💕நெஞ்சம் மறப்பதில்லை.💕25.
💕நெஞ்சம் மறப்பதில்லை.💕25.
நெஞ்சம் மறப்பதில்லை.25.
“அப்ப… நான் ஆக்சிடென்ட்ல கோமாவுக்குப் போகல?”
“………”
“கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்குமேல அம்னீசியாவால எல்லாத்தையும் மறந்துருக்கே?”
“……..”
“இவங்க கூடத்தான்… அதுவும் இந்த வீட்லதான் நான் இருந்திருக்கே?”
“……….”
“அப்ப தான் இவளை லவ் பண்ணி கல்யாணம் வரைக்கும் போயிருக்கே?”
“……….”
“இப்படி எல்லோரும் அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?”
யாருக்கும் பதில் சொல்லும் தைரியம் இல்லை. அமைதி விடுமுறை கேட்கப் பயந்து அன்றையதினம் ஓவர் டைம் பார்த்தது அங்கு. சூர்யப்புயல் மையம்கொண்டிருந்தது ஆதியாவின் வீட்டில்… இத்தனை நாட்களாகத் தன்னைச் சுழற்றிய சூறாவளியின் திசை அறிந்து.
சூர்யாவின் தாத்தா சத்யப்ரகாஷ் உட்பட அனைவரும் ஹாலில் கூடி இருக்க…
காலைச் சூரியனாய் இருக்கும் அவனது முகம் சித்திரைமாத கத்திரி வெயிலாய்த் தகிக்க, அவளுக்கோ உள்ளுக்குள் மார்கழிப் பனியாய் குளிரெடுத்தது.
காளையவனுக்கோ இத்தனை நாட்களாகத் தன்னை ஆட்டிப் படைத்த உள்ளக் கிடக்கைகளுக்கு எல்லாம் விடை தெரிந்ததன் விளைவு. கன்னியவளுக்கோ சற்று நாட்களாக உண்மை தெரியும் நாள் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்ததன் நிதர்சனம் கண்முன்.
அனைவரும் சோஃபாவில் இறுக்கமாக அமர்ந்திருக்க, நின்றவாறு கைகளைக் கட்டிக் கொண்டு, அனைவரிடமும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
லஷ்மியும் மங்கையர்க்கரசியும் தனது இருபுறமும் அமர்ந்திருக்க, தன்னவனின் முகத்தை ஏறிட்டு ஏக்கமாகப் பார்த்தவளை,
‘அப்படிப் பார்க்காதே!’ என்றது அவனது கண்டனப் பார்வை.
முன்தினம் ஆதியாவின் பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்தவன், அதிலிருந்த அவர்களது இறப்பு தேதியில் குழம்ப, அவனது கைபேசியோ… அதிகம் யோசிக்காதே! இதோ… உனக்கான விடை என சிந்தனைக்குத் தடை விதித்தது.
கைபேசியோடு வெளியே வர, அனிச்சையாக பவளமல்லித் திட்டை நோக்கி வந்த அவனது கால்கள் இயல்பாக நடைக்கு தடை விதிக்க, கைபேசியில் அழைப்பை ஏற்றான்.
“சார் நான் நந்தினி பேசுறே.”
“சொல்லுங்க நந்தினி. என்ன விஷயம்?”
“சார் குடவுன் லாக்காகிட்டு திறக்க முடியல.”
“அதுக்கு என்னைய வந்து தொறக்க சொல்றீங்களா?” காட்டமாய்க் கேட்க,
“இல்ல சார்… உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணலாம்னு…”
“சூப்பர்வைசர் எங்க? அட்டென்டர் எங்க? இந்த விஷயத்துக்கெல்லாம் எம்.டி.யத்தான் கூப்பிடுவீங்களா?” அவனுக்கிருந்த குழப்பத்தில் நந்தினியிடம் எரிந்து விழ,
“இல்ல சார்… ரொம்ப நேரமா ட்ரை பண்றோம். சர்வீஸ்க்கு ஆள் சொல்லி இருக்கு. இன்னும் வரல. உங்களுக்கு தகவல் கொடுக்கலாம்னு தான் கால் பண்ணினேன்.”
“அப்புறமென்ன? வந்ததும் கட் பண்ணி எடுக்க சொல்லுங்க? இதெல்லாமா கேப்பீங்க?”
“இல்ல சார்…” என அவள் தயங்க,
“என்ன இழுக்கறீங்க?” இங்கே இவன் எரிச்சலாக,
“உள்ள ஆதியா போயிருக்கா. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்துக்கும் மேலயே ஆச்சு சார்.” அவளது குரலிலேயே பதட்டமும் பயமும் ஒருசேரத் தெரிய,
“வாட்! இவ்ளோ நேரம் என்ன பண்ணீங்க?”
“எப்படியாவது திறந்துறலாம்னு… ட்ரை பண்ணோம் சார்.”
“டேமிட். அவளுக்கு அங்க என்ன வேலை?” பன்மை ஒருமையாகியது உரிமையிலா? பதட்டத்திலா?
அடுத்து சிந்தனை செயலிழந்து நின்றது ஒரு நொடி தான். காருக்கு விரைந்தவன் இங்கு எதற்கு வந்தோம்? எவருடன் வந்தோம் என்பதை எல்லாம் மறந்தான். கார் திறந்து ஏறியவன், காரைக் கிளப்பும் சத்தத்தில் தான் விஷ்வாவும் மற்றவர்களும் எட்டிப் பார்த்தனர்.
