ராட்சசியே உன் ரட்சகன் நான் 9

IMG-20211115-WA0021-4ddeaaf3

ராட்சசியே உன் ரட்சகன் நான் 9

ராட்சசியே உன் ரட்சகன் நான் 9

 

‘தடால்’ என்ற சத்தத்துடன் வாசல் கதவு அடித்து திறக்க, இரவு சமையலில் இருந்த கௌரி பதறி வந்து வெளியே பார்த்தார். 

 

“கதிரு… கதிரு…” என்று சத்தமிட்டு அழைத்தபடி, கிங் பாண்டி வாசற் கதவை உதைத்து தள்ளிக்கொண்டு உள்ளே வர, கௌரி அவனை வித்தியாசமாக பார்த்து நின்றார். 

 

“உன் பொண்ணு எங்க?” அவன் அடிக்குரலில் வினவ,

 

“வேணிய நீ கூட்டிட்டு போனதா தான் எனக்கு மெஸேஜ் பண்ணி இருந்தா, நீ அவளை கேட்டு இங்க வர? என் பொண்ண என்ன பண்ண?” அவர் பதறி அங்காலாய்த்தார்.

 

“இதுவரைக்கும் ஒன்னியும் பண்ணிக்கல, அவ என் கைல சிக்கட்டும்‍, அவளுக்கு இர்க்குது!” என்று மிரட்டலாகச் சொன்னவன், அந்த சிறிய வீட்டை ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்த வேகத்தில் திரும்பி நடந்தான்.

 

கௌரிக்கு பதற்றமானது. கைபேசி எடுத்து வேணிக்கு உடனே அழைப்பு விடுத்தார். அந்த எண்ணிற்கு அழைப்பு எடுக்கவில்லை என்றதும் தாயுள்ளம் மேலும் பதறியது.

 

***

 

கதிர் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அவனைத் தவிர அங்கிருந்த யாரும் உறங்கும் நிலையில் இல்லை.

 

“எந்த தைரியத்தில கிங் கிட்டயிருந்து கதிரை தூக்கிட்டு வந்திருக்க வேணி? நீ இன்னும் இன்னும் பிரச்சனைய சிக்கலாக்கி கிட்டே போற.” ஜீவா அவளைக் கடிந்து கொண்டிருந்தான்.

 

வேணியிடம் பதிலில்லை. அவள் பார்த்து பார்த்து பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளையை அந்த ரௌடியிடம் தாரை வார்க்க, அவள் தாய்மனம் பொறுக்கவில்லை. தன் குஞ்சுக்கு ஆபத்தென்றால் கழுகையும் தாக்க பாயும் தாய்க்கோழி போலத்தான் அவளும். அவன் பாழும் கழுகென்று தெரிந்தும் அவனை எதிர்க்க துணிந்திருந்தாள்.

 

“ஜீவா போதும், இந்த டைம்ல நீ வேணிக்கு சப்போட்டா இருக்கணும். நானும் பார்க்கிறேன் வந்ததுல இருந்து நீயும் டென்ஷனாகி, அவளையும் டென்ஷன் படுத்திட்டு இருக்க.” துர்கா தன் தோழிக்காக ஜீவாவிடம் பரிந்து வந்தாள்.

 

வேணி கதிரை அழைத்துக்கொண்டு நேராக துர்கா வசிக்கும் பிளாட்டிற்குள் தான் தஞ்சம் புகுந்திருந்தாள். அவளுக்கு வேறு எங்கு செல்வது என்று புரியவில்லை. தன் வீட்டைவிட, இங்கே இருந்தால், பாண்டி கண்டுபிடித்து வர, நேரமாகும் அதுவரை ஏதாவது யோசிக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு.

 

நிலைமையின் தீவிரம் உணர்ந்த துர்கா, உடனே ஜீவாவையும் அழைத்து விட்டாள். ஆனால், ஜீவா உதவி புரிய வந்தவனாக தெரியவில்லை. வந்ததிலிருந்து வேணியைத் திட்டித்தீர்த்துக் கொண்டிருந்தான்.

