⛪️லேவியின் நவி அவள்🛕

IMG_20230201_214732

⛪️லேவியின் நவி அவள்🛕

⛪️லேவியின் நவி -11🛕

கண்ணை விட்டு மறைந்தால் கருத்தை விட்டும் மறையும் என்பார்கள் ஆனால் உன் விஷயத்தில் அவையெல்லாம் பொய்த்து போன மாயம் என்ன?

ஜான் ஏன் தன்னை தவிர்க்கிறான் என்பது தெரிந்தப் பின், இப்பொழுது தான் கூப்பிட்டாலும் அவன் எடுக்க மாட்டான் என புரிந்ததினால் அவனுக்கு போன் செய்ய துடித்த, தன் கைகளை தடுத்து போனை பேகுக்குள் வைத்துக் கொண்டாள்.

அவள் பாட்டிக்கு பேத்தியை காண மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த காலத்திலேயே அவரும் காதல் திருமணம் தான். எனவே, காதலின் வலியும் காதலில் உள்ள சுகமும் அவருக்கு அத்துபடி.

ஊருக்கு சொல்லிக் கொள்ள வந்த பேத்தியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “ராசாத்தி ஒன்னும் வருத்தப்படாத நமக்குன்னு ஆண்டவன் என்ன வச்சிருக்கானோ அது என்னைக்கா இருந்தாலும் நமக்கு தான் வந்து சேரும். அது நமக்குனு இல்லனா நீ என்னதான் பாடுபட்டாலும் உன்கிட்ட வந்து சேராது. தேவையில்லாம மனச போட்டு குழப்பிக்காம விதி கைல எல்லாத்தையும் ஒப்படைச்சிட்டு உன் உடம்ப பாரு. எதையெதையோ யோசிச்சு மனச போட்டு குழப்பி உடம்ப கெடுத்துக்காததாயி”

‘அவர் சொல்வதும் சரி தானே விதி என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறதோ. நாம் என்னதான் பாடுபட்டாலும் நமக்கென்று விதித்திருப்பது தான் நமக்கு வந்து சேருமோ.’, என ஓடிக்கொண்டிருந்தது அவள் மனதில்,

ஊருக்கு கிளம்பும் வேளையில் தன் பாட்டியையும் அம்மாவையும் கஷ்டப்படுத்த விரும்பாதவள் முடிந்த அளவு தன் சோகத்தை தனக்குள்ளே மறைத்துக் கொண்டு சிரித்த முகமாகவே பேசினாள்.

“என்ன பாட்டி ஓவரா தத்துவம் பேசுற. நேத்து இத தான் ரொம்ப நேரமா உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தியோ”, என பாட்டியை கிண்டல் செய்ய,

தன் பேத்தியின் முயற்சியை புரிந்து கொண்டவர் அவரும் சிரித்தபடியே பேசி அனுப்பி வைத்தார்.

தன் அன்னையிடமும் அதே போல் கலகலப்பாக பேசி விட்டே சென்றாள் வைஷ்ணவி.

***

வைஷ்ணவி பெங்களூரு வந்து சேர்ந்தாள். தங்குமிடமெல்லாம் கம்பெனியே பார்த்துக் கொண்டது.

அந்த கம்பெனியின்னுடைய கெஸ்ட் ஹவுசே இருந்தது. அங்கேயே அனைவருக்கும் தங்க இடம் கொடுத்து விட்டார்கள்.

எனவே, நேராக அவளின் தங்கும் இடத்திற்கு சென்றவள் ரெஃப்ரெஷ் ஆகி அங்கே இருக்கும் கேண்டினில் சூடாய் காபி குடிக்கலாம் என்று வந்திருந்தாள்.

மனது முழுவதும் ஜானை பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. அவளின் சிந்தனையை கலைப்பது போன்று அவளை யாரோ அழைக்கும் குரல் கேட்கவே திரும்பி பார்த்தாள்.

