லவ் ஆர் ஹேட் 14

ei9AU6K90229-d094c77a

லவ் ஆர் ஹேட் 14

“யாதவ் ஏதாச்சும் இன்ஃபோர்ம் பண்ணாங்களா? இன்னுமா அவனுங்கள கண்டுபிடிக்க முடியல?” என்று கேட்ட அதிபனுக்கு அத்தனை ஆத்திரம்!

வாயிலிருந்த சிகரெட்டை ஊதித்தள்ளியவாறு, “அதெல்லாம் கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க. கிட்டதட்ட அவனுங்க மறைஞ்சியிருக்குற இடத்தை கண்டுபிடிச்சாச்சி. பட் என்னன்னா, அந்த ஆட்டோ ட்ரைவர் மட்டும் மிஸ்ஸிங். அவன பத்தி எதையும் தெரிஞ்சிக்க முடியல.” என்றான் யாதவ் யோசனையுடன்.

நெற்றியை நீவிவிட்டுக்கொண்ட அதிபன் பின் சட்டென நிமிர்ந்து யாதவ்வை அழுத்தமாக பார்த்து, “யாதவ், ரித்விய உன் கூட அழைச்சிட்டு போறதுல உனக்கு நிஜமாவே சம்மதா என்ன? இல்லை ஏன் கேக்குறேன்னா, உனக்கு இந்த கல்யாண பந்தத்துல கொஞ்சமும் விருப்பம் இல்லை. அப்படி இருக்குறப்போ…” என்று இழுக்க,

“இல்லைன்னா மட்டும் விடவா போறீங்க? அதான் அழைச்சிட்டு போறதா சொல்லிட்டேன் தானே! இதுல எனக்கு விருப்பம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?” சலிப்புடன் கூடிய கோபத்துடன் வந்து விழுந்தன யாதவ்வின் வார்த்தைகள்.

“லுக் யாதவ், நீ விருப்பத்தோட கூட்டிட்டு போறியோ, இல்லையோ? ரித்வி எந்தவிதத்துலயும் உன்னால கஷ்டப்பட கூடாது. நீ அவள கஷ்டப்படுத்தினேன்னு எனக்கு தெரிஞ்சது… அவ்வளவு தான்.” என்ற அதிபனின் வார்த்தைகளில் மிரட்டல் மறைமுகமாக தென்பட்டது.

அவனை முறைத்துப் பார்த்த யாதவ்விற்கு அவனின் மிரட்டலில் உண்டான கோபமும் ரித்வியின் மேல் தான்.

“இப்போ உனக்கு அவ்வளவு சுலபமா ஏத்துக்க முடியாது தான். ஆனா, கூடிய சீக்கிரம் ரித்விய புரிஞ்சிப்ப. வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டிருக்கா யாதவ். டேக் க்யார் ஆஃப் ஹெர்!” என்ற தன் தம்பியை பார்த்தவன், ‘ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. என் கையில தனியா சிக்குவா தானே! அப்போ இருக்கு அவளுக்கு.’ என்று உள்ளுக்குள் பொறிந்துக்கொண்டான்.

தான் பேச வேண்டியதை பேசிவிட்டதாக அறையிலிருந்து வெளியேற சென்றவன் யாதவ்வின் “அதிபா…” என்ற அழைப்பில் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான்.

“சீக்கிரம் உன் காதல் விவகாரத்தை அப்பாக்கிட்ட சொல்லிரு. இதுக்கு மேலும் அந்த பொண்ண தவிக்க விடாத!” என்ற யாதவ்வின் வார்த்தைகளில் முதலில் அதிர்ந்து பின் சிரிப்புடனான  தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்தான் அதிபன்.

இவன் அறையிலிருந்து வெளியேற, இவனவள் மாடித்தோட்டத்திற்குச் செல்வதற்காக அறையை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவனுக்கோ ஒரே குஷி தான். அன்று வைத்தியசாலையில் வைத்து அவள் விழிகளில் தெரிந்த வலியே அவளின் மேலிருந்த கோபத்தை கரைத்துவிட்டிருந்தது அவனுக்கு.

“வைஷூ…” என்று அழைத்தவாறு அதிபன் அவளை நோக்கிச் செல்ல, கேட்ட அவன் குரலில் முதலில் அதிர்ந்து நின்ற வைஷ்ணவி பின் அவனை திரும்பிக் கூட பார்க்காது விறுவிறுவென மாடித்தோட்டத்திற்குச் சென்றாள்.

