யாழ்-19

IMG-20210214-WA0021-9267c33f

யாழ்-19

யாழ்-19

“அஷ்வின் என்னைத் தூக்கேன்” பீச்சிலிருந்து ரெசார்ட் வரும் வழியில் ராஷ்மிகா கொஞ்சும் குரலில் கேட்க,

“ஏ போடி! உன்னைத் தூக்கியே எனக்கு இடுப்பு வலிக்குது” என்றான் அஷ்வின். கடந்த ஐந்தாறு நாட்களாக மனைவியைத் தூக்கித்தூக்கி அயர்ந்தே விட்டான். என்னதான் திடமான ஆண்மகன் என்றாலும் எத்தனை நேரம் கையில் வைத்திருக்க முடியும்.

“அப்ப தூக்க மாட்ட நீ!” இரு கைகளையும் இடுப்பிற்குக் கொடுத்து முறைத்தபடி அவள் கேட்க, “மாட்டேன் போடி” என்றவாறு அஷ்வின் முன்னே செல்ல,

‘என்ன சத்தமே இல்ல’ அஷ்வின் நினைத்தநொடி அவன் முதுகில் ஓடி வந்து ஏறிவிட்டாள் ராஷ்மிகா. ஒரு நிமிடம் அவளது எடை தாங்காமல் தடுமாறியவன் எப்படியோ கீழே விழாமல் சமாளித்து விட்டான்.

“அடியேய்!” என்றவன், “குரங்குடீ நீ” என அவளைத் தூக்கியபடியே நடக்க,

“நான் குரங்கா?” என்றவள் அவன் காதில், ‘அக்’ எனக் கடித்து வைத்தாள்.

“அய்யோ! ஆண்டவா.. என்ன சாவடிக்கறாளே” வெளிப்படையாகக் கத்தியவன், “இருடி! உன்னை அழ வைக்கறேன்” என்றான் பல்லைக் கடித்தபடி.

“அந்த பெட்ல தான் நீ அல்ரெடி ஜெயிச்சிட்டியே” ராஷ்மிகா கூற,

“அது உன் அப்பா, உன் கூட பேசலன்னு அழுத நீ. என்னால இல்ல” என்றான் தெளிவாக

“அட ஆமாம்ல. ஹாஹாஹா! என்னயெல்லாம் நீ அழ வைக்க முடியாது அஷு” என்றாள் அவன் முதுகின் மேல் நன்றாக சாய்ந்தபடி.

“பாப்போம். நான் நினைச்சத பண்ணாம விடமாட்டேன்” என்று அஷ்வின் சொல்ல, இருவரும் சீண்டல்களுடனே வர, அவர்களது ரெசார்ட்டும் வந்தது.

உள்ளே நுழைந்தவன் பெட்டில் அவளை அப்படியே போட்டுவிட்டான்,
“ஆஆ! லூசு” என்று திட்டியவள், பெட்டின் அருகிலிருந்த ப்ளக்கில் தனது மொபைலைச் சார்ஜ் போட்டாள்.

“நாளைக்கு மார்னிங்தான் கிளம்பறோம் ராஷ்மி. அப்புறமா எல்லாத்தையும் பாக் பண்ணிடலாம். எதாவது வாங்கணும்னா கூட சொல்லு, வாங்கிக்கலாம்” அஷ்வின் சொல்ல, அருகே அவன் அவளுக்கு வாங்கிக் குவித்த பொருள்களை எல்லாம் கண்டாள்.

“இதுக்கும் மேலேயா அஷ்வின்” அவள் வினவ,
“எவ்வளவு வேணாலும் வாங்கு. ஆனா, அதுக்கும் மேல சென்னைல ஒரு சர்ப்ரைஸ் இருக்கு உனக்கு. ஆனா, அதுக்கும் அழாத” என்றான் விஷமப் புன்னகையுடன்.

“என்ன சர்ப்ரைஸ் அஷ்வின்” ராஷ்மிகா குதுகாலித்தவளாகக் கேட்க,

“நோ.. நோ! சொல்ல மாட்டேன். நேர்ல பாத்துக்க” என்றான் ஒற்றைப் புருவத்தைத் தூக்கியவனாக.

“ம்கூம்” என்றவள் திரும்ப, அவளைப் பிடித்தவன் அவள் பின்னாலிருந்து அணைத்து,

“குண்டூஸ்” என்றான் தாபமாக.

அவனின் குரலில் வழிந்ததை உணர்ந்தவள், “ம்ம்” என்றாள் கணவனைத் திரும்பிப் பார்த்தபடியே.
“நமக்கு எத்தனை குழந்தை?” அவன் கேட்க, கையைத் தூக்கி இரண்டு விரலை ராஷ்மிகா காண்பிக்க, அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், “அப்ப ஃபர்ஸ்ட் பொண்ணு” என்றான்.

