ராகம் 10

ராகம் 10

ராகம் 10

இப்போது! இந்த நிமிடம்! இந்த நொடி! அந்த இடத்தில் சூழ்ந்திருந்தது அமைதி!!! அமைதி!!! வெறும் அமைதி மட்டுமே!!!

குண்டூசி விழுந்தால் கூட பேரிரைச்சலாக கேட்கும் அளவு அமைதி. இதயத்துடிப்பின் மெல்லிய ஓசை கூட, பெரும் இடியோசையாக கேட்கும் அளவு அமைதி.

அந்த வீட்டின் நடுக்கூடத்தில், அத்தனை பேர் கூடி இருந்தாலும் அங்கு அப்படி ஒரு அமைதி நிலவியது. ருத்ராவின் கேள்விக்கான பதிலை, அனைவரின் மனமும் எதிர்பார்த்து காத்திருந்தது. அவர்கள் முகமோ ஆர்வமாக பெண்களை கண்டது. ஆனால் பெண்களின் முகம், அவர்களது எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக தன் பிடித்தமின்மையை காட்டியது.

ருத்ரேஸ்வரன் அப்படி என்ன கேள்வி கேட்டான்?

பப்பு, அவன் கல்லூரி சேர்வதை சந்தோஷமாக கூறிய போது, அம்முவின் முகத்தில் ஒரு நொடி வேதனை வந்து மறைந்தது. அதை துல்லியமாக கண்டு கொண்டான் ருத்ரேஸ்வரன். அதன் பிறகு அங்கு நடந்த எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை.

அவன் செவியில் வேறு குரல்கள் கேட்டுக் கொண்டிருக்க, இங்கு எப்படி மனம் பதியும்?

அவன் மனதோடு கேட்டது, ‘இது என்ன சார் பெரிய காரு? நான் படிச்சு பெரியாளாகி இதைவிட பெரிய கார் வாங்குவேன்.’ என ஐந்து வருடங்களுக்கு முன், தன்னிடம் சவாலிட்ட அம்முவின் குரலுடன் இணைந்து, ‘அவளோட ஆசையே படிச்சு பெரியாளாக வேண்டும் என்பது. ஆனால் நீ வந்து அதை அழிச்சு தரைமட்டமாக்கிட்ட. அவளின் இழப்புகளுக்கு முக்கிய காரணம் நீதான்?’ என சில மாதங்களுக்கு முன், அவனை குற்றம் சாட்டிய கார்த்திக்கின் குரலும். அது ருத்ராவின் மனதை போட்டு பிசைந்தது.

அப்போது மனதில் பதியாத, அந்த குரல்களின் வலியும் ஆசையும், இப்போது ருத்ராவின் மனதை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தது. ‘அவ ஆசைப்பட்ட படிப்பிலிருந்து, அவ வாழ்க்கை வரை அனைத்தும் கெட்டுப் போனது உன்னால்.’ என அவன் மனதே அவனை குற்றம் சாட்டியது.

அவளது அந்த ஒரு நொடி வேதனை அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது. அவள் படும் கஷ்டத்தை கண்கூடாக கண்டவனுக்கு, அதிலிருந்து எளிதாக வெளிவர முடியவில்லை. அவளை எப்படியாவது அந்த துன்பத்திலிருந்து மீட்டு விட வேண்டும் என வெறியேறியது. அந்த வெறி வைராக்கியமாக மாறியது. அவள் இழந்த அனைத்தையும் அவளுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என உறுதி கொண்டான்.

அதன் முதல் படியாக, அவள் இழந்த ஒன்றை, இந்த நொடி அவளுக்கு திருப்பிக் கொடுக்க முடிவெடுத்தான்.

ருத்ரேஸ்வரன் முடிவெடுத்துவிட்டால், அதை யாரால் தடுக்க முடியும்??? 

இதோ அவன் ஒரு முடிவோடு நிமிரும் போது, கார்த்திக் அவன் முன் நின்றான்.

அனைவரும் அங்கு நடந்த கலாட்டாவை கண்டு சிரித்துக் கொண்டிருக்கும் போது, ருத்ரா மட்டும் ஏதோ சிந்தனையோடு அமைதியாக இருப்பதை கவனித்த கார்த்திக், அவனை நெருங்கி, “என்ன ஆச்சு ருத்ரா?” 

