லவ் ஆர் ஹேட் 10

லவ் ஆர் ஹேட் 10
“அது நான்… நான் உங்கள… ஐ…” என்று ரித்வி தன் காதலை சொல்ல வர, சரியாக அவளை தாண்டி ஒரு இளம்பெண், “பேபி…” என்று உற்சாக குரலில் அழைத்தவாறு வந்து யாதவ்வை அணைத்து, “மிஸ் யூ யாதவ்.” என்று சொல்ல, அவனும் பதிலுக்கு புன்னகையுடன் அணைத்து, “மீ டூ…” என்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்விக்கு தான் மனம் சுக்கு நூறாக உடைந்துப் போனது. கலங்கிய கண்களுடன் அவள் அவர்களையே பார்த்தவாறு நிற்க, அவளை கவனித்த யாதவ் அந்த இளம்பெண்ணை விலக்கி, “ஷீ இஸ் நடாஷா, மை லவ்.” என்று சொல்ல, உலகமே தலைகீழாக சுழல்வது போலிருந்தது அவளுக்கு! அத்தனை பெரிய ஏமாற்றம்
“ஹாய்…” என்ற நடாஷா மீண்டும் யாதவ்விடம் திரும்பி, “எப்படி என் சப்ரைஸ்?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டுவிட்டு, “உன் அப்பாவ மீட் பண்ணலாமா யாதவ்? கொஞ்சம் நெர்வர்ஸ் ஆ இருக்கு.” என்று சொல்ல, அவனோ நடாஷாவின் கையை இறுகப்பற்றிக் கொண்டான்.
ஆனால், கோர்த்திருந்த இருவரின் கையை பார்த்த ரித்வியின் கண்ணிலிருந்து தாங்காது ஒருசொட்டு விழிநீர் புற்தரையை தொட, அதைக் கூட கண்டுக்காது தன் காதலியை வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான் அவன்.
கண்ணீரை அழுந்த துடைத்தவள் அவர்களின் பின்னே வீட்டினுள் நுழைய, அங்கு ஒரு பெண்ணின் கையை இறுகப்பற்றி வீட்டினுள் நுழைந்து தன்முன் நிற்கும் மகனை பார்த்து அதிர்ந்தே விட்டார் மஹாதேவன். அவர் மட்டுமா?
ரித்வி யாதவ்வை அழைத்து வர சென்ற நேரமே மஹாதேவன் மொத்த குடும்பத்தையும் ஹோலுக்கு அழைத்திருக்க, மொத்த குடும்பமுமே யாதவ்வையும் நடாஷாவையும் மாறி மாறி அதிர்ந்து நோக்கினர்.
“அப்பா, இது நடாஷா.” என்று யாதவ் சொல்ல, “ஹாய் அங்கிள்.” என்று நடாஷா சொல்லவும், பதிலுக்கு புன்னகைத்து இரு கரங்களை கூப்பி, “வணக்கம்.” என்றார் மஹாதேவன்.
அவளும் அவரை போலவே, “வணக்கம்.” என்று புன்னகையுடன் சொல்லிக் காட்ட, அவளை பார்த்து புன்னகைத்த யாதவ், “அப்பா, நான்…” என்று விடயத்தை சொல்ல வர, அவனை இடைவெட்டிய மஹாதேவன், “யாதவ், நான் பேச வேண்டியதை பேசிக்கிறேன்.” என்று அழுத்தமாக சொன்னார்.
“யாதவ், உன் வாழ்க்கைக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். உனக்கு ஒரு நல்ல துணைய அமைச்சி தரனும்னு தான் அப்பா எப்போவும் நினைப்பேன்.” என்று அவர் பேசி முடிக்கவில்லை, அவரை மேலும் பேசவிடாது, “நானும் நடாஷாவும் காதலிக்கிறோம் ப்பா.” என்று யாதவ் பட்டென்று சொல்லிவிட, அவரோ முதலில் அதிர்ந்து பின் நிதானமாக தன் மகனை ஏறிட்டார்.
