லவ் ஆர் ஹேட் 03

லவ் ஆர் ஹேட் 03
“டேய் இந்து, என்ன டா தவழ்ந்துகிட்டு வர்ற? சீக்கிரம் டா மாங்கா மடையா!” என்று அந்த தியேட்டர் வாசலில் ரித்வி கத்த, சந்திரனோ, ‘இவளுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குதே…’ என்று உள்ளுக்குள் சலித்துக்கொள்ள, தன் வண்டியை நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு சுவரேறி குதிக்கும் போது காலில் உண்டான காயத்துடன் காலை நொண்டியவாறு நடந்து வந்தான் இந்திரன்.
மூவரும் தியேட்டருக்குள் நுழைய, இங்கு மஹாதேவனின் பெரிய வீட்டின் முன் நிறுத்தப்பட்ட காரிலிருந்து இறங்கினான் யாதவ் கார்த்திக். அதே சமயம் வீட்டினுள் தூக்கம் வராது ஹோலில் அமர்ந்து தன் மகனின் சிறுவயது புகைப்படத்தை கையில் வைத்து பார்த்தவாறு இருந்த மஹாதேவனுக்கு தன் மனைவி, மூத்த மகனின் நினைப்பு தான்.
‘சாரு, அன்னைக்கு நான் உன்னை இழந்துட்டேன். அதோட இந்த ரவுடித்தனத்தை விட்டேன். இந்த வெட்டு, குத்து இதெல்லாம் நாமளே விட்டா கூட அது நம்மள விடாது போல! உன் மகனும் அதே மாதிரி வளர ஆரம்பிச்சிட்டான். மனசே இல்லாம அவன இங்கயிருந்து தூரமா விலக்கி வச்சிட்டேன். இப்போ நம்ம மகன் மறுபடியும் நம்ம ஊருக்கு வர போறான். அவனுக்கு ரித்வி பொருத்தமா இருப்பான்னு தோணுது. ஆனா, எந்த சந்தர்ப்பத்துலயும் ரித்வி பத்தி கார்த்திக்கு தெரியவே கூடாது. அவனுக்கு மட்டும் இல்லை வீட்ல இருக்குற யாருக்கும் தெரிய கூடாது.’
என்று மானசீகமாக தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தவர் ஒரு பெருமூச்சுவிட்டவாறு எழுந்து மாடிப் படிகளை நோக்கிச் செல்ல, சரியாக ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற செறுமலில் சட்டென்று நின்றுவிட்டார்.
“உள்ள வரலாமா மிஸ்டர்.மஹாதேவன்?” என்ற அந்த கம்பீரமான குரலில் அதிர்ந்து விழித்தவர், “கார்த்தி…” என்று அழைத்தவாறு திரும்ப, தன் தோள் பையை பிடித்தவாறு வாசல் கதவு நிலையில் சாய்ந்து நின்றிருந்தான் யாதவ். அவருக்கோ பத்து வருடங்கள் கழித்து தன் மகன் தன் முன் நிற்பதில் அத்தனை சந்தோஷம்! கூடவே இது கனவா? நிஜமா? என்ற சந்தேகம் வேறு!
யாதவ்விற்கும் கிட்டதட்ட அதே நிலை தான்.
என்ன தான் தன் அப்பாவின் மேல் கோபம் இருந்தாலும் வெளிநாட்டுக்கு சென்றதும் அதன் மோகத்தில் மூழ்கியவனுக்கு தன் அப்பாவின் மேலிருந்த கோபம் பறந்து போன்ற உணர்வு! இப்போது கூட சீண்டவே உள்ளுக்குள் சிரித்தவாறு பொய்யான முறைப்புடன் அவன் நின்றிருக்க, அவருடைய கண்களோ கலங்கி சட்டென கண்ணீர் தரையை தொட்டுவிட்டது.
