வெண்பனி 3

IMG-20220405-WA0023-4e299d23

வெண்பனி 3

பனி 3

ஒரு துளி அன்பை காட்டி

ஏமாற்றி விட்டு 

பல துளி கண்ணீரை

பரிசாக வழங்கி விட்டு

சென்று விடுகின்றனர்…

பொய்யான சில
உறவுகள்….

வருடங்கள் சில கடந்திருந்தது. இப்போது மொட்டுவும் அன்பரசனும் பன்னிரண்டாவது பொதுத் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறனர். அடுத்து கல்லூரியில் சிறகடிக்க பல கனவுகளுடன் வலம் வரும் இளஞ்சிட்டுகள். 

அவர்கள் நாட்கள் எப்போதும் போல் சீண்டல்களுடன் வண்ணமயமாக சென்று கொண்டிருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் நட்பு இன்னும் இறுகி பெருகி இருந்தது.

கதிர் அரசன் தனது இன்ஜினியரிங் படிப்பை, மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறான். தினமும் சென்று வருவது கடினம் எனக் கூறி, அங்கேயே நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்து தங்கி படித்துக் கொண்டிருக்கிறான். மாதத்தில் ஒரு தடவை வந்து இரு நாட்கள் தங்கி விட்டு செல்வான்.

“டேய் அரசு! நம்ம கோயமுத்தூர் போய் படிக்கலாமா?” என ஆசையாக கேட்டாள் பெண்.

“ஏன்டி கோயமுத்தூர் போகணும்? நம்ம சென்னை போய் படிக்கலாம்.” என்றான் அன்பரசன். 

“ஐய்ய சென்னை வேண்டாம். இங்க இருக்க மாதிரி, அங்கயும் ஹாட்டா தான் இருக்கும். ஆனா கோயமுத்தூர் கிளைமேட் சூப்பரா இருக்கும்.” என தன் முகத்தில் நவரசங்களை கட்டினாள்.

“ஓகே டி! உன்னுடைய ஆசைப்படி நம்ம கோயம்புத்தூர் போய் படிக்கலாம்.” என சிறிதும் யோசிக்காமல் , அவளுக்காக விட்டுக் கொடுத்தான். அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்து, பார்த்து செய்யும் நல்ல நண்பன்.

“என்னது கோயம்புத்தூர் போய் படிக்க போறியா? அதுக்கெல்லாம் யாரு செலவு பண்ணுறது.” என நாராசமாக செவியை தீண்டியது ஒரு குரல். 

குரல் வந்த திசையை நோக்கி இருவரும் திரும்ப, அங்கே பெண்ணவளை பார்வையால் பொசுக்கிக் கொண்டு நின்றிருந்தார் தீப்தியின் அன்னை.

“சொல்லுடி! கோயம்புத்தூர் போய் படிக்கணுமா? பணம் என்ன மரத்திலயா காய்க்குது? இல்ல உங்க ஆத்தா வீட்ல இருந்து கொண்டு வந்து இருக்கியா?” என மனசாட்சியே இல்லாமல், அந்த பெரும் செல்வந்தர் வீட்டு முதல் வரிசை எள்ளி நகையாடினார். 

‘அவர்களது மொத்த சொத்துக்கும் முதல் வாரிசு அவள் தான்’ என்பதை மறந்தது போல், அவளை மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்.

அவர் போட்ட காட்டு கத்தலில், குடும்பத்தில் உள்ள அனைவரும் அங்கே கூடி விட்டனர். கதிர் அரசன் மதுரையில் இருந்ததால் அவன் மட்டும் அங்கு இல்லை. 

“நீ படிச்ச வரை போதும். சீக்கரம் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி விரட்டிவிடணும். அப்பதான் எல்லோருக்கும் நிம்மதி.” 

அவர் பேசியதை கேட்ட பெண்ணவள், ‘தனக்கு யாராவது ஆதரவாக பேசுவார்களா?’ என குடும்பத்தில் உள்ள அனைவரின் முகம் பார்த்தாள். ஆனால் யாரும் அவர் பேச்சுக்கு மறு வார்த்தை பேசுவதாக இல்லை. இது தெரிந்தது தான் என்றாலும் அன்பை எதிர்பார்த்து ஏமாந்த மனம் வலிக்கவே செய்தது. 

