விழிகள் 02

விழிகள் 02
விமானநிலையத்தில் விழிகளை அங்குமிங்கும் சுழலவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக நின்றிருந்த சஞ்சய்யின் பார்வையில் சரியாக சிக்கினான் அவர் புதல்வன்.
“அலைஸ்…” தன் மனைவியை உற்சாகமாக அழைத்தவர், ஒரு திசையைக் காட்ட, அவர்களுக்கு பக்கத்தில் நின்றிருந்த தருண் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தியின் பார்வையும் அந்த திசையை நோக்கித் திரும்பின.
அங்கு தன் பெட்டியைத் தள்ளியவாறு “ஓ கோட்! கஷ்டப்பட்டு மெய்ன்டெய்ன் பண்ற என் அழகே போயிரும் போல! ஃப்ளைட்லயிருந்து இறங்கினதுமே சூடான கடாய்ல வச்ச மாதிரி இருக்கு.” வாய்விட்டு புலம்பிக்கொண்டு கடுகடு முகத்தோடு அகஸ்டின் வர, “இனி அடிச்சி கூப்பிட்டாலும் இத்தாலிக்கு போக கூடாது.” வாய் கொள்ளா புன்னகையுடன் அகஸ்டினை விட்டு ஒரு அடி தள்ளியே நடந்து வந்துக்கொண்டிருந்தான் மஹி.
இருவருடைய பார்வைகளும் சரியாக தம் அத்தை, மாமாக்களின் மீது பதிய, பெரியவர்களின் அருகில் அவர்கள் வந்ததும்தான் தாமதம், “வெல்கம் டூ இந்தியா.” என்றவாறு இருவரையும் அணைத்துக்கொண்டார் சஞ்சய். அலைஸிற்கோ பெற்ற மகனை பத்து வருடங்கள் கழித்து நேரில் பார்ப்பதில் விழியோரம் விழிநீரே கசிந்துவிட்டது.
என்னதான் சொந்த ஊரை அகஸ்டின் வெறுத்தாலும் அம்மா பாசம் இல்லாமல் போகுமா என்ன?
“மம்மி…” என்று அகஸ்டின் அலைஸை அணைத்துக்கொள்ள, இங்கு மஹியின் விழிகள்தான் அவர்களுக்கு பின்னால் அந்த ஒரு நபரைத் தேடி அலைப் பாய்ந்துக்கொண்டிருந்தன. தேடிய நபரைக் காணாது, ‘ச்சே!’ என்று சலித்தவாறு அவன் விழிகள் எரிச்சல்பட,
“எப்போ பாரு ஃபிட்னஸ்னு ஒழுங்கா சாப்பிடாம மெலிஞ்சி போயிருக்காங்க தரு நம்ம பசங்க! எல்லாம் மாயாவ சொல்லணும், வேலை வேலைன்னு குழந்தைகள கவனிக்காம விட்டிருக்கா. இன்னும் இரண்டே மாசம்தான், நான் சமைச்சி போடுறதை சாப்பிட்டு கொழுக்கு மொழுக்குன்னு பப்ளியா இருக்க போறாங்க பாருங்க!” என்ற கீர்த்தியின் கூற்றில் ‘ஙே’ என்று அகஸ்டின் அவரை ஒரு பார்வைப் பார்க்க, தருணின் பார்வை முறைப்புடன் அகஸ்டினைதான் வலம் வந்தது.
காதில் கடுக்கன், உடலில் ஒரு இடம் விடாது பச்சைக்குத்தி, கழுத்தில் அடுக்கடுக்காக மாலை என்றிருந்தவனை ஒற்றை புருவத்தை உயர்த்திய வண்ணம் மேலிருந்து கீழ் தருண் அளவிட, அகஸ்டினை முட்டியால் தட்டி “டேய் அகஸ்த்து, என் அப்பாவையே உன்னால சமாளிக்க முடியாது. இவரெல்லாம் ரொம்ப பயங்கரமான ஆளுன்னு மாம் சொல்வாங்க. அதுவும் உன்னையே வச்ச கண்ணு வாங்காம ரசிச்சிக்கிட்டு இருக்காரு மாமா. க்யார்ஃபுல்!” மஹி அவனின் காதில் கிசுகிசுக்க, உள்ளுக்குள் பக்கென்று இருந்தாலும் “முறைச்சா பயந்துருவோமா?” என்று மெதுவாக முணுமுணுத்தவாறு விறைப்பாகவே முகத்தை வைத்திருந்தான் அவன்.
