நான் பிழை… நீ மழலை..!

நான் பிழை… நீ மழலை..!

நான்… நீ…24

“சொல் பேச்சு கேக்கப் போறியா இல்லையா டி?”

“கேக்க மாட்டேன்… கேக்க மாட்டேன்!”

“அடி விழும் பார்த்துக்கோ!”

“எனக்கு வலிக்காதே!” கெக்கலித்து சிரித்தாள் ஐந்து வயது தேஜஸ்வினி.

மாமியார் அருந்ததி கோவிலுக்கு சென்றிருந்த நேரத்தில் தனது மிரட்டல் பணியைத் தொடங்கி இருந்தாள் சுலோச்சனா.

மாமியாரும் கணவனும் வீட்டில் இருக்கும் வேளைகளில் பெண் பிள்ளைகளை பார்த்து முறைக்கக் கூட முடியாது. சுலோச்சனாவின் சாதாரண அதட்டலுக்கே அருந்ததி மருமகளை உரத்த குரலில் கண்டிக்கத் தொடங்கி விடுவார்.

ராஜசேகரோ சொல்லவே வேண்டாம்! காலவரையின்றி மெளனவிரதம் அனுஷ்டித்து அஹிம்சை முறையில் மனைவியை தண்டித்து விடுவார். யார் எப்படி இருந்தாலும் கணவருடன் பிணக்கு கொள்ள மட்டும் சுலோச்சனா என்றுமே விரும்புவதில்லை.

இதன் காரணமாகவே பெண் பிள்ளைகளின் மீதான இவளின் உருட்டலும் மிரட்டலும் பெரியவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் மட்டுமே அரங்கேறும்.

‘நான் மிரட்டினத வெளியே சொன்னா தம்பிக்கு காரப்பொடி கலந்த சாதம் ஊட்டி விட்டுடுவேன்!’ எனும்படியான சுலோச்சனாவின் கூடுதல் மிரட்டலில், தேஜுவும் மனுவும் சித்தியின் அதட்டலை மறந்தும் கூட வெளியில் சொல்லி விடமாட்டார்கள்.

இத்தனை பதவிசாக இருந்தும் என்ன பயன்? தான் பெற்ற மகன் தன்னை அம்மா என்று அழைக்கவில்லையே என்ற மனத்தாங்கல் நாளுக்குநாள் சுலோச்சனாவிற்குள் பாரமேறிப் போக, அதனைச் சரி செய்யும் நோக்கில் சிறுமி தேஜுவுடன் மல்லுக்கு நின்றாள்.

“இந்த வீட்டுல பெரிய பொண்ணு… பெரிய அக்கா எல்லாம் நீ ஒருத்தி தான்! நீ தான் தம்பிக்கு பக்கத்துல இருந்து பொறுப்பா எல்லாத்தையும் சொல்லிக் கொடுக்கணும்.” என அன்பாகச் சொன்னவளின் குரல் பாவனை சட்டென்று எகிறி,

“தம்பிகிட்ட மெதுமெதுவா என்னை அம்மான்னு கூப்பிடச் சொல்லிப் பழக்கி விடு!” அதிகாரமாகச் சொல்ல, பெரிய பெண் பிள்ளையோ, அதை காதில் கூட போட்டுக் கொள்ளவில்லை.

“என் தம்பி என்னைப் போலத்தான் கூப்பிடுவான்!” சிறுமி தேஜு சட்டம் பேச,

“ஆமா… நண்டு பையன் எங்க பேச்சு மட்டும்தான் கேப்பான்!” துள்ளிக் குதித்து பேசிய நான்கு வயது மனுவும் கைகொட்டி சிரித்தபடி,

ஒரு வயது நகுலைப் பார்த்து, “இவங்க அம்மாவா… சித்தியா? சொல்லு நண்டு பையா!” சிறியவள் வீம்புக்கென்றே கேட்க,

“த்தி..!” என தனது தெத்துப் பல்லில் வார்த்தையை தெறிக்க விட்டு அழைத்தான் அந்த பொடியன்.

மழலைகளின் குறும்புப் பேச்சும், விளையாட்டும் சுலோச்சனாவின் மனதில் எரிதணலை பற்றவைக்க, நேரடியான மிரட்டலில் அசராமல் இறங்கி விட்டாள்.

