Mathu…Mathi!-3

மது…மதி! – 3

காவல் நிலையத்தில் மயான அமைதி. காவல் நிலையத்திற்கு வெளியே குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் கெளதம். வேறு வேலையாக வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்தான் தேவராஜ். கௌதமை மேலும் கீழும் பார்த்தான்.

 “என்ன உன் பொண்டாட்டிக்கு பாதுகாப்பா?” அவன் குரலில் கேலி இழையோடல். “நான் அவ்வளவு மோசமான ஆள் இல்லைனு உனக்கே தெரியும்.” தேவராஜ் பேச்சை வளர்க்க முயற்சித்தான்.  ‘இந்த அட்வகேட் என்ன யோசிக்கிறான்?’ தேவராஜின் எண்ணம் இவ்வாறாக ஓடியது. கெளதம் எதுவும் பேசவில்லை. புன்னகைத்துக் கொண்டான்.

“என்ன கெளதம், உன் மனைவி நிலைமையை நினைத்து வார்த்தை வரலையா?” தேவராஜ் நக்கல் பேச, “மனைவின்னு இருந்தா கவலை இருக்கத்தான் செய்யும். ஒரேடியா விட்டுவிட்டு போய்ட்டா, கவலை இருக்காது” கெளதம் அவனை சுடும் விதமாக கூற, “…” தன் காலை  வேகமாக தரையில் மிதித்து கிளம்பினான் தேவராஜ்.

கூட்டம் அத்தனை இல்லாத நேரத்தில் சற்று மந்த நிலையில், அவள் சிறைக்கதவு திறக்க, அழுத்தமான காலடிகள் அவளை நெருங்கியது. அந்த காலடி ஓசையிலும், அவன் வாசத்திலும் தன்வசமிழந்து அவள் தன் தலையை உயர்த்தி பார்த்தாள்.

கெளதம் அவளை ஆழமாக பார்த்தான். அவன் எதுவும் பேசவில்லை. “கெளதம் இங்கேயிருந்து போய்டுங்க.” அவள் கட்டளையிட, அவன் அசையவில்லை. அவன் பிடிவாதம் அறிந்தவள் போல்  எழுந்து வந்து அவன் முன்னே நின்று மேலும் தொடர்ந்தாள். “அட்வகேட்  சார், உங்க உதவி எனக்கு தேவையில்லை. நீங்க…” அவள் பேச, அவன் அவளை உறுத்து விழித்தான். அவன் பார்வையின் வீரியம் தாங்காமல் அவள் மௌனித்தாள்.

அவளுக்கு புரிந்தது, அவன் பார்வையின் பொருள். அவன் பேசவில்லை. அவள் பேச விரும்பவில்லை. அங்கு நிசப்தம். அவன் கண்கள் அவளைப் பேசச் சொல்லி  கட்டாயப்படுத்தியது. ‘நான் பேசாமல் அவங்க போகமாட்டாங்க’ அவள் சிந்தை அவள் மனம் ஒன்று போல் கூற, அவள் தலையை குனிந்து கொண்டாள். அவன் தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை உயர்த்த, அவன் விழிகள் அவளை உற்று நோக்க, அவள் விழி விழி நீரை திரட்டியது. அவன் உதடுகளை அவன் பற்கள் கோபத்தில் அழுத்த, அவள் இதழ்கள் நடுங்கியது.

 “என்னங்க…” அவள் முகம் மூடி கதற, அந்த அழைப்பில் அத்தனை உணர்வுகளும் அடங்கியவன் போல், “தட்’ஸ் மை மது பேபி” அவன் அவளை வேகமாக இழுத்து அணைத்து முகமெங்கும் இதழ் பதிக்க, அவள் விலக துடிக்க, அவன் அழுத்தமும் பிடிவாதமும் கூடத்தான் செய்தது.

