லவ் ஆர் ஹேட் 02

லவ் ஆர் ஹேட் 02
சமையலறையில் வேலைக் செய்துக் கொண்டிருந்த தன் அத்தை ஆண்டாளின் காலை சுரண்டிவிட்டு சமையலறை திண்டில் ரித்விகா பாய்ந்து ஏறி அமர, அவள் செய்த குறும்பில் முதலில் பயந்தவர் பின் முறைத்தவாறு, “ரொம்ப தான் டி சேட்டை உனக்கு!” என்று அவளின் காதை பிடித்து திருக, “அத்தை…” என்று சிணுங்கியவாறு விலகிக் கொண்டாள் அவள்.
தன் மூக்குக் கண்ணாடியை சரிசெய்தவள், “உங்க யாத்திரை எல்லாம் முடிஞ்சதோ? அதுக்குள்ள வந்துடிங்க.” என்று கேலியாக கேட்க, “சொல்லுவ டி சொல்லுவ! இரண்டு தடிமாடுகள பெத்து போட்டிருக்கேன் தானே, அதான் இந்த மாதிரி பேச்சை எல்லாம் வாங்க வேண்டியிருக்கு.” என்று சலித்தவாறு சொன்னார்.
“அந்த அபூர்வ சகோதரர்களுக்கு என்ன? சும்மா ஜம்முன்னு…” என்று அதற்கு மேல் சொல்லாமல் வாயைப்பொத்தி ரித்வி சிரிக்க, “அடி போடி! இதுக்கு மேல படிக்க முடியாதுன்னு ஒருத்தன் அடம்பிடிக்க, அடுத்தவனும் அவன பார்த்து படிக்காம, இப்போ இரண்டு பேருமே ஊருல வம்பிழுத்துக்கிட்டு திரியுரானுங்க. இதுல ஒருத்தன் முரடன்னா இன்னொருத்தன் அடி முட்டாள். இவனுங்கள பெத்து நான் படுற அவஸ்தை! ஸப்பாஹ்…” என்று பெருமூச்சோடு சொல்லி முடித்தார் ஆண்டாள்.
“க்கும்! ஊருல இருக்குற பாதி பிரச்சினை பொலிஸ் கைக்கு போகாம இருக்குதுன்னா அதுக்கு என் சந்து, இந்து தான் காரணம்.” என்று தன் நண்பர்களுக்கு வக்காலத்து வாங்கியவள், “சாப்பிட ஏதாச்சும் இருக்கா?” என்று அங்குமிங்கும் கண்களை சுழலவிட்டவாறு கேட்க, “நீ எதை கேக்குறேன்னு எனக்கு தெரியும். அதிகம் இனிப்பு சாப்பிட கூடாதுன்னு அதிபா சொல்லியிருக்கான் தானே? நல்லா கிலோ ஏறி போய் போண்டா மாதிரி இருக்க.” என்று கேலி செய்தார் அவர்.
அவரை செல்லமாக முறைத்தவள் கொடுப்புக்கள் சிரித்தவாறு, “அதான் உங்க பையன் வர போறாராமே… வரும் போது வெறும் கையை வீசிக்கிட்டா வருவாரு? சாக்லெட், ஸ்வீட்னு அள்ளிட்டு வருவாரு. நீங்களும் சாப்பிட வேண்டியது தானே?” என்று கேட்க,
“ஆமா டி, என் பையன் அவன் அம்மாவுக்கு எதுவும் வாங்காமலா வருவான்? நான் பெறலன்னாலும் அவன் என் பையன் தான். நீ வேணா பாரு! ஒரு பை பூரா எனக்கு இனிப்பா அள்ளிட்டு வர போறான்.” என்று பெருமையாக சொன்னவர், “கொஞ்ச நேரம் இதை பார்த்துக்க! இதோ வரேன்.” என்றுவிட்டு சமையலறையிலிருந்து வெளியேறினார்.
