வெண்பனி 9

IMG-20220405-WA0023-ce65ae1b

வெண்பனி 9

பனி 9

சோதனை காலத்தில் பொறுமையாய் இரு

மேகங்கள் மூடிக்கொண்டால் சூரியன் கூட பிரகாசிக்க முடியாது

 மனிதர்கள் எம்மாத்திரம்!

தன் மனம் கவர்ந்தவளின் வருகைகாக, கௌதம் வழி மேல் விழிவைத்து காத்திருந்தான். அவன் எதிர்பார்ப்பை பொய்க்காமல் அவளும் வந்தாள் அன்பரசனுடன். 

அவள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தவனின் முகம் சுருங்கியது. ‘பனிமலர், அன்பரசனின் தோள்களை உரிமையுடன் பற்றிக்கொண்டு இறங்கும்’ காட்சியை கண்டவனின் வயிற்றில் நெருப்பு பற்றிக்கொண்டது. அதோடு நேற்று அவன் நண்பர்கள் ‘இவர்களுக்கு திருமணம்’ என்று கூறியது, தேவையில்லாமல் இப்போது தோன்றி, அந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது.

“நான் உன்கிட்ட பேசணும் புள்ள.” என, அவனைத் தாண்டிச் செல்ல முயன்ற பனிமலரை உரிமையாக தடுத்தான். அவள் அவனிடம் பேசாமல் செல்லத்தான் நினைத்தால், ஆனால் அவனின் ‘புள்ள’ என்ற அழைப்பு,’அவள் மீது உயிராக இருந்த இரண்டு ஜீவன்களை’ அவளுக்கு ஞாபகப்படுத்தியது. அதனால் அவள் நடை நின்றது. அன்பரசனின் கண்கள் கேள்வியாக இடுங்கியது.

“சொல்லுங்க அண்ணாாா” என்றாள் அழுத்தி. அவளுக்கு தனலட்சுமி சொன்ன வார்த்தைகள் நினைவிலிருந்தது.

அவளது ‘அண்ணா’ என்ற வார்த்தை, அன்பரசனுக்கு சிரிப்பை வரவைத்ததென்றால், கௌதம் கிருஷ்ணாவை திடுக்கிட வைத்தது. 

“ஏய்! நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம். என்னை நீ அண்ணான்னு கூப்பிடக்கூடாது. இது கூட தெரியாதா உனக்கு?” என பதறினான்.

“சரி கௌ(cow)! இனி உன்னை கௌன்னே கூப்பிடுறேன்.” என்றாள் ஒன்றும் தெரியாத பிள்ளைபோல், கண்களை படபடவென சிமிட்டி. 

“ஏன்மா ஏன்? உனக்கு வேற வார்த்தைகளே தெரியாதா? இந்த மாமா, மச்சான், டார்லிங், ஸ்வீட் ஹார்ட் இப்படி” என்றவன் நொந்தே போனான்.

“தெரியுமே” என்று பலமாக தலையாட்டியவள்,”ஆனா பாருங்க அதெல்லாம் கட்டிக்க போறவனையும், கட்டிக்கிட்டவனையும் கூப்பிடறது. அதுவும் இல்லையா கடைசிக்கு உறவினர்களா இருக்கணும்.” என அவனுக்கு விளக்கமளித்தாள்.

“ம்ம்! விளங்கிடும்” என நொடித்தவன்,”அதோட சேர்த்து லவ்வரையும் கூப்பிடலாம் தப்பில்லை”

“லவ்வரா?” என கண்ணை விரித்தாள்.

“ஆமா! நம்ம லவ்வர்ஸ் தானே. அதனால தாராளமா என்னை முறை சொல்லி கூப்பிட்டு” என்றான் வாயெல்லாம் பல்லாக. ‘அந்தப் பல்லை தட்டி கையில் கொடுத்தால் என்ன?’ என்ற எண்ணம் அன்பரசனுக்கு.

“என்னது நம்ம லவ்வர்ஸா?”

“இல்லையா பின்ன?”

