வெண்பனி 31

IMG-20220405-WA0023-6d3721c5

வெண்பனி 31

பனி 31

சூரிய வெப்பம் பூமியை அனலாக தகிக்க வைத்தது. அந்த வெயிலின் உஷ்ணத்தை சிறிதும் உணராத அன்பரசன், சோகமே உருவாக, தனியாக தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவனது நினைவுகள் அனைத்தும், பாலிய பருவத்தில் மொட்டுவுடன் செலவழித்த, தன் பொக்கிஷ நினைவுகளை மீட்டியது.

‘எத்தனை சேட்டைகள், எத்தனை சிரிப்பு, எத்தனை அதிரடி அட்டகாசங்கள்? இருவரும் செய்திருக்கிறார்கள்’ என நினைத்தவனின் முகத்தில் பல உணர்வுகளின் ஊர்வலம். 

சந்தோஷம், நெகிழ்ச்சி, சோகம் என மாறிய அவனது முக பாவனைகளை, எந்த வித சலனமுமின்றி பார்த்திருந்தாள் பனிமலர்.

“மொட்டு, இது என் வாழ்கையோட முக்கிய தருணம். அதுவும் நீ விரும்பிய தனாவுடனான என் கல்யாணம். அதுக்கு நீ இல்லாமல் போயிட்டியே?” என வாய் விட்டு புலம்பினான். 

ஆம்! இன்று அனைவரும் தனலட்சுமியை பெண் கேட்டு அவளது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதனால் அன்பு தோட்டத்தில் தனித்திருந்தான்.

“எங்களை சேர்த்து வைக்க எவ்வளவு ஆசைப்பட்ட. கடைசிவரை உன்னோட ஆசையை நிறைவேத்தாத பாவியாகிட்டேன். நீ சொன்னப்பவே கொஞ்சமாவது கேட்டிருக்கணும். தப்பு…” தொடர்ந்தது அவனது புலம்பல்கள்.

‘சொல்றப்ப ஒன்னும் கேக்குறதில்ல. இப்ப தனியா உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்கான். லூசு பையன். எப்பதான் வளர போறானோ? இவன வச்சுக்கிட்டு. ஹயோ ஹயோ.’ என தலையில் அடித்தவளுக்கு, அவனுடன் சிறிது விளையாடி பார்க்க ஆசை வந்தது, ‘அவனை கதற விடனும், என்ன பண்ணலாம்?’ என சிந்தித்தவளின் முகம் மலர்ந்தது.

‘ஐடியா! இந்தா வரேன். உன்ன தலை தெரிக்க ஓட விட.’

வெயிலில் தன்னை மறந்து புலம்பிக் கொண்டிருந்தவனின் மேல் நிழல் படிந்தது. அதை அவன் உணரவில்லை. அவனது முன் ஒரு செம்பு தண்ணீர் அந்தரத்தில் மிதந்து வந்தது. கொளுத்தும் வெயிலில் தொண்டை வறண்டிருந்த அன்புவிற்கு, அந்தத் தண்ணீர் தேவைப்பட, அது எப்படி வந்தது என சிந்திக்காமல் அதை எடுத்து குடித்தான்.

தண்ணீர் முழுவதும் தீர்ந்த பிறகே சூழ்நிலை உரைக்க, சுற்றும் முற்றும் கண்களை அலைய விட்டான். கண்களுக்கு யாரும் தெரியவில்லை. “இந்த தண்ணி எப்படி என் கைக்கு வந்துச்சு?” 

இப்போது அவனது கரத்திலிருந்த செம்பை, யாரோ எடுப்பது போல் உணர்ந்தான். சுற்றி யாரும் இல்லை. ஆனால் செம்பு மட்டும் அந்தரத்தில் மிதந்தது. அன்பு பயந்து போனான்.

இப்போதுதான் தன் மேல் நிழல் படிவதை உணர்ந்தவன் என்னவென்று பார்க்க, அவனுக்கு நிழல் தரும் குடை அந்தரத்தில் ஆடியது. அரண்டு போனவன், விட்டான் ஓட்டம் வீட்டுக்குள், அவனது அறையை நோக்கி.

அவன் படுக்கையில் விழுந்து, போர்வையை இழுத்து தலையோடு மூடி கொண்டவன், “ஆத்தி, வீட்ல பேய் நடமாட்டம் இருக்கும் போல? எந்த பேய் என்னை பலி கேட்குது தெரியலையே? என்னை எப்படியாவது காப்பாத்துபா ஈஸ்வரா. வெளியே போனவங்களை சீக்கிரம் வர வை.” என வடிவேல் ஸ்டைலில் வேண்டுதல் வைத்தான். அப்போது அவனது போர்வை தானாக விலகியது.