 

“துர்கா, வீண் பிரச்சனைய வளர்க்க வேணாம்னு சொல்றேன். போயும் போயும் ஒரு ரௌடி கூட மோதறது, சாக்கடையில கல்லெறியிற மாதிரி. சாக்கடைக்கு ஒன்னுமாகாது, நாம தான் அழுக்காகி நிப்போம்.” நிதர்சனத்தை எடுத்துச்சொன்னாலும் ஏற்க மாட்டேன் என்று அழுத்தமாக நிற்கும் வேணி மீது ஜீவனுக்கு நிஜமாகவே கோபம் அதிகமானது.

 

இருவரையும் பார்த்த துர்கா, “ஜீவா, அவள் கதிர்மேல ரொம்ப அட்டாச் ஆகியிருக்கா, கொஞ்சம் அவளுக்கு டைம் கொடு.” என்று கேட்க,

 

“இனி கொடுக்கவும் எங்க டைம் இருக்கு, இந்நேரம் கிங் இவளை மூலைமுடுக்கெல்லாம் தேடி அலஞ்சிட்டு இருப்பான்…” ஜீவா நெற்றியைப் பிடித்துக் கொண்டான்.

 

“பயமா இருந்தா அவரை போக சொல்லு துர்கா…” வேணி பட்டென்று சொல்லிவிட, 

 

“கிங் பிராப்ளத்தை விட உங்க ரெண்டு பேரு பிராப்ளம் தான் பெருசா இருக்கும் போலயே!” துர்க்கா தலையில் கைவைத்து கொண்டாள்.

 

ஜீவா எதுவும் பேசாமல் வேணியை அசையாமல் பார்த்திருந்தான். அவள் நிலை அவனுக்கும் பரிதாபமாக தான் இருந்தது. அவளை கொஞ்சம் விட்டுப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற, வேணியின் அருகில் வந்தமர்ந்தவன், அவள் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டான். 

 

துர்கா, அவர்களிருவரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று, அவர்களுக்கு தனிமை தந்து நகர்ந்து கொண்டாள்.

 

“நீயும் நானும் ரொம்ப சாதாரண மனுசங்க வேணி, நம்ம சேர்ந்தவங்க நல்லா இருக்கணும், நம்ம குடும்பத்தோட எந்த பிரச்சனையும் இல்லாம நாம வாழணும்னு நினைப்போம். ஆனா கிங் அப்படி இல்ல, அவன் ஒரு ரௌடி. அவனுக்கு நினச்சது கிடைக்கணும் அதுக்காக எந்த லெவலுக்கு வேணா இறங்குவான். கொலை கூட ரொம்ப சாதாரணமா செஞ்சுட்டு போவான். ஏன் உன்கிட்ட கூட எவ்வளோ ரூடா பிஹேவ் பண்றான்.

 

அவன் அப்நார்மல் பர்சன், அவன்கிட்ட உன்னால போராட முடியாது வேணி. நீ பயப்படுற மாதிரி கதிரை கொல்ல எல்லாம் மாட்டான். அவனுக்கும் அவன் மகன்மேல பாசம் இருக்கும் தான. கதிருக்கும் அவனோட அப்பா வேணுமில்ல. புரிஞ்சிக்க வேணி, உன் மனச மாத்திக்க பாரு.” ஜீவா அவளுக்கு பொறுமையாக எடுத்து சொன்னான்.

 

“உனக்கு கஷ்டமா தான் இருக்கும் வேணி, பட் போக போக சரியாகிடும். உனக்காக நான் தான் இருக்கேன் இல்ல. சீக்கிரம் நம்ம மேரேஜ்க்கு ஏற்பாடு பண்ணலாம். உனக்கென்ன தலையெழுத்தா, அந்த தேர்ட் ரேட் ரௌடிகிட்ட இப்படி அடிவாங்கிட்டு நிக்கணும்னு…” என்றவன், சிவந்து வீக்கம் கண்டிருந்த அவளின் கன்னத்தைப் பரிவாக வருடி தர, வேணி அவன் கரத்தை தள்ளிவிட்டாள்.

