வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 1

இன்று (சென்னைப் பட்டணம்)

அந்த அர்த்த ராத்திரி நேரம் சென்னை விமான நிலைய பிரதான வாயிலின் முன் பரப்பரப்பும், சந்தோசமுமாகக் காத்திருந்தார் காரிகை.

காரிகை அறிவரசன்!

அவரது ஒரே மகனை இரண்டு மாதத்திற்குப் பிறகு காண போகிறார்.

இன்று தான் லண்டனில் இருந்து வருகிறான். இந்த ஆறு மாத காலத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மாதம் இரண்டு நாள் என அவன் கூடவே இருந்து அவனைப் பார்த்தவர்.

அலுவலகப்பணி காரணமாக இந்தியா கிளம்பி வந்ததால், இந்த இரண்டு மாதத்தில் மகனை காணாமல் மிகவும் ஏங்கி விட்டார். இன்று அவன் வர போகிறான் என்பதால் முகம் சந்தோஷத்தில் ஜொலிக்க அவன் வரவுக்காய்க் காத்திருந்தார்.

“பிளைட் கொஞ்சம் லேட் மேடம்” மெதுவாக அவர் அருகில் நின்ற அகில் தேவ் கூறினான்.

அவன் புறம் பார்வையைத் திருப்பிய காரிகை ‘நான் உன்கிட்ட ஏதாவது கேட்டேனா?’ என்னும் விதமாக அவனை முறைக்க, அவரின் முறைப்பை கண்டும், காணாதது போல் நின்று கொண்டான்.

அகில்தேவ்!

காரிகையின் வலது கை மாதிரி. விஷ்ணு இல்லாத நேரம் பல தொழில் சார்ந்த சிலவற்றை அகிலிடம் கேட்டு முடிவெடுப்பார் காரிகை.

இப்பொழுது நடந்த தொழில் போட்டியில் அவனிடம் மலையளவு கோபத்தில் இருக்கிறார். அதற்குள் மகன் விஷ்ணு லண்டனில் இருந்து வரும் செய்தி வந்ததால். அவனை முறைத்துக் கொண்டு இருக்கிறார்.

அவர் தொழில் தான் அவரின் உயிர்!

மந்திரவாதியின் உயிர் பறக்கும் கிளியில் இருப்பது போல். இந்தக் காரிகையின் உயிர் அவரின் தொழிலில் உள்ளது.

காரிகையின் தவிப்பும். சந்தோசமும் அவனுக்கு எட்டியதோ என்னவோ அடுத்த நொடி அங்குத் தரிசனம் தந்தான் விஷ்ணு காரிகை.

ஆம்! விஷ்ணு காரிகை தான்!

எங்கும், “சன் ஆப் காரிகை“ என்று நெஞ்சை நிமிர்த்திக் கூறுவான். அவனுக்கு எல்லாமே அவர் தான். அவர் மட்டும் தான்!

வெள்ளை நிறத்தில் கறுப்பு மெல்லிய கோடுகள் போட்ட சட்டை. கறுப்பு நிற பாண்ட். அதே நிறத்தில் டை கட்டியவனின் இடது கையில் கறுப்பு நிற கோர்ட் அழகாய் மடிந்து தொங்கியது.

இதுவரை ஷர்ட்டில் தொங்கிய கூலரை எடுத்துக் கண்களில் அணிந்து கொண்டே, கம்பீர அழகுடன் தனது பிரத்யோக வேக நடையுடன் தனது தாயை அதாவது தாய் என்று அடையாளம் காட்டப்பட்டவரை நோக்கி விரைந்து வந்தான்.

குழந்தை கண் முழிக்கும் பொழுது தாயை தானே அடையாளம் காட்டுவார்கள். அதே போல்தான் இந்த வளர்ந்த குழந்தைக்குத் தாய் என அடையாளம் காட்டப்பட்டவர்தான் காரிகை.

அவனைக் கண்ணில் கண்டதும், அவர் முகம் பூவாய் மலர்ந்தது. கூடவே கொஞ்சமே கொஞ்சம் அவரின் கண்கள் அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தது.

தூரத்தில் இருந்தே அவனைப் பார்த்த காரிகை கண்களில் நீர் அருவியாகக் கொட்ட அப்படியே பார்த்து நின்றார்.

‘அவனில் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா?’ எனப் பார்க்க.

அவன் வளர்த்திருந்த முடியும். அவனின் தாடியும் அவரை ஏதோ செய்ய மனம் வெகுவாகத் தவித்தது.

