யாகம் 4
யாகம் 4
யாகம் நான்கு
செம்மஞ்சள் நிறக்கொத்தாக மலர்ந்த சாமந்திப்பூக்களும் அடர்பச்சை மாவிலைகளையும் வரிசையாக கட்டிய தேக்குமரத்தினாலான தூண்களும், அவற்றினை இரண்டடி விலகி தரைபார்த்து குலை தள்ளி நின்ற தலைவாழை மரமும், பந்தற்காலும், மஞ்சள் மற்றும் குங்குமத்தின் மணமும் தவிர அவ் வீட்டில் திருமணத்திற்குறிய எந்தவித ஆர்பாட்டங்களும் இருக்கவில்லை.
நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட காணி நிலத்தின் மூன்று எல்லைகளிலும் அரணாக கற்பகத்தரு நெடுநெடுவென வளர்ந்து நிற்க்க, நீண்ட செம்மண் பாதை தவிர, சுற்றியெங்கும் தென்னை மரங்களுக்கு நடுவே சிம்மாசனமாய் எழுந்து நின்றது அவ்வீடு.
எட்டுக் கட்டுகளாக கட்டப்பட்ட வீட்டின், வரவேற்ப்பு அறையின் நடு நாயகமாக கிடத்தப்பட்டிருந்த நீள்இருக்கையில் ரகு, கௌரி தம்பதி சகிதம் அமர்ந்திருக்க இந்தரோ தேக்குமர அலங்கார தூண் மீது தோளை சரித்து, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு சுற்றி வேடிக்கை பார்க்கலானான்.
நடராஜன் குடும்பத்தினர், ஆளுக்கு ஒரு பக்கமாக சோகமே உருவெடுத்ததைப் போல அமர்ந்திருந்தனர். பிரசாத் கூண்டுப் புலி போல கைகளைப் பின்பக்கமாக கட்டிக் கொண்டு அறையின் கோடியில் நடைபயின்று கொண்டிருந்தான். ‘அட, எங்கடா நம்மாளு!’ என இந்தர் பார்வை வட்டம் மேகவியைத் தேடிக் கண்டுபிடித்தது. இசைபிரபாவின் தோளினில் முகம் புதைத்து விசும்பிக் கொண்டிருந்தாள் மேகவி. இசையோ படுசிரத்தயைாக அவளின் தலையைக் கோதிக் கொண்டு ஏதோ சமாதான வார்த்தைகளை கிசுகிசுத்துக் கொண்டிருந்தாள்.
சுற்றும் பூமி நிதம் தேடும் சூரியன் போல இந்தருடைய கண்கள் இறுதியாக அமராவின் மீது பார்வையை நிலைநாட்டியது. அசைந்தாடும் சாய்வு நாற்க்காலியில் கால்களைக் கட்டிக் கொண்டு, உடலைக் குறுக்கி சிவந்த கண்களுடன் அமர்ந்து ஆடிக்கொண்டிருந்தாள் பெண்பாவை. அவள் அசைவுக்கு ஏற்ப்ப, பத்து சவரண் தங்க நாண் வளைந்து ஆடி தன் இருப்பை உணர்த்தியது.
‘அஸ்தமனம் எல்லாம் இருட்டாய்ப் போனதில்லை!’ எனும் கூற்றை விதிவிலக்காக மாற்றுவது போல ஆதவன் புலர்ந்த வேளையில் தொடங்கிய இராசகலகமெதுவும் அவன் பணிகளை முடித்து விடைபெறும் நேரமாகிய மாலைவரை சமரசம் ஏதுமின்றி தொடர்ந்து கொண்டல்லவா இருக்கிறது. ஆனால் படைப்பிலேயே விதிகளைத் தோற்கடித்த இந்தர், அமரா இருவருக்கும் உள்ளுக்குள் வெற்றிக் களிப்பொன்று ஆனந்த தாண்டவமிட்டது.
இருட்டுடன் போராடி ஆதவன் வெளிவரும் அதிகாலையில், கங்கையைத் தலையில் கொண்டவன் கோவிலில், இந்தர் இடியென முழங்கியது, எல்லோர் இதயத்திலும் அடியென இறங்கியது. ‘துரோகி!’ என சாடப்பட்ட பிரசாதின் இதயம் நொடியில் துடிப்பை நிருத்தி மீண்டும் துடித்தது. இந்தரின் சுடு சொல்லில் கொதித்தெழுந்த வேலுப்பாண்டி, நடராஜன் இருவரும் ஐயனார் போல மார் நிமிர்த்தி வீறு கொண்டு இந்தரை அடிக்கப் பாய்ந்தனர்.
பொன் தாலியைப் பற்றி கைகளில் சுருட்டி வைத்திருந்த அமராவின் வலது கையில் கௌரியின் நடுங்கும் சில்லிட்ட குளிர்கரம் ஆழுத்தப் பிடித்துக் கொண்டதும், அவரின் முகத்தைக் குனிந்து பார்த்தாள் அமரா.
“அமராமா!, படபடப்பா வருதுடா. இந்தரையும் ஏதும் பண்ணி…” தாயாக இந்தருக்காக பேசுவதா இல்லை மகளாக பாவித்த மருமகளுக்காக பேசுவதா என தடுமாறிய கௌரியின் கண்களைப் பார்த்து, தன் விழியை ஒருமுறை மூடித் திறந்து, நிலமையை தன் கையில் எடுத்தாள் அமரா. “ஸ்டாப் இட்!” சன்னமாக குரலை உயர்த்தி கத்தினாள் பெண். இந்தருடைய சட்டைக் காலரில் இறுக்கப் பிடித்திருந்த கையினை தளர்த்தி பெரியவர்கள் இருவரும் அவளின் பக்கம் முகத்தை திருப்பவும் இந்தரும் துள்ளி அவர்களின் கைகளைத் தட்டிவிட்டு, கசங்கியிருந்த சட்டையைச் சரி செய்தான்.
