ரகசியம் 24💚

ரகசியம் 24💚
“நாம இல்லை நீ மட்டும்தான் போக போற” வீரஜ் சொன்னதும் அதிர்ந்து விழித்த கயல், வேகமாக வந்து தன்னவனின் முகத்தை தன் முகம் காண வைக்க, அவன் முகமோ அழுததால் சிவந்து வீங்கிப் போயிருந்தது.
“என்னாச்சுங்க?” கயல் பதறிப்போய் கேட்க, “நீ இங்கயிருந்து மொதல்ல கிளம்பு பாப்பா, இதுக்குமேல நீ இங்க இருக்க கூடாது” வீரஜ் சொல்ல, கயலுக்கு கோபம்தான் வந்தது.
“முடியாது. என்ன விளையாடுறீங்களா? என்னால எங்கேயும் போக முடியாது. நீங்க என்ன விஷயம்னு மொதல்ல தெளிவா சொல்லுங்க. ஏதாச்சும் பிரச்சினையா வீர்?” அவள் கேட்க, அவனோ ஒரு முந்தானையால் அவளை போர்த்திவிட்டவன், “எனக்கு எப்போவும் உன்னை ரொம்ப பிடிக்கும் பாப்பா, ஆரம்பத்துல அதை புரிஞ்சிக்காம தப்பு பண்ணிட்டேன். இப்போ புரிஞ்சிக்கும் போது நான் உன் கூட இருக்குறதை விட நீ பாதுகாப்பா இருக்குறதுதான் சரின்னு தோனுது. அவங்க பக்கத்துல வந்துட்டாங்க. நீ சீக்கிரம் போயாகணும்” என்க, அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி அவளுக்கு.
“யாரை சொல்றீங்க?” அதிர்ந்த குரலில் கேட்ட கயல், “ருபிதா மனோஜன்” என்ற வீரஜின் இறுகிய குரலிலான பதிலில் ஆடிப் போய்விட்டாள்.
“வீர்…” திகைத்துப் போய் அவள் அழைக்க, “என்னை மன்னிச்சிடு பாப்பா” அழுதவாறு இத்தனைநாள் செய்த தவறுக்காக மீண்டும் மன்னிப்பு யாசித்த வீரஜ், வேகவேகமாக மீண்டும் உடைகளை அடுக்க ஆரம்பிக்க, அதிர்ச்சியிலிருந்து முயன்று தன்னை மீட்டெடுத்தவள், வீரஜ் அடுக்கியிருந்த உடைகளை கீழே தள்ளிவிட்டு, “யாரு வந்தா எனக்கென்ன? உங்களுக்கு இப்போ எல்லாம் தெரிஞ்சிருச்சுல்ல, நீங்க என் பக்கத்துல இருக்கீங்கல்ல, அது போதுங்க எனக்கு. என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் உங்க கூடதான் இருப்பேன்” என்றாள் பிடிவாதமாக.
ஏற்கனவே அவன் எடுத்து வைத்ததை கலைத்ததில் கோபத்தின் உச்சிற்கு சென்றவன், அதை கட்டுப் படுத்திக்கொண்டு மீண்டும் உடைகளை அடுக்க ஆரம்பிக்க, கயலோ அப்போதும் அவன் சொல்வதை கேட்டபாடில்லை.
“நான் சொல்றேன்ல பாப்பா, இங்கயிருந்து மொதல்ல போ! நீ இங்க இருக்குறது உன் உயிருக்கு ஆபத்து. நான் செய்ய வேண்டிய ஒரு வேலையிருக்கு. அதை நான் பண்ணும் போது நீ இங்க இருக்க கூடாது. நீ போ, நான் கண்டிப்பா உன்னை தேடி வருவேன். என்னை நம்புடீ” கிட்டத்தட்ட வீரஜ் கெஞ்ச, கயலோ எதையும் காதில் வாங்காமல் மீண்டும் கோபமாக உடைகளை எடுத்து தரையில் உதறித்தள்ளி, “நான் உங்களை விட்டு போகமாட்டேன்” என்று பதிலுக்கு கத்தினாள்.