அவளின் கோபம் புரிந்தவனுக்கு ‘அய்யோ’ என்றிருந்தது.

அவளிள் பின்னாலே சென்றவன் அங்கு மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு பூக்களை வெறித்துக் கொண்டிருந்த தன்னவளை, “ஏன்டி கூப்பிட்டா நிற்க மாட்டியா? என்னடி அதுப்பு உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே நெருங்க, “என் முன்னாடி வராதீங்க மாமா, இங்கயிருந்து போயிருங்க.” என்று காட்டமான வந்தன வைஷ்ணவியின் வார்த்தைகள்.

அவளை பாவமாக பார்த்து, “வைஷூ, ஏன் இப்போ இப்படி பேசுற? அதான் நான்…” என்று ஏதோ பேச வந்த அதிபன், “போதும்! எதுவும் சொல்லாதீங்க! என்னால எதையும் கேக்க முடியாது.” என்ற ஆதங்கமான அவளின் சொற்களில் அதிர்ந்து பார்த்தான்.

“ஏன் மாமா என்னை பத்தி யோசிக்கல? என் காதல பத்தி யோசிக்கல?” என்றவளின் விழிகளிலிருந்து கண்ணீர் தரையை தொட, “வைஷு நான் ஏன் அப்படி சொன்னேன்னு…” என்று அவளுக்கு புரிய வைக்க முயன்றவனின் முயற்சி தோல்வியிலே முடிந்தது.

கைநீட்டி அவனை பேசவிடாது தடுத்தவள், “எனக்கு புரியுது. ஏன் நான் கூட ரித்வி மேல ரொம்ப பாசம் தான். ஆனா, என் காதல விட்டுக் கொடுக்குற அளவுக்கு எனக்கு ஒன்னும் பெரிய மனசு இல்லை. அன்னைக்கு என் மனசு எந்தளவு துடிச்சிருக்கும்னு நீங்க கொஞ்சம் கூட உணரல்லையா மாமா?” என்று கேட்டவாறு கண்ணீரை அழுந்த துடைத்து, “ஆமா, நான் தப்பு பண்ணேன் தான். அது கூட உங்க மேல இருக்குற அதிகப்படியான உரிமைன்னு கூட சொல்லலாம். ஆனா நீங்க…” என்று கேட்டு மறுபடியும் அழ, அவனுக்கே அவளின் அழுகையை பார்க்க முடியவில்லை.

சிறிதுநேரம் அவளையே இமை சிமிட்டாது பார்த்திருந்த அதிபன், “என்னை மன்னிச்சிடு வைஷு” என்றவாறு மீண்டும் அவளை நெருங்க, இரண்டடி பின்னால் நகர்ந்தவள், “பக்கத்துல வராதீங்க மாமா.” என்று கோபமாக சொல்லவும், அதே இடத்தில் நின்று அவளை உதட்டை பிதுக்கிப் பார்த்தான் அவன்.

பின் ஏதோ யோசித்தவனுக்கு அன்று இவன் கோபத்திலிருக்கும் போது வைஷ்ணவி செய்தது தான் நியாபகத்திற்கு வந்தது. அவளே எதிர்ப்பார்க்காது வேகமாக அவளை நெருங்கி அவள் உதட்டில் அழுந்த முத்தத்தை பதித்து விடுவித்தவன், அதற்கு மேலும் அங்கு நிற்காது ஓடிவிட, உதட்டை அழுந்த துடைத்தவள் தன்னவன் சென்ற திசையை கோபமாக பார்த்தாள்.

அன்றிரவு, தனதறையின் ஒரு மூலையில் ஒடுங்கி அமர்ந்து விம்மி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள் ரித்வி. யாதவ் அவளின் கழுத்தில் அணிவித்த மங்களநாண், நெற்றியில் சற்று வியர்வையால் கலங்கியிருந்த குங்குமம், கையில் அவளின் தாய் தந்தையின் புகைப்படம்.

என்ன தான் முடிந்தவரை நடந்தவற்றை மறக்க நினைத்தாலும் மறக்கக் கூடிய சம்பவங்களா அவை? மனதில் ஆழமாக அல்லவா பதிந்து போயிருந்தன!

பதிமூன்று வயதில் தாய்தந்தையை இழந்ததும் மஹாதேவனின் வீட்டிற்கு வந்தவளின் இதயம் குத்தி கிழிக்கப்பட்டது சகுந்தலாவின் வார்த்தைகளால்.

