லவ் ஆர் ஹேட் 12 (01)

லவ் ஆர் ஹேட் 12 (01)
அடுத்தநாள்,
மதிய உணவுக்கு முன் அவசர அவசரமாக தயாராகி வீட்டிலிருந்து வெளியேறியவள், பஸ்ஸில் பயணித்து ஒரு இடத்தில் இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள். சரியாக அவள் எதிர்ப்பார்த்திருந்தவன் எதிரே அவனுடைய வண்டியில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.
‘தன்னை யாரும் பார்த்துவிடுவார்களோ?’ என்ற பயம் வேறு அவளுக்கு! தனக்குத் தானே தைரியத்தை வரவழைத்து யாரும் பார்க்காதவாறு அந்த வண்டி இருந்த திசையை நோக்கி ஓடிய ரித்வி, வேகமாக கதவை திறந்து உள்ளே அமர்ந்து ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட, அடுத்தநொடி அந்த கார் ஒரு பெரிய வீட்டின் முன் போய் நின்றது.
ரித்வியின் வருகையே அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது அந்த வீட்டாற்களுக்கு. மதிய உணவே தடல்புடலாக தயாரிக்கப்பட்டிருக்க, அந்த குடும்பத்துடன் சந்தோஷமாக சேர்ந்து உண்டு, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளுக்கு மனம் ஒரு ஓரத்தில் குற்றவுணர்ச்சியில் குறுகுறுக்க தான் செய்தது.
நேரம் வேகமாக செல்வதை கூட மறந்து அவர்களுடன் நேரத்தை கழித்தவள், அப்போது தான் எதேர்ச்சையாக நேரத்தை பார்த்தாள். அது மாலை ஆறு என காட்ட, தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.
அப்போது தான் இங்கு வந்தவுடன் எங்கோ தூர போட்டிருந்த தன் தொலைப்பேசியை தேடி எடுத்த ரித்வி, திரையிலிருந்த பல தவறவிடப்பட்ட அழைப்புக்களை பார்த்து பதறியே விட்டாள்.
அவசர அவசரமாக தயாராகி அங்கிருந்து வெளியேற எத்தனித்தவள் அவர்களின் கொஞ்சல், கெஞ்சல்களை எல்லாம் சமாளித்து வெளியேறவே மணி ஏழை தொட்டுவிட்டது எனலாம்.
அப்போதும் தனியாக செல்ல இருந்தவளை போக விடாது துணைக்கு வருவதாக சொன்னவர்களை பார்த்து பதறிய ரித்வி, ‘மாமாவுக்கு தெரிஞ்சவங்க பார்த்தா பிரச்சினை ஆகிரும்.’ என்று மறுத்துவிட்டு தனியாகவே அடம்பிடித்து ஆட்டோவில் வீட்டிற்கு செல்ல, வண்டியில் அமர்ந்ததும் தான் ‘ஹப்பாடா!’ என்றிருந்தது.
ஆனாலும், அன்று அவளுக்கு நேரமே சரியில்லை போலும்! சரியாக அவளுக்கு அதிபனிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்று காதில் வைத்தவள் எதிரிலிருப்பவனை பேசவிடாது, “வர்றேன். வர்றேன். வந்துக்கிட்டு தான் இருக்கேன். ஆன் த வேய் அதி…” என்று படபடவென பேச, அவனுக்கோ கோபம் உச்சத்தை தொட்டது.
“மொதல்ல எங்க இருக்கன்னு சொல்லு! சும்மாவே ஆறு மணிக்கு அப்றம் நம்ம ஊரே இருட்டிரும். இந்த நேரம் தான் உனக்கு வீட்டு நியாபகம் வந்திச்சா? இன்னும் நேரம் கழிச்சி வந்திருக்க வேண்டியது தானே?” என்று சரமாரியாக திட்டியவன், “இப்போ இருக்குற இடத்தை சொல்லு! நான் வர்றேன்.” என்று சொல்ல, ‘ஸப்பாஹ்…’ என்றிருந்தது ரித்விக்கு.
“அய்யோ அதி! நான் வீட்டுக்கு தான் வந்துக்கிட்டு இருக்கேன். ஒன்னும் பிரச்சினை இல்லை. இன்னும் பத்து நிமிஷத்துல நான் வீட்டுல இருப்பேன்.” என்று உறுதியாக சொன்னவள் அடுத்த பத்து நிமிடத்தில் நடக்கப்போகும் விபரீதத்தை அறியவில்லை.
