💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 30 💋

20211120_092016-f2741df8

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 30 💋

அத்தியாயம் 30

 

விடியாத இரவு விடிந்திருக்க, பரபரப்பாய் கிளம்பினான். நித்தி, பியானாவிற்காக உணவு சமைத்துக் கொடுத்தாள். 

வைத்தியசாலையை அடையும் வரை மனம் ஒரு நிலையில் இல்லை அவனுக்கு. 

வைத்தியசாலை கடவுச்சீட்டை காண்பித்து உள்ளே நுழைந்தவன் பதற்றமாக பியானாவின் அறையை நோக்கி ஓடினான். இனி வரும் நாட்களில் ஓடி ஓடியே ஓய்ந்து போகப் போகிறான் என்று அறியாதிருந்தான். 

“பியூமா” என்று கூறும் விதமே மூச்சு வாங்கியது.

“ஏன் சேய் ஓடி வந்தீங்க” என்று கேட்டாவாறு எழுந்து அமர்ந்தாள்.

“நீ சாஞ்சி இரு பியூமா” 

“இல்ல சேய் பரவாயில்ல” 

“இப்போ உடம்பு எப்படி இருக்கு?” 

“இப்போ பரவாயில்ல ஸ்டிச் பண்ணதாலதான் உட்காரும் போது கஷ்டமா இருக்கு” 

“சரிமா கவனமா இரு. டாக்டர் ஏன் பார்க்க வர சொன்னாங்க?” வந்தவுடன் இதைதான் கேட்டிருக்க வேண்டும். அப்படி கேட்டிருந்தால் பியானாவிற்கும் பதற்றம் அதிகமாகும் என்று பொறுமையாகவே கேட்டான். 

“நைட்டு தான் பேபிய பார்க்க கூட்டிட்டு போனாங்க. பாவம் சேய்” என்று கூறும் போதே கண்கள் கலங்க ஆரம்பித்தது. 

“ஏன்டா, ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?” 

“வார்த்தையால சொல்ல முடியாது அவ்ளோ வருத்தப்படுறாங்க. ஆக்சிஜன் போட்டு, ஒரு கைல டிரிப்ஸ், இன்னும் ஒரு கைல மருந்து ஏறுது. கைகால அசைக்க முடியாம அழுறாங்க சேய்” என்று அழ ஆரம்பித்தாள்.

என்னடா பண்றது. குழந்தை குணமாக வேணாமா? எல்லாம் பொறுத்துதான் ஆகனும்” என்று அவளை தேற்றினான். அவன் மனதிலும் கவலை இல்லாமல் இருக்குமா? பியானாவின் முன் மனதை கல்லாகினான். 

“டாக்டர் உங்கள வரச் சொன்னாங்க. அப்பறம் வேணாம் சொல்லிட்டாங்க. ஏன்னே தெரியல” 

“ம் சரி பியூமா. நைட்டுக்கு ஆஸ்பிடல் சாப்பாடு வேணாம். நான் வந்து வீட்டு சாப்பாடு குடுத்துட்டு போறோன். செக்யூரிட்டி உனக்கு வந்து தருவாரு வாங்கிக்கோ. டைம் சரி நான் கிளம்புறேன்” 

“மறுபடியும் நாளைக்கு காலையிலதான் வருவீங்களா?” 

“ஆமா பியூ அதானே ரூலு” 

வேறுவழியின்றி வருத்ததுடன், ‘ம்’ என்று தலையை அசைத்தாள்.

இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. 

மீண்டும் வைத்தியர் புறஞ்சேயன் அவசரமாக வருமாறு பகல் பன்னிரண்டு மணியளவில் அழைத்தார்.

அத்தனை வேலைகளையும் போட்டது போட்டபடி இருக்க அரக்கபரக்க ஓடிவந்தான். 

வைத்தியர் சற்று காத்திருக்குமாறு கூற, “ஏன் பியூமா டாக்டர் இப்போ வர சொன்னாங்க?”

“கேர்ள் பேபி சீரியஸ்ஸா இருக்குனு சொல்லி விடிய மூனு மணிக்கு எழுப்புனாங்க சேய். எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கரன்ட் ஷாக்கெல்லாம் பேபிக்கு குடுக்குறாங்க சேய்” குழந்தை துடிப்பதை கண்ணால் பார்த்தவளுக்கு சர்வ நாடியும் அடங்கிவிடும் போல இருந்தது.  அந்த பிஞ்சு மேனி எத்தனை வலிகளை தாங்கிடுமோ! 

