லவ் ஆர் ஹேட் 09

eiBMN0589555-08a0d1e3

லவ் ஆர் ஹேட் 09

“விருந்து முடிஞ்சதும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் ப்பா. எப்போவும் உன் விஷயத்துல நான் எடுக்குற முடிவு தப்பாகாது. இப்போவும் உனக்காக சரியா தான் தேர்ந்தெடுத்திருக்கேன்.” என்று மஹாதேவன் பொடி வைத்து பேசியவாறு ‘நம்ம ஆள கவுக்க விருந்துல என்ன கலர் தாவணி போடலாம்?’ என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த ரித்வியை ஒரு பார்வை பார்க்க, அவரின் பேச்சில் புருவத்தை நெறித்த யாதவ், அவர் பார்வை சென்ற திசையை சந்தேகமாக பார்த்தான்.

நிமிர்ந்து தன் அப்பாவை ஏறிட்டவன், “கொஞ்ச நாள்ல நான் கொழும்புக்கு போயிருவேன். அங்க தான் வேலை கிடைச்சிருக்கு. என்ட், நானும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். கூடிய சீக்கிரம் சொல்றேன்.” என்று சொல்ல, ஒரு தலையசைப்பை கொடுத்தவருக்கு எப்படியாவது அவன் செல்லும் போது ரித்வியையும் அவனுடன் அனுப்பி வைக்கும் திட்டம் தான். கூடவே, அவன் கொழும்பு மாவட்டத்தை பற்றி பேசும் போது சில சம்பவங்கள் வேறு அவரின் மனக்கண் முன் தோன்றின.

எழுந்து நின்ற யாதவ் ரித்வியை பார்த்து, “போகலாமா?” என்று கேட்க, அவளோ ‘ஆங்…’ என்று மலங்க மலங்க விழித்தவாறு மஹாதேவனை பார்த்தாள் என்றால், அவரோ இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

“ஊர் சுத்தி பார்த்து ரொம்ப நாளாச்சி. வந்ததிலிருந்து ரூம்க்குள்ளயே தான் இருக்கேன். உங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினையா என்ன?” என்று யாதவ் கேட்க, “அதெல்லாம் இல்லை ப்பா, நீ ரித்விமாவ அழைச்சிட்டு போ!” என்றவருக்கு நிஜமாகவே மனதுக்கு சந்தோஷமாகத் தான் இருந்தது.

ரித்வியோ சங்கடத்துடன் புன்னகைத்துவிட்டு முன்னே நடந்தவனின் பின்னே ஓட, இளசுகள் தான் ‘ஏன் எங்களுக்கு எல்லாம் ஊர சுத்தி காட்ட தெரியாதா? இல்லை, நாங்க கூப்பிட்டா தான் வர மாட்டோமா?’ என்று கேலியாக நினைத்துக் கொண்டனர்.

சகுந்தலாவை பற்றி சொல்லவா வேண்டும்? ஏதோ சொல்ல வாயெடுத்தவரின் வாயை, “அம்மா…”  கடிந்தவாறு பொத்தினாள் வைஷ்ணவி.

யாதவ் காதில் ஹெட்செட்டை போட்டு பாடலை கேட்டவாறு நடந்துச் செல்ல, அவன் பக்கத்தில் நடந்துச் சென்றவளுக்கு உள்ளுக்குள் படபடப்புடன் கூடிய சந்தோஷம்!

‘அச்சோ! எப்படியாச்சும் நம்ம லவ்வ சொல்லனுமே… இவர் வேற ஊர விட்டு போறேன்னு சொல்றாரு. என்ன தான் பண்றது? அதுவும் மாமாவோட பேச்சே சரியில்லை. ஒருவேள, இவருக்கு ஏதாச்சும் பொண்ணு பார்த்திருக்காரோ? கடவுளே! வாழ்க்கையில ஒரே ஒரு லவ்வ பண்ணி நான் படுற அவஸ்தை அய்யய்யய்யய்யோ….!’ என்று புலம்பியவாறு ரித்வி நடந்து வர, சட்டென்று தோளில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

“செம்புவத்த குளத்துக்கு போகலாமா?” என்று அவன் கேட்க, எல்லாம் பக்கமும் தலையாட்டியவள், வால் போல் அவன் போகுமிடமெல்லாம் பின்னாலே சென்றாள்.

