விழிகள் 03

விழிகள் 03
அன்றிரவு,
உணவுமேசையில் மொத்தக் குடும்பமும் அமர்ந்திருக்க, “அகி, அடுத்த ஒரு வாரத்துக்கு உனக்கு ட்ரைனிங்தான். கொஞ்சம் கத்து தந்தா போதும், புரிஞ்சிக்குவ. அப்றம், உனக்கான இடத்துல நீ இருந்துக்கலாம்.” அலைஸ் சொல்ல,
‘க்கும்! அப்படியே தனி கேபின் தந்துட்டாங்க! யாருக்கு வேணும் அந்த வீணா போன சீட்?’ நொடிந்துக்கொண்டவாறு மேசையில் பாத்திரத்திலிருந்த இட்லியை முகத்தை சுருக்கிப் பார்த்தான் அகஸ்டின்.
“ஓ கோட்! இட்லியா? நானெல்லாம் இத்தாலில பர்கர் பீஸான்னுதான் நைட் டின்னரே எடுத்துப்பேன். வாட் டு டூ? ஆல் மை ஃபேட்!” ஏளனமாகச் சொல்லி இரண்டு இட்லிகளை தட்டில் அவன் வைக்க, “ஆஹான்! ரோஹன் சொன்னான், நீ தப்பு பண்ணா பனிஷ்மென்ட்டா பழைய சோத்தை வடிச்சி தயிர்சாதம்தான் போடுவாங்களாமே! ஆல்மோஸ்ட் பாதி மாசம் உனக்கு சாப்பாடு பழைய சோறுதான்னு சும்மா சொல்லிக்கிட்டு இருந்தான்.” தன் மருமகனின் காலை வாரினார் தருண்.
மஹியோ வாயைப் பொத்திச் சிரிக்க, ‘மாமா…’ உள்ளுக்குள் குமுறியவாறு பற்களை கடித்துக்கொண்டான் அவன்.
சரியாக, “ஹாய் எவ்ரிவன்!” என்றபடி ஆத்வி வந்தமர, “ஹாய் ஆதி.” மென்புன்னகையுடன் சொன்னவாறு தன்னவளை ரசிக்க ஆரம்பித்தான் மஹி. இரவு உடையில் தலைமுடியை கொண்டையிட்டு முகப்பூச்சு இல்லாமலே ஜொலிக்கும் ஆத்விகாவை அவனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
தன் கையில் பொத்தி வைத்திருந்த அவளுக்காக தான் செய்த பெண் உருவத்திலான சிறு மெழுகு பொம்மையை அவளை நோக்கி நீட்டினான் மஹி. “பிடிச்சிருக்கா?” அதை வாங்கி திருப்பித் திருப்பி ஆர்வமாக பார்த்திருந்தவளிடம் அவன் கேட்க, “வாவ்!” அவளிதழ்கள் புன்னகையுடன் முணுமுணுத்தன.
“ரொம்ப அழகா இருக்கு.” ஆத்வி விழிகளை விரித்துச் சொல்ல, பெரியவர்களுக்கு கேட்காத வகையில், “உன்னை விடவா?” மஹி ரசனையுடன் கேட்க, ஏனோ அப்போதும் அவனின் மனம் அவளுக்கு புரியாமல்தான் போனது.
“ஆஹான்! நீயும் அழகாதான் இருக்க தீரா. லுக் ஸ்மார்ட்.” மஹியின் தோளைத் தட்டி ஆத்வி சொல்ல, பக்கத்திலிருந்ததால் இவர்களின் சம்பாஷனைகள் காதில் விழுந்ததில் அகஸ்டினுக்குதான் அத்தனை எரிச்சல்!
“உருட்டு! உருட்டு! குளிர்ச்சியான உருட்டு!” எரிச்சலாக அவன் முணுமுணுக்க, சட்டெனத் திரும்பி அகஸ்டினை ஏறிட்டுப் பார்த்த ஆத்வி, “நொட் பேட்! நீ கூட மொடலிங் வரலாம்.” இதழுக்குள் மறைக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, கெத்தாக கோலரை தூக்கி விட்டுக்கொண்டான் அகஸ்டின்.
