வெண்பனி 20

IMG-20220405-WA0023-5eba804f

வெண்பனி 20

பனி 20

இளங்காலை பொழுது, செங்கதிரோன் தன் கதிர்களை, பூமியில் செலுத்தி உயிர்பித்து கொண்டிருந்தான். எங்கு திரும்பினாலும் பச்சை நிற மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தது. பச்சை மற்றும் பிரவுன் நிறத்திற்கு இடையே, வெண்பனியை உருக்கி ஊற்றியது போல் ‘சோ’ வென்று கொட்டிக் கொண்டிருந்தது, குற்றாலத்திலிருக்கும் பல அருவிகளில் ஒரு அருவி. வண்ணமயமான காட்சி அதை காண இரு கண்கள் போதாது.

ஆர்ப்பாட்டமாக கொட்டி கொண்டிருந்த அந்த அருவியை, அமைதியாக கையை கட்டி பார்த்து கொண்டிருந்தாள் பனிமலர். வெளியே பார்ப்பதற்கு அமைதியாக தெரிந்தாலும், உள்ளம் ஆர்ப்பாட்டமாக அந்த அருவியைப்போல் மகிழ்ச்சியில் பொங்கி கொண்டிருந்தது. 

‘தன் வாழ்வும் இதேபோல் வண்ண மயமாகிவிட்டது’ என நம்பியது அந்த மலர் வனம்.

கடந்த மூன்று மாதங்களில் அவள் வாழ்க்கையில் எத்தனை, எத்தனை மாற்றங்கள்? அதை நினைத்த அவள் மனம் மகிழ்ச்சி அருவியில் நனைந்தது. 

திருமண வரவேற்பு முடிந்த மறுநாள், கதிரின் நண்பர்கள் பேசியதை பற்றி, அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்திருந்தாள். தீப்தி கொளுத்தி போட்ட வெடியால், அது புஷ்வானமாக அமுங்கி போனது.

தீப்தி அவளிடம், தானும் கதிரும் காதலிப்பதாக சொன்னதை முதலில் நம்பிய மலர்,’இவன் அவளை விரும்பினால், தாத்தா கிட்ட சொல்லி அவளையே கட்டியிருக்க வேண்டியது தானே? எதற்காக என்னை கட்டிக்கிட்டான்? எதுக்கு என்னோட வாழ்க்கையை பாழாக்கினான்?’ என மனதில் அவனை வருத்தெடுத்தாள்.   

அவள் தீப்தி சொன்னதை நம்பவும் காரணமிருந்தது, ‘அவனை மாமா என்று மலர் உரிமையாக அழைத்தால் சண்டைக்கு வருவான், அதனால் அவனை முறை வைத்து அழைப்பதை தவிர்த்திருந்தாள். தீப்திக்கு அனைத்து சடங்குகளையும் செய்தவன், அவளுக்கு செய்ய மறுத்தான். சிறுவயதிலிருந்து அவனுக்கு தீப்தி, என பேச்சு வீட்டில் ஓடிக் கொண்டிருந்தது. அதனால் தீப்தியை விரும்பி இருக்க வாய்ப்புகள் அதிகம். தாத்தா சொந்தத்தின் முன் சொல்லவும், வேறு வழியின்றி அவள் கழுத்தில் தாலி கட்டினான்.’ என்றே எண்ணியது அந்த பேதை உள்ளம். 

கதிர் அவளது எண்ணத்தை தவிடு பொடியாக்க போகிறான் அவனது நடவடிக்கையால்.

அன்று குழப்பத்திலிருந்த அவளது மதிமுகத்தை பார்த்தும் கதிர் எதுவும் கேட்கவில்லை. ‘தான் ஏதாவது கேட்கப் போய், நேற்று நண்பர்கள் பேசியது ஞாபகம் வந்து, அதைப்பற்றி கேட்டு விட்டால் என்ன செய்வது?’ என மௌனம் காத்தான். ஆனால் அவனது எண்ணத்துக்கு நேர் மாறாக, மலர் அந்த விஷயத்தை சுத்தமாக மறந்திருந்தாள்.

ஆம்! மலருக்கு முதல் நாள் அவன் நண்பர்கள் பேசியது ஞாபகமில்லை. அவனை திட்டி தீர்க்கவே நேரம் சரியாக இருந்தது. இதில் எங்கிருந்து அவனது நண்பர்கள் பேசியதை ஞாபகத்தில் வைக்க?