அடுத்த சில நிமிடங்களில் இளைஞர்களை வீட்டுக்கு அழைத்து வந்திருக்க, ஆரத்தியெடுத்து கீர்த்தி அழைக்கும் வரை கூட மஹிக்கு பொறுமை இல்லை. வேகமாக வந்தவன், மீண்டும் பார்வையை சுழலவிட்டு அந்த நபரைத் தேட, இப்போதும் அவனுக்கு ஏமாற்றம்தான்!
ஆனால், மஹியின் மனதின் புலம்பல் கடவுளுக்கு கேட்டு விட்டது போலும்!
“ஆத்விக்கு ஏதோ மொடலிங் ஷூட்டிங்காம்! பக்கத்து ஊர் வரைக்கும் போயிருக்கா. இன்னைக்கு வர்றேன்னுதான் சொன்னா. என்னாச்சுன்னு தெரியல. நீங்க போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” கீர்த்தி சொல்ல, சோர்ந்திருந்த மஹியின் முகமோ அவர் சொன்னதில் பளிச்சென்றாக, அகஸ்டினுக்கோ முப்பத்திரெண்டு பற்களையும் விளம்பரத்துக்கு காட்டுவது போல் காட்டி இழித்துக்கொண்டிருந்தவனை ‘என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது.
வேகவேகமாக குளித்து தயாராகவென கழிவறைக்குள் செல்லவிருந்த மஹியை பிடித்திழுத்து கட்டிலில் தள்ளி, அகஸ்டின் குளித்து உடை மாற்றி ஹோலுக்கு வர, “அகி…” என்றழைத்தார் அலைஸ்.
அவனும் தன் அம்மாவை கேள்வியாக நோக்க, “நாளைக்கு காலையில தயாரா இரு! கம்பனிக்கு போகலாம்.” என்று அவர் சொன்னதும், அவனுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
“வாட்! நான் இப்போதான் வந்திருக்கேன். கொஞ்சநாள் இந்தியாவை சுத்தி பார்த்துட்டு அப்றம்…” பேசிக்கொண்டே சென்ற அகஸ்டினின் வார்த்தைகள், “நீ என்ன டூரா வந்திருக்க? தப்பு பண்ணிட்டு தண்டனையா இங்க வந்திருக்க.” என்ற தருணின் கண்டிப்புக் குரலில் அப்படியே நின்றன.
“லுக், வீட்டுல இருந்து நீ ஒன்னும் கிழிக்க போறதில்லை. ஃப்ரீ வைஃபையில வெட்டியா வீடியோஸ், மீம்ஸ் பார்த்துக்கிட்டு இருக்க போற. சோ, மோர்னிங் அலைஸ் கூட கம்பனிக்கு போ!” தருண் அழுத்தமாக சொல்லிவிட்டு நகர, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தவனின் சிவந்த முகமே அவனின் கோபத்தின் அளவை பறைசாட்டியது.
சஞ்சய்யோ தன் மகனின் நிலையைப் பார்த்து வாயைப் பொத்திச் சிரிக்க, அவனுக்குதான் பிபி எகிறத் தொடங்கியது.
‘ச்சே!’ என்று சலித்தவாறு அங்கிருந்து அவன் நகர போக, “தீரா…” என்ற அழைப்போடு இரு மெல்லிய கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்துக்கொண்டன.
முதலில் அதிர்ந்து விழித்தவன், பின் “ஹவ் டேர் யூ…” என்று ஏற்கனவே தன் மாமா மீதிருந்த கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்து தன்னை அணைத்த கரங்களை பிடித்து தள்ளிவிட்டிருக்க, அந்த கரங்களுக்கு சொந்தமானவளோ அப்படியே தரையில் விழுந்திருந்தாள்.