“ஈஸ்வரா, ஈஸ்வரா” என ஜபித்து கொண்டே ஒரு கண்ணை திறந்து பார்த்தான். அவன் முன் யாரும் இல்லாமல் போக, இரு கண்களையும் நன்றாக திறந்தவன் கதவின் பக்கம் பார்வையை திருப்பினான். அது தாளிடப்பட்டு இருந்தது.

பூட்டிய அறைக்குள் பேயிடம் வசமாக சிக்கிட்டமோ என நினைத்தவனின் பயம் அதிகரித்தது. முகமெல்லாம் வேர்வை துளிகள் படர்ந்தது. “இப்படி பேய்கிட்ட என்னை மாட்டி விட்டுட்டயே ஈஸ்வரா, இனி உன்கூட நான் பேசவே மாட்டேன் போ.”

யாரோ அவனது தலையில் கொட்டினார்கள். தலையை தடவிக்கொண்டே, “ஹே யாரது? என்னை பற்றி தெரிய.. விளையாடுறது. கையில மாட்டி.. தொலைச.. கட்டிடுவேன்.” என இல்லாத தைரியத்தை ஒன்று கூட்டி நடுங்கிக் கொண்டே வீரம் பேசினான்.

கட்டிலின் மேலிருந்த தலையனை அவன் மேல் பறந்து வந்து விழுந்தது. “சும்மா இப்படி பூச்சாண்… காட்டினா.. நாங்க பயந்துடுவோமா?” என்றான் பயந்து கொண்டு.

‘செருப்புக்கு பேய் பயப்படுன்னு சொல்லுவாங்க, அது வெளியில இருக்கு. அதே மாதிரி தான் சீமாறும். இப்ப என்ன பண்ணுறது? அட சாமி படம். அத எங்க வச்சேன்?’ என புலம்பிக்கொண்டே கடவுள் படத்தை தேடினான்.

அப்போது சரியாக அவனது கண்களை யாரோ மூடினார்கள். இருந்த கொஞ்ச நெஞ்ச தைரியமும் சுத்தமாக வடிந்தது. கெஞ்ச ஆரம்பித்தான்.

“பேய் சார்.” என்றவன் நிறுத்தி, ‘ஐயையோ இது பேய் சாரா? இல்லை மேடமா? தெரியலையே. சரி விடு குத்து மதிப்பா சார் போட்டுக்குவோம்.’ என மெதுவாக சொல்லியவன், “பேய் சார், பேய் சார், நீங்க தப்பான அட்ரஸ்க்கு வந்திருக்கீங்க. நீங்க தேடுற ஆளு நான் இல்ல. என்னோட அம்மா, அப்பாவுக்கு நான்தான் ஒரே இரண்டாவது பையன். நான் ரொம்ப நல்லவன். என்னை தயவு செஞ்சு விட்டுடுங்க. நான் பாவம்.” என சத்தமாக கெஞ்சினான்.

மூடிய கண்களோடு தலை குலுங்கியது, “என்னது விட மாட்டிங்களா? பாருங்க பேய் சார், எனக்கு இப்பதான் கல்யாணம் பேசவே ஆரம்பிச்சு இருக்காங்க. நான் கல்யாணம் பண்ணி புள்ள குட்டி பார்க்க வேண்டாமா? கொஞ்சம் கருணை காட்டுங்க. என்னோட  புள்ளைக்கு உங்க பேரை வைக்கிறேன்.”

அவனது செய்கைகளையும், பேச்சையும் கேட்ட பனிமலருக்கு சிரிப்பை அடக்கவே முடியலை. சத்தமிட்டு சிரித்து விட்டாள்.

அந்த சிரிப்பொலி அன்புவின் செவியில் தித்திப்பாக இறங்கியது. இவ்வளவு நேரம் இருந்த பயம் விலகி குதூகலமாக, “ஹே மொட்டு” என சந்தோச கூச்சலிட்டான். தன் கண்களை மூடிய கரத்தை விலக்கி திரும்பினான்.

அங்கு முகமெல்லாம் மலர்ந்த புன்னகையோடு அவனை பார்த்திருந்தாள் அன்புவின் மொட்டு. பேச வார்த்தைகள் இல்லாமல் அவளை தாவி அணைத்தான்.