“மதும்மா… என்னங்கன்னு கூப்பிடுற என் மனைவியை தவிர நான் வேற எந்த பொண்ணுங்க கிட்டயும் நான் பேச மாட்டேன்” அவன் குரலில் அன்போடும் காதலோடும் கூற, அவள் பிடிவாதமாக விலகி நின்றாள். “தள்ளி நில்லுங்க. யாராவது படம் பிடித்து போட போறாங்க.” அவள் சிடுசிடுக்க, “போடட்டும் மதும்மா… நம்மை பத்தின விஷயத்துக்கு முத்தமிட்டு விடைக் கொடுப்போம்” அவன் சற்று முன் பதித்த இதழ் ஸ்பரிசத்தில் புருவம் உயர்த்த, “இது என்ன பேச்சு?” அவள் பற்களை நறநறத்தாள்.

“என்ன நடந்தது?” அவன் நேரடியாக விஷயத்திற்கு வர, “எனக்கு…” அவள் மீண்டும் பழைய பல்லவியை தொடங்க, “மதுமதி…” அவன் கர்ஜித்தான். “எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” அவள் பிடிவாதமாக நிற்க, “அப்படி சொல்லிட்டு வந்தது நீ. நான் இல்லை. என்னை விட்டுட்டு போனது நீ. நான் இல்லை” அவன் அவள் கைகளை அழுத்தமாக பிடித்து அதே அழுத்தத்தோடு கூற, அவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“மதும்மா…” அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். “…” அவள் மௌனம் சாதிக்க, “நான் செய்தியை கேட்டதிலிருந்து சாப்பிடலை. உன்கிட்ட பேசத்தான் காத்துகிட்டு இருக்கேன். நீ நடந்ததை சொல்லாமல் நான் போக மாட்டேன் ” அவன் பேச்சு சர்வசாதரணமாக இருந்தாலும், அதிலிருந்த தீவிரத்தில், மேலும் வாக்குவாதம் செய்தோ பிடிவாதம் செய்தோ பயனில்லை என்றும் அவன் மேல் கொண்ட அக்கறையிலும் அன்று நடந்ததைச் சொன்னாள் மதுமதி.

அதன் பின் அவன் ஒரு நொடி கூட அங்கு நிற்கவில்லை. மடமடவென்று வெளியே சென்றுவிட்டான். வேண்டாம் என்று நினைத்தாலும் அவள் முகத்தில் புன்னகை அரும்பியது.

*** *** *** *** *** *** ***

நீதி மன்றத்தில்.

மதுமதி குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்தாள்.

              “நீ குற்றத்தை ஒத்துக்குறியாம்மா?” வயது முதிர்ந்த நீதிபதியின் கேள்வி நேரடியாக வந்தது.

“இல்லை சார், நான் தப்பு பண்ணலை?” மதுமதி கூற, அரசு வழக்கறிஞர் எழுந்து வந்து நீதிபதி முன்னே நின்றார்.

 “யுவர் ஹானர், இங்க வர்ற யாரும் நான் தான் தப்பு பண்ணேன்னு சொல்றதில்லை.” அரசு வழக்கறிஞர் தன் வாதத்தை தொடர்ந்தார்.

“ஒரு பெண் ரொம்ப தாமதமான ராத்திரி நேரம் குடிச்சிட்டு வண்டி ஓட்டினது முதல் தப்பு. மதுமதி குடிச்சிட்டு வண்டி ஒட்டிருக்காங்க” அரசு வழக்கறிஞர் ஆரம்பிக்க, “சார்,  ராத்திரி நேரமோ, பகல் நேரமோ… ஆணோ, பெண்ணோ குடிச்சிட்டு வண்டி ஓட்டினா தப்புத்தான் சார். நான் குடிக்கலை. எனக்கு குடிக்குற பழக்கமும் இல்லை” மதுமதி கூற,  கெளதம் ஸ்ரீநிவாசன் அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