“ஆங் அம்மா…” இடுப்பைப் பிடித்துக்கொண்டு முணங்கியவாறு தன்னெதிரே நின்றிருந்த அந்த ஆஜானுபாகுவான ஆண்மகனை விழிகளை சுருக்கி அவள் நோக்க, அப்போதுதான் மாடியிலிருந்து இறங்கி வந்துக்கொண்டிருந்த மஹியின் விழிகளுக்கு தரையில் விழுந்து வலியில் முணங்கிக்கொண்டிருந்தவள் கண்ணில் சிக்கினாள்.
“ஆதி…” என்று பதறியவாறு அவளை நோக்கி ஓடி வந்தவன், மற்றவர்கள் பதறியபடி அவளை தூக்கும் முன் வேகமாகச் சென்று அவளை தூக்கி நிறுத்தி அணைத்திருக்க, “தீரா…” என்றழைத்தவாறு வலி மறந்து அவனை அணைத்துக்கொண்டாள் ஆத்விகா.
அவளுடைய அணைப்பு நீண்டநாட்கள் கழித்து தன் சிறுவயது தோழனை சந்தித்த பரவசத்தில் இருந்ததென்றால், அவனுடைய அணைப்போ நட்பையும் தாண்டிய உறவில் பல வருட பிரிவின் வலியை போக்கும் விதமாக இருந்தது.
ஆனால், அகஸ்டின்தான் ‘ஙே’ என இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறு நின்றிருந்தான். அவனைப் பார்த்தவாறு “இவன் இன்னும் திருந்தல்லையா?” மஹியின் காதில் ஆத்வி கிசுகிசுக்க, அப்போதுதான் அகஸ்டினின் புரியாதப் பார்வையை கவனித்த மஹி, “டேய் என்ன பெக்க பெக்கன்னு விழிச்சிக்கிட்டு இருக்க? இது நம்ம ஆதிடா, ஆத்வி. ஆத்விகா” என்று புரிய வைக்க, “ஓஹோ…” நீட்டி முழக்கியவாறு அவளை அளவிட்டான் அகஸ்டின்.
“அப்போ அவசரத்துல செஞ்ச வடை மாதிரி கொழுக்கு மொழுக்குன்னு அத்தை கம்பனியோட மொத்த மேக்அப்பையும் முகத்துல இரண்டு இன்ச்சுக்கு அப்பி திரிஞ்சிக்கிட்டு இருக்குமே ஒரு நடமாடும் மேக்அப் பார்லர், அது இவ தானே!” தீவிர முகபாவனையுடன் தாடையை நீவி விட்டவாறு அகஸ்டின் கேட்க, ஆத்விக்கோ சற்றும் கோபம் வரவில்லை.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்… அலைஸ் ஆன்ட்டி இத்தாலிலேயே பொறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்தான் பேசுவாங்க. ஆனா, இங்க பொறந்துட்டு ஏதோ அவுஸ்திரேலியாவுல பொறந்து தமிழே தெரியாத மாதிரி தப்புத் தப்பா இங்லீஷ் பேசிட்டு திரிவானே போலி வெள்ளைக்காரன், அது இவன் தானே!” பதிலடி கொடுத்து கேலியாக ஆத்வி சிரிக்க, சத்தமாகவே சிரித்துவிட்டான் மஹி.
ஆனால், அகஸ்டினுக்குதான் பொறுக்க முடியவில்லை. “கொழுப்பு! திமிரு! அப்படியே அவ அப்பா மாதிரி.” வாயிற்குள் முணுமுணுத்தவாறு விறுவிறுவென்று தனதறையை நோக்கி அவன் செல்ல, போகும் அவனையே ரசனையாக பார்த்திருந்தாள் ஆத்வி. ஏனோ சிறுவயதிலிருந்தே அகஸ்டின் மேல் அவளுக்கு ஒருவிதமான ஈர்ப்பு!