மற்ற நான்கு இளசுகளோ யாதவ் சொன்ன விடயத்தில் அதிர்ந்து விழித்து பின் ரித்வியை தான் நோக்கினர். யாதவ் மஹாதேவனிடம் சொன்னதை கேட்டு முட்டிக்கொண்டு நின்ற கண்ணீரை அடக்கி, கீழுதட்டை பற்களால் கடித்து அழுகையை அடக்கியவாறு நின்றிருந்த ரித்வியை பார்த்த அதிபனுக்கு அவள் மேல் பரிதாபப்படுவதா? கோபப்படுவதா என்றே தெரியவில்லை.
அவனுக்கு தான் தன் அண்ணனின் காதல் விவகாரம் அரசல் புரசலாக தெரியும் அல்லவா! அதனாலே அவள் தேவையில்லாத ஆசையை வளர்க்கிறாளோ என்று ஆரம்பத்தில் யாதவ் மீதான ரித்வியின் ஈர்ப்பு கலந்த பார்வையில் பதட்டம் இருக்கத் தான் செய்தது அவனுக்கு!
சந்திரனோ இந்திரனின் காதில், “இந்த அந்நியனுக்குள்ளேயும் ஒரு ரெமோ இருக்கத்தான் செய்றான். பாரேன்…” என்று கிசுகிசுக்க, “ஆமா ஆமா, விறைப்பா இருக்குற மாதிரி சீன் போட்டுட்டு என்னென்ன பண்றானுங்க பாரு இந்த அண்ணனும், தம்பியும்.” என்று பதிலுக்கு சொன்னான் இந்திரன்.
வைஷ்ணவியோ, ரித்வி தரையை வெறித்தவாறு நின்றிருந்த கோலத்தில் ஓடிச்சென்று அவளின் கைகளை ஆறுதலாக பற்றிக்கொண்டாள். அவளும் கொஞ்சநாட்களாக ரித்வியின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள்!
நடாஷோ புன்னகையுடன், “ஆமா அங்கிள், நானும் யாதவ் அ ரொம்ப லவ் பண்றேன். அவரும் தான். என்ன தான் லண்டன்ல பிறந்து வளர்ந்தாலும் நானும் தமிழ் பொண்ணு தான். எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும் தான். உங்ககிட்ட பேசினதும் அம்மாக்கிட்ட சொல்லிக்கிறேன். உடனே கிளம்பி வந்துருவாங்க.” என்று பேசிக்கொண்டே சென்றவள், “ஏம்மா, கொஞ்சம் நிறுத்துறியா?” என்ற சகுந்தலாவின் குரலில் பேசுவதை நிறுத்தினாள்.
“நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற. எங்கயிருந்து டி வர்றீங்க எங்க வீட்டு பசங்கள வளைச்சி போட?” என்று உச்சகட்ட கோபத்தில் திட்டியவர் மஹாதேவனிடம், “அண்ணா, என்ன நீங்க இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கீங்க? உங்களுக்கே தெரியும். வைஷ்ணவி அவ மாமன் மேல எம்புட்டு பாசம் வச்சிருக்கான்னு… சின்னவயசுல இருந்து அவன் தான் இவள கட்டிக்க போறவன்னு நான் வேற உங்க மேல இருந்த நம்பிக்கையில அவ மனசுல ஆசைய வளர்த்து விட்டுட்டேன். இப்போ எவளோ ஒருத்திய கூட்டிட்டு வந்து இவன் காதலிக்கிறான்னா என்ன அநியாயமா இருக்கு? என் பொண்ணுக்கு ஒரு நியாயத்தை சொல்லு அண்ணா! என் அண்ணன் பையனுக்கு தான் நான் என் பொண்ண கட்டிக் கொடுப்பேன்.” என்று பேசிக் கொண்டே போக,
சுற்றி இருந்தவர்களோ அவரின் பேச்சில் எரிச்சல் பட்டார்கள் என்றால், வைஷ்ணவியோ, “முருகா!” என்று வாய்விட்டே புலம்பினாள்.
