மோகனம் 30

258870534_107665628407960_2661016960017320672_n

மோகனம் 30

மோகனங்கள் பேசுதடி!

மோகனம் 30

வாழ்க்கை அவர்களுக்கு அத்தனை பொழிவாய் காதலாய் கசிந்துருகியது. அன்பும் பரிவும் நேசமும் அரவணைப்பும் குறும்பும் என எல்லாம் நிறைந்திருந்தது. விஷ்வா மற்றும் அருவியின் வாழ்வு வானவில் போல் அழகாய் அமைந்தது.

பூவினியின் சேட்டையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் நகர்ந்தன. இப்போதுகூட தாயும் மகளும் சண்டைப் பிடித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு முழித்தான் விஷ்வா.

“அடியேய்! இப்போ நீ இந்த ஸ்வெட்டரை போட போறியா இல்லையா?”

“முடியாது… முடியாது… நான் மாட்டேன்.” என மகள் வீம்பு பிடிக்க, பல்லைக் கடித்தாள் அருவி.

“சொன்னா கேளேன்டி‌. எதுக்கு இப்படி அடம்பிடிக்கிற?” மகளுடன் போராட முடியவில்லை அருவிக்கு.

“அம்மா! அப்பாவும் போதாம தானே இதுக்காரு. நானும் போதமாட்டேன்.” என சொல்ல, விஷ்வாவை முறைத்தாள் அருவி.

“இங்க பாரு அம்மு, நீ இப்போ இதை போட்டாதான் உங்க அப்பா உன்னை நீ சொன்ன இடத்துக்கு கூட்டிட்டு போவாரு. உனக்கு போக வேணாம்னா நீ இதை போட்டுக்க வேணாம்.” என கண்டிப்பான குரலில் சொல்லி விஷ்வாவை  முறைக்கலானாள்.

மகளோ பாவமாய் தந்தையைக் காண, இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திண்டாடினான் விஷ்வப்ராசாத்.

“அப்பா…!” அழுகை இப்பவோ அப்பவோ என இருக்க, மகளைத் தூக்கி கொண்டவன் அவளுக்கு புரியும் வகையில் கூறி சமாதானம் செய்து ஸ்வெட்டரை அணிவித்து விட்டான்.

“பேபி! நீங்க போய் கீழ பாட்டியோட இருங்க, நான் இப்போ வந்திடுறேன்.” சொல்லி மகளை அனுப்பி வைத்தான்.

முகத்தை உர்றென்று வைத்திருந்த மனைவியை நெருங்கிய விஷ்வா, அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வர பார்க்க, அவன் கைகளிலே ஒன்று போட்டு தடுத்து நிறுத்தினாள்.

“செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க. இப்பவே என் பேச்சை அவ கேட்க மாட்டேங்கிறா. இதுல காலம் இன்னும் எங்க இருக்கு…” என அன்னையாய் அவள் பயப்பட,

“ஹேய்! அவ சின்ன பொண்ணு. அவ என்ன எல்லாத்துக்குமா உன்கிட்ட இப்படி மல்லுகட்டிட்டு நிக்கிறா? ஏதோ அவளுக்கு பிடிச்ச விஷயத்தை அவ செய்யணும்னு நினைக்கிறா, நாம எல்லாத்துக்கும் தடை செய்தா எப்படிடா? விடேன் போக போக புரிஞ்சிப்பா.” மகளுக்காய் பரிந்து கொண்டு பேசிருந்தாலும், அவன் கூறுவது சரியும்கூட.

தான் சிறு வயதில் அனுபவிக்காத அனுபவங்களை மகளாவது அனுபவிக்கட்டுமே என விட்டுவிட்டாள்.

“ஆனா இப்படி அவ கேட்கிறதை எல்லாம் செய்து கொடுக்க கூடாது. அதுவே அவளுக்கு ஒரு குணமா மாறிடலாம்.” மகளைப் பெற்ற அன்னையாய் எடுத்துரைக்க,

“ம்ம்ம்…” அவள் கன்னத்தைத் தாங்கி அவளின் முகத்தில் மென்மையாய் முத்தமிட்டவன், “நான் கீழே இருக்கேன், நீ வா.” என கீழே சென்று அங்கே இருந்த வேலைகளைக் கவனித்தான்.