கயலின் இந்த செயலால் வீரஜிற்கு வந்ததே ஒரு கோபம்! பளாரென கன்னத்தில் அறைந்தவன், பின்னரே தான் செய்த தவறை உணர்ந்து, “பாப்பா…” என்று அவளை மெல்ல நெருங்க, தரையில் விழுந்து கிடந்தவள், அவனை கை நீட்டி தடுத்து நிறுத்தினாள்.
“என் பக்கத்துல வராதீங்க, நான் உங்களை எவ்வளவு நம்பினேன். ஆனா இப்போவும் நீங்க என்னை ஏமாத்ததான் செய்றீங்க. நான் பண்ண பாவத்துக்கு எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை. இரண்டு வயசா இருக்கும்போதே அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைக்காக அம்மா என்னை விட்டு போயிட்டாங்க. காதலுக்காக அப்பாவ விட்டு வந்தேன். ஆனா, கண்டிப்பா ஒருநாள் அவர் ஏத்துக்குவாருன்னு நம்பிக்கை இருந்துச்சு. ஆனா… இப்போ நீங்களும். இதுக்கு எல்லாரும் சேர்ந்து என்னை கொன்னுடுங்க” அவள் கதறி கதறியழ, வீரஜிற்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது. கூடவே குற்றவுணர்ச்சியும்.
சிறிதுநேரம் தரையில் முகத்தை மூடி அழுதுக்கொண்டிருந்தவளை கண்ணீரோடு வெறித்தவாறு நின்றிருந்த வீரஜ், அப்படியே அதே இடத்தில் மண்டியிட்டு அமர்ந்துக்கொண்டான். அவனை நினைத்தே அவனுக்குள் அத்தனை ஆத்திரம். அவன் நினைவுகளோ தன்னை பற்றிய உண்மையை அறிந்த தருணங்களுக்குச் சென்றது.
அன்று கயல் பார்த்திபனை காணச் செல்லவென அழைத்த தருணம் அது. வைத்தியசாலையில் தான் காப்பாற்றிய பெண்ணிற்கான சிகிச்சைக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு வீட்டிற்கு களைப்பாக வந்தவன், அடுத்து கயல் சொன்னதை கேட்காமல் ருபிதா ஏன்ஜலை காணவில்லையென்றதும் அவளைத் தேடி அவள் வழக்கமாகச் செல்லும் பாருக்குதான் சென்றான்.
அங்கு உள்ளே நுழைந்தவனுக்கு தன் தமக்கையை பார்த்ததும் அத்தனை கோபம். தன் சகோதரி குடிபோதையில் வேறொரு ஆடவனுடன் உரசிக்கொண்டிருப்பதை எந்தவொரு தம்பியால்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? ஆனால், ஏன்ஜலின் இந்த கெட்டபழக்கங்களைப் பற்றி அவன் அறியாதவனில்லை.
வேகமாகச் சென்றவன், அவளின் முழங்கையைப் பற்றி இழுத்துக்கொண்டு வெளியில் வர, அவன் கையை உதறித் தள்ளியவள், “ஏய், என்னை விடுடா! எவ்வளவு தைரியம் இருந்திருந்தா என்னை இழுத்துட்டு போவ? உன் வேலை என்னவோ அதை போய் பாரு!” குளறியபடிக் கத்திவிட்டு திரும்பிச் செல்லப் போனவள், அவளின் கூந்தலைப் பற்றி வீரஜ் இழுத்து நிறுத்தவும் ஆவென்ற கத்தலோடு அதே இடத்தில் நின்றாள்.
“வலிக்குதுடா டேய்! ஹவ் டேர் யூ? எதுக்குடா என்னை இப்படி டோர்ச்சர் பண்ற?” அவள் கத்த, “டோர்ச்சர் நாங்க பண்றோமா, இல்லை நீ பண்றியா? அம்மா உன்னை நினைச்சு எவ்வளவு பயந்திருக்காங்க தெரியுமா? ஆமா… யாரவன், கொஞ்சம் கூட வெக்கமாயில்லையாடீ உனக்கு?” பார்க்கக் கூடாத காட்சிகளை கண்ட ஆத்திரத்தில் கத்தினான் வீரஜ்.