“ஐ க்னோ, ஐயா பண்ற வர்க்அவுட் அப்படிம்மா.” தெனாவெட்டாக அவன் சொல்ல, அவனின் சாம்பல் நிற காந்த விழிகளை ஆழ்ந்து நோக்கினாள் அவள். அந்த விழிகள் மேல் அந்த ஒருத்தி போல் இவளுக்கும் ஈர்ப்பு அதிகம்.
உணவை மெதுவாக மென்று விழுங்கியவாறு ஓரக்கண்ணால் ஆத்வி, அகஸ்டினையே பார்த்திருக்க, அவளையே கவனித்துக்கொண்டிருப்பவனின் விழிகளில் சிக்காமலா போகும்?
அவளை நோக்கிய தன் ரசனைப் பார்வையை அல்லவா அவளின் அகஸ்டினை நோக்கிய பார்வையில் அவன் உணர்கிறான்! பக்கென்றானது அவனுக்கு.
‘ஆதியோட பார்வை… ச்சே ச்சே! அப்படியெல்லாம் இருக்காது. ஆதிக்கு என்னைதான் பிடிக்கும். அதெப்படி அவன் மேல? இதுவரைக்கும் இரண்டு பேரும் சரியா பேசிக்கிட்டது கூட கிடையாது. அப்றம் எப்படி? இருந்தாலும் ஆதி எனக்கு சொந்தமானவ! என்னால அகிக்காக இருந்தாலும் எப்…எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? சீக்கிரம் நம்ம லவ்வ சொல்லுவோம். ஒருவேள… ச்சீ! கண்டிப்பா இருக்காது. ஆதி என்னை மறுக்க மாட்டா.’
உணவை அளந்தவாறு தனக்குள்ளேயே புலம்பிக்கொண்டிருந்தவன், அப்போது அறியவில்லை, தன் காதல் சொல்லாமலே கருகப்போவதை.
அடுத்த ஒரு வாரம் அலைஸின் காரியதரிசி கீதாவே வேலை தொடர்பாக அவனுக்கு சில பாடங்களை எடுக்க, கர்ம சிரத்தையாய் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டான் அகஸ்டின். காரணம், அந்த காரியதரிசி அவனை விட இரண்டு வருடங்கள் வயதில் மூத்த திருமணமாகாத யுவதி. அத்தனை சிரத்தையாய் கேட்டுக்கொண்டவனுக்கு ‘மூளையில் உரைத்ததா?’ என்று கேட்டால் கேள்விக்குறிதான்.
ஒருவாரம் கழிந்த நிலையில், அன்று காதில் கேட்ட அலாரம் சத்தத்தில் போர்வையிலிருந்து கையை மட்டும் வெளியே நீட்டி அலாரத்தை அணைத்த அகஸ்டின், முகம் கடுகடுக்க எழுந்தமர்ந்தான்.
‘என் அக்கா க்ரஷ் கீதா, எனக்கு பிடிச்ச ரோயல் என்ஃபீல்ட். இதுக்காக மட்டும்தான் இந்த அகஸ்டின் அமைதியா இருக்கான். இல்லைன்னா…’ இதுவரை சூரியனே கதறிமளவிற்கு மாலை வரை தூங்குபவன், தூக்கம் கெட்டு விட்ட கடுப்பில் கத்திவிட்டு குளியலறைக்குள் நுழைய,
அதேசமயம், நெருக்கமாக கட்டப்பட்ட வீடுகள் இருக்கும் பகுதியிலுள்ள அந்த சின்ன செங்கல் வீட்டில் தன் தந்தையின் படத்திற்கு முன் கண்களை மூடி நின்றிருந்தாள் அவள்.
