மோகனங்கள் பேசுதடி!17

eiL5KAD79398-c7b91bba

மோகனங்கள் பேசுதடி!17

மோகனம் 17

காலை எழும்போதே புத்துணர்வுடன் எழுந்த அருவி, சோஃபாவில் உறங்கிக் கொண்டிருந்த விஷ்வாவை எதிர்நோக்கினாள்.

திருமணமான இந்த ஒரு மாதத்தில் விஷ்வா அவளிடம் தவறான நோக்கத்துடன் நெருங்க முயன்றதே இல்லை. சில பல நெற்றி முத்தங்கள் மட்டுமே. அது கூட பெரும்பாலும் குழந்தைக்கு அழிப்பது போல் தான் கொடுப்பான்.

இந்த ஒரு மாதத்தில் அவனின் நெற்றி முத்தத்திற்கு பெண்ணை அடிமை படுத்தியே வைத்திருந்தான்.

சிறு குழந்தைப்போல் உறங்கும் கணவனை நெருங்கிய அருவி, அவன் பக்கத்தில் அமர்ந்து அவனை தான் பார்த்தாள்.

திடகாத்திரமான தேகம், ஆளை அசரடிக்கும் வதனம்,குளிர்ந்த ஊரில் வளர்ந்ததாலோ என்னவோ வெண்ணெய் கட்டிப்போல் பளிச்சிடும் அழகு. அதில் எப்போதும் தன்னையே காதலாய் நோக்கும் காந்த விழிகள்.‌இதை எல்லாம் அசரடிக்கும் வகையில் அதரங்கள் உதிர்க்கும் அவளுக்கே அவளுக்கான மோகனப் புன்னகை என அவனின் முகவடிவத்தை பார்த்தவளின் விழிகள்‌ அவனின் ஒற்றை கன்னக்குழியில் பதிந்தது.

மலர்ந்த நிலையில் உறங்க ஆரம்பித்தான் விஷ்வா.

மனைவி பக்கத்தில் இருக்கிறாள் என்று உணர்ந்ததாலோ அல்லது கனவில் அவளோடு டூயட் பாடியதால் வந்த புன்னகையா என்று அந்த கள்ளன் மட்டுமே அறியான்.

ஆனால் அவனின் அதரங்கள் மெலிதாய் விரிந்தன.

அருவி கல்லூரி படிக்கும் காலங்களில் இருந்தே அவளுக்கு அந்த ஒற்றை கன்னக்குழி மேல் ஒர் வசியம்! மயக்கம்!

அதிலும் அவன் புன்னகைக்கும் போது பெண் எப்போதும் வீழ்வாள்.

அவளுக்கு அதை தொட்டு பார்த்திட ஆசை. அப்போது வெறும் நட்பு ரீதியான உறவு தான். இப்போது உரிமை இருந்தாலும் தயக்கம்! தயக்கம்! தயக்கம் மட்டுமே.

அவனின் சிகையை மெதுவாய் கோதி விட்டப்படியே அவனிடம் பேசினாள்.

“உனக்கு எதுக்கு இப்படியான ஒரு வாழ்க்கை? நீயேன் டா அப்பவே உன்னோட காதலை சொல்லாம விட்ட, சொல்லியிருந்தா இன்னைக்கு நாம இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டோமே? விக்ராந்தும் வந்திருக்க மாட்டான். அவனோட  நாலு வருஷத்தை கஷ்டப் பட்டு நெட்டி தள்ளி இருக்க மாட்டேன். என்னால உன் கூடயான ஒரு வாழ்க்கையை நினைச்சு கூட பார்க்க முடியல விஷ்வா. ஏனோ மனசு உறுத்துது பா, உனக்கு எதுக்கு இப்படியான ஒரு செகெண்ட் ஹேண்டது பொண்ணு, நீ நல்லா வாழணும்னு நினைக்கிறேன். டிவேர்ஸ் கொடுத்திடேன்” சொல்லி கண்ணீர் சிந்த, ஒரு துளி கண்ணீர் அவன் கையில் பட்டு தெரித்தது.

கண்ணீரோடு அவனின் பிறை நெற்றியில் முதல் முறையாக தன் அதரங்களை பதித்தாள்.