“இந்த வீட்டுக்கு வந்துட்டுப் போனாலே இவனுக்கு யாரையாவது மறக்கணும் போல. நான் இருக்கேங்கற நினப்பாவது இருக்கா?”
“என்ன தம்பி நீங்க? ஏற்கனவே நாம பேசுனதுல குழப்பத்துல இருந்தாப்ல. இப்படி சொல்லாமக் கொள்ளாம போறாப்லன்னா கொஞ்சம் பயமா இருக்கு.”
“ஆமா விஷ்வா. எனக்கும் கண்ணாவோட அம்மா சொன்னது நினச்சு பயமாத்தான் இருக்கு.” லஷ்மியும் தனது அச்சத்தை வெளிப்படுத்த, விஷ்வாவும் சற்று யோசித்தான்.
சற்று நேரத்தில் அதே தகவல் சண்முகம் ஃபோனிற்கும் வந்தது. அவருக்கும் ஆதியாவின் நிலையைத் தெரிவிக்க வேண்டும் என எண்ணிய நந்தினி தகவல் தெரிவிக்க, சூர்யா அவசரமாகக் கிளம்பியதன் நோக்கம் புரிந்தது.
***********************
அவன் காரின் ஹாரனை ஒலிக்க விட்டதிலேயே அலறியடித்துக் கொண்டு செக்யூரிட்டி கேட்டைத் திறக்க,
இறங்கியவன் சாவியை அவரிடம் எரிந்து விட்டு புயலென குடவுன் இருக்கும் பகுதிக்கு விரைய, அங்கே அனைவரும் குழுமி இருந்தனர்.
“இங்க என்ன ஷோ பாத்துட்டா இருக்கீங்க? எல்லாரும் அவங்கவங்க இடத்துக்குப் போங்க!” அவன் போட்ட அதட்டலில் பேக்கிங் செக்ஷன் ஆட்கள் முதற்கொண்டு அனைவரும் கிளம்ப நந்தினியும், ராகவனும் அங்கு இருந்தனர்.
“இங்க அவளுக்கென்ன வேல? எதுக்கு உள்ள போனா? சீக்கிரம் கட் பண்ணுங்க.” அதட்டியவனைப் பார்த்த நந்தினி திரும்பி ராகவனைப் பார்த்தாள்.
“இல்ல சார்… ஏதோ செக் பண்ணனும்னு லன்ச் ப்ரேக்ல பேசிக்கிட்டு இருந்தா. சாப்பிட்டு முடிக்கவும், நான் போய் பாத்துட்டு வந்துர்றேன்னு வந்தா. நானும் சீட்டுக்குப் போயிட்டேன்.” தயங்கியபடியே ராகவனைப் பார்த்தவாறே கூறி முடித்தாள்.
காலை அலுவலகம் வந்த ஆதியா இருந்த மெயில் ஆர்டர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒன்றிரண்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. இவர்கள் அனைவருமே நெடுங்காலமாக வியாபாரம் செய்பவர்கள். இப்பொழுது ஆர்டரைக் கேன்சல் செய்ததன் காரணம் ஏனென்று புரியவில்லை. நேரிடையாக அழைப்பு விடுத்து காரணம் கேட்க, அவர்கள் சொன்ன பதில் இவளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணியது.
அவர்கள் கூறிய காரணம் காலதாமதமான டெலிவரி என்பது. உணவுப் பொருட்களுக்கான எக்ஸ்பயரி டேட் என்பது ஆறு மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒருவருடம். அவ்வளவுதான். இப்படி இருக்க சப்ளை செய்வதே ஒருமாதகாலப் பக்கம் தாமதமாக செய்தால், அதை வைத்து நாங்கள் எவ்வாறு விற்பனை செய்வது எனக் கேட்டிருந்தனர். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எல்லா மசாலா பாக்கெட்களுமே பேக் செய்தவுடன் டெலிவரி செய்யப்படும். அப்படி இருக்க காலதாமதம் ஏன் என சந்தேகம் எழ, டெலிவரி ஆன தேதிகளை ஆராய, டெவிவரிக்கான ஒப்புதல் இருந்தது. ஆனால் சப்ளை செய்யப்படாமல் எப்படி என யோசித்தாள்.
அப்படியானால் சப்ளை செய்யப்படாத சரக்குகள் குடவுனில் தானே இருக்க வேண்டும். அதே யோசனையில் இருந்தவள், உணவு வேளையின் போது இதுபற்றி நந்தினியிடம் விவாதித்துக் கொண்டிருந்தாள்.
“ஆதி, இதப்பத்தி எல்லாம் நீ யோசிக்காத. எனக்கு என்னமோ ராகவன் மேலதான் சந்தேகம். இப்படி லேட்டா சப்ளை பண்றதே கம்பெனி பேரைக் கெடுக்கத்தான்.”
போட்டி இரண்டு வகை. ஒன்று, உன்னைவிட சிறப்பாக செய்து உன்னை ஜெயித்துக் காட்டுவேன் என்பது ஒருவகை. தரமான எண்ணம். பல புதிய உத்திகளைத் தோற்றுவிக்கும். தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையுமே சேர்த்து முன்னுக்கு அழைத்துச் செல்லும்.
உன்னைக் கீழே இழுத்துவிட்டு உன்னை முந்திக்காட்டுவேன் என்பது இரண்டாம் வகை. தரங்கெட்ட வழி. தன்னையும் அதற்கு துணை நிற்பவர்களையுமே சேர்த்து புதைகுழி நோக்கி இழுத்துச் செல்லும் வழி.