“நோ! பையன் பர்ஸ்ட்” என்றாள் ராஷ்மிகா.

“இல்ல. பொண்ணுதான் பர்ஸட் பாரு” என்றவன் அவள் கழுத்தில் தன் தாடையை வைத்து, அவள் தலையோடு தலை சாய்த்தான்.

“நோ! பையன் தான் பாருங்க”

“ஏன்டி பையன் கேக்கற?”

“பொண்ணு வந்தா அப்பாக்களுக்கு எப்பவுமே பாசம் அங்க திரும்பிடும். அப்புறம் எங்களைக் கவனிக்கறதே குறைஞ்சிடும். பிகாஸ், என் கேஸ்லயே அதான் நடந்திருக்கு. எனக்கு அதனால தெரியும்” என்றவளின் தலையில் செல்லமாகக் குட்டியவன்,

“அட மக்கு! அது பொண்ணுக மேல இருக்கிற பாசம்தான். இல்லைனு சொல்லலை. ஆனா, உங்கமேல குறையாதுடீ. அங்க பொண்ணுக்கிட்ட க்ளோஸ் ஆவோமே தவிர, உங்கிட்ட எப்படி குறையும்” என்று விளக்கம் குடுத்தவனை திரும்பிப் பார்த்த ராஷ்மிகா, அவனின் விளக்கத்தில் அதிசயத்துதான் போனாள்.

கழுத்தை மட்டும் திரும்பிப் பார்த்தவள் அவனது கன்னத்தில் இதழைப் பதித்து, கடித்தும் வைக்க, “ஸ்ஸ்! ராட்சசி. என்ன பெயர் வைக்கலாம் பொண்ணுக்கு” என்று அவளின் இடையில் விளையாடிய படி கேட்க,

“ம்ம்”, ராஷ்மிகா யோசிக்க, “தமிழ் பெயரா சொல்லு. ஏதாவது ஸ்டைல்னு சொல்லி வாய்ல வராததை சொல்லாத” அஷ்வின் சொல்ல,

“அங்கவை, சங்கவைன்னு வச்சிக்க” என்று ராஷ்மிகா அஷ்வினின் பேச்சில் கேலி செய்தாள்.

“உன்னை!” என்றவன் அணைத்திருந்த அவளை மேலும் பிடித்து தன்னுடன் இறுக்கினான்.

“வாவ்! இந்த பனிஷ்மெண்ட் நல்லா இருக்கே” என்ற ராஷ்மிகாவை நோக்கி, ஒரு மாதிரி பார்வையை வீசியவன், “யாழ்மொழி! நல்லா இருக்கா?” என்று வினவினான்.

“சூப்பர் சூப்பர்! நல்லா இருக்கு” அவள், தன் கண்கள் விரியச் சொல்ல, அவள் கண்களில் மூழ்கியவன், அவளின் கண்களில் தன் இதழைப் பதித்தான்.

அவனது முத்தம் அத்தோடு நிற்காமல் தொடர, முத்தங்கள் எல்லாம் யுத்தங்களாக மாறி, இருவரின் யுத்தத்தில் இருவரும் வெல்ல நினைக்க போரில் வென்றது என்னமோ காதல்தான்!

அவனின் காதல் விளையாட்டில் ராஷ்மிகா சோர்ந்துபோய் அவன் மேல் உறங்கிக் கொண்டிருந்தாள். ஒரு வாரமாய் ராட்சசனாக மாறி அவளை படுத்தி எடுத்திருந்தான். அவளும் கணவனின் தொடுகையிலும்,பலவித சில்மிஷங்களிலும் தன்னையே மறந்து போனாள்.

தன் மேலே தன்னை யாருக்கும் தர மாட்டேன் என்று உறுதியோடு இறுக அணைத்து படுத்திருந்தவளை, அணைத்திருந்தவன், எழுந்து, கதவை சாற்றிவிட்டு வெளியே வந்து ரிஷிக்கு அழைத்தான்.

***

“அஷ்வின்! இன்னிக்குதானே நாம போலாம்னு இருந்துச்சு. ஏன் நாளைக்கு மாத்துனீங்க” காலை அவன் மேல் சாய்ந்திருந்தபடி அவள் கேட்க,

“அந்த சர்ப்ரைஸ் நாளைக்குதான் நடக்கும். அதான்”

“அதுக்கா அஷ்வின் ஃப்ளைட் அகெயின் கான்சல் பண்ணி புக் பண்ணீங்க” அவள் சந்தேகத்துடன் நிமிர்ந்து கேட்க,

“ஆமாம், பேசாமத் தூங்கு. நாளைக்கு சீக்கிரம் எந்திரிக்கணும்” என்றவன், அவள் தூங்கிய பின்னும் முகம் இறுக யோசனையில் இருந்தான்.

நிறைய யோசனைகள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும், தான் செய்யும் காரியம் வெளியே தெரியக் கூடாதென்று எண்ணினான். தெரியவும் தெரியாதபடி தெளிவாகத் திட்டம் போட்டிருந்தான்.