 

ஜீவாவை நேராக பார்த்தவள், “அவன் ரௌடி தான், ஆனா உங்களமாதிரி அவனுக்கு என் முதுகுல குத்துற பழக்கமில்ல ஜீவா.” என்றாள் அழுத்தமாக.

 

“வாட்? நான் உன்ன என்ன செஞ்சேன், என்னை இவ்வளோ சீப்பா பேசற?” ஜீவாவுக்கு மனது உடைந்து போனது.

 

“நடிக்காதீங்க ஜீவா, நீங்க வேணுன்னு தான, பாண்டிக்கு தெரிஞ்ச வக்கீலா தேடி புடிச்சு கதிர் விசயத்தைக் கொண்டு போனீங்க?” அவள் கேட்க, ஜீவா தயங்கினான்.

 

“இல்ல… அது… நான்…”

 

“அந்த வக்கீல்கிட்ட விசயத்தை சொன்னா கிங் வருவான்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சு இருக்கு. அதான் அவன் வந்து உங்களை கூப்பிடும்போது எந்த எதிர்ப்பும் காட்டாம அமைதியா வந்திருக்கீங்க, அப்படித்தான?” வேணி கேட்க,

 

“ஏய், வேறென்ன பண்ண சொல்ற என்னை, அவனோட பறந்து பறந்து ஃபைட் பண்ண முடியுமா என்னால?” ஜீவா அங்கலாய்த்தான்.

 

“பேச்ச மாத்தாதீங்க ஜீவா… முதல்ல இருந்தே உங்களுக்கு நான் கதிரை வளர்க்கறதுல அவ்வளவா விருப்பமில்ல. அதை என்கிட்ட நேரா சொல்லி இருக்கலாமே ஜீவா… இப்படி நேரம் பார்த்து கழுத்த அறுத்துட்டீங்களே!” கழுத்தறுப்பட்ட சேவல் போல அவள் இதயம் உயிர் துடித்துக் கொண்டிருந்தது. 

 

“ச்சே கழுத்தறுத்தேன் அது இதுன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசாத வேணி, நீ எனக்கு முழுசா வேணும்னு நினச்சேன், அது தப்பா? நாம முழுசா ரெண்டு வருசமா லவ் பண்றோம், பட் நீ என்னைப்பத்தி, உன்னப்பத்தி, நம்ம லைஃப் பத்தி பேசினதைவிட,‌ கதிர் பத்தி பேசினது தான் அதிகம்! அவனுக்காக யோசிச்சது தான் அதிகம்… 

 

நீ எனக்கு லவ்வரா இருக்கணும்னு நான் ஃபீல் பண்றேன், ஆனா நீ கதிருக்கு‌ அம்மாவா தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிற. இப்பதான் அவனுக்காக அவன் அப்பா வந்துட்டான் இல்ல, அவன்கிட்டயே கதிரை விடாம,‌ நீதான் பிடிச்சு தொங்கிட்டு இருக்க.” ஜீவா தன் ஆதங்கத்தைக் கொட்டினான்.

 

வேணியின் கண்கள் கலங்கி கொண்டு வந்தன. “உங்க மனசுல கதிர் மேல இவ்வளோ வெறுப்ப வச்சுட்டு தான், என்கிட்ட அவனுக்காக அக்கறையா பேசினீங்களா? இதுக்கு நீங்க நேரடியாவே சொல்லி இருக்கலாமே, எதுக்கு இந்த ரெட்ட வேஷம்?” அவள் ஆற்றாமையில் துவண்டு போனாள். 

 

அசைக்க முடியாத நம்பிக்கைகள் வலுவிழந்து போவதில்தான், எத்தனை மோசமாக சிதைந்து போகின்றன பேதை மனங்கள்!

 

“நீ ஃபூலீஷ்ஷா பிஹேவ் பண்ணா நான்தான உனக்காக யோசிக்கணும். இதெல்லாம் நமக்காக தான வேணி, எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நீயும் நானும் சந்தோசமா லைஃப் ரன் பண்ணணும்னு நினைக்கிறேன். இப்ப நீ அதை இன்னும் சிக்கலாக்கி வச்சிருக்க.” என்று தலையைப் பிடித்து கொண்டான். இனி கிங் என்னமாதிரி பிரச்சனை செய்வானோ என்று தலைவேதனையாக இருந்தது அவனுக்கு.

