வெண்பனி 4

IMG-20220405-WA0023-6795f049

வெண்பனி 4

பனி 4

செடியில் பூக்கும் மலரை விட

நொடியில் பூக்கும்

மழலையின் புன்னகை அழகு!!!!!

மீனாட்சிக்கும் கார்த்திகேயனுக்கும் திருமணம் முடிந்து, மூன்று மாதங்கள் கடந்திருந்த ஒரு நாள், மீனாட்சி மயங்கி சரிந்தார். வீட்டில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கார்த்திகேயன் துடிதுடித்துப் போனார்.

அனுபவம் வாய்ந்த பர்வதம்மாவிற்கு விஷயம் புரிந்தது. “ஏன் எல்லாரும் பயப்படுறீங்க? எல்லாம் நல்ல விஷயமா தான் இருக்கும். ஹாஸ்பிடல் போய் டாக்டரை பார்த்துட்டு வா” என அனைவரையம் பார்த்து தொடங்கி  கார்த்தியிடம் முடித்தார்.

முதலில் புரியாமல் முழித்த கார்த்தி, புரிந்ததும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விஷயத்தை உறுதி செய்தார். அதே நேரம் சுசிலாவுக்கும் நாட்கள் தள்ளி சென்றிருந்ததை, அப்போதுதான் கவனத்தில் கொண்டார்.

ஆம்! சுசிலாவும் அதே நேரம்  இரண்டாவது முறையாக கருவுற்றிருந்தார். அவருக்கு இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சியில் அந்த குடும்பமே திளைத்திருந்தது. 

திடீரென ஒரு பிரச்சினையை கிளப்பினார் பர்வதம்மாள். ‘ஒரு வீட்டில் மகளும் மருமகளும் ஒரே நேரத்தில் கருவுற்றிருக்கும் போது, ஒருவரை ஒருவர் நேரடியாக சந்திக்கக் கூடாது. அது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆகாது.’ என்று

அதனால் ஒருவரை அந்த வீட்டில் இருந்து வெளியே தங்க வைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. 

சுசிலாவிற்கு புகுந்த வீடும் இதுவே எனும் பட்சத்தில், மீனாட்சியை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்ப முடிவெடுத்தனர். திருமணம் முடிந்து மூன்று மாதங்களில், பிரித்து வைப்பதால் கார்த்திகேயன் கவலையில் ஆழ்ந்தார். 

“மீனு கல்யாணம் முடிஞ்சு மூணு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள நம்மல பிரிச்சு வைக்கிறாங்க. பேசாம நம்ம குழந்தையை கொஞ்சம் தள்ளி போட்டிருக்கலாம்.” என்றார் சோகமே உருவாக.

“ஏன்ப்பா உங்களுக்கு குழந்தை வந்தது பிடிக்கலையா?” என்ற மீனாட்சியின் முகம் சுருங்கிவிட்டது.

“இந்த குழந்தை வந்ததுனாலதான நம்ம பிரிச்சு வைக்கிறாங்க. அதுதான் சொன்னேன்.” அப்போதே பிறக்காத குழந்தையின் மீது ஒரு மன சுனுக்கம் வந்திருந்தது. 

“குழந்தை பிறக்கப்போகுதுன்னு நான் எவ்வளவு ஆசையா இருக்கேன்? அதுல உங்களுக்கு சந்தோஷம் இல்லையா?” என்றார் கவலை தேய்ந்த குரலில்.

“ஐயையோ! எனக்கும் சந்தோஷம் தான். ஆனா மனச ஏதோ பண்ணுது? சொல்லத் தெரியல. உன்னை விட்டு ரொம்ப தூரம் போற மாதிரி தோணுது.” என தன் மனக்குறையை கூறினார் கார்த்திகேயன்.

“இது நம்ம குழந்தை பா. உங்க ரத்தம். நம்ம குழந்தையை நாம தானே பார்த்துக்கணும்” என குழந்தைக்கு செல்வது போல் எடுத்து கூறினார் மீனா. அது அனைத்தும் அவர் மனதை அடைந்ததா? சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம். 

ஏதேதோ சமாதானம் கூறி கார்த்திகேயனின் சம்மதத்தோடு, மீனாட்சி பிறந்த வீட்டை அடைந்தார். அந்த வீட்டிலிருந்து செல்லும் மீனாட்சி, அதன் பிறகு அந்த வீட்டில் வாழ மாட்டார், என்பது யாருக்கும் தெரியாமல் போனது.

