வெண்பனி 2

IMG-20220405-WA0023-3e5bd9e6

வெண்பனி 2

பனி 2

நூறு நண்பர்களை தேடுவதை விட,

நூறு ஆண்டு நிலைத்து நிற்கும் ஒரு நண்பனை தேடு….

உன்னை உச்சத்தில் வைக்கும் அந்த நட்பு…!

பாரியூர், (கற்பனை பெயர்) ராஜபாளையத்திற்கும் சிவகாசிக்கும் இடையில் அமைந்த ஒரு சிற்றூர். கிராமமும் அல்லாத, நகரமும் அல்லாத, இரண்டும் கலந்த கலவை.

அங்கு வயல்வெளிகள் இருக்கும் அளவு, செங்கல் கட்டிடங்களும் அதிகம் இருந்தது. படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள், தங்கள் குழந்தைகளை, சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு வேலைக்கு அனுப்புவதை நிறுத்தி,  பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப தொடங்கியுள்ளனர். சின்ன சின்ன தொழிற்கூடங்களும் அமைந்திருந்தது அந்த ஊரில்.

கைபேசியின் பயன்பாடு எல்லா திசைகளிலும் புகுந்திருந்தது. கணினியின் ஆதிக்கம் பரவி கொண்டிருந்த காலகட்டம் அது. பாரியூரில் விவசாய மக்கள் இருக்கும் அளவு, கணினி உபயோகிக்கும் மக்களும் இருந்தனர். சிறிது சிறிதாக வளர்ச்சியின் படியில் ஏறிக் கொண்டிருந்தது.

பத்து வயது பாவை ஒருத்தி, தன்னுடைய முக்கிய உறவான தன் தாய் வழி தாத்தாவின் உடலையே, கண்ணில் வழியும் நீருடன் வெறித்திருந்தாள். அவளை சுற்றி அவளது நெருங்கிய உறவினர்கள் இருந்தாலும், அவளின் மீது உண்மையான பாசமும் நேசமும் கொண்ட இரு ஜீவன்களில் ஒன்று இப்போது உயிருடன் இல்லை.

நடுக்கூடத்தில் வைத்திருந்த அவரின் உடலை விட்டு, தன் கண்களை விலக்காமல் அவருடன் மனதில் பேசிக் கொண்டிருந்தாள்.

‘ஏன் தாத்தா என்னை விட்டுட்டு போன? உனக்கும் என்னை பிடிக்காமல் போயிடுச்சா? நான் துரதிர்ஷ்டமானவள்ன்னு நீயும் நினைக்கிறியா? எனக்கு உன்னை விட்டா யாரும் இல்லையே? என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு? என்னையும் உன்னோட கூட்டிட்டு போய் இருக்கலாமில்ல? இனி நான் என்ன பண்றது?’ என, பெரும் செல்வந்தர் வீட்டு வாரிசு, மனதோடு மருகி கொண்டிருந்தாள், அந்த குடிசை வீட்டில்.

ஒருவன் அவள் அழுவதையே, முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் பார்த்திருந்தான். அவன் பார்வையில் இருப்பது கனிவா? கோபமா? வெறுப்பா? என்று பிரித்து அறிய முடியா ஒரு உணர்வில், அவளையே இமைக்காமல் பார்த்திருந்தவன், சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவு எடுத்தது போல் தலையை உழுக்கி கொண்டு தன் பாதத்தை நகர்த்தினான்.

அழுது கொண்டிருந்தவளின் தோள்களில் ஆதரவாக ஒரு கரம் பதிந்தது. அப்போதுதான் சுயத்திற்கு வந்த பாவை, தன் முகத்தை திருப்பி யார் என பார்த்தாள். தன் மீது பாசம் செலுத்திய அடுத்த ஜீவனை கண்டு கண்களில் கண்ணீர் பெருகியது. 

நமக்கு துன்பம் என்ற ஒன்று வரும்போது, எப்போதும் தோள் கொடுப்பான் தோழன். அதுவும் இவன் தன் உறவினனான நண்பன்.  தன் உயிரைப் போன்றவன். அவனைக் கண்டு கண்ணீர் வராமல் இருந்தால்தான் அதிசயம்.

