மோகனங்கள் பேசுதடி!14

eiL5KAD79398-9b87991a

மோகனங்கள் பேசுதடி!14

 

மோகனம் 14

மாடியிலிருந்து மனைவியுடன் நடந்த ஊடலை நினைத்து அவன் அதரங்கள் புன்னகைக்க, கீழே வந்த விஷ்வாவை அவன் மகள் தன்போல் இழுத்தாள்.

பாதி படிகள் இறங்கியவன், மகள் செய்யும் அழிச்சாட்டியங்களில் தன்னை மறந்து நின்றான்.

குழந்தைகள் செய்யும் சேட்டைகள் பெரியவர்களுக்கு என கசக்கவா செய்யும். அதிலும் பூவினி விஷ்வாவின் வாழ்வை மலர வைக்கவென வந்தவள், அவளை அள்ளி முத்தாட ஆசை கொண்டவன் அப்படியே நின்றிருந்தான்.

“பாத்தி எனக்கு என் டெதி வேணும்” என தரையில் உருண்டு பிரண்டு கைகாலை ஆட்டி பிடிவாதம் பிடிக்க, சந்திரா அவளை தூக்க முயற்சித்து கொண்டிருந்தார்.

“அம்மு! நாளைக்கு காலைல போய் எடுத்துக்கலாம் டா. வா இப்போ தூங்க போகலாம்” அவளை எப்படியாவது சமாதனம் செய்து அறைக்கு அழைத்து சென்றுவிட பார்க்க, குழந்தையோ அடமோ அடம்.

“வத மாத்தேன் எனக்கு டெதி வேணும்… டெதி வேணும்…” சொல்லியதை மீண்டும் மீண்டும் சொல்லி , மூன்று மகள்களை பெற்று வளர்த்த சந்திராவையே ஒருவழி செய்து கொண்டிருந்தாள் அருவியின் மகள்.

“இங்க பாருங்க அம்மு, இந்த நேரத்துல வெளிய போன பூதம் வந்திடும் டா. அப்புறம் உன்னோட டெடியை தூக்கிட்டு போய்டும் அம்மு. பேசாம நாம நாளைக்கே போய் எடுத்துக்கலாம்.”

“நீ பொய் சொலுத்த பாத்தி.டெதி வேணும்”குழந்தையை அடுத்த கட்டமாக அழுகைக்கு தயாரானது.

இத்தனை நேரம் மகள் செய்யும் கலாட்டாக்களை கண்டு ரசித்திருந்தவன், மகள் அழுகைக்கு தயாராகவும் கீழே வந்துவிட்டான்.

“பேபி…” என்ற அழைப்பு அவர்கள் செவிக்குள் எட்டுவதற்குள் ‘அம்மு’ என்ற அழைப்புடன் வீட்டிற்குள் வந்தனர் அருணும் விழியும்.

“சித்தி என் டெதி” என இதழை பிதுக்க,”உனக்கு டெதி வேணுமா இல்ல சித்தி வேணுமா டா அம்மு” குழந்தையுடன் சிறிது விளையாட எண்ணி கேட்டாள்.

“இது என்ன விளையாட்டு?”அருண் சிறிது கடுமையை விழியிடம் காட்ட, அதனை உதாசினப்படுத்திய விழி, அவன் புறம் தலையை மட்டும் திருப்பி “ஷு,கொஞ்சம் பேசாம இருங்க” சொல்லியவள், “சொல்லு அம்மு நானா? டெதியா ?”

“நீ வேணாம் சித்தி… டெதி தான் வேணும். நீ என்னோத ஸ்னாக்ஸ சாபிதுர” பிள்ளை சித்தியை புகழ்ந்து தள்ளவும், குழந்தையின் வாயை வேகமாய் அடைத்தாள் விழி.

அதில் அருணிற்கு சிரிப்பு வர, மெல்லியதாய் ஒரு சிரிப்பொன்றை உதிர்த்தான்.