“அலீஷா…” என்ற தன் தாயின் குரலில் பட்டென்று விழி திறந்தவளின் கண்கள் கலங்கிப் போயிருந்தன. அதைப் பார்த்த அலீஷாவின் அம்மா மாதவிக்கும் சட்டென விழிகள் கலங்க, வாஞ்சையுடன் அவள் தலையை வருடிவிட்டார்.
“உன் அப்பா உன்னை நினைச்சி ரொம்ப சந்தோஷப்படுவாரு.” என்ற மாதவி வட இந்தியாவைச் சேர்ந்த வீராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர். ஒரு விபத்தில் வீரா இறந்துவிட, மாதவி வேலைக்குச் செல்ல, அவருக்கு உதவியாக அலீஷாவும் சின்னச் சின்ன வேலைகளைப் பார்த்தாள்.
இப்போது இரண்டு நேர்முகத்தேர்வுகளைக் கடந்து, சிலரின் சிபாரிசுகள் மூலமாக ஐரா நிறுவனத்தில் அவளுக்கு வேலை கிடைத்திருக்க, வெள்ளை சுடிதாரில் ஜொலிக்கும் தன் மகளைப் பார்த்தவருக்கு ‘இத்தனை அழகா என் மகள்!’ என்று சற்று கர்வமாகத்தான் இருந்தது.
மாதவி மாநிறமாக இருந்தாலும் அலீஷாவோ அப்படியே வீராவின் குடும்பத்து நிறம். பிரம்மன் வடித்த அழகு சிலையவளை யாராயினும் ஒருநிமிடம் திரும்பிப் பார்த்துவிட்டு செல்வர்.
“ரொம்ப அழகாயிருக்கடா!” புன்னகையுடன் நெட்டி முறித்தவர், “இங்க பாரு அலீஷா, வேலையில ரொம்ப கவனமா இருக்கணும். வேலையில மட்டும்தான் உன் கவனம் இருக்கணும். நியாபகம் இருக்குல்ல, அப்பாவ குருவா நினைச்சி உன் வேலைய கச்சிதமா முடி! அப்போதான் பெரிய பேர் வாங்க முடியும்.” என்றுவிட்டு உணவுப்பொட்டலத்தை அவளிடம் நீட்ட, தன் தாயின் கன்னத்தில் நச்சென்று முத்தமிட்டு வெளியில் ஓடினாள் அவள்.
சிரித்துக்கொண்டே வெளியில் வந்தவளின் முகம், அங்கிருந்த ஒருசிலரின் இவளை நோக்கிய அதிருப்தியான பார்வையில் சட்டென்று வாடிவிட்டது. இது ஒன்றும் புதிதல்ல, சிறுவயதிலிருந்து அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான்.
தன்னை சுதாகரித்து அப்பார்வைகளை புறக்கணித்தவள், தான் வசிக்கும் தெருவிலிருந்து சற்று தூரமாக நடந்துச் சென்றே ஆட்டோ பிடித்தாள்.
ஐரா நிறுவனத்தை நோக்கி வண்டிச் செல்ல, சரியாக சிவப்பு விளக்கு ஒளிரப்பட்டு எல்லா வாகனங்களும் வீதியில் பச்சை விளக்குக்காக காத்திருந்து நின்றிருந்தனர்.
ஆட்டோவிலிருந்த அலீஷாவுக்கோ மனம் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தது. நெற்றியை எரிச்சலாக நீவி விட்டுக்கொண்டவள், தான் கொண்டு வந்த தண்ணீர்போத்தலில் சிறிது நீர் அருந்தினாள். கவனத்தை திசைத் திருப்பவென காரின் பின்சீட்டிலிருந்து பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறு பெண் குழந்தையின் மேல் பார்வையை பதித்தாள் அவள். ஆனால், அடுத்தகணம் வெறுமை சூழ்ந்தது போலாகிவிட்டது அவள் மனம்.
அதேநேரம் இவளிருந்த வண்டிக்கு சற்று முன்னால் தள்ளி தன் புல்லட்டை நிறுத்தியிருந்தான் அகஸ்டின். அவனுக்கும் அதே உணர்வுதான். சுற்றி எதையோ மனம் தேடுவது போலான உணர்வு!