சூர்யாவின் போட்டிக் கம்பெனி ஒன்று இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு ராகவனை விலை பேசி இருந்தனர். அதற்கான முதல் அடியாகத்தான் சப்ளை செய்வதை தாமதிப்பது.
“பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ்க்கு கைமாறின பிறகு, எல்லாம் வெளிநாட்டு ஆர்டர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. உள் நாட்டு வியாபாரமெல்லாம் அவங்க கண்டுக்கறது இல்லங்க.” இப்படித்தான் வெளியே பேசும்படி செய்திருக்கிறான்.
இதனால் தான் சில உள்நாட்டு ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன.
இது நாள் வரை சத்யப்ரகாஷே அலுவலகம் வந்து கொண்டிருந்ததால் ராகவனும் துணிந்து காரியத்தில் இறங்கினான்.
மதியம் உணவு வேளைக்குப் பிறகு நந்தினியிடம் சொல்லிக் கொண்டு குடவுனிற்குச் சென்றாள்.
“ஆதி… சூர்யா சார் வரவும் அவர்கிட்ட சொல்லிக்கலாம். நீ எதுக்கு தேவையில்லாம மூக்க நுழைக்கற? நம்ம வேலைய மட்டும் பாப்போம்.”
“நானும் என் வேலையத்தான் பாக்கப் போறே.” என்று நந்தினியிடம் சொல்லிக்கொண்டு சென்றாள். நந்தினியும் தனது இருக்கைக்கு வந்துவிட, வேலையில் கவனமாகியவள் சற்று நேரம் கழித்தே ஆதியாவின் இருக்கையைப் பார்க்க அங்கே அவள் இல்லை. நந்தினியிடம் கூறிச் சென்றது நினைவு வர, எழுந்து குடவுன் இருக்கும் பகுதிக்கு விரைந்தாள்.
அங்கே ராகவனிடம் விசாரிக்க,
“இங்க வரலயே? வந்திருந்தா எனக்குத் தெரியாதா?” என்றான் அசட்டையாக.
“எங்கிட்ட இங்க வர்றதாத்தான் சொன்னா. நீங்க முதல்ல திறங்க! ஏதொன்னுக்கும் செக் பண்ணிறலாம்.”
இவளது அவசரம் பார்த்து ராகவனும் திறக்க முயற்சி செய்ய, கதவின் லாக்கிங் சிஸ்டம் மக்கர் பண்ணியது. பிரைவேட் வேர்ஹவுஸ்… பழைய லாக்கிங் சிஸ்டம்.
“ராகவன், உள்ள ரொம்ப நேரம் இருக்க முடியாது. உங்களுக்கே தெரியும்ல. காரல் நெடி தாங்காது. சீக்கிரமா திறங்க!”
“நான் என்ன பண்றது நந்தினி. மறுபடியும் ஸ்ட்ரக்காகிருச்சு. திறக்கிறது கஷ்டம். அப்படி இப்படின்னு திருகித்தான் திறக்கனும்.”
இதற்காகவே இதை சர்வீஸ் பார்க்காமல் வைத்திருக்கிறான். உள்ளே எவரும் அவ்வளவு சீக்கிரம் போகக் கூடாது என்பதற்காகவும், அப்படியே உள்ளே சென்றாலும் வெகு நேரம் உள்ளே இருக்க முடியாமல் மசாலாக்களின் காரல் நெடியில் வெளியேற வேண்டும் என்பதற்காகவே குடவுனின் ஃப்ரீசர் சிஸ்டத்தை, அவ்வப்பொழுது அனைத்து விடுவது.
ஆதியா உள்ளே சென்றதை ராகவனும் கவனித்தான். எதையும் ஆராயாமல் சீக்கிரம் வெளியேற வேண்டும் என எண்ணியவன் ஃப்ரீசரை ஆஃப் செய்து விட்டு பேக்கிங் செக்ஷன் சென்றுவிட்டான்.
குடவுனிற்குள் சென்றவள் அங்கே கடைசி வரிசை ரேக்குகளில் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் அட்டைப் பெட்டிகளை ஆராய சென்ற மாதம் தேதி அச்சிடப்பட்ட பார்சல்களும், டெலிவரி செய்யப்படாமல் உள்ளே ஓரமாக அடுக்கி இருந்தன.
‘இது ராகவன் மட்டும் தனியே செய்திருக்க முடியாது. யாரெல்லாம் இதுல கூட்டு சேந்திருக்காங்கனு விசாரிக்க சொல்லணும்.’ என்று எண்ணிக் கொண்டே கதவைத் திறக்க, அவளால் முடியவில்லை.
சீக்கிரம் வெளியே வரட்டும் என எண்ணிக்கொண்டு அவன் செய்ய, ஆனால் அவளோ உள்ளேயே மாட்டிக் கொண்டாள்.
திறக்க முயற்சி செய்ய, முடியாமல் போகவும் நெடி தாக்காமல் இருக்க துப்பட்டாவால் நன்கு மூக்கோடு சேர்த்து கட்டிக் கொண்டாள். குடவுன், தலைமை சூப்பர்வைசர் ராகவனது கண்காணிப்பில் மட்டுமே எப்பொழுதும் இருக்கும். அப்பொழுதுதான் ஃபோன் எடுத்து வராததும் அவளுக்கு நினைவுக்கு வர, ‘என்ன செய்வது.’ என யோசித்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் கதவில் தட்டும் சப்தம் கேட்க வெளியே இருந்து திறந்து விடுவார்கள் என நினைக்க, அதுவும் நேரம் கடந்து கொண்டு இருந்தது.
