ரகசியம் 15💚

ரகசியம் 15💚
“என்னை பிடிச்சிருக்கா, இல்லையா?” தேனு மிரட்டலாகக் கேட்க, அவளின் அதிரடியில் ஆடிப்போய்விட்டான் யுகன். அவனுடைய நினைவுகளோ அதிரடியில் ஆரம்பமான அவளுடனான முதல் சந்திப்பைத்தான் நினைத்துப் பார்த்தது.
தன் அத்தையை அவர் குடும்பத்துடன் இணைக்க வேண்டுமென்ற எண்ணம் உதயமானதுமே அவரிடம் கெஞ்சி மிரட்டி ரேவதியின் புகுந்த வீட்டாற்களின் ஊரை கேட்டறிந்தவன், உடனே தன் மாமாவின் ஊரைத் தேடி சென்றிருந்தான்.
காரில் ஊருக்குள் நுழைந்த யுகனுக்கு அத்தனை மனநிம்மதி. பிறந்தது முதல் நகர வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவனுக்கு இது போன்ற கிராமங்களில் அலாதிபிரியம். அதனாலேயே வியாபாரத்தை கவனிக்க மறுத்து ஃபோடோகிராஃபி என்ற பெயரில் கிராமங்களுக்கு புறப்பட்டுவிடுவான். கிராமப்புற வாழ்க்கை முறையை புகைப்படமெடுத்து வெளிநாட்டு வியாபார வலைத்தளங்களில் விற்பது அவனுக்கு பொழுதுபோக்கு.
அங்கு நின்றிருந்த சில மக்கள் ஊருக்குள் நுழைந்த காரையே கேள்வியாக நோக்க, காரை வீதியோரமாக நிறுத்தியவன், கால்நடையாக வயல்வெளிகளையும் தோப்புக்களையும் பார்த்தவாறு நடக்க ஆரம்பித்தான்.
சரியாக ஒரு பெரிய மரத்தினருகே எங்கோ பார்த்துக்கொண்டு அவன் செல்ல, அவன் காதுகளில் விழுந்தது அந்த மிரட்டல் சத்தம்.
“ஏலே, வாங்குற காசுக்கு உண்மையா நேர்மையா இருக்கணும். அதுல உண்மையா இல்லாதவன் மனுஷனே இல்லை” என்ற ஒரு பெண்ணின் குரல். அதைக் கேட்டதுமே யுகனுக்கு அத்தனை ஆச்சரியம்.
‘வாவ்! வாட் அ போல்ட் கேர்ள்’ உள்ளுக்குள் ஆச்சரியமாக நினைத்துக்கொண்டவாறு அந்த மரத்தைச் சுற்றி வந்து மரத்திற்கு பின்னாலிருந்தே மெல்ல அவன் எட்டிப் பார்க்க, அங்கு தாவணி முந்தானையை இடுப்பில் சொருகி யுகனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தாள் அவள். அவளுக்கு முன்னே ஒரு ஆடவன் வேறு.
‘முகம் சரியா தெரியலன்னாலும் நிக்கிற தோரணையே ஜான்சி ராணிக்கு ஒன்னுவிட்ட அக்கா பொண்ணு மாதிரி இருக்கே. அவன் பார்க்க முறுக்குமீசை வச்சி தடிமாடு மாதிரி இருக்கான். இவ அஞ்சடி கூட இருக்க மாட்டா. கிராமத்துல பொண்ணுங்க ரொம்ப அடக்கமா இருப்பாங்கன்னு சொல்வாங்க. ஆனா, இவ… கட்டினா இவள மாதிரி ஒரு பொண்ணதான்’ என்று தாறுமாறாக ஏதேதோ நினைத்துக்கொண்டு சென்றவனின் சிந்தனை அடுத்து அவர்கள் பேசிய உரையாடலில் அய்யோ என்றாகிவிட்டது.
“நான் என்ன தேனு பண்ண? அந்த ஆளு என்னையே சுத்தி சுத்தி வந்தான். எக்சாம் ஹால்ல பிட்டு தர்றது என்ன அம்புட்டு ஈசின்னு நினைச்சியா? ஒருவேள, மாட்டியிருந்தேன் அம்புட்டுதான்” அவன் பம்மிய குரலில் சொல்ல, “அடிங்க! இது காசு வாங்கும் போது தெரியல்லையா? எனக்கு பேப்பர காட்டுவேன்னுதானே காசு வாங்கின?” தேனு பொங்கி எழ, ‘அடிப்பாவி!’ வாயில் கை வைத்துவிட்டான் யுகன்.