“ஏய்…” என்று உரக்கக் கத்தியவாறு, “உனக்கென்னடா? நான் எப்படி வேணா இருப்பேன். என் இஷ்டம், என் வாழ்க்கை. நீ உன் வேலைய பார்த்துட்டு போவியா… சும்மா ஏதோ உத்தமன் மாதிரி வந்து பேசிக்கிட்டு இருக்க. அதான் அந்த கிராமத்துக்காரிய பணத்துக்காக ஏமாத்தி வச்சிருக்கியே, இதுலேயே உன் லட்சணம் தெரியல. பேச வந்துட்டான்” பதிலுக்கு ஏன்ஜல் பேசிய வார்த்தைகளில் அவனுக்கு சுருக்கென்றானது.
“தப்புதான், நான் பண்ணது தப்புதான். ஆனா, நான் கல்யாண பண்ணவ தப்பானவ கிடையாது. அவளோட குணத்துக்கிட்ட உன்னையெல்லாம் வைக்கவே முடியாது. என்ட், பணத்துக்காகதான் அவள கல்யாணம் பண்ணேன். அதே பணத்துக்காக அவள விட்டுட்டு வேற பொண்ணுக்கிட்டு போற அளவுக்கு நான் ஒன்னும் தப்பானவன் கிடையாது. மொதல்ல நீ வர போறியா, இல்லையா?” அவன் மனதால் உணர்ந்துப் பேச, கயலுடன் ஒப்பிட்டு பேசியதை அவன் தமக்கையால் கொஞ்சமும் ஏற்றுகொள்ள முடியவில்லை.
“என்னடா, ரொம்பதான் ஓவரா பேசுற. எல்லாரும் பேச்சுக்கு அவங்க தம்பி தங்கச்சிங்ககிட்ட உன்னை அம்மா, அப்பா குப்பையிலதான் எடுத்தாங்க. நீ வளர்ப்பு புள்ளன்னு விளையாட்டா சொல்லுவாங்க. ஆனா, நீ நிஜமாவே எங்க கூட வந்து ஒட்டிக்கிட்டவன்தான்டா. அப்படி என்ன ஆண் வாரிசு வெறியோ தெரியல. நான் பொண்ணா போயிட்டேன்னு உன்னை தத்தெடுத்தாங்க. ஆனா, அது அவங்களுக்கே ஆப்பா போகிருச்சு. என்னை விட்டுட்டு உன்மேல பாசம் காமிச்சாங்கல்ல, அந்த மிஸ்டர் என்ட் மிஸஸ் மனோஜனுக்கு நல்லா தேவை!” ஏன்ஜல் குடிபோதையில் மனதிலுள்ள அத்தனையையும் கோபத்தில் உளறிவிட, ஒருநிமிடம் வீரஜிற்கு எதுவுவே புரியவில்லை.
அப்படியே சிலையாக சமைந்தவன், “என்ன சொல்ற, புரியல” மூச்சை இழுத்துப் பிடித்துக் கேட்க, “ஹாஹாஹா…” என்று சிரித்தவள், “அனாதைப்பயல்டா நீ! ஆனா, என் அம்மா, அப்பா எனக்கு பண்ண பாவத்தோட விளைவு அவங்க எதிரியோட பையன அவங்களே வளர்த்திருக்காங்க. விதியோட விளையாட்ட பார்த்தியா” என்றுவிட்டு தனக்குத் தெரிந்த மொத்தத்தையும் உளற, வீரஜிற்கு தலையே சுற்றிவிட்டது.
அவன் தத்தெடுக்கப்ட்ட பிள்ளை என்பது மட்டுமே ரகசியமாக இருந்திருந்தால் அதை ஏற்று இலகுவாக கடந்து போயிருப்பான். ஆனால், இங்கு விடயமே வேறு. அவனை பெற்றவர்களை கொன்றதே அவனின் வளர்ப்புப் பெற்றோர்கள். இத்தனைநாள் குடும்பமென அவன் நினைத்தது அவனின் எதிரிகளை.