மசாலா அரைக்கும் அரவை மெஷினும் அங்குதான் என்பதால் சற்று நேரத்திற்கெல்லாம் நெடி துணியையும் மீறி நாசியைத் தாக்கியது. தும்மலும் இருமலும் நீயா நானா எனப்பார்க்க, மூச்சுத்திணரலை நுரையீரலுக்கு அறிமுகப்படுத்தியது சற்று நேரத்தில்.
***********************
“நந்தினி! ஆதியாவுக்கு கால் பண்ணுங்க! உள்ள என்ன நிலமையில இருக்கானு கேக்கலாம்?” சூர்யா தனது பதட்டத்தை வெளிக்காட்டாமல் நந்தினிக்குக் கட்டளையிட,
அவளும் பதட்டமாக தனது கைபேசியில் ஆதியாவின் நம்பரைத் தேட,
“ம்ப்ச்… நம்பர் சொல்லுங்க. நான் கால் பண்றே.”எனக் கேட்டான். நந்தினி ஆதியாவின் ஃபோன் நம்பரைக்கூற, இவனே அழைத்தான் அவனவள் எண்ணிற்கு.
கண்ணன் வரும்
வேளை அந்திமாலை நான்
காத்திருந்தேன் சின்னச் சின்னத்
தயக்கம் சில மயக்கம் அதை
ஏற்க நின்றேன்
கட்டுக்கடங்கா எண்ண
அலைகள் றெக்கை விாிக்கும்
ரெண்டு விழிகள் கூடுபாயும்
குறும்புக்காரன் அவனே
கண்ணன் வரும் வேளை
நான் காத்திருந்தேன்.
பாடல் வரிகள் ஒலித்தது என்னவோ நந்தினியின் கைப்பைக்குள்ளிருந்து தான்.
சாப்பிட்டவுடன் இவளிடம்தான் தனது கைபேசியை கொடுத்து சென்றிருந்தாள். பதட்டத்தில் அதுகூட நந்தினிக்கு நினைவில் இல்லை.
“சார்… அவளோட ஃபோன் எங்கிட்ட தான் இருக்கு.” என்று கூறியவாரே எடுத்துப் பார்த்தவள், விழிகள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிந்தது ஆதியாவின் கைபேசியில் தெரிந்த தொடுதிரையின் காலர்பிக்சரைப் பார்த்து.
“ப்ப்ச்ச்… இதையும் எடுத்துட்டுப் போகலயா?” சலித்துக் கொண்டான்.
“சார்… இன்னொரு தடவை… கால் பண்ணுங்க!” நந்தினி தயங்கியபடியே கேட்க, பொசுக்காத குறையாகப் பார்த்து வைத்தான்.
“சார்… ப்ளீஸ்…”
அவளது முகமாற்றத்தைக் கவனித்து விட்டு அவனும் அழைப்பு விடுக்க, ஃபோனை சூர்யாவிடமே கொடுத்தாள்.
பார்த்தவன் விழிகளும் நங்கூரம் போட்டது தொடுதிரையில். கையில் நழுவிய ஃபோனை இறுக்கிப் பிடித்தான்.
என்றாவது ஒருநாள் தன்னவன் அழைப்பான் என்றெண்ணி அவனுக்காகவே பிரத்யேகமாக செட்செய்யப்பட்ட பாடலும், காலர் பிக்சரும் தொடுதிரையில், ‘கண்ணா’ என்ற பெயரோடு தெரிய,
இதோ அவளுடைய கண்ணன் அழைக்கிறான். அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவளோ….
அதிர்வலைகள் அவனது கையிலிருந்த கைபேசியில் மட்டுமல்ல… அவனது இதயக்கூட்டிலும். குழப்ப வட்டம் கரைமுட்டி நின்றது.
இத்தனை நாட்களாக தனது நிலைக்குக் காரணகர்த்தாவும், சற்றுமுன் ஆதியா வீட்டில் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கெல்லாம் இதோ விளக்கம் என பொழிப்புரை எழுதிக் கொடுத்தது… திருமணத்தன்று எடுக்கப்பட்ட நிழற்படம்.
இறுக்கிய முடுச்சுகள் படபடவென விடுபட்ட உணர்வு அவனது மூளைக்குள்.
எப்படி இது சாத்தியம், என்ற சாத்தியமில்லாத ஒன்று ஆனால் சத்தியமான உண்மை அவனது நினைவில் நினைவில்லாமல். வினாக்குறியோடு, வியப்புக்குறியும் சேர்ந்து கொள்ள, ‘இவள் உன்னவள்.’ என்ற அறிகுறியே இரண்டையும் மகிழ்ச்சிக்குறியாக்கியது.
தன்கை தோளோடு அணைத்து நிற்க, மார்பில் தனது கைவிரல் மோதிரத்தோடு புதுமஞ்சள்கயிறு துவண்டுகிடக்க, பூரித்த முகமாய் ஏறிட்டு தன்முகம் பார்த்தபடி தன்னவள் முகம்.
அதற்குள் கதவின் லாக் உடைக்கப்பட, கதவின் அருகிலேயே சுருண்டு கிடந்தவளைப் பார்த்தவன் உள்ளம் பதறியது.
“காரை டார்ன் பண்ணிவைக்க சொல்லுங்க நந்தினி!” என உத்தரவிட்டு உள்ளே விரைந்தவனது பதட்டத்தைப் பார்த்து,
“என்னமோ தாம்பொண்டாட்டி மாதிரி இவ்வளவு பதட்டமாப் போறாரு?” ராகவன் பேச்சில் எள்ளல் துள்ள,
“நீங்க சொன்னதுதான் உண்மையா இருக்கும்னு நினைக்கிறேன் ராகவன்!” என்றாள் நந்தினி அதிர்ச்சி விலகாமல்.