அவளது கண்ணீரை கண்டு அவனது கண்களிலும் கண்ணீர் வடிந்தது. அதை மறந்து அவள் கன்னத்தில் வலியும் கண்ணீரை, தன் கரம் கொண்டு அழுத்தி துடைத்து, அவள் முகத்தினை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான். அவளும் அவனது அனைப்பில் பாந்தமாக பொருந்திக் கொண்டாள். இதை கொலை வெறியுடன் பார்த்தது ஒரு ஜீவன்.

†††††

“டேய் அரசு! நம்ம இன்னமும் மேக்ஸ் ஹோம் ஒர்க் முடிக்கல. அந்த கடுவம் பூனை நம்மள இன்னைக்கு முட்டி போட வைக்க போகுது. என்ன பண்ணலாம்?” என மிக தீவிரமாக தன்னுடன் பயிலும், தன் ஒரே தோழனிடம் கேட்டுக் கொண்டே நடந்து வந்தாள் அந்தப் பாவை. வார்த்தையில் இருந்த பயம் அவள் குரலில் இருந்ததா என்பது கேள்விக்குறியே?

“விடு மொட்டு! இதுலாம் நமக்கு சப்ப மேட்டரு. பாத்துக்கலாம். எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என அசால்டாக பதில் கூறினான் அந்த அரசு.

“அவர் எல்லாம் நமக்கு ஜுஜூப்பின்னு சொல்லுற” என குரும்புடன் கூறி, ஹைஃபை அடித்துக் கொண்டனர் அந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள். 

அந்தப் மொட்டுவும் அரசுவும் இணைந்து செய்யாத சேட்டைகளே இல்லை. எப்போதும் துருதுரு விழிகளுடன் சுற்றிக் கொண்டிருப்பர். ஒருவரை விட்டு ஒருவர் எந்த காரியமும் செய்ய மாட்டார்கள். நல்லதோ கெட்டதோ அனைத்திலும் ஒன்றாகவே இருப்பர்.

இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருபத்து நான்கு மணி நேரமும் ஒன்றாகவே சுற்றித்திரிவர். ஒருத்தருக்கு சின்ன காயம் ஏற்பட்டாலும், மற்றவர் துடித்துப் போவர். ஒருவரை யாரும் திட்டி விட்டால், அவர்களுக்கு, மற்றவர் தண்டனை கொடுக்காமல் இருப்பதில்லை. தன் மீது தவறு உள்ளதோ? இல்லையோ? தண்டனை எனும் பட்சத்தில் இருவரும் ஒன்றாகவே அதை ஏற்றுக் கொள்வர். அப்படி ஒரு அழகான, ஆழமான நட்பு அவர்களிடம்.

கைகோர்த்து பேசிக்கொண்டே வந்த இருவரும் அவர்கள் பள்ளியில் நுழைந்தனர். இவர்கள் வருவதை ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்த மாணவன் ஒருவன், 

“ஏய் பனி! இங்க வா புள்ள” என கைத்தட்டி அந்த பெண்ணை அழைத்தான்.

அவனை பார்த்த நண்பர்கள்,’ஐயோ ஈஸ்வரா இவரா?’ என ஜெர்கானவர்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, அவனை நோக்கி சென்றனர்.

கால்கள் அவனை நோக்கி செல்ல, வாய் “டேய் அரசு! இவரு எதுக்கு டா நம்மள கூப்பிடுறார்?” என ரகசியமா கேட்டாள்.

அவனும் அதே ரகசிய குரலில்,”நம்மள கூப்பிடல பக்கி. உன்னை தான் கூப்பிடறார்” என்றான் அரசு ரொம்ப அறிவாளியா.

அதற்கு பெண்ணவள் முறைத்த முறையில்,”நானும் உன் கூட தான வரேன். அப்புறம் எப்பிடி எனக்கு தெரியும்?” என தானாக அவனது உதடுகள் பேசியது.

“நீ சொல்லுறதும் வாசுதவம்தான். அதுக்கு எதுக்கு பயப்படுற? விடு அவரு கிட்டயே கேட்டுக்கலாம்.” அவன் பயம் எதுக்கு என்று தெரிந்தே மீண்டும் அவனை ஜெர்க் ஆக்கினாள்.