அடுத்தநாள் மதியம் ஏர்போர்ட்டில் இருவரும் இறங்க பிஏ நிரஞ்சன் வந்தான். “நிரஞ்சன் நீலாங்கரை போகல. அண்ணாநகர் போறோம்” என்றதும், ராஷ்மிகா அவனை யோசனையாகப் பார்த்தாள்.

நிரஞ்சனும், ரிஷியுடன் இருக்கும் ஆட்களும் அவனையும் ராஷ்மிகாவையும் பாதுகாப்பாக அழைத்துவர, அவர்களுடைய காரில் ஏறினர் இருவரும்.

“எதுக்கு அஷு அண்ணாநகர்?” வினவினாள் ராஷ்மிகா.

“சர்ப்ரைஸ்!” அவன் ரோட்டைப் பார்த்தபடி சொல்ல ராஷ்மிகாவிற்கோ ஆவலாக இருந்தது. ஆனால், உள்ளுக்குள் அவளை அறியாமல் ஒரு பதட்டம்.

தன் வீட்டு வழியில் காரை செலுத்துவதை உணர்ந்தவள், “அஷு, எங்க வீட்டுக்கா?” என்று வினவ, அவனோ பதில் பேசவில்லை.

வீட்டின் முன்வந்து இருவரும் இறங்க, அஷ்வின் வீட்டினருடைய காரும் அங்கேதான் இருந்தது. ‘அம்மா அப்பா வந்திருக்காங்களோ?’ என்று நினைத்த அஷ்வின் ராஷ்மிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு,

“வா போலாம்” என்று உள்ளே அழைத்துச் சென்றான்.

உள்ளே அஷ்வினுடன் வந்த ராஷ்மிகா அங்கு கண்ட காட்சியில் உறைந்தே விட்டாள். சக்திவேல் மாலையோடு படுக்க வைக்கப்பட்டிருந்தார். வாயிலில் நிழலாடியதை உணர்ந்த அனைவரும் திரும்ப இருவரையும் கண்டனர்.

“ராஷ்மி! உன் அப்பா நம்மள விட்டுட்டுப் போயிட்டாருடீ” சக்திவேல் அருகில் அமர்ந்துகொண்டு, கல்யாணி அழ, ராஷ்மிகா தந்தையையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அஷ்வினின் கையிலிருந்த தன்கையை உருவியவள், தந்தை அருகே மெல்லச் சென்றமர்ந்தாள். தந்தையின் அருகிலிருந்த ராஷ்மிகாவிற்கு மனதில் ஆயிரம் கேள்விகள். தன் தந்தையை இப்படியொரு கோலத்தில் கனவிலும் அவள் நினைத்தது இல்லை.

முகம் இறுகி, காது, கன்னம், மூக்கு என அனைத்தும் சிவந்து உட்கார்ந்து கொண்டிருந்தவளைப் பார்த்த சிவகுமாரும், விஜயலட்சுமியும் பதறி அவள் அருகில் வந்து உட்கார்ந்து, “ராஷ்மி! ஏதாவது பேசு. இல்ல அழு” சிவகுமார் உலுக்க, அப்போதுதான் உலகிற்கே வந்தாள் ராஷ்மிகா.

சிவகுமாரைப் பார்த்தவள், “பெரிப்பா!” என்று கதறி அவரைக் குழந்தையாய் கட்டியழ, அத்தனை நேரம் கணவரை இழந்த துயரத்தில் அழுது கொண்டிருந்த கல்யாணியும் மகளின் குரலில் நிமிர்ந்தார்.

“அப்பா அப்பா!” என சிவகுமாரின் தோளைப் பிடித்தபடி தந்தையைப் பார்த்து கதறிக் கொண்டிருந்த மகளைக் கண்டவருக்கு மேலும் துயரம் தாக்கியது.

அவளை சமாதானம் செய்ய வந்த சிவகுமாருக்கோ கண்ணீர் கண்களில் இருந்து இறங்க, ராஷ்மிகாவோடு சேர்ந்து அவரும் அழுதார்.

“எங்கூட கடைசி வரைக்கும் பேசவே இல்லை. என்னை நம்பவும் இல்ல பெரிப்பா” தேம்பி அழுது விக்கியவள், “அப்பா! எங்கூடப் பேசுங்கப்பா” என்று சக்திவேல் மேல் சாய்ந்து அழ, யாராலும் அவளைத் தேற்ற முடியவில்லை.

அன்று அதிகாலை டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு ஒரு சரக்கு வந்திறங்க, அதைக் கவனிக்க செல்வதாகச் சொல்லிக்கொண்டு கிளம்பி காரை எடுத்த சக்திவேலின் கார் எடுக்காமல் போக, அண்ணணுடைய அலுவலகக் காரை அவசரத்திற்கு வரவைத்துச் சென்றார்.