துவண்டு கிடந்தவளைப் பார்த்தவன், வாரி அள்ளிக் கொள்ள, அவனது சட்டைக்காலரைப் பற்றியவள், பெருமூச்சு வாங்க,
“வர்றதுக்கு… இவ்…வளவு… நேரமா… கண்ணன்?” மூச்சு வாங்கியவாறே மயங்கிச் சரிந்திருந்தாள் அவன் மார்பின்மீதே.
“தியா!” என்றது அவனது இதழ்களும் அவனே அறியாமல்.
********************
முகம் முழுதும் சிவந்து, கன்னம் முழுதும் கணணீர்க் கோடுகள். வெளுத்துப்போன தாலிக்கயிறு அவளது மார்புமீது படர்ந்து கிடக்க, அதைப்பார்த்தவன், ‘தாலி கட்டியிருக்கிறேன். ஆனால் நினைவில் இல்லை. எங்கே? எப்படி? எப்பொழுது?’ என யோசிக்க,
அவளது இடக்கையில் கட்டியிருந்த சாமிக்கயிறு, “தாலி கட்டின உன்னைத் தவிர, இவள் உன் மனைவி என்பது எங்க எல்லோருக்கும் தெரியும்.” என்று கேலி பண்ணி சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு.
அருகில் இருந்த மருத்துவமனையிலேயே முதலுதவிக்கென சேர்த்திருந்தான். மூச்சுக் காற்றுக்கென ஆக்சிஜன் பொருத்தப்பட்டு படுத்திருந்தவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதற்குள் சண்முகமும் மற்ற அனைவரும் வந்திருக்க, யாரிடமும் எதுவும் பேசவில்லை.
“கண்ணா!” என அருகில் வந்த லஷ்மியை கைகாட்டி நிறுத்தினான்.
“எதுவா இருந்தாலும் முதல்ல இவ கண்ணு முழிக்கட்டும்! பேசிக்கலாம்!” என்றான். முகத்தில் அவ்வளவு இறுக்கம்.
விஷ்வா காரை ஓட்ட ஆதியாவின் வீட்டிற்கு அனைவரும் திரும்பினர். அது மல்டிப்ளக்ஸ் ஹாஸ்பிடல் இல்லை என்பதால் தேவைக்கான வைத்தியம் மட்டுமே பார்த்து வீட்டுக்கு அனுப்பினர். பின் இருக்கையில் லஷ்மி யின் மடியில் படுத்துக்கொண்டு வந்தவளை, காரை விட்டு இறங்கியவன், காரின் பின் கதவைத் திறந்து தூக்க முற்பட, “நானே இறங்கி வர்றேன்.” என்றவளை, வழிவிட்டு விலகி நின்றான்.
இறங்கியவள் தடுமாற, தாங்கிப் பிடிப்பான் என நினைக்க, அவனோ கைகட்டி வேடிக்கை பார்த்தான்.
“ரெண்டு பேரும் வெளியவே நில்லுங்க ஆதிம்மா!” இருவரிடமும் கூறிவிட்டு உள்ளே சென்றவர், சிறிது நேரத்தில் ஆரத்தி தட்டோடு வெளிவந்தார்.
இருவருக்கும் ஆராத்தி சுற்றி திருஷ்டி கழித்தவர்,
“ரெண்டு பேரும் வலது காலை எடுத்து வச்சு உள்ள வாங்க!” என இருவரையும் உள்ளே அழைக்க, திரும்பி அவன் பார்த்த பார்வையை, விஷ்வா அசட்டு சிரிப்போடு எதிர்கொண்டான்.
“ம்மா! கொஞ்சம் நிக்க சொல்லுங்க!” என சொல்லிக்கொண்டே வேகமாக தேவி வர,
“ஏன்டீ… புள்ளைகள வாசல்லயே நிப்பாட்டுற?” லஷ்மி அதட்ட,
“ஆரத்தி தட்டுல மாமா காசு போடணும்ல. மச்சினிச்சி காசு எங்களுக்கு வேணும்.” தேவி ஆரத்தி பணம் கேட்டு நின்றாள்.
“கண்ணா எப்போடீ உங்களுக்கு மாமன் ஆனான். அவன் எனக்கு எப்பவும் மகன் தான். உங்களுக்கு அண்ணன் தான்.” தாயாக லஷ்மி பேச,
“அதெல்லாம் செல்லாது. அவரு எப்ப, அப்பாவ மாமான்னு கூப்பிட்டாரோ அப்பவே நாங்க எல்லாம் மச்சான்ஸ், கொழுந்தியாள்ஸ் தான்.” சதீஷ் தேவிக்கு சப்போர்ட்டுக்கு வர,
“ஆமா… நீங்க வேணா கண்ணாவ மகனா வச்சுக்கோங்க. நாங்க சூர்யப்ரகாஷ மாமாவா வச்சுக்கறோம்.” தேவி அவனைப் பாகம் பிரிக்க,
“ஆமாமா… கண்ணா அண்ணா கஞ்சூஸ். அஞ்சு ரூபாய்க்கும் ஆயிரம் கணக்கு பாப்பாங்க. சூர்யா மாமா தான் கெத்து.” சதீஷ் கூறிவிட்டு தேவிக்கு ஹைஃபை கொடுக்க,
“அடப் பக்கிகளா, தட்டுல போடுற ஒரு நூறுரூபாய்க்கு எம்மகனையே முறைய மாத்துறீங்களா?”