ஜானின் டீம் மெம்பர் தான். ஜானுடன் அடிக்கடி பார்ப்பதனால் அவனின் டீம் மெம்பர் அனைவருக்கும் இவளை தெரியும்.

அதில் ஒருவன் தான் இவளை அழைத்திருந்தான். அவனை அங்கு காணவும் ஜானின் டீமும் அங்கேதான் வந்திருக்கிறதா, என மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தாள்.

ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் தான் நீடித்தது. காரணம் அவன் கூறிய செய்தி, அவர்கள் டீமிலிருந்து இரண்டு மூன்று பேர் தான் வந்திருக்கிறார்கள் அதில் ஜான் இல்லை.

அவன் சிறிது நேரம் சகஜமாய் பேசி சென்று விட்டான். இவளுக்கு தான் மனம் கிடந்து அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு நப்பாசை நிச்சயமாக அவனும் வருவான் அவனை காணலாம் என்று. இப்பொழுது அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது.

***

ஜானுக்கு நாட்கள் ஏதோ பாரங்கல்லை சுமப்பது போல் போய்க்கொண்டிருந்தது.

எவ்வளவு பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் அவளின் நினைவு மட்டும் மழை நின்ற பின்பும் இலைகளிலிருந்து சிதறும் நீர் துளியாய் இருந்து கொண்டே இருந்தது.

கண் மூடினாலே அவளின் பிம்பம் மனதிற்கு இதமாய், அவன் கண்களுக்கு விருந்தாய் தோன்றியது.

நடந்தவைகளை யோசித்துப் பார்க்கும் பொழுது அவன் மீது அவனுக்கே கோபமாய் வந்தது. எதை நினைத்து நவி பயந்தாலோ இப்பொழுது அதுதானே நடந்து கொண்டிருக்கிறது.

இதற்காக தானே அவள் மிகவும் யோசித்தாள். தானும் கஷ்டப்பட்டு இப்பொழுது அவளையும் கஷ்டப்படுத்துகிறோமோ என மனம் வருந்தியது.

இந்தக் குறுகிய காலத்தில் அவளைப் பற்றி நன்றாகவே புரிந்து வைத்திருந்தான் இவன். எப்படியும் இப்பொழுது தன்னை பார்க்க முடியவில்லை தன்னிடம் பேச முடியவில்லை என்று பாவை வருந்துவாள் என்பதும் புரிந்தது.

இப்படி அவன் சிந்தனையில் ஆழ்ந்த நேரத்தில் தான் அவனுக்கு பி.சி.பி காண கால் வந்தது. ஆனால் அவனதை மறுத்து விட்டான்.

இப்பொழுது இருக்கும் இந்த குழப்ப மனநிலையில் சென்று வேலை செய்வது சரிப்பட்டு வரும் என்று இவனுக்கு தோணவில்லை.

ஆபீஸிலும் அனைவரையும் அழைத்துச் செல்லவில்லை டீமில் இருக்கும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

எனவே, அவன் போக வேண்டிய இடத்தில் அவனுடைய டீமில் இருக்கும் மற்றவர்களை அழைத்து சென்று விட்டார்கள்.

***

பெங்களூரு வந்து ஒரு வாரம் கடந்து விட்டிருந்தது. வேலையில் தன் சொந்த விஷயத்தை பொட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது என்ற மனநிலையில் இருந்ததனால் வேலை அது பாட்டுக்கு நன்றாகவே சென்று கொண்டிருந்தது.

இதுவும் அவள் ஜாதிடமிருந்து கற்றுக் கொண்டது தான். எந்த ஒரு விஷயமும் நம் வேலையின் குறுக்கே வரக்கூடாது என்று அடிக்கடி சொல்லுவான். ஆனால் அதைக் கூறியவன் இப்பொழுது இருக்கும் நிலை பாவை அறிவாளோ?

வேலையில் இருக்கும் பொழுது எதுவும் தெரியாதது. வேலையை முடித்து வந்தவுடன் தனியாக அந்த ரூமில் இருக்கும் பொழுது அனைத்து விஷயங்களும் கண் முன்னே தோன்றி இவளை வாட்டி எடுத்தது.