அவனுக்கு பதில் சொல்லாத ருத்ராவின் பார்வை, அவனை துளைத்து எடுத்தது. அது கார்திக்கின் மனதில் ஒரு பயத்தை ஏற்படுத்தியது. கூர்மையான அவன் பார்வையில் இருந்த செய்தியை, கார்த்திக்கால் உணர முடியவில்லை.  ‘இவன் எதுக்கு நம்மள இவ்வளவு பாசமா பார்க்கிறான்? நம்மளை வச்சு எதுவும் பிளான் பண்ணுறானோ? நம்ம அவளோ ஒர்த் இல்லையே.’ என நினைத்தான். (வடிவேலு ஸ்டைலில்)

ருத்ராவின் பார்வை சொன்னது, ‘நீ என் மீது வைத்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஒன்றும் இல்லாமல் செய்கிறேன் பார்.’ என்று.

இப்போது ருத்ராவின் பார்வை பெண்களிடம் திரும்பியது. “அம்மு, பிருந்தா நீங்க ரெண்டு பேரும், விட்டுப் போன உங்க படிப்பை ஏன் மறுபடியும் தொடரக்கூடாது?” என்றான் சுலபமாக.

அவன் என்னமோ சாதாரணமாக கேட்டுவிட்டான், ஆனால் பெண்களுக்கு அதில் விருப்பமில்லை.

முதலில் அவன் கேட்ட கேள்வியில் அனைவரும் திகைத்தனர். அதன் பிறகே அந்த கேள்வியிலிருந்த விசயம் புரிபட அனைவரும் மகிழ்ந்தனர்.

இப்போது அனைவரின் பார்வையும் பெண்களை ஆர்வமாக கண்டது. அவர்களது ஆர்வத்தை கண்ட பெண்கள் சற்று நிதானித்தனர். தங்களது மறுப்பை அவ்வளவு எளிதில் கூற முடியவில்லை.

சில நிமிட மௌனத்தில் தங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி, “அப்பவும் சரி, இப்பவும் சரி எனக்கு படிக்கிறதுல பெரிய இன்ட்ரெஸ்ட் இல்லை. அதனால் நான் மேற்கொண்டு படிக்க விரும்பலை. அம்மு படிக்கட்டும்.” என பிருந்தா உறுதியாக மறுத்துக் கூறினாள்.

இப்போது அனைவரின் பார்வையும் ஆர்வமாக அம்முவிடம் பாய்ந்தது. “எனக்கும் படிக்க விருப்பமில்லை.” அவளிடமும் மறுப்பு. அனைவரின் முகமும் ஏமாற்றத்தில் சுருங்கியது.

அப்போது ரேகா அம்முவை நெருங்கி, “ட்வெல்த்ல நம்ம ஸ்கூல்லயே நீதான் ஃபர்ஸ்ட். நானு, பிந்து எல்லாம் கடமைக்காக படிச்சோம். ஆனால் நீ அப்படியில்லை, விருப்பப்பட்டு படிச்ச. உனக்கு படிப்புல எவ்வளவு இன்ட்ரஸ்ட் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். நீ உன் படிப்பை கண்டிப்பா தொடரனும் அம்மு.” என்றாள்.

“புரியாம பேசாத ரேகா. இப்ப தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு. இந்த சமயம் நான் படிக்க கிளம்பினால் எல்லாரும் என்ன நினைப்பாங்க?” மறுப்பதற்கு ஒரு காரணம் தேடி, அதை சொன்னாள்.

“ருத்ரா மாமா தான உன்னை படிக்க சொல்றாங்க. அப்புறம் உனக்கு வேற என்ன பிரச்சனை?” புரியாமல் புருவம் சுருக்கினாள் ரேகா.

“அவர் மட்டும் குடும்பம் இல்லை” நேரடியாக பதில் தர தயங்கினாள்.

ரேகா குழப்பமாக அவளை கண்டாள். அம்மு சொல்ல வருவது இன்னும் அவளிற்கு புரியவில்லை. ஆனால் அதை சரியாக புரிந்து கொண்ட அம்பிகாதேவி, அவளை நெருங்கி, “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, உங்க கல்யாணத்தை பத்தி பேசும் போதே, உங்க படிப்பு பாதிக்காதுன்னு, உங்க அம்மாக்கு நான் பிராமிஸ் பண்ணி கொடுத்து இருக்கேன். உன்னை யாரும் தப்பா நினைக்க மாட்டாங்க. நீ தாராளமா படிக்கலாம்.” என அம்முவின் தலையில் ஒரு கூடை மண்ணை கொண்டினார்.

“என்னோட வயசுக்கு படிச்சா நல்லாவா இருக்கும்?” அடுத்த காரணத்தை பிடித்தாள். 

