லவ் ஆர் ஹேட் 12(02)

லவ் ஆர் ஹேட் 12(02)
அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முன்னே மஹாதேவனின் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, சிகிச்சை அறையில் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது ரித்விக்கு.
வெளியே காத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலை!
‘நான் தான் ரித்வியை சரியாக கவனிக்கவில்லையோ! என் பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டேனோ? என்னால் தான் எல்லாமே… இளமாறா என்னை மன்னிக்க கூட மாட்டானே…’ என்று தானே ரித்வியின் இந்நிலைக்கு காரணம் என்று குற்றவுணர்ச்சியில் மஹாதேவன் மருகிக்கொண்டிருக்க, அதிபனோ இடிந்துப் போய் அமர்ந்திருந்தான்.
அவன் வைத்தியன் தான். ஆனாலும் அவளுக்கு சிகிச்சை நடத்த முடியாதளவு கைகால்களில் ஒருவித நடுக்கம்!
‘ரித்வி சோரி டா, உன்னை தனியா விட்டிருக்க கூடாது. சோரிடி… சோரி…’ மானசீகமாக தன் தோழியிடம் மன்னிப்பு கேட்டவாறு தலையில் கைவைத்து அமர்ந்த நிலையில் அதிபன் இருக்க, கண்களில் கண்ணீர் ஆறாக ஓட சுவரில் சாய்ந்து நின்றிருந்தனர் இரட்டை சகோதரர்கள்.
ஏன் சகுந்தலாவுக்கு கூட, ‘என்ன இருந்தாலும் இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது.’ என்ற பரிதாபம் ரித்வியின் மேல் தோன்ற, வைஷ்ணவியை சொல்லவா வேண்டும்? தன் அம்மா மடியில் சாய்ந்து ஓவென்று விடாது அழுகை தான்.
ஆண்டாளும், சகாதேவனும் கூட தாம் பெறாத பிள்ளைக்கு நடந்த கொடுமையை நினைத்து அத்தனை வேதனையில் அமர்ந்திருக்க, யாதவ்விற்கோ உச்சகட்ட ஆத்திரம்! பெண்களை நாசம் செய்யும் மிருகங்களை நினைத்து அத்தனை கோபம் அவனுக்குள்!
காவல்துறைக்கு அழைத்து தலைமறைவான அந்த நால்வரை கண்டுபிடிக்கச் சொல்லி தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அழுத்தம் கொடுத்துக் கொண்டும், அழும் தன் அப்பாவை ஆறுதல்படுத்திக் கொண்டும் இருந்த யாதவ்விற்கு ரித்வியின் நிலையை நினைத்து மனதோரத்தில் ஒருவித வலியுடன் சேர்ந்த அழுத்தம்!
கூடவே, வைத்தியசாலை மூலம் இந்த விடயத்தை கேள்விப்பட்ட பத்திரிகையாளர்களின், தொலைக்காட்சி செய்தியாளர்களின் தொல்லை வேறு!
அடுத்த ஒரு மணிநேரம் கழித்து வந்த வைத்தியர் அதிபனிடம், “இப்போ நீங்க உள்ள போய் பார்க்கலாம். ஆனா, ரொம்ப பலவீனமா இருக்காங்க. உடல் முழுக்க நிறைய காயங்கள். இன்னும் மயக்கம் தெளியல்ல. கண்விழிச்சதும் நடந்ததை பத்தி பேசி மேலும் காயப்படுத்தாதீங்க! இதுக்கப்றம் கொஞ்சம் கவனமா நடந்துக்கோங்க!” என்றுவிட்டு நகர்ந்தார்.
வைத்தியர் நகர்ந்ததும் உள்ளே செல்ல எத்தனித்த மஹாதேவனை கண்டுக்காது தன் தோழியை காண அறைக் கதவை திறந்து வேகமாக உள்ளே சென்றான் அதிபன்.