‘ச்சே!’ என்று சலித்தவாறு தன் வண்டியின் சைட் கண்ணாடியைப் பார்த்தவனின் விழிகளில் சரியாக சிக்கியது தன் பின்னால் நின்ற ஆட்டோவிலிருந்த வெள்ளை சுடி. அதைப் பார்த்ததுமே ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு! இந்த பத்து வருடங்களாக வெள்ளை சுடிதார் அணிந்த எந்தப் பெண்களைப் பார்த்தாலும் அவனுள் தோன்றும் ஒரு உணர்வு அது.
‘நான் என்ன நினைக்கிறேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குதே… ச்சே! ஐ ஹேட் திஸ் ஃபீலிங்.’ தனக்குள் கடிந்துக்கொண்டவாறு மெதுவாக கண்ணாடியினூடாக அந்த வெள்ளை சுடிதாருக்குச் சொந்தமான முகத்தைப் பார்க்க இவன் முயற்சிக்க, பச்சை விளக்குக்கு மாறி எல்லா வாகனங்களும் செல்லத் தயாராகின.
உடனே, இவனும் பெரிய சத்தத்தோடு புல்லட்டை முறுக்கி மின்னல் வேகத்தில் அனைத்தையும் முந்திக்கொண்டு புறப்பட, தன் கண்ணிலிருந்து மறையும் வரை பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியையே ஒற்றை விழியிலிருந்து விழிநீர் சொட்ட பார்த்திருந்தாள் அலீஷா.
அடுத்த சில நிமிடங்களில், தனக்கான மேசையில் அமர்ந்த அகஸ்டின், அங்கிருந்த மொத்தப் பெண்களின் பார்வையும் தன் மீதுள்ளதை கூட உணரவில்லை. ‘யோவ் மாமா! உனக்கு இருக்குய்யா. க்ளப், பப்புன்னு ஜாலியா ஃப்ரென்ட்ஸுங்க கூட திரிஞ்சிக்கிட்டு இருந்தவனை இப்படி கொண்டு வந்து உட்கார வச்சிட்டீங்கல்ல. தூக்கம் தூக்கமா வருதே!’ தனக்குள்ளே புலம்பியவாறு இருந்தவனின் தோளை இருவிரல்கள் சுரண்டியது.
அவனும் பக்கவாட்டாகத் திரும்பி தன் பக்கத்து மேசையில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்க்க, “மை நேம் வெங்கட். இஃப் யூ டோன்ட் மைன்ட் நான் ஒன்னு கேக்கலாமா?” வெங்கட் கேட்க, கேள்வியாக நோக்கின அகஸ்டினின் விழிகள்.
“அது… நீங்க அப்படியே நம்ம மேடத்தோட ஊரைச் சேர்ந்தவராட்டம் இருக்கீங்க. அவங்களோட தூரத்து சொந்தமா என்ன? என்ட், இங்க வேலை கிடைக்குறது அவ்வளவு சுலபம் இல்லை. ஒன்னு நல்ல க்வொலிஃபிகேஷன் இருக்கணும். இல்லைன்னா, பெரிய இடத்து சிபாரிசு இருக்கணும். ஆனா, நீங்க சட்டுபுட்டுன்னு வேலையில சேர்ந்துடீங்க. அதான்…” வெங்கட் தன் சந்தேகத்தைச் சொல்லி இழுக்க,
‘பெத்த மகனையே அவங்களுக்கு தூரத்து சொந்தமான்னு கேக்குறான் பாரு! என்ன ஒரு ஆணவம்?’ உள்ளுக்குள் நினைத்தவாறு இமைக்காது வெங்கட்டையே பார்த்திருந்த அகஸ்டினுக்கு ஒரு யோசனை தோன்றியது.