“போதும் டி தாயே” என அக்கா மகளுக்கு ஒரு கும்பீட்டை போட்டவள்,”இதோ அவரு கிட்ட தான் உன் பொம்மை இருக்கு போ போய் வாங்கிக்கோ” என்று அவள் அருணை கை காட்டியது தான் தாமதம் குழந்தை அருணிடம் ஓடியது.

“அங்கிள்” சொல்லி அவனை தலையை தூக்கி பார்க்க,

“என்ன வேணும் அம்முக்கு?” குழந்தைக்கு இணங்க அவளுக்கு சமமாய் குனிந்து கொண்டான்.

“என் டெதி!” கேட்டு குழந்தை மெலிதாக பூப்போல் சிரிக்க, அந்த சிரிப்பில் அவன் இதுவரை அனுபவித்திருந்த வலிக்கு ஒரு மருந்தாக அமைத்திருந்தது.

“பொம்மை கொடுத்தா எனக்கு என்ன கிடைக்கும்…?” குழந்தையிடம் டீல் பேசலானான்.

‘ம்ம்ம்’ கையை கன்னத்தில் வைத்து மேலே பார்த்த படி யோசனை செய்வது போல் பாவனை காட்டவுமே குழந்தையை அள்ளி முத்தாட தோன்றியது. ஆனாலும் அந்த பெரிய மனுஷி சொல்லப்போகும் பதிலுக்காய் காத்திருந்தான் அருண்.

“அய்ய்” குழந்தை குஷியாகி அருணின் கன்னத்தில் மென்மையாக முத்தமொன்றை பதித்து, “என் டெதி” என கையை விரித்து காட்ட, அவளை அப்படியே அள்ளிக்கொண்டவன் குழந்தையின் முகமெங்கும் முத்தமிட்டான்.

அப்போது தண்ணீர் குடிக்கலாம் என்று அறையை விட்டு வெளியே வந்த மஞ்சுளா, முகப்பு கூடத்தில் நடக்கும் நிகழ்வினை பார்த்து விழியோரம் கண்ணீர் தேங்கியது.

மூத்த மருமகள் இந்தரா இறப்பிற்கு பின், இவ்வீட்டில் புன்னகை என்பது பெயரளவில் மட்டுமே இருந்தது. அதிலும் அருண் தன் சுயத்தையே இழந்திருந்தான். வீடு இத்தனை வருடங்களாய் வெறும் கட்டிடமாய் தான் இருந்திருக்க, அதனை உயிர்ப்பாக்க வந்து சேர்ந்தார்கள் அருவியும் பூவினியும்.

அருணின் சந்தோசத்தை பார்க்க ஒரு அன்னையாக நெஞ்சம் நெகிழ்ந்து போனார்.

அருண் பொம்மையை குழந்தையின் கையில் தரவும், வாங்கிகொண்டவள் அவளின் அப்பாவை நோக்கி மான் போல் தாவி தாவி ஓடினாள்.

தன்னை நோக்கி பட்டாம்பூச்சியாய் பறந்து வரும் மகளை அள்ளி கொண்டான் விஷ்வா.

இத்தனை நேரம் அமைதியாய் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்திருந்த சந்திரா, பேத்தி யாரை பார்த்து ஓடுகிறாள் என்று பார்த்திருந்தவருக்கு அங்கு விஷ்வாவை பார்க்கவும் மனம் ‘இவரு இங்க என்ன பண்றாரு?’கேள்வி கேட்டது.

மகளுக்கு அறிவுரை சொன்னது போல் மருமகனுக்கு சொல்லவா முடியும்? கையை பிசைந்து கொண்டு மருமகனை பார்த்திருந்தார்.

அவரை கண்ட மஞ்சுளா, மகன் இந்த நேரத்தில் வெளியே இருக்கவும் தலையில் அடித்து கொண்டவர் அவனை நோக்கி நடையிட்டார்.

“விஷ்வா…இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்க?”