அடுத்து முதல் காதல் யாதவ்வின் மேல்! ஆனால், காதலை சொல்லும் முன்பே அது வேறோரு பிடுங்கி எறியப்பட்டது. மொத்தமாக உடைந்துப் போனாள் தன்னவன் இன்னொருத்தியை காதலிப்பதை உணர்ந்து.

எந்த பெண்ணிற்கும் நடக்கக் கூடாத ஒன்று! நான்கு காமுகர்களின் பசிக்கு இரையாகிப்போனாள். பிறகு, அதனால் நடந்தேறிய தன்னை வெறுக்கும் தன்னவனுடனான திடீர் கல்யாணம்.

அத்தனையும் நினைத்துப் பார்த்தவளுக்கு அழுகையை அடக்கவே முடியவில்லை.

‘ம்மீ, அப்பா ஏன் என்னை விட்டு போனீங்க? என்னால முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு. வெளில தைரியமா காட்டிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள ஒவ்வொரு நிமிஷமும் ரணமா வலிக்குது. மாமாவுக்காக அவர கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, நானும் அவரோட உணர்வுகள பத்தி யோசிக்கல. அவரோட காதல பத்தி யோசிக்கல. தப்பு பண்ணிட்டேன்.’ என்று தலையிலடித்துக் கொண்டு அழுதவளின் நினைவில் அடுத்து வந்தது என்னவோ தன் தந்தையின் குடும்பம் தான்.

‘அப்பா, பாட்டி என் மேல ரொம்ப பாசம். அன்னைக்கு கடைசியா அவங்க வீட்டுக்கு போனப்போ அவ்வளவு பாசமா கவனிச்சாங்க. ஆனா என்ன, என்கிட்ட ஒரு வார்த்தை கூட பேசல்ல.  ஆனாலும் ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு. மாமா கஷ்டப்படுவாரேன்னு அவருக்கு தெரியாம என் குடும்பத்தோட பழகிக்கிட்டு இருக்கேன்.’ என்று யோசித்தவளுக்கு யாதவ்வை நினைத்து பயம் நெஞ்சை கவ்வத்தான் செய்தது.

‘அதுவும் அவருக்கு நான் அவங்க வீட்டு பொண்ணுன்னு தெரியவே கூடாது. என்ன நடக்கும்னு என்னால நினைச்சி பார்க்க கூட முடியல. அவரோட காதல இழந்து என்னை கல்யாணம் பண்ணியிருக்காரு.  என்னை அவர் எவ்வளவு திட்டினாலும் பரவாயில்லை, அவர் கூடவே இருப்பேன். என்னோட முதல் காதலா நான் அவர இழந்து தோத்துபோயிருக்கலாம். ஆனா, கண்டிப்பா நல்ல மனைவியா இருப்பேன். கல்யாணத்துக்கு அப்றம் காதல் வராதா என்ன? எனக்கு இந்த மஞ்சள்கயிறு மேஜிக் பத்தி எல்லாம் தெரியாது. அவர் என்னை புரிஞ்சிப்பாரு. ஆனா, எப்போவும் நான் அந்த குடும்பத்தை சேர்ந்தவன்னு அவருக்கு தெரியவே கூடாது.’

என்று நினைத்துக்கொண்ட ரித்வி கண்ணீரை அழுந்த துடைத்து தன் மார்பில் முட்டி மோதிக் கொண்டிருந்த தன்னவன் அணிவித்த மங்களநாணை கையிலெடுத்துப் பார்த்தாள். அவன் தாலி கட்டிய தருணத்தை நினைத்துப் பார்த்தவளின் விழியிலிருந்து வெளியான ஒருசொட்டு விழிநீர் அந்த மங்களநாணில் பட்டுத்தெறித்தது.

அடுத்தநாள் யாதவ்வுடன் ரித்வி கொழும்புக்கு செல்லும் நேரமும் வந்து சேர்ந்தது.

தன் லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டு நடுஹோலுக்கு தயாராகி வந்த யாதவ், அலைப்பேசியை நோண்டியவாறு, “அப்பா… அதி…” என்று குரல் கொடுக்க, தன் முன் வந்து நின்ற மொத்தப் பேரையும் பார்த்து சற்று அதிர்ந்துவிட்டான் அவன்.