அதிர்ச்சியை தாங்க முடியாது தலைமேல் கை வைத்து அப்படியே அவன் சுவற்றோடு ஒட்டிவிட, ஏன்ஜலோ பேச்சை விட்டபாடில்லை.
“ஆனா ஒன்னுடா, அந்த பட்டிக்காட்டுக்கு ரொம்பதான் தைரியம். என் புருஷன், என் புருஷன்னு ரொம்பதான் துடிக்குறா. இது தெரிஞ்சதும் உன்கிட்ட சொல்லியே ஆகணும்னு மேடம் ரொம்பதான் துள்ளினாங்க. அப்றம் அம்மா விட்ட அடியிலதான் வாய மூடினா. அவள அப்படி என்ன கொடுத்து வசியம் பண்ணி வச்சிருக்க?” எல்லை மீறி அசிங்கமாக அவள் பேசிய வார்த்தைகளில் விழிகளை மட்டும் உயர்த்தி ஏன்ஜலை பார்த்த வீரஜ், இருக்கும் கோபத்தில் அங்கேயே அவளை கொன்று புதைத்திருப்பான்.
ஆனால், இது கோபப்படுவதற்கான சந்தர்ப்பம் இல்லையென்பது அவன் நன்கு அறிவான். விவேகத்துடன் கூடிய புத்திசாலித்தனம் கொண்டவன் அவன். கை முஷ்டியை இறுக்கி கோபத்தைக் கட்டுப்பத்தியவன், அடுத்தகணம் அவளை இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான். அதன் பிறகான நாட்களில் ருபிதாவையும் மனோஜனையும் நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன்.
கேள்விகளுக்கு மட்டுமே பதில் கொடுப்பவன், முன்னிருந்த உறவையே மனதால் முறித்திருந்தான். கூடவே, தன்னைப் பற்றி தெரிந்துக்கொள்ளவென ருபிதா இல்லாத சமயம் அவரின் அறையை அலசி ஆராய்ந்ததில் அவனுக்கு கிடைத்ததுதான் அவனின் தாய் தந்தையரின் புகைப்படம். வரதராஜனின் முகத்தைப் பார்த்தவனுக்கு தன்னையே பார்ப்பது போன்ற உணர்வு!
அவன் கோபம் வெறியாகி பழிவெறியாக மாற, அதேநேரம் கயலை கொல்ல திட்டமிட்டுக்கொண்டிருந்தனர் ருபிதாவும் மனோஜனும். அவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்டு அதையறிந்தவனுக்கு தன் கோபத்தை கட்டுப்படுத்துவதே சிரமமாகித்தான் போனது. ஆனால், விவேகமாக யோசித்தவன் அப்போதும் பொறுமையாக இருந்தான், கயல் ஒருத்திக்காக.
அவனுடைய திட்டத்தை நிறைவேற்ற கயல் இங்கு இருக்கக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான் வீரஜ். அதனாலேயே சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவன், இருவரும் வெளியேறியதும் அவளை இங்கிருந்து அனுப்ப ஒரு திட்டத்தை தீட்டியிருந்தான். ஆனால், பொறுமையாக கயலிடம் பேசி அவளை பாதுகாப்பாக வழியனுப்பவென அவன் போட்ட திட்டமும் சரியாக அமையவில்லை.
“வீரா, நாங்க வீட்டுக்குதான் வந்துக்கிட்டு இருக்கோம். போன காரியம் சரியா அமையல. சின்ன பிரச்சினையாகிட்டு. ஊருக்குள்ள வந்தாச்சு. பக்கத்துலதான் இருக்கோம்” என்ற மனோஜனின் வார்த்தைகளைக் கேட்டதும் தலைத் தெறிக்க வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான் அவன். பொறுமையாக சொல்லி புரிய வைத்து அவளை வழியனுப்பும் அளவுக்கு அவனிடம் இப்போது நேரமுமில்லை.
அத்தனையையும் நினைத்துப் பார்த்துவிட்டு, “பாப்பா…” என்று அழுதுக்கொண்டே தன்னவளின் பக்கத்தில் நெருங்கினான் வீரஜ்.