இன்றும் அதே மனநிலை தான். ஆறு மணிக்கு தான் வேலையை முடித்து வந்திருந்தால் இவள்.

இப்பொழுது மணி ஏழு ஆகிறது இந்த ஒரு மணி நேரம் தனியாக உள்ளே இருந்தது மூச்சு முட்டியது அவளுக்கு.

வெளியே எங்காவது நடந்து விட்டு வரலாம் என்று சென்றாள்.

பெங்களூரின் சீதோசன நிலை இங்கு வந்ததிலிருந்து அவளை கவர்ந்திருந்தது. இப்பொழுது உடலை தீண்டிய அந்த குளிர் காற்று அவள் உடலுக்கு இதமாய் இருந்தது.

ஆனால் அவள் மனமோ அப்படியே அதற்கு நேர்மாறாய் எரிந்து கொண்டிருந்தது.

லேவி என்ற ஒருவன் அவள் வாழ்க்கையில் வருவதற்கு முன் வரை அவள் வாழ்வு தெளிந்த நீரோடையாக சென்று கொண்டிருந்தது.

அதே நீரோடை இப்பொழுது காடு, மேடு என கரடு முரடான பாதையில் போய்க் கொண்டிருக்கிறது.

அவ்வாறு அது காடு மேடெல்லாம் கஷ்டப்பட்டு கடந்து போவது எதற்காக? கடல் தேவனிடம் சங்கமிப்பதற்காக.

அந்த நதி கடலில் சங்கமிக்குமா?

இப்படி ஏதேதோ யோசனைகள் நடந்து கொண்டிருந்தவள். வெகுதூரம் வந்துவிட்டாள்.

அப்பொழுதுதான் அதை கவனித்தவள் திரும்பி கெஸ்ட் ஹவுஸ்க்கு செல்லலாம் என்று திரும்பினாள்.

அங்கே அவள் கண்ட காட்சி இவ்வளவு நேரம் எரிமலையாய் தகித்துக் கொண்டிருந்த மனதை பனிமலையாய் மாறி குளிர்வித்தது.

ஆம் அவளின் லேவியே தான். அவனும் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றார்களே தவிர வாயை திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

***

ஜானின் டீமில் ஒரு முக்கிய எஸ்கலேசன் ஆகியிருந்தது.

அவன் தான் வந்ததைப் பார்த்தாக வேண்டும் என்ற நிலையில் வேறு வழி இல்லாமல் அவனை அழைத்து இருக்க அவனும் சம்மதித்து வந்திருந்தான்.

மாலை தான் வந்து சேர்ந்தான. அவனுக்கும் அதே கெஸ்ட் ஹவுஸில் தான் தங்குவதற்கு ஏற்பாடாக இருந்தது.

இப்பொழுது இருக்கும் மனநிலையை மாற்ற வேண்டும் வேலையில் இதே மனநிலையுடன் இருக்க முடியாது என்று யோசித்து வெளியே கிளம்பி வந்திருந்தான்.

வெளியே வந்து அங்கே ஜோடி ஜோடியாய் அலைப்பவர்களை பார்க்கும் பொழுது நவியுடைய ஞாபகம் இவனை பாடாய்படுத்தியது.

அவளை நினைத்துக் கொண்டே வந்து கொண்டிருந்தவனின் கண்களுக்கு விருந்தாய் அவளே கண் முன்னே வந்து நின்றிருந்தாள்.

இருவருக்குமிருந்த மௌனத்தை முதலில் கலைத்தது ஜான் தான்.

“எப்படி இருக்க நவி”, அவன் குரலில் அத்தனை ஏக்கம்.

“நல்லா இல்ல”, என்றாள் பட்டென.

