⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

⛪️லேவியின் நவி -10🛕

 

என்னிடம் உன் காதலை பகிர்ந்த அந்த அழகான நொடி என்றும் என் மனதில் அழியா ஓவியமாய் கொலு வீற்றிருக்கிறது…

 

ஜானிற்கு மிகவும் கவலையாக இருந்தது. அவனின் நவியை  கண்ட நாள் முதல் அவன் மனதில் நிரந்தரமாக வசிப்பிடம் தந்து குடியேற்றிக் கொண்டவன் அவன்.

ஆனால் இப்பொழுது அவளிடம் பேசாமலிருப்பது இவனுக்கு இடித்த இடத்திலேயே மறுபடியும் இடித்துக் கொண்டார் போன்ற வலியை தந்து கொண்டிருந்தது.

நவியின் அம்மா பேசிய வார்த்தைகள் அவன் காதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

(அன்று அவர்களுக்குள் நடந்த உரையாடல்)

“நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறது தப்புன்னு நான் சொல்ல வரல. ஆனா இதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியப்படும்றது எனக்கு தெரியல.”

“உங்க வீட்ல இதை ஏத்துக்கிற அளவுக்கு பக்குவமானவங்களா?”, எனக் காமாட்சி கேட்க,

“உங்க அமைதியே நிதர்சனத்தை சொல்லுது…”

“இல்ல நான் கண்டிப்பா முயற்சி பண்ணி பார்ப்பேன்”, என்றான் ஜான்.

“முதல்ல பண்ணுங்க. உங்க வீட்ல பேசுங்க அவங்க ஒத்துக்கிட்டாங்கன்னா அதுக்கப்புறம் யோசிக்கலாம்.”

“உங்களுக்கு இது…”, என அவர் சம்மதத்தை தெரிந்து கொள்ள கேட்டான் ஜான்.

“என்னோட முடிவு உங்க வீட்ல ஒத்துக்கிட்டதுக்கு அப்புறம் சொல்றேன்.”, என்றார் அதற்கு மேல் அவனைப் பேச விடாமல்.

“அது மட்டுமில்ல அவங்ககிட்ட பேசிட்ட பிறகுதான் நீங்க அம்முகிட்ட பேசணும்”, என ஒரு கட்டளை வேறு பிறப்பித்தார்.

“நீங்க சொல்றது எல்லாமே கரெக்டு தான் ஆனா நவி கிட்ட பேசாம…”

“கண்டிப்பா இருக்கணும் அவளால ஏமாற்றத்தை தாங்கிக்க முடியாது”, என பெண்ணிற்காய் கவலை கொண்டார்.

இப்படி நடந்த அனைத்தையும் யோசித்தவன். வேறு வழி இல்லாமல் உடனேயே அவர்கள் வீட்டின் பெரியவர்களுடன் பேச முடிவெடுத்தான்.

அன்று மாலை வீட்டின் குடும்ப ஜெபம் நடப்பதற்காக அனைவரும் கூடி இருந்தார்கள். அவன் அக்காவும் மாமியார் வீட்டிலிருந்து இங்கே வந்தவர்கள் இந்த வெள்ளத்தினால் இங்கேயே தங்கி விட்டார்கள்.

எப்படி தொடங்கியதோ அதேபோல் ஜெபம் “தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே”, என அந்த ஜெபத்தை வழி நடத்திக் கொண்டிருப்பவர் கேட்க,

மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், “ஆமென்” என்று முடித்தார்கள்.

இவ்வாறு ஜெபம் முடியவும் அனைவரும் கலையப் போக, ஜான் அனைவரையும் நிறுத்தினான்.

“என்னடா”, என அவன் அன்னை வினவ,

“உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என துவங்கினான்.

அவன் என்ன கூற போகிறான் என அனைவரும் அவன் முகத்தையே பார்க்க,

“நான் ஒரு பொண்ண விரும்புறேன்”, என விஷயத்தை போட்டு உடைத்தான்.

ஆவென அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, சற்றும் தாமதிக்காமல் மேலே தொடர்ந்து அவளைப் பற்றி பேச ஆரம்பித்தான்.

அவளின் பெயர் வைஷ்ணவி என்று அவன் கூறிய உடனேயே அனைவருக்கும் அவள் ஒரு இந்து பெண் என்பது தெரிந்த விட, மேலே அவன் கூறுவதை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

அனைத்தையும் அவன் கூறி முடிக்கவும். அவன் தந்தை டேவிட் கோபமாக எழுந்து நின்றார்.