அதேநேரம் ஊரில் நடக்கும் விசேஷம் காரணமாக ஊர்க்கோயிலோ பூரண நிலா வெளிச்சத்திலும் கூடவே தீபங்களாலும் மின்ன, கோயிலுக்குள்ளேயும் சுற்றியுள்ள வளாகத்திலும் அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் திரண்டிருந்தனர்.
இங்கு தரையில் அமர்ந்து கன்னத்தில் அறைந்த காயத்தோடு கயல், கதறியழுதுக்கொண்டிருக்க,
அவள் முன் முட்டி போட்டு அமர்ந்து அவள் கன்னங்களை தாங்கியிருந்தான் வீரஜ். அவனுடைய விழிகளும் சிவந்து வீங்கிப் போயிருந்தன.
“கயல், நான் சொல்றதை கேளு, மொதல்ல இங்கயிருந்து கிளம்பு!” அவன் அழுத்தமாகச் சொல்ல, பதறியபடி அவனை நிமிர்ந்துப் பார்த்த கயல்விழி, “முடியாது வீர், என்னால உங்கள விட்டு எப்படி போக முடியும்? நா…நான் உங்க கூடதான்…” என்று சொல்லிமுடிக்கவில்லை, அவளுடைய தோள்களை ஆவேசமாக பற்றியிருந்தான் அவன்.
“எத்தனை தடவைடீ சொல்றது உனக்கு? இங்கயிருந்தா உன்னை கொன்னுடுவாங்க. லுக், நீ மொதல்ல இங்கயிருந்து போயிடு!” வீரஜ் மீண்டும் அவளுக்கு புரிய வைக்க முயல, “ஆனா, நான் உங்களைவிட்டு…” மீண்டும் அவனுடைய பயத்தை புரிந்துக்கொள்ளாது கயல் அதே புராணத்தைப் பாட, அவனுக்கு கோபம் உச்சத்தை தொட்டுவிட்டது எனலாம்.
“என்னடீ என்னைவிட்டு? ஏதோ நான் உத்தமன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க. ஓஹோ! கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் கான்செப்ட்டா? முட்டாள் முட்டாள்! நான் உன்னை எதுக்காக கல்யாணம் பண்ணேன்னு உனக்கு நல்லாவே தெரியும். ஒரு புருஷன் எதையெல்லாம் பண்ணக் கூடாதோ, அதையெல்லாம் நான் பண்ணியிருக்கேன். உன்னை ரொம்ப காயப்படுத்தியிருக்கேன். ஏன், இந்த காயம் கூட…” கோபத்தில் திட்டிக்கொண்டேச் சென்ற வீர், அவளுடைய கன்னத்திலிருந்த தன் விரல் தடத்தை மெல்ல வருட, வலியில் விழிகளை அழுந்த மூடித் திறந்தவள், அவன் விழிகளை ஆழ்ந்து நோக்கினாள்.
“நான் உங்கள ரொம்ப காதலிக்கிறேன் வீர்” அவளுடைய வார்த்தைகளிலும் விழிகளிலும் தெரிந்த காதலில் திக்குமுக்காடிப் போய்விட்டான் அவன். இத்தனைநாள் அவளுடைய காதலை அவன் பயன்படுத்திய விதத்தில் அவனுக்கே தன்னை நினைத்து அருவருப்பு!
கீழுதட்டைக் கடித்து, விழிகளை மூடி உணர்வுகளை கட்டுப்படுத்தியவன், அவளை நிமிர்ந்துப் பார்த்து, “என் கூட வா!” என்றுவிட்டு அவளை இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் கீழ்தளத்திலுள்ள பேஸ்மன்ட் பகுதிக்குதான் அழைத்துச் சென்றான்.
அங்கிருந்து குறுக்குவழியாக வெளியேற ஒரு பூட்டப்பட்ட கதவு அங்கிருக்க, வேகமாகச் சென்று அதைத் திறக்க முயற்சித்தான் அவன். ஆனால், அந்த துருப்பிடித்த பூட்டு திறந்தபாடில்லை. இருந்தும், அவன் விடவில்லை. மூலையில் போடப்பட்டிருந்த பழைய பொருட்களிலிருந்து எடுத்த கோடரியை கொண்டு அவன் பூட்டை உடைக்க முயற்சிக்க, அவனுடைய முயற்சியை பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மனதில் அத்தனை வேதனை!