அவர் அருகில் வந்த விஷ்ணு அவரைக் கண்டு “அம்மா“ அவன் அழைக்கவே,

அவன் முகத்தை மெதுவாக வருடியவர், “எப்படி இருக்க விஷ்ணு?“ கண்களில் கண்ணீருடன் கேட்டார்.

“எனக்கு என்னம்மா நான் ரொம்ப நல்லா இருக்கேன்” என்றவன் அவரை மெதுவாக அணைத்து விலகினான்.

அந்த எமனை மீறி வரும் மகனை கண்களில் நிறைத்துக் கொண்டார் காரிகை.

விஷ்ணுவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று சென்னை டாக்டர்ஸ் கைவிட்ட நிலையில், தன் தொழிலை அம்போ என்று விட்டு விட மனதில்லாத காரிகை லண்டன் கொண்டு சென்று அந்த எமனிடம் இருந்து தன் மகனை காப்பாற்றிக் கொண்டு வந்தவர் அவர்.

அவன் வாழ்வில் நடந்த பல கறுப்புப் பக்கங்களை மறக்க வைக்கவே மேல் சிகிட்சைக்காய் மீண்டும் லண்டன் அனுப்பினார் காரிகை. ஆறுமாத சிகிட்சைக்குப் பின் இன்று இந்தியா திரும்பியிருக்கிறான்.

அவன் அங்குச் சென்ற நேரம் எப்பொழுதும் போல் விஷ்ணு கூறியபடியே அவன் இடத்தில் தொழில்முறையில் அகில்தேவ்வை வைத்திருந்தார்.

சிகிட்சை முடிந்து, அப்படியே தன் தொழில் மூளையை அங்கும் நிரூபித்து அங்கிருந்து பெரிய காண்ட்ராக்ட் ஒன்றுடன் வெற்றி வாகை சூடியவனாய் மீண்டும் சென்னை வருகிறான்.

அந்த எமனையே எதிர்த்து வந்த “தி கிரேட் விஷ்ணு காரிகை” அவன்!

எஸ்… அவன் கிரேட் தான். அவனுக்கு அவனே கிரேட்!

தனக்கு தானே தட்டிக் கொடுத்து மேலே எழுந்தவன்… இன்னும் எழுபவன்!

“பாஸ்“ என்ற அழுத்தமான குரலில்தான் இருவருக்கும் தாங்கள் இருக்கும் இடம் நினைவில் வர, காரிகை சுதாரித்து அமைதியானார்.

தாயின் அமைதியை கண்ட. விஷ்ணுவோ, புருவ மத்தியில் யோசனையாக வலது கையால் கூலரை கழட்டி. இமையை வருடி கொண்டே “எஸ்“ என அவனை நோக்கி திரும்பியவனிடம் அவனுடைய கம்பீரத்துடன் கற்று தேர்ந்த தொழிலதிபனுக்குரிய மிடுக்கும் திரும்பி இருந்தது.

அவன் புருவத்தை வருடிய செயல் காரிகை புருவத்தை யோசனையாகச் சுருங்க செய்தது. ஆனால், அடுத்த நிமிடமே அவனிடம் திரும்பி இருந்த கம்பீரத்தை கண்டு மனம் அமைதியாக அவர்களைப் பார்த்திருந்தார்.

“காரிகை கார்மெண்ட்ஸ்“ கம்பெனியின் ஒரே ஒரு வாரிசு இவன்!

இரண்டு துணி மில்களின் அதிபர். மேலும் தங்களது தொழிலை விரிவுப்படுத்த எண்ணி சாயப்பட்டறை ஒன்றை ஆரம்பிக்கக் கட்டம் கட்டி விட்டான் விஷ்ணு காரிகை.

ஆனால், நடந்தது அவனே எதிர் பாராதது. அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல்.

“பாஸ். கிளம்பலாமா“ அகில் கேட்க.

“டிரைவரை கார் எடுக்கச் சொல்லு” வேகமாக விஷ்ணுவுக்கு முன் காரிகை கட்டளையிட்டார்.

விஷ்ணு யோசனையாகத் தாயை பார்க்கவும் “வீட்டுக்குப் போய்ப் பேசலாம்“ மெதுவாக அவன் காதில் கூறினார் காரிகை.

அவரை ஒரு நொடி பார்த்தவன் வேக நடையுடன் நடக்க, அமைதியாக அவனுடன் நடந்து வந்தார்.