அவர் சொல்லிவிட்டு சென்றதை யோசித்தவள், ‘நமக்கும் ஏதாச்சும் வாங்கிட்டு வருவாங்களா?’ என்று சிறுபிள்ளைத்தனம் என்று தெரிந்தும் நினைத்தவாறு தனக்குத்தானே சிரித்துக் கொண்டு பார்வையை சுழலவிட, சரியாக அவள் கண்ணில் பட்டது அந்த பெட்டி.
ஓடிச் சென்று அதை பிரித்து பார்த்தவளுக்கு எங்கிருந்தோ ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்ற குரல் கேட்க, அந்த இனிப்பு பெட்டியிலிருந்த லட்டுகளை கண்கள் மின்ன பார்த்தாள் அவள். இனிப்புகள் திருடி சாப்பிடுவதில் தான் நம் நாயகிக்கு அத்தனை பிரியமாச்சே!
ஒரு லட்டை எடுத்து சாப்பிட போனவளின் கையை ஒரு கரம் தட்டிவிட்டு இனிப்பு பெட்டியையும் கோபமாக தரையில் சிதற விட, அதிர்ந்தவள் கலங்கிய விழிகளுடன் அந்த கரத்துக்கு உரியவரை ஏறிட்டு பார்த்தாள்.
அவள் எதிரே கோபமாக நின்றிருந்த சகுந்தலா, “என்ன டி நானும் பார்த்துக்கிட்டு இருக்கேன். இந்த வீட்ல உன்னோட இடம் தெரியாம ரொம்ப உரிமையா தான் இருக்க? இது என்னோட பொண்ணுக்காக நான் வாங்கி வச்சிருந்தா திருடியா சாப்பிடுற? அந்த அந்த இடத்துல உன்னை வச்சிருந்தா உன் தகுதி தெரிஞ்சிருக்கும். அதானே தெருநாய கூட்டிட்டு வந்து நடுவீட்டுல வச்சி சும்மா சாப்பாடு போட்டா இப்படி தான் ரொம்ப உரசிக்க பார்க்கும்.” என்று ஏதேதோ கோபங்களை சேர்த்து அவளை திட்டிவிட்டு, “வெளிய போடி!” என்று கத்த, அங்கிருந்து வெளியே ஓடி வந்தவளுக்கு அவர் பின்னால் பேசும் வார்த்தைகளும் நன்றாகவே கேட்டது.
“அப்பன் ஆத்தா செத்தா ஏதாச்சும் ஆசிரமத்துல சேர்த்து விட்டிருக்கனும். அதை விட்டுட்டு வீட்டுல இடம் கொடுக்க வேண்டியது. விட்டா நம்ம வீட்டு பசங்களையே வலைச்சி போட்டு சொத்துல பங்கு கேட்டாலும் கேப்பா!” என்று அவளின் காதில் விழவே அவர் பேச, ரித்வியோ அவமானத்தில் குன்றித்தான் போனாள்.
பத்து வருடங்களுக்கு முன் ரித்வியை மஹாதேவன் அழைத்து வந்ததிலிருந்தே அவருக்கு அவள் மேல் உருவான வெறுப்பு தான்! வைஷ்ணவியை அவர் தன் அண்ணனின் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க அவர் திட்டத்தை போட்டிருக்க, இப்போது மஹாதேவன் வைஷ்ணவியை விட ரித்வியின் மேல் காட்டும் அன்பில் அவருக்கோ ஒரு பயம்! எங்கு இவள் மீது இருக்கும் பாசத்தில் வீட்டு மருமகளாக்கி விடுவாரோ என்று… கூடவே, அதிபனுடனான அவளின் நெருங்கிய நட்பின் மீதும் ஒரு பொறாமை!
யாரும் பார்க்காத வண்ணம் சமையலறை வாசலிலிருந்து கண்களை அழுந்த துடைத்தவளின் தோளை ஒரு கரம் தொட, பட்டென்று திரும்பியவள் தன்னை பாவமாக பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியை கண்களில் கண்ணீர் ஓட வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தாள்.