“அடியே மொட்டு! அவன் கிட்ட ஏடாகூடமா எதையாவது பேசி, வம்பை விலை கொடுத்து வாங்கிடாதே.” என நல்ல நண்பனாக கூறினான்.

“நான் எதுக்குடா எடாகூடமா பேச போறேன். எல்லாம் அவனால வந்தது.”

“ஏற்கனவே உனக்கும் அவனுக்கும் ஆக மாட்டேங்குது. நீ உன் வாயை அடக்கிட்டு இருக்கணும்.” என அவளை பற்றி தெரிந்ததால் எச்சரித்தான்.

“அது எல்லாம் அவன் கைல தான் இருக்கு” என அரசு வயிற்றில் புளியை கரைத்தாள்.

அவன் திரு திருவென முழிக்க,”விடுடா விடுடா. நான் இருக்கும் போது உனக்கு எதுக்கு பயம்.” என மேலும் குண்டை போட்டாள்.

“அதுதானே என்னோட பயமே. என்னை கோர்த்து விட்டுட்டு நீ எஸ்கேப் ஆகிடுவ” என்றான் அழ மாட்டாத குறையாக.

அதை கண்டுகொள்வாளா பெண்? “உனக்கு ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கறேன்” என்றாள் ஓன்றும் தெரியாத அப்பாவி போல.

“எத பார்க்கப்போற? நான் அவன் கிட்ட அடி வாங்க போறதையா?” என்றான் கடுப்புடன்.

“ச்ச ச்ச அடிக்கவெல்லாம் மாட்டான். அப்படியே அடிச்சாலும் உன் உயிருக்கு நான் கெரண்டி.”

“நீ பேசுறத பார்த்தா என்னை வச்சு செம்மயா செய்ய முடிவு பண்ணிட்ட போல” என சந்தேகமாக கேட்டான்.

 “அஃப்கோர்ஸ்! அதுல உனக்கு சந்தேகமே வேண்டாம்.” என அசால்ட்டாக கூறி, நடையை கட்டினாள்.

‘ஈஸ்வரா! என்னை ஏன் இதுக கிட்ட கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கற? என்னை எப்படியாவது காப்பாத்துப்பா’ என வடிவேலு ஸ்டைலில் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டான்.

இவர்கள் பேசிக்கொண்டே வருவதை, கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த மாணவன்.

“என்ன மாமா? எதுக்கு கூப்பிட்ட?” என அவனை நெருங்கி வந்து வினா தொடுத்தாள். பின்னாடியே வால் பிடித்து அரசுவும் அங்கு வந்தான். 

அவர்கள் நெருக்கத்தில் கோபமாக இருந்தவன்,”மாமா, கீமான்னு சொன்ன உன் பல்லை தட்டி கையில கொடுத்திடுவேன் டீ” என பல்லைக் கடித்தான்.

“மாமாவ மாமான்னு கூப்பிடாம, சித்தப்பானா கூப்பிட முடியும்? சின்னப்புள்ளத்தனமா இருக்கு.” என அப்பாவியாக முகத்தை வைத்து, கேள்வியோடு நக்கல் அடித்தாள்.

அவளது குறும்பு பேச்சில் அரசு கிழுக்கென சிரித்து, அந்த மாணவனின் கோபப்பார்வையை பெற்றுக் கொண்டான். அவனின் பார்வையில் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அரசு.

“நான் உனக்கு மாமா இல்ல. என் அத்தை பொண்ணுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு” என்றான் அசட்டையாக. 

“நானும் என் அத்தை பையனை தான் மாமான்னு கூப்பிடுகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கு” என உரிமைக் குரல் கொடுத்தாள். அரசு அவர்கள் வாக்குவாதத்தை ஆர்வமாக பார்த்திருந்தான்.