“மறுபடியும் ஃபெயிலு, அர்ரியர் எழுதணும் பரீட்சைக்கு காசு தாங்கன்னு போய் நின்னா அவ்வளவுதான், என்னை மிஸ்டர்.கர்ணா மாட்டுச்சாணி அள்ள விட்டுடுவாரு. அய்யோ! சோதீக்காதீங்கடா” அவள் நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொள்ள, அப்போதுதான் எதேர்ச்சையாக நிமிர்ந்த தேனுவுடன் பேசிக்கொண்டிருந்த மதனின் விழிகளில் சிக்கினான் யுகன்.
“ஏய் யார் நீ?” அவன் அதட்டலாகக் கேட்க, அப்போதுதான் தன்னெதிரே இருந்தவனின் பார்வை செல்லும் திசையை நோக்கி வேகமாக திரும்பிய தேனுவுக்கு அதிர்ச்சி.
‘யார் இவன்?’ முதலில் கேள்வி கலந்த அதிர்ச்சியாக யோசித்தவளுக்கு அடுத்து மூளையில் ஒன்று உதிக்க, தன் பக்கத்திலிருந்தவனின் காதருகே எட்டி, “ஏலே, ஒருவேள இவன்தான் என்னை ஃபோலோவ் பண்ற அப்பா வச்சிருக்க வெளிநாட்டு உழவாளியோ?” அவள் கிசுகிசுக்க, அவனோ அவள் உயரத்திற்கு குனிந்து, “ஆனா, ஆள பார்த்தா அப்படி தெரியல்லையே, பெரிய பார்ட்டி மாதிரி தெரியுது” என்றான் மதன்.
“எல்லா என் அப்பன் காசா இருக்கும். அன்னைக்கே அவரு சொன்னாரு. உள்ளூர்ல ஆள் வச்சா நான் கண்டுபிடிச்சிடுவேன்னு ஊரு விட்டு ஊரு ஒருத்தனை கூட்டிட்டு வந்து என்னை கண்காணிக்கிறேன்னு. இம்புட்டுநாளா நம்ம கண்ணுக்கு சிக்காம இருந்திருக்கான்” தேனு அவளாக புத்திசாலித்தனமாக ஒன்றை யூகித்து முடிவு செய்ய, யுகனோ இருவரும் கிசுகிசுத்துக்கொள்வதையே இதழை ஈரமாக்கியவாறு பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” அவர்களின் கவனத்தை பெற தொண்டையை அவன் செறும, தாவணி முந்தானையை உதறி இடுப்பில் சொருகியவள், “இருந்தாலும் எனக்கு அவர பார்க்கும் போது…” என்று மதன் ஏதோ சொல்ல வந்ததை கூட காதில் வாங்காமல், யுகனினெதிரே போய் நின்றாள்.
“ஓஹோ! நீதான் அவனோ?” அவள் நீட்டி முழக்க, “எவன்?” யுகன் தான் யோசித்ததை கேட்டு முடிக்கவில்லை, அதற்குள் மரத்திற்கு பின்னே அவனை இழுத்து மரத்தில் சாய்த்த தேனு, “ஏய், இப்போ நாங்க பேசின எதையும் அப்பாக்கிட்ட நீ சொல்லிற கூடாது. ஏதாச்சும் போச்சு… அம்புட்டுதான்” அவள் மிரட்ட, யுகனோ விழிகளை விரித்தான்.
ஒரு பக்கம் அவளின் மிரட்டலில் அவனுக்கு சிரிப்பு வர, இன்னொரு பக்கம் அவளின் நெருக்கத்தில் அவனுக்கு அத்தனை சங்கடமாக இருந்தது. ஆனால், தேனு அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை போலும்!
“புரியுதா?” அவள் அழுத்தமாகக் கேட்க, “வாவ்!” மெல்ல முணுமுணுத்தவன், “மாமா ரொம்ப போல்ட்னு அத்தை சொன்னாங்க. உன்னை, உன் தைரியத்தை பார்க்கும் போது நீதான் அவரோட பொண்ணுன்னு தோனுது” சுவாரஸ்யமாகச் சொல்ல, புரியாது புருவத்தை நெறித்தாள் அவள்.