“ஏன் ம்மா இந்த டைம்ல இங்க நிக்க கூடாத என்ன?” அன்னையை கிண்டல் செய்ய எண்ணி கேட்கவும்,” நீ விடிய விடிய கூட இங்கேயே நில்லு யாரு வேணாம்னு சொன்னா, ஆனா உனக்கு மாமியாரா ஒரு அப்பாவில மாட்டிருக்காங்க. கொஞ்சம் அவங்களை திரும்பி பார்க்குறது” அன்னை சொல்லவும் கடைக்கண்ணால் மாமியாரை நோக்கினான்.

அவர் அவனை தான் ஒரு வித பதைபதைப்புடன் பார்த்திருந்தார்.

“மகளோட வாழ்க்கை நல்ல படியா இருக்கணும்னு ஒரு வித டென்ஷன்ல இருக்கும்போது நீ இப்படி வந்து நின்னா எப்படி டா? உன் ரூம்க்கு போ” சொல்லி குழந்தையை வாங்க முயல, ” வேணாம் ம்மா அம்மு எங்களோடவே இருக்கட்டும். இத்தனை நாள் அவ அம்மா கூடவே தூங்கிருப்பா. அதை மாத்த வேணாம்” என்றவன் குழந்தையை தன்னோடு அழைத்து சென்றான்.

இங்கே அறைக்குள் இருந்த அருவிக்கு அவன் செய்த செயல் அவளை திக்பிரமை பிடித்தது போல் அதே இடத்தில் நிறுத்தியது.

சில நொடிகளுக்கு பிறகே தன் சுயத்திற்கு வந்தவள், முத்தமிட்டு சென்ற இடத்தை அழுந்த தேய்த்தாள்.

‘இவனுக்கு என்ன ஆச்சி? எதுக்கு இப்படி ஒரு செயல்?’ பெண் அவனின் செயலில் குழம்பிப்போனாள். அவன் வருவதற்கு முன்பு அவனை திட்டி தன் மனதை ஆற்றியவள், இப்போது எங்கே வந்து விடுவானோ முத்தம் கித்தம் கொடுத்து விடுவானோ என்று பயந்து உடையை கூட மாற்றாது அந்த அறையில் இருந்த சோஃபாவில் படுத்து கண்ணை இறுக மூடிக்கொண்டாள்.

அவள் படுத்த சிறிது நேரத்திலே அறைக்குள் கேட்ட அழுத்தமான காலடித்தனத்தில் அவன் வந்துவிட்டான் என்று புரிந்து கொண்ட பாவையவள் பெட்ஷீட் போட்டு முகத்தை மூடிக்கொண்டாள்.

“அம்மா தூங்கிட்டாங்க ஜூனியர்… வாங்க நாமளும் தூங்கலாம் ” சொல்லி குழந்தையை படுக்கவைத்தவன் இடப்புறத்தில் தலைகாணியை பாதுகாப்பாய் வைத்துவிட்டு மகளின் வலப்புறத்தில் மனைவியை பார்த்தவாறு படுத்து மகளுக்கு தட்டிக்கொடுத்தான்.

சத்தம் ஏதும் கேட்காது போக, மெதுவாக பெட்ஷீட்டை இறக்கி ஓரக்கண்ணால் பார்த்தவள், விஷ்வா தன்னையே பார்ப்பதை உணர்ந்து மீண்டும் போர்வைக்குள்ளயே தன்னை அடக்கிக்கொண்டாள்.

மகளோடு படுக்கையில் இருந்தாலும் பார்வை முற்றிலும் அவனின் அழகு மனைவி மீது தான்.

சிறிது நேரத்திலே மகளும் மனைவியும் உறங்கிவிட, மனைவியின் சீரான மூச்சு காற்று அவள் உறங்கிவிட்டால் என்று ஊர்ஜிதம் செய்ய, மெதுவாய் மனைவியை நெருங்கினான்.