அமராவின் குரல் கேட்டு இத்தனை நேரமும் சிந்தனையின் பிடியில் சிக்கித் தவித்த பிரசாத்தும் முகம் நிமிர்த்தி அவளை நோக்கி ஆராய்ச்சிப் பார்வையை வீசினான். தொழிலில் மட்டுமல்ல தோற்றத்திலும் உயரமாக வளர்ந்த பெண், கருப்பு கால்சட்டை, முட்டிவரை மடிக்கப்பட்ட அதே நிற சேர்ட் அணிந்து, கபில (ப்ரௌன்) நிற கூந்தலை முதுகில் படர விட்டு, விழிகளில் இம்மியும் பயமின்றி அவனை நோக்கி நிமிர்வாக நடந்து வந்தாள் அவள். “தேவா!, எல்லாமே மறந்து போச்சா உனக்கு? நம்ம காதல், கனவு, குழந்தைனு எப்படியெல்லாம் பேசி, சுயத்தை இழந்து இருந்தோம். நீ… நீ சொன்னனு அபாட் பண்ணிட்டு வந்தா, ஏன் தேவா என்ன விட்டுட்டு வந்து இங்க… வேற ஒரு…” வார்ததைகளை முடிக்காமலே முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக் கொண்டாள் அவள்.
‘என்ன பேசுகிறாள்? காதல், குழந்தை?’ பிரசாதிற்கு மூச்சு முட்டுவது போல சொல்லெனா ஓர் உணர்வு. ‘பிரசாத் ஒழுக்கம் தவரிவிட்டானா?’ அவனைப் பெற்றவர்களினால் சிந்தையிலும் ஒப்பமுடியாத நிலை. ‘மாமா இப்படியா, இருக்காது.’ என மேகவி. ‘அண்ணா ஒருபோதும் இப்படி கிடையாது’ உண்மைக் கண்டறிய தவிக்கும் இசை, ‘என் மகள் திருணம், நான் வளர்த்த மருமனுக்கு தலைக்குனிவா?’, அமராவைக் கொன்றுவிடும் ஆவேசம். மனிதர்களின் உருவம் போல சிந்தனைகளும், திசைமாறும் படகுகளாக கொந்தளிக்கும் மன அலைகளில் தடம்மாறியது.
”நடராஜன், சினிமா சினிமானு பையன அவன் பவுசுக்கு விட்டு, இப்போ சினிமாவாட்டம் ஒரு பொண்ணுக் கூட சுத்தியிருக்கான் பார்த்தியலா?” தூரத்து பங்காளி ஒருவர் வாயை விட்டார்.
“ஆமாலே, சும்மாவா சொல்லுதிய? சினிமாக்காரவகல கூத்தாடிகனு, இப்ப பாரு என்னமா ஆடி ஒரு குட்டியக் கொடுத்துட்டு, இங்க வேசம் போடுறவ?” வயதை மீறி வாய்சொல்லை அளந்தார் பாட்டியெருவர்.
“அம்மாச்சி, சும்மாகிடவ நம்ம பிரசாத் புள்ள தங்கமான கண்ணாக்கும்.” சித்தி வகை உறவுப் பெண் கொடி தூக்கினார் பிரசாத்திற்காக.
‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல சபையைக் குழப்பும் இருகட்சியினர். ஆதரவாகவும் எதிர்பாகவும் சின்னக் குரலில் பேசியது, மெதுவாக சனக்கூச்சலாக மறியது.
“எல்லாரும் செத்த பேசாதிய. யாரோ ஒரு பொண்ணு நம்ம பையன, வாய்மேல பல்லுப்பட பேசுது. தீர விசாரிக்காம சபையும் இப்படிக் கத்துதிய. பொருமையா என்ன சாெல்லுதுனு விசாரிப்பபோம்.” ஊரின் பெரியவர் முன்வந்து கையமர்த்தி விசாரணையைத் துவக்கிவைத்தார்.
“உம்ம பெண்ணு, எங்க பையன் மேல சுமத்துர குத்தம் என்னனு விளக்கி சொல்லுதியலா?” ரகுவிடம் வினவினார் நடராஜன்.
ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் இறுதியில், சிறு சீட்டு நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டதே வெல்த் எண்ட் பைனான்ஸ் நிதி நிருவனம். ஆரம்ப காலங்களில் கோவையின் சிற்றூரில் பிறப்பிடமாக கொண்ட நிருவனத்தின் உரிமையாளரான அருள்மொழி தம்பதியினர் வியாபாரத்தினை வளர்ச்சிக் கட்டத்தில் முன்னேற்றுவதற்க்காக டெல்லியில் குடிபெயர்ந்தனர். அவர்களின் வாரிசுகளும் தொடர்ந்து டெல்லியிலேயே வாழ்ந்துவந்தனர். சீதாராமன், குந்தவி தம்பதிகளின் வாரிசான சேகரன், கௌரி இருவருக்கும் பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகையில் ரகுவரன், ரியாவினை திருமணம் செய்துவைத்தனர்.
ரகு, கெளரி தம்பதியினருக்கு இந்தரஜித் என்ற சிங்கம் முதலில் பிறக்க, சேகரன், ரியா தம்பதியினருக்கு அமரா என்ற கோதை ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தாள். அவளின் ஐந்தாவது பிறந்தனாளன்று ஒரு கார் விபத்தில் அவளினுடைய பெற்றோர்கள் இறைவனிடம் சரணடைந்தனர்.