“பனி நான் குளிச்சிட்டு வரேன். எனக்கு டிரஸ் எடுத்து வை.” அவளது மனதை திசை திருப்பிவிட்டு குளியலறை புகுந்தான்.

தன்னுள் உழன்று கொண்டிருந்தவள், அவன் சொன்னதை கவனமின்றி செய்தாள். அவளுக்கு பிடித்த வானிற சட்டையும், அதற்கு தோதாக கருநீல பேன்டையும் தேர்வு செய்தாள்.

அவள் தேர்வை மெச்சிக்கொண்ட கதிர்,”உனக்கு இந்த டிரஸ் ரொம்ப புடிக்குமா பனி?” பட்டினும் மென்மையான குரல்.

“ஆமா கதிர் உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கும்.” அவனது குரலில் வசியம் செய்யப்பட்ட பெண், தன் உள்ளத்திலிருந்ததை கூறியிருந்தாள்.

அதில் மகிழ்ந்த கதிர் அவளை நெருங்கி கண்ணத்தில் இதழ் பதித்தான். அவனது ஸ்பரிசத்தில் உணர்வு பெற்றாள் பாவை. தான் கூறியது மூளையில் உறைக்க, வெட்கம் வந்து தலை குனிந்தாள். கதிர் அவளது வெட்கத்தை ரசித்தான்.

“சோ என்னை சைட் அடிச்சிருக்க?” அடக்கிய சிரிப்புடன் கேட்டான்.

அதைக் கேட்டு திடுக்கென நிமிர்ந்த மலர், அவனது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், திரு திருவென முழித்து அங்கிருந்து ஓட்டமெடுத்தாள். அவனது சிரிப்பு சத்தம் அவளை தொடர்ந்தது.

அன்று முதல், அவன் உடுத்தும் உடையை தேர்ந்தெடுக்கும் உரிமை பனிமலருடையது. அவளது உடை விஷயத்தில் அவனே தேர்வாளன் ஆனான்.

தினமும் இரவு அவன் கையணைவிலயே பனிமலரின் உறக்கம் என்றானது. அன்றைய நாளில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், அவளுடன் சுவாரஸ்யமாக பகிர்ந்த பிறகே உறக்கத்திற்கு செல்வான். அதேபோல் அவளது பொழுதுகள் விடிந்ததும் அவனது முக தரிசனத்தோடு. பெண்ணும் இப்போதெல்லாம் அந்த ஏகாந்த பொழுதுகளை ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.

அவளை வெளியே அழைத்துச் செல்வது, அவளுக்கு பிடித்த விஷயங்களை பார்த்து, பார்த்து செய்வது என ஒவ்வொரு நிமிஷமும், தன் காதலை வாய்மொழியாக கூறாமல், அவளுடனிருக்கும் ஒவ்வொரு நொடியையும் அழகாக மாற்றி, அவளை உணர வைத்தான் பனியின் கதிரவன்.

†††††

திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் கல்லூரி இறுதியாண்டு துவங்கியது. அன்புவின் மேலிருந்த கோபம் அனைத்தும் எப்போதோ விலகி இருந்தது. முன்பு போலவே அவர்களுக்குள் தோழமை அன்பு மீண்டிருந்தது.

கல்லூரிக்கு கிளம்பிய முதல் நாள், உணவருந்தி கொண்டிருந்த மலரிடம்,”கல்யாணமான பொண்ணு, புருஷனை கவனிக்காமல் இன்னும் என்ன காலேஜுக்கு போறது?” என ஆரம்பித்த சுகந்தியிடம்,

“கல்யாணமான பொண்ணு படிக்க கூடாதுன்னு ஏதாவது சட்டம் இருக்கா? எனக்கு தெரியாமல் போச்சே?” என கேட்டவாறு வந்த கதிர் அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

‘கதிர் தனக்கு ஆதரவாக பேசினானா?’ என விழி விரித்தாள் பனிமலர். 

“அவ படிப்பு, காலேஜ்ன்னு சுத்திட்டு இருந்தா, உன்னை யாரு கவனிப்பா? பாரு இப்பயும் நீயே தான் போட்டுக்குற. இந்தா இவ, மஹாராணி மாதிரி உட்கார்ந்து சாப்பிடுறா.” என குரலில் தேனொழுக சிண்டு முடிந்தார்.