பல பேர் நம்மை நெருங்கி வந்தாலும் நம்மை விலக்கி வைப்பவர்களிடம்தான் நம் மனம் செல்லும்’ என்பது உண்மைதான் போலும்! அவன் சிறுவயதிலிருந்து அவளைக் கண்டுக்கொண்டதே இல்லை. அவளும் ஆரம்பத்தில் அவனை கண்டுக்கொள்ளாது இருந்தாலும், ஏனோ ஒரு வயதில் அவளை தள்ளி நிறுத்தும் அகஸ்டினின் பக்கமே அவளுடைய மனம் சாய்ந்தது.
ஆத்வியின் பார்வை அகஸ்டினை ஆர்வமாக பார்த்திருந்ததென்றால், மஹியின் பார்வையோ ஆத்வியை காதலாகப் பார்த்திருந்தது. அவனுடைய முதல் காதல் அவள்! அன்று இந்தியாவிலிருந்து செல்ல அவன் மறுப்பு தெரிவித்ததும் அவளுக்காகதான். இன்று தண்டனையை கூட சந்தோஷமாக ஏற்று இத்தனைநாள் பிரிந்திராத அம்மா, அப்பாவை பிரிந்து அதே இந்தியாவுக்கு அவன் வந்ததும் அவனவளுக்காகதான்.
இந்த முக்கோண காதலில் சிக்கித் தவிக்க போகிறவர் யாரோ?
அடுத்தநாள் காலை,
“ஆஆ…” என்று கொட்டாவி விட்டபடி ஹோலில் டிப்டாப்பாக தயாராகி அரைத்தூக்கத்தில் அகஸ்டின் அமர்ந்திருக்க, “கிளம்பலாமா?” என்று கேட்டுக்கொண்டே வந்த அலைஸை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“மாம், வெயிட்! சைத்து வராம எப்படி?” அவன் சொல்ல, “மஹி எதுக்கு?” என்ற தன் தாயின் கேள்வியில் மேலும் குழம்பிப் போனவன், “பின்ன? அவன் இல்லாம எப்படி?” பதில் கேள்வி கேட்டு வைத்தான்.
அதில் ஆழ்ந்த மூச்செடுத்தவர், “மஹி எப்போ கம்பனிக்கு வரணுமோ, அப்போ வருவான். அதுவும், அவனுக்கு இந்த கம்பனியில ஆர்வம் இல்லைன்னு மாயா சொன்னா. அவனுக்கு எதுல ஆர்வம் இருக்கோ, அதை பண்ணுவான். என்ட் யூ, ரொம்ப கேள்வி கேக்காம என் பின்னாடி வா! நேரமாச்சு.” என்று சொல்லி முன்னே நடக்க,
“வாட்! இது போங்கு! எனக்கும்தான் இந்த கம்பனியில இன்ட்ரஸ்ட் இல்லை. என்னை மட்டும் வற்புறுத்தி கூட்டிட்டு போறீங்க. இது கொஞ்சமும் நியாயம் இல்லை. மம்மி…” கத்திக்கொண்டே சென்றவனின் கத்தல்களை கொஞ்சமும் அவன் மாதா கண்டுக்கொள்ளவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் “ஐரா கோஸ்மெடிக்ஸ்” என்று பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த அந்த பெரிய கண்ணாடிகளிலான நிறுவனத்தின் முன் கார் நிற்க, அதிலிருந்து இறங்கியது என்னவோ அலைஸ் மட்டும்தான். அங்கிருப்பவர்களுக்கு தெரியக் கூடாதென்று வரும் வழியிலேயே அவனை இறக்கியல்லவா விட்டிருந்தார்!
அகஸ்டினின் மனநிலையை சொல்லவா வேண்டும்! நடந்து வந்ததில் வியர்த்து சட்டை நனைந்திருக்க, இறுகிய முகத்தோடு நிறுவனத்திற்குள் நுழைந்தவனை சிசிடீவி கேமரா வழியாக பார்த்திருந்த அலைஸுக்கு இவனை திருத்த இதை விட்டால் வேறு வழியில்லை என்றுதான் தோன்றியது.