“பாத்தியா நீ என்கிட்ட கூட சொல்லவே இல்லை? முதலேயே சொல்லியிருந்தா, இந்த அரசு கிட்ட கெத்து காட்டி இருப்பேன்ல.” என அவனை குழப்பி விட்டாள்.

“உன்கிட்ட நான் என்ன சொல்லவே இல்ல?” என்றான் கௌதம் குழம்பியவனாக.

“லவ் பண்றத தான்”

“எதே! லவ் பண்றேன்னு சொல்றதுல என்னடி கெத்து?” என அன்பரசன் பொங்கினானென்றால்,”நேத்து தான புள்ள ப்ரபோஸ் பண்ணினோம்.” என கௌதம் சலித்துக் கொண்டான்.

“அது எனக்கு நீங்க கொடுத்த டார்கெட். அவ்வளவுதான். அதுக்கு மேல எதுவுமில்லை.’ என்றாள் கரார் குரலில், விளையாட்டை கைவிட்டவளாக.

இப்போதுதான் அன்பரசனின் மனம் நிம்மதியடைந்தது. ‘இவள் ஏடாகூடமாக ஏதாவது பண்ணி வைத்தால்? கதிரிடம் யார் வாங்கி கட்டிக் கொள்வது?” என்ற நல்ல எண்ணம் தான். முதல் நாள் வாங்கிய திட்டு அவ்வாறு.

நேற்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்ற பின், அன்பரசனின் கைபேசியில் தொடர்பு கொண்ட கதிர் அரசன்,’காலையில் நடந்த கௌதம் கிருஷ்ணா, பனிமலர் சந்திப்பை பற்றி கேட்டு’ ஒரு பிடி பிடித்து விட்டான். “நான் அவளை பத்திரமா பார்த்துக்கறேன். கௌதமுடன் சேர விடமாட்டேன்” என பல வாக்குறுதிகளை வழங்கிய பிறகே இவனை விட்டான்.

கதிரிடம் வாங்கி கட்டி, இருபத்தி நான்கு மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் அவள் கௌதமுடன் பேசி, ‘அடுத்த பஞ்சாயத்துக்கு வழி வகுத்தால்’ பாவம் அவனும் என்ன செய்வான்? அன்புவின் கால்கள் ஆட்டம் கண்டது. மனம் இன்னும் தித்திக்கென அடித்துக் கொண்டிருந்தது.

“நான் உண்மையா தான் சொல்றேன். ஐ லவ் யூ”

“நான் உங்களை லவ் பண்ணல. யாரையும் லவ் பண்ணுற ஐடியாவும் இல்லை. நான் கிளம்புறேன்.” கிளம்ப முயன்றவளை மீண்டும் தடுத்தான். 

“ம்ச்! இப்ப என்ன?” சலிப்பு வந்தது.

“நேத்து உன்னை பார்க்கவும் எனக்கு ரொம்ப பிடிச்சது.”

“அதுக்கு?”

“நான் உன்ன தான் கட்டிக்குவேன்.”

“ம்ச்”

“ஏன் இப்படி சலிச்சிக்கிற? என்னை லவ் பண்றதுல, உனக்கு என்ன பிரச்சனை?”

“ஐயோ ஈஸ்வரா மறுபடியுமா?!” என தலையை பிடித்துக் கொண்டாள். கௌதம் விடா பிடியாய் நின்றான். அன்பு விட்டால், மலரை இழுத்துக்கொண்டு ஓடிவிட தயாராக நின்றான்.

‘இந்தப் பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திடும் நோக்கில்.’ அவனுக்கு புரிய வைக்க, பொறுமையாக,”இங்க பாருங்க கௌதம், எனக்கு இப்போதைக்கு  லவ் பண்ற ஐடியா இல்லை. வரவும் வராது” இடையில் பேச வந்த கௌதமை தடுத்து,”வேற யார்கிட்டயாவது ட்ரை பண்ணுங்க. உங்களுக்கு கொஞ்சமாவது யூஸ் இருக்கும். இனி என்கூட பேச ட்ரை பண்ணாதீங்க.” என அவனை சுற்றிக்கொண்டு, அன்பரசனை இழுத்து சென்றுவிட்டாள்.