பிறப்பிலேயே செல்வத்திலும், செல்லத்திலும் வளர்ந்ததால் என்னவோ அமராவுக்கு அதிக பிடிவாதமும், அதற்கு ஈடான நிமிர்வும் சரிசமமாகவிருந்தது. சீதாரமனும் மகனின் வாரிசை இன்னுமொரு வியாபார வாரிசாக வளர்க்க வேண்டி, சிறு வயதிலேயே புத்திகூர்மையுடைய அமராவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக, அவளது பதினைந்து வயதிலேயே வியாபார நுணுக்கங்களைப் பயிற்றுவித்தார். அதே நேரம் இந்தரும் சுயம்புவாக வியாபாரத்தில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டான்.
இந்தியாவில் தலைசிறந்த உயர்கல்வி நிருவனமான ஐ.ஐ.பி.எம் இல் வர்த்தக முதுகலையில் தங்கப்பதக்கத்தினை வென்ற இருவரும், இந்நாட்களில் வியாபாரத்தின் உச்சியைப் பிடித்துள்ளனர். ஆறு மாதங்களுக்கு முன், அமராவுடைய மதுபான தயாரிப்பு நிருவனமென்று விளம்பரப்படுத்தலுக்காக, பிரசாத்தின் படமொன்றில் முதலீட்டினை மேற்கொண்டிருந்தது.
தயாரிப்பாளருடன் ஒரு தடவை அவள், படப்பிடிப்புக்கு சென்றிருந்த வேளை பிரசாத்தினுடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. புதியவர்களாக பழகிய இருவரும் புரிதலினால் உறவின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு அடியெடுத்து வைத்தனர். விளைவு பிரசாத்தின் உயிர் அமராவின் வயற்றில் ஜனனித்தது.
பிரசாத்தோ ‘கருவைக் களைத்து வா, திருமணம் செய்யலாம்’ எனக் கூறி வாய்த் தர்கத்தில் ஈடுபட்டு, அவள் கருவைக் களைத்த பின் ‘நீயே வேண்டாம்’ என்று உதறிவிட்டு வந்துவிட்டான். இறுதியாக இரண்டு நாட்களுக்கு முன்பு இவனின் திருமண விடயம் அறிந்து, அமரா வீட்டினருக்கு உண்மையைக் கூறி இங்கு அழைத்துவந்தாள்.
ரகுவரன், சாயம்பூசப்பட்ட உண்மையைச் சபை முன்னிலையில் உடைத்தார். அமராவோ இந்தரின் மார்பில்
முகத்தை அழுத்தி அவனது இடையில் பட்டும் படாமலுமிருந்த சட்டையை உள்ளங்கையால் கசக்கிக் கொண்டிருந்தாள். “நைஸ் பிரான்ட் கிளிசரின், குட்டா” அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி முணுமுணுத்தாள். இந்தரோ உதட்டை மடித்து, சிரிப்பை அடக்கிக் கொண்டே ‘அடுத்து என்ன?’ என்பதைப் போன்று சபையைப் பார்த்து நின்றான்.
பிரசாத்தின் முகம் கருத்துவிட்டது. பொய் என நன்றாகவே அவனால் உணர முடிந்தாலும் ‘ஒரு வேளை ஏதாவது விபத்து நடந்து, கடந்த காலம் எதுவும் மறந்துவிட்டதா? இல்லை திருமணத்தில் யாரும் பிராங் ஷோ என்று விளையாடுகிறார்களா? இரண்டிற்கும் வாய்பே இல்லையே’ எண்ணச் சுழற்சியில் தள்ளாடிக் கொண்டிருந்தான்.
மேகவியும், சிவகாமியும் பயத்தினால் அருகில் போடப்பட்டிருந்த நாற்காளியில் ‘தொப்’ என விழுந்தனர். இசை அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு இதயத் துடிப்பைச் சரிபார்த்தாள். வேலுப்பாண்டியும், நடராஜரும் ரௌத்திரத்தை அடக்கிக் கொண்டு, மூளைக்கு வேலை கொடுத்து “என்ன? கத விடுதியலா? சும்மா இல்லாததயும் பொல்லாததயும் சொல்லுதிய, எம்ம பையன் தப்புச் செய்யாதவன்.” தந்தையாக நடராஜன் பேசினார்.
“இதோ பாருங்க, உங்க பையன நானே அமரா கூட இரண்டு மூன்று தடவ வெளியில பார்த்திருக்கேன், அது மட்டும் கிடையாது ஆதாரமில்லாம நாங்க ஒருபோதும் இப்படி வந்து பேசிட்டு இருக்கமாட்டோம்.” என்றான் இந்தர்.
“என்னலே பெல்லாத ஆதாரம், அதையும் காட்டுலே பாத்துபுடுவோம்!” மாமாவாக வேலு பேசினார். அமரா தெலைபேசியில் பிரசாத்துடன் நெருங்கியிருப்பது போல சில பல புகைப்படங்களைக் காட்டினாள். பிரசாத்தோ தொலைபேசியைப் பறித்துப் பார்த்துவிட்டு, “எந்த ஆப்ல போட்டோ மாப்பிங் பண்ணின?” கோபமாக கேட்டான்.
“தேவா! இது எல்லாம் பொய்னு சொல்றியா? நம்ம நினைவுகள் எல்லாமே உனக்கு பொய்யா தெரியுதா?” என அவள்.
“ஏய், நிறுத்துடீ. என்ன கதை கட்டுறியா?” பிரசாத் வினவினான்.