அவளின் விழிகளில் தெரிந்த கேள்வியை புரிந்துக்கொண்டவன், “பார்த்திபன் மாமாவோட பொண்ணா நீ?” தன் சந்தேகத்தைக் கேட்க, அதிர்ச்சியில் விழி விரித்தவள், அடுத்து அவன் தன்னை அறிமுகப்படுத்தியதும் வேகமாக அவனை விட்டு விலகி நின்றாள்.
“அது.. அது என்னை மன்னிச்சிடுங்க” தேனு திணற, அதில் மெல்ல சிரித்த யுகன், “என்னை பார்த்திபன் மாமாக்கிட்ட கூட்டிட்டு போறியா?” ஆர்வமாகக் கேட்க, “அது…” என்று நடந்ததை சொல்ல வந்து வாயை மூடிக்கொண்டவள், அடுத்தநிமிடம் தன் தந்தை முன்னே அவனை கொண்டு சென்று நிறுத்தினாள்.
அதன்பிறகுதான் அவன் கர்ணாவுடன் பேசியது, நடந்ததை தெரிந்துக்கொண்டது, கயலைப் பற்றி தெரிந்துக்கொண்டதெல்லாம்.
நடந்ததை நினைத்துப் பார்த்து யுகன் எச்சிலை விழுங்கிக்கொள்ள, தன் கேள்விக்கு பதிலை எதிர்ப்பார்த்து அவனையே பார்த்திருந்த தேனுவின் நினைவுகளோ அவன்மேல் காதல் உண்டான தருணத்தை நினைத்துப் பார்த்தது.
யுகன் அவனைப் பற்றி சொன்னதுமே கர்ணாவின் முன் அவனை கொண்டு சென்று நிறுத்த, வாசலில் வைத்தே அவனை விசாரிக்க ஆரம்பித்துவிட்டார் அவர்.
“யார் நீங்க, உங்களுக்கு எங்க ஊருல என்ன வேலை?” கர்ணா சந்தேகப் பார்வையோடுக் கேட்க, “அது… நான் பார்த்திபன் மாமாவ பார்க்கணும்” தயக்கமாகச் சொன்னான் யுகன்.
தேனு சுவற்றில் சாய்ந்தவாறு யுகனையே குறுகுறுவென்று உற்றுப் பார்த்தவாறு நடப்பதை வேடிக்கைப் பார்க்க, யுகனின் பதிலில் புருவத்தை நெறித்தவர், “மொதல்ல யாருன்னு சொல்லுங்க, அப்றம் பார்த்திபன பார்க்கலாம்” என்றார் அழுத்தமாக.
யுகனோ ஆழ்ந்த மூச்செடுத்து, “என் பெயரு யுகன். ரேவதி அத்தையோட அண்ணன் பையன்” என்க, கர்ணாவுக்கு அவன் யாரென்று புரிந்துவிட்டது. ஏளனமாக இதழை வளைத்தவர், விழிகளில் கோபத்தோடு “எப்படி இருக்கா அந்த மகாராணி? இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ரொம்ப நல்லா இருக்காளா இருக்குமே?” என்றார் ஏளனமாக.
கர்ணா தன் அத்தையை பேசிய விதத்தில் உண்டான கோபத்தில் கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன், “எனக்கு தெரியும், தப்பு அத்தைமேலதான்னு. ஆனா, அவங்க மாமாவ ரொம்ப காதலிச்சாங்க. அப்பா எத்தனையோ தடவை இரண்டாவது கல்யாணத்தை பத்தி பேசின போதும் அவங்க சம்மதிக்கல. என்னை வளர்த்தது அவங்கதான். எனக்கு விவரம் தெரிஞ்ச அன்னையிலிருந்து அத்தைய கவனிக்கிறேன். அவங்க கண்ணுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு. ராத்திரி மாமா ஃபோட்டோவ வச்சி ரொம்ப அழுவாங்க. எனக்கு இன்னொரு அம்மா மாதிரி அவங்க, அவங்க சந்தோஷத்தை மீட்டுக்கொடுக்கணும்னு நினைச்சேன். அதுக்கு பார்த்தி மாமா கூட சேர்த்து வைக்கலாம்னு…” தயக்கமாக இழுக்க, அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக்கொண்டு நின்றிருந்தார் கர்ணா.