அதுவும், மாத்தளை மாவட்டத்தை பற்றி சொல்லவா வேண்டும்? இலங்கையில் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு ஊர். இயற்கையின் தாயகம் என்று கூட சொல்லலாம். இத்தனை நாட்கள் இயந்திர வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு ஏனோ இந்த இதமான இயற்கை வளங்கள் மனதுக்கு அத்தனை நிம்மதியை கொடுத்தது.

ஒவ்வொன்றையும் ரசித்தபடி அவன் நடந்துச் செல்ல, ரித்வியோ தன்னவனை ரசித்தபடி அவனுடன் நடந்துச் சென்றாள். சிறிது தூரம் நடந்து பின் ஆட்டோ பிடித்து செம்புவத்த குளத்தை அடைந்தனர் இருவரும்.

அங்கு குளத்தை சுற்றி பார்வையிடுவதற்காக, மக்கள் நடமாட்டத்திற்காக அமைக்கப்பட்ட பாதையில் யாதவ் குளத்தின் அழகை ரசித்தவாறு நடந்துச் செல்ல, ரித்வி தான் ‘சொல்லலாமா? வேணாமா? நல்ல மூட்ல இருக்காங்க. சொன்னா கூட அடிக்க மாட்டாங்க. ஒருவேள, எல்லார் முன்னாடியும் திட்டிட்டா? அச்சோ வேணாம்.’ என்று தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்தியவாறு நடந்தாள்.

இவள் இவ்வாறு தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருக்க, யாதவ்வோ ஒரு எண்ணிற்கு பல முறை அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவன் அழைக்கும் நபர் அழைப்பை ஏற்றால் தானே!

‘ச்சே’ என்று சலித்துக்கொண்டவாறு திரும்பியவன், தன் பக்கத்தில் மூக்குக்கண்ணாடி மூக்கிலிருந்து சற்று இறங்கி இருக்க, அதை கூட சரி செய்யாது யோசனையில் நடந்து வந்தவளை பார்த்து, ‘இந்த பொண்ணு எப்போ பார்த்தாலும் இப்படி தானா?’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.

அவள் முன் அவன் சொடக்கிட, எப்போதும் போல் தூக்கத்திலிருந்து விழித்தது போல் மலங்க மலங்க ரித்வி விழிக்க, மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தவன், “நீ எப்போவும் இப்படி தானா? உன் முழியே சரியில்லையே…” என்று சந்தேகமாக சொன்னான்.

“இல்லை, அது… அது வந்து…” என்று தடுமாறிய ரித்வி மூக்குக்கண்ணாடியை சரி செய்தவாறு, “போகலாங்க.” என்று சொல்ல, அடுத்து அவர்கள் சென்றது என்னவோ மஹாதேவனின் நெல் வயலுக்கு தான்.

யாதவ் ஆட்கள் நாற்று நடுவதை பார்த்தவாறு நின்றிருக்க, இங்கு ரித்வியோ, ‘என்ன டி பண்ணிக்கிட்டு இருக்க? மொதல்ல உன் லவ்வ சொல்லு டி! அவர் வேற பராக்கு பார்த்துக்கிட்டு இருக்காரு. அப்படியே ஒரு ஃப்லோல சொல்லிரு.’ என்று தனக்குத்தானே பேசி தைரியத்தை வரவழைத்து, “என்னங்க, ஐ…” என்று சொல்ல வந்தவள், எதிரில் கண்ட காட்சியில், ‘நமக்கு சனி உச்சத்துல இருக்கு போல! சோதீக்காதீங்க டா என்னை!’ என்று உள்ளுக்குள் பொறுமினாள்.