“ரித்விமா…” அந்த பெயருக்கே வலித்துவிடுமோ என்றளவு மெதுவாக வந்து விழுந்தன அவனுடைய அழைப்பு! ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அவளை நெருங்கியவனின் மனதோ தன் தோழி இருக்கும் நிலையை பார்த்து சொல்ல முடியாத வேதனை!
மூச்சுக்கு ஆக்சிஜன் வைக்கப்பட்டிருக்க, முகம், கைகால்களில் ஏகப்பட்ட நகக்கீறல்கள், பற்தடங்கள் மற்றும் காயங்கள். அவளின் துடிப்பு, வேதனையை உடலால் அவன் அனுபவிக்காதிருந்தாலும் உணர முடிந்தது.
அவள் பக்கத்தில் அமர்ந்து அவளின் தலையை லேசாக வருடியவன், “ரித்வி…” என்று மெதுவாக அழைக்க, அவளிடத்தில் எந்த அசைவுமில்லை. மயக்கத்தில் இருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.
மெல்ல அவள் நெற்றியில் முத்தத்தை பதித்து, தன் தோழியின் இந்நிலையை மேலும் பார்க்க முடியாது அதே இடத்தில் அழ ஆரம்பித்தவன், தோளில் தொடுகையை உணர்ந்து, “அப்பா…” என்று அழைத்தவாறு திரும்பி மஹாதேவனை அணைத்து கதறியழ ஆரம்பித்தான்.
அவனை ஆறுதல்படுத்தியவரின் கண்களும் சிவந்து கலங்கித்தான் போயிருந்தது. இதில் குற்றவுணர்ச்சி வேறு!
‘என்னை மன்னிச்சிடு இளா, உன் பொண்ண என்னால சரியா பார்த்துக்க முடியல. நானே ரித்விமாவோட இந்த நிலைக்கு காரணமாகிட்டேனோன்னு ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு.’ என்று உள்ளுக்குள் தன் நண்பனிடம் மன்னிப்பு வேண்டியவாறு, “ரித்விமா, மாமாவ மன்னிச்சிடுடா!” என்று கண்ணீர் மல்க வருந்தியவர் குற்றவுணர்ச்சியின் பிடியில் அந்த ஒரு முடிவை எடுத்தார்.
ஆனால், அந்த முடிவும் ரித்வியின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப் போவதை அறியவில்லை அவர்.
அறையிலிருந்து வெளியே வந்தவர் யாதவ்வின் முன் போய் நிற்க, அவரை கேள்வியாக நோக்கிய யாதவ் அடுத்து அவர் சொன்ன விடயத்தில் ஆடிப்போய்விட்டான்.
“கார்த்தி, நீதான்ப்பா ரித்விமாவ கல்யாணம் பண்ணிக்கனும்.” என்று மஹாதேவன் பட்டென்று சொல்லிவிட, அவனுக்கோ அதிர்ச்சி!
சுற்றி இருந்தவர்கள் கூட மஹாதேவன் யாதவ்விடம் சொன்னதில், ‘இந்த நேரம் இது ரொம்ப முக்கியமா?’ என்ற ரீதியில் பார்க்க, இத்தனை நேரம் ரித்வியை பாவமாக நினைத்திருந்த சகுந்தலாவோ மஹாதேவன் இப்படி சொன்னதில் பொங்கிவிட்டார்.
“என்ன அண்ணா இது? இப்போ இது ரொம்ப அவசியமா என்ன? முதல்ல அவ கண்ண திறக்கட்டும். அதுக்குள்ள நம்ம வீட்டு பையனுக்கு அவள கல்யாணம் பண்ணிக் கொடுக்குறதை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க. அதுவும், யாதவ் தம்பிய பத்தி யோசிக்காம முடிவு எடுக்குறீங்க. அன்னைக்கு வந்து நின்ன அந்த பொண்ண பத்தி யோசிச்சி பாருங்க. இது என்ன சட்டுபுட்டுன்னு முடிவு எடுக்குற விஷயமா? யோசிச்சி பேசுங்க அண்ணா.”