 

“எப்படி ஜீவா…? உங்கூட இனியும் எப்படி என்னால இயல்பா இருக்க முடியும். நீ எனக்கானவன்னு என் மனசுல வரைஞ்சு வச்ச பிம்பத்தை நீ அழிச்சிட்ட… இப்ப நான் உன்ன என்னனு பார்க்கறது? இனி எந்த விசயத்துல உன்ன நம்பறது?” அவள் வெறுமையாக கேட்க, ஜீவனுக்கு கோபம் வந்துவிட்டது.

 

“நீ என்ன சொல்ல வர வேணி, உன் அக்கா பையனுக்காக நம்ம ரிலேஷன்ஷிப்ப பிரேக்கப் பண்ண நினைக்கிறீயா? நீயும் மத்த பொண்ணுங்க மாதிரி சுயநலமா தான் யோசிக்கிற இல்ல?”

 

“இனி நம்ம ரிலேஷன்ஷிப்ப இழுத்து பிடிக்க, என்ன இருக்கு நமக்குள்ள?” அவள் ஆற்றாமல் கேட்கவும்,

 

“நம்ம லவ் இருக்கு வேணி! நீ என்னை ட்ரூவா தான லவ் பண்ண?” அவனும் ஆத்திரமாக கேட்டான்.

 

“தெரியல…” வேணியின் பதில் விரக்கதியாக விழ, ஜீவா வாயடைத்து போனான்.

 

அதேநேரம், வெளியே அழைப்புமணி ஓசை விடாமல் ஒலிக்க, இருவருக்குமே பதற்றமானது. உள்ளிருந்து வெளியே வந்த துர்கா, சற்று எச்சரிக்கையாக, கதவின் உட்புற சங்கிலியை பிணைத்துவிட்டு, கொஞ்சம் மட்டும் கதவைத் திறந்தாள்.

 

“இந்த நேரத்தில யாருங்க?” துர்கா சாதாரண குரலில் கேட்க, 

 

“யாருன்னு சொல்லிக்கினா தான் கதவ தொறப்பியா? ஊஷார் பார்ட்டி தான்” லெஃப்ட் கதவு முன்னால் நின்று அலம்பல் விட, அவன் முரட்டு தோற்றத்தில் துர்கா மிரண்டு தான் போனாள்.

 

“தனியா இருக்க பொண்ணுகிட்ட பிரச்சனை பண்ணா… நான் போலீஸ்க்கு கால் பண்ணுவேன்.” என்ற துர்கா,

 

“கதிர் உள்ள தான இர்க்கான். இப்ப நீயா கதவ தொறக்கறீயா? இல்ல கதவ உடச்சிக்கினு உள்ள வரவா?” கிங்கின் முரட்டு குரல் கேட்டு அரண்டு போனாள். 

 

அவன் ஆவேசமாக தட்டிய வேகத்திலேயே, அந்த கதவு அதிர்ந்து ஆட்டம் கண்டது. “அய்யோ கதவை உடச்சிடாதீங்க ப்ளீஸ், நானே திறந்துறேன்.” என்ற துர்கா வேகமாக கதவைத் திறந்து விட்டிருந்தாள். 

 

“பிரண்ட விட உன்க்கு கதவு பெர்சா போச்சு.” லெஃப்ட் நக்கலாக துர்காவை கலாய்த்தபடி, உள்ளே வந்ததும், ஹாலில் அருகருகே நின்றிருந்த வேணி, ஜீவா தான் கண்ணில் பட்டனர்.

 

“அட்ரா சக்க, ரெண்டு பேரும் இங்கதான் ஜோடி போட்டுக்குனு கீறீங்களா, செம குஜ்ஜால்ஸ்ஸூ தான் போல.” ரைட் சிலாகிக்க, அவன் பொடனியிலேயே ஒன்று போட்ட பாண்டி, வேணியை நெருங்கினான்.