“அம்மா பேசினதுக்காக நான் மன்னிப்பு கேக்குறேன் ரித்வி. அவங்க எப்போவும் இப்படி தான். நீ அழாத!” என்று வைஷ்ணவி தழுதழுத்த குரலில் சொல்ல, அவளை அணைத்துக் கொண்ட ரித்வி, “அச்சோ! அவங்க என் அம்மா வைஷூ. அவங்க திட்டுறதுக்கு முழு உரிமை இருக்கு. என்ட், அவங்க திட்டுறது எனக்கென்ன புதுசா? அவங்க மேல எனக்கு எந்த கோபமும் இல்லை.” என்று கள்ளங்கபடமில்லாத மனசுடன் சொன்னாள்.
எப்போதும் போல் ரித்வியின் இந்த மென்மையான குணத்தில் அவளை வியந்து பார்த்தவள், ஏதோ யோசித்து அவசரமாக சுற்றி முற்றி கண்களை சுழலவிட்டு தேடி யாரும் பார்க்காததை உறுதி செய்து “ஹப்பாடா!” என்று நிம்மதி பெருமூச்சுவிட, ரித்வியோ அவளை கேள்வியாக நோக்கினாள்.
“தேங் கோட்! அந்த முட்டா பீஸும், முரட்டு பீஸும் உன்னை என் அம்மா திட்டினதை பார்க்கல. இல்லைன்னா, அன்னைக்கு நடந்த மாதிரி தான் இன்னைக்கும்.” என்ற வைஷ்ணவி, “என்ன இருந்தாலும் அவங்க என் அம்மா ரித்வி.” என்று பாவமாக சொல்ல, ரித்வியோ பக்கென்று சிரித்து விட்டாள்.
இதற்கு முன் ஒருதடவை சகுந்தலா ரித்வியை திட்டிய போது அவரை பழிவாங்கவென இரு சகோதரர்களும் அன்றிரவு பேய் வேஷம் போட்டு அவரை பயமுறுத்தியதும், அதற்கடுத்த மூன்று நாட்களும் அவர் காய்ச்சலில் படுத்திருந்ததும் இருவருக்குமே நியாபகம் வர, இருவருமே ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து வாய்விட்டு சிரித்துக் கொண்டனர்.
சரியாக ரித்விக்கு அலைப்பேசியில் ஒரு அழைப்பு வர, அதில் தெரிந்த பெயரிடப்படாத எண்ணை பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து ஓரக்கண்ணால் பதட்டமாக வைஷ்ணவியை நோக்கின.
வைஷ்ணவியோ, “யாரு ரித்வி?” என்று கேட்டவாறு திரையில் தெரிந்த எண்ணை பார்க்க முயற்சிக்க, திரையை அவளுக்கு காட்டாது மறைத்தவள், “ஃப்ரென்ட் தான் வைஷு. நம்பர் சேவ் பண்ணாம நான் தான் மறந்து போயிட்டேன். நான்… நான் போய் பேசிட்டு வரேன்.” என்று படபடவென உரைத்துவிட்டு தன் அறைக்கு ஓடிருக்க, ‘என்ன இவ எப்போ பாரு கோல் வந்தாலே இப்படி வித்தியாசமா நடந்துக்குறா? கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகனும்.’ என்று போகும் அவளையே பார்த்து நினைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.
அறைக்குள் சென்றவள் அழைப்பை ஏற்று காதில் வைக்க, மறுமுனையில் பேசிய குரலில் மென்மையாக புன்னகைத்தவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அவர்கள் கேட்ட நல விசாரிப்பிற்கு, “நல்லா இருக்கேன்.” என்று சொன்னவள், மறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு, “ஆம்”, “இல்லை” என்ற வார்த்தைகளையே பதிலாக சொன்னாள்.
ரித்விக்கோ ‘தன் மாமாவிற்கு துரோகம் செய்கிறோமோ?’ என்ற குற்றவுணர்ச்சி வேறு! எந்த முடிவாயினும் அவரிடம் கேட்பவள், சொல்பவள் இதை மட்டும் ஏனோ அவரிடமிருந்து மறைத்து விட்டாள் என்று சொல்வதை விட அவரிடம் சொல்வதற்கு ஒரு தயக்கம், பயம் என்று சொல்லலாம்.