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் , குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

குளித்து முடித்து ஈரம் சொட்ட சொட்ட பனியில் நனைந்த புது ரோஜாவாய் வெளி வந்தவள், கணவனை ஆழ்ந்த பார்வை பார்த்தாள்.

அவனின் நிம்மதியான மூச்சு காற்று தூங்குகிறான் என்பதை உறுதி செய்ய, புடவையை கட்ட துவங்கினாள்.

சாக்லேட் வண்ணத்தில் சந்தன நிற சரிகை போட்ட காட்டன் புடவையை அணிந்தவள், அது அவளின் உடலில் பாந்தமாய் ஒட்டிக்கொண்டது. புடவைக்கு ஏற்றவாறு கண்ணுக்கே தெரியாதளவு சிறிய கல்லு வைத்த ஒட்டு தோடை அணிந்து, முகத்துக்கு எந்தவிதமான ஒப்பனையும் செய்து கொள்ளவில்லை.

அப்போதே அருவி பேரழகியாய் நிலைக்கண்ணாடி முன்பு நின்றாள்.

அடுத்ததாக குங்குமத்தை எடுத்தவள், கணவனை நிலைக்கண்ணாடி வழியாய் ஏறிட்டாள்.

விஷ்வாவை பார்த்து ஆழ்ந்த பெருமூச்சை இழுத்து விட்டவள், நெற்றி வகுட்டில் அவனை பார்த்தவாறே குங்குமத்தை இட்டாள்.

பின், பால்கனி சென்று முடியை தளர்த்தி காய வைக்க, சோம்பல் முறித்தப்படி அப்போது தான் எழுந்தான் விஷ்வா.

மனைவியை பால்கனியில் கண்டவன்,’காலையிலே அழகிய தரிசனம்’ நினைத்து அர்த்தத்துடன் சிரித்தவன் குளியலறைக்கு சென்றான்.

வேகமாய் கிளம்பி வெளியே வந்த விஷ்வா, நேராக அன்னையை தேடி சென்றான்.

“அம்மா! நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்க,

“சொல்லு விஷ்வா…”

“நான்,அருவி அப்புறம் அம்மு… மூணு பேரும் எள்ளநள்ளியில் உள்ள நம்ம கெஸ்ட் ஹவுஸ்க்கு போலாம்னு இருக்கோம் ம்மா…” சொல்லவுமே,”ஏன் டா? ” என்றார் பதறிப்போய்.

“சும்மா தான் ம்மா. ஒரு சேஞ்ச்க்கு தான் அவங்களை அங்க கூட்டிட்டு போகலாம்னு இருக்கேன்” எனவும்,” சரி டா. ஆனா நீங்க ஸ்கூலுக்கு போகனுமே, அப்போ என் பேத்தி என்ன பண்ணுவா?”

“டெய்லி காலையில இங்க வந்து விட்டுட்டு, சாய்ங்காலம் வந்து பிக்கப் பண்ணிக்கிறோம் மா”

“போய்ட்டு வாங்க…” என்றார் புன்னகையாக.

“திரும்ப வரும்போது அருவி அருவியாய் வருவா ம்மா… என்னோட அருவியாய் கூட்டிட்டு வருவேன்” மகன் ஒன்றை நினைத்து கூற, அன்னை வேறுவிதமாய் எடுத்து கொண்டார்.

அப்போது கீழே மகளை தூக்கியப்படி வந்த அருவியை இமைக்காது பார்த்து மனைவியை இரசித்தான்.

தந்தையை கண்டதும் மகள் அன்னையை விட்டு தாவினாள்.

“அப்பா…” என்று குழந்தை உற்சாகத்துடன் இறங்க முற்பட,” ஏய்! பார்த்து டீ” பதறினாள் அருவி.

மெதுவாய் குழந்தையை மாடிப்படியில் இறக்கிவிட, குட்டி மானாய் குதித்து குதித்து தந்தையை நோக்கி ஓடி வந்தாள் குழந்தை.

“அம்மு” அழைத்து குழந்தைக்கு ஏற்ப, கால்களை மடக்கி கீழே அமர்ந்து மகிழ்வாய் கையை விரிக்க, அவளும் கையை விரித்தவாறே முப்பத்திரண்டு பல்லை காட்டி வந்தாள்.