“ம்மாஆ… என்னாது நூறு ரூபாயா? நாங்க கேட்டது உங்க மகன் கண்ணாகிட்ட இல்ல. எங்க மாமா தி க்ரேட் சூர்யப்ரகாஷ் கிட்ட. என்னா… மாமா… நான் சொல்றது கரெக்டா?” சதீஷ் அவனையும் சப்போர்டடுக்கு அழைக்க,
“டேய் சூர்யா! ஒரு மச்சினிச்சி, ஒரு மச்சான்னாலே களைகட்டும். உனக்கு ஒவ்வொன்னும் ஏழெட்டு இருக்குடா. உம்பாடு திண்டாட்டம் தான்.” விஷ்வா, தன் நண்பனை கேலி பேசி நிலைமையை சகஜமாக்க முயற்சித்தான்.
தன் வாலட்டிலிருந்து சில ஐநூறு ரூபாய்களை எடுத்து தட்டில் போட்டான்.
“சரி… சரி… இப்பயாவது பிள்ளைகள உள்ள விடுங்க!” லஷ்மி அதட்ட,
தன்னவனோடு தன்வீட்டில் அடியெடுத்து வைத்தாள் ஆதியா.
“ஐய்ய்…! கண்ணா அண்ணா வந்திருக்காங்க.” சில பொடுசுகள் கூச்சலிட,
“ஃபாரின்ல இருந்து எப்பண்ணா வந்தீங்க?” சில சிறுசுகள் அவனிடம் கேள்விகளைக் கேட்க,
“ஏன் எங்ககிட்ட சொல்லாம போனீங்க? உங்ககிட்ட பேசமாட்டோம்.” சில வாண்டுகள் செல்லக்கோபம் காட்டி முகம் திருப்ப, அவனோ திரும்பி ஆதியாவைப் பார்த்து முறைத்தான்.
“சிஸ்டர்… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க! மத்ததெல்லாம் காலைல பேசிக்கலாம்.” விஷ்வா அவளை உள்ளே அனுப்ப முயற்சி செய்ய,
அவள் தன்னவனைப் பார்த்து தயங்கி நின்றாள்.
“அதான் உடன்பிறப்பு சொல்றார்ல. போய் ரெஸ்ட்டெடு.”
என்க, அவளும் தயக்கத்துடனே தனதறைக்கு சென்றாள்.
“டேய்… சூர்யா! தேவையில்லாம கோபப்படாதடா! சிஸ்டர் ஏற்கனவே இவ்ளோ நாளா உன்னப்பிரிஞ்சு நொந்து போயிருக்காங்க.”
அவன் சொல்கேட்டு சூர்யா குமைந்து போனான் தனக்குள். தன்னவளின் நிலைமை பற்றி தனக்கு இன்னொருவர் சொல்லித் தெரிய வேண்டியுள்ளது.
“தேவையில்லாம… ம்ம்ம்… என்னைப்பத்தி யாருமே யோசிக்கல… இல்லடா?”
“அப்படி இல்லடா…” விஷ்வா விளக்கம் சொல்ல வர,
“வேணாம்டா… என் நிலமைய சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க முடியாதுடா. இவளுக்காவது நீங்க எல்லாம் இருந்திருக்கீங்க. ஆனா நான்…?” ஆற்றாமையோடு சொல்லிவிட்டு செல்பவனை இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்வா.
வெகு நாட்கள் கழித்து பிள்ளைகளுடன் இரவு உணவு கேலியும் கிண்டலுமாய்ப் போனது அவனுக்க. மங்கையற்கரசியும் விபரம் அறிந்து மருமகளைப் பார்க்க பதட்டத்துடன் வந்திருந்தார். தன் தாயிடமும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
எதுவும் நினைவில் இல்லை எனினும் பிள்ளைகள் பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாகக் கூற ஓரளவிற்கு நடந்தவற்றை ஊகிக்க முடிந்தது அவனால்.
பிள்ளைகளோடு சாப்பிட்டு முடித்தவன், ஆதியாவின் அறைக்கு செல்ல, அங்கு உணவும், மருந்தும் லஷ்மி அவளுக்குக் கொடுக்க, மறுத்தவளை ஒரு பார்வையால் அடக்கியவன், அருகே வந்து மாத்திரைகளை உடைத்துக் கொடுக்க, வாங்கியவள் மறுக்க முடியாமல் முழுங்கி விட்டு படுத்துக் கண்மூடிக் கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்க்கும் தைரியம் இப்பொழுது அவளிடம் இல்லை.
மங்கையற்கரசியும், விஷ்வாவும் காலையில் தாத்தாவுடன் வருவதாகக் கூறிச் சென்றனர்.
இரவு அவரவர் படுக்கைக்குச் சென்றுவிட, தூக்கம் தொலைத்த நிலையில் பவளமல்லித் திட்டிற்கு வந்தான்.
“என்னங்க ண்ணா உங்க மீட்டிங் பாய்ன்ட்டுக்கு வந்தாச்சு போல?”
சதீஷ் கேட்டுக்கொண்டே அவன் அருகில் வந்தான்.
“சதீஷ், ஒழுங்கா கூப்பிடு! இப்ப அண்ணனா? மாமனா?” கேட்டுவிட்டு சிரிக்க,
“அது நேரத்தைப் பொறுத்தது.”
“இப்ப என்ன நேரம் சதீஷ்.”