பேசி முடித்து அழைப்பை துண்டித்தவள், மறுமுனையில் பேசிய குரல்களுக்கு சொந்தமானவர்களை பற்றியே யோசித்துக் கொண்டிருக்க, சட்டென வெளியில் கேட்ட சத்தத்தில் அறையிலிருந்து அடித்து பிடித்து ஹோலுக்கு ஓடினாள்.
அங்கு ஹோலில் சந்திரனும், இந்திரனும் ஒருத்தருக்கொருத்தர் சட்டைக் கோலரை பிடித்து, தரையில் உருண்டு பிரண்டு சண்டையிட்டுக் கொள்ள, பதறிவிட்டாள் ரித்வி.
“டேய் மரியாதையா ஓடிப் போயிரு இல்லை…” என்று சந்திரன் தன் சகோதரனின் முகத்தில் ஒரு குத்துவிட்டு மிரட்ட, இந்திரனோ, “ஒரு எலவும் புடுங்க முடியாது. நான் தான் தட்டி விடுவேன். நீ போடா என் டொமேட்டோ!” என்று பதிலுக்கு எகிறினான்.
“நான் தான் மொதல்ல பார்த்தேன். நான் தான் தட்டிவிடுவேன்.” என்று சந்திரன் கத்த, இருவரையும் இடுப்பில் கைகுற்றி முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தாள் வைஷ்ணவி. சகுந்தலாவும், ஆண்டாளும் எப்போதும் நடப்பது தான் என்ற ரீதியில் இதை கண்டும் காணாதது போல் இருக்க, இருவரையும் விலக்க ஓடி வந்த ரித்வி, “என்னாச்சு வைஷு? எதுக்கு இப்படி அடிச்சிக்கிறாங்க?” என்று பதட்டமாக கேட்டாள்.
அவளோ பக்கவாட்டாக திரும்பி ரித்வியை முறைத்துவிட்டு தன் தோளில் விழுந்திருந்த தூசியை பார்க்க, அப்போதும் புரியாது ரித்வியோ இருவருக்கும் நடுவில் நுழைந்து, “நிறுத்துங்கடா! டேய்…!” என்று தொண்டை தண்ணீர் வற்ற கத்தி அவர்களை நிறுத்துவதற்குள் ஒருவழியாகிவிட்டாள்.
அக்னி நட்சத்திரம் கார்த்திக், பிரபு போல் இரு சகோதரர்களும் ஒருவரையொருவர் முறைத்தவாறு நின்றிருக்க, இடுப்பில் கைகுற்றி மூச்சிவாங்கியவாறு, “இந்த குடும்பத்துக்கு என்ன தான் ஆச்சு? எப்போ பார்த்தாலும் சண்டைகளும், களவரங்களும்…” என்று அந்த நேரத்திலும் விளம்பர பாணியில் பாவம் போல் சொன்னாள் ரித்வி.
“ரித்வி, பஞ்சுமிட்டாய் தோள்ல தூசு இருந்திச்சி, தட்டிவிடலாமேன்னு வந்தா இவன் என்னை அடிச்சிட்டான்.” என்று சந்திரன் சிறுபிள்ளை போல் குற்றப்பத்திரிகை வாசிக்க, இந்திரனோ, “பொய்யு… பொய்யு… நான் தான் முதல்ல கண்டேன். அதுவும், நான் கட்டிக்க போற பொண்ணு மேல எனக்கு தானே உரிமை இருக்கு?” என்று சொல்ல, “அப்படி ஒரு சம்பவம் நடக்கனும்னா அது என் பொணத்தை தாண்டி தான்” என்று பதிலுக்கு வசனம் வேறு பேசினான் சந்திரன்.