தலை வரை போர்த்திருந்த போர்வையை மெதுவாய் எடுத்துவிட்டவன்,”இந்த தேவதை எனக்கு கிடைக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல. ஆனா இப்போ என்னோட அருவி என் ரூம்ல இருக்கா . உன்ன உள்ளங்கைல வச்சி தாங்க ஆசை, அதுக்கான இடம் தர மறுக்கிற. உங்கிட்ட நிறைய பேசணும் அருவி… உன்னோட ப்ரசாத்க்கு ஒரு வாய்ப்பு தர கூடாதா டா? ” தூங்கும் மனைவியிடம் பேச, அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

நான்கு வருடம் கழித்து இன்று தான் நிம்மதியான உறக்கம் பெண்ணவளுக்கு. இந்த உறக்கத்திற்கு காரணம் அவள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருக்கிறாள் என்பதாலோ அல்லது விஷ்வாவின் வட்டத்திற்குள் வந்ததாலோ அது அவளின் நித்திரை தேவியே அறியும்.

திரும்பி படுக்க அருவி கஷ்ட படுவதை பார்த்தவன், மனைவியை அலுங்காமல் குலுங்காமல் தன் இரு கரங்களிலும் அவளை ஏந்திக்கொண்டான்.

விஷ்வாவின் கரத்திற்கு வந்ததுமே அவளை அறியாமல் அவள் கைகளை அவன் கழுத்தில் மாலையாக கோர்த்துக்கொண்டாள்.

மனையாட்டியின் செயலில் தானாகவே புன்னகை அரும்பியது விஷ்வாவிற்கு.

அருவியை மகளுக்கு பக்கத்தில் அவளின் தூக்கம் கலையாதவாறு படுக்கவைத்தவன் அவன் கழுத்தில் இருந்த கைகளை மெல்ல எடுத்துவிடவும், பெண் சிணுங்கினாள்.

அவள் பக்கத்திலே அமர்ந்துகொண்டவன், அவளின் சிகையை ஒரு சேயாய் கோதிவிட்டான். 

மனைவி தான் தாய்க்கு தாயாய் தாரத்திற்கு தாரமாய் இருந்து கணவனை பார்த்துக்கொள்ள முடியுமா? கணவனாலும் முடியும் என்பதற்கு உதாரணமாய் விஷ்வா இருந்தான்.

அடுத்தநாள் காலை சிறிது நேரம் கழித்தே எழுந்த அருவிக்கு சொகுசாக பெட்டில் இருப்பது புரிய,” நாம எப்படி இங்க வந்து படுத்தோம்” புரியாது யோசனையில் இருந்தாள்.

அவளின் யோசனையிலே இதனை யார் செய்திருக்க முடியும் என்று தெரிந்து விட, விஷ்வாவின் மீது கோபம் தான் வந்தது‌.

“இவனுக்கு எதுக்கு தான் இந்த தேவையில்லாத வேலையோ” அவனை நேரில் திட்ட முடியாது என்பதால் அவன் இல்லாத போது திட்டினாள்.

சோம்பல் முறித்தப்படி நேரத்தை பார்த்தவளின் விழிகள் அகல விரிந்து கொண்டது.

“என்னது மணி பத்தா..???” வாயை பிளந்தவள் வேக வேகமாக கட்டிலை விட்டு இறங்கி குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளியலறைக்குள் புகுந்தவளுக்கு ஆச்சரியம் தான்.

அவளும் குழந்தையும் உபயோகப்படுத்தும் பொருட்கள் எல்லாம் இருந்தது. ஆனாலும் அவன் மேல் வெறுப்பை வளர்த்து வைத்திருக்கும் மனம் இதெல்லாம் ஒரு நடிப்பு என்று உதறி தள்ளியது.

பல்துலக்கி குளித்த பின்பு தான் உடை ஏதும் எடுத்துவராதது ஞாபகத்தில் வர, தலையில் அடித்து கொண்டாள் அருவி.