விஷ்ணுவின் லக்கேஜ்களை அகில் கையில் எடுக்க. அவனைத் தடுத்த காரிகை. கண்ணசைவில் டிரைவரை அழைக்க. அவன் ஓடி வந்து தூக்கிக் கொண்டான்.

ஓட்டுனர் இருக்கையில் டிரைவர் ஏறவும் அவர் அருகில் அகில் ஏறிக் கொண்டான்.

பின் இருக்கையில் ஏறிய விஷ்ணு சாவகாசமாக இருக்கையில் சாய்ந்து அமரவும், அவன் அருகில் காரிகை அமைதியாக ஏற. விஷ்ணுவின் ஜாக்வார் மெதுவாக வேகமெடுத்தது.

பக்கவாட்டில் திரும்பி அவனைப் பார்த்தார் காரிகை. ஆனால் அவனோ இருக்கையில் சாய்ந்து கண்களை மூடி இருந்தான். முகம் ஏதோ தீவிர யோசனையில் இருந்தது.

மெதுவாக அவன் கையைப் பிடிக்க. அவரை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் சாய்ந்து கொண்டான்.

இருவரின் அமைதியை கண்ட அகில் மனது ஒரு நிலையில் இல்லை. எப்பொழுது விஷ்ணு வெளிநாடு சென்று வந்தாலும். வந்த நிமிடத்தில் இருந்து தொழில் பற்றிப் பேசுவது தான் அதிகமாக இருக்கும்.

இப்பொழுது நடந்திருப்பதை அறிந்தவன் கண்டிப்பாகக் கோபத்தில் குதிப்பான் என்பது அவன் அறிந்ததே ஆனால் இன்று அவனின் இந்த அமைதி அவன் முகத்தில் யோசனையை வரவைப்பதாய்.

அவனது ஜாக்வார் மெதுவாக ஊர்ந்து நட்சத்திரங்களும். பிரபல தொழிலதிபர்களும் வாழும் ஈ.சி.ஆர். ரோட்டில் பயணித்து வானளவு உயர்ந்து நின்ற அந்தப் பங்களாவின் முன் நின்றது.

பங்களாவின் முகப்பில், “காரிகை பவனம்“ என்னும் பெயர் தங்க நிறத்தில் பொறிக்கபட்டிருக்க அந்தப் பிரமாண்ட கேட்டை காவலாளி திறந்து விட இருபக்கமும் சீராகப் பராமரிக்கப்பட்ட புல்வெளி பச்சை பசேலென்று படர்ந்திருந்த அந்தப் பைபர் பாதையில் கார் வழுக்கிக் கொண்டு நின்றது.

மெதுவாகக் கார் கண்ணாடியை இறக்கிய விஷ்ணு கூலரை கழட்டி அந்தப் பிரமாண்ட வெள்ளை மாளிகையைப் பார்த்துக் கொண்டே அமைதியாகக் காரை விட்டு இறங்கினான்.

அவனை வாசலில் நிற்க வைத்த காரிகை வீட்டின் உள் சென்று ஆரத்தி கரைத்து எடுத்து வந்தார்.

‘தன் மகன் நீடூழி காலம் வாழ வேண்டும்’ என்ற வேண்டுதலுடன் காரிகை ஆரத்தி கரைக்க.

காரை விட்டு இறங்கிய விஷ்ணுவோ எப்பொழுதும் போல் பங்களாவையே புருவ மத்தியில் சிறு யோசனை முடிச்சுடன் பார்த்துக் கொண்டு நின்றான். கைகளோ அவனையே அறியாமல் வலது புருவத்தை மீண்டும் வருடி கொண்டது.

ஆரத்தி எடுத்து வந்த காரிகை அவனின் செயலை கண்டு மீண்டும் கலக்கம் ஏற்பட. அந்தக் கடவுளை வேண்டி நின்றாள். ஆனாலும் சமாளித்துக் கொண்டு அவனுக்கு ஆலம் சுற்றி வீட்டில் அழைத்து வர.

வீட்டில் உள்ள வேலைகாரர்கள் எல்லாரும் ஆச்சரியமாக அவனைப் பார்த்தனர். பின்னே முகமே தெரியாமல் காடு போல் முடிவளர்த்து வருபவனை ஆச்சரியமாகப் பார்க்காமல் எப்படிப் பார்ப்பார்கள். அவர்களின் ஆச்சரிய பார்வையைக் கண்டவன் ஒரு நிமிடம் தயங்க,

அவனின் அருகில் வேகமாக வந்த காரிகை “விஷ்ணு உன் ரூம் மேலே“ என மெதுவாக முணுமுணுக்க. அவரைப் பார்த்தவன் தலையை உலுக்கிக் கொண்டு அறை நோக்கி சென்றான்.