ரித்வியோ, “அட லூசுப்பயலுகளா!” என்று இருவரையும் மாறி மாறி பார்க்க, இருவரையும் முறைத்துப் பார்த்த வைஷ்ணவி தன் தோளிலிருந்த தூசியை தட்டிவிட்டு விறுவிறுவென வீட்டிலிருந்து வெளியேறிச் செல்ல, “இவனுங்கள…” என்று பல்லைக்கடித்த ரித்வி, அவளின் பின்னா ஓடி வைஷ்ணவியின் கழுத்தை சுற்றி கைப்போட்டுக் கொண்டாள்.
“நானும் உங்க வீட்ல ஒரு அத்தைப்பொண்ணா பிறந்திருக்கலாம் போலயே… மாமாப்பையனுங்களுக்குள்ள கம்படீஷன் ரொம்ப தான்.” என்று ரித்வி கேலியாக சொல்ல, அவளை உதட்டை சுழித்து செல்லமாக முறைத்தவள், “ஏன்? இல்லை ஏன்னு கேக்குறேன். உருட்டுறது தான் உருட்டுற. ஒரு நியாயம் வேணாமா?” என்று சலிப்பாக கேட்டாள்.
வைஷ்ணவியை கூர்ந்து பார்த்தவள், “அப்போ சரி, நாம வேணா டொக்டெர் சாரோட ஹோஸ்பிடல் போகலாமா?” என்று கேட்க, முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்ட வைஷ்ணவி, “போகலாமே…” என்று சிறு சிரிப்புடன் சொல்ல, அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தவள் அவளை இழுத்துக் கொண்டு சென்றது என்னவோ ஊரிலிருக்கும் அந்த சிறிய மருத்துவமனைக்கு தான்.
வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த ரித்வி எப்போதும் போல் அங்கு மனதுக்கு இதத்தை கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீர்வீழ்ச்சியை நோக்கி வைஷ்ணவியையும் இழுத்துக் கொண்டு செல்ல, வைஷ்ணவியின் பார்வையோ அங்குமிங்கும் அலைப் பாய்ந்துக் கொண்டிருந்தது.
“இதை பார்க்குறதுக்காகவே இங்க வரலாம் வைஷு.” என்றவாறு ரித்வி பாய்ந்து வரும் நீரை ரசனையாக பார்க்க, வைஷ்ணவிக்கோ அதை பார்க்கும் போது நினைவுகள் வேறெங்கோ மிதந்தது. அவளுடைய கண்கள் சில நினைவுகளில் கலங்க, அதை வெளிவரவிடாது உள்ளிழுத்துக் கொண்டவள் நன்கு அறிவாள்! அத்தனை தப்பும் அவளுடையது தான் என்று…
இருவரும் அந்த செயற்கை நீர்வீழ்ச்சியின் முன் அதன் அழகில் லயித்தவாறு நின்றிருக்க, சட்டென பின்னால் கேட்ட, “இங்க என்ன பண்றீங்க?” என்ற குரலில் இருவருமே திரும்பி பார்த்தனர். “உன்னை பார்க்க தான்.” என்றவாறு ரித்வி அப்போது தான் நோயாளிகளை பரிசோதித்து விட்டு தன் முன் நின்றிருந்த அதிபனை பார்த்து உற்சாகமாக சொல்ல, அவனோ பக்கத்திலிருந்த வைஷ்ணவியை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் பேசாமல் வருமாறு கண்களால் சைகை செய்தவாறு முன்னே நடந்தான்.
அதிபனுக்கான பிரத்யேக அறையில் மூவரும் நுழைய, “அதி சாப்பிட்டியா?” என்று கேட்டவாறு இருக்கையில் ரித்வி அமர, தனது இருக்கையில் அமர்ந்து, “ம்ம்.” என்றவாறு அலைப்பேசியை நோண்ட ஆரம்பித்தான் அதிபன்.
“நேரத்துக்கு சாப்பிடு அதி! இல்லைன்னா, பேஷன்ட்க்கு ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டிய நீ பேஷன்ட்டா போக வேண்டியது தான்.” என்று கேலியாக ரித்வி சொல்ல, வைஷ்ணவியோ அதிபன் மீதே விழி அகலாது தன் பார்வையை பதித்திருந்தாள்.