“கார்த்தி என்னை மன்னிச்சிடு ப்பா, உனக்கு இப்போ தான் அப்பாவ பார்க்க தோணிச்சா?” என்று அதே இடத்தில் நின்றவாறு தழுதழுத்த குரலில் மஹாதேவன் கேட்க, ஓடி வந்து தன் அப்பாவை அணைத்துக் கொண்டவன், “சோரி…” என்று மட்டும் இறுகிய குரலில் சொன்னான்.
அப்போது சரியாக தண்ணீர் குடிக்கவென அறையிலிருந்து வெளியே வந்த அதிபன் ஹோலின் நடுவில் தன் அண்ணா அப்பாவை அணைத்திருந்ததை பார்த்து அதிர்ந்து, “யாதவ்…” என்று சந்தோஷத்தில் கத்த, அவன் புறம் திரும்பிய யாதவ், “அதிபா…” என்றவாறு கைகளை நீட்டினான். “எப்போ யாதவ் வந்த?” என்று அதிபன் உற்சாகமாக கேட்டவாறு ஓடிச்சென்று தன் அண்ணனை தாவி அணைத்துக் கொள்ள, சத்தம் கேட்டு மற்ற அறையிலிருந்து வெளியே வந்துவிட்டனர் எல்லாரும்.
சகாதேவனோ, “மகனே…” என்றவாறு யாதவ்வை அணைத்துக்கொள்ள, ஆண்டாளோ ஒரு மூச்சு அழுதே விட்டார். சகுந்தலாவோ யாதவ்வை பார்த்ததுமே பல திட்டங்களை மனதில் திட்டமிட்டுக் கொண்டார்.
யாதவ்வை பார்த்த வைஷ்ணவியோ, ‘அய்யய்யோ இவனா? அதுக்குள்ள வந்துட்டான்.’ என்று உள்ளுக்குள் அலறியவாறு அவனை நோக்க, வைஷ்ணவியை புருவத்தை சுருக்கி பார்த்த யாதவ், அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தவாறு, “உன்னை எங்கேயோ பார்த்திருக்கேன். நீ…” என்று நாடியை நீவி விட்டுக்கொண்டு யோசிக்க, அதிபனுக்கோ முட்டிக்கொண்டு சிரிப்பு தான் வந்தது.
அவனை ஓரக்கண்ணால் முறைத்தவள், “வைஷ்ணவி…” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல, “ஓஹோ! நீதானா?” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு அவன் முகத்தை திருப்பிக்கொள்ள, அவளின் சிவந்த முகமோ மேலும் கோபத்தில் சிவக்க, அதிபனோ வாயைப்பொத்தி சிரித்துக்கொண்டான்.
தன் மகன் வந்த சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்த மஹாதேவனுக்கு அப்போது தான் ஒன்று மூளையில் உரைத்தது. கண்களை சுழலவிட்டு அந்த குறிப்பிட்ட மூவரையும் தேடியவர், “சந்திரா… இந்திரா… ரித்வி…” என்று கத்த, அப்போது தான் அவர்கள் இல்லாததை உணர்ந்தனர் மற்ற இருவரும்.
வைஷ்ணவியோ ‘அட ஆமா, நம்ம ஜிகிரி தோஸ்த்துகள காணோமே…’ என்று நினைத்தவாறு சுற்றி முற்றி தேட, ‘ரித்வி இந்நேரம் சத்தம் கேட்டு வெளில வந்திருப்பாளே… அந்த அபூர்வ சகோதரர்களும் தான். ஒருவேள…’ என்று யோசித்த அதிபனுக்கு பொறி தட்ட, ‘மாட்டிக்கிச்சுங்க!’ என்று நினைத்தவாறு தன் அப்பாவை நமட்டுச்சிரிப்புடன் பார்த்தான்.