இவள் அதிபனை சமாளித்து அழைப்பை துண்டித்த அடுத்த சில நொடிகளில் சென்றுக்கொண்டிருந்த ஆட்டோ சட்டென்று நிற்க, அவளுக்கோ பக்கென்றானது.
அந்த ஆட்டோ ஓட்டுனரோ, “கொஞ்சம் இரும்மா, ஆட்டோ போக மாட்டேங்குது. என்ன பிரச்சினைன்னு பார்க்குறேன்.” என்றுவிட்டு அவளை விஷம பார்வை பார்த்தவாறு வண்டியிலிருந்து இறங்க, அவளுக்கோ மனம் நடக்க இருக்கும் விபரீதத்தை எச்சரிக்கை செய்ய ஆரம்பித்ததோ என்னவோ!
ஏதோ தவறாக தோன்ற, ஆட்டோவிலிருந்து இறங்கி இருக்கும் இடத்தை சுற்றி முற்றி பார்த்தவளுக்கு திக்கென்று தான் இருந்தது. அது அவளுடைய வீட்டிற்கு செல்வதற்கான பாதை தான். ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாது வெறிச்சோடி போயிருந்தது அந்த பகுதி.
அதுவும் இயற்கை வளங்கள் நிறைந்த அந்த இடத்தில் அதிக விளக்குகளும் இல்லை. மரங்கள் சூழ்ந்து கும்மிருட்டாக இருக்கும் பகுதியில் தான் தனியாக நிற்பதை உணர்ந்து உள்ளுக்குள் படபடவென்று தான் இருந்தது ரித்விக்கு.
அதேநேரம் சரியாக சில நாட்களுக்கு முன் வெளியூரிலிருந்து அவர்களிள் கிராமத்திற்கு தங்க வந்திருந்த மூன்று இளைஞர்கள் ஆட்டோ நிற்பதை பார்த்து அந்த இடத்தில் தங்களுடைய வண்டியை நிறுத்தினர். அது வண்டியை பார்த்தா? இல்லை இறங்கி வீதியோரமாக நின்றிருந்த ரித்வியை பார்த்தா? என்று அவர்களுக்கு தான் தெரியும்.
தன் வண்டியிலிருந்து இறங்கி வண்டியை சரிசெய்வது போல் பாவனை செய்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் பேசியவர்களின் பார்வையோ பதட்டத்தில் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு நின்றிருந்த ரித்வியின் மேல் தான் படிந்தது.
அந்த பார்வையை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் கிளி பிடிக்கத்தான் செய்தது. அதென்ன சாதாரண பார்வையா? அப்பப்பா… துகிலுரிக்கும் பார்வையல்லவா அது!
‘அதிக்கு கூப்பிடுவோமா? ஒருவேள, நான் எங்க இருந்து வர்றேன்னு தெரிஞ்சா திட்டுவானே… இல்லை இல்லை அவன் திட்டினாலும் பரவாயில்லை. இவனுங்க பார்வையே சரியில்லையே… ஏதாச்சும் சொல்லி சமாளிக்கலாம்.’ என்று நினைத்தவள் அடுத்து அதிபனுக்கு வேகமாக அழைத்தாள்.
அவன் அழைப்பை ஏற்றதும், “அதி, ஆட்டோ ரிபேயர் ஆகிருச்சி. நீ சீக்கிரம் வா!” என்று இருக்கும் இடத்தை சொல்லி, அவன் திட்டுக்களை கேட்க முடியாது அழைப்பை துண்டித்துவிட்டு நிமிர்ந்த ரித்வி, அந்த இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் ரித்வியை கைகாட்டி பேசுவதை கவனித்து பதறியேவிட்டாள்.
‘இதற்கு மேல் இங்கு நின்றால் ஆபத்து!’ என்று மூளை எச்சரிக்கை செய்ய, தாவணி முந்தானையால் முகத்தில் பூத்திருந்த வியர்வைதுளிகளை துடைத்தவாறு அந்த இடத்திலிருந்து விறுவிறுவென சென்றாள் அவள். ஆனால், பின்னால் கேட்ட தொடர்ந்து வரும் காலடி சத்தத்தில் மூச்சே நின்றுவிட்டது ரித்விக்கு.
நேரம் ஆக ஆக அந்த இடம் மேலும் இருட்டிக்கொண்டு போக, உதவிக்கு ஆட்களை தேடிய அவளின் கண்களுக்கு ஒருத்தரும் தென்படவில்லை.