மீனாட்சியின் வீடும் அதே ஊரில், அதுவும் பத்து நிமிட நடை தூரத்தில் உள்ளதால் கார்த்திக் இதுக்கு சம்மதித்தார். தினமும் மீனாட்சியுடன் தான் இரவு தங்கினார். மீனாட்சி! அவர்கள் வீட்டில் ஒற்றைப் பெண், என்பதால் அவர்கள் வீட்டிலும் மறுப்பு கிடையாது.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, தாய்மையின் பூரிப்பில் மீனாட்சியின் அழகு மேலும் மெருகேறியது. மீனாட்சியின் மேல் கார்த்திக் பைத்தியமாக இருந்தார். 

ஏழாம் மாதத்தில் மீனாட்சியின் வளைகாப்பை, அந்த ஊரே வியக்கும் அளவு நடத்தினார் கார்த்திகேயன். இது அனைத்தையும் கண்டு சுகந்தியின் மனதில் வன்மம் கொழுந்து விட்டு எறிந்தது. இதை யாரும் உணராமல் போனது விதியின் சதிராட்டமா? 

†††††

அனைத்தும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சியை மேலும் கூட்டும் வகையில், சுசிலாவிற்கு இரண்டாவது முறையாகவும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்ததும், அவருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ததால், கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல்.

பாவம் அவர்களது மகிழ்ச்சி அந்த ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை.

பர்வதம்மாள் மருத்துவமனையில் சுசிலாவிற்கு துணையாக இருக்க, ஆண்கள் மருத்துவமனை, வீடு, தொழில் என அலைந்து கொண்டிருந்ததால், வீட்டில் வேலைக்காரர்களுடன் சுகந்தி மட்டுமே இருந்தார். அப்போது ஒரு நாள் ஏதோ எடுப்பதற்காக, மீனாட்சி புகுந்த வீட்டை அடைந்தார். வேலை செய்பவர்கள் அனைவரும் அவரவர் வேலையில் ஈடுபட்டிருந்ததால் மீனாட்சி வந்தது யாருக்கும் தெரியாமல் போனது. 

திடீரென மீனாட்சியின் அலறல் சத்தம் அந்த வீட்டை உலுக்கியது. பதறியடித்து வந்த அனைவரும் பார்த்தது, மாடிப்படிகளின் கடைசி படியில் அடிபட்டு மயங்கி கிடந்த மீனாட்சியை.

அனைவரும் ‘அடுத்து என்ன?’ என புரியாமல் ஸதம்பித்து போயினர். சுகந்தி துரிதமாக செயல்பட்டு அவரை காரில் ஏற்றி மருத்துவமனை அடைந்தார். ஓட்டுனர் ஒருவருடன் வாகனம் அவர்கள் வீட்டில் எப்போதும் தயாராக இருக்கும்.

அந்த ஊரில் இருபது ஓரே மருத்துவமனை. அங்கு தான் சுசிலா இருக்கிறார். அதே மருத்துவமனை என்பதால் அனைவரும் அங்கே இருந்தனர்.

“என்ன ஆச்சு?” என்ன பதறி துடித்த குடும்பத்தாரிடம், “மாடிப்படில தவறி விழுந்துட்டாங்க. அதுல அடிபட்டுருச்சு” என சுகந்தி கூறி மருத்துவர்களிடம் மீனாட்சியை ஒப்படைத்தார்.

மீனாட்சிக்கு தலையிலும் வயிற்றிலும் அடிபட்டிருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு குழந்தையை வெளியே எடுத்தனர். எவ்வளவு போராடியும் மருத்துவர்களால் தாயை காப்பாற்ற முடியவில்லை.

மீனாட்சி ஆசையாக பெற்றெடுத்த பிள்ளையை கூட பார்க்காமல் விண்ணுலகை அடைந்தார். மீனாட்சியின் மரண செய்தியில் குடும்பத்தினர் உறைந்து போயினர்.

‘பிறக்கும் போதே தாயை முழுங்கிய துரதிஷ்ட குழந்தை’ என்ற பெயருடன் இந்த பூமியில் ஜனித்தாள் நம் கதையின் நாயகி.