பூட்டை உடைக்க முயற்சித்தலில் அவனுடைய உள்ளங்கையில் காயமாகிவிட, அதைப் பார்த்துப் பதறிபோய் கயல் வர, கரத்தை நீட்டி அவளை வேண்டாமென்று தடுத்தவன், அந்த கதவைத் திறப்பதிலேயே குறியாக இருந்தான்.
அவனுடைய முயற்சி வீண்போகவில்லை. தன் மொத்த பலத்தையும் சேர்த்து அவன் ஓங்கி பூட்டை அடித்ததில் பூட்டு உடைந்துவிட, கோடரியை கீழே போட்டு சுவரில் சாய்ந்து பெரிய மூச்சுக்களை விட்டுக்கொண்டான் வீரஜ். அவளோ பதட்டமாக தன்னவனையே பார்த்துக்கொண்டிருக்க, விழிகளை மட்டும் உயர்த்தி கயலை பார்த்தவன், மெல்ல அவளருகில் நெருங்கினான்.
அவள் தோளைப் போர்த்தியிருந்த முந்தானையால் அவள் தலையில் முக்காடு போல் போட்டுவிட்டவன், “இங்கயிருந்து போ!” தழுதழுத்த குரலில் சொல்ல, ‘முடியாது’ எனும் விதமாக அழுதுக்கொண்டே தலையாட்டிய கயல், “நீங்களும் என்கூட வாங்க வீர், என்னால தனியா போக முடியாது. பயமா இருக்கு. செத்தாலும் நான் உங்க கூடவே இருக்கேன்” கிட்டதட்ட கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள்.
அவளுடைய வார்த்தைகளில் அவளை முறைத்தவன், பின் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு அவளிதழை சிறைப்பிடித்திருக்க, விழி விரித்தவள் பின் கண்ணீரோடு விழிகளை மூடி அவனுக்கு இசைந்துக்கொடுத்தாள். சொல்லப்போனால், திருமணமாகி பல மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், காதலாக அவன் தன்னவளுக்கு கொடுக்கும் முதல் முத்தம் இது.
இன்றுதான் வாழ்நாளில் கடைசிநாள் என்பது போல் அவளிதழிலேயே குடியிருந்தவன், கோயிலில் கேட்ட பெரிய மணியோசை சத்தத்தில் நடப்புக்கு வந்து, செய்யும் காரியத்தை உணர்ந்து வேகமாக விலகினான். கயலோ அவன் விலகியதுமே உதட்டைப் பிதுக்கி அவனை நோக்க, விழிகளிலிருந்து விழிநீர் வழிய அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் வீரஜ்.
தன்னவளின் நெற்றியோடு நெற்றி ஒட்டி, “காதலுங்குற பெயருல உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேன் பாப்பா. இப்போ உன்கூட வாழ ஆசைப்படுறேன், ஆனா அதுக்கு முன்னாடி ஒரு முக்கியமான வேலை இருக்கு. ஐ லவ் யூ என்ட், ஐ ப்ரோமிஸ். கண்டிப்பா உன்னை தேடி வருவேன்” அத்தனை காதலோடுச் சொல்ல, அந்த வார்த்தைகள் அவளின் ஆழ்மனதில் ஆணியடித்தாற் போல் பதிந்தன.
அங்கிருந்து வெளியேறி யாரும் பார்க்காதவாறு முந்தானையால் பாதி முகத்தை மறைத்த வண்ணம் கயல் அந்த ஊரை விட்டுச் செல்வதற்காக கால் போன போக்கிற்கு வேகமாக நடக்க, இரவுநேரம் என்றதாலோ? இல்லை, மொத்த ஊர் மக்களும் கோயில் விசேஷத்தில் இருந்ததாலோ, என்னவோ? ஊரே வெறிச்சோடிப் போயிருந்தது.