காரை எடுத்துக்கொண்டு சென்றவர் சரியாகச் செல்ல, எதிரில் வந்த லாரியோ, சரியாகத் தப்பாகவே வந்தது. மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரை இழந்தார் சக்திவேல்.

கலெக்டர் வண்டி என்றதும் சீக்கிரமே சிவகுமாருக்குத் தகவல் எட்டிவிட முதலில் யாருக்கும் சொல்லாமல் விஷயத்தை உறுதி செய்துகொள்ள கிளம்பிச் சென்றவருக்கு, சொந்த ரத்தத்தின் உடலைப் பார்த்து அதிர்வாக இருந்தது. அவர் தம்பிதான் என்று சொல்லிவிட்டு வந்தவர் வெளியிலிருந்த சுவற்றில் சாய்ந்து முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.

மேற்கொண்டு ஆகவேண்டிய வேலைகளைப் பார்க்க மனம் சொல்ல, ராஷ்மிகாவிற்கு முதலில் அழைத்தவருக்கு அப்போதுதான் மகள் மால்தீவ்ஸ் சென்றது நினைவு வந்தது. சரியென்று அஷ்வினிற்கு அழைத்தார். அவனுடைய மொபைலும் ஸ்விட்ச்ஆஃப். கடைசியில் நாகேஷ்வரனிற்கு அழைத்தவர், விஷயத்தைச் சொல்ல அவருக்குமே இந்த திடீர் அசம்பாவிதத்தில் மனம் கலங்கிவிட்டது.

“நீங்க என் தம்பி வீட்டுக்கு போயிடுங்க. இன்னும், நான் அங்க சொல்லலை. நான் இப்போ சொல்லிடறேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்த சிவகுமார், அடுத்து மனைவிக்கு ஃபோனைப் போட்டு விஷயத்தைச் சொல்லி கல்யாணியுடன் சென்று இருக்கச் சொன்னார்.

பிரேதப் பரிசோதனை முடிந்து தம்பியின் உடலை எடுத்துக் கொண்டு சரியாக வீடு வந்த சமயம்தான் அஷ்வினும் ராஷ்மிகாவும் வந்தது.

ராஷ்மிகா சென்றது, கதறியது எல்லாவற்றையும் நின்று பார்த்துக் கொண்டிருந்த அஷ்வின் கல்லாக நின்றிருந்தான். அவன் முகத்தில் எந்தவொரு உணர்வும் இல்லை. சிறிது நேரம் நின்றவன் தந்தை அருகில் சென்று அமர்ந்துகொண்டான். ராஷ்மிகாவை தேற்றவும் இல்லை. ஏன் அவள் அருகில் கூடச் செல்லவில்லை.

அன்று என்று பார்த்து கீர்த்தியும் ஹர்ஷாவும் ஒரு சினிமாவிற்கு சென்று விட்டனர். ஃபோனையும் அணைத்து விட்டனர். படத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்த ஹர்ஷவர்தன் ஃபோனை ஆன் செய்ய முப்பத்தைந்து மிஸ்டுகால்கள் இருந்தது. தந்தையிடம் இருந்து அத்தனை மிஸ்டுகால்கள் வந்ததைக் கண்டவன் அடுத்த நொடியே அவருக்கு அழைத்தான்.

“எங்கடா போய்த் தொலைஞ்ச” ஃபோனை எடுத்தவுடனே கத்தினார் சிவகுமார்.

“ஏன்பா? என்ன ஆச்சு? நான் இங்க வெளியில் வந்தேன்”

“நீ, சித்தப்பா வீட்டுக்கு உடனே வா ஹர்ஷா” என்றவர் ஃபோனை வைத்துவிட்டார்.

“என்ன ஆச்சு ஹர்ஷா” கீர்த்தி வினவ, தந்தையுடன் பேசியதைச் சொல்லியவன், “நீ வா. நான் உன்னைக் காலேஜ்ல ட்ராப் பண்ணிட்டு போயிடறேன்” என்றான்.

“இல்லடா நீ போ. நான் முத்து அண்ணாவை இங்கையே வரச்சொல்லி போயிக்கறேன்” என்றவள் ஹர்ஷாவை அனுப்பி வைத்துவிட்டு தன்னுடைய டிரைவருக்கு கால் செய்தாள்.

வீட்டிற்கு வந்த ஹர்ஷா, சக்திவேல் இறந்துவிட்டார் என்பதைக் கண்டதும், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான். இருபதின் தொடக்கத்தில் இருந்தவனுக்கே கண்களில் நீர் திரண்டது. அதுவும்

தந்தை, அக்கா என அனைவரையும் கண்டவனுக்கு, ஒரு கண்ணில் இருந்து மட்டும் நீர் இறங்கியது. ட்ரைவரிடம் சொல்லி கீர்த்தியை, நாகேஷ்வரன் கூட்டி வரச்சொல்ல அவளும் நேராக இங்கு அழைத்து வரப்பட்டாள்.