அதற்கு மேல் அவன் எதையும் யோசிக்கவிரும்பவில்லை. அப்படி யோசித்தாலும் எதுவும் தெரியபோவதில்லை என்று அவனையே சமாதனப்படுத்திக் கொண்டு பழைய விஷ்ணுவாக மீண்டும் எழுந்தான்.

தன் அறைக்கு வந்த காரிகைக்கு இருப்புகொள்ளவில்லை. இவனைப் பார்க்க அவருக்கு ஏதோ தவறாகபட்டது. அவர் தொழிலை காக்க. அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவர் செய்த பெரிய செயல் அவரையும். அவர் மகனையும் சுழட்டி அடிக்கும் என்று அந்த நேரம் அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது!

அடுத்த நாள் காலையில் அந்த மீட்டிங் ஹாலில் கூடி இருந்த அத்தனை பேரும் பயத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அமர்ந்து இருந்தனர். மிகப் பெரிய ஆர்டர் ஒரு புதுக் கம்பெனி கைக்குச் சென்றால் கோபப்படாமல் என்ன செய்வான்.

புதுக் கம்பெனி அவனின் அப்பா என்று அறிந்தால்?

அவனின் பரம எதிரியே அவர் தான்.

அவரின் இன்ஷியலையே தனக்கு வைக்க விரும்பாத அரக்கன் அவன். இதுவரை எல்லா இடத்திலும் கால் பதித்த தி கிரேட் விஷ்ணுவால் தாங்கிக் கொள்ள முடியுமா என்ன?

முடியாது… முடியவே முடியாது!

விஷ்ணு லண்டன் செல்லும் முன் காரிகையால், அகிலிடம் ஒப்படைத்த மிகப் பெரிய வேலை. ஆறு மாத காலமாக அகில் தேவ் தான் இந்தக் கம்பெனியை பார்த்து வந்தான்.

அகில் கையில் தான் அவனின் மிகப் பெரிய ராஜ்யத்தையே ஒப்படைத்துச் சென்றான் தன் நிழலை கூட நம்பாத தி கிரேட் விஷ்ணு. ஐந்து வருடமாகத் தன் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கும் அகிலை நம்பி ஒப்படைத்திருப்பது மிகப் பெரிய ஆச்சரியமே!

இது மிகப் பெரிய ஆர்டர். “யூரோப் காண்ட்ராக்ட்” அகில் ரொம்பவே கஷ்டப்பட்ட ஆர்டர். இது கையை விட்டு போகும் என்று யாரும் எண்ணவே இல்லை. அவனின் உழைப்பு இங்கிருந்த அத்தனை பேருக்கும் நன்கு தெரியும். அது தான் பயம்.

விஷ்ணுவின் அமைதியே அகிலை நடுங்க வைத்திருந்தது. அவன் அமைதிக்கு பின் மிக பெரிய புயல் ஓன்று உருவாகும் என்று அவன் நன்கு அறிவான்.

‘யாரை எல்லாம் சீற போகிறானோ? யாரை எல்லாம் மில்லுக்கு அனுப்ப போகிறானோ? யாரை எல்லாம் சாயம் கலக்க அனுப்ப போகிறானோ’ யோசித்தப்படியே எல்லார் முகங்களும் பயத்தைக் காட்டின.

ஆனாலும் மனதின் ஓரத்தில் சிறு நிம்மதி எல்லார் முகத்திலும். இந்த ஆர்டர் கைவிட்டு போன நேரம் விஷ்ணு இங்கு இல்லாததே. அகில் என்றால் கொஞ்சம் தப்பிக்கலாம்… விஷ்ணு இருந்தால் அது முடியாத காரியம். பார்வையாலும். வார்த்தையால் கொல்லும் ராட்சஷன்!

அந்தநேரம் ஹால் அப்படியே அமைதியாக. எல்லார் முகங்களும் கலக்கத்துடன் வாசலைப் பார்க்க முன்னால் விழுந்த முடி கற்றைகளை மேல் நோக்கி கோதி விட்டுக் கொண்டே வேக நடையுடன் அந்த ஹால் மேடையில் ஏறி நின்றான் விஷ்ணு காரிகை. அவனின் பின்னே கசங்கிய முகத்துடன் அகில் தேவ்.