“சார், மதுமதி குடிச்சதுக்கான ட்ரக் டெஸ்ட் ரிப்போர்ட்” அரசு தரப்பு வழக்கறிஞர், ஓர் காகிதத்தை நீதிபதியிடம் நீட்டினார். “நோ, நான் குடிக்கலை. எனக்கு அந்த பழக்கமும் இல்லை” மதுமதி பதட்டமாக கூற, அரசு தரப்பு வழக்கறிகரும், தேவராஜும் கௌதமை வெற்றி புன்னகையோடு பார்க்க, கெளதம் சற்றும் அசராமல்  அவர்களை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மௌனம் எதிர்தரப்பினரை சற்று தடுமாற செய்தது.  ‘இவன் இதை எதிர்பார்த்திருக்கிறான்’ கௌதமின் உடல் மொழியில் தேவராஜ் அவனை கணக்கிட்டுக்கொண்டான்.

“உங்களுக்கு குடிக்கிற பழக்கம் இல்லாமல் இருந்திருக்கலாம். உங்க கணவர் உங்களை விட்டு பிரிஞ்ச துயரத்தில் நீங்க குடிக்க ஆரம்பிச்சிருக்கலாம். நீங்க சொன்ன ஆண் பெண் பேதமில்லாமல் எப்படி குடி தவறோ? அதே மாதிரி மனைவியை பிரிந்த கணவனோ, கணவனை பிரிந்த மனைவியோ துயரத்தில் குடிக்கறது இரண்டு பேருக்கும் பொதுவா…” அரசு தரப்பு வழக்கறிஞர் பேச, “ஆப்ஜெக்ஷன் யுவர் ஹானர்” கெளதம் ஸ்ரீநிவாசன் நிதானமாக நீதிபதி முன் வந்து நின்றான்.

“அப்ஜெக்ஷன் சஸ்டைன்ட்” நீதிபதி கூற, அரசு தரப்பு வழக்கறிஞர் ஒரு நொடி நிறுத்தினார். 

“அந்த தேதியில் …. அந்த நள்ளிரவு நேரத்தில்… நீங்க காரை ஒட்டினீங்களா?” அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்க, “ஆமா ஓட்டினேன்” என்றாள் மதுமதி.

“அன்னைக்கு எங்க போயிட்டு வந்தீங்க?” அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்க, “அது…” அவள் தடுமாறினாள். “மது அருந்த பாருக்கு போயிருந்தீங்களா?” அவர் மேலும் துருவ, “நோ…” என்றாள் அவள்.

“அப்ப எங்க போயிருந்தீங்க?” அவர் கேள்வியாக நிறுத்த, “பீச்சல இருந்து வந்திட்டு இருந்தேன்.” அவள் மெதுவாக கூறினாள்.

“அந்த நேரத்தில் பீச்ல யார் கூட இருந்தீங்க?” அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்க, “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இது வழக்கிற்கு தேவை இல்லாத கேள்வி” சற்று கோபமாக கூறினான் கெளதம் ஸ்ரீனிவாசன். “நான் தப்பா எதுவும் கேட்கலையே. டிஃபென்ஸ் லாயருக்கு ஏன் இப்படி கோபம்   வருது?” என்று நக்கலாக கேட்டார் பலமுறை கௌதமிடம் தோல்வியை தழுவிய அரசு தரப்பு வழக்கறிஞர்.

“பீச்சில் அந்த நேரம் அவ்வளவு பாதுகாப்பு கிடையாது. ஒருவேளை நண்பர்களோடு போயிருக்கலாம். அங்க கொஞ்சம் மது சாப்பிட்டிருக்கலாம். அது அளவு மீறி போயிருக்கலாம். அதை குறுக்கு விசாரணையில் தானே தெரிஞ்சிக்க முடியும்” அவர் கூற, “அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்” என்றார் நீதிபதி.

“நான் பீச்சில் தனியா தான் இருந்தேன்” என்றாள் மதுமதி.

“தனியா பீச்சிற்கு போக வேண்டிய அவசியம்?” அவர் கேட்க, “எனக்கு மனசு சரி இல்லை. அது தான் கடல் காற்றில் கொஞ்சம் நிம்மதி கிடைக்குமுன்னு போனேன்” மதுமதி மெதுவாக கூறினாள்.