அங்கு யாரைத் தேற்றும் நிலையிலும் யாருமில்லை. நாகேஷ்வரன்தான் மேலே ஆகவேண்டிய காரியங்களை கவனிக்கத் தொடங்கினார். உறவுக்காரர்கள் தெரிந்தவர்கள் என்று அனைவரும் வந்து துக்கம் விசாரிக்க, ராஷ்மிகா மட்டும் தந்தையின் முகத்தைத் தவிர எங்கேயும் பார்க்கவில்லை. பாசமாய் வளர்த்தது, கேட்டது, கேட்காதது என எல்லாம் செல்லமாய் வாங்கித் தந்தவரின் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எல்லாச் சடங்குகளும் முடித்து சக்திவேல் உடலை எல்லோரும் தூக்க, “வேணாம் ப்ளீஸ். எடுக்காதிங்க” எனக் கெஞ்சிக் கதற அங்கிருந்த அனைவரின் முகத்திலும் சோகரேகை அவளைப் பார்க்க முடியாமல். அவளைப் பெண்கள் பிடித்துக்கொள்ள சக்திவேலுடைய உடல் மயானத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.

ஆண்கள் எல்லாம் மின்மயானம் சென்றுவிட்டு இரவு எட்டுமணிக்கே திரும்ப ராஷ்மிகா, அழுது சோர்ந்து முகம் வீங்கி இருந்தாள். அவளைக் கண்ட ஹர்ஷாவோ, “அக்கா! எந்திரி” என்று அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவன்,

“இந்தா சாப்பிடு” என்று விஜயலட்சுமி கொண்டு வந்த சாதத்தை ஊட்டக் கை நீட்ட, ராஷ்மிகாவோ அதை வாங்க மறுத்தாள்.

“இப்ப சாப்பிடாம இருந்து என்ன பண்ணப் போற சொல்லு? சித்தப்பா இனி இல்லதான் அக்கா. ஆனா, நம்மகூட இருந்து நம்மளை கவனிச்சுட்டுத்தான் இருப்பாரு” என்று கடிந்தவனின் குரலும் கரகரத்தது.

“அப்பா தான் பெரிம்மா, இங்க இருக்கும்போது எல்லாம் ஊட்டி விடுவாரு” என்று பெரியன்னை வயிற்றில் சாய்ந்து ராஷ்மிகா விக்க,

“அழாத தங்கம். தம்பி சொன்ன மாதிரி அப்பா நம்ம கூடத்தான் இருப்பார்” குலுங்கிய அவளது முதுகைத் தேய்த்து விட்டவருக்கு கண்கள் பனித்தது.

“இப்ப சாப்பிட்டாத்தான். உனக்கு அழறதுக்குக் கூடத் தெம்பு இருக்கும்” பெரியன்னை சொல்ல ஹர்ஷா கொடுத்த சாப்பட்டை மறுக்காமல் ஓரளவு சாப்பிட்டாள் ராஷ்மிகா.

செல்வமணி மட்டும் அன்று இரவு தங்க, நாகேஷ்வரன், அஷ்வின், கீர்த்தி என மூவரும் வீட்டிற்குச் சென்றனர். அடுத்த நாள் காலைதான் தந்தை எப்படி இறந்தார் என்பதே ராஷ்மிகாவிற்குத் தெரிந்தது.

தந்தையின் பிரேதப் பரிசோதனை ரிசல்டை பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. ரிசல்டைப் பெரியப்பாவிடமே தந்தவள், தன்னறைக்கு நடக்க, “ஸ்பாட் அவுட்டாம்! பாவம்!” என்று யாரோ பேசிக்கொள்ள ராஷ்மிகாவின் மூளை எங்கோ பளிச்சிட்டது.

இதை யாரோ சொல்லி சமீபத்தில் கேட்டது நினைவு வர, யோசித்துக் கொண்டே நின்றவளுக்கு யாரென்று ஞாபகம் இல்லை. மூளையை கசக்கிக்கொண்டே ராஷ்மிகா நிற்க, வாயிலின் உள்ளே நுழைந்து கொண்டிருந்த அஷ்வினைப் பார்த்தவளுக்கு நின்ற இடத்திலேயே சகலமும் ஆடிவிட்டது.

பதட்டத்தில் கைகால் நடுங்க, தன் அறைக்குச் சென்று பாத்ரூமில் நின்று கொண்டாள்.
அஷ்வின்தான்.. அஷ்வின்தான்..!

அன்று ரிஷியுடன் வீடியோ காலில் இதைப் பேசிக்கொண்டு இருந்தது. அவள் அதைப் பார்த்து விட்டதுக்கும் அவனின் முகம் மாறியது. இப்போதுதான் அவளுக்குப் புரிந்தது.