என்று எங்கு மஹாதேவன் யாதவ்விற்கு ரித்வியை திருமணம் செய்து கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் சகுந்தலா படபடவென பேச, ஆனால், இருக்கும் குற்றவுணர்ச்சியில் எவர் சொல்வதையும் கேட்கும் நிலையிலில்லை மஹாதேவன்.
யாதவ்வோ எந்த பதிலும் சொல்லாது இறுகிப்போய் நிற்க, “அவன வற்புறுத்தாதீங்ப்பா, நான் ரித்விமாவ கல்யாணம் பண்றேன். என் ரித்வியோட நல்லதுக்காக!” என்று அழுத்தமாக வந்து விழுந்தன அதிபனின் வார்த்தைகள்.
வைஷ்ணவியோ சட்டென்று நிமிர்ந்து அதிபனை அதிர்ந்து நோக்க, அவனோ வைஷ்ணவியை திரும்பியும் பார்க்கவில்லை.
‘மாமா, நீ இல்லாம என்னால இருக்க முடியாது. ஏன் மாமா இப்படி பண்ற? நீ எனக்கு வேணும் மாமா. இந்த முடிவு வேணாம்.’ என்று உள்ளுக்குள் குமுறியவளின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுக்க, யாதவ்வின் பார்வையோ தன் உடன் பிறந்தவனின் மீது அழுத்தமாக பதிந்திருந்தது.
அதிபனோ அப்போது இருக்கும் மனநிலையில் தன் முடிவையே மஹாதேவனிடம் திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க ஆனால், அவரின் பார்வை என்னவோ யாதவ்வின் மீது தான்.
யாதவ்வோ அதிபனை முறைத்துப் பார்த்தவன் ஒரு பெருமூச்சுவிட்டு, “நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்ப்பா.” என்று சொல்ல, இப்போது அதிர்வது மற்றவர்களின் முறையானது.
“யாதவ் நீ எதுக்காக ஒத்துக்குறன்னு எனக்கு தெரியல. ஆனா, உன்னால ரித்விமாவ புரிஞ்சிக்க முடியாது. நான் ரித்விக்காக சொல்றேன். அப்பா, நான் ரித்விய கல்யாணம் பண்றேன்.” என்று அதிபன் அழுத்தமாக சொல்ல, “அப்பா, நான் சம்மதிக்கிறேன்.” என்று அதிபனை முறைத்தவாறு சொன்ன யாதவ்வின் முகமோ இறுகிப்போய் இருந்தது.
இங்கு வந்த கொஞ்சநாட்களில் அதிபனுக்கும், வைஷ்ணவிக்கும் இடையிலான காதலை தெரிந்திருந்தவனுக்கு அதிபன் வைஷ்ணவியை யோசிக்காது செய்யும் காரியம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அதுவும், வைஷ்ணவியின் முகத்தை பார்த்தவன் அதில் தெரிந்த வேதனையிலே இந்த முடிவை எடுத்தான் கூடவே ஒரு திட்டத்தோடு.
யாதவ் சம்மதத்தை சொன்னதும் அவனின் கையை தன் கைக்குள் பொத்தி கண்ணில் ஒற்றிக்கொண்ட மஹாதேவன், “ரொம்ப நன்றி கார்த்தி, ரொம்ப நன்றிப்பா. ரித்விமா சரியாகி வீட்டுக்கு வந்ததுமே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிரலாம். யாரும் என் ரித்விமாவ எதுவும் சொல்ல முடியாது.” என்று அழ, இறுகிப்போய் நின்றிருந்தான் யாதவ்.
சுற்றி இருந்தவர்களோ என்ன பேசுவதென்று தெரியாது நடப்பதை பார்த்தவாறு நின்றிருக்க, தன் அண்ணனை ஒரு பார்வை பார்த்த அதிபன் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினான்.
ஆனால், இப்படி மாறி மாறி ரித்வியின் நல்லதுக்கென முடிவு எடுத்தவர்கள் சற்றும் ரித்வியின் மனநிலையை பற்றி யோசிக்கவில்லை என்பது தான் உண்மை. இது எதுவும் அறியாதவளோ சில மணிநேரங்கள் கழித்தே கண்விழித்தாள். உடலில் அத்தனை வலி. எரிச்சல். அதையும் தாண்டிய மனவலி.