இதோ இப்போது குடும்பமாய் ஆலப்புழாவிற்கு சுற்றுலா செல்ல இருக்கின்றனர். குழந்தை பூவினிதான் ஏதோ ஒரு மலையாள படத்தில் பார்த்த இடத்தைப் பற்றி கேட்கவும் விஷ்வா சாதாரணமாய், “இது ஆலப்புழா” என்றிருந்தான்.

“இந்த இடம் நல்லா இதுக்குமாப்பா?” என்க,

“ம்ம்ம்…” என்றதும்தான் தாமதம், “என்னை அங்க கூட்டிட்டு போங்க.” என்றாள்.

“லீவ் வரும்போது போகலாம்.” என சொல்லி மகளை அமைதிப்படுத்தியிருக்க, முழு ஆண்டு விடுமுறை வரவுமே மகளின் ஆசைக்கிணங்க, ஆலப்புழா ட்ரிப்பிற்கு ரெடி செய்து விட்டான். இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்புவதுதான் பாக்கி.

எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை பார்வையிட்டவளுக்கு, ஏனோ உடல் ஒத்துழைக்க மறுப்பது போல் இருந்தது. இந்த பயணம் அவசியமா என்றுகூட தோன்றியது. இருப்பினும் மகளுக்காக அமைதியாய் இருந்தாள்.

“எல்லாம் சரி பார்த்திட்டியா அருவி?” அவள் பக்கம் வந்து விசாரிக்க,

“இப்போதைக்கு எல்லாமே எடுத்திருக்கிற மாதிரிதான் இருக்கு. அப்படி ஏதும் இல்லைன்னா பக்கத்துல கடையில வாங்கிக்கலாம்.” என இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே ஆஜரானாள் அகல்விழி.

“என்ன மாம்ஸ், லைஃப் ரொம்ப ஜாலியா போகுது போலையே? உங்க முகத்துல அப்படி ஒரு மின்னல் வெட்டுதே?” என தன் மாமனைக் கலாய்க்க,

“அந்த மின்னல் என்கிட்ட இருந்தா வருது? நான்கூட அங்க ஒருத்தன் உன்னை மொறச்சி பார்க்கிறதால வருதுன்னுல எனக்கு தோனுது…” சீரியசாக அவள் அடித்தப் பந்தையேத் திருப்பி அடிக்க,

“உங்க நொண்ணனுக்கு என்னை முறைக்க மட்டும்தான் தெரியும் மாம்ஸ். பார்க்கதான் ஆளு நம்ம ஏஜ் குரூப் மாதிரி இருக்காரு, ஆனா அப்படியே எய்ட்டிஸ்கிட்தான் மாமா. அவரை விட்டுத் தள்ளுங்க.” என தன் வருங்காலத்தை நினைத்து குறைப்பட்டாள்.

அதற்குள் அருண் அவர்களை நெருங்கிட, “வரது கடைசி நேரத்துல, இதுல பேச்சை பாரு?” என அவள் தலையில் நன்கு கொட்டினான்.

“வலிக்குது பாஸ்…” தலையைத் தேய்க்க,

“வலிக்கத்தான் கொட்டுறது… போ, போய் வண்டில ஏறு.” என்றதும் நல்ல பிள்ளையாய் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்புதான், அவளின் காதலை பல தயக்கங்களுக்கு பிறகு ஏற்றான். அவன் குழந்தை என்ற பேச்சை ஆரம்பித்ததுமே இதனை சொல்லிவிட்டாள்.

“இங்க பாருங்க நமக்கு குழந்தை இல்லன்னு நாம ஏங்குறதை விட, இங்க பல குழந்தைகள் பெற்றோர் இல்லைன்னு ஏங்கிட்டு இருக்கிறவங்க அதிகம். அவங்களுக்கு நாம பெற்றோரா இருக்கலாமே. அந்த குழந்தைகளுக்கும் அப்பா, அம்மா கிடைச்சிடுவாங்க. நமக்கும் குழந்தைங்க இருப்பாங்க. அதனால நாம குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்துக்கலாம்.” என்று முடித்துவிட்டாள். அகல்விழியின் பேச்சில் அசந்துபோய் நின்றான் அருண்.