 

“ஏய் கதிரு எங்கடி?” பாண்டியின் அதட்டலுக்கு அவள் மசியாமல் நின்றிருந்தாள்.

 

“இப்ப சொல்லிக்கிறீயா இல்ல…” அவன் அவளை அடிக்க கை உயர்த்த,

 

“நோ… கதிர் உள்ளதான்… ரூம்ல தூங்கிட்டு இருக்கான்.” துர்கா பதறி பதில் தந்தாள்.

 

“போடீ, போய் புள்ளய தூக்கினு வா.” பாண்டி மறுபடி வேணிக்கு உத்தரவிட, அதற்கும் அவள் சற்றும் அசைவதாக இல்லை. பாண்டியின் பார்வை வேணியை எரித்துக் கொண்டிருக்க, அவள் பார்வையும் அவன்மீது உஷ்ணமாக படிந்திருந்தது.

 

“ரொம்ப முறச்சிக்காதடீ… செத்துடுவ!” பாண்டியின் எச்சரிக்கையில் அவள் சிறிதும் அசைந்து கொடுப்பதாக இல்லை. ஆனால், துர்காவுக்கு தான் பயம் தொண்டைக்குழியை அடைத்து நின்றிருந்தது. வேகமாக உள்ளே சென்று கதிரைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள்.

 

பாண்டி திரும்பி, தோளில் சாய்ந்து உறங்கிப் போயிருந்த கதிரை வாஞ்சையாகப் பார்த்தவன், “புள்ளய வாங்கினு கிளம்பு.” வேணியிடம் ஆணையிட, துர்கா அவளிடம் பிள்ளையைத் தந்தாள். கைமாறியதில்‌ சிணுங்கியவனை, வேணி தட்டிக்கொடுத்து தோள் சாய்த்துக் கொண்டாள்.

 

“உங்களுக்கு தேவை கதிர் தானே, அவனை மட்டும் கூட்டிட்டு போங்க, வேணியை விட்டுடு.” அதுவரை அமைதியாக இருந்த ஜீவா இப்போது வேணிக்காக பேசினான். 

 

அவனிடம் திரும்பி கண்களைச் சுருக்கி பார்த்தவன், “எனக்கு எம்புள்ள‌ மாத்திரமில்ல, எம்புள்ளயோட அம்மாவும் வோணும்!” பாண்டி அழுத்திச்‌ சொன்ன விதத்தில், ஜீவாவின் கண்கள் திகைப்பில் விரிந்தன.

 

“ஏய் என்னா லுக்கு, கிளம்புடி, உன்க்கு வூட்டாண்ட கச்சேரி வச்சிகீறேன்.” பாண்டி பற்களை நறநறத்து அவளை விரட்ட, வேணியிடம் எந்த தயக்கமும் தெரியவில்லை. துர்காவைப் பார்த்து, “தேங்க்ஸ் துர்கா, அண்ட் சாரி.” என்றுவிட்டு முன்னால் நடக்க, ஜீவா அவர்களை மரித்து நின்றான்.

 

“கிங், வேணி செஞ்சது தப்பு தான், அவளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். ப்ளீஸ் அவள விட்டுடு.” ஜீவா கெஞ்ச, பாண்டி நக்கலாக சிரித்தான்.

 

“பார்க்க நல்லா ரீஜண்டா கீற, நான் இப்ப கீற காண்டுல நாலு அப்பு‌ அப்புனேனு வச்சிக்க, மூஞ்சு பேந்து மாஞ்சா தேய்ஞ்சு போய்க்குவ… டீசண்டா நகர்ந்துடு இல்லனா நார்நாராகிடுவ.” பாண்டி நாக்கை மடித்து ஒற்றை விரல் ஆட்டி மிரட்டல் விட்டான்.

 

ஜீவா பயந்துடன் வேணியைப் பார்க்க, அவள் அவனிடம் பார்வையைத் திருப்பவே இல்லை. 

 

“வேணி…?” ஜீவா அழுத்தி அழைத்தும் அவள் நிமிரவில்லை.