“நீங்க கார் ஓட்டும் பொழுது அன்னைக்கு ஆக்சிடெண்ட் நடந்ததா?” என்று அவர் கேட்க, “ஆமாம்” என்றாள் மதுமதி.

“மது குடிச்சிருக்கீங்கனு உங்க ட்ரக் டெஸ்ட் ரிப்போர்ட் சொல்லுது. உங்க மனநிலை சரி இல்லைனு நீங்க சொல்றீங்க. ஆக்சிடென்ட் நடந்ததையும் ஒத்துக்கறீங்க?” அவர் கேட்க, மதுமதி பதிலேதும் கூறவில்லை. ‘ட்ரக் டெஸ்ட் ரிப்போர்ட்’ என்ற வார்த்தையில் அவள் குழம்பி போயிருந்தாள்.

“மதுமதியின் ட்ரக் டெஸ்ட் ரிப்போர்ட், அவங்க மனநிலை. அவங்க வாக்குமூலம். இதெல்லாம் நமக்கு குற்றவாளியின் செயலை தெளிவா காட்டுது. மதுமதி மது போதையில் மனக்குழப்பத்தில் வண்டியில் வந்த பெண்ணை இடிச்சிருக்காங்க. அந்த பெண் விழுந்ததும் அங்க இருந்து எஸ்கேப் ஆகிட்டாங்க.” அவர் கூற, அலுவலர் ஒருவர் அவரின் சொல்லுக்கிணங்க ஒரு காணொளியை சமர்ப்பித்தார்.

“அன்னைக்கு நடந்த ஆக்சிடெண்ட்கான வீடியோ. மதுமதி ஒரு வண்டியை இடித்தது. அது அவங்க கார் தான். அதுக்கு அப்புறம் வேகமா போனது. இட்’ஸ் எ ஹிட் அண்ட் ரன் கேஸ். அடிபட்ட பெண்ணை அப்புறம் காணலை. மதுமதி பல சமூக நடவடிக்கைகள் குழுல இருக்காங்க. அவங்கள யார் உதவி பண்ணாங்கன்னு போலீஸ் தரப்பு விசாரிச்சிட்டு இருக்காங்க. உதவி பண்ணவங்களை தான் கண்டுபிடிக்கணுமே தவிர, மதுமதி குடி போதையில் தப்பு பண்ணத்தில் எந்த மாற்று கருத்தும் இல்லை.” அரசு தரப்பு வழக்கறிஞர் தன் வாதத்தை முடித்து கொண்டு தன் நாற்காலியில் அமர்ந்தார்.

“நான் இன்ஸ்பெக்டர் தேவராஜ் கிட்ட கேள்விகள் கேட்கணும்” கெளதம் கூற, தேவராஜ் கூண்டில் நிறுத்தப்பட்டான்.

“மிஸ்டர் தேவராஜ், அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா?” கெளதம் கேட்க, “ஹிட் அண்ட் ரன் கேஸ்ன்னு எனக்கு தகவல் வந்ததும், நான் ஸ்பாட்டுக்கு போனேன். அங்க அடிபட்டு விழுந்த அந்த வண்டி மட்டும் தான் இருந்தது. அப்புறம் கமெராவில் இருந்த கார் நம்பர் வைத்து ட்ராக் பண்ணி மதுமதியை கண்டுபிடிச்சி அர்ரெஸ்ட் பண்ணினோம்” தேவராஜ் கோர்வையாக கூற,

“ஹிட் அண்ட் ரன் கேஸுன்னு தெரிஞ்சி போனீங்களா இல்லை அந்த கேசில் மதுமதி கெளதம் ஸ்ரீனிவாசன் சம்பந்தம் பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சி போனீங்களா?” கெளதம் ஸ்ரீநிவாசன் கேட்க, “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இந்த கேள்வி போலீசை அவமதிக்கும் கேள்வி” என்றார் அரசு தரப்பு வழக்கறிஞர்.