“எங்கடா அவனுங்க? ஆமா… ரித்வி யாரு?” என்று கேட்டவாறு சுற்றி முற்றி தேடிய யாதவ்விற்கு தான் அங்கிருந்து வந்த ஆறு மாதத்திற்கு பிறகு வீட்டிற்கு புதிதாக வந்த ரித்வியை பற்றி தன் மாமா பிரபாகரன் சொன்னது சுத்தமாக நியாபகத்திலே இல்லை.
“வாட்? உனக்கு ரித்விய தெரியாதா?” என்று கேட்ட அதிபன் பின்னரே தன் அண்ணனை பற்றி புரிந்து, “இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க சிறப்பான சம்பவம் இருக்கு. அப்போ தெரியும்.” என்று சொல்லிவிட்டு சிரிக்க, யாதவ்வோ புரியாது பார்த்தான்.
கத்தி கத்தி அழைத்து பார்த்த மஹாதேவனுக்கு ஏதோ ஒன்று புரிய, அதிபனை பார்த்தவர், “அப்படியா அதிபா?” என்றொரு கேள்வியை தான் கேட்டு வைத்தார். அவனோ சிரிப்புடன் தலையசைக்க, அவருக்கோ கோபம் உச்சத்தை தொட்டது. இதில் பதறியது என்னவோ வைஷ்ணவி தான்!
உடனே தன் நண்பர்களுக்கு அழைக்க அலைப்பேசியை எடுத்தவளின் அலைப்பேசியை பிடுங்கிய சகாதேவன், “என்ன? அலெர்ட்டு பண்ண போறியாலே… அலெர்ட்டு…” என்று கோபமாக கேட்க, “ஆத்தீ! நான் இல்லை.” என்று அலறியவள் அடுத்த கொஞ்ச நேரத்தில் நடக்க போகும் சம்பவத்திற்காக காத்திருக்க, யாதவ்வும் காத்திருந்தான் ஒருவித ஆர்வத்துடன்.
ஒன்றரை மணிநேரத்திற்கு பிறகு,
“இங்கேயே வண்டிய நிறுத்திருவோம். வீட்டு பக்கம் கொண்டு போனா வண்டி சத்தம் கேட்டு பெரியப்பா கண்டுபிடிச்சிருவாரு.” என்ற சந்திரன், “ஏய் சோடாபுட்டி, நீ மொதல்ல சுவரேறி குதிச்சி பின்வாசல் வழியா வீட்டுக்குள்ள போயிரு.” என்று சொல்ல,
“டேய்! இந்துவுக்கு கால்ல அடி பட்டிருக்கு. அவனால எப்படி ஏற முடியும்? எல்லாரும் தூங்கியிருப்பாங்க. முன்வாசல் வழியாவே வீட்டுக்குள்ள போகலாம்.” என்று ரித்வி சொல்ல, இந்திரனோ இமைகளை படபடவென சிமிட்டி பாவம் போல் முகத்தை வைத்துக் கொள்ளவும், “இது திருந்தாத கேசு!” என்று சலித்துக்கொண்டான் சந்திரன்.
பின் மூவரும் பதுங்கி பதுங்கி வீட்டின் பெரிய வாசற்கதவை தாண்டி வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து கதவை திறக்க அதுவோ பூட்டப்பட்டிருந்தது.
“சோடாபுட்டி, கதவை லாக் பண்ணியிருக்காங்க டி. எப்படி உள்ள போறது? ஆனாலும், இவங்க இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்களே…” என்று சந்தேகமாக யோசித்த இந்திரன் பின், “சரி வாங்க, பின்வாசல் வழியா உள்ள போகலாம்.” என்று செல்ல எத்தனிக்க, அவனை பிடித்துக்கொண்ட ரித்வி, “டொன்டொடொய்ன்… இதோ இருக்கு சாவி!” என்று தன் குட்டி பையிலிருந்து வீட்டு சாவியை எடுத்து ஆட்டி ஆட்டி காட்டினாள்.