விஷ்ணுவை கண்டவர்கள் அதிர்ச்சியில் அப்படியே எழுந்து நின்றனர். அவனை இன்று யாரும் எதிர் பார்க்கவே இல்லை. கண்கள் தெறித்து வெளியில் விழுவதைப் போல் கண்ணை விரித்தவர்களின். கண்களில் விழுந்தான் அகில் தேவ்.

“போச்சு… போச்சு. அகில் சாரே இப்படி இருக்கும் பொழுது நாம காலி” என எண்ணி எல்லாரும் பயத்துடன் விஷ்ணு முகத்தைப் பார்த்தனர்.

எல்லார் பய முகத்தையும் பார்த்த விஷ்ணு “ஹா. ஹா.” எனப் பெரும் குரலெடுத்துச் சிரித்தான். அவனின் சிரிப்பு ஏழைகளை அடித்துச் சாப்பிட ரெடியாக இருக்கும் அரக்கன் சிரித்தது போல் இருந்தது.

அடுத்த நிமிடமே அவன் முகம் விகாரமாக மாற அப்படியொரு அடக்கப்பட்ட ஆத்திரம் அவன் முகத்தில் தெரிந்தது.

அவனின் வெள்ளை முகம் ரத்தமெனச் சிவந்து போனது. அதுவே கூறியது அவனின் கோபத்தின் அளவை.

கண்ணைக் கூலர் மறைத்திருக்க அவனின் கண்களில் ஏறிய சிவப்பை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது.

எல்லாரையும் ஒரு முறை நிதானமாகப் பார்த்தவனின் கண்கள் யோசனையாக மாறி. அவனையும் அறியாமல் கூலரை கழட்டி வலது புருவத்தை வருடிக் கொண்டவன் அகிலை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து. அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து மற்றவர்களை அமரும்படி கையால் சைகை செய்தான்.

அவனின் ஒற்றைக் கையசைப்பிற்கு அனைவரும் நொடியில் அமர்ந்தனர். சம்பளம் கொடுக்கும் முதலாளி அல்லவா? மரியாதை இருக்கத் தானே செய்யும் என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பில்லை.

அப்படி அவர்கள் அமரவில்லை என்றால் அடுத்த நிமிடம் அனைவரும் அவனுக்கு அருகில் அந்த மேடையில் ஏறி நின்று ஆர்டர் கைமாறி போனதற்கான சரியான காரணத்தைக் கண்டுபிடித்துக் கூற வேண்டும் அப்படிக் கூறவில்லை என்றால் கண்டிப்பாகச் சாயம் கலக்கும் வேலை தான். அதற்குப் பயந்தே அவன் கையை அசைத்ததும் எல்லாரும் அமர்ந்துக் கொண்டனர்.

எல்லாரும் அமர்ந்ததும், “வெல். இந்தக் காண்ட்ராக்ட் எவ்வளவு முக்கியம் என்று எல்லாருக்கும் தெரியும். இந்த யூரோப் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைச்சா மறுபடி வர எல்லா ஆர்டரும் நம்ம கம்பெனி தேடி தான் வரும். நாம கோட் பண்ணின அமௌண்ட் ரொம்பவே குறைவு. அதை விடக் குறைவா கோட் பண்ணி அந்த ஆர்டர் எடுக்கும் அளவுக்கு அத்தனை பெரிய ஆள் யார்?“ நிறுத்தி நிதானமாக அவர்கள் மீது அழுத்தமான பார்வையைச் செலுத்தியவனின் முகம் மீண்டும் மாறியது.

“இந்த விஷ்ணு பத்தி சரியா தெரியலை. இதற்கு யார் காரணமா இருந்தாலும் அவங்க இந்த விஷ்ணு பார்வையில் இருந்து தப்ப முடியாது” என்றான் மிகவும் கடினமான குரலில்.

அவனின் கடினமான குரலில் எல்லார் முகங்களும் வெளிறிப் போனது. அவனைக் கண்டு அத்தனை பயமாக இருந்தது. ‘இவன் கிட்ட வேலை பாக்குறதுக்கு வரட்டி தட்ட போகலாம்’ என எல்லார் மனதும் ஒரே போல் முடிவெடுத்துக் கொண்டது.