காரணம், எதிரே ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தது ஆரனே தான். ஜீப் சத்தத்தில் அத்திசையை நோக்கிய யாதவ்வின் முகம் ஆரனை கண்டதும் இறுக, அவனோ வண்டியை நிறுத்தி யாதவ்வை முறைத்துப் பார்த்தவன், ரித்வியை பார்த்து புன்னகையுடன் ஒரு தலையசைப்பை கொடுத்தான்.

‘ஏன்? இல்லை ஏன்னு கேக்குறேன்.’ என்று உள்ளுக்குள் அலறியவள், “ஹிஹிஹி, தெரிஞ்சவங்கள பார்த்தா சிரிக்கனும்னு பெரியவங்க சொல்லிக் கொடுத்திருக்காங்க.” என்றுவிட்டு அசடுவழிய, “ஓஹோ!” என்ற யாதவ் அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்து முகத்தில் விழுந்திருந்த முடிகளை காதோரம் ஒதுக்கிவிட, விழிவிரித்து அவனை நோக்கியவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்து போனது.

‘என்ன இவர் எல்லார் முன்னாடியும் இப்படி பண்றாரு? அய்யோ! நம்மள தான் எல்லாரும் பார்க்குறாங்க.’ என்று நினைத்து ரித்வி வெட்கப்பட்டு சிரிக்க, யாதவ்வோ இதைப் பார்த்து கடுகடுவென மாறிய ஆரனின் முகத்தை தான் கவனித்துக் கொண்டிருந்தான். ரித்வியின் மீதான ஆரனின் ஈர்ப்பை அவனும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான்!

ஆனால், யாதவ்வை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஆரனுக்கு யாதவ்வின் எண்ணம் நன்றாகவே புரிந்தது. ஜீப்பை செலுத்தி இருவரின் அருகில் கொண்டு வந்து நிறுத்திய ஆரன் யாதவ்வை அழுத்தமாக பார்த்து, “என்னை கோபப்படுத்துறதா நினைச்சிக்கிட்டு அடுத்தவங்க உணர்வுகளோட விளையாடாத!” என்றுவிட்டு ரித்வியை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான்.

அவன் சொன்னதில் யாதவ்வோ போகும் அவனை முறைத்துப் பார்த்தான் என்றால், ரித்வியோ இருவரையும் மாறி மாறி புரியாது பார்த்தாள்.

அடுத்த ஒருவாரம் யாதவ் போகும் இடமெல்லாம் பின்னாலே சென்று அவனிடம் காதலை சொல்ல முயற்சித்தவளுக்கு பலன் என்னவோ பூச்சியம் தான். அவனின் கழுகுப் பார்வையில் உண்டாகும் பயமே அவனிடம் காதலை சொல்ல விடவில்லை. ஆனால், இவளின் மனதின் தடுமாற்றத்தை யாதவ் உணர்ந்தானோ இல்லையோ? மற்ற இளசுகள் நன்றாகவே கவனித்தனர்.

கூடவே, யாதவ் பற்றி வைஷ்ணவியின் அப்பா பிரபாகரன் மூலம் கேள்விப்பட்ட விடயத்தை வைத்து ரித்வியின் மனதை புரிந்து பயந்தது என்னவோ அதிபன் தான்.

இவ்வாறு ஒருவாரம் கழிந்த நிலையில் தன் மகனுக்காக வைத்த வேண்டுதலை நிறைவேற்றிய மஹாதேவன், அடுத்தநாளே ஊர் மக்களுக்கு வீட்டிலே விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்க, அன்று மொத்த ஊருமே மஹாதேவனின் வீட்டை சுற்றி தான்.