சுகந்தியின் பேச்சில் அடிபட்டு போன மலர், முகம் சுருங்க பாதி சாப்பாட்டில் அவனுக்கு பரிமாற எழுந்தாள். கண்களாலே அவளை அமர உத்தரவிட்டவன், தன் தட்டில் பரிமாறியபடி, அவளின் தட்டிலும் பரிமாறினான். பனிமலரின் முகம் மலர்ந்தது என்றால், சுகந்தியின் முகம் சிறுத்தது.

“நான் என்ன சின்ன குழந்தையா? இன்னும் ஒரு ஆள் கவனிச்சுக்க. அவ படிச்சு முடிச்சு வந்தா தான் எனக்கு உதவி செய்ய முடியும்.”

“உனக்கு அவ என்ன உதவி செய்ய முடியும்?” என்றார் சந்தேகமாக.

“ஏன்? என் கூட வந்து என்னோட ரிசார்டை பார்த்துக்குவா.” எளிதாக கூறினான்.

‘இவன் என்ன சொல்கிறான்?’ என அவனையே விழியகற்றாமல் பார்த்தாள் நாயகி.

“நம்ம குடும்பத்துல பொம்பளைங்க வேலைக்கு போக மாட்டாங்க. வீட்டு வேலை தான் செய்வாங்க.” சுகந்தி கடுப்புடன் கூறினார்.

“அவளை நான் கல்யாணம் பண்ணது, என் கூட வாழ தானே தவிர, வீட்டு வேலை செய்ய இல்லை. என் பொண்டாட்டி வேலைக்கு போவா? இல்லை போகாமல் இருப்பா? அது அவ விருப்பம். அவ அவ இஷ்டப்படி தான் இருப்பா.” என்று அழுத்தி சொன்னவனின் பார்வை பனிமலரை தொட்டது.

அவளோ திகைப்பில் அவன் முகத்தையே ‘பே’ என பார்த்திருந்தாள். அவளின் முகத்தை கண்ட கதிருக்கு சிரிப்பு பொங்கியது.

‘என்ன?’ என புருவத்தை உயர்த்தினான். அதன் பிறகே தான் அவனையே பார்த்து கொண்டிருப்பதை உணர்ந்து முகம் சிவக்க தலை குனிந்தாள். கதிரின் முகத்தில் ரசிப்பு புன்னகை தோன்றியது. இப்போது கண்களால் அவளை படம் பிடிப்பது நாயகனின் முறையாயிற்று.

நெஞ்சம் குறுகுறுக்க நாயகியின் பார்வை மீண்டும் நாயகனை தீண்டியது. அதற்காகவே காத்திருந்த அவனும் தலை சாய்த்து கண் சிமிட்டினான். அதில் விதிர் விதிர்த்த நாயகி, ‘மாய கண்ணன்’ என மனதினிலே அவனுக்கு ரகசிய பெயர் சூட்டி,  தான் சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள். நாயகன் வெடித்து சிரித்தான்.

சிறிது நேரத்தில், அன்பரசனையும் பனிமலரையும் கைகாட்டி, கல்லூரிக்கு வழி அனுப்பி வைத்தான் கதிர் அரசன்.

இவர்களின் காதல் நாடகத்தை கண்ட சுகந்திக்கு வயிறு காந்தியது. ‘தன் மகள் இருக்க வேண்டிய இடத்தில், இவளா?’ என மனம் தனலாக எரிந்தது.

†††††

முகம் மலர கல்லூரியில் நுழைந்த, அவர்களை கண்டு தனா பேச முயன்றாள். அன்பு அவளை தவிர்த்து சென்று விட்டான். பெண்ணான பனிமலரால் அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிந்தது.’தன் காதலன் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும்’ என அவள் நினைப்பது தவறாக படவில்லை.

தனாவிடம் தங்கள் நட்பை, உறவை தெளிவாக புரிய வைத்தாள் பனிமலர். அவர்களது உறவை புரிந்த தனாவும், தன் தவறை உணர்ந்து மன்னிப்பை வேண்டி நின்றாள். அன்புவினால் அவளை மன்னிக்க முடியவில்லை. தனா முகம் சுருங்கி நின்றாள்.