அதன் தொடர்ச்சியாக, “சொல் பேச்சு கேக்கப் போறியா இல்லையா டி? அடி விழும் பார்த்துக்கோ!” அடுத்தடுத்த மிரட்டலில் சுலோச்சனா மீண்டும் இறங்க, அசைந்து கொடுப்பார்களா அந்த மழலைகள்!

‘சித்தி… சித்தி!’ என குதித்து முன்னை விட கொட்டமடிக்கத் துவங்கி விட்டனர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த அருந்ததியும் மருமகளின் தவிப்பை உணர்ந்து கொண்டும் தன் பங்கிற்கு குத்தலாக பேசினார்.

“அறிவுகெட்டவளே! உன் பையன், அக்காளுங்க கையில வளைய வர்றவன். அந்த புள்ளைங்க எப்படி கூப்பிடுதோ… அப்படித்தானே அவனும் கூப்பிட ஆரம்பிப்பான். கொஞ்சம் கொஞ்சமா வார்த்தை கோர்த்து பேசுற பிள்ள வாயில அடிக்கிறியே! மனுசியாடி நீயெல்லாம்?” ஏகமாய் மாமியார் வசைபாட்டில் இறங்க, மருமகளின் நிலையோ அந்தோ பரிதாபமாகிப் போனது!

“இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா இந்த பொடிசுகள சித்தின்னு கூப்பிட வச்சிருக்க மாட்டேல்ல? ஒண்டிக்க வந்தவ எல்லாம் நாட்டாமை வேஷம் போட நினைச்சா சாமி விட்டு வைக்குமா? தெய்வம் நின்னு கொல்லுதுடி!” அருந்ததி வகையாக மேலும் குத்திக் குதறிப் பேச, சுலோச்சனாவிற்கு தனது தவறு தெளிவாய் புரிந்தது. ஆனாலும் தனது செயலை குற்றமாய் உணரவில்லை.

பிள்ளைகளை தன் இஷ்டத்திற்கு வளைக்க நினைத்தாளே தவிர, அவர்களின் மனநிலையில் இருந்து பார்க்க தவறிப் போனாள். விளைவு, மீண்டும் தன்னை அம்மா என அழைக்கும்படி பெண் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கத் தொடங்க, அந்த சின்னச் சிட்டுகளோ மசியவில்லை.

“நீங்களும் என்னை அம்மான்னு கூப்பிடுங்க!” சுலோச்சனா உத்தரவிட,

“சித்தியே போதும்… அம்மா பிடிக்கலை!” விட்டேற்றியாக மனு கூற,

“என் ஃபிரண்ட் மீனு அம்மாவும், நீங்க எங்களுக்கு சித்தின்னு தான் சொல்லி இருக்காங்க!” விவரமாக பேசி சுலோச்சனாவின் வாயை அடைத்தாள் சிறுமி தேஜு.

தனது தாய்மை தவிப்பிற்கு தீர்வு அளிக்கும் நிலையில் அந்த வீட்டில் யாரும் இல்லாது போக, மீண்டும் பழைய வன்மத்தையே பிள்ளைகளிடம் கையாண்டாள் சுலோச்சனா.

தம்பி நகுலிற்கு எப்போதும் பருப்பு சாதம் மட்டுமே வேண்டும். தயிர் சேர்த்தால் அவனுக்கு ஒத்துக் கொள்ளாது. அதை அறிந்தே, தொடர்ந்து இரண்டு நாட்கள் தன் குழந்தைக்கு தயிர்சாதம் கொடுத்து சளியும் ஜூரத்தையும் இழுத்து விட்டிருந்தாள் சுலோச்சனா.

இந்த திருகுதாளத்தை அறிந்து கொண்ட அருந்ததியும் மருமகளை கணக்கில்லாமல் வசைபாடத் தொடங்க, அதை காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை.

“என் புள்ள காய்ச்சலுக்கு நானும் அவனும் சேர்ந்தே அவதிப்பட்டுக்கறோம். நீங்க உங்க பேத்திங்க கூட சுகமா இருங்க!” கணவர் ராஜசேகர் காதுபடவே சுலோச்சனா விரக்தியாக எடுத்தெறிந்து பேச, அப்போது தான் அவருக்கும் வீட்டில் பிள்ளைகளின் நிலைமையே புரிய வந்தது.

மூத்த தாரத்துப் பிள்ளைகளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசவும் முடியாமல், இளையதாரத்தை பகைத்துக் கொள்ளவும் வழியில்லாமல் மிகவும் அவஸ்தைபட்டுப் போனார்.