‘அவ அம்மா மாதிரியே காரணத்தை தேடி பிடிக்கிறா.’ என மனதில் நினைத்த அம்பிகா ஏதோ சொல்ல வர, அதற்கு முன், “வயசு என்னம்மா பெரிய வயசு? படிக்கிறதுக்கு வயசு ஒரு தடையில்லை. எந்த வயசுலயும், எத்தனை வயசு வரை வேணாலும் படிக்கலாம். படிக்கிறதுக்கு கால அளவு கிடையாது.” என எதிர்பார்க்காத நபரிடம் இருந்து பதில் வந்தது.

அம்மு உட்பட வீட்டில் உள்ள அனைவரும்,  விழி விரித்து அவரை ஆச்சரியமாக கண்டனர். அனைவரின் பார்வையையும் கண்டு அரண்டு போன ஈஸ்வரமூர்த்தி, “நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா?” என அருகே நின்ற மச்சினரிடம் கிசுகிசுத்தார்.

“எல்லாம் சரியா தான் பேசினீங்க மாமா. பாருங்க எனக்கு புல்லரிச்சு போச்சு.” என தன் கைகளை காட்டினார். அவரை முறைத்த ஈஸ்வரமூர்த்தி அம்முவின் பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

அடுத்த பந்தும் நோ பால் ஆனதில் கடுப்பானாள் அம்மு. ‘இப்ப என்ன சொல்லி மறுக்கலாம்?’ என்ற சிந்தனையோடு, தன் விழியை சுழற்றினால். அப்போது அவள் பார்வையில் விழுந்தது, ‘முடியாதுன்னு சொல்லிடுவியா?’ என எச்சரித்த ருத்ராவின் முகம். அலட்சிய பார்வையில் அதை விலக்கியவளின் விழிகள், அடுத்து ரிஷி வர்மாவின் முகத்தில் நின்றது.

அவள் பதிலை ஆர்வமாக எதிர்பார்த்த அந்த முகத்தில் தான் எவ்வளவு தவிப்பு.

எத்தனை முறை தன்னிடம் கெஞ்சி இருப்பான். ‘நீ மேற்கொண்டு படி வரு. நான் உன்னை படிக்க வைக்கிறேன்.’ என்று. ஒவ்வொரு தடவையும் தான் அதை மறுத்து கூறி, அவன் மனதை உடைத்ததை நினைத்தாள். அவள் மனமும் அதை நினைத்து வருந்தியது.

அந்த தவித்த முகத்தை கண்டு பெண்ணின் மனம் இறங்கியது. “நான் மேற்கொண்டு படிக்கிறேன். ஆனா ஒரு கண்டிஷன்.” என திடமாக ரிஷி வர்மாவின் முகத்தை பார்த்து கூறினாள்.

அவள் படிக்கிறேன் என சொல்லவும் அனைவரும் மகிழ்ந்தனர். கண்டிஷன் எனவும் குழம்பினர். 

“என்ன கண்டிஷன் அம்மு?” பிந்து முன் வந்து கேட்டால். 

அம்முவின் விழிகள், ஒரே ஒரு நொடி ருத்ராவின் கண்களை சந்தித்து, மீண்டும் ரிஷியை அடைந்தது. ருத்ராவின் மனதில் அபாய மணி அடித்தது, ‘இவள் ஏதோ வில்லங்கமா கேட்க போகிறாள்.’ என்று.

அதேபோல், “என்னோட படிப்புக்கான மொத்த செலவையும் வரு ஏத்துக்கணும்.” என கூறி, ருத்ராவின் எண்ணத்தை உறுதிப்படுத்தினாள். அதைக் கேட்ட ரிஷிவர்மாவின் முகத்தில் கோடி சூரிய பிரகாசம். அவன் முக மலர்ச்சியை கண்டு பெண்ணின் முகமும் மலர்ந்தது. ஒரு முகம் மட்டும் சுருங்கி பின் இயல்பானது.

இவர்கள் முக மாற்றத்தை கண்ட ருத்ராவின் முகமும் மாறியது???

அவள் படிக்கிறேன் என்று சொன்னதே போதும் என அனைவரும் மகிழ்ந்தனர். பாட்டி சந்தோஷமாக, பப்பு வைத்திருந்த டப்பாவிலிருந்து ஸ்வீட்டை கொண்டு வந்து அம்முவின் வாயில் திணித்து, “இது என்னடி அம்மு கூத்தா இருக்கு, இத்தனை வருஷமா நாங்க சொல்லி கேட்கல. என் பேரன் சொல்லவும் கேட்கிற. இது தான் சொல்றவங்க சொல்லணும்கிறது.” என செல்லமாக கொட்டினார்.