“என்ன நெனச்சிட்டு இருக்க நீ. நம்ம வீட்ட பத்தி தெரியும் தானே. அப்படி இருந்தும் இப்படி வேற மத பொண்ணு வீட்டுக்கு வரணும்னு சொன்னா என்ன அர்த்தம்”, என்றார் கோபமாய்.

“அப்பா காலம் எங்கேயோ போயிட்டு இருக்கு இப்ப போய் ஜாதி மதம் பேசிக்கிட்டு”, என்றான் அவர் இப்படி கூறுகிறாரே என்ற எரிச்சலில்.

“ஓ ரொம்ப வளந்துட்டீங்களோ அதான் எனக்கே கிளாஸ் எடுக்குறீங்க”, என அவர் கூறவும்,

சற்று நிதானமாய், “அவ எனக்காக என்னெல்லாம் பண்ணி இருக்கா தெரியுமா”, என காய்ச்சலில் இவன் கஷ்டப்பட்டு போது அவளாள் நடக்க முடியாத போதும் அவனை வந்து கவனித்துக் கொண்டதை பற்றி கூறினான்.

“அப்போ அந்த பொண்ணு உனக்காக என்ன வேணா பண்ணுவான்னு சொல்ற”, அவன் அப்பா தூண்டில் போட,

“ஆமா அவ எனக்காக என்ன வேணா பண்ணுவா”, என தூண்டிலில் வகையாய் மாட்டினான் ஜான்.

“அப்போ இந்த கல்யாணம் நடக்கணும்னா அவளை நம்ப மதத்துக்கு மாற சொல்லு.”, என கூறி விடுவிடுவேன நடந்து சென்று விட்டார்.

அதுவரை அங்கே நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அவன் அம்மா பெர்னத் அவன் அருகே வந்தார்.

மகனை அவள் நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றுதான் தோன்றியது பெர்னத்க்கு.

“நீ சொல்றத பாத்தா அந்த பொண்ணு நல்ல பொண்ணா தான் தெரியுறா. ஆனா அப்பாக்கு என்ன வேணும்னு அவர் சொல்லிட்டு போயிட்டாரு சோ எப்படியாவது அந்த பொண்ணு இதுக்கு சம்மதிக்க வைக்க ட்ரை பண்ணு”, எனக் கூறி அவரும் சென்று விட்டார்.

இருவருமே வெவ்வேறு விதத்தில் கூறியிருந்தாலும் ஒரே கருத்தை கூறிவிட்டு சென்றதால் இவனுக்கு என்ன செய்ய வேணா புரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தான்.

தம்பியின் நிலையைக் காண சகிக்காமல் அவனின் அக்கா அவன் கையைப் பிடித்துக் கொண்டார்.

“இவங்களுக்கு என்ன தான் க்கா பிரச்சனை அவள் ஏன் மாறனும். அவளுக்கு பிள்ளையாரப்பானா ரொம்ப பிடிக்கும் க்கா. கோயிலுக்கு போகணும்னா அவ்வளவு சந்தோஷப்படுவா அவள போய்…”

“சரி விடுடா தம்பி என்ன பண்றதுன்னு யோசிப்போம்”, என்றாள் அவனை விட இரண்டே வயது பெரியவளான மார்ட்டினா.

“இல்லக்கா இது சின்ன விஷயம் இல்ல அவ கிட்ட நான் இதை சொல்ல மாட்டேன்…”, என்றான் உறுதியாய்.

“வேற என்ன பண்ணலாம்னு நினைக்கிற”, என மார்ட்டினா கேட்க,

“தெரியல”, என்றவன் அவன் அறை நோக்கி சென்று கதவடைத்துக்கொண்டான்.

அவனுக்கு என்ன முடிவு எடுப்பது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக அவளை மதம் மாறு என்று கூற அவனுக்கு தோன்றவில்லை. அவனுக்குத்தான் தெரியுமே அவளின் பிடித்தம் என்னவென்று.

அவளுக்கு எப்பொழுதும் போல் கோவிலுக்கு செல்வதும் அவளின் பிள்ளையாரப்பாவை கும்பிடுவதும் நடக்க வேண்டும் என்று ஜீசஸிடம் வேண்டிக் கொண்டான்.

நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது. சிலர் இதை நம்புகிறார்கள் சிலர் இதை நம்புவதில்லை.

நம்புகின்றவர்களே அந்த சக்திக்கு அவரவர்களுக்கு பிடித்த உருவத்தையும் மகிமையையும் கொடுத்துக் கொள்கிறார்கள்.