“இப்போ என்ன பண்றது..?” யோசித்தவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

அவள் கழட்டி போட்ட புடவையை சுற்றிக்கொண்டு அறைக்குள் பூனை போல் நுழைய, அந்த நேரம் பார்த்து விஷ்வாவும் உள்ளே நுழைந்தான் .

விஷ்வாவை அந்த நேரத்தில் எதிர்பார்த்திராத பெண் விதிர்விதிர்த்து விழிகள் பிதுங்க கைகளை மார்புக்கு நடுவே வைத்து நின்றவளை சாதாரணமாக கடந்து செல்ல, அவளின் பேச்சு அவன் கால்களை தடைப்போட்டு நிறுத்தியது.

“இப்படியா ஒரு பொண்ணு இருக்கிற ரூம்க்கு கதவை தட்டாம கூட வரது..?” அருவி அவனை கண்டு கேட்க,

“இதுல என்ன இருக்கு..? நான் வேற யாரோடைய அறைக்கோ போகல. நான் நம்ம ரூம்க்கு தான் வந்தேன்” என்றவன் அந்த நம்மில் சிறிது அழுத்தத்தை கொடுத்தான்.

“இருந்தாலும்…” என அவள் இழுக்க,

அவளை நெருங்கியவன் ” இங்க பாரு அருவி நீயும் நானும் வேற வேற கிடையாது. இப்போ நாம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி. முதல அதனை மனசுல பதிய வைக்க முயற்சி செய்” கூறியவன் ” நான் காதலிச்சது உன்னோட குழந்தைத்தனமான மனசை தான். செத்து போனா அழிஞ்சு போற இந்த உடமை இல்ல ” கூறியவன் அங்கிருந்து அகன்று விட்டான்.

போகும் அவனையே பார்த்திருந்தவளுக்கு எது இவனின் உண்மை முகம் என்று புரியாமல் குழம்பி போய் நின்றாள்.

ஒரு காலத்தில் உன்னை இழந்து விட கூடாதென்று தான் இதனை செய்ய துணிந்தேன் என்று கூறியவனின் அன்றைய பேச்சும் இன்றைய பேச்சும் ஒன்றுக்கு முரணாக இன்னொன்று இருந்தது.

குழப்பத்தினுடே உடையை மாற்றி கிழே வந்தவளை மாமியார் தான் வரவேற்றார்.

“வா டா, நேரமாகிடுச்சி வந்து சீக்கிரமா சாப்பிடு மா” அன்பொழுக கூறிய மாமியாரை கண்டு மெலிதாக புன்னகைத்த அருவி சாப்பிட அமர்ந்தாள்.

“உனக்கு நெய் தோசை ரொம்ப பிடிக்குமாமே விஷ்வா சொன்னான்” சொல்லியபடி தோசையை தட்டில் வைத்து அதில் சிறிதளவு நெய்யை ஊற்றினார்.

பெண்ணிற்கு இவரது பாசத்தில் சிறிது கண் கலங்கியது. அதனை வெளியே வரவிடாமல் உள்ளேயே இழுத்துக் கொண்டாள்.

“ம்ம்ம்” சொல்லியவள் சாப்பிட ஆரம்பித்தவளுக்கு ஏனோ அந்த தோசை இறங்க மறுத்தது.

இரண்டு தோசையை கடினப்பட்டு சாப்பிட்டவள், எழுந்து கொண்டாள்.

“என்ன டா வெறும் இரண்டு தோசை தானே சாப்பிட்ட? இன்னும் ஒன்னு வச்சிக்கலாமே” அக்கறையுடன் மஞ்சுளா பேச,” போதும் அத்தை பசிக்கல . மதியம் சாப்பிட்டுக்கிறேன் ” கூறி கை கழுவ சென்றுவிட்டாள்.

விஷ்வாவும் பூவினியும் தோட்டத்தில் நின்று செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய படியே லூட்டியடித்து கொண்டிருந்தனர்.

மகளை தேடி வெளியே வந்த அருவி இவர்கள் செய்யும் கூத்தினை கண்டு தலையிலடித்து கொண்டாள்.