‘பேசக்கூடாதுனா சொல்லிட்டு போற? உன்ன எப்படி அடையறதுன்னு எனக்கு தெரியும். நீ எனக்கு தான்.’ என மனதோடு கூறிக் கொண்டு, விலகி செல்லும் அவளையே கண்கள் பளபளக்க பார்த்திருந்தான் கௌதம் கிருஷ்ணா.

பனிமலரும் அன்பரசனும் ஒன்றாக வந்ததை, இன்னொரு ஜோடி விழிகளும் பொறாமையோடு பார்த்தது. அந்த விழிகளுக்கு சொந்தக்காரரை கண்டான் கௌவுதம் கிருஷ்ணா. அவர் மனதை, புரிந்து கொண்டவனின் மனதில் ஏகப்பட்ட கணக்குகள் உருவாகியது. இவருடன் இணைந்து, அவர்களை பிரித்து, பனிமலரை தனக்கு சொந்தமாக்கும் வழியை சிந்தித்தான்.

இவன் விரித்த வலையில் அந்த அப்பாவி ஜீவனும் விழுந்தது.

†††††

முதல் நாளில் தொடங்கிய பனிமலர், தனலட்சுமியின் நட்பு தோய்வின்றி தொடர்ந்தது. முதலில் அவர்கள் நட்பில் இணைய முடியாத அன்பரசன், நாட்கள் செல்ல அவர்களுடன் இணைந்து கொண்டான்.

‘எனக்கும், என் மொட்டுக்கும், இடையில் வருகிறாள்’ என்ற கோபமே அவனிடமிருந்தது, இன்னமும் இருக்கிறது. அதற்காக தனலட்சுமியை பிடிக்காது என்று சொல்ல முடியாது. மனதில் ஏதோ சொல்லத் தெரியாத நெருடல். 

பனிமலருடன் நட்பு பாராட்டினாலும் தனலட்சுமியின் கண்கள், அன்பரசனை ரகசியமாக தொடரும். முதலில் கண்டு கொள்ளாமல் இருந்த அரசுவும், சிறிது நாட்களில் அவள் பார்வைக்கு பதில் பார்வை வழங்கினான். ‘எந்த ஆணுக்கு தன்னை ஆர்வமாக பார்க்கும் பெண்ணை பிடிக்காது?’

இந்தப் பார்வை பரிமாற்றங்களை கண்டுகொள்ளாதது போல், பனிமலரும் ரகசியமாக சிரித்துக் கொள்வாள். ‘அவளுக்குத் தெரியாதா? தன் அரசுவின் விருப்பமும், ஆசையும். அவனின் சிறு பார்வை மாற்றம் போதுமே பெண் கண்டுகொள்ள.’

ஒரு நாள் மூவரும் ஒன்றாக கேண்டினில் இருக்கும்போது, திடீரென எழுந்த பனிமலர்,”நீங்க ரெண்டு பேரும் பேசிடிருங்க. நான் இதோ வந்துடறேன்.” என அவர்களுக்கு தனிமை வழங்கி, விலகி செல்ல முயன்ற பெண்ணை, கரம் பற்றி தடுத்த அரசு, “எங்க போற?”

திருதிருவென முழித்தவள்,”நா.. நா.. ரெஸ்ட் ரூம… போயி.. வரேன்” என திணறினாள்.

அவள் முழியும், தடுமாற்றமும் சொன்னது,’அவள் பொய் சொல்கிறாளென்று.’

“சரி! அதுக்கு எதுக்கு தனியா போற? தனாவையும் கூட்டிட்டு போ.”

ஒரு பெருமூச்சுடன்,”டேய் உன்னோட கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?” என சத்தமாக கூறியவள், அவன் செவியோரம், “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி கண்ணால மட்டும் பேசிட்டு இருக்க இருக்கபோற? அவகிட்ட உன் விருப்பத்தை சொல்லு.” என குண்டை போட்டாள்.

அதில் தூக்கி வாரி போட்ட அரசு,”ஹே மொட்டு, அப்படியெல்லாம் எதுவும் இல்ல.”