‘கிருஷ்ணா என்னை காப்பாத்து!’ என்று கடவுளை நாடியவாறு வேகநடையுடன் சென்றவள் பதட்டத்தில் தாவணி பாவாடை தடுக்கி கீழே விழப் போக, அவளின் மூக்குக்கண்ணாடியோடு சேர்த்து கையிலிருந்த அலைப்பேசியும் கீழே விழுந்தது.
“அய்யோ!” என்று பதறியவாறு அதை எடுக்கச் சென்றவள், “ஏய் குட்டி!” என்ற குரலில் வேகமாக தன்னை நெருங்கிக் கொண்டிருந்த காலடிகளின் சத்தத்தில் திடுக்கிட்டு அசையாது நின்றாள். சற்று நேரம் பயத்தில் வேலை நிறுத்தம் செய்திருந்த மூளையை முயன்று தைரியமூட்டி மெதுவாக அவள் பின்னால் திரும்பிப் பார்க்க, அந்த நால்வருமே அவளை தான் விஷம புன்னகையுடன் பார்த்தவாறு நெருங்கிக் கொண்டிருந்தனர்.
அதிர்ந்தவள் தனது பொருட்களை கூட எடுக்காது இரண்டடி பயந்து போய் பின்னால் நகர்ந்து அங்கிருந்து ஓட ஆரம்பிக்க, அவர்களின் வேகத்திற்கு அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை போலும்!
பின்னால் வந்த ஒருவன் அவளின் தலைமுடியை பிடித்து இழுக்க, “ஆஆ…” என்று வலியில் கத்திய ரித்வி, “ப்ளீஸ் என்னை விடுங்கண்ணா!” என்று அழுதவாறு கெஞ்ச ஆரம்பித்தாள். அந்த காமுகர்களோ அவள் அழுவதை கூட சிரித்தவாறு காமப் பார்வையுடன் தான் நோக்கினர்.
அவளின் முகத்தை தவிர மற்ற அங்கங்களில் அவர்கள் பார்வையை மேய விட, அவளுக்கோ அத்தனை அருவருப்பு! அதுவும், அவர்களின் சிவந்த கண்களே காட்டியது, அவர்கள் போதையின் பிடியில் உள்ளனர் என்று… ஆனால், அவளுடைய தந்தை வயதுடைய ஆட்டோ ஓட்டுனருக்கோ வயதுக்கு மீறிய காம உணர்வு!
ரித்வியோ அவர்களிடமிருந்து விடுபட முயன்று தோற்றுப்போய் கத்த போக, ஒருவன் அவளின் வாயை பொத்தினான் என்றால், இன்னொருவன் அவளின் தலைமுடியை கொத்தாக பற்றியிருந்தான். யாரும் இல்லாத பாதை அவர்களுக்கு வசதியாகிப்போக, அவர்களின் கெட்ட எண்ணத்திற்கு அத்தனையும் சாதகமாகிப் போனது.
ரித்வி தன்னை காப்பாற்றிக் கொள்ள தன் வாயை பொத்தியிருந்தவனின் கையை கடித்துவிட, கோபத்தில் அவன் அறைந்த அறையில் தரையிலே மயங்கி சரிந்துவிட்டாள் அவள்.
அடுத்தநொடி சற்றும் தாமதிக்காது அவளை ஒருபக்கம் இருந்த மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் தூக்கிச் சென்ற அந்த மிருகங்கள் தரையில் அவளை சரித்து தங்கள் வேட்டையை ஆரம்பிக்க, அதற்கு இரையாகிப் போனாள் அந்த பேதை.
ஒவ்வொரு பெண்ணும் தம் வாழ்க்கையில் எதிலிருந்து தம்மை பாதுகாக்க துடிப்பார்களோ? அந்த வலியை அன்று அனுபவித்தாள் ரித்வி. ஒவ்வொருவரும் மாறி மாறி தங்களின் பசிக்கு அவளை இரையாக்க, உண்டான வலியில் மயக்கத்திலிருந்து சற்று தெளிந்தவளுக்கு, “ஆஆ… அம்மா…” என்று வலியிலும் வேதனையிலும் கண்ணீர் வடிக்கத் தான் முடிந்தது.
அந்த நேரம் ஒன்றை உணர்ந்தாள் அவள்! தனக்கே இத்தனை வலி என்றால், சிறுகுழந்தைகள் இந்த மாதிரியான காமுகர்களிடம் எத்தகைய வலியை அனுபவித்திருப்பார்கள்? அந்த பிஞ்சு குழந்தைகள் எப்படி துடித்திருக்கும்? என்று…
இதுவரை தொலைக்காட்சி செய்திகளிலும், திரைப்படங்களிலும், பத்திரிகைகளிலுமே பெண்கள் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளை அறிந்திருந்தவள் இன்று அந்த கொடுமை தனக்கே நேரும் என்று சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டாள்.