“எனக்குப் புரியுது தேவா, நீ எதையும் வெளிய சொல்ல மாட்ட, உண்மைய புதைக்கப் பாக்குற. வெல் இனி எந்த யூசும் கிடையாது. உன் முதுகு நடுவுல ஒரு மச்சம் இருக்கே அப்போ அதுவும் பொய்னு செல்லுவியாடா?” ஒற்றையில் பேசினாள் அமரா.
ஒரு நொடி முகத்தைச் சுருக்கி விட்டு பிரசாத் “ஹா, ஹா என் படத்தப் பார்த்த சின்னக் குழந்தைக்கும் அந்த மச்சம் தெரியும் டீ.” வெற்றிச் சிரிப்பு அவனிடம்.
“ஐ க்நோவ் திஸ். நீ இப்படி சொல்லுவனு எதிர்பார்த்தது தானடா. அதனால தான், இந்த ரிபோர்ட் எல்லாமே. பாரு நல்லப் பாரு, எல்லாரும் பாருங்க அபோர்சன் ரிபோர்ட், டீ.என்.ஏ ரிப்போர்ட்.” கௌரியின் கைப்பையை எடுத்து, மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதங்களை கடாசிவிட்டெறிந்தாள்.
மேலும் “இந்த ரிபோட்ஸும் பொய்னு சொல்லுவதானே!, எல்லாரும் நல்லாக் கேளுங்க முதுகு மச்சம் படத்துல தெரியும் ஆனா இவன் இடுப்புக்கு ஐந்து இன்ச் கீழே ஒட்டின மாதிரி இரண்டு மச்சம் இருக்கு. பொய்யானு கேட்டு செல்லுங்க ஐயா!” பிரசாத்திடம் ஆரம்பித்து, சபையிடம் பேசி, ஊர்ப் பெரியவர்களிடம் முடித்துவிட்டு முதலைக் கண்ணீரைத் துடைத்தாள் அவள்.
காற்றில் பறந்துவந்து இசையிடம் வீழ்ந்த வைத்திய அறிக்கையை படித்துப் பார்த்த இசைக்கு, தன் அண்ணன் மீது போடப் பட்டிருப்பது பொய்ப் பழியல்ல என நிதர்சனம் உணரும் போது இதயத்தில் ஊசி கொண்டு குத்துவது போன்ற வலி.
அவள் பார்த்த வைத்திய அறிக்கை அனைத்தும் தயார்படுத்திய வைத்தியசாலையானது, இசை சென்னையில் பணியாற்றும் வைத்தியசாலை, அமராவைப் பரிசோதனை செய்த மருத்துவர் கூட இசைக்கு நல்ல பரீட்சையமானவர். அதனால் இவ் அறிக்கைகள் எதுவும் பொய்யான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பேயில்லை எனத் திடம்கொண்டாள்.
சிவகாமி, நடராஜனின் பார்வை மகனைக் கேள்வியாக சுட்டது. பிரசாத்தின் கையோ அவள் கூறிய மச்சமிருக்கும் இடத்தை ஒருதடவை தொட்டு மீண்டது. அவனது ஐந்து வயதுக்குப் பின் அவனைப் பெற்றவர்கள் கூட அம்மச்சத்தினைக் கண்கொண்டு கண்டதில்லை. பின் சபை நடுவே பெண்ணொருவள் அம்மச்சதினை விமர்சிக்கிறாள் எனின் அவள் பொய்கூறுவது நிச்சயமற்றது அல்லவே!
“மா! இந்த ரிபோட்ஸ் அத்தனையும் உண்மைமா!” இசை அதிர்ச்சியில் சற்று சத்தமிட்டே கூக்குரலிட்டாள்.
“அம்மா!” பிரசாத் ஏதோ கூறவரும் போதே, சிவகாமி முகத்தை திருப்பினார்.
“ஐயா, நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு. எங்க வசதிக்கு உங்க இடம் சரிப்பட்டு வராததுதான். இருந்தும் எங்க பெண்ணு ஆசைப்பட்டுட்டா, பிரசாத்தை அமராக்கு தாலியக் கட்ட சொல்லுங்க. போலிஸ், பிரஸ்னு எங்களால இறங்க முடியும். ஆனா பாருங்க நாங்களும் பரம்பர கிராமத்தாளுங்கதான். ஊர்ப் பஞ்சாயத்தை விட கோட் என்ன பெரிசா பண்ணிட போவுது. நீங்க பெரியவங்க நல்லபடியா எங்க பெண்ணுக்கு தீர்ப்பு சொல்லணும்.” என கைகூப்பி ஊர்ப் பெரியவரிடம் கூறிவிட்டு.
“பணம் வேணும்னா ஏற்றத் தாழ்வா இருக்கலாம், ஆனா நாங்களும் உங்க சாதி தான் சார், நம்பி கட்டிவைக்கலாம்.” நடராஜனிடம் முடித்தார்.
“அதுதேன் சொல்லுதாக இல்ல, நம்ம பையன் மேல தப்புனு, பிரசாத் நீ என்ன சொல்லுத? அந்த பெண்ணக் கட்டிக்கிறியாவ?” பெரியவர் வினவினார்.
“இவ யாருனே எனக்கு தெரியாதுங்க ஐயா, இவ பொய் சொல்லு…” அவன் முடிக்கும் முன்னமே,
“போதும் பிரசாத், ஊர் சனம் முன்ன, குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டலே! அந்தப் பொண்ணக் கட்டிக்குற வழியப்பாருலே.” கட்டளையாக கூறினார் நடராஐன்.
“மா!, நீயாச்சும் நான் சொல்லுரத…”
“பிரசாத்!, இந்த அம்மை மேல பாசம்னு இருந்தா, ஐயா சொல்லுதபடி செய்லே!” வடிகின்ற கண்ணீரைப் புடவை முந்தானையால் துடைத்துக் கொண்டார்.