 

“ஐய வேணியாவது கோணியாவது ஒத்து.” லெஃப்ட் ஜீவா தள்ளிவிட்டிருந்தான். அவர்களும் வந்த வேகத்தில் இடத்தை காலி செய்திருந்தனர்.

 

கதிரை மடிதாங்கியபடி, நெற்றியைப் பிடித்துக்கொண்டு இருக்கையில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் வேணி. அவளருகில் தான் பாண்டியும் அமர்ந்திருந்தான். அவனுக்கு அவளை அடித்தே கொல்ல வேண்டும் போல ஆத்திரம், அதை செயலாக்க முடியாமல் பொறுத்திருந்தான்.

 

கார் நின்ற இடத்தைப் பார்த்த வேணிக்குத் திகைப்பாக இருந்தது. அது வேணியின் வீடு. நம்பமுடியாமல் அவள் பாண்டியைப் பார்க்க, “எறங்கு…” என்றான் விரட்டலாக. 

 

சற்று நிம்மதியாக இறங்கிக்கொண்டவள், கதிரைத் தூக்க முயல, அவளைத் தடுத்தவன், அவள் கையைப்பிடித்து வீட்டுக்குள் இழுத்து வந்தான்.

 

“பாண்டி… கையவிடு, கதிரை கார்ல தனியா விட்டுட்டு…” வேணி சொல்லி முடிப்பதற்குள் அவளை அறைந்து தள்ளியிருந்தான். வீட்டு தாழ்வாரத்து தரையில் விழுந்தவளுக்கு, தலை கிறுகிறுத்து மயக்கம் வரும்போல ஆனது. 

 

வேணியின் அம்மாவும் தாத்தாவும் இதைப் பார்த்து பதறி ஓடி வந்தனர். “மனுசனா நீ எல்லாம், என் பொண்ண என் கண்ணு முன்னாலேயே போட்டு அடிக்கிறியே.” கௌரி அவனை ஏசிக்கொண்டே மகளைக் கைபற்றி தூக்கினார்.

 

“என் புள்ளய என்னாண்ட இர்ந்து களவாண்டு போனவளை உசுரெடுக்காம வுட்டு வச்சிருக்கேன்னு சந்தோசப்பட்டுக்க.” பாண்டி கொதித்து போய் பேசவும்,

 

“அய்யோ, உனக்கு ஏன்டி இந்த தலையெழுத்து? அவனாச்சு அவன் புள்ளயாச்சு, நீயேன்டி இப்படி அடிவாங்கிட்டு கிடக்குற.” கௌரி இயலாமையால் வேணியின் முதுகில் அடித்து வைத்தார்.

 

“ஏய்ய் நிறுத்து.” என்று வேணியைத் தன்பக்கம் இழுத்துக் கொண்ட பாண்டி, “இந்த கிங்கோட பொண்டாட்டிய அடிக்கிற வேலையெலாம் வேணாம்! சொல்லிக்கின…” என்றான் மிரட்டலாக.

 

அவன் சொன்ன வார்த்தையில், மூவரும் அதிர்ந்து போயினர். வேணி அவன் பிடியை உதறிவிட்டு, “நான் அமைதியா இருக்கேன்னு நீ என்ன வேணா சொல்லுவியா? உன் பொறுக்கி தனத்தை என்கிட்ட வச்சுக்காத, போ வெளிய…” ஆத்திரமாக அவனை விரட்ட,

 

“நீ கம்முனு இர்ந்துக்குனு இர்ந்தா நான் உன்ன சீண்டியே இர்ந்திருக்க மாட்டேன். நீதான் எங்கிட்ட துள்ளிகின, இப்ப வாண்டடா என்னாண்ட வந்து சிக்கிக்கின.” பாண்டி அலட்டாமல் சொன்னான்.

 

“உன்ன கேக்க ஆளில்லனா என்ன வேணா பண்ணுவியா? என் பொண்ணு உன்னோட வாழ முடியாம தானடா தூக்குல தொங்குனா… இப்ப இவ வாழ்க்கையும் சீரழிக்க பார்க்கறயா? என் ரெண்டு பொண்ணுங்களையும் உனக்கு பலி கொடுக்கவா பெத்து வளர்த்தேன்…” கௌரி பொறுமை இழந்து அவனிடம் கத்தி கதற, பாண்டியின் முகத்தில் இறுக்கம் கூடி கறுமை படர்ந்தது.