ஏன் நாமளும் கூட அது தங்களுக்கும் நேரலாம் என்பதை உணராது அந்த செய்திகளை சாதாரணமாக தானே கடந்து செல்கிறோம்?
உணர்ச்சியின் பிடியில் அந்த ராட்சசன்கள் அவளின் உடலில் உண்டாக்கிய பற்தடங்கள், நகக்கீறல்கள், காயங்கள் அவளுக்கு அத்தனை வலியை கொடுக்க, கஷ்டப்பட்டு கையை தூக்கி அவர்களை தள்ள முயன்றவளின் முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகித் தான் போனது.
எத்தனை கொடுமையான வலி! பாதி மயக்கத்தில், “அம்மா… அம்மா என்னை காப்பாத்தும்மா! வலிக்குதும்மா, முடியல. அப்பா எனக்கு ரொம்ப வலிக்குதுப்பா.” என்று முணங்கியவள் கஷ்டப்பட்டு வார்த்தைகளை கோர்த்து, “அண்ணா, என்னை விடுங்கண்ணா! வலிக்குதுண்ணா. ப்ளீஸ் என்னை விட்டுருங்க. கெஞ்சி கேக்குறேன்.” என்று கெஞ்சி கதறியழ, அந்த வார்த்தைகள் அவர்களிடத்தில் காற்றில் கரைந்த கற்பூரம் தான்.
அதேசமயம், தன் வண்டியை எடுத்துக்கொண்டு ரித்வி சொன்ன இடத்திற்கு வந்த அதிபன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு வாகனங்களை சந்தேகமாக பார்த்துவிட்டு சுற்றி முற்றி ரித்வியை தான் தேடினான். ஆனால், அவளின் நிலை இவனுக்கு தெரிந்தால் தானே!
“ஆட்டோவ இங்க நிறுத்தியிருக்காங்க. இவ எங்க போனா? ஒரு இடத்துல நிக்கிறது இல்லை. நம்ம பேச்சை கேக்க கூடாதுன்னு முடிவுல இருக்கா போல!” என்று வாய்விட்டே திட்டியவாறு அதிபன் அவளுக்கு அழைக்க, அவளுடைய அலைப்பேசியோ அனாதையாக பாதையின் ஓரத்தில் அல்லவா விழுந்து கிடந்திருந்தது.
யாருமில்லா அந்த இடத்தில் நின்றவாறு அவளிள் எண்ணிற்கு தொடர்ந்து அழைத்தவனுக்கு எதிரில் பதிலில்லாது போகவும் பயம் தொற்றிக்கொண்டது.
‘ரித்வி… ரித்விக்கு என்னாச்சு? இங்க தானே வெயிட் பண்றேன்னு சொன்னா. எங்க அவ?’ என்று சுற்றி முற்றி அந்த பாதையில் ரித்வியை தேடியவாறு ஓடியவனுக்கு ஒவ்வொரு நொடியும் திக்திக் நொடிகள் தான்.
‘ஒருதடவையாவது அழைப்பை ஏற்க மாட்டாளா?’ என்ற எதிர்ப்பார்ப்பில் அவன் மீண்டு மீண்டும் அவளின் எண்ணிற்கு தொடர்புக்கொள்ள, ஒரு குறிப்பிட்ட தூரம் வரை சென்றதும் அவன் காதுகளில் ஒலித்தது அந்த பிரத்யேகமாக பாடல். அது ரித்வி அலைப்பேசி அழைப்புகளுக்கென தெரிவு செய்திருந்த பாடல்.
சட்டென்று நின்றவன், “ரித்வி…” என்று கத்தியவாறு அங்குமிங்கும் தேட, அவன் நின்ற இடத்திலிருந்து சற்று துரமாக ஏதோ வெளிச்சம் தெரியவும் அதை நோக்கி சென்றவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
கைகால்கள் நடுங்க, தரையிலிருந்த மூக்குக்கண்ணாடியையும், அலைப்பேசியையும் கையிலெடுத்த அதிபன், ‘என்னாச்சு என் ரித்விமாவுக்கு? கடவுளே! அவ நல்லா தானே இருக்கா? நல்லா தான் இருக்கனும். அப்போ இதெல்லாம் ஏன் இங்க கிடக்குது? அய்யோ!’ என்று கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்க தலையில் கை வைத்தவாறு கண்களை சுழலவிட்டு தேடினான்.