உள்ளே வந்தவனை அலைஸின் காரியதரிசி அலைஸின் அறைக்கு அழைத்துச் சென்று விட்டிருக்க, உள்ளே விறுவிறுவென நுழைந்தவன், “என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு, கேனயன் மாதிரியா?” கடுகடுத்தவாறுச் சென்று அலைஸின் இருக்கையில் அமர, ஒற்றை புருவத்தை உயர்த்திய தோரணையில் அவன் முன் வந்து நின்றார் அவர்.
அவனோ அந்த சுழலும் நாற்காலியில் சர்ரென்று சிறுகுழந்தைப் போல் சுழன்றவாறு தன் தாயை கேள்வியாக நோக்க, “எழுந்திரு!” என்ற அவரின் வார்த்தைகளில், “எதுக்கு?” அலட்சியமாகக் கேட்டான் அகஸ்டின்.
“இதுல உட்காருற அளவுக்கு சார் அப்படி ஒன்னும் சாதிச்சி கிழிக்கல்ல. போ, போய் அந்த சாதா ச்செயார்ல உட்காரு! இல்லைன்னா, உன்னை உன் அப்பா கம்பனிக்கு அனுப்புறதுதான் எனக்கிருக்குற ஒரே வழி.” அலைஸ் ஒன்றை நினைத்து ஏளனப்புன்னகையோடுச் சொல்ல, அதை நினைத்துப் பார்த்த அகஸ்டினுக்கு பக்கென்றானது.
‘ஆத்தாடி ஆத்தா! அங்கேயா? அந்த முரட்டு பீஸு அங்க இருப்பாரே! ரோஹன் மாமா என்ன போட்டுக் கொடுத்தாரோ தெரியல, வந்ததுலயிருந்து முறைச்சிக்கிட்டே இருக்காரு. வேணா அகி, ஹீ இஸ் வெர்ரி டேன்ஜரஸ். அம்மா பக்கத்துல இருக்குறதுதான் நமக்கு சேஃப்.’ உள்ளுக்குள் தருணை நினைத்து பயந்து திட்டம் போட்டவாறு ஒரு முடிவுக்கு வந்தவன், இருக்கை பிடிகளில் கைகளை ஊன்றி விசிலடித்தவாறு எழுந்து வேறு இடத்தில் சமத்தாக சென்றமர்ந்தான்.
அலைஸும் வெற்றிச் சிரிப்போடு தனதிருக்கையில் அமர்ந்து, “லுக் அகி, நம்ம கம்பனி பத்தி உனக்கு தெரியாதது இல்லை. நம்ம ஐரா கோஸ்மெடிக்ஸ்ஸோட ஃபோர்மியூலாவ திருட பல பேர் ட்ரை பண்றாங்க. அந்த அளவுக்கு பிஸ்னஸ் வேர்ல்ட்ல நாம முதலிடத்துல இருக்கோம்…” என்று நிறுவனத்தைப் பற்றி பேசிக்கொண்டேச் செல்ல, “ஸ்டாப்!” என்ற தன் மகனின் வார்த்தையில் பேச்சை நிறுத்தி புரியாது நோக்கினார்.
“எதுக்கு இப்போ வளவளன்னு கொழகொழன்னு பேசிக்கிட்டு? கம்பனியில இருக்குற பிரச்சினைய சரி பண்ணி கம்பனிய காப்பாத்தணும். இதுக்காக உங்களுக்கு இந்த அகஸ்டினோட ஹெல்ப் தேவைப்படுது. அதானே! இதுக்கு எதுக்கு சுத்தி வளைச்சி பேசிக்கிட்டு? நேரடியாவே ஹெல்ப்புன்னு கேளுங்க.” தெனாவெட்டாகச் சொன்னவாறு இல்லாத கோலரை அவன் தூக்கி விட்டுக்கொள்ள, அலைஸின் முகத்தில் ஈ ஆடவில்லை.
‘ஙே’ என்று அவனையேப் பார்த்திருந்தவரின் மனமோ, ‘ஓ கோட்! இவனை எந்த நேரத்துல பெத்தேன்னு தெரியலயே!’ என்று உள்ளுக்குள் புலம்பித் தள்ளிவிட்டது.