“டேய் தம்பி! நீ விடுற மூச்சு காத்துல இருக்க வித்தியாசத்தை கூட கண்டு பிடிக்கிறவ நான். எங்கிட்டயே பொய் சொல்ற பாத்தியா?”

“போ மொட்டு, உன் கிட்ட எதையும் மறைக்க முடியாது.” என அலுப்பது போல் பெருமை அடித்துக்கொண்டான். முகத்தில் வெட்கரேகைகள் பரவியது.

“அட பாருடா, என் அரசுக்கு வெக்கமெல்லாம் வருது.” என கிண்டலோடு, அவன் தலையை செல்லமாக கலைத்து, செல்ல முயன்றவளை மீண்டும் தடுத்தான். 

“மலரு! நான் அவகிட்ட எப்படி பேச?” என்றான் வெட்கத்துடன்.

“ம் எல்லாரையும் போல வாயால.”

“விளையாடாதடி. என்ன பேசுறது?” என்றான் விரல் நகத்தை ஆராய்ந்து கொண்டே.

“இதுக்கெல்லாம் கோனார் உரையா கொடுக்க முடியும்?” என சலித்துக் கொண்டாள்.

“ம்ச் சொல்லுடி”

“எனக்கு மட்டும் பத்து பேர லவ் பண்ண எக்ஸ்பீரியன்ஸா இருக்கு? என்கிட்ட கேக்குற?”

“பரவாயில்லை தெரிஞ்சது சொல்லு”

“டேய் வேண்டாம், விட்டுடு, நான் அழுதுடுவேன்.” 

“நீ அழுதாலும் பரவால, அதனால உன் மூஞ்சி படு கேவலமானாலும் பரவாயில்லை, எனக்கு சொல்லு?”

“வேணா இப்படி பண்ணலாமா?”

“எப்படி?”

“உங்க நொண்ணனை கூப்பிட்டு கேட்கலாமா? அவனுக்கு தான் தீப்தி கூட கடலை போட்டு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கே?” என கண்ணாடித்தாள்.

“உனக்கு அவனை வம்புக்கு இழுக்கலைனா தூக்கமே வராதா?” அவன் முறைத்தான்.

“எப்படிடா இவ்ளோ கரெக்டா சொன்ன? நான் தூங்கி ரொம்ப நாளாச்சு.” என சினுங்கினாள்.

“காலையில் எட்டு மணி வரை, கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி தூங்குற, நீ அதை சொல்லக்கூடாது. நான் வந்து எழுப்பலைனா காலேஜுக்கு கட் அடிக்க வேண்டியது தான்.” 

அசடு வழிந்தவள்,”இப்போ அதுதான் ரொம்ப முக்கியம்?”

“வேற என்ன முக்கியம்?” அவள் முறைக்கவும்,”சரி சரி சொல்லு என்ன பேசுறது?”

‘என்னது மறுபடியும் முதல்ல இருந்தா?’ என ஜெர்கானவள், ‘இவன் கிட்ட இப்படி பேசினா ஆகாது. இருடா தம்பி வரேன்.’ என மனதில் நினைத்து,”நான் வேனா, என்ன பேசுறதுன்னு கதிர்ட்ட கேட்டு சொல்லவா?” 

“அம்மா! தாயே! என்ன ஆள விடு. நானே பார்த்துக்கிறேன்.” என கை எடுத்துக் கும்பிட்டான்.

“அஃது அந்த பயம் இருக்கட்டும்.” என கெத்தாக ஒரு விரல் நீட்டி, மிரட்டி சென்றாள். அன்பரசன் முகமெல்லாம் சந்தோஷத்துடன் தனலட்சுமியை கண்டான்.

இவனது சந்தோஷத்துக்கு மாறாக, எரிச்சலோடு அமர்ந்திருந்தாள் தனலட்சுமி. அதை முகத்தில் காட்டவில்லை. முகம் எப்போதும் போல் சாதாரணமாக இருந்தது.