ராஜசேகருக்கு எப்போதும் பிள்ளைகளை அதட்டுவதோ அடிப்பதோ பிடிக்காது. எந்த ஒன்றையும் அன்பாகக் கூறி புரிய வைக்க வேண்டுமென மனைவியிடம் வலியுறுத்திக் கொண்டே இருப்பார். மிகவும் சாதுவான சுபாவம்!

எந்தவொரு விசயத்திற்கும் ஓரளவிற்கு மேல் மனைவியிடம் பேச்சு வார்த்தையை தொடரமாட்டார் ராஜசேகர். அதையே பெரும் தன்மானக் குறைவாக எண்ணி சமயங்களில் பிரச்சனையை கிளப்புவாள் சுலோச்சனா.

இப்பொழுதும் எதார்த்தத்தை மனைவியிடம் எடுத்துக் கூறினால் பெருத்த சண்டை மூளும் என்ற அபாயமிருக்க, அதை முற்றிலும் தவிர்க்க நினைத்தே செயலில் இறங்கினார். தன் இரு மகள்களையும் அருகில் அழைத்து மடியில் அமர வைத்துக் கொண்டார்.

“சாமிகிட்ட போன நம்ம நந்தினி அம்மாதான் உங்களை பார்த்துகறதுக்காக நகுல் தம்பியை கூட்டிகிட்டு சுலோ அம்மாவா வந்திருக்காங்க… அதனால அவங்களை இனிமே அம்மான்னு தான் கூப்பிடணும்!” மெதுவாக மகள்களிடம் எடுத்துச் சொல்ல, இரண்டு பிஞ்சுகளின் முகமும் ஏகத்திற்கும் சுருங்கிப் போனது.

“ம்ஹூம்… மாட்டோம் டாடி!” கோரசாக ஒரே குரலில் கூற, அவரும் தளர்ந்து போனார்.

இதற்கும் மேலே அந்தப் பிள்ளைகளின் மனதில் எப்படிப் பதிய வைப்பதென்று ராஜசேகருக்கும் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் தந்தையின் வருத்தத்தை தாங்க முடியாதவளாய், “நான் தம்பிக்கு, சித்திய அம்மான்னு கூப்பிடச் சொல்லி கிளாஸ் எடுக்கறேன்!” சிறுமி தேஜூ பெரிய மனுஷியாக யோசனை கூற,

“தம்பிக்கு குழம்பி போகும் தங்கங்களா… மூனுபேரும் ஒரே வீட்டுல இருக்கிறது போல, ஒரே மாதிரி அம்மான்னு தான் கூப்பிடணும்!” அருந்ததியும் இதமாக விளக்கிக் கூற, பேத்திகளுக்கு அந்த தோரணையே பாதி மனதை மாற்றி விட்டது.

“ஆனா, இவ்ளோ நாள் சித்தின்னு கூப்பிட்டோமே பாட்டி?” தேஜுவும் விடாமல் பிடிவாதம் பிடித்தாள்.

“இத்தனை நாள் தம்பி இங்கே இல்லயே டா! இப்பதான் அவன் வந்து சேர்ந்து, பேசவும் ஆரம்பிச்சுட்டானே… நம்ம தம்பிக்கு நாமதானே சொல்லிக் கொடுக்கணும். அதுக்கு மொதல்ல நாம சரியா நடந்துக்கணும் செல்லத் தங்கம்!” எனப் பலவாறு குழைந்து, நெகிழ்ந்து பேசி மகள்களின் மனதை மாற்றி விட்டார் ராஜசேகர்.

அரைகுறை மனதோடு தந்தை சொன்னதற்காக மட்டுமே சித்தியை, ‘அம்மா’ என மாற்றி அழைக்க ஆரம்பித்தனர் பெண் பிள்ளைகள். இவர்களைப் பார்த்து வளர்ந்து வந்தவனும் அப்படியே சொல்லிப் பழக, சுலோச்சனாவின் அம்மா தாகம் ஒரு வழியாக அடங்கிப் போனது.

வெற்றிகரமாக தான் நினைத்ததை சாதித்தவளாக சுலோச்சனா இறுமாப்பு கொள்ள, அன்றிலிருந்து அவளது தேவைகள் அனைத்திற்கும் நகுலை பகடைக்காயாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.

