும் பேச முடியவில்லை.

சுந்தரி மாமியாரிடம் எத்தனையோ முறை கெஞ்சி கதறிவிட்டார். மகளின் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி, அவர் எதையும் கேட்கவில்லை. தீவிரமாய் இருந்தார்.

அவள் வாழ்க்கை திக்கு திசை தெரியாமல் செல்ல, நாட்கள் பறந்து அவளின் திருமணத்தில் வந்து நின்றது.

அதிலும் முன் நாற்பதுகளில் இருந்ல கோபாலுக்கும் இருபதை தொட்ட ரோஜாவிற்கும் திருமண ஏற்பாட்டை செய்திருந்தார் பேச்சி.

இதனை கடைசி நேரத்தில் தான் அறிந்து கொண்ட சிம்மன், இறுதியாக பயந்து அஞ்சிய குடும்பத்தின் பெண்ணை காப்பதற்காக கிளம்பிவிட்டான் அரசர்குளத்தை நோக்கி…

error: Content is protected !!