ஹேய் மின்னல் பெண்ணே

ஹேய் மின்னல் பெண்ணே

மின்னல் 6

“அபி! அபிஷிக்த் புலனாய்வுத்துறை ஸ்பெஷல் க்ரைம் ஆபிஸரை நான் பார்க்கனும்!” அதைத்தவிர வேறு எதையும் கூறாமல் அழுதுகொண்டு இருந்த பெண்ணை எரிச்சலாக நோக்கினான் ஆதி.

“இங்க பாருங்க மேடம்! விசாரணைக்கு நீங்க ஒத்துழைக்கனும். நீங்க மட்டும் தான் எங்களுக்கு கிடைச்சு இருக்கிற துருப்பு! ஃபாரன்சிக் ரிப்போர்ட் வந்தால் பாடியில இருக்கிறது உங்களோட கைரேகை என்று தெரிஞ்சா விசாரணை வேற விதமா திரும்பிடும். அதுக்கு முதன் நீங்க சொல்ல நினைக்கிறதை சொல்லுங்க! என்ன நடந்திச்சு? விதுரனை நீங்க தான் கொன்றீங்களா?”

விழிகளில் நீருடன் நிமிர்ந்து மீண்டும் “அபிஷிக்த்தைக் கூப்பிடுங்களேன்” என்று கேட்ட யுவரத்னாவை முறைத்தபடியே அபிக்கு தகவலை அனுப்பக்கூறிப் பணித்தான் ஆதி.

“பொலிஸ் டிப்பார்ட்மென்டோட விசாரணைக்கு நான் எதுக்கு இன்ஸ்பெக்டர். ஆதி” என்றவாறே விசாரணை அறைக்குள் சாவகாசமாக நுழைந்த அபி சத்தியமாக யுவரத்னாவை அங்கே எதிர்பார்க்கவில்லை! “யுவா!” அதிர்ச்சியாக உதடு முணுமுணுக்க இரத்தம் படிந்த அவளது உடையையும் கைகளையும் பார்த்து அவனது உடல் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் உறைந்து நின்றது.

பிடிக்கும்! அவனுக்கு அவனுடைய தாய்மாமனை அவரது குடும்பத்தை மிகவும் பிடிக்கும்! தந்தை இல்லாத அபிக்கு அச்சிறுவயதில் தயாபரன் தான் எல்லாம். சிறுவயதில் அவனுடன் ஓடித்திரிந்த குட்டி தேவதையை இருபது வருடங்கள் அவன் கண்ணிலே காணவில்லை. தயாபரனிற்கு இடமாற்றம் வரவும் இருபது வருடங்களிற்கு முன்னர் அபி எவ்வளவு பிடிவாதம் பிடித்தும் சென்றுவிட்ட கோவம் அவனுக்கு! சிறுவயதிலேயே மனதில் ஊன்றிவிட்டது.

அது அப்படியே தொடர்ந்தும் போனது. சிறு வயதில் பேசாமல் இருந்ததாலோ என்னவோ அன்னை அவர்களுடன் பேச்சுவார்த்தை வைத்து இருப்பது தெரிந்தாலும் அவனுக்கு அவருடன் உறவைப் புதுப்பிக்கும் ஆவல் வரவில்லை. ஆனால் மனதில் தயாபரன் மாமாவிற்கான இடம் தனி தான்.

யுவாவின் அம்மா இறந்தபோது கூட இவன் பயிற்சியில் இருந்ததால் சாரதா மட்டுமே அனைத்தையும் கண்காணித்துக்கொண்டார். அவரின் வேண்டுகோளின் பேரிலேயே தயாபரன் மீண்டும் ஊரிற்கே வந்தது. யுவாவிற்கும் கல்லூரி ஒன்றில் இணைந்துகொள்ள முடியுமாகவும், தாய் இல்லாத பெண்ணை தனியாக வைத்துக் கஷ்டப்பட யோசனை இருந்ததாலுமே தங்கையின் அருகிலே வந்து விட்டிருந்தார்.