‘நாம யாருன்னு இவன்கிட்ட சும்மா சொல்லி பார்ப்போம். நமக்கும் இங்க ஒரு எடுபிடி வேணாமா என்ன?’ தீவிரமாக யோசித்து, வெங்கட்டை நெருங்கி மெதுவாக “நான் ஒன்னு சொல்வேன். யாருக்கிட்டேயும் நீ சொல்லக் கூடாது.” ஹஸ்கி குரலில் அகஸ்டின் சொல்ல, “சொல்லுங்க ப்ரோ.” அதே ஹஸ்கி குரலில் கேட்டான் அவன்.
“இந்த கம்பனியில நானும் வன் ஆஃப் த டிரெக்டர்தான். எனக்கும் முழு உரிமை இருக்கு. ஆனா, நம்ம கம்பனியில இருக்குற ஒரு கருப்பாட கண்டுபிடிக்குறதுக்கான ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன்ல இப்போ இருக்கேன். அதான்…” அகஸ்டின் தீவிர முகபாவனையுடன் சொல்லி முடிக்க, சிறிதுநேரம் அவனையே விழி விரித்து பார்த்திருந்த வெங்கட்டோ பக்கென்று சிரித்துவிட்டான்.
“அட போங்க ப்ரோ! காமெடி பண்ணிக்கிட்டு.” சிரித்தவாறு வெங்கட் தன் வேலையில் கவனமாக, ‘ஙே’ என்று அவனை ஒரு பார்வைப் பார்த்தான் அகஸ்டின். ‘என்னடா நம்ப மாட்டேங்குறீங்க.’ திகைத்துப் போய் வெங்கட்டை பார்த்தவனுக்கு அத்தனை எரிச்சல்!
அடுத்த சில நிமிடங்கள் நிமிர்ந்து கூட பார்க்காது ‘டொக்கு டொக்கு’ என கோபத்தில் கீபோர்டை தட்டிக்கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒரு உந்துதல்!
விழிகளை உயர்த்தி பார்வையை அங்குமிங்கும் சுழலவிட்டு அவன் எதையோ தேட, சுவற்றுக்குப் பின்னால் சட்டென மறைந்துப் போன வெள்ளை துப்பட்டா அவன் விழிகளுக்குள் சிக்கியது. சிறிதுநேரம் அந்த இடத்தையே வெறித்துவிட்டு மீண்டும் திரையில் அவன் பார்வையைப் பதிக்க, சுவற்றுக்குப் பின்னால் மறைந்திருந்த அலீஷா மீண்டும் அகஸ்டினையே இமைக்காது பார்த்திருந்தாள்.
அவளின் உறக்கத்தை பறித்திருந்த அந்த சாம்பல் நிற விழிகளிலிருந்து அவளால் விழிகளை எடுக்கவே முடியவில்லை. அவனுடைய ஒவ்வொரு பாவனைகளையும் புகைப்படங்களாக மனதில் குறித்துக்கொண்டிருந்தாள் அவள்.
அன்று மாலை வரை நெட்டி முறித்து நேரத்தை தள்ளியவன், வேலை முடிந்ததுமே அங்கிருந்து மின்னல் வேகத்தில் வெளியேறியிருந்தான். இதை சிசிடீவி கேமரா வழியாக பார்த்திருந்த அலைஸிற்குதான் ‘இவனை என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது.
தன்னைச் சுற்றியிருந்து சதி செய்பவர்களை வாய்விட்டு திட்டிக் கத்தியவாறு அகஸ்டின் வண்டியை ஓட்டிச் செல்ல, சரியாக அந்த ஒரு இடத்தில் அவனுடைய பார்வை இரண்டு பேர் நுழையக் கூடிய அந்தத் தெருவின் பக்கம் சென்றது.
‘அதே இடம். அதே வெள்ளை சுடிதார் அணிந்த சிறுமி அந்த தெருமுனையில். ஆனால், ஒரு திருத்தம், இப்போது அது சிறுமி அல்ல, ஒரு இளம்பெண்.’ அவனுடைய மனம் நினைக்க, கைகளால் தானாக ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தின.