“என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” இடுப்பில் கையை வைத்து கேட்க, திரும்பி இருவரில் மகள் வேகமாக பதில் கூறினாள்.

“மம்மி! செதிக்கு ஃபுட் கொதுக்கிறோம்” மகள் வேகமாய் பதில் சொல்ல,

“அதுக்கு எதுக்கு நீங்க ரெண்டு பேரும் இப்படி நனைஞ்சிருக்கீங்க‌..? செடிக்கு தண்ணி ஊத்துனீங்களா இல்லை உங்களுக்கு ஊத்திக்கிட்டிங்களா?” கோபத்துடன் விஷ்வாவை பார்த்து மொழிந்தவள், மகளுக்கு மட்டும் துண்டை எடுத்து வந்தாள்.

“இந்த குளிருல சலி புடிச்சா என்னைய தான் தொந்தரவு பண்ணுவ. உன்னை யாரு இதை எல்லாம் பண்ண சொன்னது” மகளை திட்டியவாறே அவளின் உடையை கழற்றி துண்டாள் போர்த்திவிட்டாள்.

“உள்ள வா உனக்கு இருக்கு ” என ஒற்றை விரலை காட்டி மிரட்டல் விட்ட படியே அவளை தூக்க போக, மகளோ அன்னைக்கு பயந்து தந்தையின் பின் ஒழிந்தது.

“அம்மு! இங்க வா” மிரட்டலுடன் அழைக்க, பூவினியோ வர மறுத்தாள்.

“சொல் பேச்சு கேக்க மாட்டியா நீ? இப்படியே நின்னா சலி புடிச்சிக்கும் அப்புறம் நோ ஸ்னாக்ஸ் “திட்டவட்டமாக கூறவும் மகள் சிணுங்கினாள்.

“நீ என்ன பண்ணாலும் உனக்கு ஸ்னாக்ஸ் கிடையாது. தண்ணில ஆட்டமா ஆடுற”

“ப்பா… மம்மி ஸ்னாக்ஸ் நோ சொல்றாங்க” மகள் சிணுங்களுடன் தந்தையிடம் புகார் வாசிக்க, பூவினியை பூப்போல் தூக்கிகொண்டவன், “நம்ம பண்ணினது தப்பு தானே. சோ சாரி சொல்லிடுவோம்” கூறி அருவியை பார்க்க, அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ரொம்ப திருப்பாதீங்க மேடம் தலை சுளுக்கீக்க போகுது. அப்புறம் நான் தான் உனக்கு சுளுக்கு எடுக்கவேண்டியதா வரும்” அதரங்கள் விரிய சீண்டவனை முகம் சுருக்கி முறைக்கலானாள்.

“மம்மி…” மெதுவாக பூவினி அன்னையை அழைக்க,

“என்ன டி…?”

“என்கு டவல் தந்த அப்பாவும் என்கூட ப்லே பண்ணாங்க. அப்பாக்கு டவல்..?” மகள் அன்னைக்கு வில்லியாகவும் தந்தைக்கு தூதுபுறாவாகவும் தெரியாமலே வேலை செய்தாள்.

“என் பேபி” என மனைவியை கடைக்கண்ணால் பார்த்தவாறே பூவினியின் இரு கன்னத்திலும் தனது அன்பின் பரிசாக முத்தத்தை வாரி வழங்கினான்.

அதை பார்த்த அருவியின் கைகள் தானாக அவன் முத்தமிட்ட கன்னத்தை தொட, முகம் கொள்ளா சிரிப்பில் விஷ்வாவின் அதரங்கள் விரிந்தது.

தந்தை சிரிக்கவும் மகளும் கூடவே புன்னகைக்க, ஹாலில் இருந்த அனைவருக்குமே இருவரது சிரிப்பின் சத்தமும் கேட்டது.

விஷ்வாவின் செயலில் பெண்ணவளின் கன்னம் செம்மையுற, அதனை கோபமாக காட்டி ஓடிவிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!