“இப்ப கதைசொல்லும் நேரம். உங்க லவ்ஸ்டோரிய உங்களுக்கே சொல்லப் போறேன். உங்களுக்குள் காணாமல் போன பக்கங்களைத் தேடித்தறப் போகிறான்… உங்கள் சதீஷ். “
“இன்ட்ரஸ்டிங்.”
“எக்ஸாட்லி.” அவன் கைவிரித்து, தோள்களைக் குலுக்கி சொன்னவிதம் சிரிப்பை வரவழைத்தது.
“ஆமாண்ணா, இப்ப அக்காவும் தூங்கி இருக்க மாட்டாங்க. ஏன்னா இந்நேரமெல்லாம் இங்க தான் உக்காந்திருப்பாங்க. உங்களப் பாக்க பயந்துதான் தூங்குறமாதிரி படுத்திருப்பாங்க.”
“ஏன்டா நான் அவ்ளோ ரூடாவா நடந்துருக்கே?”
“அவ்ளோ ரொமான்டிக்கா நடந்திருக்கீங்க. முறைச்சுப் பாத்தே ரொமான்ஸ் பண்ண ஆளு நீங்களாத்தான் இருப்பீங்க ண்ணா.” விடலைப் பருவத்திற்கே உரிய துடுக்குத்தனத்தோடு சதீஷ் கூற,
அவன் சொல்வதைத் கேட்டு வாய்விட்டு சிரித்தான்.
அவன் இங்கு வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டவன்,
இதோ மறுநாள் அனைவரையும் அமரவைத்து கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறான்.
‘ஆலமரமும் சொம்பும் தான் மிஸ்ஸிங்.’ என நினைத்த விஷ்வா, “அமைதியாவே இருந்தா என்ன அர்த்தம்?” என சூர்யா கேட்க,
“ம்ம்ம்…. நீ சொல்றது எல்லாம் கரெக்ட்னு அர்த்தம்.” என அனைவரின் இறுக்கத்தையும் கலைக்கும் விதமாக விஷ்வா பதிலுரைத்தான்.
“டேய் விஷ்வா! நீ பேசாத! அம்மா தான் விவரம் புரியாதவங்க. உனக்கு எங்கடா போச்சு. நீயாவது சொல்லி இருக்கலாம்ல.” என தன் கோபத்தின் முனையை விஷ்வாவை நோக்கித் திருப்பினான்.
“டேய் தம்பி! நான் தான்டா சொல்ல வேண்டாம்னு சொன்னே. விஷ்வாவ ஏன் கோபிக்கிற.”
“உங்க கிட்ட என் கோபத்தை காட்ட முடியல இல்ல. அதான் அவங்கிட்ட காட்டுறே. உங்க பயம் என்னம்மா? எங்க மறந்ததை ஞாபகப்படுத்தினா ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸாகி ரெண்டுக்கும் இடையில குழம்பி கிழிச்சிட்டுத் திரிஞ்சிறுவேன்னா.” கோபத்தின் வீரியம் வார்த்தைகளில் வெளிப்பட,
“என்னப்பா இப்படியெல்லாம் பேசுற?” என மங்கையற்கரசி மகனின் கோபம் தாளாமல் கண்ணீர் வடிக்க, சூர்யாவிற்கு தான் மனம் நொந்து போனது.
“கவலைப்படாதீங்கம்மா. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. ஏன்னா இவளைப் பாத்ததுல இருந்து… இவ பக்கம் மட்டும் ஏன் நம்ம மனசு அலைபாயுதுன்னு தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும். அடுத்தவன் பொண்டாட்டி மேல மனசு ஈடுபடுதேனு எந்த அளவுக்கு எமோஷனல் ஸ்ட்ரெஸ் ஆனேன் தெரியுமா? அதுல எல்லாம் குழம்பாத மூளை… பெருசா உண்மை தெரிஞ்சு யோசிக்கறதால குழம்பிறாது.”
அவனும் தான் அவளைப் பார்த்தில்இருந்து நரக வேதனை என்றால் என்ன என்பதை அனுபவித்துக் கொண்டிருக்கிறானே. அவளைத்தன் மனதை விட்டு விலக்கவும் முடியாமல், விலகவும் முடியாமல் எவ்வளவு கொடுமை அது.
அவளது கண்களில் இவனுக்கான மையல் தெரியும் பொழுதெல்லாம் அவளையும் தவறாக எண்ணி… இப்பொழுது நினைத்தாலும் உள்ளம் கூசிப்போகிறதே. ச்ச்சே… என எண்ணும்படியாக எத்தனை மன உளைச்சல.
“வேணும்னா நீங்க பாக்குற சினிமா, சீரியல்… இல்லைனா படிக்கிற கதைகள்ல வர்ற மாதிரி இன்னொரு தடவை எங்கேயாவது போய் மண்டைய உடைச்சுக்கிட்டு வரவா? அப்பவாவது பழைய ஞாபகம் வருதான்னு பாக்கலாம்.”
அன்னையிடம் தன் கோபம் முழுமையும் கொட்டிக் கொண்டிருக்க, மருமகளின் கண்ணீர் கண்டு தாளாதவராக,
“டேய் நிறுத்துடா! வெளி உலகம் தெரியாம உலகமே வீடுன்னு இருந்த பிள்ளை அது. எங்கே நீ தனக்கும் இல்லாம, ஆதியாவுக்கும் இல்லாம போயிருவியோன்னு பயந்துருக்கு. எந்தப் பொண்ணா இருந்தாலும் தான் பெத்த பிள்ளையோட நல்லதைத்தான் பாப்பாங்க.” என மருமகளுக்கு மாமனார் வக்காலத்து வாங்க,
“தாத்தா, அவங்க உங்ககிட்டயும் தான் மறச்சுருக்காங்க.”