அப்போது யோசிக்காதவளுக்கு, இப்போது ஏதேதோ முடிச்சு போட்டது அவளின் மூளை. நேற்று ரிஷி ஏன் ஏர்போர்ட் வரவில்லை என்றது கேள்வியாக எழுந்தது. ‘எங்கே சென்றான்?’ என்று பலவாறாக யோசித்து இருந்தாள்.

‘உன்னை அழ வைக்காம விடமாட்டேன்’ என்று அவன் சொன்னதும் நினைவில் வந்தது. ஆனால், பெரியப்பா காரில்தானே அப்பா சென்றார் என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் விளங்கியது எல்லாம்.

அஷ்வினிற்கும், பெரியப்பாவிற்கும் முதல் இருந்தே இருக்கும் பிரச்சனை. கல்யாணத்திற்குப் பிறகு பெரியப்பாவை சந்தித்துவிட்டு வந்தாலும் அவனிற்கு அவ்வளவாக அதில் பிடித்தமிருக்காது என்றும்.

ஒருநாள் அஷ்வின், “என் குடும்பத்துல இருக்க யாருக்காவது ஏதாவது பிரச்சினை குடுத்தா, அது யாரா இருந்தாலும் விடமாட்டேன்” என்று சொன்னது எல்லாம் ஞாபகத்தில் வந்தது.

மால்தீவ்ஸில் இருந்து கிளம்பும்போது, “சரி ரிஷி. நாளைக்குதான் க்ளோஸ்னா, நான் நாளைக்கே கிளம்பறேன்” என்றது என அனைத்தும் மூளைக்குள் போட்டி போட்டுக்கொண்டு வர, ராஷ்மிகா இந்த நம்பிக்கை துரோகத்தில் சிலையாய் நின்றாள்.

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காயாய் அவளை மனதளவிலும் சரி, உடலளவிலும் சரி ஏமாற்றிவிட்டான். இரண்டாவது ப்ளானில்தான் பெரியப்பாவிற்கு பதிலாக அப்பா சிக்கியது’.
யாருக்கு ஏதாவது ஆகியிருந்தாலும் அவள் இப்படித்தான் இருந்திருப்பாள். குளியலறையில் நின்று அவனின் நாடகத்தை நம்பி ஏமாந்த தன்னையே வெறுத்தபடி அழுதவள், எவ்வளவு நேரம் நின்றாளோ கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுத்தான் முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தாள்.
செல்வமணிதான் நின்றிருந்தார்.

“அஷ்வின் வந்திருக்கான்டா” அவளுக்குத் தெரியவில்லை என்று நினைத்து செல்வமணி சொல்ல

“சரி அத்தை, வரேன்” ராஷ்மிகா.

‘ஒரு வேளை அப்படி இருக்காதோ’ என்று அவளது காதல் கொண்ட மனம் அவளிடம் முறையிட்டது. முகத்தைக் கழுவிக்கொண்டு வெளியே வந்தவள் கணவனைத் தேட, அஷ்வினைக் காணவில்லை. அவனைத் தைடி அவள் வெளியே வர, அஷ்வினின் குரல் மட்டும் கேட்டது அவளிற்கு.

“இங்க பாரு ரிஷி. இப்போதைக்கு நீ வரவேண்டாம். நீ அங்கேயே இரு. நான், உன் பேமிலியை பாத்துக்கறேன். இங்க, அது ஆக்ஸிடென்ட்தான்னு உறுதியாகட்டும். அப்புறம் வா” அவன் பேசிக் கொண்டே போக, சிறிதாய் இருந்த நம்பிக்கை நூலும் அறுந்து விழுந்தது ராஷ்மிகாவிற்கு.

அங்கிருந்து அகன்று வந்தவள், தனது பெரியன்னையிடம் நின்று கொண்டாள். நெஞ்சம் எரிமலையாய் குமுறிக் கொண்டிருந்தது. இவ்வளவு மோசமான ஒருத்தனிடமா மனதையும் உடலையும் காதலோடு பகிர்ந்து கொண்டோமென்று நினைத்தவளுக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது. அஷ்வின் அன்றும் அவளிடம் வந்து பேசவில்லை. சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பிவிட்டான்.

இரவு வரை அடக்கி வைத்திருந்த அழுகையை, இரவு வந்ததும்
முழுவதுமாகக் கொட்டித் தீர்த்தாள். அடுத்து வந்த நாட்களிலும் அஷ்வினும் அவளும் பேசிக் கொள்ளவில்லை. பதினாறாம்நாள் காரியம் முடிந்து அனைவரும் பேச உட்கார்ந்தனர்.

“கல்யாணி, இனிமேல் எங்க வீட்டில்தான் இருப்பாங்க” சிவகுமார் நாகேஷ்வரனிடம் சொல்ல, “சரிங்க நல்ல முடிவுதான். அவங்களைத் தனியா விட வேண்டாம்” என்றார் நாகேஷ்வரன்.