பின் அவளின் காதலை எந்தவொரு தடையுமின்றி அருண் ஏற்றுக்கொள்ள, அதற்கு மாறாக பெரியோர்கள் சிறிது தயங்கினர். இப்போதும் அகல்விழி அவள் காதலுக்காக போராடினாள். கூடவே அருணும்!

“நீங்க எங்களுக்கு நல்லதுதான் நினைக்கிறீங்கன்னு புரியுது. ஆனா இதை ஒரு காரணமா காட்டி எங்க காதலை அழிச்சிட வேண்டாம். எனக்கு வேண்டியது அவரோட அன்பும் அரவணைப்பும்தான். அதை கிடைக்கவிடாம செய்திடாதீங்க. என்னோட கடைசி நொடி வரைக்கும் அவரோட சந்தோஷமா வாழ நினைக்கிறேன். அதையும் மீறி வேணாம்னு சொன்னா, நான் கடைசி வரைக்கும் நானாகவே தான் இருப்பேன்.” என திட்டவட்டமாக கூறிவிட, இவளின் பேச்சில் பெரியவர்கள்தான் பேசாமடந்தையாகினர்.

அருணிற்கு இப்பெண்ணின் காதலை எண்ணி பெருமிதம் கொண்டான். தான் என்ன செய்தோம் என்று  இவளுக்கு தன் மீது இத்தனைப் பிரியம்? வியப்புற்றான்!

அவளுக்கு இணையான காதலைக் காட்ட நினைத்தான்!

இவர்களின் காதலுக்கு பெரியவர்கள் பச்சைக்கொடி காட்டிவிட, ஆறு மாதம் கழித்து திருமணத்தை வைத்திருந்தனர். அதுவரைக்கும் காதல் ஜோடியாக அல்லாது பஞ்சாயத்து ஜோடியாக வலம் வந்தனர்.

“வர வர வாய் ரொம்ப நீளுது விழி. இப்படியா விஷ்வாக்கிட்ட பேசுவ?” கண்டன பார்வைப் பார்க்க,

“நான் என்ன உங்க தம்பியவா கிண்டல் செய்தேன்? என் அக்கா புருஷனைத் தானே கிண்டல் பண்ணேன். இதுல உங்களுக்கு என்ன வந்தது?” அவளும் அவனுக்கு இணையாக பேச, அங்கே இருவருக்கும் மீண்டும் முட்டிக்கொண்டது.

“அத்தை…” என மஞ்சுளாவை அகல்விழி அழைக்க, ஒரு பெரிய கும்பிட்டைப் போட்டு, “ஆளை விடுமா…” என்க, அனைவரும் வெடித்து சிரித்தனர்.

முகத்தைத் தூக்கி வைத்து அமர்ந்தவள், வண்டி கிளம்பவும் சிறிது நேரத்திலே அருணின் தோளில் தலை சாய்த்து உறங்கி போனாள். சிறிது நேரத்தில் விழித்தவள் அடுத்து ஆலப்புழா செல்லும் வரையும் பூவினியும் அகல்விழியும் சேர்ந்து நிறைய அட்டூழியங்கள் செய்தனர்.

இரவுபோல் கிளம்பியவர்கள் அதிகாலைப் பொழுது ஆலப்புழா வந்திறங்கினர். சில்லென்ற குளிர்காற்று  உடலைத் தழுவி அருவியின் மேனியை சிலிர்க்க வைத்தது.

அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த காட்டேஜில் அனைவரும் அடைக்கலமாகினர். நேற்றிரவிலிருந்து அமர்ந்த நிலையிலே பயணம் செய்ததால் அனைவரும் உறங்கிவிட, பூவினியோ எப்போதுடா அந்த படகில் செல்வோம் என்று எதிர்பார்ப்புடன் இருந்தாள். மதியவுணவை முடித்தவர்கள் மெதுவாய் கிளம்பத்துவங்கினர்.