ஏதோ அவனுடன் செல்வது போல் மொத்த குடும்பமும் டிப்டாப்பாக தயாராகி வந்து நிற்க, ஒவ்வொருவரையும் மாறி மாறி பார்த்த யாதவ், “நீங்கெல்லாம் எங்க கிளம்புறீங்க? ஓஹோ! ஒருவேள ரயில்வேய் ஸ்டேஷனுக்கு வர்றீங்களா? அதெல்லாம் வேணாம். மூடிட்டு வீட்டுல இருங்க!” என்று சலிப்பாக சொல்ல, அவர்களோ ‘ஙே’ என அவனை ஒரு பார்வை பார்த்தனர்.

“என்னப்பா இப்படி கேட்டுட்ட? எங்க வீட்டு பொண்ணு முதல்தடவை வேற ஊருக்கு கிளம்புறா. தனியா எப்படி விட முடியும்? அதான் நாங்களும் கூடவே வந்து புள்ளைக்கு எல்லாம் வசதியும் இருக்கான்னு பார்த்துட்டு ஒருமணிநேரம் இருந்துட்டு வரலாம்னு…” என்று ஆண்டாள் சொல்ல, இப்போது ‘ஙே’ என பார்ப்பது யாதவ்வின் முறையானது.

அவனோ ரித்வியை சடாரென திரும்பி முறைத்துப்பார்க்க, அவளோ அவனின் பார்வையை உணர்ந்து சற்றும் அவனை திரும்பிப் பார்க்கவில்லை. ‘நானும் எவ்வளவோ சொன்னேன். இவங்க தான் கேக்கல. இதுக்கு எதுக்கு இவர் என்ன முறைக்குறாரு?’ என்று நினைத்து மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு தலைகுனிந்து நின்றவள், கைகளை பதட்டமாக பிசைந்துக் கொண்டாள்.

“இப்போ எதுக்கு நீங்கெல்லாம்? நான் என்ன உங்க வீட்டு பொண்ண நடுவழியில இறக்கி விட்டிருவேனா? இல்லை, எனக்கு அழைச்சிட்டு போகத் தான் தெரியாதா? யாரும் ஒன்னும் வரத்தேவையில்லை.” என்று கடுகடுத்த யாதவ்வை பார்த்த மஹாதேவன், “கார்த்தி, அதெப்படிப்பா? ரித்விக்கு வீடு பிடிச்சிருக்கா? எல்லாம் வசதியும் இருக்கான்னு பார்க்க வேண்டாமா? பேசி நேரத்தை கடத்தாம வா வா போகலாம்.” என்றுவிட்டு முன்னே நடந்தார்.

ரித்வியை மேலிருந்து கீழ் ஏளனமாக பார்த்த யாதவ், அவளின் காதில் விழும்படியே “வசதியாமே வசதி! இங்கேயே ஒட்டுண்ணி மாதிரி வந்து ஒட்டினவளுக்கு அத்தனை வசதி கேக்குதா?” என்று முணுமுணுக்க, அவமானத்தில் முகம் கறுத்தவள் எதுவும் பேசாது அதிபனின் பின்னால் சென்றாள்.

அனைவரும் ரயிலில் பயணத்தை தொடங்க, ரித்வி யாதவ் இருவரும் வாழ்க்கையில் எதிர் துருவங்களாக இருப்பது மட்டுமன்றி அந்த ரயிலில் கூட எதிர்ச்சீட்டு பயணிகளாகத்  தான் அமர்ந்திருந்தனர்.

அவளின் கழுத்தில் கிடந்த தாலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு விழிகளை உயர்த்தி அவளை முறைத்தவன், ‘ச்சே!’ என்று சலித்தவாறு திரும்பிக்கொள்ள, அவளோ அவன் முகத்தை திருப்பியதும் அவனை வேதனை நிறைந்த பார்வையுடன் நோக்கினாள்.

கொழும்பு நகரத்தை அடைந்ததும் அங்கு யாதவ் வாங்கியிருந்த ஃப்ளாட்டுக்கு மொத்த குடும்பமும் வந்து சேர, அந்த கட்டிடத்தின் அழகையும், பிரமிப்பையும் பார்த்து கிராமத்திலே வளர்ந்த அவர்களின் கண்கள் சாரசர் போல் விரிந்தன.

“இந்த இடத்துலயா நம்ம வீட்டு புள்ள வாழ போகுது?” என்று சகாதேவன் வாயை பிளக்க, நாடியில் கை வைத்து அவரின் வாயை மூடிவிட்ட இந்திரன், “விலை தெரியுமா ஃபைவ் லேக்ஸ். இங்லீஷ் தெரியாதுல்ல? ஐம்பது இலட்சம்.” என்று நீட்டி முழக்கி சொல்ல, அவரோ மேலும் வாயை பிளந்தார்.