மகளை அப்படியே மேலே தூக்கி கொண்டவன், ஒரு சுற்று சுற்றி கீழே இறக்கிட, மகளோ தன் மகிழ்வினை அவனின் முகமெங்கும் எச்சில் செய்து காட்டியது.

இவ்விருவரின் பாசப் போராட்டத்தை பார்த்து தலையில் அடித்து கொண்டாள் அருவி.

“அம்முவை கீழ விடுங்க. எப்ப பார்த்தாலும் தூக்கி தூக்கி வச்சிக்க வேண்டியது” கடுப்புடன் சொல்ல,

“உங்க அம்மாக்கு எங்கேயோ புகையுது டா” சொல்லி மூக்கை மூட, மகளும் தந்தையை பார்த்து அப்படியே செய்ய, கடுப்பானாள் அவனின் மணவாட்டி.

விஷ்வாவை பார்த்து முறைப்புடனே கடக்க,” நாம வெளிய போறோம் அருவி. கிளம்பி ரெடியா இரு. நான் அம்முவை சாப்பிட வச்சி கிளப்புறேன்” கூறவுமே கணவனை கேள்வியாய் நோக்கினாள்.

அவனோ கண்ணடித்து பறக்கும் முத்தமொன்றை தர, அதை காற்றோடு பிடித்து தூர எரிந்து ‘எப்படி’ என்று புருவமுயர்தினாள்.

அதில் ஒருமுறை வீழ்ந்தான் கணவன்.அவளை அப்படியே இறுகணைத்து முத்தமிட ஆசை கொண்டது காதல் மனது. அடக்கினான்!மனதை கட்டுப்படுத்தினான்!

பின், மகளுக்கு காலை உணவை ஊட்டி அறைக்கு அழைத்து சென்று உடையை மாற்றி விட்டவன், குழந்தைக்கு சிண்டு போட்டு விட்டான்.

தந்தை தன்னை பார்த்து பார்த்து ரெடி பண்ணியதில் மகள் குஷியோ குஷி.

“அப்பா… நல்லா இதுக்கா?” கேட்டு நிற்கும் மகளை அள்ளிக்கொண்டான்.

தனக்கும் மகளுக்கும் தேவையானதை எல்லாம் ஒரு பையில் எடுத்து வைத்தவன், அறையிலிருந்து வெளி வந்தான். அதற்குள் பெண் கிளம்பி அவர்களுக்காய் காத்திருக்க ,மஞ்சுளா மருமகளுக்காய் மல்லிகை சரத்தை கையில் எடுத்து வந்தார்.

“தேனு, இந்தா டா இந்த பூவை வச்சிக்கோ” என நாலு மொலம் இருந்த மல்லிகை பூவை கொடுக்க, இவ்வளவா என்று அருவி தயங்கி அவரை பார்த்தாள்.

அவளின் முகம் காட்டும் உணர்வில் கணவனுக்கு அவள் என்ன நினைக்கிறாள் என்று புரிந்து விட அன்னையிடம் வந்தான்.

“ஏன் ம்மா என் பொண்டாட்டி என்ன பூ வைக்கிற மெஷினா? இவ்வளவு பூவை எடுத்து வந்திருக்கீங்க..?”

“வாய மூடு டா. பூ வைக்க கூடாதுன்னு சொல்லுவியா?” முறைப்புடன் திட்ட,

“ம்மா… நான் பூவே வைக்க கூடாதுன்னு சொல்லலை. பூ வைக்கலாம், கொஞ்சமா அவளுக்கு ஏற்ப வச்சிக்கட்டும்” சொல்லியவன், அன்னையிடமிருந்து பூவை வாங்கி சமையலறை நோக்கி சென்றான்.

மாமியாரும் மருமகளும் விஷ்வாவையே பார்க்க, அடுத்த சில நொடிகளில் வெளிவந்தான் சிறிது சிறிதாய் வெட்டப்பட்ட பூவோடு.

மனைவியின் கண்கள் சிரித்தது. அதனை புரிந்தவனின் விழிகளிலும் அதே புன்னகை.