அவர் சொன்னதை கேட்டு ஜெர்கான அம்முவின் பார்வை ருத்ராவை அடைந்தது. அதற்காகவே காத்திருந்தவன் போல், ‘அப்படியா?’ என புருவமேற்றி கேட்டான்.

திரு திருவென முழித்த அம்மு, என்ன சொல்வது என தெரியாமல், தலையை எல்லா பக்கமும் உருட்டினாள். 

அவள் செய்கையில் மீண்டும் ஒரு முறை மனதை தொலைத்த ருத்ரா, ‘சோ ஸ்வீட்’ என உதடசைத்து கூறியவன், யாருக்கும் தெரியாமல் பறக்கும் முத்தத்தை பரிசளித்தான். அவன் செய்கையில் நாணம் கொண்ட அம்முவின் முகம் சிவந்து மின்னியது.

அனைவரும் அவர்களது நாடகத்தை கண்டும் காணாமல் ரசித்தனர். அனைவரின் முகமும் மகிழ்ச்சியில் நிறைந்தது.

★★★

அம்மு படிப்பதற்கு சம்மதம் சொல்லிவிட்டாள். இப்போது அடுத்த பிரச்சனை ஆரம்பித்தது.

என்ன படிப்பது???

அனைவரும் ஆளுக்கு ஒரு ஆலோசனை வழங்க, அதில் அம்மு குழம்பினாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு படிப்பை தொடர்வதால் சுலபமாகவும், அதேசமயம் உபயோகமாகவும் இருக்கும் படிப்பு வேண்டும் என நினைத்தாள். ஒரு முடிவை எடுக்க முடியாமல் திண்டாடினால்.

அதற்கும் ஈஸ்வரமூர்த்தி ஒரு தீர்வு கூறினார். “ருத்ராவுக்கு திரையுலகுக்கு வர விருப்பமில்லை. எனக்குப் பிறகு ஈஸ்வர் ப்ரொடக்ஷனை எடுத்து நடத்த ஆள் வேணும். நீ விரும்பியோ விரும்பாமலோ திரைத்துறைக்கு வந்துட்ட. அதுல உனக்கு நல்ல எதிர்காலமும் இருக்கு. நம்ம ஈஸ்வர் ப்ரொடக்ஷனின் அடுத்த வாரிசா உன்னை அறிவிக்கிறேன். அது சம்பந்தப்பட்டதா நிறைய டிப்ளமோ கோர்சஸ் இருக்கு. உனக்கு விருப்பம் இருந்தா அதில் சேர்ந்து படி.” என்ற ஈஸ்வரமூர்த்தியின் வார்த்தைகளில் அம்முவின் முகம் சற்று தெளிந்தது.

“மாப்பிள்ளை பொம்பள பிள்ளைக்கு அந்த பீல்டு ஒத்து வருமா? நடிக்கிறது வேற, டைரக்டர் சொல்றதை நடிச்சு கொடுத்துட்டு வந்துருவாங்க. ரிஷி தம்பியும் அவளுக்கு பாதுகாப்பா இருந்தார். ஆனால் சினிமா தயாரிப்பு அப்படி இல்லை, நிறைய பிரச்சினைகளை சந்திக்கணும். ஒரு பொண்ணா எல்லாத்தையும் சமாளிக்க முடியுமா?” என தாத்தா, அம்முவின் மேல் உள்ள பாசத்தால் மருமகனிடம் கேட்டார். தெளிந்த அம்முவின் முகம் மீண்டும் குழம்பியது.

“தொழில் உலகின் சிம்ம ராஜா ருத்ராவை எதிர்க்க ஒருத்தன் பிறந்து வரணும். அப்படி இருக்கும்போது அவனோட பொண்டாட்டிக்கு பிரச்சனை வருமா? அவ கூட ரிஷியும் இருக்கும்போது எதுக்கு பயம்?” என்றார் கர்வமாக. அதில் ருத்ராவின் மேலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும், ரிஷி அம்முவின் நட்பை ஆதரித்த மனதும் தெரிந்தது.

அவர் சொன்னதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த அம்முவும் ரிஷியும் கண்கலங்க அவரை ஏறிட்டனர். சிறு புன்னகையை அவர்களுக்கு பரிசாக வழங்கினார் ஈஸ்வரமூர்த்தி.