“அதுக்கு உங்க தாத்தா உடல்நிலை தான் காரணம் சூர்யா. உங்க அப்பா எப்பவுமே சொல்லுவாரு. எங்க அப்பா வெளில பாக்கதான் சிங்கம் மாதிரி கம்பீரமாத் தெரிவாரு. ஆனா குழந்தை மாதிரி ரொம்ப பூஞ்சை மனசுன்னு. அதே மாதிரி தான் உன்னோட ஆக்சிடென்ட் பத்தி கேள்விப் பட்டவுடனே நெஞ்சுவலி வந்து விழுந்துட்டாருடா. இதுல உனக்கு அம்னீஷியா. பழசெல்லாம் மறந்துட்டேனு சொல்லி மேலயும் பயமுறுத்து வேண்டாம்னு தாம்ப்பா சொல்லல.”
“அதுக்குப் பின்னாலயாவது சொல்லி இருக்கலாம்ல.”
“ஆக்சிடென்ட்டையே மறச்சதால எல்லாத்தையும் மறைக்க வேண்டியதாப் போச்சு.”
அவரது உடல் நலம் கருதி மகனின் விபத்தை மறைத்தவர், பிறகுவந்த நாட்களிலும், விபத்தைப் பற்றி கூறினால், அனைத்தையும் கூற வேண்டியது வரும். எப்பொழுது மகனுக்கு நினைவு திரும்புகிறதோ அப்பொழுது அவரே தெறிந்து கொள்ளட்டும் என விட்டு விட்டார்.
“ம்மா… நிஜவாழ்க்கையில எல்லாம் சினிமால வர்ற மாதிரி மறுபடியும் அடிபட்டாலோ, ஆக்சிடென்ட் ஆனாலோ அம்னீசியால நடந்தது எல்லாம் நினைவு திரும்பாதும்மா. நாமதான் நினைவுப் படுத்தணும். அதுக்கு தான் தெரபி ட்ரீட்மென்ட் இருக்கு. முடியலையா அப்படியே விட்டுறணு ம்மா.” என்றான் ஆற்றாமையோடு.
“அவங்களுக்கு தான் விபரம் புரியாம பயந்துகிட்டு இருந்தாங்கனா, உங்க ரெண்டு பேத்துக்கும் அறிவு வேலை செய்யலயா?” என ஆதியாவிடமும், விஷ்வாவிடமும் மீண்டும் தன் கோபத்தைத் திருப்ப,
“ஏன்டா கேக்க மாட்ட? முதல் நாள் இழுத்துட்டுப் போயி கோயில்ல வச்சு தாலியக் கட்டிட்டு, ஆப்ரேஷன் முடிஞ்சதும் சிஸ்டர் இருக்க பக்கம் கூடத் திரும்பலயேடா. மூன்றாம்பிறை ஸ்ரீதேவி யாவது சீனுவுக்கு ஒரு சாப்பாடு பொட்டலத்தயாவது தூக்கிப் போட்டாங்க. ஆனா அந்த ரூம்ல எல்லோர் கூடவும் சிஸ்டரும் தான் நின்னாங்க. யாருன்னு தானே கேட்ட.” விஷ்வா கேலி போல் கூறினாலும் அதில் இருந்த வேதனை அவனையும் சுட்டது.
அவன் ஆதியாவின் முகம் பார்க்க, ‘இப்படி ஒரு பார்வை மட்டுமாவது அன்று பார்த்திருந்தால் கூட உன்கூடவே வந்திருப்பேனே.’ என்றது அவளது பார்வை.
“இப்ப என்ன? உன்ன லவ் பண்ணியது என் நினப்புல இல்ல. அதுதானே உன் பிரச்சினை. ஆனா உன்னப் பாத்துல இருந்து நீ எனக்கு சொந்தமில்லயோன்னு மனசு தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்.”
சற்று அமைதியானவன்,
“எனக்கு எங்க அம்மா கருவறையில் இருந்தது கூடத்தான் நினப்புல இல்ல. அதுக்காக நான் அவங்க மகன் இல்லைனு ஆகிறுமா. இல்ல எனக்கு அவங்க மேல பாசம் வராதா?” ஆழ்ந்த குரலில் அவன் கூற அந்த வார்த்தைகள் அவனவளை கீறிப்பார்த்தது.
சொற்களைக் கற்களாய் வீசி, தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான். நான் உன்னைக் காதலித்த காலம், உன் மனக்கருவரைக்குள் இருந்த காலம். எனக்கு எப்படி நினைவு இருக்கும். அன்பும், காதலும் என்ன வாங்குற பொருளா? இந்தானு எடுத்துக் காமிக்க? இதைவிட சிறப்பாக எப்படி அவன் கொண்ட காதலை அவளுக்கு விளக்கிக் காட்டிவிட முடியும். உயிரும் உருவமுமாக பிரசவித்தது அன்னை என்றால், தன்னைக் காதலாக மனக்கருவரை சுமந்து உணர்வு கொடுத்தவள் நீயடி என்றான்.
அவன் சொல்கேட்டு மனம் தாளாமல் கண்ணீர் வடிக்க, அதைப் பார்த்து கோபம்தான் வந்தது அவனுக்கு.
அவனின் காதல் அதிகப்படியாக வெளிப்படுவது எப்பொழுதும் அவள்மீது காட்டும் கோபத்தில் தானே.