“மொட்டு எப்படி இருக்க? நல்லா இருக்கையா? நீ செத்துட்டனு எல்லாரும் பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டாங்க? வா வந்து என்னனு கேளு.” என சிறுவனாக குற்றம் சாற்றினான். பெண் அவனை புன்னகையோடு பார்த்திருந்தாள்.

அவனால் இன்னமும் அவள் இல்லாததை நம்ப முடியவில்லை. ஒருவேளை அவளின் உயிரற்ற உடலை கண்டிருந்தால் நம்பி இருப்பானோ என்னவோ?

பதில் வராமல் போக, “நிஜமாவே நீ வந்துட்டயா?”

“ஆமாடா அரசு ஆவியா வந்துட்டேன்.”

“என்னது ஆவியாவா?” புரியாமல் குழம்பினான்.

“அது எப்படிடா நான் இல்லாமல் நீ ஜாலியா இருக்கலாம்? அதுதான் உன் கூடவே இருந்து உன் உயிரை எடுக்க, நான் சொன்ன மாதிரி ஆவியா வந்துட்டேன்.”  என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“நீ என்ன சொன்ன? எப்ப சொன்ன?” என்றான் புரியாமல்.

“அதுதாண்டா அரசு, ஒருநாள் தனா கூட பேச சொல்லி, உன் கூட சண்டை போட்டேன். அப்ப நீ, ‘என்னை தொல்லை பண்ணாம இருக்க முடியாதா சொன்ன.’ அதுக்கு நான் சொன்னேன், ‘செத்தாலும் ஆவியா வந்து உன்னை தொல்லை பண்ணுவேன்னு’ அதுதான் இப்ப வந்துட்டேன்.”

“நீ எனக்கு தொல்லையாடி? அப்படி ஏதாவது பேசின உன்ன கொன்னு போடுவேன். சாதாரணமா பேசுன ஒரு பேச்சு, நம்ம வாழ்க்கையில இப்ப உண்மையாகிடுச்சு. எனக்காகவா நீ திரும்பி வந்த.” என்றான் நெகிழ்ந்த குரலில்.

“உனக்காக கொஞ்சம். கதிர் மாமாக்காக கொஞ்சம் அதிகமா. இதழினி பாப்பாக்காக நிறைய.” கலகலவென சிரித்தாள்.

அவளது மலர்ந்த சிரிப்பை ஆசையாக பார்த்திருந்தான் அன்பரசன்.

†††††

“நீயும் வந்திருக்கலாம் தனா.” என அன்பு பொய் கோபம் கொண்டான்.

“கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு, மாப்பிள்ளை வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொன்னாங்க.” தன்னிலை விளக்கம் அளித்தால் தனலட்சுமி.

“இப்படி ஏதாவது சொல்லி, என் வாயை அடைச்சுடு.” என அன்பு தனலட்சுமியுடன் உரையாடி கொண்டிருந்தபோது, அந்த வீட்டு வாசல்படியில் காலை வைத்தார் அவர்.

அவரது உடல் சிலிர்த்தது. தன் கண்களை மூடி அந்த உணர்வை ஆழ்ந்து அனுபவித்தவர், “அப்பனே ஈஸ்வரா! உன் திருவிளையாடலின் மகிமையே மகிமை.” என மனதுக்குள் உரையாடியவர் கண்களை திறக்க, அங்கு கதிர் இதழினியுடன் நின்றான். அவனருகில் யார் கண்களுக்கும் புலப்படாத பனிமலரும். வந்த அவராலும் அவளது இருப்பை உணர முடிந்ததே தவிர அவளை காண முடியவில்லை.

அவர் நேரே சென்று இதழினியின் தலையை கோதி, “அதிர்ஷ்டக்கார குழந்தை.” என்றவர் கதிரை ஒரு அர்த்த பார்வை பார்த்தார்.

கதிர், அவர் கண்களை உற்று பார்த்தான். அங்கு என்ன தெரிந்ததோ? மென் புன்னகையை உதட்டில் படரவிட்டான். “இனி உனக்கு எல்லாம் ஏறு முகமே.” என வாழ்த்தியவர், மற்றவர்களை பார்த்து கை கூப்பினார்.

என்ன நடக்குது என புரியாமல் பார்த்திருந்தவர்கள், அவரை மரியாதையாக அழைத்து சென்று அமர வைத்தனர். அன்பரசன், தனலட்சுமியின் ஜாதகத்தை கொடுத்து அவர்களுக்கு திருமண தேதி குறித்தனர். 