“இல்லடா ஒன்னுமில்ல. குழந்தை சரி ஆகிரும்” என்று அவன் மீது சாய்த்து தலையை வருடினான்.

வைத்தியர் உள்ளே அழைத்து இருவரையும் அமர வைத்து உரையாடத் தொடங்கினர். 

“ஒரு குழந்தை முழுசா நாற்பது வாரம் ஒரு தாய் வயித்துல இருக்கனும். ஆனா உங்களுக்கு டுவின்ஸ் பேபிஸ். அதுவும் டிஃபரண்ட் டைப். சோ சீக்கிரமா டெலிவரி ஆகனும் அது உண்மை. இருந்தாலும் இவ்ளோ சீக்கிரம் டெலிவரி ஆகக் கூடாது” 

வைத்தியர் கூறுவதெல்லாம் நன்கு கேட்டுக்கொண்டிருந்தனர் இருவரும். 

“கொரோனா தொற்று அதிகாம இருக்கதால உங்களுக்கு நிறைய கிளினிக் போட முடியாம போச்சு. வருத்தம் வந்தா உங்கள உடனே வரச் சொன்னோம். ஆனா உங்களுக்கு முதல் பிரசவங்கிறதால பிரசவ வலினா என்னனு தெரியாம வீட்லயே இருந்துட்டீங்க

ரெண்டு பேர் இருந்ததால உங்க வயித்துல இடம் போதல. அதுதான் ஒரு குழந்தையோட தலை கருப்பை வாய் மாட்டிக்கிட்டு உங்களுக்கு அதிகபட்ச வலிய குடுத்துச்சு. இதுவே கொரோனா இல்லாம இருந்து இருந்தா உங்களுக்கு நிறைய கிளினிக் போட்டு நாங்களே அதை கண்டுபிடிச்சு சரி படுத்திருப்போம். துரதிர்ஷ்டவசமா இப்படி ஆகிருச்சு. அதுக்கு நாங்க ரொம்ப வருத்தப்படுறோம்

முப்பதியொரு வாரக் குழந்தய எந்தளவுக்கு காப்பாத்த முடியுமோ அவ்ளோ டிரை பண்ணோம். பட் உங்க கேர்ள் பேபியோட ஐ டெத் ஆகிட்டு. பிரைனும் டெத் ஆகிட்டு” என்று கூறும் போதே பியானா கண்களை இறுக மூடி புறஞ்சேயனின் கைகளை இறுக்கமாக பற்றினாள். 

“ஐ அண்ட் பிரைன் டெத் ஆனா ஹார்ட் வொர்க் பண்ணாது. அப்படினா உங்க கேர்ள் பேபி இறந்ததா அர்த்தம்” என்று அந்த வார்த்தையில் அந்த நொடி இருவரின் இதயமும் ஸ்தம்பித்தது. 

அறையில் இருந்த நிசப்தத்தை கலைக்கும் வகையில், “நோ நோ! நம்ம பேபிக்கு ஒன்னும் ஆகல. இவங்க என்னென்னமோ சொல்லுறாங்க சேய். எனக்கு பயமா இருக்கு” என்று கத்தி கதறி தலையில் அடித்து அழ ஆரம்பித்தாள் பியானா. 

புறஞ்சேயனோ நம்பவும் முடியாமல், கதறி அழ முடியாமல் கண்களை இறுக மூடினான். அறை முழுவதும் பியானாவின் கதறல் ஒலி மாத்திரம் எதிரொலித்தது. 

பியானா, புறஞ்சேயனை குலுக்கி, “வேற ஆஸ்பிடல் போய் பார்க்கலாம் சேய். நம்ம குழந்த சாகல சேய் உயிரோடதான் இருக்கும்” என்று அவனை குலுக்கி குலுக்கி அழுது கூறிவிட்டு வைத்தியரின் புறம் திரும்பினாள்.

“டாகடர், என் குழந்தை சாகலனு சொல்லுங்க டாக்டர், சொல்லுங்க டாக்டர். இன்னும் ஒரே ஒரு வாட்டி டிரை பண்ணி பாருங்க” என்று பெற்ற வயிற்றை அடித்து அடித்து அழுதாள் பியானா. 