“அப்படி கூப்பிடாதன்னு சொன்னா கூப்பிடாத. இல்லனா சப்புன்னு அறைஞ்சிடுவேன்” என அவளிடம் கையை ஓங்கி கொண்டு வந்தான். எங்கே அவளை அடித்து விடுவானோ என பயந்த அவனது நண்பர்கள், அவனைப் பிடித்து இழுத்து,

“டேய் அரசு! கம்முன்னு இருடா. அது சின்ன பொண்ணு. அது கிட்ட போய் கையை நீட்டிக்கிட்டு” என அவனை சமாதானப்படுத்த முயன்றவாறு இந்த பெண்ணை பார்த்து, “அம்மாடி மலரே, உன்னோட கிளாஸ்க்கு நீ போமா.” என அனுப்ப முயன்றனர். 

“அண்ணா எனக்கு ஒரே ஒரு டவுட். அதை மட்டும் கேட்டுட்டு போயிடறேன்.” என்றாள் அதே அப்பாவி முகத்தோடு. அவளை சந்தேகத்தோடு பார்த்தான் அந்த மாணவன். அந்த அப்பாவி முகத்திலிருந்தே ஒருவன் புரிந்துகொண்டான்,’ரைட்டு அவ எதோ பிளான் பண்ணிட்டா. சிக்கிடாத கைப்புள்ள’ 

“என்ன உன்னோட டவுட்?” என மிடறு விழுங்கினான் ஒருவன். அவள் ஏடாகூடமாக எதையாவது கேட்டு வைத்தாள் என்றால், அரசுவிற்கு கோபம் வரும். அப்படி கோவம் வந்தால் ‘யார் அவனிடம் வாங்கி கட்டிக் கொள்வது’ என்ற நல்ல எண்ணம் தான்.

“மாமான்னு கூப்பிடக் கூடாது ஓகே. அது என்ன கீமா? அப்படி எதுவும் உறவு இருக்கா?” என அரும்பெரும் சந்தேகத்தை கேட்டு வைத்தாள். 

அவள் கேட்டதில் சந்தேகம் கொண்ட, அவனது அப்பாவி நண்பன் ஒருவன்,”ஆமாண்டா அரசு, அது என்ன கீமா! அப்படின்னு ஏதாவது உறவு இருக்கா?” மீண்டும் அதே கேள்வியை, அவனிடம் கேட்டு அவனது உஷ்ண பார்வையை பெற்று கொண்டான்.

“எதுக்குடா என்னை இப்படி பார்க்குற? உனக்கும் தெரியாதா? நான் வேணா வேற யாருகிட்டயும் கேட்டு சொல்லட்டுமா?” என தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டான்.

அவன் பேச்சில் எரிச்சலானவன், அவனை அடிக்க எதுவும் வசமாக இருக்கா என தேடினான்.

மொட்டுவோ ‘என்னடா இவன், தானா வந்து சிக்குறான். நீ ரொம்பபப நல்லவன்.’ என மனதோடு பேசிக்கொண்டாள்.

மொட்டுவின் அரசு ‘அப்பாடா! இன்னைக்கு நம்ம தப்பிச்சிட்டோம்.’ என பெரு மூச்சு விட்டு கொண்டான்.

சரியாக அந்த நேரம், அங்கு வந்து கொண்டிருந்தாள் பெரிய அரசுவின் அத்தை மகள் தீப்தி. ஐந்தாம் வகுப்பு மாணவி.

“கதிரு… அதோ வந்துட்டா. உன்னோட ஆச…. அத்த….. பொண்ணு.” என இழுத்து கூறினாள்.

“கதிரு சொல்லி கூப்பிட, அப்பறம் உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது.” என அதுக்கும் எகுறினான்.

“உனக்கே தெரியல. அப்பறம் எதுக்கு சொல்லுற கதிரு” என மீண்டும் வம்பு வளர்த்தாள்.

“அடியே! கதிரு சொன்னனா உன்ன கொன்னுடுவேன்.” என அவள் கழுத்தை பிடிக்க நெருங்கினான்.

அவனிடமிருந்து சற்று தள்ளி நின்று கொண்டு,”உன்னை மாமான்னும் சொல்ல கூடாது, கதிருன்னும் சொல்ல கூடாது, அப்புறம் உன்னை எப்படி கூப்பிடறதுன்னு யோசிச்சு சொல்லு. இப்ப வரட்டா கதிரு மாமா.” என சிட்டாக அந்த இடத்தை விட்டு பறந்தாள் அவளின் அரசுவுடன்.