‘ஒருதடவை என் முன்னாடி வந்துரு ரித்வி.’ என்று வேண்டியவாறு, “ரித்வி… ரித்வி…” என்று அடிக்குரலில் அவன் கத்த, இங்கு காமுகர்களுக்கு இரையாகிக் கொண்டிருந்த ரித்விக்கு அவன் குரல் கேட்கவும், “அதி…” என்று மெதுவாக முணுமுணுத்து, “அதி சீக்கிரம் வா! வலிக்குது டா. ப்ளீஸ் என்னை காப்பாத்து!” என்று கண்ணீர் வடித்தாள்.
அதிபனின் கத்தல் அந்த ராட்சசர்களின் காதிலும் விழுந்ததோ என்னவோ! இத்தனை நேரம் இருந்த உணர்வு வடிந்து போக, விழுந்தடித்துக்கொண்டு எழுந்தவர்கள் தங்கள் ஆடைகளை அரைகுறையாக சரிசெய்தவாறு ஓட, ரித்விக்கோ கதறியழக் கூட தெம்பில்லை.
அதிபனோ அந்த பாதையில் ரித்வியின் பொருட்களை கையில் வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது? ஏது செய்வது? என்று கூட தெரியாது சிலையாக அதே இடத்தில் நிற்க, சட்டென பின்னால் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.
அங்கு அதிபனை பார்த்து அதிர்ந்து கால் பிடறியில் பட அந்த நால்வரும் ஓட, “ஏய்… நில்லுங்கடா!” என்று கத்தியவாறு அவர்களின் பின்னால் சென்றவனுக்கு மூளை ஏதோ ஒன்றை உணர்த்த, சட்டென்று நின்றவன் அவர்கள் வந்த திசையை நோக்கினான்.
ஒவ்வொரு அடியாக மெதுமெதுவாக எடுத்து வைத்து முன்னே சென்றவனுக்கு இதயம் வேகமாக துடித்தது. “ரித்விமா…” என்று அவனிதழ்கள் மெதுவாக முணுமுணுக்க, சில அடிகள் நடந்தவனின் காலில் ஏதோ சிக்கவும் கீழே குனிந்து பார்த்தவனுக்கு உலகமே தலைகீழாக சுழல்வது போன்ற உணர்வு!
அது ரித்வியுடைய தாவணி முந்தானை. அதை அதிர்ந்து பார்த்துவிட்டு நிமிர்ந்து பார்த்தவனுக்கு தரையில் கிடந்த உருவம் தென்பட, கூர்ந்து பார்த்தவனுடைய விழிகள் திகைத்து விரிந்தன.
அடுத்தகணம், “ரித்வி…” என்று பெருங்குரலெடுத்து கத்தியவாறு அப்படியே மண்டியிட்டு அமர்ந்து தலையில் கை வைத்து கதறியவன், தன் தோழியை சற்றும் இப்படி ஒரு நிலையில் எதிர்ப்பார்த்திருக்க மாட்டான். அவள் இருந்த கோலத்தை பார்த்து அவனுக்கு தாங்க முடியாத வேதனை!
“கடவுளே…” என்று கதறியவாறு தன் சட்டையை கழற்றிக்கொண்டு அவளை நெருங்கிய அதிபன், அதை அவள் மேல் போர்த்திவிட்டு, “ரித்வி… ரித்விமா…” என்று அழுதவாறு தன் தோழியை தன் மடியில் கிடத்தினான்.
அவனுக்கோ மூளை செயலிழந்துவிட்ட உணர்வு! “அய்யோ கடவுளே! நான் என்ன பண்ணுவேன்? ரித்விமா சோரி டி… நான் உன்னை தனியா விட்டிருக்க கூடாது. சோரி… சோரி…” என்ற மன்னிப்பு வார்த்தை மட்டுமே அவனுடைய நாவிலிருந்து கேவலுடன் வந்துக் கொண்டிருந்தது.
மெதுவாக “அதி…” என்றவாறு கண்களை திறந்த ரித்வி அவனை பார்த்ததும், “என்னால தாங்க முடியல அதி. வலிக்குது. என்னை கொன்னு போட்டுரு டா.” என்று கதறியழ, அந்த வார்த்தைகளில் உயிருடன் மரித்துவிட்டான் அவன்.
–ஷேஹா ஸகி