மலர் அன்புவிடம்,”தனாவின் நிலையிலிருந்து பார் அரசு, அவள் பக்கத்து நியாயம் உனக்கு புரியும்.” வாதாடினாள்.

“அவள் பக்கம் நியாயமாகவே இருக்கட்டும். அதை பற்றி அவ எங்கூட பேசி இருக்கணும். உன்னை பிடிக்காத திருமணத்துக்கு கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது. அவள் தான், தன் சந்தோஷமென்று அதை மட்டுமே நினைக்கும் சுயநலவாதி.” மறுத்தான்.

அவள் மீண்டும், மீண்டும் தனாவை பற்றி பேச, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல்,”என்னை நிம்மதியா இருக்க விடமாட்டியா மொட்டு? எப்ப பாரு தனா, தனான்னு தொல்லை பண்ணிட்டு.” என வெடித்து சிதறினான்.

அவனை முறைத்த பனிமலர், “மாட்டேன். உன்னை எப்பவும் விடமாட்டேன். நான் செத்தாலும் ஆவியா வந்தாவது, உன்னை தொல்லை பண்ணுவேன்.”

அவள் வார்த்தைகளில் பதறிப்போன அன்பு, அவளது வாயை தன் கை கொண்டு மூடி,”ஏன் மொட்டு இப்படி எல்லாம் பேசுற? மனசு வலிக்குது.”

“நெருப்புன்னு சொன்னா வாய் வெந்துடாது. நீ தனா கூட பேசு.” அவள் பிடியில் நின்றாள்.

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.  அவளால் நம்ம உறவு பிரிவதற்கு அதிக வாய்ப்பிருக்கு. அதுக்கு நான் அனுமதிக்க மாட்டேன். இனி இதை பத்தி பேசாத.” என உறுதியாக முடித்தான்.

இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாத பனிமலரும் கௌதம் சொன்னதைப் போல் அவர்கள் பிரச்சினையிலிருந்து விலகி நின்றாள்.

†††††

மலரின் பகல் முழுவதும் கல்லூரி, அன்பு என ரெக்கை கட்டி பறக்கும். இரவு உணவு நேரத்திலிருந்து காலை வரை கதிருக்கு சொந்தம். அந்த நேரத்தில் யாரையும் அவர்களுக்குள் அனுமதிக்க மாட்டான்.

ஒரு நாள், கல்லூரியிலிருந்து திரும்பிய பெண்ணை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது, தங்கள் அறையில் இருந்த மாற்றம். 

அவள் அறையில் நுழைந்ததும், எதிரே சுவற்றில் மாட்டியிருந்த புகைப்படம், அவளை அழகாக சிரித்து வரவேற்றது. அதை கண்ட பனிமலரின் உள்ளம் உருகி, கண்கள் கசிந்தது.

ஆனந்த முத்துக்கள் வழிந்தோட அந்த மாற்றத்தை செய்த நபரை கண்களால் தேடினாள். அவனோ அவளது முகத்தில் தோன்றும் உணர்வுகளை, மனதில் வருத்தத்தோடும், முகத்தில் மகிழ்ச்சியோடும் பார்த்திருந்தான்.

அவள் பார்வை அவனை அடையவும் ‘வா’ என்று கண்களால் அழைத்தான். அவனது கண் பாசை புரிந்தவளும் ஓடி சென்று அவனது மார்பில் அடைக்கலம் புகுந்தாள்.

“கண்ணம்மா! எதுக்கு இந்த கண்ணீர்? இது உன்னோட ரூம். இதுல உன் இஷ்டப்படி என்ன பண்ணனுமோ பண்ணு.” அவனது குரலும் கசிந்திருந்தது.

“தேங்க்ஸ் கதிர் மாமா.” என்றவளின் குரலோ நெகிழ்ந்திருந்தது, அவளது கன்னமோ கதிரின் மார்பில் புதைந்திருந்தது, பார்வையோ புகைப்படத்தில் பதிந்திருந்தது. அங்கு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்த மலருக்கு உயிரை கொடுத்தவரும், அவளை உயிராக தாங்கியவர்களும், அவர்களை ஆசிர்வதிப்பது போல் ஒரு மாயை.