அதிபனோ ரித்வியின் பேச்சில், “க்கும்!” என்று நொடிந்துக்கொள்ள, அங்குமிங்கும் பார்வையை சுழலவிட்டவளின் பார்வையோ எப்போதும் போல் சரியாக அவனது மேசையின் மீதிருந்த அவன் அப்பா, அண்ணனுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தின் மீது நிலைத்தது. அவளும் அந்த புகைப்படத்தை பல முறை பார்த்திருக்கிறான் தான்! ஆனால், எத்தனை தடவை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் அந்த சிறுவனின் முகம்.
அவனின் முகத்தையே இமை மூடாது பார்த்தவள், தன்னை மீறி அதிபனிடம், “அதி, உன் அண்ணா எப்போ வருவாங்க?” என்று கேட்டுவிட, அந்த கேள்வியில் விழிகளை மட்டும் உயர்த்தி ரித்வியை பார்த்தவன், இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து, “இருபத்தினாழு மணித்தியாலத்துல இதே கேள்விய நீ என்கிட்ட மூனாவது தடவை கேக்குற.” என்று அழுத்தமாக சொல்ல, சட்டென நிமிர்ந்தவளுக்கு அவனின் பார்வையை பார்த்ததும் பகீரென்று இருந்தது.
“அச்சச்சோ!” என்று உள்ளுக்குள் பதறியவள், “ஹிஹிஹி… சும்மா தான்.” என்று அசடுவழிய, அவனோ அவளை அழுத்தமாகவே பார்த்தவாறு இருந்தான். அதில் ஜெர்க்கானவள், “ஹிஹிஹி… நீங்க பேசிக்கிட்டு இருங்க. சும்மா வெளில போய் காத்து வாங்கிட்டு இருக்கேன்.” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியே ஓடி வராண்டாவில் தன்னை தானே கடிந்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளியே வந்த வைஷ்ணவியின் கண்கள் வீங்கி சிவந்திருக்க, அவள் பின்னே வந்த அதிபனின் முகமோ பாறை போல் இறுகிப் போய் இருந்தது. இதை ரித்வி கவனித்தாலும் எதுவும் கேட்காது கண்டும் காணாதது போலவே இருந்தாள்.
அடுத்த இரண்டு நாட்கள் அவனவளை பற்றி தன் நண்பர்களிடம் கேள்வி கேட்டே ஒருவழிப்படுத்திவிட்டாள் நம் நாயகி. அதுவும், அதிபன் பார்வையில் அன்று சந்தேகத்தை பார்த்ததிலிருந்து சந்திரன், இந்திரனிடம் தான் அவள் தன் கேள்விக்கனைகளை எறிவது!
“அதியோட அண்ணா எப்போ வருவாங்க?”, “வந்தா இங்க தான் இருப்பாங்களா?”, “நல்லா பேசுவாங்களா?, இல்லைன்னா உமுணா மூஞ்சா?” என்று அடுத்தடுத்தென ரித்வி தன் நண்பர்களிடம் கேள்வி கேட்க, இந்தினோ வெளிப்படையாக தலையிலடித்துக் கொண்டான் என்றால், சந்திரனோ ஒருகட்டத்தில், “இரு! அவன்கிட்ட ஃபோன் போட்டு தரேன். அவன்கிட்டயே கேளு!” என்று தொலைப்பேசியை எடுத்துவிட, அந்த இடத்தை விட்டே ஓடிவிட்டாள் அவள்.
அன்று,
ரித்வி படுத்திருக்க, ஒரு வலிய கரம் அவள் இடையினூடே வளைத்து அவளை மெல்ல தூக்கியது. தன்னை யாரோ தூக்குவது போலிருக்கவும் சட்டென கண்களை திறந்தவளின் முன்னே மங்கலான ஒரு உருவம். ஆனால், அது ஒரு ஆண் என்று மட்டும் அவளால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அந்த வாலிபன் அவளை கைகளில் ஏந்தியவாறு புன்னகையுடன் நடக்க, அவனின் முகத்தை பார்க்கும் ஆர்வத்தில் அவன் முகத்தை தன்னை நோக்கி இழுக்கச் சென்றவள், கோயில் மணியோசை சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தமர்ந்தாள்.