மேல் நடந்த உரையாடல்கள் அனைத்தும், அவர்களுக்குள் ரகசியமாகவே நடந்தது. அவர்கள் ‘என்ன பேசிக் கொள்கிறார்கள்?’ என தெரியாத தனலட்சுமி,  அவர்கள் முகத்தில் தெரிந்த வெட்கம், சிரிப்பு, சீண்டல் என அனைத்து காட்சியையும் பொறாமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

பனிமலர் சென்ற பின் சிறிது நேரம் மௌனம் காத்த அன்பரசன், தன் காதலை தனலட்சுமியிடம் கூறினான். சட்டென்று மனதிலிருந்த எரிச்சல் மறைய, முகம் எல்லாம் ஜொலிக்க, பெண்ணும் உடனே அதற்கு சம்மதம் கூறிவிட்டாள். 

அன்பரசனின் காதலுக்காக, பனிமலர்,’பாழும் கிணற்றில் குதிக்க தயாராகபோகிறாள்’ என தெரிந்திருந்தால் அன்பரசன் காதலித்திருக்கவே மாட்டான்.

அந்த பரமேஸ்வரன் கணக்கு, யார் அறிவார்?

†††††

பனிமலரை தனிமையில் சந்தித்து பேச முடியாமல், கொதித்து போயிருந்த கௌதமுக்கு, இப்போது லட்டு மாதிரி வாய்ப்பு கிட்டியது.

அபூர்வமாக கிட்டிய தனிமையில்,”என் லவ்வ தான் ஏத்துக்கல, அட்லீஸ்ட் பிரண்ட்ஷிப்பை ஏத்துக்கலாமே?” என நட்பு கரம் நீட்டினான்.

அவன் கரத்தையும், அவன் முகத்தையும் மாறி மாறி சந்தேகமாக பார்த்தாள் பெண். “நிஜமாதான் சொல்றேன். நீ என்கிட்ட விலகி போறதுனால, எனக்கு உன் மேல இன்ட்ரெஸ்ட் வந்திருக்கலாம். ஒருவேளை உன் கூட பழகுனா, அந்த கிரேஸ் குறையலாம். அதுக்கு தான் கேட்டேன்.” என்றான் நரி தந்திரத்தோடு.

(எப்போதும் கைக்கு எட்டாத பொருளின் மீது ஈர்ப்பு வரும். அதுவே நம் கையில் கிடைத்துவிட்டால், அந்த ஈர்ப்பு குறைந்து விடும்.)

‘எப்படியும் அவள் தன்னிடம் பழக ஆரம்பித்தால், தன் அழகிலும், அண்மையிலும், பணத்திலும் மயங்கி விடுவாள்’ என தப்பு கணக்கு போட்டான். பாவம் அவன் அறியவில்லை, அவள் அன்புக்கு மட்டுமே மயங்குவாள் என்று.

அவனின் தந்திரம் புரியாத பெண், அவன் சொல்வதை உண்மை என்று நம்பி அவன் நட்பிற்கு சம்மதித்தாள். அன்பு இல்லாத தனிமையை, சரியாக பயன்படுத்திக் கொண்டது அந்த காலை சுற்றிய பாம்பு.

அவனுக்கு தெரியும் அன்பு உடனிருந்தால், இவளிடம் நட்பாக கூட பேச முடியாதென்று. இவள் ஒரு முடிவெடுத்துவிட்டால், அவன் எதிர்க்க மாட்டானென்று. அதனால் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக மாற்றி, அவளிடம் நெருங்க முயன்று, வெற்றியும் கண்டான்.

கூடா நட்பு கேடில் முடியும். கௌதமின் நட்பு, மலரை போன்றவளை, பெரிய இக்கட்டில் மாட்டி வைக்கப் போகிறது. அந்த இக்கட்டில் இருந்து தப்பிக்க, வழி தேடி சிக்கிக் கொள்ளப் போகிறாள் ஒரு பாதாள சிறையில். 

அவள் மாட்டிக்கொள்ள போறது பாதாள சிறையா? சொர்க்க பூமியா? என்பது?

†††††

Leave a Reply

error: Content is protected !!