ஊரிற்கு வந்தவர் அபியின் வீட்டிற்கு வந்து இருந்தபோது தான் அபி அவனது மாமாவை மீண்டும் கண்டது. வரவேற்பாக ஒரு தலை அசைப்பைத் தவிர அவனிற்கு எதுவும் பேசவோ கேட்கவோ வரவில்லை. வரவில்லை என்பதை விட இயலவில்லை. அதை தன்மீது கோவமாக எண்ணிக்கொண்ட தயாபரன் தங்கையிடம் கவலைப்படவும் தான், சாரதா யுவாவையும் அபியையும் இணைக்க திட்டம் போட்டது.

உண்மையில் சாரதாவினதும் தயாபரனினதும் உரையாடலை எதேர்ச்சையாக கேட்க நேர்ந்தபோது தான் அபிக்கு மாமன் மகளின் நியாபகமே வந்தது. அட! டெடியை மறந்தே போனேனே!! வளர்ந்திருப்பாள்ல? என்று எண்ணிக்கொண்டவனுக்கு மாமன் மகளை யார் என்று கண்டறிவதில் எந்த பிராயத்தனமும் செய்யவேண்டி இருக்கவில்லை. ஆனால் அவளே வந்து இவன் கண்களின் விழுந்தது இவனே எதிர்பார்க்காதது. அவள் கோவத்தில் குதிக்கும் போது குட்டி சட்டை அணிந்து  இடுப்பில் கையை வைத்தபடி தன்னை முறைத்து நிற்கும் அந்த ஐந்து வயது சிறுமி தான் நியாபகத்திற்கே வருவாள்.

சுவாரஸ்யமாக வேடிக்கையாக மாமன் மகளை நோட்டமிட்டுக் கொண்டு இருக்க ஒரு கொலையாளியாக அவளைப் பார்க்கும் போது ஆளானப்பட்ட அவனுக்கே உடல் அதிர்ந்து தான் போனது. ஆழ மூச்செடுத்து தன்னை சமன்செய்து நிமிரவும் அபியின் குரலில் நிமிர்ந்த யுவா மின்னலென ஓடிவந்து அவனை இறுக அணைக்கவும் சரியாக இருந்தது..  அவள் ஓடிவந்த வேகத்தில் அபியின் நெஞ்சில் விழுந்திருக்க பின்னால் சரிந்து கால்களை ஊன்றி தன்னை நிலைப்படுத்திக்கொண்டவனின் கைகளும் தன்பாட்டில் அவளை அணைக்க விழிகளோ கேள்வியாக ஆதியை நோக்கியது.

அபி என்பவன் யாரும் நெருங்க முடியாதவன் என்பது ஆதிக்கு தெரியும். அவனையே அசால்ட்டாக அணைத்து இறுக்கும் யுவாவை ஒரு நிமிடம் வெறித்த ஆதி தலையை குலுக்கியவாறே மென்குரலில் நடந்ததைப் பகிர்ந்தான்.

“சார்! எங்களுக்கு இவங்க தங்கி இருந்த வீட்டில ஒரு கொலை நடந்து இருக்கு என்று ஃபோன் வந்திச்சு. உடனே போய் பார்த்தோம் அங்க இவங்க தான் இருந்தாங்க. நடு ஹால்ல மிஸ்டர். விதுரன் அதாவது உங்களோட ஹையர் ஆபிஸர் அரவிந்தன் சாரோட பையனோட பாடி இருக்குது. சுவரோட ஒடுங்கிப் போய்  அழுதுட்டே இருந்தாங்க. கை, ட்ரெஸ் முழுக்க இரத்தம். அப்படியே இங்க கூட்டிக்கிட்டு வந்துட்டோம்”

ஆதி கூறி முடிக்கவும் அதைக்கேட்ட யுவாவின் உடல் தூக்கிப்போட்டது. அதை உணர்ந்தவன் போல அணைப்பை இறுக்கிய அபிக்கும் என்னடா இது புதிய சிக்கல் என்று தான் இருந்தது. சந்தேகத்தின் பெயரில் கைது செய்து இருந்தார்கள். அவனது புருவச்சுழிப்பை பார்த்தவாறே

“அதுமட்டுமில்லை சார்! இறந்து போனவரோட இவங்களுக்கு ஏதும் விரோதம் இருக்கா என்று விசாரிச்சோம். அவர் இவங்களோட முன்னால் காதலர். அவர் வேறு ஒரு பொண்ணோட தொடர்பு என்று இவங்க சண்டை போட்டு இருக்காங்க. அதை அவர்கூட அன்று இருந்த அந்த பெண்ணே சொல்லி இருக்கா”

இதுவும் அபிக்கு தெரிந்த விடயம் தானே! இதில் என்ன செய்யலாம் என்று யோசிக்க யுவா பேசவேண்டும். அவளை இப்படியே அழவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தால் சரி வராது. அதோடு மாமா! மாமா எங்கு என்று பார்க்க வேண்டும். இரவு நேரம் அவர் பெண்ணைத் தனியாக விட்டு எங்கே சென்றார். சிந்தித்தவாறே யுவாவை தன்னில் இருந்து பிரித்து எடுத்தான்.