இன்னொரு மனதோ “இவனைப் போல் தொழிலார்களைக் கவனிக்கவும் முடியாது. வேலை வாங்கவும் முடியாது” என்று பெருமையாக எண்ணிக் கொண்டது. அது அவனின் தொழில் உக்தி என்று அறிந்தும். சம்பளம் அளிப்பதிலும். போனஸ் வழங்குவதிலும் அவன் அவர்களுக்குக் கர்ணனே!

எல்லார் முகங்களையும் கண்டு பார்வையை மாற்றி. கோபத்தைக் கொஞ்சம் குறைத்தவன், “இது தான் ஃபர்ஸ்ட் டைம் அதனால் உங்களை நான் விடுகிறேன். அடுத்த லண்டன் ஆர்டர் நமக்குக் கிடைத்தே ஆகணும். அதற்கான வேலையை ஆரம்பிங்க. எல்லா ஏற்பாடும் செய்துட்டு வந்து விட்டேன் அமௌன்ட் கோட் பண்ணுறது தான் பேலன்ஸ்.

இதற்கு உங்க எல்லார் உதவியும் ரொம்பத் தேவை. டிசைன்ஸ் மெயில் பண்ணிட்டேன் அதற்கான வேலையை ஆரம்பிங்க. மில்லோட கண்டிஷன். மில்லை டெவலப் பண்ணனும்னா அதைப் பண்ணுவதற்கான ஐடியா இருந்த தாராளமா அகில் கிட்ட சொல்லுங்க. யூ கேன் கோ” என்றவன் வாசல் பக்கம் பார்வையைத் திருப்ப,

அடுத்த நொடி விட்டால் போதுமென எல்லாரும் வெளியில் எழுந்து சென்றனர். அவர்கள் செல்லவும் அகில் பக்கம் பார்வையைத் திருப்பிய விஷ்ணு, “சியர் அப் மேன். அடுத்தக் கான்டராக்ட் விடாதே. நமக்குக் கிடைத்தே ஆகவேண்டும். இப்போ இந்த ஆர்டர் யார் கைக்கு போச்சுன்னு பாரு.

நான் இல்லாத நாளில் புதிதாக மழைக்கு முளைத்த அந்தக் காளான் யார் என்று கண்டுபிடி” என முகம் இறுக கூறியவன் அவனின் தோளில் தட்டி சென்றான்.

இழுத்து வைத்திருக்கும் மூச்சை “உப்” என வெளியிட்டவனின் மனம் நேற்று ஏர்போர்ட்டில் காரிகை முறைத்ததை எண்ணி அவன் முதுகு தண்டு வடம் சிலிர்த்தது.

அறைக்கு வந்த விஷ்ணுவிற்கு இன்னும் மனம் ஆறவில்லை. எதிரி யார் என்று அறிந்தாலாவது ஏதாவது செய்யலாம். எதுவும் தெரியாமல் என்ன செய்வது. லண்டனில் இருக்கும் பொழுதே காரிகை கொஞ்சமாய்க் கோடிட்டு காட்டி இருந்தார்.

“காளான் ஓன்று முளைக்கிறது” என்று. ஆனால் அவன் அவனைப் பற்றிய யோசனையில் இருந்ததில் இந்தக் காளானை கவனிக்காமல் இருந்ததில் இன்று பல கோடி கைவிட்டுச் சென்றுவிட்டது.

அந்தக் காளான் வளர்ந்து மொத்த இடத்தையே தன் வசப்படுத்தும் என்று அறியாமல் போனான் அவன்.

அதே நேரம், அந்தக் காளான் என்று கூறப்பட்ட அவளோ. ஆம்! அவளே தான்! அப்படி ஒரு சந்தோஷத்தில் இருந்தாள். இது அவளின் முதல் வெற்றி அல்லவா! மகேந்திர மூர்த்தித் தன் மருமகளுக்கு ஒரு அடையாளத்தை அளித்திருக்கிறார்.

ஆம். மகேந்திரமூர்த்தி மருமகளே தான்! அவளின் அடையாளத்தை இன்று அவள் நிலைக்கச் செய்திருக்கிறாள். அன்று அவன் ஆடிய ஆட்டத்துக்கு இன்று முடிவு கட்ட வந்திருக்கும் சீறும் பாம்பு அவள். அதிலும் படுமோசமாக அடி வாங்கிய பாம்பு. சீற காத்திருக்கும் பாம்பு.