“இது வரைக்கும் உங்க ஸ்டேஷனுக்கு எத்தனையோ ஹிட் அண்ட் ரன் கேஸ் வந்திருக்கு. இதுல எத்தனை கேஸ்க்கு நீங்க நேரில் போயிருக்கீங்க தேவராஜ்?”  கெளதம் கேட்க, “இது தான் முதல் முறை. ஒரு பொண்ணை காணுமுன்னு தகவல் வந்ததால் போனேன்.” என்றான் அவன்.

“தகவல் வரும் பொழுதே காணாமல் போனது பொண்ணுன்னு தெரிஞ்சிடுச்சா?” என்று கெளதம் கேட்க, “அது லேடிஸ் வண்டி. அதை வைத்து…” தேவராஜ் தடுமாற, “வண்டியை தவிர வேற எதுவும் பொருள்?” அவன் கேட்க, ‘இல்லை…’ என்பது போல் மறுப்பாக தலை அசைத்தான் தேவராஜ்.

“ஒரு லேடிஸ் வண்டியை ஆண்கள் ஓட்ட கூடாதுன்னு சட்டம் எதுவும் இல்லையே?” என்று கெளதம் கேட்க, தேவராஜிடம் மௌனம்.

 

“இல்லை, காணாமல் போனது பொண்ணுதான்னு நீங்க உறுதியா சொன்னதால இந்த கேள்வி. ஏன்னா, தகவல் வந்து வீடியோ பார்த்து ஹிட் அண்ட் ரன் கேஸ்ல தப்பிச்சு ஓடிய மதுமதியை இவ்வளவு வேகமா வலைவீசி பிடிச்சி உடனே ட்ரக் டெஸ்ட் எடுத்த உங்க வேகத்தை நான் பாராட்டணும். அவ்வளவு யோசித்த நீங்க, இதையும் பார்த்திருப்பீங்க.” கெளதம் கேலி பேசி நிறுத்திக் கொண்டான். 

தேவராஜ் எதுவும் பேசவில்லை. அடுத்ததாக கெளதம் மதுமதி முன் சென்றான்.

“உங்க பெயர்” அவன் அவளிடம் கேட்க, “மதுமதி” என்றாள் அழுத்தமாக. “உங்க முழு பெயர்” அவன் அவளை விட அழுத்தமாக கேட்க, “மதுமதி கெளதம் ஸ்ரீநிவாசன்” அவளையும் மீறி சற்று கம்பீரம் வந்து ஒட்டிக்கொண்டது அவள் குரலில். அவன் அதை கவனிக்க தவறவில்லை. அந்த கம்பீரத்தில் அவன் மனம் துள்ளாட்டம் போடவும் தவறவில்லை.

“அன்னைக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல முடியுமா?” கெளதம் கேட்க, “நான் பீச்லருந்து வந்திட்டு இருந்தேன். அப்ப ஒரு டூ வீலெர் குறுக்கே வந்து என் காரில் மோதுச்சு. நான் காரை ஓரத்தில் நிறுத்தி அந்த பொண்ணு எழுந்திருக்க ஹெல்ப் பண்ணேன். அந்த பொண்ணு ட்ரிங்க்ஸ் பண்ணிருந்தாங்க. அந்த பொண்ணுக்கு  பெரிய அடி எல்லாம் இல்லை. நான் அதுக்கு முன்னாடியே வண்டியை நிறுத்திட்டேன். அவங்க கையில் சிராய்ப்பு மட்டுந்தான். நான் வீட்டுக்கு போன கொஞ்ச நேரத்தில் என்னை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணிட்டாங்க” மதுமதி கோர்வையாக தைரியமாக கூறினாள்.

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். இது கட்டுக்கதை” அரசு தரப்பு வழக்கறிஞர் கூற, “யார் சொல்றது கட்டுக்கதைன்னு தெரிஞ்சிக்க தானே நாம இருக்கோம்”  கெளதம் நிதானமாக கூற, “அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்ட்” என்றார் நீதிபதி.