“ஐயா, எங்க பேத்தி பனிமலர் ஜாதகத்தை கணித்து கல்யாணத்துக்கு அப்புறம் நல்லா இருக்குன்னு சொன்னீங்க. ஆனா இப்ப அவ உயிரோடவே இல்லை.” என வருத்தத்தோடு வந்த பர்வதம்மாளின் குரலில், அவரை பார்த்த ஜோசியர், “நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன். அவளை உயிரா தாங்குற புருஷன் கிடைப்பாருன்னு சொன்னேன், கிடைத்தாரா?”

ஆம் என்று தலையசைத்தார்.

“ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும், சீதா தேவியும் போல வாழ்வார்கள்ன்னு சொன்னேன். வாழ்ந்தார்களா?” 

“….”

“அதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள். அவர்களை அந்த இறைவனாலும் பிரிக்க முடியாதுனு சொன்னேன். உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் அவளுக்கு கிடைக்கும் சொன்னேன்.” என்றவரின் பார்வை கதிரை அடைந்தது, “அந்த அதிர்ஷ்டம் அவளுக்கு கிடைத்து விட்டது. சில தெய்வ செயல்களை மானிடரால் அறிய முடியாது. மனித சக்திகளுக்கு அப்பாற்பட்ட பல விஷயங்கள் இந்த உலகில் உண்டு. அப்படி ஒரு அபூர்வ நிகழ்வு நடந்து உள்ளது. அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள எனக்கு அனுமதி இல்லை. ஒன்று மட்டும் சொல்கிறேன் உங்கள் பேரன் கதிர் அரசனின் வாழ்வில் பனிமலர் என்ற காரிகையைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை. அவனது வாழ்வில் எப்போதும் ஏற்றம் மட்டுமே உண்டு.” என பூடகமாக பேசி, விடைபெறும் முன் மீண்டும், இதழினியை கண்கள் நிறைய பார்த்து, மனம் நிறைய ஆசீர்வதித்து விடை பெற்றார்.

அவரது பேச்சும் செயலும் புரியாமல் அனைவரும் முழித்து நின்றனர்.

†††††

இரு மாதங்கள் கடந்திருந்தது. அந்த காலை பொழுது அழகாக விடிந்தது . அலங்கரிக்கப்பட்ட மணமேடையில், மணமகனுக்கே உரிய கம்பீரத்தோடு அமர்ந்திருந்தான் அன்பரசன். அவனது அருகில் மணப்பெண் அலங்காரத்தில், எப்போதையும் விட அழகாக ஜொலித்தால் தனலட்சுமி. 

காதலுடன் தன்னவலை வருட வேண்டிய அன்பரசனின் கண்கள், பாசத்துடன் தன் அன்பானவளை வருடியது. அந்த அன்பானவளுக்கு இப்படி ஒருவன் அவளை பார்க்கிறான் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், கதிரை வால் பிடித்து சுற்றி கொண்டிருந்தாள். 

“கதிர் மாமா ப்ளீஸ்”

“பனிமா சொன்னா கேளு, எல்லாரும் என்னை ஒரு மாதிரி பாக்குறாங்க.” என்றவன் ஒரு அறைக்குள் நுழைந்தான்.

“அது எப்படி, என்னோட மாமாவை அவங்க பார்க்கலாம்? இரு அவங்க கண்ணை தோண்டுறேன்.” என்று வெளியே செல்ல திரும்பியவளை இழுத்து நிறுத்தினான்.

“அடியே பனிமலரே உனக்கு வர வர பொறாமை ரொம்ப ஜாஸ்தியாகிடுச்சு. நான் சொன்னது என்னை பைத்தியம் மாதிரி பாக்குறாங்க.”

கோவத்தில் முகம் சிவக்க, “யார் அது? இன்னைக்கு அவங்களை உண்டு இல்லைனு ஆக்குறேன்.” 

“அடியே மண்டு, தனியா பேசினா பைத்தியம்னு தான் சொல்லுவாங்க.” என அவளது தலையில் கொட்டினான்.

“நீ என்கூட தான பேசுற. அப்புறம் எப்படி தனியா பேசுறன்னு சொல்லுவாங்க?”

“நீ ஆவியா போகவும் அறிவு இல்லாம போச்சு. நீ யார் கண்ணுக்கும் தெரியமாட்ட.” அவன் சொல்வது புரிந்ததும் பெண்ணின் முகம் கசங்கியது.