“இதை சொல்ல எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. நானும் ஒரு அம்மாதான். ரியலி வெரி சாரி. பாய் பேபிய காப்பாத்த டிரை பண்ணுறோம்” என்று கூறி பியானாவின் தோள்களை ஆறுதலாய் பற்றிவிட்டு வைத்தியர் நகர்ந்தார். 

வெள்ளைத்துணியால் கழுத்துவரை போர்த்தப்பட்ட குழந்தையின் அருகில் சென்று, “என் செல்லத்த தொட்டுக் கூட பார்க்கலயே, அதுக்குள்ள என்னை விட்டு போயிட்டியா, என் தங்கமே என்னை விட்டுட்டு போயிட்டியா…” 

பெண்ணவள், வலி அத்தனையும் சுமந்து மறுபிறவி எடுத்து குழந்தை மாண்டது என்றால் அவள் மனம் ஏற்குமா? ஏழரை மாதத்திற்குள் அவள் கண்ட சொப்பனம் மெய் கசிந்ததே. கதறினாலும் கத்தினாலும் குழந்தையின் உயிர் வந்து விடுமா? 

மனதை கல்லாகியவன் பியானாவை வெளியே அழைத்து வந்தான். வேர்லினுக்கு அழைப்பை விடுத்து விஷயத்தை சொல்லி வருமாறு கூறினான். 

அழாதடா மத்த குழந்தைய நீதான் பார்த்துக்கனும். நீ அழாதே மத்த குழந்தைய யார் பார்த்துப்பா?” 

“எப்படி சேய் அழாம இருக்க முடியும்? எவ்ளோ வலிய தாங்கிக்கிட்டு பெத்திருப்பேன். மண்ணுக்குள் போறதுக்குதான் நான் இவ்ளோ கஷ்டப்பட்டு பெத்தேனா. எங்கிட்ட ஒரு சொட்டு பால் குடிக்கலயே. எனக்கு என் குழந்தை வேணும்… என் குழந்த வேணும்… என் குழந்த வேணும்… நைட் கூப்பிடும் போது பசில இருப்பாங்கனு ஓடி வந்தேன் சேய். நம்மல பரிதவிக்க வச்சிட்டு போயிட்டா” என்று முலையில் சொட்டும் பாலேல்லாம் குழந்தைக்காய் ஏங்கியது. மார்பில் அடித்து அழ ஆரம்பித்தாள். 

“என்னோட குழந்தய எங்கிட்ட தந்துரு கடவுளே!” ஆறுதல் பெறாத பெற்ற மனம் இறைவனிடம் மனதால் இறைஞ்சியது. 

ஒரு கட்டத்தில் பியானா கதறி கதறி அழுவதை பார்த்தவன் தாங்கமுடியமல் வாய் விட்டு அழ ஆரம்பித்தன். “ரெட்டை புள்ளேனு எவ்ளோ சந்தோசப்பட்டேன். எங்களுக்கு அது கொடுத்து வைக்கல பியூமா” அவளை கட்டியணைத்து அழுதான். 

“ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கும் போது ஹார்ட் ஷேப் வந்துச்சுனு போட்டோ கூட எடுத்த வச்சேனே. இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சா ஃபார்ட் வலினு சொல்லும் போதே கூட்டிட்டு வந்திருப்பேனே” 

இடையில் தாதியர் வந்து, “சார் நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க. இந்த பேபிதான் இறந்துப்போச்சு. மத்த பேபிய காப்பத்தனும். சோ தவறுன பேபிய போஸ்ட்மொட்டம் பண்ணனும், இதுல ரெண்டு பேரும் சைன் பண்ணி குடுங்க. இது உங்க விருப்பம்தான்” 

அழுகையுடன் பியானாவிற்கு தொண்டை அடைக்க ஆரம்பித்தது. “என்ன போஸ்ட்மார்ட்டம் பண்ணனுமா, அதுவும் அந்த பிஞ்சு உடம்ப, என்ன இருக்கு அந்த பிஞ்சு உடம்ப வெட்டிப் பார்க்க? ஊசி குத்தினதே என்னால பார்க்க முடியல. நீங்க வெட்டிப் பார்க்க கேக்குறீங்களே. அந்த பிஞ்சு உடம்புக்கு வலிக்காதா!” இறந்த குழந்தைக்கு உணர்ச்சிகள் இல்லை என்பதை தாயவள் இருக்கும் நிலையில் அதை உணர முடியவில்லை.