பனியில் நனைந்த ரோஜாவை போல் இருந்த பெண் குழந்தையை, முதல் முதலில் கைகளில் ஏந்தியது கதிர் அரசன். மூன்றே வயதான அவனுக்கு அதில் அவ்வளவு மகிழ்ச்சி. 

மீனாட்சியின் இழப்பில் குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் இருந்தனர். கதிர் அரசனின் நேரம் அனைத்தும் இரண்டு குழந்தைகளுடனே செலவழிந்தது. 

இப்படியே முப்பது நாள் கடந்த பின், குழந்தைகளுக்கு பெயர் சூட்ட முடிவெடுத்தனர். அன்பரசன் என தன் இரண்டாவது குழந்தைக்கு பெயரை தேர்ந்தெடுத்தனர் தியாகு சுசிலா தம்பதியினர்.

“பாப்பாவுக்கு நான் தான் பெயர் வைப்பேன்” என அடம் பிடித்த கதிர் அரசன், குழந்தைக்கு பனிமலர் என்ற பெயரை தேர்ந்தெடுத்தான். 

“பாப்பா! நீ பாக்குறதுக்கு அப்படியே ஸ்னோ மாதிரி அழகா இருக்க, உன்னை தொட்டா  சாஃப்டா பூ மாதிரி இருக்கு, அதனால ரெண்டும் சேர்த்து, உனக்கு பனிமலர்னு பெயர் வச்சேன். நல்லா இருக்கா?” பிறந்த குழந்தையிடம் அபிப்ராயம் கேட்டான், அந்த வளர்ந்த குழந்தை. அவன் கேட்டது புரிந்தது போல், குழந்தையும் அழகாக சிரித்து தன் சம்மதத்தை கூறியது. 

ஏற்கனவே கதிர் அரசனை அனைவரும் அரசு என அழைப்பதால், அன்பரசு அனைவருக்கும் அன்பு ஆனான். பனிமலர் அனைவருக்கும் மலர் ஆனால்.

இதில் கொடுமை என்னவென்றால், தன் உதிரத்தில் ஜனித்த பெண்ணவளை, தந்தையானவன் (கார்த்திகேயன்) தொட்டுக் கூட பார்க்கவில்லை.

கார்த்திகேயன், பனிமலரின் உறவு, ஒட்டியும் ஒட்டாமலும் மூன்று மாதங்களை கடந்திருந்தது. சோகமே உருவாக சுற்றி திரிந்த கார்த்திகேயனை, கண்ட அவனது பெற்றோர்களுக்கு தாங்குமா?

†††††

எதுலையும் ஒரு பற்றில்லாமல் சுற்றி திரிந்த கார்த்திகேயனின் மாற்றம், பெற்றோர்களை வதைத்தது. அவரை மீண்டும் பழையபடி மாத்த, அவர்களுக்கு கிடைத்த ஒரே வழி மறுமணம்.

பெண்ணை தேட வேண்டிய அவசியமே இல்லாமல், அவனுக்காகவே காத்திருந்த சுகந்தியை தேர்ந்தெடுத்தனர்.

அன்று இரவு, வெகு நேரம் சென்று, வீடு திரும்பிய கார்த்திகேயனிடம் பேச காத்திருந்தனர் அவனது பெற்றோர்கள். 

“தம்பி வா சாப்பிடலாம்.” என பர்வதம்மாள் அழைத்தார். தாயின் அழைப்பை மறுக்க முடியாது, கார்த்தியும் உணவை முடித்து கூடத்திற்கு வந்தார்.

“தம்பி! அப்பா உங்கூட பேசணும்னு சொன்னாங்க. கொஞ்சம் உட்காரு. நான் போய் அப்பாவை கூட்டிட்டு வரேன்.” என அவரை காக்க வைத்து விட்டு, பழனிவேலை அழைத்து வந்தார் பர்வதம்.

‘நம்ம கிட்ட பேசறதுக்கு என்ன இருக்கு?’ என சிந்தனையோடு காத்திருந்தார் கார்த்திகேயன்.

“இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கிறதா உத்தேசம்?” கார்த்திகேயனை அடைந்த பழனிவேல் நேராக விஷயத்துக்கு வந்தார். கார்த்திகேயனுக்கு ஒன்றும் புரியவில்லை.