‘இனி தன் பேச்சு எடுபடாது’.எனும் கையறு நிலையில் பிரசாத் தள்ளப்பட்டான். ஆனால் அங்கு மேகவி எனும் பெண்ணின் நிலைதான் மிகப் பரிதாபம். பிறந்தது முதற்கொண்டு ‘மாமா உன்னையத்தான் கட்டிப்பான்.’ என ஆசைகளை வளர்த்துவிட்டு, திருமணமேடை வரை வந்து இப்போது வேறு ஒரு பெண்ணுடன் அவனை மணமுடித்து வைக்கப்போகிறார்கள். ‘ஓ’ வென அழவேண்டும் என்ற உந்துதலில் அவளுடைய தந்தையிடம் ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள்.
தன்னுடைய ஆறுவயதில் மின்சாரம் தாக்கித் தாயை இழந்த மகளுக்காக, வேறொரு திருமணம் கூட செய்யாமல் பாசமாக வளர்த்த தந்தை வேலுப்பாண்டி, மகளின் விழிநீரின் பாரம் தாங்காமல் தன் மதிப்புக்குறிய அக்காவின் கணவரிடம் குரலை உயர்த்தினார். “மாமா!, நல்லா நீதி சொல்லுதிய. அப்போ எம் பெண்ணு நிலம? அதுக்கும் உம்ம குடும்ப கௌரவத்த சீண்டாத வழில நீதிய சொல்லுங்க. இவளுக்கு மேடையில கல்யாணம் நின்னுபோச்சுதானே, யாரு மாப்பள கொடுப்பா? என்னோட கண்ணுக்குப் பொறகு எம் பொண்ணு நாதியத்து கிடக்குதே!” சாட்டையாக நாக்கைச் சுழற்றினார்.
மீண்டும் சனக் கூச்சல். யார் பக்கம் நியாயம் பேசுவது எனத் தெளிவில்லாத நிலமை. “எங்க பையன் இந்தர, உங்க பொண்ணுக்கு கட்டிக் கொடுக்க முடியுமா அண்ணா?” கௌரி வேலுவிடம் கேட்டார். சபையில் ஆழ்ந்த அமைதி. “ஆரம்பத்துல அமராக்கும், இந்தருக்கும் தான் கல்யாணம் பண்ணுறதா இருந்தது சார். இப்போ அதுதான் இல்லனு முடிவாகிச்சே, அதனால எங்க பையனுக்கு உங்க பொண்ணைக் கொடுக்கலாமே. எல்லாக் குழப்பத்துக்கும் சரியான தீர்வு இதுதான்னு தோணுது.” தந்தையாக ரகு பேசினார்.
“இல்ல தம்பி, எங்க பொண்ணு அம்மா இல்லாம வளந்தவ. அவள வேற வீட்டுக்கு கொடுக்குறதுனா சரிப்பட்டு..” சிவகாமி முடிக்கும் முன்னே கௌரி, “அம்மா!, அமராக்கு நல்லதுனா நாங்க எதுவும் பண்ணத் தயாரா இருக்கோம். இப்போ என்ன? எங்க பையன் வீட்டோட மாப்பிளையா உங்க வீட்டுக்கு வருவான்.” என்றார்.
அப்போதும் மேகவி வீட்டார் முகத்தில் குழப்பரேகை தெளிவடையாமல் இருக்கவும், அமராவின் அருகில் ‘டிபிக்கல் வில்லேஜ் மூவி மாதிரி இருக்கே’ என வேடிக்கை பார்த்த இந்தர் பேசினான். “அமராக்காக உங்க பொண்ணக் கட்டிக்கிறேன். எண்ட் அவ வாழப் போற உங்க வீட்டுல நானும் ஒரு பங்கா இருக்கவும், எனக்கு சம்மதம்.” ‘அமராக்காக’ அந்த வார்தையில் அத்தனை அழுத்தம் அவனிடத்தில்.
“என்னப்பா சொல்லுத, அந்தத் தம்பி சம்மதம்னு சொல்லுதாவுக. பொண்ணு நீ என்ன சொல்லுதமா?” பெரியவர் மேகவி, அவள் தந்தையிடம் கேட்டார். ‘அம்மாடி அப்பாக்காக சரி சொல்லுமா’ என்ற வேலுவின் பார்வையில், நெஞ்சில் நெருஞ்சி முள் தைக்க சம்மதம் எனும்விதமாக தலையை அசைத்தாள் மேகவி.
சிறிய சலசலப்பிற்கு பின், பேசபட்டதற்கு அமைய திருமணத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. பிரசாத்திற்கு கைகள் கட்டப்பட்ட உணர்வு. அவனை ‘சதா’ என உரிமையாக அழைக்கும் பெண்ணொருத்தி மூன்று வருடங்களுக்கு முன் இதேபோல ஒரு நிலமையில் அவனை நிறுத்தியது நினைவுக்கு வந்தது.
பிரசாத்தினுடைய திரைப்படமொன்றில் கதாநாயகிக்கு துணைநடிகையாக நடித்தவள் சேஷ்விகா. குறுகிய காலத்தில் வசதிபடைத்தவளாக மாற வேண்டும் என்ற பேராசையில், இயல்பாகவே அனைவருடனும் நன்றாக பழகக்கூடிய பிரசாத்துடன் ‘சதா அண்ணா’ என நெருங்கிப்பழகி, கடைசியில் ‘அண்ணா’ என்ற சொல்லுகே இழுக்கு வருவது போல அவன் மீது பொய்ப் பழியினைப் போட்டாள்.