நாகேஷ்வரன் அன்று அவர்கள் அழுது கொண்டிருந்த பொழுது செய்த செலவுகளை அவர் மறுக்க மறுக்க கையில் தந்தார் சிவகுமார். சிறிதுநேரம் எல்லோரும் பேசியவர்கள், “சரி கிளம்பலாம்” நாகேஷ்வரன் எழ,

“ம்ம், சரி” என்ற அஷ்வின், ராஷ்மிகாவிடம் பார்வையைத் திருப்ப,

“நான், இனி அங்க வரமாட்டேன்” அவள் உறுதியாகச் சொன்னக் குரலில் அனைவரும் அதிர, அஷ்வின் மட்டும் இடுங்கிய பார்வையுடன் அவளைப் பார்த்தான்.

“ஏன்?” அஷ்வின்.

பதில்பேசாமல் நின்ற ராஷ்மிகாவிடம் அனைவரும் கேள்வி கேட்க அவள் பதிலளிக்கவில்லை. “நான் உங்கிட்ட தனியா பேசணும்”அஷ்வின் சொல்ல, அந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த ராஷ்மிகாவோ, அவளின் அறையை நோக்கி நடக்க, அஷ்வினும் சென்றான்.

“என்ன ஆச்சு உனக்கு?” அஷ்வின் வினவ,

“எனக்கு எதுவும் ஆகல. இப்போதான் எல்லா உண்மையும் புரிஞ்சிருக்கு” ராஷ்மிகா அவனை வெறித்தபடி சொல்ல, அஷ்வினின் கண்களோ கூர்மையானது.

“என்ன உண்மை?” அஷ்வின், அவள் பார்வையை எதிர்த்து தன் பார்வையை கூர்மையாக்கிக் கேட்க,

“நீ ஒரு கொலைகாரன்னு” அவளின் வார்த்தையில் அதிர்ந்தான் அஷ்வின்.

அவன் பேசாது நிற்க, “என்ன எல்லாம் தெரிஞ்சிருச்சுன்னு பாக்கறியா அஷ்வின். இனிமேலும் நான் முட்டாள் இல்ல. அஷ்வின், என்னை அழ வைக்கணும்னு நினைச்ச. பண்ணிட்ட. அப்புறம் என் பெரியப்பாக்கு வச்ச பொறில என் அப்பா மாட்டிட்டாரு” என்றவள்,

“நானும் என் குடும்பமும், உனக்கு என்ன பாவம் பண்ணோம்டா” கோபமும் அழுகையுமாக பத்ரகாளியாக நின்றாள்.

“அன்னிக்கு நீ, ரிஷி கூட பேசுனத மட்டும் நான் பாக்காம இருந்திருந்தா, நான் இன்னமும் உன்னை நம்பி இருப்பேன். யார் செஞ்ச புண்ணியமோ எனக்கு தெரிஞ்சிடுச்சு”

“என்கூட இத்தனை நாள் நடிச்சிருக்க. என்னை பழி வாங்கறக்கு இல்ல?”

“அக்கறையா பாத்துக்கிட்ட. லவ் பண்றனுகூட சொன்ன. ஆனா, அதுல கூடவா நடிப்ப” என்று கேட்டவளுக்கு உதடுகள் பதட்டத்தில் நடுங்கியது.

தன்னை, அவன் எவ்வாறு எண்ணியிருந்தால் இப்படி நடந்திருப்பான் என்று. அது தெரியாமல் அதை காதலென்று நம்பி அவனிடம் உருகி இருக்கோமே என்று நினைக்க நினைக்க சொல்லமுடியாத துயரம் அவளைத் தாக்கியது.

அஷ்வினோ கோபத்தோடு எதுவும் பேசாமல் நின்றிருந்நான். நின்றிருந்தான்.

“எனக்கிருக்க ஆத்திரத்துக்கு, உன்னையும் ரிஷியையும் மாட்டிவிட இரண்டு நிமிஷம் ஆகாது. ஆனா, உங்கூட வாழ்ந்த பாவத்துக்கு எதுவும் சொல்லாம விடறேன். தயவுசெஞ்சு என் மூஞ்சில இனி முழிக்காத. எனக்கு உன்ன பாக்கப்பாக்க என்னையே நினைச்சு அருவருப்பா இருக்கு” என்று கலங்கிய கண்களுடன் கோபத்தில் கத்த, அஷ்வினோ அவளைத் தன பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தான்.

எதுவும் பேசாமல் நின்றிருந்த அஷ்வினோ, ஒரு வெறுமையான பார்வையோடு, ஒரு வெற்றுச் சிரிப்பை உதிர்த்துவிட்டு, அங்கிருந்து அகன்றவன், கதவை அறைந்து சாத்திவிட்டு வெளியே வந்தான்.