“நீங்க சமூக நடவடிகள்ல இருக்கிறதா அரசு வழக்கறிஞர் சொன்னாங்க இல்லையா? அது என்னனு சொல்ல முடியுமா?” கெளதம் ஸ்ரீநிவாசன் கேட்க, “மது ஒழிப்பு போராட்டம். சோசியல் ட்ரிங்கிங்கிற பேர்ல மதுவிற்கு அடிமை ஆகுற இளைஞர்களுக்கு எதிரா மது அருந்துவதை எதிர்த்து குரல் கொடுக்கறது. அதனால் வர்ற தீமைகளை  எடுத்து சொல்றதுன்னு இப்படி நிறைய.” அவள் கூற, அங்கு அமைதி.

“மதுமதியின் செயல்களை வைத்து நம்மால் ஒன்னு சொல்ல முடியும். மதுமதிக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனால் நீதிமன்றத்தில், நம்பிக்கை, யூகங்களை தாண்டி சாட்சிகள் முக்கியமுன்னு எனக்கு தெரியும்.  அந்த ட்ரக் டெஸ்ட் எப்படின்னு கண்டுபிடிக்க எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேணும்.” கெளதம் சற்று நிறுத்த, நீதிபதி தலை அசைத்துக் கொண்டார்.

“ஹிட் அண்ட் ரன் பண்ண யாரும் உடனே கண்டுபிடித்து ட்ரக் டெஸ்ட், அல்கஹால் டெஸ்ட் எடுத்து பிடிக்கிற அளவுக்கு ஈஸியா கண்டுபிடிக்கிற இடத்தில இருக்க மாட்டாங்க. விபத்து நடந்தது கேமரா பொருத்தப்பட்ட நகரின் முக்கிய இடத்தில். அப்படி எல்லாம் அங்க கொஞ்ச நேரத்தில் ஒரு பொண்ணோட சடலத்தை மறைக்கவும் முடியாது. இதை எல்லாம் செய்திட்டு, போலீஸ் வந்து அர்ரெஸ்ட் பண்ணுவாங்கனு  தெரியாத அளவுக்கு மதுமதி பொது அறிவு இல்லாதவங்க இல்லை. அவங்க தப்பே பண்ணலை. அவங்க போலீஸ் வருமுன்னும் நினைக்கலை. இது ஹிட் அண்ட் ரன் கேஸே இல்லை.” கெளதம் அழுத்தமாக கூற, “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர். அந்த வீடியோ” என்றார் அரசு தரப்பு வக்கீல்.

“நீங்க அந்த வீடியோவை திரும்பி பார்த்தே ஆகணும். அந்த வீடியோவில் நேரமே இல்லை. அவங்க எடிட் செய்தது தெரியாமல் இருக்க நேரத்தை முழுசா மறச்சிட்டாங்க. வண்டி இடிபட்டது நிஜம். மதுமதி அந்த இடத்தை கடந்து போனது நிஜம். அது தான் அந்த வீடியோவில் இருக்கு. ஆனால், அதை தாண்டி இவங்க சொல்ற எல்லா கட்டுக்கதையும் அங்கு மறைக்க பட்டிருக்கு.” கெளதம் உறுதியாக கூற, அங்கு அமைதி.

“ஆயிரம் ஹிட் அண்ட் ரன் கேஸ் வழக்கிற்கு மத்தியில் மதுமதி கெளதம் ஸ்ரீனிவாசன் கேஸ் மட்டும் ஹெட்லைன்ஸ்ல  வர்ற காரணம் என்ன? இது மதுமதியை பழிவாங்கவா? இல்லை கெளதம் ஸ்ரீனிவாசனை பழிவாங்கவா?” என்று தேவராஜிடம் கெளதம் கேட்க, “இது ஹிட் அண்ட் ரன் கேஸ் மட்டுமில்லை. அந்த பொண்ணு…” தேவராஜ் பேச, அவனை நிறுத்தினான் கெளதம்.