‘இதுக்கு முன்னாடி இது நடந்த மாதிரி…’ நினைவடுக்குகளை கிளறிப் பார்த்தும் எதுவும் நியாபகத்திற்கு வரவில்லை அவனுக்கு. ஆனால், ஏனோ அவளைத் தாண்டி மனம் செல்ல மறுத்தது. வண்டியை ஓரமாக நிறுத்தி அந்த இளம்பெண்ணை நோக்கிச் சென்றான் அகஸ்டின்.
அந்த தெருமுனையில் தன் பையை இறுக்கிப் பிடித்து உதடுகளை நாவால் அடிக்கடி ஈரமாக்கிய வண்ணம் நின்றிருந்த அலீஷா, இவன் சட்டென அவளை நோக்கி வரவும் விழி விரித்து மிரட்சிப் பார்வைப் பார்த்தாள். ஆனால், அடுத்தகணம் விழிகளில் ஏதோ ஒரு பிரகாசம்.
அவளெதிரே வந்து நின்றவன், அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கினான். மனம் ஒரு கலாரசிகனாக அவள் அழகில் ‘வாவ்!’ என முணுமுணுத்துக்கொண்டது. “ஏதாச்சும் உதவி பண்ணணுமா?” சட்டென்று அவன் கேட்க, அவளிடம்தான் பதிலே இல்லை.
அவனுடைய சாம்பல்நிற விழிகளை ஊடுருவும் பார்வை பார்த்திருந்தாள் அவள். ஏனோ அந்த பார்வை அவனுக்கு புதிதல்ல என்று மட்டும் தோன்றியது. தலையை பின்னால் தட்டி சிரித்துக்கொண்டான்.
“இட்ஸ் லைக் டேஜா வூ, ஹவ் சில்லி…” சிரித்தவாறு சொன்ன அகஸ்டின், அடுத்து அலீஷா கேட்ட “என்னை நியாபகம் இருக்கா?” என்ற கேள்வியில் திடுக்கிட்டுப் பார்த்தான்.
‘என்ன கேள்வி இது?’ அவன் மனம் குழம்ப, விழிகளில் ஆர்வத்துடன் அவனை மேலும் நெருங்கி நின்றவள், “நிஜமாவே நியாபகம் இல்லையா தினு?” ஒருமாதிரிக் குரலில் கேட்டாள். அந்த அழைப்பிலும் குரலிலும் ஒருநிமிடம் அவனிதயம் வேகமாக அடித்துக்கொண்டது.
‘இல்லை’ எனும் விதமாக அவன் தலையசைக்க, கீழுதட்டைக் கடித்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அவள். சிறிதுநேரம் அமைதி! அகஸ்டினும் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. சொல்லப்போனால் ‘ஏன் அங்கு நிற்கிறோம்?’ என்று அவனுக்கே தெரியவில்லை.
சரியாக, ஒரு வாகன சத்தம். அகஸ்டினை தாண்டி எட்டிப் பார்த்தவள், அங்கு நின்றிருந்த ஆட்டோவைப் பார்த்ததும் அவனை ஒரு பார்வைப் பார்க்க, ஆட்டோவையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தவன், சற்று விலகி நின்றுக்கொண்டான்.
அவளும் சென்று ஆட்டோவில் ஏறிக்கொள்ள, பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு ‘யாரிந்த பொண்ணு?’ தீவிரமாக யோசித்தவாறு அகஸ்டின் அப்படியே நிற்க, அங்கிருந்து நகர்ந்தவளின் பார்வை அவன் மீதே நிலைத்திருந்தது. ‘என்னை நியாபகமில்லையா உனக்கு?’ விழிகள் மீண்டும் அதேக் கேள்வியை கேட்டது.
அதில் குழம்பிப் போனது என்னவோ அகஸ்டின்தான். ‘இது ஏன் எனக்கு புதுசா தெரியல. அவளோட கேள்விக்கான அர்த்தம் என்ன?’ தனக்குத்தானே கேள்விக் கேட்டுக்கொண்டது அவன் மனம்.