“உனக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறேன்ல, நான் திரும்பி வராமலே போயிருக்கனும்.”

அவளை மென்மையாக அணைத்தவன், “நீ திரும்பி வராமல் போயிருந்தா, நான் நடைபிணமா வாழ்ந்திருப்பேன். அதுக்கு பைத்தியம் எவ்வளவோ மேல். இனிமேல் இப்படி பேசாத டி.” என்றவன், அவளது முன் நெற்றியில் அழுத்தமாக உதடு பதித்து வெளியேறினான்.

சிறிது நேரத்தில் வெளியே வந்தவளது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அதை மனம் நிறைய பார்த்தான் அன்பரசன். பனிமலரின் பார்வை சித்ராவின் கைகளில் சிரித்துக்கொண்டிருந்த இதழினியின் மீது பதிந்து கதிரிடம் தாவியது. அவனது கண்களும் அவளை சந்திக்க, அவளது பார்வை கெஞ்சியது, இதழினியை தூக்க வேண்டுமென்று. அவனும் சுற்றி உள்ள சொந்தங்களை காட்டி முடியாதென தலையசைத்தான்.

அவள் அவனை முறைக்க, ‘ப்ளீஸ் அப்புறம் தூக்கிட்டு வரேன்’ அவன் வாய் அசைக்க, அவளது முறைப்பில் மாற்றமில்லை. ஒரு பெருமூச்சுடன் காதை இருக்கைகளால் பிடித்து தொப்புகாரணம் போடுவது போல் செய்தான். இவர்களது நாடகத்தை பார்த்திருந்த அன்பரசன் சத்தமிட்டு சிரித்தான். இப்போது அனைவரின் பார்வையும், பைத்தியமா நீ? என்பது போல் அன்பரசனை பார்த்தது. அசடு வழிந்தவன் தனாவிடம் பேசுவது போல் திரும்பிவிட்டான். 

தனாவின் பார்வை கேள்வியாக அவன் மீது பதிய திரு திருவென முழித்தான். அவனது முகத்தை பார்த்த தனலட்சுமி, வந்த சிரிப்பை யாருக்கும் தெரியாமல் மறைக்க பெரும் பாடுபட்டாள்.

அன்பு பாவமாக கதிரை பார்த்தான். அவனோ வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கினான். பனிமலரை பற்றிய விஷயம் அவர்கள் இருவரை தவிர யாருக்கும் தெரியாது.

†††††

அனைவரும் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்தனர். சுகந்தி, கார்த்திகேயனிடம் பேச முயன்று தோற்றார். அவர் சுகந்தியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அதில் சுகந்தியின் மனம் வாடியது. அன்றே கார்த்திகேயன் சொல்லிவிட்டார், “மீனாவின் இறப்பை மறைத்ததை கூட ஒரு வகையில் என்னால் மன்னிக்க முடியும். ஆனால் பனிமலரை அனாதையாக தவிக்க விட்டதை என்னால் மன்னிக்க முடியாது.” என்று. இதுவரை தவறாக தெரியாத தன் செயல், இப்போது பெரும் பாவமாக தெரிந்தது. தனக்கு இந்த தண்டனை தேவை என நினைத்த சுகந்தி கார்த்திகேயனின் மனம் மாற காத்திருந்தார்.

தீப்தி, அடுத்த முகூர்த்தத்தில் திருமணமாக போகும் தன் மணாலன் அருளுடன், ஒரு ஓரமாக அமர்ந்து விட்டாள். அவள் மீது உண்மையான காதலோடு இருந்த அருள் வேந்தனுக்கு துரோகம் செய்ய இருந்ததை நினைத்து வெட்கினாள். 

‘மறுமணத்தை பற்றி பேசினால் இந்த வீட்டை விட்டு சென்றுவிடுவேன்.’ என உறுதியாக சொல்லிவிட்ட கதிரின் பேச்சை மீற முடியாமல், குடும்பத்தில் உள்ள அனைவரும் மௌனம் காத்தனர். அவர்களது பார்வை, தனி மரமாக நிற்கும் கதிரை பாவமாக பார்த்தது. ஆனால் அவனோ தன் சகோதரனின் திருமணத்துக்கு, மகிழ்ச்சியோடு ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தான். 

நிறைந்த சுபமுகூர்த்தத்தில் தனலட்சுமியின் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து, தன்னில் சரிபாதியாக ஆக்கிக் கொண்டான் அன்பரசன்.