“அடி கள்ளி! இந்த பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி பெரிப்ஸ் முன்னாடி சீன் போட்டுட்டு சாவியையே ஆட்டைய போட்டு வச்சிருக்க.” என்று இந்திரன் சிரித்தவாறு சொல்ல, கெத்தாக இல்லாத கோலரை தூக்கிவிட்டுக் கொண்டாள் ரித்வி.
“ஏய் என்னடி? இந்த சாவி உள்ள போகவே மாட்டேங்குது. திடுட்டு வேலைய கூட உன்னால சரியா பண்ண முடியாதா?” என்று சந்திரன் கதவை திறக்க முடியாத கடுப்பில் கத்த, அவன் கையிலிருந்த சாவியை பிடுங்கியவள் சாவியை நுழைத்து அடுத்தகணம் கதவை திறந்திருக்க, “ஹிஹிஹி…” என்று அசடுவழிய இழித்து வைத்தான் சந்திரன்.
அவனை மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு முறைத்த ரித்வி தன் வெள்ளை சுடியின் முந்தானையை தலையில் முக்காடு போன்று போட்டு முகத்தை மறைத்தவாறு முன்னே நடக்க, அவள் பின்னாலே ஒட்டிக்கொண்டு பதுங்கி பதுங்கி நடந்துச் சென்றனர் இந்த இரட்டை கதிரைகள்.
ஹோல் நடுவிற்கு மூவரும் சென்றதும் சட்டென்று வீட்டின் விளக்குகள் எறிய மூவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
“அய்யய்யோ!” என்று மூவருமே பதற, “எவ்வளவு தைரியம் இருந்தா அர்த்த ராத்திரில மூனு பேரும் வெளில போய் ஊரு சுத்திட்டு வருவீங்க?” என்ற மஹாதேவனின் குரலில் ரித்வி முந்தானையால் முகத்தை மேலும் மூடி, ‘கடவுளே காப்பாத்து!’ என்று கண்களை இறுக மூடி நிற்க, ‘மாட்டிக்கிட்டோம்!’ என்று நினைத்தவாறு திரும்பாது தலைகுனிந்து நின்றிருந்தனர் இந்திரனும், சந்திரனும்.
“முதல்ல திரும்புங்க மூனு பேரும்.” என்று மஹாதேவன் கத்த, சகோதரர்கள் இருவரும் அவரின் கத்தலில் சட்டென திரும்பினார்கள் என்றால், ரித்விகாவோ அப்படியே நின்றிருந்தாள்.
அதிபனோ இருபக்கமும் தலையாட்டி சிரிக்க, வைஷ்ணவியோ, “துரோகிங்க! என்னை விட்டுட்டு போனதுக்கு நல்லா அனுபவிங்க!’ என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்தவள், ‘ஆனாலும் பாவம் நம்ம தோஸ்த்துங்க! என்ன பனிஷ்மென்ட் காத்திருக்கோ?’ என்று பாவமாகவும் நினைத்துக் கொண்டாள்.
யாதவ்வோ இருவருக்கும் நடுவில் திரும்பி நின்றிருந்த வெள்ளை சுடிதார் அணிந்திருந்த ரித்வியை புரியாது பார்த்தான் என்றால், சகோதரர்களோ திரும்பியும் தங்கள் பெரியப்பாவை நிமிர்ந்து பாக்காது தலை குனிந்து நின்றிருந்தனர்.
“களவாணிப் பசங்க மாதிரி வீட்டு சுவரேறி குதிச்சு வெளில போறீங்க? வீட்டு சாவியை திருடி வேற வச்சிருக்கீங்க. என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கீங்க? திட்டியும் பார்த்தாச்சி, வெளுத்தும் பார்த்தாச்சி, ஒருநாள் பூரா வீட்டுக்குள்ள விடாம வெளில நிக்க வச்சும் பார்த்தாச்சி… அப்போவும் திருந்தின பாடில்லை.” என்று திட்டியவர் ரித்வி திரும்பாததை பார்த்து, “ஏலே உனக்கு மட்டும் தனியா சொல்லனுமா? திரும்பு!” என்று அதட்ட, வேகமாக திரும்பி நின்றாள் ரித்வி.