‘இன்னைக்கு எப்படியாச்சும் கார்த்திக்கிட்ட ரித்விமாவ பத்தி பேசியே ஆகனும். அவனுக்கு நம்ம ரித்விமா தான் சரியா இருப்பான்னு எனக்கு தோணுது. நீதான் சாரு எனக்கு துணையா இருக்கனும். கார்த்தி என்னை புரிஞ்சிப்பான்னு நினைக்கிறேன்.’ என்று மஹாதேவன் தனதறையில் தன் மனைவியின் புகைப்படத்திற்கு முன் நினைத்துக் கொள்ள,

‘கிருஷ்ணா! ஏன் என்னை இப்படி சோதிக்கிற? இன்னைக்காச்சும் என் லவ்வ நான் அவர்கிட்ட சொல்லியே ஆகனும். நான் அவர கட்டிக்கிட்டு பிள்ளைகுட்டிய பெத்து போடுறதும், காலம் முழுக்க கட்டை பிரம்மச்சாரியா இருக்குறதும் உன் கையில தான் இருக்கு.’ என்று தனதையில் கடவுளிடம் வேண்டியவாறு இருந்தாள் ரித்வி.

இங்கு, ‘இன்னைக்கு அப்பாக்கிட்ட இதை சொல்லியே ஆகனும். தேவையில்லாத ஆசையை மனசுல வளர்த்துக்கிட்டு இருக்காரு.’ என்று யோசித்தவாறு தனதறையில் பால்கெனி வழியாக வெளியே வெறித்தவாறு நின்றிருந்த யாதவ், அப்போதும் அந்த ஒரு எண்ணிற்கு தான் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், மறுமுனையில் தான் பதிலே இல்லை.

இங்கு வீட்டுக்கு பின்வளாகத்தில் சமைப்பற்கான ஏற்பாடுகளை பார்த்துவிட்டு குளித்து தயாராகுவதெற்கென தனதறையை நோக்கி சென்றுக் கொண்டிருந்த அதிபனை ஒரு மெல்லிய கரம் பிடித்து இழுக்க, அவனோ அதிர்ந்து விட்டான்.

அவனுக்காக பழைய பொருட்கள் வைக்கும் அறைக்குள் காத்திருந்த வைஷ்ணவி, அவன் தன்னை தாண்டி செல்லுகையில் யாரும் பார்க்காது கரம் பற்றி இழுத்துவிட்டாள். அடுத்தநொடி அவனை அவள் அணைத்திருக்க, முதலில் அதிர்ந்தவன் பின் அவளை தன்னிடமிருந்து உதறி தள்ளினான்.

அவன் தள்ளிவிட்டதில் உதட்டை குழந்தை போல் பிதுக்கி நின்ற வைஷ்ணவியின் கோலத்தில் முதலில் விழிவிரித்து பின் விறைப்பாக மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு நின்றான் அவன். அவளை உருகி உருகி காதலித்தவனால் பச்சை நிற தாவணியில் தலையில் மல்லிகை சரம் சூடி தேவதை போல் நின்றிருந்தவளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை.

அவனை உதட்டை சுழித்து பார்த்தவாறு, “என் புருஷனோட கையை பிடிச்சி தானே இழுத்தேன். என் புருஷன தானே கட்டிபிடிச்சேன். இதுக்கு எதுக்கு என்னை பிடிச்சி தள்ளி விட்டீங்க?” என்று  சொல்ல, “அந்த உரிமைய எல்லாம் எப்போவோ நீ கொன்னுட்ட.” என்று அழுத்தமாக சொன்ன அதிபன் விறுவிறுவென  வெளியேறச் சென்றான்.

கதவை திறந்துவிட்டு சற்று நின்று பின்னால் திரும்பி அவளை பார்த்தவன், “இதுக்கப்றம் புருஷன், உரிமை ன்னு கிறுக்குத்தனமா ஏதாச்சும் பண்ண… அவ்வளவு தான்.” என்று ஒற்றை விரலை ஆட்டி மிரட்டலாக சொல்ல,  அவனின் வார்த்தைகளில் உள்ளுக்குள் நொருங்கினாலும் தன்னை தானே சமாதானப்படுத்தி அவனை நெருங்கி அவனை செல்லமாக முறைத்தாள் வைஷ்ணவி.

அவளை கூர்ந்து பார்த்தவன், “என்ன டி முறைப்பு?” என்று கடுப்பாக கேட்க, எப்போதும் போல் அவனே எதிர்பாராது அவன் சட்டை கோலரை பிடித்து இழுத்தவள் அவனிதழில் தன்னிதழ் பதித்துவிட்டு அங்கிருந்து ஓட ஒரு அடி முன்னே வைக்க, எதிரிலிருந்தவர்களை பார்த்து விழிவிரித்து அதிர்ந்து நின்றாள்.