மொட்டுவின் அரசு! அன்பரசன். அனைவருக்கும் அன்பு, அவளிற்கு மட்டும் அரசு.

அன்பரசனின் உடன் பிறந்த சகோதரன் தான், இப்போது பேசிய கதிர் அரசன் அனைவருக்கும் அரசு, பெண்ணிற்கு மட்டும் கதிர் மாமா.

மொட்டுவின் மனதை ஆட்சி செய்ய போகும் அரசன், கதிர் அரசனா? அன்பரசனா?

†††††

மலரால் நடக்க முடியுமா?

முடியும்! இதோ அழகிய ரோஜா மலர் ஒன்று, தன் பாதங்களை, பூமிக்கு நோகாதவாறு மெல்ல அடி எடுத்து வைத்தது.

இதற்கு முன் அதன் பாதங்கள், இப்படி மெல்ல அடி எடுத்து வைத்துள்ளதா? என்பது கேள்விக்குறியே. நடையில் எப்போதும் ஒரு துள்ளலும் ஓட்டமும் இருக்கும். ஆனால் இப்போது?

மொட்டு மலர்ந்து அழகான மலரானது. முதல் முதலாக உடுத்திய புடவையில், நடக்கத் தெரியாத பெண்ணவளின் பாதங்கள் மெல்ல நடந்தது. பெண்ணவளை பார்த்த விழிகள் அவளிடம் தேங்கிவிடும். அப்படி ஒரு அழகு தேவதை.

கள்ளம் கபடம் அறியாத மாசற்ற முகம், மிதமான ஒப்பனையில் ஜொலிக்க, சற்றுப் பூசியது போலிருந்த உடலில், கரும்பச்சை காஞ்சி பட்டு பாந்தமாக பொருந்த, காலில் கொலுசொலி இன்னிசை மெட்டமைக்க, அன்னநடையிட்டு பெண்ணவள் வந்த அழகில், கண்களை விலக்க முடியாமல் அவன் தடுமாறி நின்றான். முதல் முதலில் அவளிடம் கண்ட மென்மையில் தன்வசம் இழந்தான்.

அவளை நோக்கி செல்லும் தன் கண்களையும் மனதையும் அடக்க முடியாமல் போராடினான். ‘இப்பொழுது என் மனம் அவளிடம் பாயக்கூடாது. என் சலனம் அவள் படிப்பை கெடுத்து விடக்கூடாது. அது பெரும் பாவம். அவளுக்கு நான் நல்ல நண்பன், மாமா அதை தாண்டி சிந்திக்க கூடாது.’ என தன் மனதை கட்டுப்படுத்தினான். இப்போது அவனால் இயல்பாக இருக்க முடிந்தது.

விதி அவனை இப்படியே இருக்க விடுமா? இதோ அதற்கான முதலடி

தாய் மாமா செய்யும் முறையில், மனையில் அமர்ந்த பெண்ணிற்கு குச்சி கட்டி சடங்கு செய்ய, அரசனின் தந்தையை அழைக்க அவர் மறுத்துவிட்டார். அடுத்து முறை பையன் என்ற முறையில் கதிர் அரசனை அழைத்தனர். ஆனால் அவன் ‘என் அத்தை மகளைத் தவிர யாருக்கும் செய்ய மாட்டேன்’ என மறுத்து விட, தானாக அந்த சந்தர்ப்பம் அமைந்தது அன்பரசனுக்கு.

தன் உயிரானவளுக்கு செய்ய கசக்குமா நம்ப அன்பரசுவுக்கு. தென்னை ஓலை கட்டி, அவளுக்கு மாலை அணிவித்து, சந்தனம் குங்குமம் இட்டு, மீதி சடங்கை மேற்கொண்டான். 

இப்போது மாலையிடும் அன்பரசுன் அவளுக்கு மாங்கல்யம் அணிவிப்பானா?

இப்போது தவறவிட்ட மாலையை மீண்டும் கைப்பற்றுவானா கதிர் அரசன்?

Leave a Reply

error: Content is protected !!