 

அவரை நெருங்கியவன், “உன் பொண்ணால தான்மே எனக்கு இப்ப இந்த நிலம, என்னையும் எம்புள்ளையும் பாதில வுட்டுட்டு எனக்கென்னானு போயிக்கினா இல்ல அவ… அவ செஞ்சுட்டு போன பாவத்துக்கு, இதோ உன் ரெண்டாவது மக தண்டனைய அனுபவிக்கட்டும்!” என்றான் ஆதங்கமாக.

 

“அதுக்கு வேற ஆள பாரு, உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் மசிய மாட்டேன். என்ன, என்னை கை கால கட்டி தூக்கிட்டு போய் தாலிக்கட்டுவியோ?” வேணி மறுத்து கத்தினாள். 

 

பாண்டி சிரித்தபடி, “என்னாத்துக்கு சொம்மா உன்ன கட்டி தூக்கினு… நீயா ஒத்துக்குனு வருவ.” பாண்டி சொல்லவும், வேணி முகத்தை வெறுப்பாக திருப்பிக்கொண்டாள். 

 

அவள் கன்னங்களை அழுத்திப் பிடித்து தன்புறம் திருப்பியவன், “உன் கதிருக்கு அம்மாவாகிக்க ஆச கீதுல்ல உனக்கு? கதிரும் உனக்காக ஏங்கி போறான்…” என்று அவள் கண்களை நேராக பார்த்துச் சொன்னவன், 

 

“நாளைக்கி காத்தால கோயில்ல கண்ணாலம். கூரப்பட்டும் தாலியும் உன்னாண்ட வந்து சேரும் ரெடியா இரு, சொம்மா மச்சான‌ காண்டாக்க பார்த்துக்கின… தாராந்துடுவ!” என்றான் மிரட்டலாக.

 

“நீ செய்யறது கொஞ்சங்கூட நியாயமில்ல பாண்டி. வேணி வாழ வேண்டிய பொண்ணு அவளை விட்டுடு பா.” பெரியவர் தளர்ந்த குரலில் அவனிடம் வேண்டினார்.

 

“உன் பேத்தி இனிமே என்னாண்ட சந்தோசமா வாழ்ந்துக்குவா!” என்று அழுத்திச் சொன்னவன், வேணியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வெளியே திரும்பி நடந்தான்.

 

வேணி ஓய்ந்து போய் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டிருந்தாள். காயம்பட்ட கன்னங்களில் கண்ணீர் வழிய, எரிச்சலெடுத்தது வேறு. கௌரி விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார். பெரியவருக்கு என்ன சொல்வது, என்ன செய்வது என்று புரியவில்லை. 

 

“இதுக்குதான்டி படிச்சு படிச்சு சொன்னேன் அந்த ரௌடி பய விசயத்துல தலையிடாதன்னு. தலப்பாடா அடிச்சிக்கிட்டேனே, கேட்டு தொலச்சியா? இப்ப பாரு எங்க வந்து நிக்கிறான்னு…” கௌரியின் புலம்பல் மட்டும் அந்த வீட்டில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. வேணி, தன்னுள் பிழன்று எதையும் யோசிக்கக் கூட தெம்பின்றி சுருண்டு கிடந்தாள்.

 

“இப்படி படுத்து கிடந்தா விடிஞ்சுடும்டீ, எழு எப்படியாவது இங்கிருந்து எங்கயாவது போயிடலாம்.” கௌரி சொல்ல,

 

“எங்க போறது கௌரிமா?” தாத்தா கேட்டார்.

 

“எங்கயாவது… பெங்களூர்ல இருக்கற அத்த வீட்டுக்கு, இல்ல ஊசூர்ல இருக்கற சித்தப்பா வீட்டுக்கு… போயிடலாம்.” கௌரி அவசரமாக யோசித்து சொன்னார்.