அந்த அறையில் சில பொருட்களை எடுக்க மஹாதேவன் இந்திரனை அனுப்ப, அவனோ சந்திரனையும் துணைக்கு இழுத்து வந்திருக்க, இருவருமே தாம் கண்ட காட்சியில் திகைத்து நின்றுவிட்டனர்.

இந்திரனோ கையிலிருந்த அலைப்பேசியை அதிர்ச்சியில் கீழே போட்டான் என்றால், இரட்டை சகோதரர்களை மாறி மாறி பார்த்தவாறு நின்றிருந்தனர் அதிபனும், வைஷ்ணவியும்.

‘என்ன சிம்ரன் இதெல்லாம்?’ என்று சகோதரர்கள் இருவரும் தங்கள் அத்தை மகளை ஒரு பார்வை பார்க்க, “அய்யய்யோ! பார்த்துட்டீங்களா மாம்ஸ்? எனக்கு வேற வெட்கம் வெட்கமா வருதே…” என்று சொன்னவாறு இருவருக்கும் நடுவே இருவரையும் இடித்து தள்ளியவாறு ஓடினாள் வைஷ்ணவி.

திருதிருவென விழித்த அதிபன், “இதை நீங்க பார்த்ததை…” என்று முடிக்கவில்லை, “பெரிப்ஸ்…” என்று கத்த சென்றான் இந்திரன். ஆனால், அடுத்து அதிபன் மிரட்டியதில் அவன் வாய் கப்சிப் என்று மூடிக் கொண்டது. அது வேறோன்றுமில்லை. இந்திரனை சமாளிக்க அதிபன் பயன்படுத்தும், “சுமார் ஆறுமாதங்களுக்கு முன்னால்…” என்ற வாசகமே தான்!

இந்திரனோ அதிபனை முறைத்துப் பார்க்க, “வா டா… வா டா… நமக்கு பொண்ணா இல்லை? நம்ம இரண்டு பேர கட்டிக்க கொடுத்து வைக்கல.” என்ற சந்திரன் தன் சகோதரனின் தோளில் கைப்போட்டவாறு நகர,

வராத கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்ட இந்திரன், “பந்தம் என்ன? சொந்தம் என்ன? போனால் என்ன? வந்தால் என்ன? உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லை ஓஹோய்…” என்று பாடியவாறு அங்கிருந்து செல்ல, இருபக்கமும் தலையாட்டி சிரித்துக் கொண்டான் அதிபன்.

இங்கு மொத்த ஊர் மக்களும் மஹாதேவன் வீட்டிற்கு வருகை தர, உணவை பரிமாறுவதிலிருந்து எந்த குறையுமின்றி அவர்களை கவனிக்க, வீட்டாற்கள் சுழன்று சுழன்று வேலை பார்த்தனர்.

‘சின்ன வயசுல பார்த்தது! என்ன மா வளர்ந்துட்ட?’ என்று நீட்டி முழக்கி நாடியில் கை வைத்து சொன்னவாறு பேசும் தெரிந்த, தெரியாதவர்கள் எல்லாருடனும் யாதவ் சிரித்து பேச, அவனை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருந்தாள் ரித்வி.

‘நேத்து ராத்திரி பூரா ப்ரொபோஸ் பண்ற எல்லா சினிமா சீன்ஸ்ஸையும் விடாம பார்த்தோம். ஆனாலும், அவர் பக்கத்துல போகவே கைகால் உதறுதே… எப்படி தான் சொல்றது?’ என்று தனக்குள்ளே புலம்பியவாறு ரித்வி வேலைகளை கவனிக்க, அத்தனை பேரிடமும் பேசிக் கொண்டிருந்தவனின் விழிகளோ அடிக்கடி வாசலை தான் பார்த்தது.