ஆனால், அவளோ முகத்தை மூடியிருக்க, அதை முறைத்துப் பார்த்தவர், “முதல்ல உன் முக்காட எடு புள்ள!” என்று கத்த, முகத்தை மறைத்திருந்த முந்தானையை எடுத்தவள் எப்போதும் போல் பேசியே தன் மாமாவை கவிழ்த்த தான் பயன்படுத்தும் கண்ணீரை வரவழைத்து, “மாமா நான்…” என்று பாவமாக அழைத்தவாறு நிமிர, அவள் வார்த்தைகளோ தடைப்பட்டுத் தான் போனது.
அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை. அவள் முன் நிற்பது அவளவன் அல்லவா! இத்தனை நாட்கள் எவனை நேரில் சந்திக்க ஆர்வமாக இருந்தாலோ அவனே அவள் முன் கூரிய பார்வையுடன் நின்றிருக்க, அவனையே விழி மூடாது பார்த்துக்கொண்டிருந்தாள் ரித்வி.
செதுக்கப்பட்ட முகம், அடர்ந்த தாடி மீசையுடன், கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கண்களை சுருக்கி அவளையே ஆராய்ச்சியாக பார்த்தவாறு அவன் நின்றிருக்க, ‘இது அவர் தானா? அவரே தான்.’ என்று அவளுடைய மனம் படபடவென அடித்துக்கொண்டது.
‘இந்த பொண்ணு யாரு?’ என்று அவனும் தெரியாது அவளையே மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்துக்கொண்டு நிற்க, இங்கு மஹாதேவனோ மூவருக்கும் தாருமாறாக திட்டிக் கொண்டிருந்தார். ஆனால் என்ன? இதெல்லாம் ரித்வியின் காதில் விழுந்தால் தானே!
“டேய் இந்து, நீ சொல்லு! இதுக்கு மூலக்காரணம் யாரு? ஒருவேள நீ தானோ?” என்று சந்தேகப் பார்வையுடன் இந்திரனை அவர் பார்க்க, அதில் பதறியவன், “அய்யய்யோ பெரியப்பா! நான் சந்திரன். அதோ அவன் தான் இந்திரன்.” என்று தலைகுனிந்தவாறே சந்திரனை நோக்கி கைக்காட்ட, அவரோ புருவத்தை சுருக்கி சந்திரனை கூர்ந்து பார்க்க, “துரோகி!” என்று தன் சகோதரனை திட்டியவன், “பெரியப்பா, என்னை பார்த்தா இந்த இந்திரன் கேடி நாய் மாதிரியா தெரியுது?” என்று பாவம் போல் கேட்டான்.
யாதவ்வோ இருவரின் கூத்தில் பக்கென்று சிரித்துவிட, அவன் குரல் கேட்டு இரு சகோதரர்களும் சட்டென்று நிமிர்ந்து பார்த்து, “யாதவ்…” என்று உற்சாகமாக ஒருசேர கத்த, இருவரையும் மாறி மாறி முறைத்த மஹாதேவன், “என்கிட்டயே விளையாடுறீங்களா? விடிஞ்சதும் நீங்க மூனு பேரும் தான் வீட்டை சுத்தம் பண்றீங்க. சின்னதா தூசு இருந்தாலும், தொலைச்சிருவேன்!” என்று மிரட்டலாக சொல்ல, சந்திரனும் இந்திரனும், “அவ்வ்வ்…” என்று வடிவேல் பாணியில் உதட்டை பிதுக்கி, “உன்னை கூட்டிட்டு போனதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ, சிறப்பா பண்ணிட்ட.” என்று ரித்வியை முறைக்க, எதையும் கண்டுக்காது தன்னவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள் அவள்.