அன்பரசன் ஏதோ சொல்ல வர, அவன் கரத்தை பற்றி ‘பேசாதே’ என தலையசைவில், அவனை தடுத்து நிறுத்தினாள். அவனும் பல்லை கடித்து தன் கோபத்தை கட்டுப்படுத்தினான். அதே நேரம் மற்றவர்களை முறைப்பதையும் அவன் நிறுத்தவில்லை.

பெண்ணின் பார்வை, முதலில் தன் தந்தையை நோக்கி திரும்பியது. ஆனால் அவரோ நீ யாரோ? நான் யாரோ? என்பது போல் முகம் திருப்பினார். அவரது அலட்சியத்தில் அவளது முகம் சுருங்கியது.

அடுத்து தன் தந்தை வழி தாத்தா, பாட்டியை தொட்டது அவளது பார்வை. அவர்களோ தங்கள் இயலாமையில் கையை பிசைந்து கொண்டு நின்றனர். அடுத்தது அத்தை, மாமா அதாவது கதிர் அரசன், அன்பரசனின் பெற்றோர்கள். அவர்களோ ‘இந்த பேச்சுக்கும் எங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை’ என்பது போல் இருந்தனர்.

தீப்தியை பத்தி கேட்கவே வேண்டாம் அன்னையின் ஜெராக்ஸ் காப்பி. ஒரு இகழ்ச்சி பார்வையோடு அவர்களை பார்த்திருந்தாள். பெண்ணின்  பார்வை மீண்டும் தன் தந்தையை அடைந்தது. கால்கள் தானாக அவரை நோக்கி சென்றது.

“அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்டீங்களா? என் பொண்ணை நான் படிக்க வைப்பேன்னு சொல்ல உங்களுக்கு மனசு வரல. இல்ல?” என்றாள் ஆதங்கத்தோடு. 

அவரிடம் இருந்து பதில் இல்லை. மீண்டும் வெண்கல குரல்,”அவர் எப்படி பேசுவார்? நீ ஒரு துரதிஷ்டம் பிடிச்சவள். உன்னை படிக்க வைக்கிற காசுக்கு கல்யாணம் பண்ணி விரட்டி விட்டால் தான், இந்த குடும்பத்தை பிடித்த தரித்திரம் தீரும்” என மனசாட்சியே இல்லாமல் பெண்ணின் மனதை குத்தி கிழித்தார்.

‘நான் இங்கே இருப்பதால் இந்த குடும்பத்துக்கு என்ன கேடு வந்தது?’ என கத்தி சொல்ல வேண்டுமென மனம் உந்தியது. ஆனால் ஒரு வார்த்தை பேசாமல் தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்தாள்.

மனசாட்சி உள்ளவர்களிடம் கேள்வி கேட்கலாம். அது அவர்கள் மனதை உறுத்தும். ஆனால் இங்கே இருப்பவர்களோ? 

இவ்வளவு நேரம் பொறுமை காத்த அன்பரசன், அவன் தந்தையிடம் சென்று “உங்க தங்கச்சி எவ்வளவு பேசுறாங்க? உங்களால் அவங்கள அடக்க முடியாதா?” என்றான் கோபத்தோடு.

“அவ என்ன தப்பா சொன்னா? அவளை நான் அடக்குவதற்கு?” என தங்கையின் பேச்சை நியாயம் என்றார்.

இவர்களிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்த ஆண் அவன்,”சரி! அப்ப நானும் ஒன்னு சொல்றேன், நல்லா கேட்டுக்கோங்க. அவ படிச்சா தான் நானும் படிப்பேன். அவ படிக்கலைன்னா நானும் படிக்க மாட்டேன்” என உறுதியாக சொல்லி வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.

அவன் இவ்வாறு சொன்னால் பெற்றவர்கள் மனது தாங்குமா? உடனே பெண்ணை படிக்க வைக்க முடிவெடுத்தனர். ஆனால் அவளை விடுதிக்கு அனுப்ப தயாராக இல்லை. அதனால் பக்கத்தில் உள்ள விருதுநகரில் படிக்க அனுமதித்தனர். 