புறஞ்சேயனுக்கும் இதில் விருப்பமில்லை. வேர்லினும் வந்து நிற்க, “மாம்ஸ் சைன் பண்ணுங்க” 

“ஏன் சைன் பண்ணனும்? நீ டாக்டருக்குதானே படிக்கிற அப்படிதான் பேசுவ” என்று அழுதவாறு விளம்பினாள் பியானா.

“ஆமா அதான் அப்படி பேசுறேன். உனக்கு டுவின்ஸ் அக்கி ஒருத்தருக்கு எதும் குறை இருந்தா அது மத்த பேபிக்கும் சில வேளை இருக்கலாம். அதுக்குதான் கேக்குறாங்க. சைன் பண்ணு அக்கி மத்த பேபிய காப்பாத்துவோம்” என்று பியானாவின் கையைப் பற்றி அழுது கொண்டே கூறினாள் வேர்லின். 

பச்சிளங்குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்கு மனமே இன்றி கையொப்பமிட்டனர் இருவரும். வேர்லினின் கோரிக்கை நிறைவேறியது. 

“அந்த பிஞ்சு உடம்பு உசுரு போகும் போது என்ன பாடு பட்டிருக்கும். எவ்ளோ வலிச்சுருக்கும் கரன்ட் ஷாக்கெல்லாம் வச்சாங்க சேய். துடியா துடிச்சா நம்ம பொண்ணு. இதுக்கு கருவுலயே கலைஞ்சு இருக்கலாமே. இவ்ளோ தூரம் வளர்ந்து என் மனசுல ஆசைய வளர்த்துட்டு போயிட்டியா தங்கமே” 

“அழாத பியூமா, நீ வேணும்னா பாரு நம்ம பொண்ணு மறுபடியும் வந்து நம்மக்கிட்டவே உன் வயித்துலயே பொறப்பா” 

“எத்தன குழந்த பிறந்தாலும் இந்த குழந்தைக்கு ஈடாகுமா சேய்” அவள் கதறல் ஒலி சில தாதியர்களையும் கண்கலங்கச் செய்தது. 

“அக்கி இப்போ நீ தைரியாம தெம்பா இருக்கனும். மத்த குழந்தைக்கு நீதான் தைரியம் சொல்லனும். அழுது அழுது இருந்தா எப்படி ஃபீட் பண்ணுவ அழாத அக்கி” என்று பியானாவின் கண்களை துடைத்துவிட்டாள் வேர்லின். 

“முடியல வேர்லின். பெத்த புள்ளைய தொட்டுக்கூட பார்க்கல ஒரு முத்தம் குடுக்கல. எவ்ளோ வலி சொல்லமுடியாம தவிச்சுருப்பா. குழந்தயா அவளோட வாழ்க்கைய வாழாமலே போயிட்டாளே” 

“நீ எவ்ளோ போல்ட், ப்ளீஸ் அக்கி” 

“ஐய்யோ ஐய்யோ, நானே என் குழந்தய தொலைச்சிட்டேனா, வருத்தம் வரும்போது சூட்டுவலினுதான் நினைச்சேன். குழந்த பொறக்கப் போறாங்கனு தெரிஞ்சிருந்தா ஓடி வந்திருப்பேனே. எங்க அம்மாவே பொறந்ததா நினைச்சேனே. அது நடக்கலயே”

தன்னவனின் புறம்திரும்பி, “நீங்க சொன்னீங்கதானே உன்ன மாதிரி பொண்ணு வேணும்னு, நம்மல விட்டு போயிட்டா சேய். நம்ம குழந்த, நம்ம குழந்த சாகாம நான் செத்துருக்கலாம்… செத்துருக்கலாம் சேய்” என்று கதறி கதறி அழுதாள் அவள். 

‘அம்மா உன்ன கஷ்டப்பட்டு பெத்ததுக்காவது நீ உயிரோட இருந்து இருக்கலாமே தங்கம்’ என்று மனதில் புழுங்கி வெளியே அழுதான் அவன்.