சகுந்தலாவோ வெளியே சாதாரணமாக இருந்தாலும் உள்ளுக்குள் பொறாமையில் பொசுங்கத் தான் செய்தார். ‘தன் மகள் வாழ வேண்டிய வாழ்க்கை.’ என்ற ஆதங்கம் அவருக்கு.

இங்கு மஹாதேவனோ யாதவ் பத்தாவது மாடியில் எடுத்திருக்கும் வீட்டை பார்த்துவிட்டு ரித்வியை பரிதாபமாக பார்க்க, அவளோ எச்சிலை விழுங்கியவாறு தன் மாமாவை தான் பாவமாக பார்த்தாள். அவருக்குத் தான் தெரியுமல்லவா! அவளுக்கு உயரம் என்றால் பயம் என்று…

அதிபனோ ரித்வியின் கையை இறுகப்பற்றி ஆறுதலாக கண்களை அழுந்த மூடித்திறக்க, மெல்லிய புன்னகை சிந்தியவள், வலது காலை எடுத்து வைத்து இனி தன்னவனுடன் தான் வாழப்போகும் தன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

யாதவ்வோ யாரையும் கண்டுக்காது வீட்டிற்குள் நுழைந்ததுமே தன் பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பிக்க, ‘ஆஆ’ என்று வாயை பிளந்த வண்ணம் அங்குமிங்கும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள். ஆனால், அடுத்து அவர்கள் பேசிய பேச்சில் கொலை வெறியாகிவிட்டான் அவன்.

“என்னப்பா கார்த்தி? வீடு அழகா இருந்ததுக்கு நம்ம வீடு மாதிரி விசாலமா இல்லையே… ரித்விமாவுக்கு விசாலமா இருந்தா தானே பிடிக்கும்.” என்று மஹாதேவன் சொல்ல,

“யாதவ், பால்கெனியில ரோஜா செடி வாங்கி வை! ரித்விக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று ஒருபுறம் சொன்னான் அதிபன்.

“ஹோல், சமையலறை, இரண்டு அறை, ஒரு சின்ன பால்கெனி. ரித்விமா எப்படி தான் இருப்பாளோ?” என்று ஆண்டாள் ஒருபக்கம் புலம்ப, “ரித்விக்கு உயரம்னாலே பயம். யாதவ் மாமா, ரித்விய உங்க கூடவே வச்சிக்கோங்க! இல்லைன்னா பயந்துருவா.” என்று வைஷ்ணவி தன் பங்கிற்கு ஒன்று சொல்ல, அவனுக்கோ அத்தனை கடுப்பு!

ஆனால், ரித்விக்கோ யாதவ்வின் முகம் போன போக்கை பார்த்து ஒவ்வொரு நிமிடங்களும் திக்திக் நிமிடங்கள் தான்.

ஒருமணிநேரம் வீட்டை சுற்றிப் பார்த்து, இருவருக்கும் மாறி மாறி அறிவுரை வழங்கி ஊருக்கு செல்வதற்காக அனைவரும் தயாராக, ரித்வியோ ஓவென்று அழுதேவிட்டாள்.

“மாமா…” என்று அவள் மஹாதேவனை அணைக்க, கலங்கிய விழிகளுடன் அவளின் தலையை வாஞ்சையுடன் வருடியவர், “என் மகன் கோபக்காரன் தான். ஆனா, ரொம்ப நல்லவன். கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகும். அவனுக்கு ஒரு அம்மாவா நீ இரு! உன்னை உன் அம்மா அப்பா மாதிரி அவன் பார்த்துப்பான். மாமா நேரம் கிடைக்கும் போது உன்னை வந்து பார்க்குறேன். நீயும் அடிக்கடி ஊருக்கு வரனும். சரியா?” என்று பேசிக்கொண்டே சென்றவரின் குரல் தழுதழுக்க தான் செய்தது.

பதிமூன்று வயதில் அவர் ரித்வியை தன் வீட்டிற்கு அழைத்து வந்ததிலிருந்து அவள் அவரை விட்டு பிரிந்திருந்ததே இல்லை. பெற்ற பிள்ளைகளை விட ரித்வி மேல் தானே உயிராக இருந்தார்!

அடுத்து ரித்வியோ அதிபனின் முன்னால் வந்து கலங்கிய கண்களுடன் முறைத்தவாறு நிற்க, மென்மையாக புன்னகைத்தவன் எப்போதும் போல் அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்து லேசாக அணைத்தவாறு, “ரித்வி…” என்றழைக்க, “அதி, நீ என் கூடவே இரேன்!” என்று சிறுபிள்ளை போல் கேட்டாள் ரித்வி.