கண்விழித்ததும் நடந்த சம்பவத்தை மீட்டியவள், ‘நான் இன்னும் சாகல்லையா?’ என்று தான் நினைத்தாள். நடந்ததை நினைக்க நினைக்க தனக்கு நேர்ந்ததை ஜீரணிக்க முடியவில்லை அவளால்.
இவள் கண்விழித்ததை அறிந்ததும் அவளை காண உள்ளே வந்தார் மஹாதேவன். அவரை கண்டதும், “மாமா…” என்று அழைத்து ரித்வி அழ ஆரம்பிக்க, அவளின் கண்ணீரை துடைத்தவரின் விழிகளிலும் கண்ணீர் முட்டிக்கொண்டுத் தான் நின்றது.
இருந்தும் தன்னை கட்டுப்படுத்தியவர், “ரித்விமா, இப்போ எப்படி இருக்கு?” என்று மென்மையாக விசாரிக்க, “வலிக்குது மாமா.” என்று சிறுபிள்ளை போல் சொன்னவளை பார்த்தவருக்கு ரித்வி தன் பதிமூன்று வயதில் கீழே விழுந்து அடிபட்டதும், “வலிக்குது மாமா.” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டு சொன்ன மழலை பாவனை தான் நியாபகத்திற்கு வந்தது.
“ரித்விமா, இப்போ எல்லாரும் உன் கூட தான் இருக்கோம். நடந்ததை கெட்ட கனவா நினைச்சி மறந்துடனும். கற்பு உடல்ல இல்லை டா, மனசுல இருக்கு. நீ ஏன் டா அழுகுற? தப்பு பண்ணவங்களுக்கு சீக்கிரமே தண்டனை வாங்கி கொடுத்துடலாம். ஆனால், நான் ஒன்னே ஒன்னு
சொல்றேன் ரித்விமா. இதுக்கப்றம் சில பேரோட பார்வை உன் மேல பரிதாபமா, தப்பா, இன்னும் வேற மாதிரி கூட விழலாம்.
அதெல்லாம் கண்டுக்காம உன் வாழ்க்கைய பத்தி மட்டும் யோசி! உனக்குள்ள உன்னை நீயே முடங்கிக்க கூடாது. நாங்க எப்போவும் உன் கூட தான் இருக்கோம். மாமா எப்போவும் உன் நல்லதுக்காக தான் யோசிப்பேன். சீக்கிரம் வீட்டுக்கு போயிரலாம்.” என்று மஹாதேவன் இன்னும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்ல, அத்தனையும் கேட்டவளுக்கு அவர் சொன்னதில் பாதி தான் ஏற்றுக் கொள்ள முடிந்தது.
சுற்றி இருப்பவர்கள் எத்தனை ஆறுதல் சொன்னாலும் அந்த கொடூரத்தை கடந்து வந்த அவளுக்கு தானே தெரியும் அதனுடைய வலியும், வேதனையும். இலகுவாக மறக்கக் கூடிய விடயமா அது? ஒரு பெண்ணிற்கு தானே ஒரு ஆணின் தப்பாக தொடுகையின் அருவருப்பும், வேதனையும் புரியும். அச்சம்பவத்தினால் உண்டான தாக்கம் அவள் மனதில் ஆழமாக பதிந்து போயிருந்தது.
அழுதுக்கொண்டே இருந்தவளை சுற்றி இருந்தவர்கள் மென்மையாக கையாண்டு, ஆறுதல்படுத்தி தூங்க வைக்க அரும்பாடுபட்டுத் தான் போனர்.
அடுத்த இரண்டு நாட்கள் சில சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு உடலளவில் அவள் சற்று தேறியிருந்தாலும், மனதளவில் பலவினமாகத் தான் இருந்தாள். ஒரு இடத்தையே வெறித்தவாறு அவள் அமர்ந்திருக்கும் தோரணை சுற்றி இருந்தவர்களின் மனதை பிசையத் தான் செய்தது.