தனது தேவைக்கு பிள்ளைகளோ கணவரோ செவி சாய்க்காது போனால் மகனை தண்டிக்கவும் கண்டிக்கவும் ஆரம்பித்து விடுவாள்.

அந்த கொடுமையைப் பார்த்தே மகள்கள் தவித்துப் போக, ராஜசேகரும் தன்னால் மனைவியின் சொல்லுக்கு தலையாட்டி விடுவார். ‘எல்லாம் முன்ஜென்ம வினை… விடாமல் துரத்துகிறது!’ அருந்ததியும் தன்னால் முடிந்த மட்டும் வசைபாடி ஓய்ந்தே போவார். 

பிள்ளைகள் வளரவளர சுலோச்சனா மீதான வெறுப்பும் வளர்ந்து கொண்டே போனது. வன்முறையை கையில் எடுக்காமல் வன்மத்தை மட்டுமே பற்றுகோலாகக் கொண்டு பெண் பிள்ளைகளை பராமரித்தாள் சுலோச்சனா.

நகுலேஷும் அக்காக்களின் வழியில் சேர்ந்தே பயணித்தான். தங்கை, தம்பிக்காக என அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள் தேஜஸ்வினி. மனுவும் அவளையே பற்றிக் கொண்டு வளர, தம்பி இருவரின் நிழலில் அழகாய் வளரத் தொடங்கினான்.

அம்மா என்பது உறவின் அலங்கார வார்த்தையாக மட்டுமே மூவருக்கும் அமைந்து போனது. அந்த உறவிற்கும் உணர்விற்கும் உள்ள பந்தத்தை மூவரும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் சுத்தமாக வாய்க்கவில்லை. பெரியவர்களும் அதை பெரிதுபடுத்தவில்லை.

அனைத்திலும் மிகச் சிறந்ததை மட்டுமே தம் பிள்ளைகளுக்கு அறிய வைத்து கற்றுக் கொடுத்தார் ராஜசேகர். அதற்கேற்ப வருமானமும் அவர் கைகளில் குறைவில்லாமல் தவழ்ந்தது.

படிப்பு, விளையாட்டு என எதிலும் பெற்றவரை ஏமாற்றாமல் பிள்ளைகள் வளரத் தொடங்கினர். பதின்மவயதிற்கு பிறகான வளர்ச்சியில் தேஜுவின் அழகு பார்ப்பவரை எல்லாம் விழியுயர்த்தி ஆச்சரியத்துடன் பார்க்க வைத்தது.

எந்த ஒப்பனை செய்து கொண்டாலும் எதை அணிந்து கொண்டாலும் அவளுக்கு வெகு பொருத்தமாய் அமைந்து போகும். ‘அழகுக்கு அழகு சேர்ப்பது!’ என்ற சொலவடை அவள் விசயத்தில் மிகச் சரியாக அமைந்தது.

பெரியவளுக்கு நிகராக மனஷ்வினி வளர்ந்து வந்தாலும் நிறைவான நேர்த்தியான அழகு என்பது தேஜுவின் இடத்தில் மட்டுமே காண முடியும். தனது அழகு தந்த பெருமையில் அதே அழகியலை கற்றுத் தேர்ச்சி பெற விருப்பம் கொண்டாள் தேஜஸ்வினி.

அழகி என்ற கர்வம் உள்ளுக்குள் இருந்தாலும் அதை வாய் வார்த்தையாக கூட வெளியில் சொல்லிக் கொள்ள மாட்டாள். தனது ஒப்பனையில் நடையுடை பாவனைகளில் தனி கவனம் செலுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவாள்.

இளையவள் மனஷ்வினியோ படிப்பில் சூரப்புலி! ‘எங்கள் வீட்டு சரஸ்வதி!’ என்று இவளை, அருந்ததி மெச்சிக் கொள்ளாத நாளில்லை.

இவர்கள் இருவரையும் கொண்டு பார்க்கும் போது தம்பியானவன் படிப்பில் சற்றே சுணக்கம் தான். ஆனால் அன்பில் அவர்களை அலற வைத்து விடுவான்.

அத்தனை பிரியம், உரிமை அக்காக்களின் மேல்! எந்தவொரு விஷயத்திற்கும் தந்தையை விட தம்பி தான் இரு பெண்களின் தேடலாக இருக்கும்.