“காணாமல் போன பெண்ணைப் பற்றி இதுவரைக்கும் எந்த கம்பளைண்ட்டும் எந்த ஸ்டேஷலையும் ரிஜிஸ்டர் ஆகலை.” அவன் தேவராஜிடம் குற்றம் சாட்டிவிட்டு, “எதேச்சலாக நடந்த விஷயத்தை வைத்து இது ஜோடிக்கப்பட்ட வழக்கு.  தேவராஜ் செய்த தப்பையும், அவருக்கு பின்னாடி இருக்கிறவங்களையும் காணாமல் போன பெண் உண்மையா பொய்யான்னு  கண்டுபிடிக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்” கெளதம் கேட்க அவர் சம்மதித்தார்.

மேலும் சில வாக்குவாதங்களுக்கு பிறகு கெளதம் இதை ஹிட் அண்ட் ரன் கேஸ் இல்லை என்று நிரூபித்ததாலும், விபத்தில் சிக்கய பெண்ணை பற்றி போதிய ஆதாரம் இல்லை என்பதாலும் மதுமதிக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.

“என்னய்யா, பொண்ணை காணும்… அது யாருன்னு தெரியலை… என்ன கேஸ்யா இது? சாதாரண ஆக்சிடென்ட். அதை வைத்து எல்லார் நேரத்தையும் வீணடிச்சிட்டு… உனக்கு எத்தனை வார்னிங்யா கொடுக்கறது” நீதிபதி ஏச்சுப்பேச்சுகளோடு தேவராஜை அனுப்பினார்.

கெளதம் மதுமதிக்காக காத்திருந்தான். அப்பொழுது தேவராஜ் வெளியே வர, “உனக்கெல்லாம் பட்டாலும் புத்தி வராதா?” என்று கேட்டான் கெளதம். “உன் பொண்டாட்டி ஜாமீன்ல தான் வெளிய வந்திருக்கா. வந்த நியூஸ் வந்தது தான். ” தேவராஜ் எகத்தாளமாக கூற, கௌதமின் புருவம் சுருங்கியது.

தேவராஜிற்கு அலைபேசியில் அழைப்பு வர,  அவன் மடமடவென்று நகர்ந்துவிட்டான். “…” எதிர்முனை என்ன பேசியது என்று தெரியவில்லை. ஆனால் தேவராஜோ, “பிரிஞ்சிட்டாங்கன்னு தான் சொன்னாங்க. இப்படி களத்தில் இறங்கி காப்பாத்துவானு எவன் கண்டான்” கடுப்பாக பேசி கொண்டிருந்தான்.

கௌதமின் பார்வை மதுமதியிடமிருந்தது.

“நான் வீட்டுக்கு கிளம்புறேன்.” அவள் வேறு பக்கம் செல்ல, அவள் கைகளை பிடித்து நிறுத்தினான் கெளதம். அவன் கண்கள் அவளிடம் யாசித்தது. அவர்களை பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “நான் போகணும்…” அவள் பிடிவாதமாக நின்றாள். “போலாம் மதும்மா…” என்றான் அழுத்தமாக.

“வேணாம்ங்க. உங்க வழி வேற. என் வழி வேற” அவள் பரிதவிப்போடு கூற, “கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி நமக்கு வேற வேற வழி இருக்க முடியும்? காரில் ஏறு மதும்மா” அவளை தன் பக்கம் இழுத்து அவன் கேட்க, “கொஞ்சம் தள்ளி நில்லுங்க. எல்லாரும் பார்க்குறாங்க. அடுத்தது நாம தான் ஹெட்லைன்ஸ்” அவள் கூற, “அதென்ன நமக்கு புதுசா?” அவன் கண்சிமிட்டி கேட்டான்.

“உங்களை மாதிரி பெரிய குடும்பத்துக்கு எல்லாமே சாதாரணம். என்னை மாதிரி சாதரண குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கு…” ‘எல்லாமே’ என்ற சொல்லில் அவள் அழுத்தம் கொடுத்து அவள் பேச, “மதுமதி…” அடுத்து அவன் கூறிய வார்த்தையில் கண்களில் கண்ணீர் திரையிட அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

மது… மதி! வருவாள்…