இருவரும் பேசிக்கவில்லை. இருவரது நேசங்களும் பேசிக்கொண்டது.

அது புரிந்த ஒருவன்! புரியாத ஒருவள்!

மனைவியை நோக்கி மெல்ல நடையிட்டு வர, அருவியின் இதயம் ‘லப் டப்… லப் டப்’ வேகமாய் துடித்தது.

கிட்ட நெருங்க நெருங்க அருவி பயத்தில் பதட்டத்தில் படபடப்பில் அவளின் முந்தானையை இறுக பிடித்து கொண்டு தன் பதட்டத்தினை கட்டுப்படுத்த முயன்றாள்.

“அருவி…” மென்மையாய் அழைக்க, இதயம் வெளிவருவேனா என்றிருந்தது.

வேகமாய்,” கொடுங்க நானே வச்சிருக்கிறேன்” என கையை நீட்டிட, அப்படியே அவள் விரல்கள் பிடித்தவன் மோகனமாய் புன்னகைத்து திருப்பி நிறுத்தினான்.

அருவிக்கு படபடப்பு அதிகமானது! விஷ்வா அவளை ஏதோ செய்தான்.காமத்தை தாண்டிய காதலை காட்டினான்.

இடைவரை நீண்டிருந்த கூந்தலில் பூவை வைத்துவிட்டவன், ஒன்றை எடுத்து அவள் முன் போட, அதுவோ அவளின் மார்பினை தொட்டு மீண்டது.

“ப்யூட்டிஃபுல்” சொன்னவன் அந்த அழகுக்கு பரிசாய் நெற்றியில் முத்தமிட்டான்.

தாயையும் தந்தையையும் பாட்டி பக்கத்தில் இருந்து பார்த்திருந்த குழந்தை,” நானு…” இதழை பிதுக்கி கேட்கவும்,சிரிப்போடு மகளை தூக்கி கொண்டான்.

இருவரும் ஒருசேர மகளுக்கு முத்தமிட, அழகிய குடும்ப படமாய் அருணின் ஃபோனில் அழகாய் பதிந்தது.

மூவருக்கும் நெட்டி எடுத்த மஞ்சுளா,’ யார் கண்ணும் இவர்கள் மீது பட்டு விட கூடாது’ என வேண்டினார்.

பின், மூவரும் காரில் ஏறி கிளம்பிவிட்டனர்.

எங்கே என்று அவளும் கேட்கவில்லை. எங்கே செல்கிறோம் என்று அவனும் சொல்லவில்லை.

********
இது சுற்றுலா பயணிகள் வரும் நேரம் என்பதால், சாக்லேட் ஃபேக்ட்ரியில் அதிக வேலை இருந்தது. அருவி விஷ்வா திருமணம் முடிந்த பிறகு முழு மூச்சுடன் பிஸ்னஸில் இறங்கிவிட்டான்.

தந்தை காலத்திலிருந்தே இந்த ஃபேக்டரி செயல்படுவதால், அருண் பொறுப்பை எடுத்துக் கொண்டு அதனை தக்க வைத்து கொள்ள பெரிதாய் உழைக்க வேண்டி இருந்தது.

தந்தையிடம் ஆர்டர் கொடுத்தவர்கள், அவர் மகனிடம் கொடுத்த தயங்க, சிறப்பாய் முடித்து கொடுப்பேன் என்று வாய் வார்த்தையால் மட்டுமல்லாது அதனை செய்தும் காட்டி பலரின் மனதை வென்றிருந்தான்.

நீலகிரியில் இந்த ஃபேக்டரி மூக்கிய இடத்தை பெற்றிருந்தது.

எங்கெங்கோ இருந்த கடைகளில் எல்லாம் ஆடர்கள் இவர்களிடம் வந்து குவிய தொடங்கிட, மனைவியை இழந்த காலக்கட்டத்தில் இது தான் அவனை சாகவிடாது காத்தது.

அவனின் ஃபேக்டரிக்கு அதன் பின் வளர்ச்சி தான்.

முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் என்பதற்கு இணங்க அருணின் ஃபேக்டரிக்கு புகழ்ச்சி கிடைத்தது.