அவர் எதுவும் பேசவில்லை. அவர் பார்வையின் அர்த்தம் புரியாது, “நீங்க என்னை பார்த்தி மாமாக்கிட்ட மட்டும் கூட்டிட்டு போங்க. நான் அவர சமாதானப்படுத்துறேன். அவர் கண்டிப்பா அத்தைய புரிஞ்சிருப்பாரு” யுகன் ஆர்வமாகச் சொல்ல, “காலம் கடந்த பின் யோசித்து பயனில்லை” என்றார் கர்ணா விரக்திச் சிரிப்போடு.
அதன் அர்த்தம் யுகனுக்கு புரியவில்லை.
அவன் அவரை, “புரியல” என்றுவிட்டு கேள்வியாக நோக்க, “நீங்க ஒன்ன கவனிக்கல தம்பி, உள்ள வந்து பாருங்க” என்றுவிட்டு கர்ணா வீட்டுக்குள் திரும்பிச் சென்றவாறு முன்னே நடக்க, குழப்பமான மனநிலையோடே அவர் பின்னே ஓடியவன், ஓரிடத்தில் நின்று அவர் கலங்கிய விழிகளோடு ஒன்றை வெறித்துப் பார்ப்பதை கவனித்து அத்திசையை வேகமாக நோக்கினான். பார்த்த மறுகணம் ஆடிப்போய்விட்டான் அவன்.
மாலையிடப்பட்ட பார்த்திபனின் ஆளுயர படத்தைப் பார்த்தவனுக்கு முதலில் தோன்றியதே ‘இதை தன் அத்தையிடம் எவ்வாறு சொல்வேன்?’ என்றுதான். அவன் நன்கு அறிந்த ஒன்று, இருவரும் விலகியிருந்தாலும் ரேவதி பார்த்திபனின் மீது வைத்திருந்த காதல்.
ரேவதி நகர வாழ்க்கையிலேயே பிறந்து வளர்ந்தவர். கல்லூரி படிக்கும் போதே பார்த்திபனை பார்த்து காதலித்து தன் வீட்டாற்களின் சம்மதமில்லாது வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துக்கொண்டவர். ஆரம்பத்தில் தெரியாத புரியாத சில விஷயங்கள் திருமணத்திற்கு பிறகுதான் தெரிய ஆரம்பித்தன.
திருமணத்திற்கு முன் சொகுசு வாழ்க்கையில் வாழ்ந்தவருக்கு இந்த கிராம வாழ்க்கையில் பழக்கப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. பார்த்திபனுக்காக தன்னைத்தானே மாற்றிக்கொள்ள முயற்சித்தவருக்கு ஏனோ அது கடினமான விடயமாக அமைய, பிறந்தவீடு ஆறுதலும் இல்லாதது மனஅழுத்தத்திற்கு கொண்டு சென்று நிறுத்தியது.
கூடவே, பார்த்திபனின் அம்மாவின் பிடிக்காத மருமகள் மீதான சில நச்சரிப்புகள் வேறு. தன் தம்பி மகளுக்கு தன் மகனை கொடுக்க நினைத்தவரின் கனவை கெடுத்த ரேவதியின் மீது தனிப்பட்ட கோபம் அவருக்கு. திருமணமான ஒரு வருடத்தில் குழந்தை, கூடவே கணவன் மனைவி சண்டைகளும்.
பார்த்திபனும் ஏனோ வேலை வேலையென்று அப்போது வியாபாரத்தை பெருக்க ஓடிவிட, வீட்டில் தனிமையில் இருந்தவருக்கு சுற்றியிருந்தவர்களின் குத்தல்பேச்சுக்களிலும் தனிமையிலும் பைத்தியமே பிடிக்க ஆரம்பித்துவிட்டது. நகரத்தில் வியாபாரத்தை ஆரம்பித்து அங்கேயே இருக்கலாமென்று ரேவதி கேட்க, கிராமத்தை விட்டு வர முடியாதென்று மறுத்துவிட்டார் பார்த்திபன்.
ஒவ்வொரு நாளும் சண்டை பெரிதானதே தவிர குறையவில்லை. கிட்டதட்ட ஒரு வருடத்திற்கு மேலான சண்டை ஒருநாள் உச்சத்திற்கு செல்ல, பார்த்திபன் வேலை அழுத்தத்தில் ரேவதியின் பேச்சைக் கேக்க இயலாது அறைந்தே விட்டிருந்தார். அது நடந்த இரண்டுநாட்களில்தான் ரேவதி அங்கிருந்து குழந்தையையும் அழைக்காது சொல்லாமல் கொல்லாமல் தன் பிறந்த வீட்டிற்கு சென்றிருந்தார்.