ஊடகங்களில் வதந்திகளைப் பரப்பி, சினிமாத்துறையில் இருக்கும் அரசியலைப் பயன்படுத்தி, பெரும்தொகையை நஷ்ட ஈடாக கேட்டு வழக்கையும் தொடர்ந்தாள்.
ஆனால் அவளின் பத்தாம்பசலித்தனமான நடவடிக்கையால் பாதிக்கப்பட்டது அவளேதான். பிரசாத் தகுந்த ஆதாரங்களை வழங்கி குற்றத்திலிருந்து வெளியே வந்தான். அதன்பின்னதாக எந்தப் பெண்ணிடமும் ஏன் சில ஆண்களிடம் கூட ஒட்டுதலாக நடந்துகொள்ள மாட்டான்.
இன்று ஆதாரங்கள்கூட அவனுக்கு எதிர்ப்பாக காணப்பட்டது அதிலும் அரச சட்டதிட்டத்தை மீறி அரசமரத்து செம்புகளுக்கு மதிப்பளிக்கும் ஊரில் அவனால் என்ன செய்யமுடியுமாம்.
‘சிவனே வந்தாலும் தீர்ப்பு மாறாது’ என எல்லோரும் ஒரே பிடியில் பேசி திருமணத்தை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருந்தனர். அமராவினையும் மேகவியினையும் சிவகாமி, இசை, கெளரி என மூவரும் கோயிலை ஒட்டியமைந்துள்ள உடை மாற்றும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
“இசைமா! உதவியா இருடா!” கண்ணைக் காட்டிவிட்டு திரும்பி அடுத்த ஆயத்தங்களை செய்ய நகர்ந்த சிவகாமியிடம், “இந்தாங்க என்னோட தாலி” என அவள் பற்றி கைகளுக்குள் வைத்திருந்த பொன்சரடைக் கொடுத்தாள் அமரா.
‘என் தாலி’ எனும் சொல்லிலேயே ‘நீங்கள் மேகவிக்கு வேறு தாலியை ஏற்பாடு செய்யுங்கள், இது என் கழுத்தில் தான் ஏறவேண்டும்’ கட்டளையொன்று மறைந்திருந்தது. சிவகாமி யோசனையாக கோவிலை நோக்கி நடந்தார். கௌரி ‘பார்த்துக்கொள்’ என அமராவைப் பார்த்து தலையசைத்துவிட்டு அவர் பின்னால் சென்றார்.
“சோ, யூ ஏதோ மேகம் ஆர் கவி ரைட்?”, இதழைச் சுழித்தாள் அமரா. “எஸ் ஷீ இஸ்” வெட்டுவது போல் கூறினாள் இசை. ஏனோ இசைக்கு அமராவினைச் சுத்தமாக பிடிக்கவில்லை. வைத்திய அறிக்கை உண்மையாக இருப்பினும் அண்ணனைச் சபைமுன் அவமானப்படுத்திவிட்டாள் என்ற கோபம். மேலும், இசைக்கு மேகவி மீது எப்போதும் அதிக அன்பு கொட்டிக்கிடக்கும். தன் மாமா மகள் என்பதைத்தாண்டி வீட்டில் தன்னைவிட இரண்டுவயது இளையவள் என்றாலும் அவளை உயிர் நண்பியாக பாவித்தாள். நண்பியின் கண்ணீர் மீது இவள் நந்தவனம் வளர்பதா? என்ற சினம் கனன்றது அவளுக்கு.
“வெல், அப்போ புடைவையக் கொடுமா!” கவியின் முன் உள்ளங்கையை விரித்தாள் அமரா. கவியும், இசையும் புரியாமல் விழிக்கவும், “நீ கட்டியிருக்குற புடைவை தேவாவின் மனைவிக்காக வாங்கியதுதானே? அதனால இந்தப் நகை, புடைவை எல்லாத்தையும் கழற்றிக் கொடு” என்றாள். கவியோ இசையின் முதுகிற்கு பின்னால் நின்று சேலையை வலது கையால் அழுத்திப் பிடித்தாள்.
“ஏய்! என்ன திமிரா? நீயாக் கொடுத்தா உனக்கு நல்லது. இல்ல நானா துகில் உரியவேண்டிவரும். வசதி எப்படி.” கண்சிமிட்டி சிரித்தாள் அமரா.
“கவி அண்ணி, சாமி கும்பிடும் போது கட்டியிருந்த புடைவையைக் கட்டிட்டு இத இவங்ககிட்ட கொடு.” இசை பார்வையால் அமராவை எரித்துவிடுவது போல் பார்த்து கவியை உள்அறைக்குள் அனுப்பினாள். சற்றுநேரத்தில் அமராவின் கைகளில் அவள் கேட்டவற்றை வைத்தாள் கவி. “என்னமா கவிதை! எல்லாம் சரியா இருக்கா? அது என்ன கையில, எங்கேஜ்மன்ட் ரிங்தானே?” கவியுடைய மணிக்கட்டை நகம்பதியும்படி பிடித்து அவள் விரலில் இருந்த மோதிரத்தை வலிக்கும் படியாக பிடுங்கியெடுத்து அறைக்குள் விரைந்தாள் அமரா.
நேற்று மாலை எத்தனை மகிழ்சியாக போடப்பட்ட மோதிரம், ஆனால் இன்று? காலை, மாலை போல கனவும் ஜாலம் போடுகிறதல்லவா? கவி இசையின் மார்பில் புதைந்து கொண்டு அழுதாள். மணக்கோலத்திற்கான ஆபரணம் எதுவுமின்றி தன்னை அணைத்திருக்கும் தோழியை நிமிர்த்தி அழுத முகத்தைத் துடைத்துவிட்டு அவள் நகைகளை இவளுக்குப் பூட்டிவிட்டாள்.