இதில் இந்த கடவுள் தான் பெரியது அந்த கடவுள் தான் பெரியது என்று ஏன் அடித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர். அனைத்து கடவுள்களும் ஒரே சக்தி தானே இருக்கிறது. இதை புரிந்து கொள்ள முடியாத பேதைகள் தான் தேவையில்லாத கலவரங்களில் ஈடுபடுகிறார்கள்.

விண்ணுலகத்தில் கடவுள்களுக்குள் இவ்வாறு சண்டை வருகிறதா என்பதை நினைத்துப் பாருங்கள்.

இவ்வாறு என்னென்னவோ சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது ஜானினுள்.

***

இரண்டு நாள் நான்கு நாளாக மாறிருந்தது. இன்னமும் ஏன் லேவி தனக்கு கால் செய்யவில்லை, என்று போனையே முறைத்துக் கொண்டு இருந்தாள் அந்த லேவியின் நவி.

அவன் தான் கால் செய்யவில்லை நாமாவது கால் செய்து பார்ப்போம் என்று செய்தால் அதையும் அவன் அட்டென்ட் செய்த பாடில்லை.

முன்பை விட அதிகமாக கோவிலில் நேரம் செலவழித்தாள். லேவிக்கு என்ன ஆச்சு? வீட்ல அவனுக்கு ஏதாவது பிரச்சனையா? இதுதான் அவளின் பிள்ளையாரைப்பாவிடம் அதிகமாக அவள் கேட்ட கேள்வி.

அந்தப் பிள்ளையாரப்பாவோ உனக்காக தான் இப்பொழுது அவன் உன்னை தவிர்த்துக் கொண்டிருக்கின்றான் என்று பதில் சொல்வது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இவளை பார்க்கும் காமாட்சிக்குமே மனம் கஷ்டமாகத்தான் இருந்தது. இவருக்கு தெரியாதா அவர் ஜானிடம் கூறியது போல் இவளுக்கு ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் கிடையாது என்று.

ஓரளவுக்கு ஜான் தன் வீட்டாரை பற்றி அவன் வாய் மூலமாக கூறியது மற்றும் அவன் கூறியதாய் வைஷ்ணவி கூறியதை வைத்து, நிச்சயம் இது சுலபமாக முடியும் விஷயமல்ல என்பதை தெரிந்துக் கொண்டார்.

மதம் மாற வேண்டும் அப்படி இப்படி என்று கேட்டாள் அதற்கு சம்மதிக்க இவர் தயாரா இல்லை.

முழுக்க முழுக்க அது அவர் மகளுக்காக தான். ஏனென்றால் சிறு வயதில் யாருமே கற்றுக் கொடுக்காமல் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தாள். யாரும் புகட்டாமல் தானாய் வந்தது பக்தி. மதம் மாற வேண்டும் என்று கூறுவது அவளுக்கு சரிப்பட்டு வரும் என்று இவருக்கு தோன்றவில்லை.

இப்படி தன் தாயும் ஜானும் தனக்காக யோசித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தெரியாமல் ஜானின் மாற்றத்திற்கான காரணங்களை தனக்குள் யோசித்துக் கொண்டு தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி.

***

ஜான் நிறைய யோசித்தான். அன்னை தந்தை இருவரும் ஒரே போல் கூறி இருந்தாலும் அன்னைக்கு வைஷ்ணவியை பிடித்திருக்கிறது என்பது அவர்களின் பேச்சிலிருந்து இவனுக்கு தெரிந்தது.

எனவே தன் போராட்டத்தை முதலில் தன் தாயிடம் இருந்து தொடங்கலாம் என்று முடிவெடுத்தவன் தன் அன்னையை தேடிச் சென்றான்.

என்னதான் மிகவும் கட்டுப்பாடானவராக இருந்தாலும் பிள்ளைகளுக்கு  அன்பான தாய் தான். மகன் தன்னை தேடி வரவும் நிச்சயம் அவன் காதல் விஷயமாக தான் பேச வருகிறான் என்பது புரிந்தே இருந்தது இவருக்கு.

“அம்மா என்னால நவி இல்லாம வாழ முடியாது”, என நேராய் விஷயத்திற்கு வந்தான் அவன்.

“இங்க பாரு ஜான் நீ என்ன சொல்ல வரேன்னு எனக்கு புரியுது. ஆனா அப்பா பேச்ச மீறி என்ன பண்ண முடியும் சொல்லு”, என பெர்னத் கேட்கவும்,

“நீங்க நினைச்சா முடியுமா ப்ளீஸ் அப்பா கிட்ட பேசுங்க”, என அதன் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அவரும் மகனை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் சரியாய் சாப்பிடுவதில்லை சரியாய் தூங்குவதில்லை.