குடியிருப்புக்கள் அதிகமுள்ள பகுதியைத் தாண்டி எப்படியோ வேகமாக வந்தவள், தன்னுள் ஏற்படும் மாற்றத்தில் அப்படியே நின்றுவிட்டாள். ஏற்கனவே சிறுவயதிலிருந்து அவளுக்கு மூச்சுத்திணறல் நோயிருக்க, தன்னவனின் நினைவில் உண்டான வலி, வேகமாக நடந்து வந்ததில் உண்டான களைப்பு என்று சேர்ந்து அவளுக்கு மூச்சுக்கு திணற ஆரம்பித்துவிட்டது.
சுற்றிமுற்றி உதவிக்கு கூட யாருமில்லை. விழிகளிலிருந்து விழிநீர் ஓட, கஷ்டப்பட்டு நடந்துச் சென்று பாதையினோரமாக அமர்ந்தவள், எப்போதும் இடுப்பில் வைத்திருக்கும் இன்ஹலரை எடுத்து வேகவேகமாக உபயோகித்தாள்.
மெல்ல அவளுடைய மூச்சுத்திணறல் அடங்க, “வீர்…” அவளிதழ்கள் மெதுவாக முணுமுணுத்தன. சில கணங்கள் தரையை வெறித்தவாறு அமர்ந்திருந்தவள், அப்படியே பாதையோரமாக மயங்கிச் சரிந்திருந்தாள்.
அதேநேரம் கோயில் விசேஷத்திற்காக ஊரிற்கு வந்த சீதா கம்பனியில் ஏதோ பிரச்சினையென அவசரமாக ஊரை விட்டுச் சென்றுக்கொண்டிருக்க, அவர் விழிகளில் சிக்கினாள் பாதையோரமாக மயங்கியிருந்த கயல். அதன்பிறகுதான் அவளை அங்கிருந்து அவர் அழைத்துச் சென்றதே.
அடுத்தநாள் மயக்கத்திலிருந்து தெளிந்தவள், படுத்திருந்தது சீதாவின் வீட்டு அறையில்தான். உறவுகளில்லாத பெரியவரும் கயலிடம் தன்னை அறிமுகப்படுத்தி அவளைப் பற்றி விசாரிக்க, ஆனால் அவள்தான் வாயே திறக்கவில்லை.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்தே கயலுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. வீரஜின் பழைய வீட்டு விலாசத்தைக் குறிப்பிட்டு அந்த வீடு தீ விபத்துக்குள்ளாகியதாகவும், அந்த வீட்டுக்குச் சொந்தமான நபர்களின் சடலங்கள் முழுவதும் எரிந்த நிலையில் பெறப்பட்டதென தொலைக்காட்சியில் காட்டிய செய்தியில் அதிர்வடைந்து மயங்கியவள், தெளியவே மூன்று நாட்கள் ஆகிவிட்டது.
தெளிந்த அடுத்தகணம் தன்னவனின் பெயரை சொல்லிதான் கதறியழ ஆரம்பித்தாள் அவள். அந்த சந்தர்ப்பத்தில் கயலை சமாதானப்படுத்துவது தெரியாது திணறிய சீதாவுக்கு, அவளின் கதறலைப் பார்க்கும் போது அழுகையே வந்துவிட்டது.
தன் பிள்ளையென அவளை மார்பில் போட்டு அணைத்து அவர் ஆறுதல்படுத்த, அவளும் தன் மனம் விட்டு அழுதுக்கொண்டே மனதிலிருந்த மொத்தத்தையும் சொல்லி முடித்தாள். அப்போது உருவானது இருவருக்குமிடையேயான பிணைப்பு.
அதேநேரம் கணவன் இறந்து விட்டாடென பொட்டை அழித்துக்கொண்ட கயல், அவன் திருமணமன்று போட்டுவிட்ட மோதிரத்தை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டாள்.
கயல் தன்னிடம் வந்து சேர்ந்ததை நினைத்துப் பார்த்தவாறு மயங்கிகிடந்தவளின் தலையை வாஞ்சையுடன் வருடியவாறு சீதா அமர்ந்திருக்க, “வீர்…” என்ற கத்தலோடு விழிகளைத் திறந்தாள் கயல்.