வெண்பனி 30

IMG-20220405-WA0023-1ee8e0f7

வெண்பனி 30

பனி 30

அன்றைய இறைவனுடனான சந்திப்பை நினைத்தவளின் முகம் அஷ்ட கோணலாக மாறியது. 

“இப்ப சொல் மகளே. நீ அனைத்துக்கும் தயாராக தானே பூமியில் இருந்தாய். இப்போ ஏன் இவ்வளவு கோபம் உனக்கு?”

“அநியாயத்தை கண்டால் கோபம் வராதா?”

“அதைத்தான் நான் அன்றே சொன்னேன். உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.”

“என் கதிர் மாமாவை மயக்க பார்க்குறாங்க. என் குழந்தையை அனாதையா விட நினைக்கிறாங்க. அவங்களை தண்டிக்க வேண்டும்.”

“அவர்கள் மயக்கினால் மயங்க, உன் கதிர் மாமா அவ்வளவு பலவீனமானவரா? உன் மேல் அவர் கொண்ட காதல் அவ்வளவுதானா? அவர் குழந்தையை அனாதையா தவிக்க விட்டுடுவாரா? உன் மாமாவின் மேல் நீ கொண்ட நம்பிக்கை இவ்வளவுதானா?” பல கேள்விகளை தொடுத்தது இறைவனின் குரல்.

“என் மாமா மனசுல எப்பவும் நான் மட்டும்தான் இருப்பேன். அதில் எனக்கு நூறு சதவீதம் நம்பிக்கை இருக்கு. அவரை ஏமாத்தி கல்யாணம் பண்ண திட்டம் போடுறாங்க.”

“நீ இல்லாத போது உன் மாமா உன் தங்கையை திருமணம் முடித்து வாழ்வது தவறா?”

“அது எப்படி? என்னோட கணவன் எனக்கு மட்டும்தான் சொந்தம்?” சிறு பிள்ளையாக முரண்டினாள்.

“நிதர்சனத்தை புரிந்து கொள். நீ இல்லாத உலகில் உன் கணவனுக்கு ஒரு துணை வேண்டும் அல்லவா?”

“அதெல்லாம் இல்ல. என் கதிர் மாமாவுக்கு நான் மட்டும் தான் பொண்டாட்டி.” என்றாள் நிதர்சனம் புரியாமல்.

“உன் கணவனுக்கு மறுமணத்தில் விருப்பம் இருந்தால்?”

“ஒரு காலமும் இருக்காது. என் கதிர் மாமா என்னை மட்டும் தான் விரும்பும்.” குரலில் அவ்வளவு உறுதி இருந்தது.

“அவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது எதுக்காக பயப்பட வேண்டும்?”

“அது போதை மருந்து கொடுத்து மயக்க பார்க்கிறாங்க.” இப்போது தடுமாற்றம் வந்தது.

“ஓ! மயங்கினால் உனக்கும், உன் தங்கைக்கும் வித்தியாசம் தெரியாதா உன் மாமாக்கு? அப்புறம் என்ன பொல்லாத காதல்.” எள்ளி நகையாடியது இறைவனின் குரல்.

“என் மாமா ரொம்ப ஸ்ட்ராங். அப்படி எல்லாம் மயங்க மாட்டார்.” திடம் மீண்டிருந்தது.

“அப்புறம் என்ன பிரச்சனை?”

பதில் சொல்லத் தெரியாமல் முழித்தாள்.

“சரி உன் வழிக்கே வருகிறேன். ஒரு வேலை உன் மாமா, உன் தங்கையிடம் மயங்கி விட்டால், நீ என்னுடன் மேலோகத்திற்கு வந்து விட வேண்டும். அதுக்கு சம்மதமா?”

பனிமலரிடம் தயக்கம்.

“உன் மாமாவின் மேல், உனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது, தயக்கம் ஏனடி பெண்ணே?”