அதில் வாய்விட்டு சிரித்தவன், “நோ… நோ… இரண்டு நாள் சோறு போடுவ. அப்றம் யாருடா நீ ன்னு கேப்ப. நமக்கெதுக்கு இந்த அசிங்கம்?” என்று கேலியாக சொல்ல, அவனை செல்லமாக அடித்தாள் அவள்.

“இங்க பாரு ரித்விமா, நான் யாதவ் அ  இங்க வராம ஊருலயே இருக்க வச்சிருக்கலாம். ஆனா, இந்த மாற்றம் உனக்கு தேவை டா. புது இடம், புது ஆளுங்க. இது உனக்கு தேவையா இருந்ததால தான் நான் எதையும் தடுக்கல.” என்ற அதிபன் மெல்ல அவளின் காதருகே குனிந்து, “எதுக்கும் அந்த ஹிட்லர்கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இரு! ஹீ இஸ் வெர்ரி டேன்ஜரஸ் யூ க்னோ?” என்று சொல்லி சிரிக்க, அவளுக்கு கூட இதழ்கள் லேசாக விரிந்தன.

அவள் தலைமுடியை லேசாக கலைத்துவிட்டவன், “கவனமா இரு! நான் அடிக்கடி உன்னை வந்து பார்க்குறேன்.” என்று சொல்ல, அடுத்து ரித்வி ஓடிச்சென்று அணைத்துக் கொண்டது வைஷ்ணவியை தான்.

ரித்வி அழுக, ரித்விக்கு போட்டியாக அவளுடன் சேர்ந்து வைஷ்ணவி அழுக, இருவரையும் சமாதானப்படுத்துவதற்குள் அவர்களின் குடும்பத்தினருக்கு தான் போதும் போதும் என்றாகிவிட்டது. இந்த பத்து வருடங்கள் வைஷ்ணவியின் இனிய நினைவுகள் மொத்தமும் ரித்வியுடன் தான். சின்ன சண்டைகள், செல்ல சேட்டைகள் கூட…

சகோதரி போல் கூடவே இருந்தவளை திடீரென பிரிந்து இருக்க வேண்டுமென்றால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன?

இரட்டை சகோதரர்களை அணைத்துக் கொண்ட ரித்வி தயக்கமாக, “சந்து, இந்து நான் வைஷ்ணவி பத்தி உங்ககிட்ட…” என்று இழுக்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட இந்திரனும் சந்திரனும், “எல்லாமே தெரியும். அதை பத்தி மட்டும் பேசாத சோடாபுட்டி! மனசு வலிக்குது.” என்று சொல்ல, வாய்விட்டே சிரித்துவிட்டாள் அவள்.

இருவரும் அவளை இருபுறமும் அணைத்துக்கொள்ள, அடுத்து ஆண்டாள் மற்றும் சகாதேவனை அணைத்து அவர்களின் அறிவுரைகளையும் கேட்டுக் கொண்டவள், எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்துக் கொண்டிருந்த சகுந்தலாவின் முன் சென்று, “அம்மா…” என்றாள்.

ஏனோ அந்த அழைப்பு  அவரின் இரும்பு மனதை அசைக்கத் தான் செய்தது. வைஷ்ணவி பிறந்த இரண்டு வருடத்திற்கு பிறகு பிறந்த அவரின் இரண்டாவது மகள் பத்து நாட்களிலே இறந்துவிட, ரித்வியுடைய ‘அம்மா’ என்ற அழைப்பு அவருக்கு அந்த குழந்தையை தான் நியாபகப்படுத்தியது.

அவளை முறைப்புடன் பார்த்தவர், “கவனமா இரு!” என்றுமட்டும் சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேற, அதுவே ரித்விக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது.

இவ்வாறு ஒவ்வொருவரும் அழுது, புலம்பி, பேசிவிட்டு செல்லவே அடுத்து ஒருமணிநேரம் கழிந்திருக்க, எல்லாரும் வெளியேறினதும் ரித்வி கதவை தாழிட்ட அடுத்தநொடி கண்ணாடி நொறுங்கும் சத்தத்தில் அவளுக்கு பக்கென்றானது.

கண்களை அழுந்த மூடித்திறந்தவள், ‘கிருஷ்ணா! என்னை காப்பாத்து!’ என்று வேண்டியவாறு முயன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை திரும்பிப் பார்த்தாள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!