அறைக்குள்ளே அமராவோ, தன்னைவிட சற்றுப் பூசினால் போன்ற உடல்வாகும் உயரத்தில் இவளைவிட ஒரு அடி குறைந்த கவியினுடைய சட்டை, அவள் தோள்களிலிருந்து வழுக்கிவிழுவதை முகத்தில் அக்னிச் சுடர் கொழுந்து விட்டெரிய கண்ணாடியில் பார்த்து நின்றாள். அவள் மனதில் வெற்றித்தீ புகைவிட ஆரம்பித்திருந்தது. மூச்சை இழுத்து விட்டு தன்னைச் சமப்படுத்திக் கொண்டு சட்டையின் பட்டியை இழுத்துக் கட்டி சரிசெய்தாள். பின் அலங்காரங்களை முடித்து, கபில நிற கூந்தலை மொத்தமாக சுருட்டிக் கொண்டையிட்டு, மல்லிகைச் சரத்தை சுற்றிக் கொண்டு வெளியில் வந்தாள்.
எங்கிருந்து மனை, அக்கினி குண்டம் அதற ஏற்பாடுகள் வந்தன என்பது புலப்படாத வண்ணம் வேலைகள் ஒரு மணி நேரத்தில் முடிந்தது. பிரசாத்தின் மாற்றுடையான பிரிதொரு வேஷ்டி, சட்டையில் இந்தர் ஒரு மனைக்கு முன்னும் தேவ் அடுத்த மனைக்கு முன்னும் அமர்ந்து மந்திரங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்தனர். தேவ் நொடியில் தலையை மட்டும் சரித்து இந்தரை புருவம் முடிச்சிடப் பார்தான். இந்தர் அதனைக் கவனியாதது போல கடமையில் கண்ணாயிருந்தான்.
‘என்னை விட இரண்டு அங்குலம் உயரமாக இருப்பான் போல், நான் தமிழ்பட நடிகன் என்பதற்கு ஏற்ற தோற்றம். இவன் தமிழ்நாட்டவருக்குறிய ஆண்களின் தோற்த்திலும் சற்று வசீகரம் அதிகமானவனே. உடைகள் கடந்த உள்ளத்தில் என்னவிருக்கின்றதோ? அந்த அமராவைப் போல் இவனும் ஏமாற்றுக்காரனாக இருப்பின் மேகவியின் வாழ்க்கை என்னாவது? அந்த வஞ்சகி இவனிடமும் பொய்கூறியிருப்பாள் போல! எதற்காக என் வாழ்வில் நுழைய முயற்சிக்கிறாள்? பணமா இல்லை புகழா?’ அவன் எண்ணவோட்டங்கள் எண்ணில் அடங்காது நீண்டது.
“பொண்ணுங்கள அழைச்சுட்டு வாங்கோ!” ஐயரின் கட்டளையின் படி இசை, அமரா, கவி இருவரையும் அழைத்து வந்தாள். மணமகன் இருவரும் தலை நிமிர்ந்து பெண்களைப் பார்த்தனர். தேவா முதலில் கவியைப் பார்த்தான். காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது கட்டியிருந்த இளம்சிகப்பில் வெள்ளிநிற ஜரிகை, அதே நிறத்தில் உடல் முழுவதும் தாமரைக் கொடிகள் போல வேளைப்பாடு செய்யப்பட்ட புடைவையில் நிலம்பார்த்து நடந்துவந்தாள். பின் அமராவை சட்டைபண்ணாமல் முகத்தை திருப்பிக் கொண்டான்.
அடர்சிகப்பில் தங்கநிற ஜரிகை முழுவதும் மேகத்திலிருந்து ஆதவன் எழுவது போன்ற வேளைப்பாடும், அதே நிறத்தில் உடல் பகுதியில் சிறு நட்சத்திர வடிவமைப்பும் முந்தியில் சீதா திருமணத்தினை காட்சியாக மாற்றிய வேளைப்பாடுமுடைய கூறைப்புடைவை அதற்க்கு தோதான நகையில் சர்வபூரணியாக அமரா இந்தரைப் பார்த்து தலைநிமிர்த்தி வந்தாள். “எப்படி” என கண்ணால் பேசினாள் அவள் அவனிடம். ஐந்து வருடங்களுக்குப்பின் இருவரும் இவ்வாறு பாரம்பரிய உடையில் மின்னுகின்றனர். “சூப்பர்” என சிறிதாக கண்சிமிட்டி அவனும் தன்னைக்குறித்து வினவினான். அவளிடமும் அதே ரசனையான பதில்.
“கெட்டிமேளம்” ஐயரின் குரலில், பிரசாத் அமராவின் கழுத்தில் பொன்நாண் ஏற்றிக்கொண்டே “யார் நீ” என முணங்கினான். அமராவோ வெட்கமென பிறர் சிந்திக்கும் வகையில் செம்மை பூசினாள். ஆனால் அது வெட்கச் செம்மையல்ல எரிமலை குழம்பின் தனல்கள் என்பது அவள் மட்டுமேயறிந்த உண்மை. அவள் கண்கள் தனக்கு முன்னிருக்கும் யாகத்தீயினை நோக்கி மகிழ்ந்தது. ‘வேள்வியில் வீழ்வாயடா’ மனம் கொதித்தது.
சிவனின் பதியாகிய அம்மனின் கழுத்தில் கிடந்த மஞ்சல் சரடில் கோர்த்த குன்றிமணித் தாலியினை இந்தர் மேகவியின் கழுத்தில் முடிந்து கொண்டே “வெல்கம் டூ மை லைஃப் அஸ் எ சர்…” வாக்கியத்தை முடிக்காமல், அவள் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே, சங்குக் கழுத்தில் கடைசி முடிச்சிடும் போது சுண்டுவிரலால் கோடிழுத்தான். அவனது தொடுக்கையில் கவியின் இதயம் தொண்டைவழியே வெளியில் குதித்துவிடலாமா? எனத் துடித்தது.