ரித்வியை கவனித்துக்கொண்டிருந்த அதிபனோ அவளின் பார்வை செல்லும் திசையை பார்த்து விழிகளை விரிக்க, “ரித்வி…” என்ற மஹாதேவனின் அதட்டலில், “ஆங் மாமா… எப்போ வந்தீங்க?” என்று தூக்கத்திலிருந்து விழித்தது போல் ரித்வி பேசியதில் அதிபனுக்கோ குபீர் சிரிப்பு தான். ஆனால் கூடவே, அவளின் யாதவ்வை நோக்கிய பார்வையை உணர்ந்து ஒரு பயமும்.
அவரோ ரித்வியின் புரியாத பாவனையில் சலிப்பாக நெற்றியை நீவி விட்டுக்கொள்ள, தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு தன் முட்டை கண்களை விரித்து பெக்கபெக்கவென விழித்தவள், வைஷ்ணவியை பார்த்து ‘என்ன?’ என்று கேட்க, அவளோ ‘நீ செத்தடி!’ என்ற ரீதியில் கழுத்தை வெட்டுவது போல் பாவனை செய்தாள்.
பக்கத்திலிருந்த இந்திரனோ முழங்கையால் அவளை இடித்து, “என்ன ஒரு பத்து நிமிஷமா கோமாவுல இருந்தியா? செத்தோம் டி நாங்க!” என்று கடுப்பாக சொல்ல, அப்போது தான் சுற்றி நடப்பது புரிந்து, “அய்யய்யோ!” என்று பதறிவிட்டாள் ரித்வி.
மஹாதேவனோ யாதவ்வை காட்டி, “என் மகன் வந்ததால இவ்வளவு கம்மியான தண்டனை. இல்லைன்னா அவ்வளவு தான்.” என்று மிரட்டலாக சொல்ல, “டேய் யாதவ்…” என்று ஓடிச்சென்று அவனை தாவி அணைத்துக்கொண்ட இரு இரட்டை சகோதரர்களும், “வந்தது தான் வந்த. வேற நேரம் காலமே கிடைக்கல்லையா? இப்போவா வரனும்?” என்று ஒருசேர கேட்டு வைக்க, “அடேய்…” என்று இருவரையும் வாய்விட்டு சிரித்தவாறு பார்த்தான் அவன்.
வைஷ்ணவியின் பக்கத்தில் நின்றிருந்த ரித்வியின் பார்வையோ யாதவ்வின் மேலேயே இருக்க, அவனின் பார்வை கூட அடிக்கடி ‘அவள் யார்?’ என்ற கேள்வியுடன் அவள் மேல் பதிய தான் செய்தது.
“அந்த பொண்ணு யாரு அதிபா?” என்று யாதவ் கேட்க, “அது தான் ரித்வி. ரித்விகா. நீ இங்கயிருந்து போன ஆறு மாசத்துக்கு அப்றம் அப்பா கூட்டிட்டு வந்தாரு. அவளும் எங்க ஃபேமிலி தான்.” என்று சொல்ல, ‘ஓ…’ என்று மட்டும் சொல்லிக் கொண்டவனின் பார்வையோ அவள் மேல் அழுத்தமாக பதிந்தது.
‘ச்சே! இவர் முன்னாடியா திட்டு வாங்கனும்? மானமே போச்சே!’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அறைக்குச்செல்ல மாடிப்படிகளில் ஏறியவள் ஏதோ ஒரு உந்துதலில் சட்டென்று நின்று பின்னால் திரும்பி யாதவ்வை பார்க்க, தன் சகோதரர்களுடன் பேசிக் கொண்டிருந்தவனின் பார்வையும் ஒருநொடி அவள் புறம் திரும்பியது. அந்த ஒருநொடி பார்வையிலேயே ஆகாயத்தில் மிதப்பது போல் கனவு காண ஆரம்பித்துவிட்டாள் அவள்.