முதலில் லைட்டௌஸ் சென்று பார்வையிட்டு வந்த பின்பு, மராரி கடற்கரைக்குச் சென்றனர். அங்கு சென்றதும் குழந்தையும் அகல்விழியும் ஒரே ஆட்டம் போட, அருண்தான் இருவரையும் கவனித்தான். விஷ்வாவும் அருவியும் அமைதியாய் மணலில் அமர்ந்து கதையளந்தனர்.

“பார்த்து… பார்த்து…” என்ற அருணை ஒருவழி செய்தனர் இருவரும். பின் அப்படியே கால்போன போக்கில் நடந்தவர்கள் அறைக்கு வந்தனர்.

அடுத்தநாள் அனைவரும் கிளம்பி போட்டவுஸ் சென்றனர். இவர்களுடன் மதியும் ஜீவாவும் சேர்ந்தனர். ஒரு வேலையாக சென்னை சென்றவன், விஷ்வாவும் அருணும் கூறியதால் மதியை அழைத்துக் கொண்டு இங்கே வந்திருந்தான்.

இரண்டு நாட்களுக்கு போட்ஹவுஸை புக் செய்திருக்க, குழந்தை குஷியானது. இரண்டு நாட்கள் அங்கேயே இருந்தவர்கள் தரையிறங்கிய சமயம் அருவிக்கு தலை சுற்றி விழப்பார்க்க, அவளைப் பிடித்து நிறுத்தினான் விஷ்வா.

“என்னாச்சி? என்னம்மா பண்ணுது?” என அக்கறையுடன் வினவ,

“ஒன்னுமில்லைங்க. இரண்டு நாளா ஃப்ளோட்டிங்லயே இருந்தோம்ல அதான் கொஞ்சம் தலை சுத்திடுச்சி.” சொல்லி சமாளித்து ஊர் வந்து சேர்ந்தாள்.

பின் எப்போதும் போல் விஷ்வாவும் அருவியும் பள்ளி செல்ல, அருண் ஃபேக்டரிக்கு சென்றான். அகல்விழி, மதி மற்றும் பூவினி என மூவரும் சேர்ந்து வீட்டை இரண்டாக்கினர்.

அத்தனை அத்தனை லூட்டிகள். இவர்களை சமாளிக்க  முடியவில்லை மஞ்சுளாவிற்கு. இப்படியே நாட்கள் செல்ல ஒருநாள் பள்ளியில் இருக்கும்போது அருவி மயங்கி விழுந்து விட, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் விஷ்வா.

அங்கே சென்று பார்த்தால், அருவி கர்ப்பமாக இருப்பதை மருத்துவர் சொல்லவும் மட்டற்ற மகிழ்ச்சி தம்பதியினருக்கு. மருத்துவர் சொன்ன அறிவுரைகளை எல்லாம் கவனமாய் கேட்டுக் கொண்டு வீடு வந்தவன், அனைவரிடமும் இன்முகத்துடன் அருவி கர்ப்பமாக இருக்கும் விடயத்தைக் கூறினான்.

பின் அருவியை விஷ்வா அத்தனைக் கவனமாக பார்த்துக்கொள்ள, பார்த்திருந்த குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் பேர் சொல்லும் தம்பதியினராக திகழ்ந்தனர் அருவியும் விஷ்வாவும். இதற்கிடையில் அருண் மற்றும் அகல்விழியின் திருமணம் கோவிலில் நடந்தேறியது.

திருமணத்தின் போது அருவி நான்கு மாத சிசுவைச் சுமந்திருக்க, அவளை ஒரு வேலையும் செய்ய விடவில்லை விஷ்வா. அதிலும் அவனின் பிள்ளை வேறு படுத்தி எடுக்க, மருத்துவமனையில் ட்ரிப்ஸ் போடும்படியாக ஆனது. அதிலிருந்து அருவியின்மீது அதித கவனத்தை செலுத்தினர். சந்திராவும் மூர்த்தியும் மகள்களைப் பார்க்க வந்திருந்தனர்.