‘கம்பி கட்டுற கதையெல்லாம் எடுத்து விடுறாங்களே…’ என்று மானசீகமாக புலம்பிய இந்திரன் ‘அவளுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை’ என்பது போல் நின்றிருந்த அதிபனை கேலியாக பார்த்தவாறு, “ஏன் அத்தை, எங்களையெல்லாம் பார்த்தா உங்க அண்ணன் பசங்க மாதிரி தெரியல்லையா?” என்று கேட்க, அவரோ அவனை முறைத்து, “போடா பொறுக்கிப் பயலே!” என்று திட்டிவிட, ‘இந்த அசிங்கம் உனக்கு தேவையா?’ என்ற ரீதியில் தன் சகோதரனை பார்த்தான் சந்திரன்.
சகுந்தலாவின் பேச்சில் நடாஷாவோ அவரை அதிர்ந்து பார்த்துவிட்டு யாதவ்வை முறைக்க, கடுப்பானவன், “அத்தை, உங்க மேல எனக்கு ரொம்ப பெரிய மரியாதை இருக்கு. அதை நீங்களே கெடுத்துராதீங்க.” என்று அழுத்தமாக சொல்ல, அதற்கு மேல் பேச வந்த தன் தங்கையை கைநீட்டி தடுத்தார் மஹாதேவன்.
நடாஷாவை நிதானமாக ஏறிட்டவர், “நீ ரொம்ப அழகா இருக்க மா, நல்ல பேசுற, நல்ல படிச்சிருக்க, நல்ல பொண்ணா தெரியுற. ஆனா, என் பையனுக்கு பொருத்தமான பொண்ணு நீ இல்லை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை இருக்கு. என் பையனுக்கு ரித்விமாவ தவிர யாரும் சரியா இருக்க மாட்டாங்க.” என்று அழுத்தமாக சொல்ல, இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை ரித்வி.
அவள் மஹாதேவனை அதிர்ந்து நோக்க, சட்டென்று ரித்வியை திரும்பிப் பார்த்த யாதவ் அவளை ஏகத்துக்கும் முறைத்துத் தள்ள, சகுந்தலாவோ, “நான் அப்போவே நினைச்சேன்.” என்று நெஞ்சிலே கை வைத்துக்கொண்டார்.
“உங்க முடிவுல எனக்கு சம்மதமில்லை. நான் காதலிக்கிறது நடாஷாவ தான்.” என்று யாதவ் அழுத்தமாக சொல்ல, எழுந்து நின்றவர், “நான் எப்போவும் உனக்கு நல்லதை தான் யோசிப்பேன். இது இப்போ உனக்கு புரியாது.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட, “ஐ அம் டன்!” என்றவாறு கோபமாக எழுந்து நின்றாள் நடாஷா.
“இதுவரைக்கும் நான் இப்படி அவமானப்பட்டதே இல்லை யாதவ். அப்பாவோட சம்மதம் வேணும், கல்யாணம் பண்ணாம சேர்ந்து வாழ முடியாதுன்னு நீ சொன்னதுக்காக தான் உனக்காக இங்க வந்தேன். ஆனா, ச்சே!” என்று கோபமாக சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென செல்ல போக, “நடாஷா லிசன்!” என்றவாறு யாதவ் அவள் பின்னாலே சென்றான்.
ரித்வியை தாண்டி செல்ல போனவள், சட்டென்று நின்று அவளை மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு, “போயும் போயும் இந்த பொண்ண விட நான் எந்த விதத்துல குறைஞ்சிட்டேன்?” என்று கோபமாக உரைத்துவிட்டு யாதவ் பற்றியிருந்த கையையும் உதறிவிட்டு வெளியேறியிருக்க, “நடாஷா…” என்றழைத்தவாறு அப்படியே நின்றவனின் காதில் சகுந்தலா சொன்ன வார்த்தைகள் நன்றாகவே காதில் விழுந்தன.
“இருக்க இடம் கொடுத்தா, படுக்க பாயும் கேக்குறா.” என்று சகுந்தலா நீட்டி முழக்கி கடுப்பாக சொல்ல, ரித்வியை உக்கிரமாக பார்த்தவன், “இதுக்கு தான் மேடம் ஆசை பட்டீங்களோ? நீ தோட்டத்துல வச்சி திக்கித் திணறும் போதே புரிஞ்சிக்கிட்டேன். இப்போ சந்தோஷமா? இதுக்கு தான் அன்னைக்கே அதிபாகிட்ட சொன்னேன். இந்த மாதிரி ஆளுங்கள ஆசிரமத்துல சேர்க்காம வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றீங்கன்னு…” என்று வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.