தேஜுவின் பதினைந்தாவது வயதில் அருந்ததியை இறைவன் தன்னுடன் அழைத்துக் கொள்ள, பெண் பிள்ளைகள் தனியே விடப்பட்டனர். மூவரையும் நேரடியாகவே கரித்துக் கொட்டத் தொடங்கினாள் சுலோச்சனா.

சொந்தப் பிள்ளையான நகுலேஷுக்கு, ‘அம்மாவை தவிக்க விடுகிறாய்.’ போன்ற கூடுதலான கொட்டுகள் சுலோச்சனாவிடம் இருந்து வெகுமதியாக வந்து சேரும்.

ராஜசேகரும் தொழிலில் முழுமையாக ஐக்கியமாகி விட, சுலோச்சனாவின் ஆட்டம் முன்னை விட அதிகமாகியது. நாக்கில் விசத்தை வைத்துக் கொண்டே எந்நேரமும் வலம் வந்தாள்.

“ரெண்டு பொட்டை புள்ளைகளுக்கு இவ்வளவு செலவு பண்ணி படிக்க வைக்கலன்னு யார் அழுதா?” என சுலோச்சனா வசைபாடிய நேரம், தேஜு பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

படிப்போடு கணினி பயிற்சி மற்றும் பிற மொழிப் பயிற்சி வகுப்புகளுக்கும் இரண்டு பெண்களும் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருந்தனர். சித்தியின் சுடுசொற்களை அமைதியாக தாங்கிக்கொண்ட பெண்களுக்கு, தங்களின் கல்வியும் உரிமையும் பாதிக்கப்படுவதை அத்தனை எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

அன்றிலிருந்து சித்திக்கு குறையாத வீம்பினை பெண்களும் கையில் எடுத்துக் கொண்டனர். படிப்பில் ஆர்வம் உள்ள பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டே வரவுக்கு மீறிய செலவுகளை செய்ய ஆரம்பித்தார் ராஜசேகர். தொழில் வளர்ச்சி சற்றே சரியத் தொடங்கிய காலகட்டம் அது.

அதன் பலனாக வட்டிக்கு கடன், அந்த வட்டியை கட்டவும் கடன் வாங்கும் நிலையும் தாண்டி, வீட்டையும் அடமானம் வைக்கும் நிலைக்கு போனது. இவற்றையெல்லாம் மனைவி மற்றும் பிள்ளைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் தனியே போராடிக் கொண்டிருந்தார் ராஜசேகர்.

கடன் நிலுவை மற்றும் வட்டி பாக்கிக்காக வீடு ஏலத்திற்கு என வந்த நோட்டீஸில் தான் வீட்டின் உண்மை நிலவரம் பெண்களுக்கு தெரிய வந்தது.

அப்போது தேஜஸ்வினி ஃபேஷன் டெக்னாலஜி பொறியியலின் இறுதி ஆண்டில் இருந்தாள். வைவா மற்றும் கல்லூரி வளாக நேர்காணலில் கலந்து கொண்டால் வேலை வாய்ப்பு நிச்சயம்.

அதனை மனதில் கொண்டே தந்தைக்கு சமாதானம் கூறி, அவளும் வீட்டின் நிலைமையை ஒவ்வொன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்திருந்தாள்.

தம்பி நகுலேஷ் பனிரெண்டாம் வகுப்பு மாணவன். வீட்டில் இருந்து கொண்டே படித்து வந்தான். மனஷ்வினி மூன்றாமாண்டு மருத்துவ மாணவி. விடுதி வாசத்தை தவிர்ப்பதற்காக அரசாங்க சலுகையில் கிடைத்த கல்லூரியை விட்டுவிட்டு சொந்த ஊரில் அதிகச் செலவில் பொள்ளாச்சியிலேயே படிக்க வைத்துக் கொண்டிருந்தார் ராஜசேகர்.

இரண்டு பெண்களின் கல்லூரிப் படிப்பிற்கு பிறகு திருமணச் செலவும் வந்து விடும். இப்போதே ஓட்டைச்சட்டியாக இருக்கும் வீட்டில், பெண்களின் திருமணத்திற்கு பிறகு தனக்கும் தன் மகனுக்கும் மிஞ்சப் போவது எதுவும் இல்லை என்பதை நன்றாக உணர்ந்த சுலோச்சனா மீண்டும் சுயநலக் காளியாக அவதாரம் எடுத்தாள்.