“சரி உங்க கண்டிஷனுக்கு நான் ஒத்துக்கிறேன். எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு?”

“என்ன?”

“அந்த மயக்கத்திலும் என் மாமா, என்னை மட்டும் நினைத்தால், நான் அவருடன் வாழ வேண்டும். அவர் காலம் முடியும் வரை. இதுக்கு உங்களுக்கு சம்மதமா?”

“இயற்கைக்கு மாறாக ஒரு நிபந்தனையை வைக்கிறாய். வேடிக்கையாக இருக்கிறது.”

“முடியுமா? முடியாதா?” தன் பிடியில் நின்றாள்.

“சரி உன் மாமா அந்த மயக்கத்திலும் உன்னை மட்டும் நினைத்து, உன் ஸ்பரிசத்தை உணர்ந்தால், அவருடன் வாழ அனுமதி கொடுக்கிறேன். அவரை பொறுத்தவரை அது கனவாகவே இருக்கும். அதை நிஜம் என்று உணர்ந்தால் அவர் கண்களுக்கு நீ தெரிவாய்.”

அப்போதே இல்லம் அடைந்தனர். மனதில் பயத்துடன் அவர்களையே கண்காணித்துக் கொண்டிருந்தாள் பனிமலர். அவளுடனே அற்புதத்தை நிகழ்த்த காத்திருந்தார், ஜோதி வடிவில் இருந்த இறைவன்.

திக் திக் நிமிடங்கள்.

சுகந்தி மருந்தை கலந்ததையும், அதை உட்கொண்ட கதிர் அரை மயக்கத்தில் தடுமாறியதையும், தீப்தி அவனை அணுக முயன்றதையும், அவளை கதிர் ஒரே பார்வையில் விலக்கியதையும், கண்ட இறைவன் அவனை மெச்சி கொண்டார்.

பனிமலர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். அவளது மகிழ்ச்சிக்கு எல்லைகளே கிடையாது. அவளது பார்வை இறைவனிடம் யாசித்தது.

அவளது யாசகத்தை புரிந்த இறைவன், ஒரு முறை பிரகாசித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

“உன் கணவன் மீது நீ கொண்ட நம்பிக்கையை நினைத்தால் என் உள்ளம் பூரிக்கிறது. அவனும் உன் நம்பிக்கைக்கு தகுதியானவன். உன் நம்பிக்கைக்கும் அவனது தூய காதலுக்கும்,  நான் தரும் பரிசு. நீ உன் கணவனுடன் உடலால் வாழலாம். அவனை பொறுத்தவரை அது கனவு, அதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள். எப்போது அவன் உன்னுடன் இருப்பது கனவில்லை என உணர்கிறானோ, அன்றுமுதல் அவன் கண்களுக்கு நீ தெரிவாய். உனது தாய்ப்பாசத்துக்காகவும் குழந்தைக்காகவும், நான் விருப்பப்பட்டு உனக்கு தரும் வரம். உன் குழந்தையின் கண்களுக்கு நீ தெரிவாய். உன்னால் உன் குழந்தையை தொட்டு உணர முடியும். பொருட்களை நகர்த்த முடியும். இதில் ஒரு சிக்கல் உண்டு. அது என்னவென்றால். நீ மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாததால், பொருள்கள் அந்தரத்தில் மிதப்பது போல இருக்கும்.”

“இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. ரொம்ப நன்றி ஈஸ்வரா. அப்புறம் இன்னொரு வேண்டுகோள்.”

“இன்னும் என்ன?”

“அப்படியே என் அரசுவின் கண்ணுக்கும் தெரிஞ்சா சந்தோஷப்படுவேன்.”

“உனக்கு உன் கணவன் மட்டுமே அரசன்.”

“நான் அன்பரசனை கேட்டேன்.”

“இதுதான் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிக்கிறதோ?”

“கதிர் மாமாவுக்கு மட்டும் அனுமதி கொடுத்திருக்கீங்க?” 