இப்போதெல்லாம் மூர்த்திகூட பழைய மாதிரி எந்தவித முக சுளிப்பையும் காட்டுவதில்லை. அமைதியாய் இருந்தார். இதுவே மற்றவர்களுக்குப் போதுமானதாக இருக்கவும் விட்டுவிட்டனர்.

மாடியிலிருந்து சிறிதாய் மேடிடத் துவங்கிய வயிற்றைப் பிடித்து மெல்ல இறங்கியவாறே, “இப்பத்தான் வந்தீங்களா? அம்மு எங்கே?” என வந்தாள் அருவி. மனைவியைத் திரும்பி பார்த்தவனின் கண்களில் மென்மை வந்தமர்ந்தது.

“அம்மு, அகல்மாகூட ரெஃப்ரெஷ் ஆக போயிருக்கா.” என்னும் போதே தாய், தந்தையைப் பார்த்து “வாங்க அம்மா! வாங்க அப்பா!” இன்முகத்துடன் வரவேற்றாள்.

“ஏன்மா இங்க பக்கத்தில இருந்துகிட்டே எங்களைப் பார்க்க வரமாட்டேங்கிறியே?” என அழுத்துக் கொள்ள,

“கொஞ்சம் வேலைடி, அதான் வர முடியல. அதுவும் இல்லாமல் உன்னை மாப்பிள்ளை, உன் மாமியார் என எல்லாரும் நல்லாதானே கவனிச்சிக்குறாங்க. போதா குறைக்கு விழியும் இருக்கா அப்புறம் என்ன?”

“என்ன இருந்தாலும் அம்மா பார்த்துக்கிற மாதிரி வராதே அத்தை?” என்றான் விஷ்வா.

“எங்க மாப்பிள்ளை இவரை விட்டுட்டு எங்கேயும் வர முடியுறது இல்லை.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே பூவினியும் விழியும் வர, “அய்! பாட்டி!” என ஓடிவந்தாள் பூவினி.

“சூப் குடிச்சியா அருவி?” என கேட்க, அவளோத் திருதிருவென முழித்தாள்.

“என்ன அப்படி முழிக்கிற? அப்போ இன்னைக்கும் குடிக்கலையா?” என்றான் அவளிடம் கண்டிப்புடன்.

“வாமிட் வர மாதிரி இருக்குபா, அதான் குடிக்கலை.” என பாவமாக கூறவும், மனைவியை முறைத்தான்.

“அடி விழும் பார்த்துக்க…” மிரட்டல் விட்டான்.

“சொல்லாதீங்க மாமா செய்யுங்க. வர வர இவ அம்முக்கு மேல பண்றா.‌ எதை சாப்பிட சொன்னாலும் சாப்பிடுறது கிடையாது.” என தங்கை வேறு போட்டு கொடுக்க, கண்டனத்துடன் பார்த்தான்.

பின் விஷ்வாவே சென்று அவளுக்காக இதமான சூட்டில் சூப்பை எடுத்து வந்தவன், குடிக்க வைத்த பிறகே அடுத்த வேலையைப் பார்த்தான். இப்படியே நாட்கள் நகர்ந்து குழந்தையைப் பிரசவிக்கும் நாளும் வந்தது.

மருத்துவர்கள் கொடுத்திருந்த திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அருவியை மருத்துவமனையில் சேர்க்க, அன்றிரவே அவளுக்கு வலி வரத் துவங்கிவிட்டது. வலி விட்டுவிட்டு வர, டாக்டரிடம் கேட்டதற்கு வலி கூடட்டும் என்று சொல்லி விட்டனர்.

விஷ்வா அருவி பக்கத்திலே அமர்ந்திருந்தான். அவளின் வலியை அவனால் உணர முடிந்தது. அம்முவோ அருவியின் வயிற்றைத் தடவி கொடுத்தவாறே,  “தம்பி, அம்மாக்கு வலிக்குது பாரு. சீக்கிரமே என்கிட்ட வந்திடுங்க. நாம ப்ளே ஸ்டேஷன்ல விளையாடலாம்.” என்றாள் பெரியவளாய்.