“இல்ல அரசு நான் படிக்கல.” என பெண் மறுத்தாள். 

“சரி மலர் நீ படிக்கலைன்னா நானும் படிக்கல” என குண்டை போட்டான். 

“நீ ஏண்டா படிக்காம இருக்கணும்?”என ஆதங்கமாக கேட்டாள். 

“நீ படிக்க மாட்டேன்னு சொல்றியேடி” சர்வ சாதாரணமாக பதில் அளித்தான்.

“நானும் நீயும் ஒண்ணாடா? படிச்சா தான் உன் எதிர்காலத்துக்கு நல்லது?” என கடிந்து கொண்டாள்.

“என்னையும் உன்னையும் பிரிச்சு பாத்துட்டேல்ல? நீ என்கூட பேசாத.” என வருந்தி, முகம் திருப்பினான்.

‘நான் எப்போது இவனை பிரித்து பார்த்தேன்?’ என சிந்தித்த பெண்ணின் மனதில் தன் வார்த்தைகள் வலம் வந்தது. தன் தலையிலேயே அடித்துக் கொண்டவள்,”அடே மக்கு பக்கி! நான் சொன்னது நான் பெண், நான் படிக்காமல் இருந்தாலும் ஒன்றும் இல்லை. ஆனால் நீ அப்படி இல்லை. படிச்சா தான் உன் குடும்பத்தை பார்த்துக்க முடியும்.” என அவன் மண்டையில் கொட்டி புரிய வைக்க முயன்றாள்.

“ஓ! நீ அத சொன்னியா?” என அசடு வழிந்து, மீண்டும் ஃபார்முக்கு வந்தவன்,”அது என்ன ஆண் படிக்கணும், பெண் படிக்க வேண்டிய அவசியம் இல்லை? இந்த காலத்தில் பெண்ணுக்கும் கல்வி ரொம்ப முக்கியம்.” என அவன் கருத்தை ஆணித்தரமாக தெரிவித்தான்.

“டேய்! நீ சொல்லுறது எனக்கு புரியுது. ஆனா அவங்க எவ்ளோ பேசினாங்க கேட்டுட்டு தானே இருந்த? அவங்க கிட்ட போய் பிச்சை எடுக்க சொல்றியா?” என மன குமுறலை கொட்டினாள்.  

“லூசு! பிச்சை அது இதுன்னு பேசினா  சப்புன்னு அறைஞ்சிடுவேன். இந்த மொத்த சொத்துக்கும் நீயும் ஒரு வாரிசு. அதை மறந்துடாத. இது உன்னோட உரிமை” என அவளுக்கு எடுத்து கூறினான்.

அப்போதும் அவள் மனம் தெளியாமல் இருக்க, கடைசி ஆயுதமாக மீண்டும் முதலில் இருந்து அரம்பித்தான்,”சரி நீ படிக்காமல், நானும் படிக்க மாட்டேன். உனக்கு கிடைக்காத படிப்பு, எனக்கும் வேண்டாம்” என உறுதியாக மறுத்தான்.

அவன் உறுதியில் பெண் இறங்கி வந்தாள்,”சரி நான் விருதுநகர் காலேஜ்ல அப்ளிகேஷன் போடுறேன்.” என்றாள் வேண்டா வெறுப்பாக.

அவள் மனதை புரிந்து கொண்டாலும், காரியமாக வேண்டுமே? 

“சரி கிளம்பு நம்ம போய், ரெண்டு பேத்துக்கும் அப்ளிகேஷன் போட்டுட்டு வந்துடலாம்”

“என்னது ரெண்டு பேத்துக்குமா? நீ போயி சென்னையில சேரு.”

“அது எப்படி? நீ இல்லாமல் நான் போவேன்? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணாவே படிக்கலாம். ஒன்னாவே ஊரு சுத்தலாம்” என அவளை பேச விடாமல், குளியல் அறைக்குள் தள்ளி விட்டு, தானும் தயாராக அவன் அறைக்கு சென்று விட்டான்.