“என்ன இப்படி சொல்ற”, என்றான் தயங்கி,

“வேற என்ன சொல்லணும் எதிர்பார்க்கிறிங்க. எத்தன தடவ போன் பண்ண ஒரு தடவையாச்சும் எடுத்தீங்களா”

“சரி வீட்ல பேசின அப்புறம் என்கிட்ட பேசணும்னு அம்மா சொன்னாங்க அது வரையிலும் ரைட்டு. வீட்ல பேசினீங்க தானே அதுக்கு அப்புறமாச்சி அவங்க சொன்னத என்கிட்ட நீங்க போன் பண்ணி சொல்லி இருக்கணும் தானே”, என்றாள் படபடவென

“இல்ல நவி வீட்ல…”, என நடந்ததை எப்படி கூறவென இவன் தயங்க,

“எனக்கு எல்லாம் தெரியும் அம்மா சொன்னாங்க”, என போட்டு உடைத்தாள்.

அவள் இவ்வாறு சொல்லவும் அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க, அதில் கடுகு போட்டால் வெடிக்கும் அளவுக்கு சூடாக இருந்தது.

அவள் முகம் கோபத்தில் சிவந்திருந்ததை பார்க்க, அவ்வளவு ரசனையாய் இருந்தது ஜானிற்கு.

ஆனால் வெளிப்படையாய் அவன் ரசனையை காட்டும் நேரம் இதுவல்லவெ. எனவே, உள்ளுக்குள் ரசித்து வெளியே முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டிருந்தான்.

“நான் பேசிட்டு இருக்கேன் இப்படி நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”, என அவள் கேட்க,

முதல் முதலில் தான் பார்த்த, அந்த பயந்த முகத்திற்கும் இப்பொழுது இவள் இப்படி பாப்கானாய் பொறிந்து நிற்பதற்கும் இருக்கும் வித்தியாசங்களை ஆராய்ந்துக் கொண்டிருந்தான் அவன்.

இப்பொழுதும் அவன் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவனை கடந்து செல்ல ஆரம்பித்தாள்.

அவள் தன்னை கடக்கவும் தன் நினைவிற்கு வந்தவன். அவளுடன் நடக்க துவங்கினான்.

“அம்மா தான் எல்லாத்தையும் உன்கிட்ட சொன்னாங்கன்னு சொன்னல அப்புறம் நான் என்ன தனியா சொல்றதுக்கு இருக்கு”

அவன் இவ்வாறு கூறவும் ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்துவிட்டு, மீண்டும் தன் நடையை துவங்கினாள்.

“அம்மா எனக்கு எல்லாமே சொன்னாங்க தான் ஆனா எக்ஸாக்டா அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு நீங்க சொல்லுங்க”, என அவள் கேட்கவும்,

அன்று நடந்த அனைத்தையும் கூறினான் அவன்.

அனைத்தையும் கேட்டவள் சிரித்தாள்.

என்ன ஆச்சு இவளுக்கு அவ்வளவு ஒன்னும் பெரிய குட் நியூஸ் சொல்லலையே எதுக்கு சிரிக்கிறா என மண்டை குழம்பியது இவனுக்கு.

“எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பிடலாமா”, என அவள் நிதானமாய் கேட்க,

“சரி”, என்றவன் அவள் இவ்வளவு நிதானமாய் நடந்து கொள்ளவும் ஆச்சரியப்பட்டான்.

ஒரு உணவகம் சென்று அமர்ந்தவர்கள் அவரவருக்கு தேவையானதை ஆர்டர் செய்தனர்.

“என் மாமனார் பயங்கரமான ஆள் தான் செமையா கொக்கி போட்டு தூக்கி இருக்காரு போல”, என அவள் ஒரு மார்க்கமாய் கேட்க,

தன் தந்தையை மாமனார் என்று கூறியதை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான் ஜான்.

“லேவி”, என அவள் அழைக்க,

வெகுநாளுக்கு பின் கேட்ட அவளின் அழைப்பில் உருகிக் கொண்டிருந்தான் ஆடவன்.

“நான் மாறின்னா நம்ம கல்யாணத்துல எதுவும் பிரச்சனை இருக்காது அப்படித்தானே”, என அவள் கேட்க,

அவளின் இந்த கேள்வியில் திடுக்கிட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் அவன்.