 

வேணி, “ம்மா… அவன் நம்மள தப்பிக்க விடுவான்னு நினைக்கிற? கிங்க ரொம்ப சாதாரணமா நினச்சிட்ட ம்மா நீ, நம்ம வீட்ட சுத்தி ஆளுங்கள போட்டுட்டு தான் போயிருப்பான்.” என்று பெருமூச்சு விட்டு எழுந்து கொண்டாள்.

 

அவள் சொன்னதைக் கேட்டு, கௌரிக்கு இன்னும் பதற்றம் கூடியது. தாத்தா மெல்ல நடந்து வெளியே சென்று பார்த்துவிட்டு, உள்ளே வந்து, “ஆமா வேணிமா, நம்ம வாசல்ல ரெண்டு ரௌடி பயலுங்க நிக்கிறானுங்க.” என்றார்.

 

கலைந்து வழிந்திருந்த கூந்தலை அள்ளி முடித்துக்கொண்ட வேணி, “இனி யோசிச்சு பிரயோஜனம் இல்ல. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று முகங்கழுவி இளகுவான உடைக்கு மாறி வந்தாள். பெரியவர்கள் இருவரும் குடிமூழ்கி போனது போல விட்டத்தைப் பார்த்து அமர்ந்து இருந்தனர். 

 

“ம்மா, சாப்பிட என்ன இருக்கு? பசிக்குது எழுந்து வா, சாப்பிட்டு படுக்கலாம்.” என்றழைத்த மகளை வித்தியாசமாகப் பார்த்தார் கௌரி.

 

“இந்த நிலமையில உனக்கு பசிக்கவும் செய்யும், படுத்தா தூக்கமும் வருமாடீ?”

 

“காலையில இருந்து பசங்க கூட கத்திட்டு, சாயங்காலத்துல இருந்து அந்த ரௌடிகிட்ட அடிவாங்கி போராடிட்டு வந்திருக்கேன். நிஜமா ரொம்ப பசிக்குது ம்மா… இதுக்கப்புறம் அவன் வீட்டுல நிம்மதியா தூங்க முடியுமோ என்னவோ, இன்னிக்காவது நம்ம வீட்டுல நிம்மதியா தூங்கிக்கிறேன்.” என்று சாதாரணமாக சொன்ன மகளைக் கண்டு அவருக்கு மேலும் கண்ணீர் ததும்பிக்கொண்டு வந்தது.

 

“அய்யோ அய்யோ… ரெண்டு பொண்ணுங்கள பெத்து வளர்ந்து ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கைய அமச்சு கொடுக்க முடியாத பாவியா போயிட்டேனே…” கதறி அழுதார்.

 

“ம்மா… அழாத, நான் ஒன்னும் கிருஷ்ணா மாதிரி கோழையில்ல, பிரச்சனைனு வந்ததும் தற்கொலை செஞ்சுக்கிறதுக்கு. என்னையும் கதிரையும் எப்படி பார்த்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும் விடு.” என்று தைரியம் சொன்னாள்.

 

“அடியே, அவளாவது பரவால்ல ஆசப்பட்டு அவன்கூட போனா… உன்ன அவன் கத்திமேல நிக்கவச்சு இல்லடி கட்டிக்க பார்க்குறான். பெத்த வயிறு பத்தி எரியுதே. கையாலாகாத தனமா நானும் புலம்பி அல்லாடுறேனே… கேக்க நாதியில்லயா? பார்க்க கடவுள் இல்லயா?” அவர் விடாமல் அரற்றினார்.

 

“ஆசையாவது காதலாவது, எல்லாம் சுத்த ஹம்பக் ம்மா, கஷ்டமோ நஷ்டமோ நம்ம வாழ்க்கைய நாம தான் முன்னெடுத்துட்டு போகணும். என் வாழ்க்கைய நான் பார்த்துக்கிறேன் நீ அழுது உடம்ப கெடுத்துக்காத எழுந்து வா.” என்று அவரையும் அழைத்துக்கொண்டு உள்ளே நடந்தாள்.

 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!