பெண்களோடு சேர்ந்து கணவனையும் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது. மகள்களுக்கென சேர்த்து வைத்த நகைகளைக் கொண்டு சமாளிக்கலாம் என்றாலும் அந்த பணம் வட்டியை நேர் செய்வதற்கே பற்றாக்குறையாகி நிற்க, முடிவில் இவர்கள் தங்கியிருந்த வீடு ஏலத்திற்கு வரும் நாளும் குறித்தாகி விட்டது.

அப்போது ராஜசேகரின் ஜவுளிக்கடையும் முடங்கி இழுத்து மூடும் நிலையில் இருக்க, அதை வாங்குவதற்கென  அருணாச்சலம் கடைக்கு வந்தார்.

கடை உரிமையாளரின் நிலையை அரசல் புரசலாக கேட்டதும், கடையையும் வீட்டையும் சேர்த்தே வாங்கிக்கொண்டு அவர்களையே மேற்பார்வை பார்க்க வைக்கலாம் என்ற முடிவுடன் ராஜசேகரின் வீட்டிற்கே வந்து விட்டார்.

பார்வைக்கு பழுதில்லாமல் இருந்த ராஜசேகரின் குணநலனும் குடும்ப அமைப்பும் அருணாச்சலத்தை தயக்கமில்லாமல் அந்த குடும்பத்திற்கு உதவி செய்யச் சொல்லித் தூண்டியது.

அப்படி வந்தவரின் பார்வையில், கண்களுக்கு நிறைவாக, வளர்ந்த பெண் பிள்ளைகளின் புகைப்படம் பட, தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு திருமண சம்மந்தம் பேசி விட்டார்.

“அருணாச்சலம் ஐயா… மாப்பிள்ளைங்க இப்படிதான் இருக்காங்கன்னு உண்மையைச் சொல்லியே பொண்ணு கேட்டாரு… ஆனா, பெத்தவனான எனக்குதான் அவர் கேட்டதை ஜீரணிக்க முடியல. விரட்டி அடிக்காத குறையா பொண்ணு கொடுக்க முடியாதுன்னு தட்டிக் கழிச்சேன்!” என்று தனது நினைவில் இருந்து மீண்டவராக ராஜசேகர் கூறி முடித்தார்.

இத்தனை நேரம் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யரூபனுக்கும் ஒரு தகப்பனின் ஸ்தானத்தில் இருந்து பார்க்கும் போது ராஜசேகர் செய்தது தவறென்றே தோன்றவில்லை.

‘அழகுச் செல்வங்களாக அருமையாக வளர்த்த பெண்களை, உடல் குறைபாடு கொண்ட ஆண்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்க எந்த தந்தைக்கு தான் மனம் ஒப்பும்? தனது மாமனார் செய்தது சரியே!’ என்ற மனநிலைக்கு வந்தும் விட்டான்.

“அப்புறம் எப்படி திரும்பவும் கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சாங்க?” அவனுக்குள் சொல்லத் தெரியாத உந்துதல் தோன்றி மனைவியைப் பற்றிய விருப்பு வெறுப்புகளை அறிந்துகொள்ள ஆசை மேலிட்டது.

அதை அறிந்து கொண்டவராக ராஜசேகரும் அவனை நேருக்கு நேராகப் பார்த்து, “என் பொண்ணுகளே என்கிட்டே நேரடியா வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன பிறகு என்னால எதையும் தடுத்து நிறுத்த முடியல… அதுக்கு பிறகு எந்த குறையும் இல்லாம என் ரெண்டு பொண்ணுகளோட கல்யாணமும் ரொம்ப சிறப்பா நடந்தது.” புன்னைகையோடு சொன்னவர்,

“இனி வாழப்போற வாழ்க்கையும் அதை விட சிறப்பா இருந்தா, அந்த சந்தோஷத்தை பார்த்துட்டே நான் காலத்தை கழிச்சுடுவேன் மாப்ளே! அது உங்க ரெண்டு பேர் கையிலயும் தான் இருக்கு.” என்று ஆனந்தனையும் மனதில் கொண்டே கூறி முடித்தார் ராஜசேகர்.

‘பெண்கள் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதிலும் சுலோச்சனாவின் தலையீடு இருக்குமோ!’ என ஆதியின் மனது தீவிரமாக யோசிக்கத் தொடங்கியது.

 ***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!