வெளியே வந்தவன், “அவ இனி வரமாட்டா. அவளா வந்தா வரட்டும்” என்றவன் வெளியே நகர முதலிலேயே துக்கத்தில் இருந்த அனைவருக்கும் இது என்ன, அடுத்த வேதனை என்றிருந்தது.

ஹர்ஷாவோ, குடும்பத்தையே ஒரு துளைக்கும் பார்வை பார்த்துவிட்டு அக்காவைத் தேடிச்சென்றான்.

நாட்கள் மெல்லமெல்ல நகர்ந்தது. அஷ்வினும் பேசவில்லை. ராஷ்மிகாவும் பேசவில்லை.

ஒருநாள் காலை சமையல் அறையில் இருந்த அன்னையிடம் வந்த ராஷ்மிகா, “ம்மா, ஹாஸ்பிடல் போலாம்” என்று சொல்ல,

“ஏன்? என்னாச்சு?” மகளின் கழுத்து மற்றும் நெற்றியில் கை வைத்தபடி வினவினார் கல்யாணி.

“நான் ப்ரெக்னென்ட்டா இருக்கேன்” இறுகிய குரலில் சொன்னவளைக் கண்டு கல்யாணிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது.

“சரி வா. நம்ம டாக்டர்கிட்டையே செக்கப் போலாம்” என்று கல்யாணி மகளின் கன்னத்தை பிடித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சொல்ல,

“ம்மா!” மீண்டும் இறுகிய குரலில் அன்னையை அழைக்க, அதே சமயம் அங்கே வந்தார் விஜயலட்சுமி.

“நான் போலாம்னு சொன்னது செக்கப்புக்கு இல்ல” என்றவள் தொண்டையை செறுமியபடி, “அபார்ஷன் பண்றதுக்கு” என்றாள், மனதில் ஈட்டி வைத்து வதைப்பதைப போல எழுந்த துக்கத்தை அடக்கியபடி. அவள் அதை சொல்லி முடிக்கவும், விஜயலட்சுமி அறைந்தே விட்டார் ராஷ்மிகாவை.

“என்னடி பேசற நீ. இன்னொரு அறை அறைஞ்சேனா செவினி கிழிஞ்சிடும்” என்று அவர் திட்ட கல்யாணியும் எதுவும் பேசவில்லை.

கல்யாணி செய்ய வேண்டியதை, விஜயலட்சுமி செய்ய அவர் எதுவும் பேசாமல் நின்றார். சத்தம் கேட்டு வந்த சிவக்குமாரும், ஹர்ஷாவும் என்னவென்று அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தார் கல்யாணி.

“ராஷ்மிகா! நீ அஷ்வினை டிவோர்ஸ் பண்ணிட்டு, இன்னொரு கல்யாணம் பண்ணிப்பேன்னா, நான் இதுக்கு ஒத்துக்கறேன்” சிவக்குமார் மகளை அறிந்தவராய் செக்மேட் வைக்க, எதுவும் பேசாமல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

அஷ்வினிடம் இதை மறைக்க எண்ணியவள் மீதமிருந்த ஒருமாதத்தில் கல்லூரியை முடித்துக்கொண்டு டெல்லி சென்று, சரண் ஆரம்பித்த கம்பெனியில் வேலையில் அமர்ந்தாள். தன்னைப் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று அனைவரிடமும் மிரட்டி சத்தியம் வாங்கிய பிறகே, டெல்லி சென்றாள்.

குடும்பம் சரணைத் தவிர யாருக்கும் எதுவும் தெரியாது அவள் எங்கு இருக்கிறாள் என்று. இந்தக் குழந்தை வேண்டாமென்று சொன்னதும் அவள்தான். ஆனால், யாழ் பிறந்த பின், குழந்தைக்காகவே வாழ வேண்டுமென்று நினைத்ததும் அவள்தான். ஆனால், இன்று மகளைத் தூக்கிக்கொண்டு அஷ்வின் சென்றது அவளிற்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது.

தன்னுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்து, முழுதாக வெளியே வந்த ராஷ்மிகா மணியைப் பார்த்தாள். காலை ஐந்தரையைக் காட்டியது. திரும்பிப்படுத்தவள் மகள் இல்லையென்பதை உணர கண்கள் மீண்டும்
கலங்கியது. ஏற்கனவே, அழுததில் கண்கள் எல்லாம் வீங்கியிருக்க, காலை எழுந்ததும் மகள் செய்யும் சேட்டைகள் நினைவுக்கு வந்தது.

மனம் பாரமாய்க் கனக்க, குளித்து முடித்துக் கொண்டு எட்டுமணி அளவில் வீட்டிற்கு எதிரில் உள்ள கோயிலுக்காவது செல்லலாம் என்று வெளியே வர, அஷ்வினின் கார் உள்ளே வந்தது.

Leave a Reply

error: Content is protected !!