ஆண்டாளும், அதிபனுமே அவளுக்கு பக்கத்தில் துணையாக இருக்க, சகுந்தலா மற்றும் யாதவ்வை தவிர மற்றவர்களோ ஒரே நாளில் பல தடவைகள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். ஆனால் என்ன, அவளிடத்தில் தான் பழைய உற்சாகம், சிரிப்பு கொஞ்சமும் இல்லை.
அன்று, அதிபன் நோயாளிகளை பார்க்க சென்றிருக்க, ஒரு தாதியை ரித்வியின் துணைக்கு வைத்துவிட்டு ஆண்டாள் அறையிலிருந்து வெளியேறிய அடுத்த சில நொடிகளில் உள்ளே வந்தான் யாதவ்.
வந்தவன் அங்கு ரித்விக்கு துணையாக நின்றிருந்த தாதியை வெளியேற்ற, வைத்தியர் அதிபனின் அண்ணண் என்ற முறையில் யாதவ்வை தெரிந்திருந்ததால் அவளும் அறையிலிருந்து வெளியேறினாள். ஆனால், ‘ஹ்ர்ம்… ஹ்ர்ம்…’ என்ற யாதவ்வின் செறுமல் கேட்கும் வரை இது எதையும் உணரவில்லை ரித்வி.
அவன் தொண்டையை செறுமி தன் இருப்பிடத்தை உணர்த்தியதும் நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான். ஆனாலும், அடுத்தகணம் அவளுடைய முகம் இறுக, மீண்டும் தரையை வெறிக்க ஆரம்பித்தவளின் முகத்தில் என்ன உணர்வு என்று அவனாலே கண்டுபிடிக்க முடியவில்லை.
அவனுக்கும் அவளை பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது. ஆனால், அவளின் உணர்வுகளை விட அவனின் வாழ்க்கை அவனுக்கு முக்கியமாக தெரிந்தது போலும்!
மஹாதேவனோ தனக்கு இருக்கும் குற்றவுணர்ச்சியில் ரித்வியின் மனநிலையை கூட தெரிந்துக் கொள்ளாது அவளுக்கு துணையை அமைத்துக் கொடுக்க தன் மகனை தேர்ந்தெடுத்திருக்க, தன் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள அவளிடமே சுயநலமாக பேச வந்துவிட்டான் யாதவ்.
அவளையே சிறிதுநேரம் பார்த்திருந்தவன் பின், “இந்த நிலைமையில நான் உன்கிட்ட இதை பத்தி பேசக் கூடாது தான். ஆனா, எனக்கு வேற வழி தெரியல. அப்பா நான் சொல்றதை புரிஞ்சிக்குற மனநிலையிலும் இல்லை. அவர் ரொம்ப குற்றவுணர்ச்சியில இருக்காரு.” என்று சொல்ல, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் முகத்தில் எதையும் ஆராய முடியவில்லை அவனால்.
ஆனாலும் தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க எண்ணி, “அப்பா எனக்கும் உனக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணியிருக்காரு. உனக்கு சம்மதமில்லைன்னு சொல்லிடு!” என்று யாதவ் பட்டென்று சொல்லிவிட, அவளுக்கோ இருக்கும் நிலையில் மேலும் புண்பட்ட உணர்வு!
அவனை பார்க்க முடியாது தலை குனிந்திருந்தவளின் விழிகள் கலங்கிப் போக, அவனோ தான் பேச வந்ததை பேசிவிட்டேன் என்ற ரீதியில், “சரி, நான் வரேன்.” என்றுவிட்டு வெளியேறியிருக்க, கன்னத்தினூடே வழிந்த கண்ணீரை அழுந்த துடைத்தாள் அவள்.
அடுத்தடுத்த அடி! நடந்த சம்பவத்தை நினைத்து அவள் தற்கொலை முயற்சி எடுத்திருக்கலாம். ஆனால், அவள் கோழையில்லையே! அதுவும், அவள் வாசித்த நாவல்களில் கற்றுக்கொண்ட ஊக்குவிப்பு வார்த்தைகள் கூட இப்போது அவளின் திடமான மனதிற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது என்னவோ உண்மை தான்.