“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” தொண்டையை செறுமியவாறு தன் காரியதரிசையை அழைத்தவர், “இவனுக்கான இடத்தை காட்டுங்க.” என்று சொல்லி, “வாவ்! மை கேபினா? சூப்பர் சூப்பர்!” என்று விசிலடித்தவாறு சென்ற தன் மகனின் பேச்சில் உண்டான தலை வலியில் நெற்றியை நீவி விட்டுக்கொண்டார். ஆனால், அடுத்த பத்தாவது நிமிடமே கோபமாக மூச்சு வாங்கியவாறு அவர் முன் வந்து நின்றான் அகஸ்டின்.
“என்ன? இல்லை, என்னன்னு கேக்குறேன். இந்த கம்பனி டிரெக்டரோட பையன் மத்தவங்களுக்கு சமமா சாதாரணமான ஒரு மேசையில உட்கார்ந்து வேலை பார்க்கணுமா? ஐ வில் நொட் அக்செப்ட் திஸ். எனக்குன்னு தனி கேபின் கொடுங்க.” வீராப்பாக அகஸ்டின் கேட்க, அலட்சியமாக அவனை ஏறிட்டார் அலைஸ்.
“லுக் அகி, இந்த கம்பனிய பொருத்தவரைக்கும் நீயும் எல்லாரையும் மாதிரிதான். என்னோட பையன்னு உனக்கு இங்க எந்த சலுகையும் இல்லை. அதுவும், பனிஷ்மென்ட்டாதான் ரோஹன் அனுப்பியிருக்காரு. இதுல சாருக்கு வசதி கேக்குதோ? ஒழுங்கா போய் வேலைய பாரு! இல்லன்னா ஆர்.டீ.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்லதான் இனிமே உனக்கு ட்ரைனிங்.” என்றுவிட்டு அவர் பாட்டிற்கு கணினித்திரையில் பார்வையைப் பதிக்க, அகஸ்டினின் சிவந்த முகமோ கோபத்தில் மேலும் சிவந்து போனது.
கோபமாக தரையை உதைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி அகஸ்டின் விறுவிறுவென சென்றுக்கொண்டிருக்க, சரியாக ஓடி வந்த வேகத்தில் கால் இடறி அகஸ்டினின் மார்பிலேயே முட்டி மோதி நின்றாள் அவள்.
அவளுடைய கார் கூந்தல் முகத்தை மறைத்திருக்க, அதை ஒதுக்கி “ஆங்…” என்று நெற்றியை நீவி விட்டவாறு நிமிர்ந்து பார்த்தவளின் விழிகளோ தன்னையே உக்கிரமாக முறைத்து நின்றிருந்த சாம்பல்நிற விழிகளை உடையவனின் விழிகளைப் பார்த்ததும் சாரசர் போல் விரிந்தன.
“இது… இது அவன்தானே! அதே நைஸ் ஐஸ்.” அப்பட்டமாக அவன் விழிகளையே விழுங்குவது போல் பார்த்தவாறு அவள் நிற்க, “முட்டாள், கண்ணை என்ன பிடறியில வச்சிருக்கியா? நீ மோத என் நெஞ்சுதான் கிடைச்சுதா இடியட்!” கத்தி அவளை தள்ளிவிட்டு அகஸ்டின் நகர்ந்திருக்க, இவளுக்குதான் ஒன்றும் புரியவில்லை.
‘ஐயோ பாவம்! பார்க்க எம்புட்டு அழகா இருக்கான் என் தினு. ஆனா என்ன, கொஞ்சம் மனநிலை சரியில்லை போல’ போகும் அவனையேப் பார்த்து பரிதாபப்பட்டவாறு நின்றுக்கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் ஒன்று நியாபகத்திற்கு வந்தது.
‘ஆத்தீ! நம்ம நிலைமையே பரிதாபகரமாதான் இருக்கு. இதுல இது ரொம்ப முக்கியம்! முதல்ல கத்துக்கிட்ட நாலு வார்த்தை இங்லீஷ பேசி இன்டர்வியூல செலெக்ட் ஆக பாரு!’ தனக்குத்தானே பேசி, நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்கு ஓடினாள் அந்த ஒருத்தி.