வேகமாய் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்த அருணை பின் தொடர்ந்தான் அவனின் பிஏ.

“ப்ரொடக்ஷன் டீம்க்கு ஆள் எடுத்தாச்சா மணி?” கேட்டு வேக நடையுடன் வேலை நடக்கும் இடத்திற்கு சென்றான்.

“ஹான், எடுத்தாச்சு சார்” என்றான் அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்து.

“ம்ம் குட். அப்புறம் வேலை எல்லாம் எப்படி போகுது மணி?” மிஷினரிஸ் பக்கம் நடந்தவாறே அங்கு நடக்கும் அனைத்தையும் கண்காணித்த படி வந்தான்.

லேசர் கண்கள் அங்கு நடப்பவை எல்லாவற்றையும் அளவெடுத்தது.

அங்கு பெரும்பாலும் பெண்கள் தான் வேலை செய்தனர். முதலில் பெண்களை பெரிதாய் வேலைக்கு எடுத்து கொள்ளாவிட்டாலும் மனைவி இந்து கூறிய பின் பெண்களையும் சேர்பிக்க தொடங்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அங்கே தங்கும் வசதியையும் செய்து கொடுத்திருந்தது நிறுவனம்.

“இன்னைக்கு மார்னிங் தான் சார் இண்டியன் பேக்கரிக்கு சரக்கு அனுப்பினோம்” என்க,

“ஸ்டாக் எல்லாம் செக் பண்ணி தானே கொடுத்தீங்க?”

“எஸ் சார்…”

“சரி இன்னைக்கான சாம்பிள் சாக்லேட் பீஸ் எடுத்திட்டு வர சொல்லுங்க… டேஸ்ட் பார்ப்போம்” சொல்லி அவனின் அறைக்குள் புகுந்து கொண்டான்.

ப்ரொடிக்ஷன் டீமிற்கு சென்றவன், அங்கு புதிதாய் வேலைக்கு சேர்ந்த பெண்ணை அழைத்தான்.

“இந்தா பொண்ணே இங்க வா” திமிராக அழைக்க, அந்த பெண்ணோ திரும்பி பார்த்து தன் வேலையை தொடர்ந்தாள்.

“ஏய்! உன்னை தானே கூப்பிடுறேன். பார்த்துட்டு திரும்பிக்கிட்டா என்ன அர்த்தம்?”

அந்த பெண்ணின் பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணியோ,” என்னனென்னு கேளு ம்மா?அந்த ஆளு ஒரு மாதிரி கிறுக்கு புடிச்சவன்.வம்பு வச்சிக்காத ம்மா” அனுசரணாய் கூற,

“ம்ம்”கொட்டியவள், அவனின் புறம் திரும்பி” சொல்லுங்க.கூப்பிடுறதா இருந்தா பேரு சொல்லி கூப்பிடணும். நான் ஒன்னும் ஏய்யோ, இந்தா பொண்ணோ கிடையாது” செருக்குடன் சொல்லியவள் மணியின் முன் நிமிர்ந்து நின்றாள்.

தன் முன் ஒரு சிறிய பெண் நிமிர்ந்து நின்று அடுத்தவர்கள் அதுவும் தனக்கு கீழ் வேலை பார்க்கும் மக்கள் முன்பு பேசுவதா என ஆணவம் கொண்ட மணி அவளின் மேல் வெறுப்பை வளர்த்தான்.

“சேம்பிள் சாக்லேட் பீஸ் எடுத்துட்டு எம்டி ரூம்க்கு போ”

“ம்ம்ம்…”என்றவள் சேம்பிள்காக வைத்திருந்த சாக்லேட்டை எடுத்து கொண்டு எம்டியின் அறையை நோக்கி நடையிட்டாள்.

மேல் தளத்திற்கு வந்ததும் எம்டி ரூம் எது என்று விசாரித்து அங்கு சென்று கதவை தட்டி திறந்தவளுக்கு அதிர்ச்சியும் அதனுடன் ஆச்சரியமும்.

இருவரும் ஒருசேர ” நீயா..?” என்று கத்திவிட்டனர்.

Leave a Reply

error: Content is protected !!