அதே சந்தோசத்துடன் அவனை அழைத்தாள். இதழோ அவளையும் அறியாமல் “சோட்டுமச்சான்” என்று செல்லமாக அழைத்துக் கொண்டது. அவனைப் பற்றி நன்கு அறிந்தும் கொஞ்சி கொண்டது.

“எவனாய் இருந்தால் என்ன? எமனாய் இருந்தால் என்ன?

சிவனாய் இருந்தாலும் உனக்குச் சமமாய் அமர்வேன் நான்”

வரிகள் அவன் அலைபேசியில் ஒலிக்க. எரிச்சலாகச் செல்லை எடுத்தான் விஷ்ணு. கட்டுகடங்காத கோபத்தில் இருக்க அழைப்பது யார் என்ற யோசனையுடன்.

“எஸ். விஷ்ணு காரிகை ஹியர்” எனக் கம்பீரமாக ஒலித்த அவன் குரலில்,

ஒரு நொடி அலைபேசியைக் கையில் எடுத்து பார்த்தாள் அவள். ’தான் அவனுக்குத்தான் அழைத்திருக்கிறோமா? அவனின் தோல்வி அவனைப் பாதிக்கவில்லையா?’ அவளுக்குத் தான் பெரும் யோசனையாக இருந்தது.

“ஹலோ” என அவன் மீண்டும் அழைக்க.

“ஹலோ. மிஸ்டர். காரிகை” அவள் நக்கலாக அழைக்க.

அந்தக் குரல்…

அந்தக் குரலில். உடனே உஷாராகி விட்டான் விஷ்ணு காரிகை. அப்படி இல்லை என்றால் அவன் தி கிரேட் விஷ்ணு காரிகையாய் இருக்க முடியாதே.

ஆக அவள் தான் என் காண்ட்ராக்டை பறித்ததா? எப்படி எப்படி அவளால் முடிந்தது. மீண்டும் நாடகத்தை ஆரம்பிக்கப் போகிறாளா? கோபம் கட்டுகடங்காமல் வந்தது. என்னை எதிர்கும் தைரியம் ஒரு பெண்ணாய் இருந்து அவளுக்கு எப்படி வந்தது. அன்று கோழையாய் ஓடியவள். இன்று இப்படிச் சீறுகிறாள். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்ற உக்தி அறிந்தவன் அவன்.

“ஆஹான். வாடி. என் அருமை பொண்டாட்டி.” நக்கலாகவே ஆரம்பித்தான் விஷ்ணு.

அவனின் பொண்டாட்டி என்ற விழிப்பில் ஒரு நிமிடம் அப்படியே அமைதியாகிக் போனாள். ஆனால் அடுத்த நிமிடமே ‘அவன் இல்லை’ என்ற உண்மை முகத்தில் உரைக்க.

“ஹா. பொண்டாட்டியா. யாரு. யாருக்கு பொண்டாட்டி. நான் கீர்த்தி தேவேந்திரன்டா” என்றாள் கெத்தாகத் தன் கணவர் பெயரையும் சேர்த்து.

“நீ தான்டி எவனோ ஒருத்தனான என்னை உன் புருஷன்னு சொல்லிக்கிட்டு என் பின்னாடி அலைந்த” ஏளனமாகக் கூறினான்.

அவனது பேச்சில் ஒரு நிமிடம் சோர்ந்தாள் கீர்த்தி. ஆனாலும் அடுத்த நிமிடமே வீறுகொண்டு எழுந்தாள். ‘விடமாட்டேன் உன்னை’ என்ற எண்ணத்துடன்.

ஆனாலும் அந்த “தேவேந்தரன்” என்ற பெயரில் ஒரு நிமிடம் கண்ணை இறுக மூடி திறந்த விஷ்ணு முகம் அடுத்த நிமிடமே கடினமாக மாறியது.

“என்ன காண்ட்ராக்ட் கிடைத்த ஆணவத்தில் ஆடுறியா?”  வார்த்தைகள் ஈட்டியாக வந்து விழுந்தது.