அதன்பிறகு வந்த நாட்கள் அலைப்பேசி வழியாக பிரச்சினையை சரிசெய்ய பலபேர் முனைய, பார்த்திபனும் சரி ரேவதியும் சரி அப்போதிருந்த கோபத்தினால் வேண்டாமென்று மறுத்துவிட்டிருந்தனர். ஆனால், உள்ளுக்குள் புதைக்கப்பட்ட காதல் காலம் செல்ல செல்ல மீண்டும் தோன்ற ஆரம்பிக்க, ஈகோ ஒருவரையொருவர் தொடர்புக்கொள்ள விடவில்லை.
இன்று பார்த்திபனும் உலகத்தைவிட்டு மறைந்திருக்க, எங்கோ ஒரு மூலையில் தன் கணவன் நன்றாக இருப்பதாக நினைத்து வாழும் ரேவதியிடம் என்னவென்று நான் சொல்ல? யுகனுக்கு அழுகையே வந்துவிட்டது.
கண்ணீரை துடைத்தெறிந்தவன், ஏதோ ஞாபகம் வந்தவனாக “அத்..அத்தைக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு சொன்னாங்க. அவங்கள பார்க்க முடியுமா?” தேய்ந்த குரலில் கேட்க, “உன் அத்தை என் நண்பனை கொன்னுட்டு போனா, அவ பொண்ணு அவன புதைச்சிட்டா” அடக்கப்பட்ட கோபத்தோடுச் சொல்லிவிட்டு கர்ணா நகர்ந்திருக்க, யுகனின் பார்வையோ தேனுவின் மீதுதான் படிந்தது.
விடயத்தைச் சொன்னவள், “ஆரம்பத்துல அந்த வீட்டுலதான் இருந்தாங்க. இப்போ அங்க யாரும் இல்லை. ஐயா இறந்தப்போ கூட யாரும் வரல” சோகமாகச் சொல்ல, யுகனுக்கு எல்லாமே புரிந்தது.
“அவங்க பொண்ண கண்டுபிடிச்சே ஆகணும்” என்றவன், தன் எண்ணை அவசர தேவைக்கு தேனுவிடம் கொடுத்துவிட்டு, அதற்குமேல் அங்கு நிற்காது புறப்பட்டிருந்தான்.
ஆனால், தேனுவுக்கு அந்த நிமிடமே அவனை பிடித்துவிட்டிருந்தது. ‘அத்தைமேல இருக்குற பாசத்துல அவங்க சந்தோஷத்துக்காக இப்படியெல்லாம் பண்றவரு, கட்டின பொண்டாட்டிய எப்படியெல்லாம் பார்த்துப்பாரு!’ மனதுக்குள் நினைத்தவளுக்கு அவன்மேல் காதல் பூத்திருக்க, அன்றிலிருந்து அவனை ஒருவழிப்படுத்துகின்றாள்.
நடந்ததை நினைத்துப் பார்த்த தேனுவின் இதழில் புன்னகை.
“லுக், உங்களுக்கு எதனால என்மேல காதல் வந்திச்சுன்னு தெரியல. ஒருவேள, என் பேச்சால இருக்கலாம். என் குணத்தால இருக்கலாம். என் அழகு…” என்று சொல்ல வந்த யுகன், “எதே?” என்ற தேனுவின் கேலியான கேள்வியில், “ஹ்ர்ம் ஹ்ர்ம்… என் அழகான மனசா இருக்கலாம்னு சொல்ல வந்தேன்” என்று முடிக்க, “இந்த வளவள கொளகொளன்னு பேசாம ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வாங்க” பட்டென்றுச் சொன்னாள் அவள்.
“எனக்கு காதலிக்கெல்லாம் நேரமில்லை. நான் ஒரு பெஸ்ட் ஃபோட்டோகிராஃபர் ஆகணும், அதுவரைக்கும் இந்தமாதிரியான கமிட்மென்ட்ஸ்ல சிக்க எனக்கு பிடிக்கல. என்ட், எனக்கு உங்கமேல அந்தமாதிரியான எந்த எண்ணமும்…” அவன் சொல்லிமுடிக்கவில்லை, வேகமாகச் சென்று அவன் வாயை பொத்தியவள், “ப்ளீஸ், இப்படி சொல்லாதீங்க. மனசு ரொம்ப வலிக்குது. நான் இதுவரைக்கும் யாரையும் காதலிச்சது கிடையாது. காதலிச்சுதான் கல்யாணம் பண்ணணும்னு ஒரு குறிக்கோளோட வாழ்றவ நான். ஆனா, கயலோட வாழ்க்கை என்னாலதான் இப்படி ஆகிருச்சுன்னு எனக்கான ஒரு வாழ்க்கைய நான் யோசிக்கவே இல்லை. ஆனா இப்போ…” நிறுத்தினாள் தேனு.