‘அச்சோ! நாம பார்க்கும் போது அவரும் பார்க்குறாரே…’ என்று சட்டென்று வெட்கப்பட்டு திரும்பிக் கொண்டவள் சிரித்தவாறு தன் அறைக்கு ஓடிச்சென்று கட்டிலில் விழுந்து, ‘ஒருவேள நான் அவரை காதலிக்கிறேனா? ச்சே! ச்சே! அப்படி எல்லாம் கிடையாது. ஆனாலும் வெட்க வெட்கமா வருதே… இந்த மாதிரி ஃபீல் பண்ணதே கிடையாதே…’ என்று யோசித்தவாறு அவனின் நினைவில் மூழ்கியிருக்க, அவனோ சுத்தமாக அவளை மறந்துவிட்டு தனதறையில் தீவிரமாக மடிக்கணினியில் எதையோ தட்டச்சு செய்துக் கொண்டிருந்தான்.
அதிகாலை,
அப்போது தான் ஏதேதோ நினைவுகளிலிருந்து தூங்கச் சென்ற ரித்வி கதவு தட்டப்படும் சத்தத்தில் அலறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தாள்.
“எவன் டா அவன்?” என்று கத்தியவாறு எழுந்தவள், “அடியேய் சோடாபுட்டி! எழுந்துருடி! வந்து துடைப்பத்தை எடுத்து வீட்டை பெருக்கு!” என்ற சந்திரனின் குரலிலே நேற்று நடந்ததை மீட்டிப் பார்த்தாள்.
‘போச்சு! போச்சு! மானமே போச்சு! என்னை பத்தி அசிங்கமா, கேவலமா நினைச்சிருப்பாரு.’ என்று மானசீகமாக புலம்பியவள் பின், ‘அவர் என்ன நினைச்சா உனக்கென்ன ரித்வி? அதானே…’ என்று தனக்குத்தானே கேள்வி கேட்டு சமாதானப்படுத்தியவாறு ஓடிச்சென்று கதவை திறக்க, எதிரே சந்திரனும், கையில் துடைப்பத்துடன் இந்திரனும் நின்றிருந்தனர்.
இருவரையும் மாறி மாறி பார்த்தவாறு, “என்னை பார்த்தா பாவமா இல்லையா சந்து, இந்து? என் மேல எம்புட்டு பாசம் உங்களுக்கு. ஆனா, என்னை போய்… உங்க வீட்டு பிள்ளை தானே நானு?” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டு ஏதேதோ பேசி தப்பிக்க முயற்சிக்க, இரு சகோதரர்களோ எதுவும் பேசாது அவளையே அழுத்தமாக பார்த்திருந்தனர்.
அதில் சலித்துக்கொண்டவள் ‘க்கும்!’ என்று நொடிந்துக் கொண்டவாறு கையை நீட்ட, இந்திரன் அவளிடம் துடைப்பத்தை கொடுக்க, ஹோலில் கூட்டிப்பெருக்க ஆரம்பித்தவளின் பார்வையோ மாடியிலிருந்த அந்த அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தது.
‘ஒருவேள தூங்கிக்கிட்டு இருக்காரோ? இருக்கலாம். இருக்கலாம்.’ என்று யோசித்தவளின் கால்கள் தானாகவே அந்த அறையை நோக்கிச் செல்ல, அறை வாசலில் வைத்து கதவிடுக்கின் வழியே, ‘என்ன யாரையும் காணோம்.’ என்று யோசித்தவாறு திருட்டுத்தனமாக உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
சட்டென ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற செறுமல் சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவள், அங்கு இறுகிய முகமாக கழுகுப் பார்வையுடன் நின்றிருந்த யாதவ்வை பார்த்து பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொள்ள, “இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று அவன் கேட்டதும் அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
-ஷேஹா ஸகி