இவ்வாறு அன்று மதியம் மொத்த ஊருக்குமே மஹாதேவன் முழு மனதுடன் உணவை வழங்கி  தன் மகனுடன் பேசுவதற்காக ஹோலில் காத்திருக்க, ரித்வியோ இருக்கும் மொத்த கடவுள்களையும் வழங்கியவாறு தன்னவனை தேடிக் கொண்டிருந்தாள்.

மாடியிலிருந்து நகத்தை கடித்தவாறு யாதவ்வை தேடிக்கொண்டு ரித்வி வர, அவளை கவனித்த மஹாதேவன், “ரித்விமா…” என்றழைக்க, “ஆங்… மாமா…” என்று அவர் பக்கம் திரும்பியவள் அவரை கேள்வியாக நோக்கினாள்.

“தோட்டத்துல கார்த்தி இருக்கான். அழைச்சிட்டு வர்றீயா?” என்று அவர் கேட்க, முதலில் “நானா?” என்று அதிர்ந்த ரித்விக்கு ஒரு யோசனை மனதில் உதித்தது.

‘பேசாம தோட்டத்துல அவர் தனியா இருந்தா அங்க வச்சே நம்ம லவ்வ சொல்லிரலாம்.’ என்று தனக்குள்ளே திட்டம் போட்டவள், “இதோ கூட்டிட்டு வரேன் மாமா.” என்று உற்சாகமாக சொல்லிவிட்டு வெளியேறி தன்னவனை தேடி துள்ளிக் குதித்து ஓட, அவளை அறை வாசலிலிருந்து கோபமாக பார்த்தார் சகுந்தலா.

அவரும் இன்று எப்படியாவது தன் அண்ணனிடம் வைஷ்ணவி, யாதவ் திருமணம் பற்றி பேசல்லவா முடிவு செய்துள்ளார்! இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் மனதில் மணல் கோட்டை கட்டியவாறு காத்திருக்க, அத்தனை மணல் கோட்டைகளும் அடுத்த சில நிமிடங்களில் சிதறிப்போனது.

தோட்டத்திற்கு சென்றவள் அங்கு அலைப்பேசியை நோண்டியவாறு நின்றிருந்த யாதவ்வை பார்த்தாள். ஏதோ ஒரு வெட்கம், தயக்கம்!

‘கிருஷ்ணா, தைரியத்தை கொடு ப்பா!’ என்று வேண்டியவாறு அவள் அவனருகில் சென்று நிற்க, எப்போதும் போல் அந்த ஒரு எண் தன் அழைப்பை ஏற்காத எரிச்சலில் ‘ச்சே!’ என்று சலித்தவாறு திரும்பிய யாதவ், மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு பதட்டத்துடன் நின்றிருந்த ரித்வியை புரியாது பார்த்தான்.

ஒற்றை புருவத்தை உயர்த்தி “என்ன?” என்று அவன் கேட்க, அதில் அவனை அப்பட்டமாக ரசித்தவள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு, “மாமா, உங்களை கூப்பிட்டாங்க.” என்று சொல்ல, “ம்ம்…” என்றவாறு அங்கிருந்து நகர சென்றவனை பார்த்து பதறி முன்னால் ஓடி வந்து அவனை வழிமறைத்தவாறு நின்றாள் அவள்.

“நான்… நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.” என்று திக்கித்திணறி அவள் சொல்ல, அவளுடைய பேச்சு, பார்வை, நடுங்கும் கைகால்களுமே அவள் சொல்ல வருவதை அவனுக்கு உணர்த்துவது போலிருந்தன.

ஆனாலும், எதுவும் பேசாது அவளையே அழுத்தமாக பார்த்தவாறு நின்றிருந்த யாதவ்வின் விழிகள் எதிரே வந்த ஒருத்தியை பார்த்து விரிய, “அது… அது வந்து நான்… நான்… உங்கள… ஐ…” என்று காதலை சொல்ல வந்த ரித்வி, அடுத்தநொடி கண்ட காட்சியில் மனதால் சுக்கு நூறாக உடைந்துப் போனாள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!