தாயவளை தவிக்கவிட்டு

தன்போக்கில் போனதென்ன

நீயின்றி தள்ளாட தந்தை மனமும்

மாண்டதுவே 

சாமியிடம் கூறிவிட்டு 

மீண்டும் இங்கே வந்துவிடு 

பாலுட்ட தாயுமுண்டு

சீறாட்ட தந்தையுண்டு

வைத்தியர் தனிப்பட்ட முறையில் புறஞ்சேயனுடன் கதைப்பதற்கு அழைத்திருந்தார். 

தொடர்ந்து ஒரு வாரமாக அழுகையுடனே நாட்கள் கழிந்தது இருவருக்கும். குழந்தையின் இழப்பு பாரிய மனவுளைச்சலை அளித்தது இருவருக்கும்.

இதில் யாரை குறை கூறுவது, பியானாவையா அல்லது வைத்தியரையா? முப்பத்தியொரு வாரத்தில் சுகப்பிரசவ வலி ஏற்படும் என்று பியானா எதிர்பார்த்திருப்பாளா, இல்லை இந்த அனுபவம் பற்றி முன் அனுபவம் உண்டா அவளுக்கு?

வைத்தியர்கள் அதிகப்படியான பரிசோதனை இடாமல் இருந்ததற்கு ஒரே காரணம் கொரோனா என்கிற விஷநோய் தொற்றுதான். அப்படி அதிகப்படியான பரிசோதனை நாட்கள் இட்டால் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் குணப்படுத்துவது கடினம் ஆயிற்றே! 

அதிலும் சில கர்ப்பிணி பெண்களுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் இன்னும் சில நோய் இருக்க கொரோனா தொற்றிற்கு உள்ளாக வேண்டாம் என்றே பரிசோதனை நாட்களை குறைத்தனர். 

இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது. கொரோனா தொற்று காலத்தில் கர்ப்பம் தரிப்பவர்கள், முதல் ஏழு மாதத்திற்கு பரிசோதனை நாட்கள் குறைவுதான். ஆதலால் மாதவிலக்கோ அல்லது ஏதேனும் வலியோ, குழந்தையின் அசைவில் ஏதேனும் மாற்றமோ, அசைவு குறைந்தாலோ தாமதிக்காமல் வைத்தியசாலையை நாட வேண்டும். 

குழந்தைகளின் இறப்பு வீதம் இக்காலக்கட்டத்தில் அதிகரித்து செல்கிறது அதை நம்மால் குறைக்க முடியும். இது வெறும் கதையல்ல. இரட்டையர்களில் ஒருவர் தவறியது நிஜம்.

இப்போது புறஞ்சேயனின் தந்தை வீட்டில், இவ்விடயம் தெரிந்தவுடன் செல்வத்தின் மனம் கபீர்ரென்றானது. பியானாவை பழிவாங்குவதற்கு கூறிய வார்த்தைகளை குழந்தையின் உயிரை காவு வாங்கியதாக எண்ணி மனமுடைந்து போனர். 

செல்வம் புறஞ்சேயனின் வீட்டு வாசலில் சென்று நிற்க, “ஏன்மா வந்தீங்க. நாங்களும் செத்துட்டோமா இல்லயானு பார்க்க வந்தீங்களா? நீங்க சொன்னீங்கதானே பொண்ணு வேணாம் கலைச்சுருனு அவ காதுக்கு கேட்டுருச்சு போல, அதான் போய் சேர்ந்துட்டா. போதுமா போதுமா இப்போ சந்தோசமா?”

“மன்னிச்சுருப்பா. நீயும் சொல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தியா அந்த கோபம்தான் கடைசிவரைக்கும் இருந்துச்சு வேற எதுமே இல்லபா. இந்த அம்மாவ மன்னிச்சுருயா” 

இப்போதான் செல்வத்திற்கு புரிந்தது. கர்ப்பிணி பெண்ணை மனம் நோக வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது என்று.

“உங்க கூட பேச நேரமில்லமா” என்று கூறிமுடிக்க, வைத்தியசாலையிலிருந்து அவசரமாக அழைப்பு வர, வைத்தியசாலைக்கு ஓடினான் புறஞ்சேயன். 

***

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!