அடுத்த பத்து நாட்களில் வந்த முகூர்த்தத்தில் அருளின் சரிபாதி ஆனால் தீப்தி. அருளின் காதலை உணர்ந்த தீப்தி, இனி கோபம், பொறாமை அனைத்தையும் விடுத்து திருந்தி வாழ்வால் என நம்புவோம்.

சிறு மலரான பனிமலருக்கு பெற்றோரின் பாசம் கிடைக்காமல் தடுத்து, சுகந்தி செய்த பாவத்திற்கு நிச்சயம் இறைவனிடம் தண்டனை கிடைக்கும் என நம்புவோம்.

†††††

சில ஆண்டுகளுக்குப் பிறகு

“சித்ராம்மா நான் அப்பா ரூம்ல போய் ரெடியாகிட்டு வரேன்.” என சிட்டாக பறந்தாள் இதழினி.

“அக்கா என்னை விட்டுட்டு போறியே?” என அவளை விட இரு வயது சிறிய அன்பரசனின் மகன் அபினவ் கேட்டான்.

“நான் ரெடி ஆகிட்டு வரேன் அபி குட்டி. அப்புறம் நம்ம விளையாடலாம்.” என பொறுமையாக அவனை சமாதானம் செய்துவிட்டு, பெற்றோர் அறைக்குள் நுழைந்தாள்.

மகளின் வருகைக்காக காத்திருந்த பனிமலரை, “ஐ மிஸ் யு மம்மி.” என ஓடி சென்று அணைத்துக்கொண்டது அந்த ஆறு வயது சின்ன சிட்டு. 

“ஐ டூ மிஸ் யு டா பட்டுக்குட்டி.” என கொஞ்சினாள் பனிமலர்.

“அம்மாவும், மகளும் என்னமோ வருஷக்கணக்கா பிரிஞ்ச மாதிரி டயலாக் விடுறீங்க. நைட் அவ ரூம்ல தூங்கிட்டு, காலைல எந்திரிச்சு வந்துட்டா. அதுக்கு இவ்வளவு பில்டப்பா?” என பொய் கோபம் கொண்டான் கதிர் அரசன்.

“ஃபுல் நைட் டாடி, எய்ட் ஹவர்ஸ்.” தன் சின்ன கண்களை உருட்டினாள்.

“அப்படி சொல்லடி என் பட்டுக்குட்டி.” என இதழினியுடன் ஹைஃபை அடித்துக்கொண்டாள் பனிமலர். கதிர் அதை ரசித்தாலும் அவர்களை முறைத்தான். 

“நம்ம கொஞ்சுறத பார்த்து டாடிக்கு பொறாமை.” என அன்னையை பார்த்து கண் சிமிட்டினாள்.

“அப்படியா கதிர் மாமா?” கண்ணை உருட்டினாள் கதிரின் பனி.

“வர வர உங்க ரெண்டு பேருக்கும் சேட்டை ஜாஸ்தி ஆகிடுச்சு. இப்ப என்ன பண்ணுறேன் பார்.” என அவர்களை துரத்தினான்.

“முடிஞ்சா பிடிங்க.” என அந்த அறைக்குள் மூவரும் சுற்றினர்.

அப்போது கதவை திறந்து உள்ளே நுளைந்தான் அன்பு. “சித்தா, அப்பா என்னை அடிக்க வராங்க. காப்பாத்து.” என அவன் கரங்களில் அடைக்கலம் புகுந்தாள் இதழினி.

“ஏன் அரசு எப்ப பார் குழந்தை கிட்ட வம்பு பண்ணிட்டு இருக்க? நீயுமா மலர்?” என இருவரையும் முறைத்தான் அன்பு. 

இருவரும் நான் இல்லை என ஒருவர் மாற்றி ஒருவரை காட்ட, சலிப்பாக தலையசைத்த அன்பு, “இவ குழந்தையா நீங்க குழந்தையானே தெரியல. நீ வாடா குட்டி. இவங்க கூட சேர்ந்து நீயும் கேட்டுப்போய்டாத. நீ அபி கூட விளையாடு.” என இதழினியை தூக்கி சென்றான். இவர்களை பார்த்து கண் சிமிட்டிய குட்டி சமத்தாக தன் சித்தப்பாவுடன் சென்றது .

இவர்களது மகிழ்ச்சி எப்போதும் நீடிக்க பரமேஸ்வரனை வேண்டி விடைபெறுவோம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!