“சரிப்பா உனக்காக அப்பா கிட்ட பேசி பார்க்கிறேன்”, எனக் கூறவும் தாயைக் கட்டி அணைத்து சென்றான்.

***

காமாட்சிக்கு ஜான் என்ன செய்யப் போகிறான் என்ற யோசனைதான். இப்பொழுது தான் மகள் படும் கஷ்டம் சகிக்காமல் ஜானுக்கு தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.

அவனும் எதையும் மறைக்கவில்ல. அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினான்.

இப்படிதான் பிரச்சினை வரும் என்று ஏற்கனவே தெரிந்திருந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை வைத்து விட்டார்.

பெண்ணை தேடு மாடிக்கு செல்ல, அங்கே ஜான் தங்கிருந்த  அறை கட்டிலில் அமர்ந்திருந்தாள் வைஷ்ணவி.

அழுதழுது வீங்கிய இமை கண்களுக்கு பாரமாய் இருக்க, கண்கள் கோவை பழமாய் சிவந்திருந்தது.

“என்ன பண்ற அம்மு நீ”, என மகளின் வீங்கிய முகத்தைப் பார்த்து கேட்க,

தன் அன்னையின் வயிற்றோடு கட்டிக்கொண்டு தேம்பினாள், “என்னால முடியலமா எந்தளவுக்கு லேவியை நான் விரும்புறேன்னு இப்பதான் அம்மா எனக்கே தெரியுது. அவன பாக்காம அவன் கிட்ட பேசாம என்னால முடியல அம்மா”

இந்த கஷ்டத்தை தானே பெண் அனுப்பி வைக்க கூடாது என்று நினைத்தார். ஆனால் அது நடந்து விட்டதே.

காதல் குளிர்விக்கும் சந்திரன் மட்டுமல்ல சுட்டெரிக்கும் அந்த கனலியும் கூடத்தான். இப்பொழுது தன் தங்க நிற சுடர்களைக் கொண்டு அவளை சுட்டெரித்துக் கொண்டிருக்கிறான் அந்தக் காதல் தேவன்.

***

பெர்னத் தன் மகனிடம் கூறியது போல தன் கணவன் டேவிட்டிடம் பேசிப் பார்த்தார்.

ஆனால் அவர் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அவர் பேச்சிலேயே நின்றார்.

பேசி பேசி சலித்து போய் மகனிடம், “என்னால அப்பாவ சரி கட்ட முடியல இனி எல்லாமே உன் கையில தான் இருக்கு”, என அந்த விஷயத்திலிருந்து பின் வாங்கி விட்டார்.

இதற்கு மேல் என்ன செய்ய என்ன தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் ஜான்.

***

“அழுதது போதும் அம்மு போய் மூஞ்சி கழுவிட்டு வா கோயிலுக்கு போலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தாள்.

விடயம் ஜானை பற்றியதாய் தான் இருக்கும் என்று முடிவெடுத்தவள். அவர் சொன்னார் போல் முகத்தை அலம்பி விட்டு கோவிலுக்கு போவதற்கு தயாராய் வந்தாள்.

குளக்கரை படிக்கட்டில் அமர்ந்தனர் அன்னையும் மகளும். அதைப் பார்த்தவுடன்  ஜானின் நினைவு தான் வந்தது வைஷ்ணவிக்கு.

அவர்கள் ஆபிஸில் அந்த குளக்கரை ஆண்டே அமர்ந்து பேசியதெல்லாம் நினைவு வந்தது. அங்கே வைத்து தான் முதல் முதலில் அவன் காதலை கூறினான். அதுவும் இப்பொழுது நினைவு வந்து இம்சித்தது.

இப்படி தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவளை நினைவிற்கு அழைத்து வந்தது அவள் அன்னையின் பேச்சு.

“நான் ஜான் கிட்ட பேசினேன்”, என அவள் அன்னை கூறியவுடன் இவளுக்கு மிகவும் பரபரப்பானது.

இத்தனை நாட்கள் தான் கால் செய்தாள் அவன் எடுக்கவில்லை அவனும் தனக்கு கால் செய்யவில்லை. ஆனால் அன்னையிடம் பேசி இருக்கிறான் என்றால் என்னவாக இருக்கும்.