அவர்கள் கல்லூரியில் சேரட்டும் அதற்கு முன் அவர்களைப் பற்றி நாம் பார்த்துவிட்டு திரும்பலாம்.

††††† 

பாரியூரில், பல தலைமுறைகளாக செல்வாக்கு மிக்க குடும்பத்தை சேர்ந்தவர் பழனிவேல். ஏழை, பணக்காரர் என பாகுபாடு இன்றி அனைவருக்கும் உதவுவார்.

அவரது இல்லத்தரசி பர்வதம் அவரும் மென்மையானவரே. இவர்களுக்கு என்ன பிரச்சனை என்றால் சகுனம் பார்ப்பார். ஜாதகம், ஜோசியம் இதில் கொஞ்சம் நம்பிக்கை அதிகம்.

பழனிவேல் பர்வதம் தம்பதிகளுக்கு, ஆசைக்கு ஒன்று சுசீலா, அஸ்திக்கு ஒன்று கார்த்திகேயன் இரு பிள்ளைகள். இவர்களுடன், பழனிவேலின் தூரத்து சகோதரியின் பிள்ளைகளான தியாகராஜனும் சுகந்தியும் தங்கள் பெற்றோரை இழந்து, அவர்களுடன் வசித்து வருகின்றனர். 

சுசிலாவிற்கும் தியாகராஜனுக்கும் பெரியோர்களால் நிச்சயப்பட்டு திருமணம் முடிந்தது. அடுத்த ஒரு வருடத்தில் அவர்களுக்கு கதிர் அரசன் பிறந்தான்.

கார்த்திகேயனுக்கு சுகந்தியை முடிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணம். சுகந்திக்கும் கார்த்திக்கின் மேல் விருப்பம் உள்ளது. ஆனால் கார்த்திகேயன் அந்த ஊரிலேயே வசித்த, ஏழை குடும்பத்தை சேர்ந்த மீனாட்சியை விரும்பினார்.

மகனின் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிக்காத பெற்றோர்களும், மீனாட்சியை பெண் கேட்டு சென்றனர். மனதில் சிறு நெருடலுடன் சென்ற அவர்கள், பெண்ணை கண்டதும், அவள் அழகில் வசீகரிக்கப்பட்டு இந்த திருமணத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டனர்.

இந்தத் திருமணத்தில் மனம் உடைந்து போனது சுகந்தி மட்டும் தான். தன் விருப்பத்தை சொல்லவும் முடியாமல்,  அந்த திருமணத்தை தடுக்கவும் முடியாமல் அல்லாடினார். 

அந்த ஊரே வியக்கும் அளவு கார்த்திகேயன், மீனாட்சியின் திருமணம் கோலாகலமாக அரங்கேறியது. மீனாட்சி, கார்த்திகேயன் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது.

மீனாட்சியின் பொறுமையும் அமைதியும், அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அவளின் பால் ஈர்த்துக் கொண்டது. இதற்கு சுகந்தி மட்டுமே விதிவிலக்கு. அவருக்கு மீனாட்சியை கண்டால் ஆகாது. தன் வாழ்க்கையை பறித்துக் கொண்டவர் என மீனாட்சியின் மேல் வஞ்சம் வைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் அதை வெளியே காட்டிக் கொண்டது இல்லை.

இந்நிலையில் மீனாட்சி தாய்மையுற்றார். அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். 

தாய்மையின் பூரிப்பில் மேலும் அழகாக காட்சியளித்தார் மீனாட்சி. கார்த்திகேயன் அவர் மேல் பைத்தியமாக இருந்தார். அந்தப் பைத்தியமே ஒரு பெண்ணின், அதுவும் தன் உதிரத்தில் பிறக்கப் போகும் பெண்ணின் மனதை, குத்தி கிழிக்கப் போவது தெரியாமல், சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தார். 

இவர்கள் அனைவரின் சந்தோஷமும், அந்த வீட்டில் நிறைந்து இருந்தது, அந்த ஒரு நாள் வரும் வரை.

தவிர்க்கவே முடியாத அந்த ஒரு நாள் வந்தது. சிலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 

விதியின் சதியா? சூழ்ச்சியா?

Leave a Reply

error: Content is protected !!