“ஸ்ரீ ராமர் எப்படி சீதா தேவியை பிரிந்த பிறகும், அவரது நினைவோடு அவரது உருவ சிலையுடன் வாழ்ந்தாரோ? அது போலவே உன் கணவன். அவன் உன் மேல் வைத்திருப்பது ஆத்மார்த்தமான அன்பு. அவனது அன்பிற்காக தான் உனக்கு வரம் கிடைத்திருக்கிறது. நீ வரிசையா அடிக்கிட்டு போற?”

“இந்த ஒரு தடவை மட்டும். சின்ன வயசுல இருந்து, எனக்கு இருந்த ஒரே சந்தோஷம், ஆறுதல் அவன் மட்டும் தான். அவன் கண்களுக்கு மட்டும் நான் தெரியனும் ப்ளீஸ், ப்ளீஸ்.”

“நீ என்னை இக்கட்டில் நிறுத்துகிறாய்.”

“எனக்கு, எனக்கு இந்த வரம் கொடுக்கலைன்னா நான் உங்க கூட பேச மாட்டேன்.”

“சரி பேசாட்டி போ.”

‘ஐயையோ காரியத்தை கெடுத்துட்டேனே’ என மனதில் நினைத்தவள்,

“ப்ளீஸ், ப்ளீஸ் ஈஸ்வரா. என் செல்லமில்லை. இந்த ஒரே ஒரு தடவை. காட் பிராமிஸ். மறுபடி உங்ககிட்ட எதுவும் கேட்க மாட்டேன். உங்களுக்கு வார வாரம் வெள்ளிக்கிழமை வந்து பூஜை பண்ண சொல்றேன்.” என பாவமாக முகத்தை வைத்து யாசித்தால்.

“என்ன லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க பாக்குறியா?”

‘ஐயோ கண்டுபிடிச்சிட்டாங்களே.” திரு திருவென முழித்தாள்.

“சரி நீ என் மீது வைத்த அன்பிற்காக, உன் கணவன் கண்களுக்கு, நீ எப்போது தெரிகிறாயோ? அன்று முதல் உன் நண்பனுக்கும் தெரிவாய்.”

மகிழ்ந்து போனவள், “நன்றி ஈஸ்வரா.”

“மறுபடியும்”

“கூப்பிடமாட்டேன்.”

“இனி சில உண்மைகள் உனக்கு தெரியவரும். (மீனாவின் இறப்பு) அது முடிந்து போன ஒன்று. அதை மாற்ற முடியாது. அவரவர் செய்யும் கர்மாவின் பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். நீ வருத்தம் கொள்ளாதே. நான் அளித்த வரத்தை தவறாக பயன்படுத்த.”

“ஒன்னும் புரியல”

“விரைவில் புரியும். சரி கவனமாக இரு மகளே.” என்று ஜோதி வடிவம் மறைந்தது. அதோடு ஆசிர்வதிக்கப்பட்ட பனிமலரின் புகை வடிவம் பெண்ணாக உருமாறி, கதிருடன் கூடியது.

ஒரே நாளில் கதிர், பனிமலரின் இருப்பை உணர்ந்து விட்டான். அதனால் அவன் கண்களுக்கு பனிமலர் தெரிந்தால். இனி அவர்களது வாழ்வில் வசந்தம் மட்டுமே.

எமனிடம் போராடி, கணவனின் உயிரை மீட்டெடுத்தால் சாவித்ரி. இன்று இறைவனிடம் போராடி, கணவனுடன் இணைந்து வாழும், அற்புதத்தை நிகழ்த்தினாள் கதிரின் பனி. 

†††††

மறுநாள் யாருக்கு அழகாக விடிந்ததோ? இல்லையோ? இதழினிக்கு தன் அன்னையின் முகத்தில் அழகாக விடிந்தது.