குழப்பமாக பார்த்த கார்த்திக்கிடம்,”இப்படியே எத்தனை நாள் பைத்தியக்காரன் மாதிரி சுத்திட்டு இருக்க போற? உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்.” என சுற்றிவளைக்காமல் விஷயத்தை போட்டுடைத்தார் .

குழப்பத்தில் இருந்த கார்த்திகேயனின் முகம் இப்போது கோபத்தை தத்தெடுத்தது,”இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறதா எனக்கு ஐடியா இல்லை.” முதல் மறுப்பு.

“ஏன்?”

“என்னால் என் மீனுக்கு துரோகம் பண்ண முடியாது.” திடமாக கூறினார்.

“மீனாட்சி உயிரோட இருந்து, இன்னொரு கல்யாணம் பண்றது துரோகம். ஆனா அவ இப்ப உயிரோட இல்லை. இப்ப கல்யாணம் பண்ணுறது எப்படி துரோகம் ஆகும்?” என்றார் பழனிவேல் நியாயமாக .

“என்னால் மீனுவை மறக்க முடியாது.” குரல் கொஞ்சம் இறங்கி ஒலித்தது.

“உன்னை யாரு மறக்க சொன்னா? அந்த இடத்துல நம்ம சுகந்திய வைக்க சொல்றோம் அவ்வளவுதான்.” இப்போது பழனிவேலின் குரலில் திடமிருந்தது‌.

“என்னது சுகந்தியா?” ஷாக்கடித்தது அவர் வார்த்தைகள். 

“ஆமா! சுகந்தி தான். அவளுக்கும் இந்த கல்யாணத்தில் பரிபூரண சம்மதம்.”

“அவ சம்மதிச்சா, நானும் சம்மதிக்க வேண்டுமென்று அவசியமில்லை.” மீண்டும் மறுப்பு ஆனால் திடம் குறைந்திருந்தது .

“தம்பி! உனக்கு மனைவி தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மலர் பிள்ளைக்கு ஒரு தாய் வேணும்.” என இப்போது பர்வதம் வாயை திறந்தார். எங்கு அடித்தால் மகனுக்கு வலிக்கும் என்பதை நன்கு அறிந்த தாய்.

“அதுக்காகலாம் என்னால் கல்யாணம் பண்ணிக்க முடியாது.” இப்போது ஸ்ருதி நன்றாகவே இறங்கி இருந்தது.

“இப்ப அவ குழந்தை. அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் இன்னும் கொஞ்சம் வளர்ந்து, பெரியவளாகவும் ஒரு தாயின் அரவணைப்பு நிச்சயம் வேண்டும்” என்ற தாயின் கூற்றில் உள்ள உண்மையை உணர்ந்த கார்த்திகிடம் இப்போது மௌனம்.

இதுவரை குழந்தையை கொஞ்சியதில்லை, பேசியதில்லை, ஆனால் எங்கோ ஒரு மூலையில் ஒரு துளி பாசம் இருந்ததோ? அது போக போக பின்னால் தான் தெரியும்.

அவரின் மௌனத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பர்வதம், தொடர்ந்து பேசிப் பேசியே கார்த்திகை கரைத்து, மறுமணத்திற்கு சம்மதம் வாங்கினார்.

கார்த்திக்கின் சம்மதம் கிடைத்த ஒரே வாரத்தில், திருமணத்தை எளிமையாக ஒரு கோவிலில் வைத்து முடித்தனர். இந்த எளிமையான திருமணத்தில், சுகந்திக்கு சற்று மன சுனுக்கம் இருந்தது, என்பது மறுக்க முடியாத உண்மை.

அங்கு நடப்பது எதுவும் புரிந்து கொள்ள முடியாத பனிமலர், மூன்று மாத குழந்தையாக கதிர் அரசனின் கரங்களில் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது அந்த ரோஜா மொட்டு. மாமன் மகளது சிரிப்பை ஆசையாக பார்த்திருந்தான் அவளது அத்தை மகன்.

பனிமலரிடம் கார்த்திக் சுகந்தியை தவிர அனைவரும் பாசமாக தான் இருந்தனர். அந்த ஒரு நாள் வரும் வரை.

Leave a Reply

error: Content is protected !!