எவ்விதமான ஒளிவு மறைவும் அற்று தன் மகளிடம் அனைத்தையும் கூறினார் காமாட்சி.

அனைத்தையும் கேட்டவள் கல்லாய் சமைந்திருந்தாள்.

“இதுக்கு தான் நான் பயந்தேன் இது மாதிரி நீ எந்த பிரச்சனையும் சந்திக்கக் கூடாதுன்னு தான் காதல் கீதல் போகாதன்னு சொன்னேன்”

“இவ்ளோ நடந்ததுக்கப்புறம் இனி அதை பத்தி பேசறது பிரயோஜனம் இல்ல. தேவையில்லாம மனசு போட்டு குழப்பிக்காத இதுதான் இப்போதைக்கு நடந்த விஷயம் உனக்கு ஜான் வேணும்னா நீ அவங்களுக்கு அவங்களுக்கு ஏத்த மாதிரி மாறனும்னு அவங்க அப்பா சொல்றாரு”

“ஒன்னு ஜான மறந்துட்டு உன்னோட லைஃப்ல எப்பவும் போல உன்னோட வழியில் போ. இல்ல ஜான் தான் வேணும் அப்படின்னா மத்த பிரச்சினைகளை ஃபேஸ் பண்ண தயாராகு முடிவு உன் கையில”

இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய தோழி ஒருத்தி வந்து விட காமாட்சி அவரிடம் பேச சென்று விட்டார்.

அன்னை சென்ற பின் சுய உணர்விற்கு வந்தவள். தன் அன்னை சொன்ன அனைத்தையும் யோசித்துப் பார்த்தாள். ஜானை தவிர வேறு யாரையும் திருமண உறவில் யோசித்துப் பார்க்க இவளால் முடியாது.

ஆனால் ஜானை திருமணம் செய்ய வேண்டும் என்றால் இவளின் பிடித்தங்களை விட வேண்டும். அதிலும் அவள் அவளின் பிள்ளையாரப்பாவை மறக்க வேண்டுமா?

முடியுமா அவளால் சிறுவயதிலிருந்து கூடவே வந்த பழக்கம் அல்லவா தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்று சொல்வார்கள். இவளின் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மாற்றிக்கொள்ள வேண்டுமா?

இவளுக்கு என்ன முடிவெடுப்பது என்று இப்பொழுது புரியவில்லை. மெதுவாய் எழுந்து பிள்ளையார் சன்னதிக்கு சென்றாள். நிமிர்ந்து பிள்ளையாரப்பாவை பார்த்தாள்.

உங்கள நான் எப்படி மறப்பேன். என்னால் அது முடியாது. ஆனா எனக்கு ஜான் வேணும். நான் இப்ப என்னதான் முடிவெடுக்க, என பாவம் பேதை அவரிடமே வழி கேட்டாள்.

அதற்குள் அவள் அன்னை வந்துவிட இருவரும் சேர்ந்து வீடு சென்றார்கள்.

***

அவளை முடிவெடுக்கச் சொல்லி இரண்டு நாட்கள் ஓடி விட்டது. தனியாய் சென்று அமர்ந்து கொள்கிறாள் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அவளின் இயல்பான கலகலப்பு மாறி இருந்தது.

பெண் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தடுமாறுகிறாள் என்பது புரிந்தாலும் அவளை எதுவும் தொந்தரவு பண்ண வில்லை காமாட்சி. இது அவளின் வாழ்க்கை அவளே ஒரு முடிவுக்கு வரட்டும் என்று பொறுமையாய் இருந்தார்.

அப்படி இருக்கும்பொழுது இவளுக்கு ஆபீஸிலிருந்து பி.சி.பி க்காக இவளை பெங்களூரிலிருக்கும் பிரான்சுக்கு வரச் சொல்லி தகவல் வந்தது.

முதலில் அவள் இப்பொழுது இருக்கும் மனநிலைக்கு எப்படி அவளை தனியே அங்கே அனுப்புவது என்று யோசித்த காமாட்சி. பின் அதுவே அவள் மனநிலையை மாற்ற உதவும் என்று யோசித்து மகளை அனுப்பி வைக்க முடிவெடுத்தார்.

பெங்களூரு போவதற்கு அனைத்தையும் தயார் செய்தவள். தன் போனை எடுத்து ஜானிற்கு தொடர்பு கொள்ள அவன் என்னை அழுத்தலாமா வேண்டாமா என்று யோசனையில் அமர்ந்திருந்தாள்.

லேவியின் நவி காதல் தொடரும்.

error: Content is protected !!