“இதுக்கு நீ ஒத்துக்க போறியா”

ஆம் என தலையாட்டினாள் இவள்.

“இது சரிப்பட்டு வராது நவி. அவர்தான் எதுவும் புரியாம பேசுறாருனா நீயும் இப்படி பேசுற இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்”, என அவன் கேட்க,

“எந்த ஒரு விஷயத்துக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க நான் தயாரா இல்லைனு அர்த்தம்”, என்றாள் சிரித்துக் கொண்டே,

“உன்னால பிள்ளையாரப்பாவ மறந்துட்டு இருக்க முடியுமா? கோவிலுக்கு போகாம இருக்க முடியுமா?”, எனக் கேள்விகளை அடிக்கினான்.

“யார் சொன்னா நான் பிள்ளையாரப்பாவை மறக்க போறேன்னு. யார் சொன்னா நான் கோயிலுக்கு போகாம இருப்பேன்னு”, என்ற அவளின் பதிலில் குழம்பினான் இவன்.

“அப்படின்னா…”, என்றான் அதே குழப்பத்துடன்.

“அப்படின்னா உன்னை கல்யாணம் பண்றதுக்கு மாற போறேன்னு அர்த்தம். ஆனா பிள்ளையாரப்பாவையும் மறக்க மாட்டேன்னு அர்த்தம். பிரச்சனை வராத மாதிரி வீட்டுக்கு தெரியாத மாதிரி கோவிலுக்கு போயிட்டு வருவேன்னு அர்த்தம்”, என்ற அவளின் பதிலில் ஆவென அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன லுக்கு உங்களுக்கு இதுல சம்பந்தம் இல்லையோ”, என அவள் ஒற்றைப் பருவ உயர்த்திக் கேட்க,

“நான் எப்ப அப்படி சொன்னன் ஆனா நீ நான் நினைச்சா மாதிரி அப்பாவி எல்லாம் இல்ல சரியான ஃபிராடு.”, என்றான் ஜான் அவன் மனதில் பட்டதை.

“நான் என்னைக்கு அப்பாவினு சொன்னேன். நீங்களா சொன்னா அதுக்கு நான் பொறுப்பா. சரி சரி சீக்கிரம் என் மாமனார் கிட்ட போய் நான் மாறதுக்கு ரெடினு சொல்லிடுங்க”, என தன்னவனுக்கு கட்டளை பிறப்பித்தாள்.

அவள் சொல்வது போல் இதெல்லாம் அவ்வளவு சுலபமானதா? திருமணத்திற்கு பின் பெண்ணிற்கு பல சோதனைகள் வரும். அதில் எந்த அளவுக்கு நாம் தாக்குபிடித்து வாழ்கிறோம் என்பதுதான் காலம் நமக்கு வைத்திருக்கும் சவால்.

நம் வைஷ்ணவி அதில் வெற்றி பெறுவாலா? அல்லது அந்த சோதனைகளை கண்டு பயந்து தோல்வியுறுவாளா?

அதை நாம் போக போக தெரிந்து கொள்வோம்.

இன்னும் இரண்டு மாதங்கள் இந்த பிசிபி தொடரும் என்று சொல்லிவிட்டார்கள். எனவே, பெங்களூரில் இரு பறவைகளும் சுதந்திரமாக தங்கள் காதலில் மூழ்கி முத்தேடுத்துக் கொண்டிருந்தார்கள்.

***

இருவரின் வீட்டிலும் அவர்களின் முடிவை கூறிவிட்டார்கள். வைஷ்ணவியின் அம்மாவை பொறுத்தவரை அவள் எந்த அளவிற்கு ஜானை விரும்புகிறாள் என்பது அவருக்கு புரிந்தே இருந்தது. அதேபோல் இப்பொழுது அவள் எடுத்த முடிவினால் நிச்சயம் அவள் கஷ்டப்படுவாள் என்பதும் அவரின் அனுபவத்தில் அவருக்கு புரிந்தே இருந்தது.