‘எவனோ தன் உணர்வுகளை அடக்க தெரியாதவன், மனிதன் அல்லாத மிருகமவன் தன்னை கட்டாயப்படுத்தி தன்னை தொட்டு காயப்படுத்தியதற்கு நான் ஏன் தீக்குளிக்க வேண்டும்? தவறு செய்தவன் நிமிர்ந்து நிற்க, நான் ஏன் எனக்குள் என்னை முடக்க வேண்டும்?’ என்று யோசித்து தன்னை திடப்படுத்தியவளுக்கு ஏனோ யாதவ் கொடுக்கும் வலியை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.
அவனை காதலித்தவள் அல்லவா! அவனுடைய வார்த்தைகளே அவளை மேலும் மேலும் பலவீனமாக்கின.
அடுத்தநாளே வைத்தியசாலையில் இருந்தவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்க, அதற்கு பத்திரிகைகாரர்களும் ஒரு காரணம்.
அதுவும், தலை மறைவாகியிருந்த நால்வரையும் கண்டுபிடிக்கச் சொல்லி ஆடவர்கள் தமக்கு தெரிந்த மேலதிகாரிகள் மூலம் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தாலும், எவரையும் விசாரனைக்காக ரித்வியை மட்டும் சந்திக்கவிடவில்லை.
இப்போது பத்திரிகையாளர்களின் தொல்லையால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்திருக்க, அவர்களோ அப்போதும் சும்மா விட்டால் தானே!
ரித்வியின் புகைப்படம், பெயரை வெளிப்படையாக சொல்லாவிடினும் இடத்தை சொல்லி நடந்த சம்பவத்தை கற்பனை கலந்து விபரித்து தொலைக்காட்சி செய்திகளிலும், பத்திரிகைகளிலும் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பியே சீரழித்துவிட்டனர் அவர்கள்.
வீட்டிற்கு வந்ததும் அறைக்குள் அடைந்தவள் வெளியவே வரவில்லை. முடிந்த மட்டும் ரித்விவை திசைதிருப்ப அவளுக்கு பிடித்த மீரா கிருஷ்ணனின் நாவலை தான் அவளின் கைகளில் திணிப்பாள் வைஷ்ணவி.
அறை ஜன்னல்வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தவளுக்கு அந்த ஒருவாரம் நடந்த சம்பவங்கள் தான் கண்முன் விம்பமாக தோன்றின. அவளே எதிர்ப்பார்க்காத சம்பவங்கள். வலிகள்.
அவள் உணர்ந்த முதல் காதல்! ஆனால், அவனுக்கோ வேறு பெண்ணுடன் காதல்,
தனக்கு நேர்ந்த கொடுமை,
யாதவ் வைத்தியசாலையில் வைத்து சொன்ன திருமண செய்தி.
எல்லாமே சேர்ந்து அவளுக்கு ஒன்றை மட்டும் தான் நினைக்கத் தூண்டியது. கஷ்டம் என்று ஒன்று வரும் போது கடவுளிடம் தாம் கேட்கும் அதே கேள்வி, ‘எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?’
அத்தனையும் மீட்டிய ரித்வி, கடைசியாக யாதவ் சொன்ன செய்தியை ஆழமாக யோசித்தாள். ‘ஏன் தன் மாமா இப்படி ஒரு முடிவை எடுத்தார்?’ என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை. ‘ஒருவேளை யாதவ் சொன்ன குற்றவுணர்ச்சியால் இருக்குமோ? ஆனால் எதற்கு?’ என்ற சந்தேகம் வேறு அவளுக்கு!
ஆனாலும், தன்னிடம் நேரடியாக வந்து பேசியவனின் வாழ்க்கைக்காக பேச எண்ணியவள், நேராக சென்று நின்றது என்னவோ மஹாதேவனின் அறையின் முன் தான்.
–ஷேஹா ஸகி