விக்கியபடியே நிமிர்ந்து அபியை நோக்கியவளின் உடல் தளர அவளது தோள்களை அழுத்தப்பற்றி குலுக்கியவன்

“லுக் யுவா! அழுறதை ஃபர்ஸ்ட் நிப்பாட்டு” என்று அழுத்திக்கூறவும் பட்டென்று அவளது அழுகை ஸ்விட்ச் போட்டதைப் போல நின்று போனதை சற்று கடுப்புடனே ஆதி பார்த்தான்.  அவனும் ஒரு மணிநேரமாக இந்தப்பெண்ணிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கின்றான்.  அசைந்து கொடுத்தாளா? லாயர் வேற கடுமையாகவும் நடக்க முடியவில்லை.

“இப்போ அழுது கேஸை உனக்கெதிரா நீயே திருப்பாத. யோசி! யு ஆர் நாட் எ நார்மல் பர்ஸன். லாயர்! அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியா போய்டுமா? ஹ்ம்ம்?” மீண்டும் அபியின் குரலில் தான் யுவாவிற்கு என்ன நடக்கின்றது என்றே விளங்கியது. ஆழமூச்செடுத்தவள் முகத்தை அழுந்தத்  துடைத்துவிட்டு நிமிர்ந்து ஆதியை நோக்கி “சார்! நான் ரெடி! விசாரணையை தொடங்குங்க” என்று கூறவும் ஆதியின் புருவங்கள் மேலேறியது என்றான் அபியின் உதட்டோரத்தில் சிறு புன்னகை.

“மேடம்!! ஃபர்ஸ்ட் ப்ரஷ் ஆகிக்கோங்க! உங்க ட்ரெஸ்ஸை இவங்ககிட்ட கொடுத்துடனும்” என்று ஒரு லேடி கான்ற்டபிளைக் காட்டவும் உதட்டைக் கடித்தவாறு தலையசைத்தவள் அபியை நோக்கினாள்.

இருவர் மனதிலும் பெரும் பிரளயமே வெடித்துக்கொண்டாலும் அழுத்தமாக வெளியில் காட்டிக்கொண்டவாறே ஒருவரை ஒருவர் ஒரு நொடி நோக்கியவாறே நின்றனர். “க்கும்” ஆதியின் செறுமலில் இயல்பாக விழிமூடித்திறந்த யுவா “அப்பா அத்தையைப் பார்க்கனும் என்று உங்க வீட்டிற்குத் தான் போய் இருக்கார்” அவ்வளவு தான் என்பது போல உள்ளே சென்றாள்.

அத்தையா? ஆச்சர்யமாக அபியை நோக்கிய ஆதியின் கண்கள் சந்தேகமாக மாறவும் அபிஷிக்தின் உதடுகள் புன்னகைத்துக்கொண்டது. அவள் சென்றதும் விக்ரமிற்கு அழைத்து நிலவரத்தைக் கூறியவன் அன்னையிடம் கூறி மாமாவை அங்கேயே தடுத்து வைக்கக் கூறினான்.

“இன்ஸ்பெக்டர்! விதுரன் கொலை செய்யப்பட்டான் என்று சொல்றீங்க. எப்படிப்பட்ட மர்டர்?”

“கத்தியால குத்தி இருக்காங்க சார்! அன்ட் அங்க இருந்தது உங்களோட மாமாவோட மகள் மட்டும் தான்”

“ஆஹான்!” என்று உதடு சுழித்தவன்

“கத்தி கிடைச்சுதா?”