அவனின் வார்த்தையில் இருந்த பேதத்தை. அவனை நன்கு அறிந்தவளாய் வேதனையாகக் கண்ணை மூடி திறந்தவள். அடுத்த நிமிடமே அவன் பேசியதை காதில் எடுக்காமல், “தொழில் என்று வந்தால் எல்லாம் இருக்கும் பாஸ். இதே வாசகம் அடிக்கடி நீங்க யூஸ் பண்ணுறது தான் மிஸ்டர் காரிகை. அதற்குள் மறந்துட்டா என்ன?“ கேலியாகக் கூறியவள் சிறிது யோசனைக்குப் பின்,

“அப்படி விடக்கூடாதே. உன்னை மாதிரி ஆள்களுக்கு மறக்காத வார்த்தையாச்சே. அடிக்கடி இனி இந்த வார்த்தையை நினைவுப்படுத்த தான் நான் வந்துவிட்டேனே“ நக்கலாய் அவனிடம் கூறினாள்.

“ஏய். அதிகமா பேசுற. என்னைப் பத்தி சரியா தெரியல. தி கிரேட் விஷ்ணுடி“

”இனி தெரியும்டா நீ தி கிரேட் விஷ்ணுவா? இல்ல காணாம போற விஷ்ணுவான்னு உனக்கு நான் புரியவைக்கிறேன். இனி உன் தொழிலில் இறக்கம் மட்டுமே வரும். நான் வரவைப்பேன் மிஸ்டர். காரிகை. இந்தத் தொழில்… இந்த பணம் இருப்பதால் தானே நீ அந்த ஆட்டம் ஆடினாய். எல்லாம் முடித்து வைக்கிறேன்” என்றாள் கடுமையாக.

“ஹா. ஹா” அவள் பெரும் ஜோக் அடித்தது போல் பெரும் குரலெடுத்து சிரித்தவன். முன்னால் விழுந்த முடி கற்றையைக் கோதிக் கொள்ள. அந்தப் பக்கம் கீர்த்திப் பல்லைக்கடித்துக் கொண்டாள்.

“நீ ஒரு பொண்ணுடி. அதை நல்லா நியாபகம் வைத்துக் கொள்“ என்று அந்த நல்லாவில் அழுத்தம் கொடுத்து கூறியவன். மீண்டும் “உன்னை மாதிரி இப்போ தலையை நீட்டிய காளானை எல்லாம் எப்படிப் பிடுங்க வேண்டும் என்று எனக்கு நல்லாவே தெரியும்” என்றான் சீண்டலாக.

அவன் கூறியதை கேட்டு அந்த நாள் நினைவில் வர. முகம் அவமானத்தில் சிவந்தது. ஆனாலும் அதை அவனுக்குக் காட்டாமல் “ஹா.ஹா.” எனச் சிரித்த கீர்த்தி “பாக்கிறேண்டா. நீ என்னதைப் பிடிங்கி கிழிக்கிறாய்” ஏளனமாகக் கூறியவள் அழைப்பை நிறுத்தினாள்.

அவனிடம் ஆவேசமாகப் பேசியவளால் அதற்கு மேல் முடியாமல் கண்ணீர் அருவியாகக் கொட்ட. மேஜை இழுப்பறையில் இருந்த அவர்களின் திருமணப் போட்டோவை எடுத்து பார்த்தாள். கம்பீரமாக முறுக்கு மீசையுடன் மாநிறமாக இருந்த தேவேந்திரன் அவளைப் பார்த்துப் பளிச்செனச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“எப்படி உன்னால் என்னைத் தனியாக விட்டு செல்ல மனசு வந்திச்சு. ஒரு நிமிடம் கூடப் பிரிந்து இருக்கமாட்டாயே? உன் தங்கை. நம்ம ஊர் தான் உன் உயிர்னு சொல்லுவியே? எல்லாம் விட்டு எங்கே போனாய் என் அன்பே. எனது உயிர் அழிந்தால் என் ஊர் அழியும் என்றாயே? அதே போல் உன்னுடன் ஊரையும் அழைத்துச் சென்றாயோ? என் உயிரை கொண்டு உன் உயிரை எப்படி மீட்பேன் நான்?” அவனிடம் கேட்டவள் மனம் ஊமையாய் அழுதது.

மனுஷனை மனுஷன் சாப்புடுறான்டா தம்பிப்பயலே

இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்மக்கவல

சாப்பிடும் பொருளில் கலப்படம் செய்யும் காலம் ஆச்சு

இங்கே சத்தியம் நீதி நியாயம் எல்லாம் காத்தாப்போச்சு

எரியிற வீட்டில் புடுங்குறக்கூட்டம் தம்பிபயலே

நெறுப்பில் எரியிறவரைக்கும்

எத்தனை ஆட்டம் தம்பிப்பயலே

கொ(வெ)ல்வாள்.­

Leave a Reply

error: Content is protected !!