ஆனால் இது மகளின் வாழ்க்கை. இப்பொழுது அவள் எடுத்த முடிவினால் பின்பு ஏதாவது கஷ்டங்கள் வந்தாலும் அதை அவள் தாங்கி தான் ஆக வேண்டும்.

திருமணத்திற்கு பின் அவரும் பல கஷ்டங்களை அனுப்பி வைத்திருக்கிறார். இத்தனைக்கும் அவர்களின் திருமணம் பெற்றோர்கள் பார்த்து வைத்தது தான்.

என்னதான் கணவன் அன்பாக இருந்தாலும் கணவன் வீட்டில் இருப்போர் இவரை அந்த அளவுக்கு நன்றாக நடத்தவில்லை. ஏதேனும் குறை கூறிக் கொண்டிருப்பார்கள். இவர் வேலைக்கு செல்வதை வைத்து ஏதாவது அவர் மனம் நோகும்படி சொல்வார்கள். இப்படி புகுந்த வீட்டில் பல கஷ்டங்கள் பார்த்திருக்கிறார்.

என்னதான் இவ்வளவு கஷ்டங்கள் அவரை சுற்றி போய்க் கொண்டிருந்தாலும் அவர் கணவரின் அன்பு இவை அனைத்தையும் தாங்க அவருக்கு ஊன்றுகோல்லாக இருந்தது.

ஆனால் அந்த ஊன்றுகோலே இவரை விட்டு சென்ற பின் நிற்க முடியாமல் மிகவும் தள்ளாடி போனார். அதிலும் அவர்களின் காதல் பரிசான தன் கண்ணின் மணியான குழந்தையை பற்றி பேசவும் அதற்கு மேல் அங்கே தாக்கு பிடிக்க முடியாமல் வந்து விட்டார்.

இப்படி தன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து பார்த்தவர். நிச்சயம் ஜானின் அன்பும் உறுதுணையும் அவளுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த திருமணத்திற்கு சம்மதித்தார். இங்கே இப்படி இருக்க அங்கே ஜானின் வீட்டிலோ…

***

இப்படி ஒரு கண்டிஷன் போட்டாள் நிச்சயம் அந்த பெண் ஒத்துக் கொள்ள மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தார் டேவிட்.

அவர்கள் குடும்பம் மிகவும் பெரியது அவருக்கு உடன் பிறந்தவர்களே ஏழு பேர். அப்படிப்பட்ட குடும்பத்தில் இதுவரை இப்படி வேற்று மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ததில்லை.

மரக்காணத்தில் இவர்கள் குடியிருக்கும் இடமே சச்சின் அருகில் தான். அக்கம் பக்கத்தினர் ஒரு இரண்டு தெரு முழுக்க கிறிஸ்தவர்கள் தான் இருந்தார்கள்.

அதில் யாரேனும் ஒருவர் இப்படி மாற்றி திருமணம் செய்தால் அந்த நிகழ்வை கேள்விப்பட்டு அவர்கள் வீடு தேடி சென்று ஏதோ துக்கம் விசாரிப்பது போல விசாரித்து விட்டு வருவார்கள் இவர்களின் உடன் பிறந்தோர்கள் அதில் அவரும் அடக்கம்.

அப்படி இருக்க இப்பொழுது அவரின் மகனே இப்படி ஒரு காரியத்தை செய்தானே அவர் மனம் கொதித்தது.

இதை நேரடியா நிறுத்தினால் நன்றாக இருக்காது என்று தான் இப்படி ஒரு கண்டிஷனை போட்டார். அந்தப் பெண் வேறு சம்மதித்து விட்டதாய் கூறவே இப்பொழுது என்ன செய்து இந்த திருமணத்தை நிறுத்த என்ன வழிகளை யோசித்துக் கொண்டிருந்தார் டேவிட்.

லேவியின் நவி காதல் தொடரும்…

 

 

 

 

error: Content is protected !!