“அது சரி மாப்பிள்ளை, ரிஷி தம்பி அவர் தொழிலையும் பார்க்கணும் இல்லையா? எவ்வளவு நாள் அம்மு கூடையே இருக்க முடியும்?” என்றார் பாட்டி.

அவர் சொல்வதும் உண்மை தானே ரிஷி எவ்வளவு நாள் அம்முவுக்கு துணையாக இருக்க முடியும்? சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

“நீங்க சொல்றதும் சரி.” என்ற ஈஸ்வரமூர்த்தியின் பார்வை கார்த்திக்கிடம் சென்றது. “கார்த்திக் நீயும் எனக்கு ஒரு பையன் மாதிரி. எங்க கூட சென்னை வந்திரு. அம்மு படிச்சு முடிகிற வரை உனக்கு நான் தொழிலை சொல்லித்தரேன். அதுக்கப்புறம் நீயும் அம்முவும் சேர்ந்து ஈஸ்வர் ப்ரொடெக்சன்ஸை நடத்துங்க.”

அவர் கேட்கவும் கார்த்திக்கின் பார்வை திகிலுடன் ருத்ராவை அடைந்தது. ‘அம்முவின் மீதான தன் ஒருதலை காதலை தெரிந்த ருத்ரா, தன்னை அவளிடம் அனுமதிப்பானா? இப்போது அவள் மேல் காதல் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் அவன் விரும்பியது உண்மை தானே?’ என குழப்பத்துடன் அவனைக் கண்டான்.

அவன் நினைத்தது போலவே ருத்ரா கொலை வெறியுடன் கார்த்திகை முறைத்தான். ‘ஐயையோ முறைக்கிறானே, முறைக்கிறானே, இப்ப என்ன பண்றது?’ என மனம் நிலை கொள்ளாமல் தவித்தது, “நான் எப்ப.. பெரியப்பா இங… இருந்து வர… முடியும்? அவ்வளவு பெரி… நிறுவனத்தை நா… எப்படி?” வார்த்தைகள் தடுமாறின.

“எம் பி ஏ படிச்ச உன்னால் முடியாதா என்ன? இங்க இருக்க விவசாய நிலத்தை குத்தகைக்கு விட்டுடலாம். நீயும் ரேகாவும் சென்னைக்கு வந்துடுங்க.” எளிதாக விடை கூறினார். 

(ஆம்! கார்த்திக் எம் பி ஏ படித்துள்ளான். வெளியூர்களில் நல்ல சம்பளத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது. அம்முவை ஒருதலையாக விரும்பியவன், அவளைப் பிரிய வேண்டும் என, வந்த வாய்ப்புகளை தவிர்த்து விவசாயம் பார்த்து வந்தான். சிறிது நாட்களிலேயே விவசாயத்தில் ஈடுபாடு அதிகரித்தது. அதையே தன் தொழிலாக மாற்றிக் கொண்டான்.)

ருத்ராவின் முகம் இறுகுவதை கண்ட கார்த்திக், ‘இன்னைக்கு இவர் பையன் கையால எனக்கு மரண தண்டனை வாங்கி கொடுக்காமல் விட மாட்டார் போல.’ என அரண்டு போனவன், “அது சரி வராது பெரியப்பா.” என்றான் வேகமாக.

“எல்லாம் சரியா வரும். ஈஸ்வர் ப்ரொடக்ஷனில் உன்னையும் ஒரு பார்ட்னரா ஆக்கிடறேன் அப்புறம் பிரச்சினை வராது. நான் உங்க அம்மா அப்பாகிட்ட பேசிக்கிறேன்.” என உறுதியுடன் கார்த்திக்கிடம் முடித்தவர்,

பிருந்தாவிடம் திரும்பி, “இந்த காலத்தில் பெண்களுக்கு கல்வி ரொம்ப முக்கியம். உனக்கு கல்லேஜ் போய் படிக்க புடிக்கலையா, அப்ப போஸ்டல்ல படி. இல்லைனா தொழிற்கல்வி கோர்ஸ் சேர்ந்துக்கோ, டெய்லி ஒரு மணி நேர கிளாஸ் இருக்கும்.” என்றார்.

பெண் குழப்பத்துடன் தலையசைத்தாள்.

ருத்ரா மட்டும் கடும் கோபத்துடன் தந்தையை முறைத்தான்.

“என்னாது அடுத்து ரேகா அக்காவும் சென்னைக்கு கிளம்புறாங்களா?” என மூன்று லிட்டில் ஹார்டும் பெரிய சத்தத்துடன் வெடித்தது.

ராகம் இசைக்கும்!!! 

Leave a Reply

error: Content is protected !!