தன் செப்பு இதழில், “ங்ங் ங்ங” என மிலற்றி, சின்ன கை கால்களை அசைத்து, தன் அன்னையின் இருப்பில் தனக்கு உண்டான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

கதிர் எழுந்ததுமே சென்று குழந்தையை பனிமலருக்காக தூக்கி வந்து விட்டான். நீண்ட ஆறு மாதங்களுக்கு பிறகு, தன் மகவை பனிமலரின் கரங்கள் தீண்டியது. அந்தப் பட்டு ஸ்பரிசத்தை, கை வழியே உணர்ந்த பனிமலரின் உடல் சிலிர்த்தது. உள்ளம் பூரித்தது.

ஏங்கி, தவம் இருந்ததற்கான வரம் இன்று கை சேர்ந்தது. பிறந்தது முதல், சில சமயம் மட்டும் பார்த்த குழந்தையை, இன்று தொட்டு தழுவ முடிந்தது பனிமலரால். அவளது மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.

எந்தத் தாய்க்கும் சேய்க்கும் வரக்கூடாத கொடுமை. 

குழந்தையை தூக்க பனிமலர்க்கு அவ்வளவு ஆசை இருந்தது. குழந்தையை தொட்டதற்கே அவளது கரங்கள் நடுங்கியது. இதில் எங்கிருந்து தூக்க? பாவமாக கதிரின் முகம் கண்டாள்.

இவ்வளவு நேரம் அவளது முகத்திலிருந்த சந்தோஷத்தையும், பூரிப்பையும் கண் சிமிட்டாமல் பார்த்து ரசித்திருந்த கதிரால், அவளது ஆசையை உணர முடிந்தது.

அவளை குழந்தையின் அருகில் அமர வைத்தவன், படுக்கையில் இருந்த குழந்தையை தூக்கி அவள் மடியில் வைத்தான். 

ஆஹா! அந்த முகத்தில் தான் எத்தனை வெளிச்சம். அதில் வந்த ஒளியை காண இரு கண்கள் போதாது. 

சிறிது நேரத்தில் நடுக்கம் குறைந்தது. குழந்தையை தூக்கி தன் மார்போடு அனைத்து, அதன் முகத்தினில் எண்ணற்ற முத்தங்களை பதித்து, கண்களில் ஆனந்த கண்ணீரோடு, அவளது மகிழ்ச்சியை பல பரிணாமங்களில் வெளிப்படுத்தினாள். 

ஆம் இப்போது அவளால் கண்ணீர் சிந்த முடிந்தது. மனிதர்களுக்கு உண்டான அத்தனை உணர்வுகளும் பனிமலருக்கு மீண்டிருந்தது. ஒரே குறை என்றால் யார் கண்களுக்கும் அவள் தெரிய மாட்டாள்.

அவளையே பார்த்திருந்த கதிரிடம் என்னவென்று பார்வையால் வினவினாள்.

“தேவதை மாதிரி இருக்க கண்ணம்மா.” ரசித்துக் கூறினான்.

தன்னை குனிந்து பார்த்தாள். தான் போட்டிருந்த வெள்ளை நிற உடையை கண்டு, “வெள்ளை டிரஸ் போட்ட ஆவியை பார்த்து தேவதை சொல்றியா நீ.” என அவனை மொத்தியெடுத்தாள்.

“ஹேய் பனி விடுடி. ரொம்ப வலிக்குது.”

“அப்படி தான் அடிப்பேன். நல்லா வலிக்கட்டும்”

“உன்மையை சொன்னா நம்பவே மாட்ட. சரி உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம் புது பேர் வச்சுக்கலாம். வெள்ளை டிரஸ் போட்ட வெண்பனி. எப்படி இருக்கு?” சட்டை காலரை பெருமையாக தூக்கிக் கொண்டான்.

“சகிக்கல” என வாய் சொன்னாலும், முகம் மலர்ந்தது.

தொலைந்து போன தன் சொர்க்கம், மீண்டும் கதிரின் கை சேர்ந்தது. அவனது மகிழ்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!