அவளது பத்து வயதில் (epi 2) குடுக்க முடியாமல் தவித்த ஆதரவை தற்போது வழங்கினான். மனதில் சிறு நிறைவு. அவளது பிரியமானவர்களை திருப்பிக் கொடுக்க முடியாது, ஆனால் அவர்களது நிழலை தர முடியும் அல்லவா? அதை தான் வழங்கி இருந்தான்.

ஆம்! அங்கு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தவர்கள், பனிமலரின் அன்னை மீனாட்சியும், அவளது பெற்றோர்களும்.

பனிமலரின் துணிகளுக்கு இடையே உறங்கிக் கொண்டிருந்த அவர்கள், இப்போது உயிர் பெற்று சுவற்றில் சிரித்தார்கள்.

ஆம்! அவர்களது புகைப்படம் அந்த வீட்டில் எங்கும் மாட்டி இருக்கவில்லை. காரணம் கார்த்திக், மீனாட்சியை முழுவதுமாக மறந்து சுகந்தியுடன் வாழ வேண்டும் என.

“உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கிஃப்டும் இருக்கு கண்ணம்மா.” என அவளை விலக்கியவன், தன் அலமாரியில் பத்திரமாக வைத்திருந்த, ஒரு நகைப்பெட்டியை எடுத்து அவள் கரத்தில் வைத்தான்.

கேள்வியோடு அவள் விழிகள் அவனது விழிகளை சந்தித்தது.”இது உனக்கு சொந்தமானது. ரொம்ப காலமா என்கிட்ட பத்திரமா இருக்கு.” அது தன்னிடம் வந்த சூழ்நிலையை நினைத்து அவனது முகம் கசங்கியது.

அவன் கூறியதில் ஆர்வம் மேலிட, அவனது முக கசங்களை கவனிக்காமல், அந்த பெட்டியை திறந்தாள். அதில் பழமையான சங்கிலியில் இதய வடிவ டாலர் இருந்தது.

அந்த சங்கிலி அவளுக்கு எதையோ உணர்த்த, தவித்த முகத்துடன் கதிரை பார்த்தாள். அவனோ வெற்று முகத்துடன் அவளை பார்த்திருந்தான்.

அவள் பார்வை மீண்டும் சங்கிலியை அடைந்தது, இதயம் படபடக்க, கண்கள் கலங்க, கைகள் நடுங்க அந்த சங்கலியை தன் கரங்களில் ஏந்தினாள். உடல் சிலிர்த்து அடங்கியது.

அந்த டாலரை திறந்தாள். அதில் குழந்தை மீனாட்சியின் முகம் சிரித்தது. மீனாட்சி பிறந்ததிலிருந்து அவள் கழுத்தில் உறவாடிய சங்கிலி, இப்போது பனிமலரின் கரத்தினில். 

“கதி… மா.. இத..?” நெகிழ்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தது.

தன்னை மீட்டு கொண்ட கதிர், அவள் கரத்தின் மேலிருந்த சங்கிலியில், தன் கரத்தை பதித்து,”இது உன் அம்மாவோடது. கடைசியா அவங்க கழுத்தில் இருந்தது. உனக்கு சொந்தமானது.” என்றவன் அந்த சங்கிலியை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான். 

நெகிழ்ந்த பெண்ணின் கண்கள் கசிந்தது. அவளை இழுத்து தன் மார்போடு அனைத்து கொண்டவன், மனதோடு கூறினான்,’மீனு அத்தை, உங்க ஆசைப்படி, உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி, அவ கழுத்துல உங்க செயினை போட்டுட்டேன். அவளை என் உயிரா பார்த்துக்குவேன். இப்ப உங்களுக்கு சந்தோஷமா?’

†††††

நாட்கள் கடந்தது, தன் காதலை சிறு சிறு செய்கையின் மூலம் கதிர் உணர்த்தினான். ஒவ்வொரு நாளும் அவன் தன்னிடம் காட்டும் நெருக்கத்தையும், தன்னிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், கண்ட பிறகு,’அவன் வேறு ஒரு பெண்ணை விரும்பி இருக்க வாய்ப்பே இல்லை’ என்ற முடிவுக்கு பனிமலரை வரவைத்தது.

அந்த அருவியை பார்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் இத்தனையும் ஓடியது.

இத்தனை நாள் நடந்தது ஒன்றுமே இல்லை என்பது போல், நேற்று நடந்தது கதிர் காதலின் உச்சம். கதிரின் காதல் வெப்பத்தில் பனி  உருகி போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!