அருவியே வலியைக் கீழுதட்டைக் கடித்துப் பொறுத்து போனாலும், விஷ்வா அழுதிடும் நிலையில்தான் இருந்தான்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர்?” மருத்துவரை ஒருவழி செய்ய, அவனை அதட்டி அடக்கி வைத்தார் மஞ்சுளா. இருந்தும் விஷ்வாவிற்கு உயிர்ப்பேயில்லை. அங்கே மனைவியின் கதறல்கள் கேட்ககேட்க இங்கே இவனின் அலப்பறைகள் கூடின.

தந்தையின் அலப்பறைகள் போதும் என்று நினைத்தானோ என்னவோ, அடுத்த சிலமணி துளிகளிலே அருவிக்கு வலி அதிகமாக துடித்துப் போனாள். அருவியைப் பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர்.

மேலும் சிலமணி நேரப் போராட்டத்திற்கு பிறகே விஷ்வா, அருவியின் புதல்வன் இவ்வுலகில் தடம் பதித்தான். செவிலி வந்து குழந்தையை விஷ்வாவின் கையில் கொடுக்க, மகளுடன் சேர்ந்து மகனை ஒருவித நடுக்கத்துடனே கையிலேந்தினான். உள்ளுக்குள் வருத்தம் மேலிட்டது. இப்படி தன்னால் பூவினியை ஸ்பரிசிக்க  முடியவில்லையே என்று.

“அய்! தம்பி… தம்பி…” என அம்மு குதூகலித்தாள். பின் ஒவ்வொருவராய் குழந்தையைப் பார்க்க, விஷ்வா அருவிக்காகக் காத்திருந்தான். அருவி வந்ததும் அவனின் முழு கவனமும் அவளிடம்தான்.

“வலிக்குதாடா?”

“இப்போ பரவால்ல…” சொல்லிப் புன்னகைக்க, அந்த புன்னகை அவனை இம்சித்தது. மெல்ல அவள் நெற்றியில் பட்டும் படாமலும் முத்தமொன்றைப் பதித்தான். குழந்தை வீட்டிற்கு வரவுமே இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

குழந்தைக்கு அபிமன்யு என பெயர் சூட்டினர். அங்குள்ள அனைவருக்கும் செல்லமாய் போனான் அபி. அபிக்கு ஏழு மாதமாகவும் அருணும் அகல்விழியும் ஆசிரமம் சென்று பிறந்து மூன்றே மாதம் ஆன ஆண் குழந்தையைத் தத்தெடுத்தனர்.

குழந்தையை அவன் கையில் வாங்கவும் அவனுள் ஒருவித சிலிர்ப்பு. அதனை வார்த்தையால் விவரிக்க இயலாது. அவனின் நிலை விழிக்கு நன்கு புரிந்தே இருந்தது.

அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தனர். அதுமட்டுமின்றி பல குழந்தைகளைப் படிக்க வைக்கவும் செய்தனர். அவ்வீடே குழந்தைகளின் மழலைச் சத்தத்தில் நிறைந்து இருந்தது. இருமகன்களின் வாழ்க்கையும் நிறைவு பெற்றிருக்க, மகன்களின் வாழ்வை நினைத்து கவலையுற்ற அன்னைக்கு இப்போது பெரும் நிம்மதி.

அதிலும் ஊரே மெச்சுமளவிற்கு வாழவும் இவர்களின் வாழ்வில் யாரின் கண்ணும் பட்டுவிடக்கூடாதென கடவுளிடம் அவசர வேண்டுதலை வைத்தார்.

அருவி, விஷ்வாவின் காதல் அமைதியாகவும், அகல்விழி, அருணின் காதல் அதிரடியாகயும் அன்புடனும் அனுசரணையுடனும் அவர்கள் வாழ்வு அழகாய் மெச்சுதலாய் பயணிக்க, வாழ்வே வண்ணமையமாய் மாறின.

***முற்றும்***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!