“எங்க அவன்?”, “எங்க அவன்?” என்று சுற்றி முற்றி தேடியவள் பின்னரே தான் கண்டது கனவு என்பதை உணர்ந்து தலையிலடித்துக் கொள்ள, ‘அவன் யார்?’ என்று அவளுக்குள் எழுந்த கேள்விக்கு அவள் முன் எப்போதும் போல் அவனின் விம்பம் தான் தோன்றியது.
‘ச்சே! நமக்கு எனக்கு ஆச்சு? அவங்கள பத்தி அதிகம் யோசிச்சி யோசிச்சி இப்படி கண்டமேனிக்கு கனவு வருது. கடவுளே!’ என்று புலம்பியவளின் அலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர, அதைப் பார்த்தவளோ உள்ளுக்குள் குத்தாட்டமே போட்டு விட்டாள்.
அடுத்தநொடி வேகவேகமாக தயாராகி துள்ளிக் குதித்து சந்திரனின் அறைக்குச் சென்றவள் கதவு நிலையில் சாய்ந்தவாறு, “சந்திரா…” என்று அழைத்து தாவணி முந்தானையில் முறுக்குப் பிழிந்தவாறு நிற்க, கண்ணாடியை பார்த்து தலை வாரிக் கொண்டிருந்தவனுக்கு அவளின் இந்த தோரணை புதிது அல்ல என்பதே உண்மை. காரியம் சாதிக்க அவள் அவனிடம் பயன்படுத்தும் ஒரு பணிவு!
‘நாளைக்கு காலையில கண்டிப்பா பெரியப்பா கையால தர்ம அடி தான்.’ என்று ஏற்கனவே மனதில் உறுதி செய்தவாறு கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தவன், “ரெடியா இரு! இல்லைன்னா மட்டும் விடவா போற?!” என்று கடுப்பாகவே சொல்ல, அவளோ, “அய்யா… ஜாலி! ஜாலி!” என்று துள்ளிக்குதிக்க, “நான் இல்லாம என்ஜோய்மென்ட் ஆ உடன்பிறப்பே? நானு…?” என்றவாறு எங்கிருந்தோ துள்ளிக்குதித்து வந்து நின்றான் இந்திரன்.
சந்திரன் தலையிலடித்துக்கொள்ள, அன்றிரவு எப்போதும் போல் யாருக்கும் தெரியாமல் புதிதாக வெளியான திரைப்படத்தை பார்க்க டவுனுக்குச் செல்ல திட்டத்தை தீட்டினர் இந்த த்ரீ இடியட்ஸ். ஆனால், எவனை காண இத்தனை நாட்கள் ஆர்வமாக இருந்தாளோ அவனுடனான முதல் சந்திப்பு இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் ரித்விகா சென்றிருக்க மாட்டாளோ என்னவோ!
அன்றிரவு, சமத்தாக மஹாதேவன் முன் சாப்பிட்டு தூங்கச் செல்கிறோம் என்று சீக்கிரமாகவே அறைக்குச் சென்றுவிட்டனர் மூவரும். ஆனால், வைஷ்ணவியிடமும், அதிபனிடமும் அவர்கள் தங்களின் திட்டத்தை சொல்லவே இல்லையே… அதிபனோ தெரிந்தால் விடமாட்டான் என்றால், வைஷ்ணவிக்கோ இந்த மாதிரியான திருகுதாளம் செய்வதற்கு கைகால்கள் நடுங்கி விடும்.
மஹாதேவன் மாத்திரை சாப்பிட்டு தூங்கிவிட்டார் என்று நினைத்த மூவரும் சுவர் ஏறி குதித்து திரையரங்கத்திற்கு செல்ல, அந்த ஊர் எல்லையை தாண்டி காரின் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தான் நம் நாயகன் யாதவ் கார்த்திக்.
-ஹேஷா ஸகி