ரித்விவோ கலங்கிய விழிகளுடன் அதிர்ந்து நோக்க, “யாதவ் என்ன பேசுற? ரித்வி அந்த மாதிரி…” என்று ஆண்டாள் பேச வரவும், அவரை இடைவெட்டினார் சகுந்தலா.
“நிறுத்துங்க அண்ணி! பெரிய கைக்காரி இவ, எப்படி என் அண்ணனை மயக்கி வச்சிருக்கா. அப்பன், ஆத்தா இல்லைன்னு வீட்ல இடம் கொடுத்தா மகாராணியோட திட்டத்தை பாருங்களேன்! ஏன் டி இந்த எண்ணத்துல தான் இத்தனை நாளா வீட்டுல சுத்திக்கிட்டு இருந்தியா? அப்படி என்ன டி அண்ணன்கிட்ட சொன்ன? நீதான் சரியா இருப்பன்னு சொல்றாரு.” என்று சகுந்தலா பேசிக்கொண்டே போக, “போதும் அத்தை, அப்பா இப்படி சொல்வாருன்னு ரித்விக்கே தெரியாது.” என்று தன் தோழிக்காக பேசினான் அதிபன்.
ரித்வியோ அழுகையை அடக்கிக்கொண்டு நின்றிருக்க, அதிபன் ரித்விக்காக பேசியதும் போலியான ஆச்சரியத்தில் இருவரையும் மாறி மாறி புருவத்தை உயர்த்திப் பார்த்த யாதவ், “நல்லாவே கைக்குள்ள போட்டு வச்சிருக்க. நீ எனக்கு பொருத்தமா?” என்று ஏளனமாக கேட்டுவிட்டுச் செல்ல, இளசுகளோ போகும் யாதவ்வை கோபமாக முறைத்துப் பார்த்தனர்.
“ரித்வி…” என்று அதிபன் பேச வர, அவனை கைநீட்டி தடுத்தவள் கன்னத்தினூடே வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்து அடுத்து சென்று நின்றது என்னவோ மஹாதேவனின் முன்னால் தான்.
“மாமா, நீங்க சொன்னது ரொம்ப தப்பு! நான் எப்படி…” என்று ரித்வி பேச வர, “உன்னை விட என் பையன யாராலயும் நல்ல பார்த்துக்க முடியாது ரித்விமா. அவன் இழந்த அவன் அம்மாவோட பாசத்தை உன்னால தான் கொடுக்க முடியும்.” என்று தழுதழுத்த குரலில் சொன்னார் மஹாதேவன்.
அவரை வேதனை நிறைந்த பார்வையுடன் ஏறிட்டவள், “மாமா, உங்க பையனுக்கு நான் பொருத்தமானவ கிடையாது. அதுவும், அவருக்கு அந்த பொண்ண தான் பிடிச்சிருக்கு.” என்று சொல்ல, ‘இல்லை’ என்று அழுத்தமாக தலையாட்டியவர், “எனக்கு நீதான் டா மருமகள். தயவு செஞ்சி இந்த மாமா சொல்றதை கேளு ரித்விமா!” என்று இறைஞ்சும் குரலில் கேட்டார்.
ஒரு பெருமூச்சுவிட்டவள், “எப்போவுமே நான் உங்க மருமகள் தான். அது உங்க பையன கல்யாணம் பண்ணா தான்னு இல்லை. எப்போவும் உங்களோட செல்ல மருமகள். ஆனா, அவர் அந்த பொண்ண காதலிக்கிறாரு. அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழட்டும். அப்படி ஒரு சூழல் அ வாழ்ந்து அப்பாவோட சம்மதத்தை கேட்டு கல்யாணம் பண்ணிட்டு சேர்ந்து வாழுவோம்னு எத்தனை பசங்க யோசிப்பாங்க? ஆனா, உங்க பையன் யோசிச்சிருக்காரு. ப்ளீஸ் மாமா, எனக்காக அவரோட காதலை ஏத்துக்கோங்க!” என்று ரித்வி கெஞ்சுதலாக கேட்க,
“ஆனா, நீ…” என்று மஹாதேவன் அப்போதும் பேச வர, “ப்ளீஸ்…” என்று அவரின் கைகளை பற்றி தன் காதலனின் காதலுக்காக கெஞ்சினாள் ரித்வி.