இருமனம் இணையும் திருமணம், அதற்கடுத்ததான சடங்குகள் அனைத்தும் நேரத்தை நெட்டித் தள்ளி ஒவ்வொன்றாக அரங்கேறி முடிந்தது. இறுதியாக நளபாகமும் ஆரம்பித்தது. பிரசாத், அமரா அவள் அருகில் இந்தர் அடுத்தாக கவி சகிதம் சம்மணமிட்டு வரிசையாக அமர்ந்திருந்தனர். அமரா பிரசாத்தை இடித்துக் கொண்டே அமர்ந்து விழிக்கடையினால் அவனைப்பார்த்து ‘ஹீம்! நெக்ஸ்ட் மூவில காலேஜ் ஸ்டூடன்ட் போல, நல்லா ஸ்லிமாகிட்டான். இதுவும் நன்மையே!’ உள்ளுக்குள் மெச்சிக்கொண்டாள். பிரசாத்தோ எதையும் கருத்தில் கொள்ளாமல், அவனுக்கான உணவினை அளந்து கொண்டிருந்தான்.
இந்தரோ, இலையிலிருந்த இனிப்பினை எடுத்து அமராவுக்கு ஊட்டிவிட்டு மீதியை ‘வேண்டுமா’ என்பதாக கவியிடம் நீட்டினான். அவன் முகத்தைப் பார்த்து ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தவேளோ, சட்டென முகத்தை இலையை நோக்கி திருப்பினாள். “என்ன மேகம்! விட்டா பொழிந்துடும் போல? நாங்க கொடுத்தா வாங்கிக்க மாட்டிங்களோ? அவ எச்சில்னு பீல் பண்றியா? அப்படினா நானும் அதே ஐ மீன் அவளால கொடுக்கப்பட்ட மிச்சம்தான்.” மீண்டும் காதுகளில் கிசுகிசுத்தான்.
‘கடவுளே! என்ன பேச்சுப் பேசுகிறான். அதாவது அமரா வேண்டாம் என்று தூக்கிப்போட்ட வாழ்க்கையை நான் வாழப்போகிறேன். என சாடுகிறானா?’ கவிக்கு உலகே தட்டாமாலை சுற்றியது.
கோவிலின் காட்சி மறைந்து, பிரசாத்தின் வீட்டின் காட்சி எழுந்தது. ஆலம் சுற்றப்பட்டு வீட்டினுள் நுழைகையில் இந்தரும் அமராவும் ரகசியமாய் கைகளைப்பிடித்துக் கொண்டே வீட்டினுள் வலதுகாலை வைத்தனர். அதே நேரம் கருநாகமொன்று உடலை நெளித்து வளைத்து அவ்வீட்டின் பூஜையறையில் நுழைந்தது. நேராக புதுமணத் தம்பதிகள் சாமியை வணங்குவதற்காக அச்சாமியறையினுள் புகுந்தனர்.
“அது பிரசாதோட அக்காமா, எம் மூத்தபொண்ணு. தீ விபத்துல புள்ளத்தாச்சியா மாப்பள கூடவே போய்ச் சேந்துட்டவ.” பூஜையறையில் மகவு சுமந்த வயிற்றுடன் இசைபிரியா, குமார் இருவரும் அவர்களின் சீமந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் சட்டத்திற்குள் சிரித்துநின்ற, நிழல்படத்ததை அமரா முகம்சுருக்கிப் பார்க்கையில் சிவகாமி விளக்கினார். “அழகாக இருக்காங்க” இந்தர் கூறினான். “தாயி நீ மொதல்ல விளக்கு ஏத்து வா!” அமராவை விளக்கை ஏற்றவைத்தார். “கவி நீயும் வாடாமா.” கவி விளக்கையேற்றும் போது, நிலத்தில் சரித்து கிடத்தப்பட்டிருந்த பிரசாத்தின் அக்காவுடைய புகைப்படம் விளக்கின் மீது விழுந்தது.
“அம்மா!” பயத்தில் பிரசாத்தின் புஜத்தில் முகத்தைப் புதைத்து கத்தினாள் கவி. புகைப்படம் தீயில் படரிக் கருகிக் கொண்டிருக்கும் வெளிச்சத்தின் பின்னால் நாகப்பாம்பு படமெடுத்தாடியது. “அம்மா! இவங்களை வெளியே கூட்டிப்போ. மாமாவக் கூப்பிடு. அந்த தடியைக் கொடுமா!” என அவசர கட்டளைகளைப் பிறப்பித்து ஒருவகையாக பாம்பை அடித்துக் கொன்றான் பிரசாத்.
அதன் பின்னதான காட்சிகள்தான் இந்தர் தூணில் சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தது. அக்கணம் ஒரே ஒரு வினாடி இந்தர், அமரா, அவன் தந்தை மூவரின் விழிகளும் நேர்கோட்டில் சந்தித்தது. மூன்று ஜோடிக் கண்களும் இலக்கை எட்டிப்பிடித்த, செயற்திட்டத்தின் முதலாவதுபடியில் கண்ட சாதகத்தன்மையினால் ஜொலித்தது.
விதி முடிச்சு அவிழுமா?
நின் முடிபோட்ட பந்தம் தொடருமா?
விதிகளை வீழ்த்தவே,
இவள் உன் வசம் வாழவா?
அவள் வீழ்தினாள்….