“ஃபுல்லா செக் பண்ணியாச்சு சார்! கத்தி இல்லாட்டி அவனைக் குத்திய எந்த ஒரு திங்க்கும் அங்க இல்லை. இவங்களை கஸ்டடியில கொண்டு வந்ததுக்கு ரீஸன் ஒன்று சம்பவ இடத்தில இவங்க இருந்தது. விதுரனோட தொடர்புல இருந்த அந்தப் பொண்ணோட சாட்சி”

“ஹும்ம்ம்..” என்றவன் உடனே தனது தோழன் லாயர் ரிஷிக்கு அழைத்தான். தன்முன்னாலே லாயரிற்கு அழைத்து கேஸை எவ்வாறு முறியடிப்பது என்று பேசிய அபிஷிக்த்தைப் பார்த்து கோவம் தான் வந்தது ஆதிக்கு! அவன் ஃபோனை வைத்ததும்

“சார் தப்பு பண்ணவங்க யாரா வேணா இருக்கலாம். உங்க அண்ணா தம்பி உங்க மாமா பொண்ணு..இப்பிடி யாரா! பட் டிப்பார்ட்மென்ட்லேயே இருந்திட்டு இவங்க குற்றவாளி இல்லை என்று உறுதி ஆகாமலே அவங்கள எப்படி வெளியில எடுக்கிறது என்று பேசுறது எனக்கு பிடிக்கல” என்று முகத்திற்கு நேராகவே கூறினான்.

அவனைப்பார்த்து புன்னகைத்த அபி “ஏன் இன்ஸ்பெக்டர் யாரு உங்களுக்கு கொலை நடந்ததை சொன்னது?” என்று கேட்க விழித்தவன்  “இருந்த பதட்டத்தில..” என்று இழுக்கவும்

“பார்த்து  இருக்கனும் சார்! தொடக்கமே அங்க  தானே?” என்று கேட்டான்.

‘அதானே? அங்கு சென்ற போது அருகில் இருந்த வீடுகளிலும் யாரும் இருக்கவில்லை. அருகில் உள்ள கோவிலில் ஏதோ விஷேஷம் என்று தெரிந்தது. அப்படி இருக்க யார் கூறியது?’ என்று விழித்தவன் பரிதாபமாக அபியை நோக்கினான்.

“சரி சிசிடிவி செக் செய்தீங்களா?”

“சார்! அந்த லேன்ல மட்டும் பவர் கட் சார்”

“ஏன்?”

“தெரியலை சார்! இனித்தான்..”

“பாருங்க சார்! செக் பண்ணுங்க. உண்மையிலேயே பவர் கட் தானா இல்லை கட் பண்ண வைச்சு இருக்காங்களா என்று” என்று கூறியவன் ஆதியின் அருகின் நெருங்கி 

“இப்போ நான் சொன்னது எல்லாம் உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க வழிகள் தான். இதுலாம் நீங்க யோசிச்சுக் கண்ண்டு பிடிக்கனும். அதுக்குத்தானே சார் நீங்க இருக்கீங்க?” என்று நக்கலாகக் கூறியவன் சற்று விலகி

“இப்போ லாயரோட பேசுனது க்ரைம் ப்ராஞ்ச் ஸ்பெஷல் ஆபிஸரா இல்லை. யுவரத்னாவோட மாமாவா!! அவ தப்பு செய்தே இருக்க மாட்டா என்று உறுதியா தெரிஞ்ச அவளோட மாமாவா!” என்றவன் யுவரத்னாவை விசாரிக்கும் போது நிற்கக் கூடாது என்பதால் விலகி வெளியே நடக்கத்தொடங்க யுவா உள்ளே வந்து கொண்டு இருந்தாள்.

அவளை பார்த்தவன் “நீ கொலை செய்யலை என்றால் தைரியமா இரு! நான் எப்படியும் உன்னை வெளியில் எடுத்துடுவேன்! ஆனா நீ கொலை செய்து இருந்ததா சின்ன சந்தேகம் வந்தால் கூட உன்னோட மாமா அபிஷிக்தா இருக்க மாட்டேன்!” என்றவன் வேகமாக வெளியேற அவனையே சிவந்தவிழிகளால் பார்த்துக்கொண்டு இருந்தாள் யுவரத்னா. 

செல்லும் அபிஷிக்த்தையும்  அழுத்தமாக நிற்கும் யுவரத்னாவையும் பார்த்த ஆதிக்குத்தான் தலை சுற்றிப்போனது! 

error: Content is protected !!