வேறுவழியில்லாது சம்மதமாக அவர் தலையசைக்க, அடுத்தநொடி மஹாதேவனின் கன்னத்தை கிள்ளியவள், “தேங்க் யூ மாமா… கூடிய சீக்கிரமா நம்ம வீட்டுல டும் டும் டும் தான்.” என்று சிரிப்புடன் சொல்லிவிட்டு வெளிறினாள். ஆனால், அறையிலிந்து வெளியேறியவளுக்கு இதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரும் வெளியானது. இதயத்தை கசக்கி பிழியும் காதலின் வலியை முதன்முறை அனுபவித்தாள் அவள்.
இங்கு தனதறையில் யாதவ்வோ சிகரெட்டை பிடித்தவாறு ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு புகையை ஊதித்தள்ள, கதவு தட்டப்படும் சத்தத்தில் எரிச்சலாக சென்று கதவை திறந்தான்.
எதிரில் தன் அப்பாவை பார்த்தவன் எதுவும் பேசாது திரும்பிச்செல்ல, உள்ளே வந்தவருக்கு அறையில் வீசிய மணமே மகனின் செயலை உணர்த்தியது.
தயக்கத்துடன், “சிகரெட் பிடிக்குற பழக்கம் இருக்கா கார்த்தி?” என்று மஹாதேவன் கேட்க, “சோரி…” என்று மட்டும் சொன்னவன் வேறெங்கோ வெறித்தவாறு நின்றிருந்தான். அவன் செயலில் கோபம் உண்டானாலும் இதையும் பேசி பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை அவர்.
பெருமூச்சுவிட்டுக் கொண்டவர், “கார்த்தி, நான் எது பண்ணாலும் உன் நல்லதுக்குன்னு நினைச்சி தான்…” என்று ஆரம்பிக்க, “எல்லாமே நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது. பத்து வருஷத்துக்கு முன்னாடி இதே வார்த்தைய சொல்லி தான் என்னை அனுப்பி விட்டீங்க. இப்போவும்…” என்று அவரை இடைவெட்டி கோபமாக சொன்னான் யாதவ்.
“எங்க உன் அம்மாவ இழந்தது போல உன்னையும் இழந்துருவேனோன்னு பயத்துல தான் அன்னைக்கு இங்கயிருந்து உன்னை அனுப்பினேன். ஆனா, உன்னை நினைக்காத நாளில்லை கார்த்தி. இப்போ கூட நீ இழந்த உன் அம்மா பாசத்தை…” என்று அவர் முடிக்கவில்லை, “போதும் ப்பா, எனக்கு என் அம்மா நினைப்பே வேணாம். எப்போவும் உங்களால என்னை புரிஞ்சிக்க முடியாது.” என்று கத்தினான் அவன்.
அவனது வார்த்தையில் காயப்பட்டாலும் தன்னை சமாளித்துக்கொண்டு, “இப்போ புரிஞ்சிக்கிட்டேன் கார்த்தி, கூடிய சீக்கிரம் அந்த பொண்ணோட அம்மாவ வந்து பேச சொல்லு! கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம்.” என்று சொல்ல, அவனோ அவரை அதிர்ந்து பார்த்தான்.
அவரோ புன்னகைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, ஏனோ அவர் சம்மதித்து சென்றது கூட அவன் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை.
அவனுடைய இந்த கோபமும் தன் அப்பா காதலுக்கு மறுப்பு சொன்னதற்காக அல்ல, தன் வார்த்தைக்கு மறுப்பு சொன்னதற்காக என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் போல் தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டவன் அடுத்து அழைத்தது நடாஷாவுக்கு தான்.
–ஷேஹா ஸகி