யுகனோ விழி விரித்து அவளின் நெருக்கத்தில் உள்ளுக்குள் சங்கடப்பட்டவாறு அவளை நோக்க, மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“ஆனா, இப்போ உங்கள பார்த்ததும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நீங்களும் வேணாம்னு சொன்னா சிங்கிளாதான் நான் செத்துபோவேன். ப்ளீஸ், ஒரு கன்னிப்பொண்ணு சாபத்தை வாங்கிக் கட்டிக்கொள்ளாதீங்க. ஏன்னா, உங்க பதிலுல என் மனசெல்லாம் புண்ணா போகுது” தேனு கிட்டதட்டக் கெஞ்ச, யுகனால் அவளை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், அப்போது அவனுக்குள் ஒரு கேள்வி உதிக்க, “மொதல்ல என் சந்தேகத்தை க்ளியர் பண்ணு! அண்ணாவுக்கும் கயலுக்கும் என்ன சம்மந்தம்?” யுகன் கேட்க, “உங்க அண்ணாக்கிட்ட நீங்களே கேட்டுக்கலாமே!” என்ற தேனு, “ஆனா ஒன்னு, அவரு உங்க அண்ணான்னு எனக்கு இன்னைக்குதான் தெரியும்” என்க, அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் பார்வையின் கேள்வி புரிந்தவளாக தேனு நடந்ததை சொல்ல, யுகனுக்கு ஒருபக்கம் அதிர்ச்சி, மறுபக்கம் என்னவென்று தெரியாத ஆனந்தம், இன்னொரு பக்கம் பயம், பதட்டம் எல்லாமே சூடிக்கொண்டது.
கேட்டதை ஜீரணிக்க முடியாது தலைமேல் கை வைத்து, “வாழ்க்கைக்குள்ள ட்விஸ்ட் இருக்கலாம். ட்விஸ்ட்டே கயலோட வாழ்க்கையா இருக்கே!” அதிர்ந்த குரலில் சொல்ல, விரக்தியாகச் சிரித்துக்கொண்டவள், “அந்த வயசுல யோசிக்காம பண்ண தப்பு இப்போ வரைக்கும் அவள சோதிக்குது. கூடிய சீக்கிரம் சரியாகும். எல்லாம் உங்க அண்ணா கையிலதான் இருக்கு. விஷயம் தெரிய வரும்போது கயலோட மனநிலை என்னவா இருக்கும்னு என்னாலேயே நினைச்சு பார்க்க முடியல” என்றாள் யோசனையோடு.
சரியாக வீட்டுக்குள் கர்ணாவின் சத்தம். சத்தம் கேட்டு இருவரும் வீட்டுக்குள் ஓட, அங்கு “கயல் இனி இங்கேயே இருக்கலாமே! எதுக்கும்மா போகணும். இது உன் வீடு. நீ இங்க இருக்குறதுதானே முறை!” கர்ணா சொல்ல, “இல்லை சித்தப்பா, சத்யாம்மாவ பார்த்துக்குற பொறுப்பை சீதாம்மா எனக்கு கொடுத்திருக்காங்க. நான் வீட்டுக்கு போயாகணும்” மறுத்துக்கொண்டிருந்தாள் கயல்.
கர்ணாவின் பார்வையோ அடுத்து அபியைதான் தழுவியது. அவன் விழிகளை அழுந்த மூடித் திறக்க, அவரும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
“யுகன்…” அபி அழைக்க, “அண்ணா, நான் ரெடி, கிளம்பலாம்” என்ற தன் தம்பியை மேலும் கீழும் ஒரு மார்கமாக பார்த்தவன், “நீ இங்கேயே இரு! ஒரு முக்கியமான இடத்துக்கு கயல கூட்டிட்டு போக வேண்டியிருக்கு” அவளை பார்த்துக்கொண்டேச் சொல்ல, “மீண்டும் மீண்டுமா?” என்ற ரீதியில் அபியை ஒரு பார்வை பார்த்தாள் கயல்.