💙இருளை ஈர்க்கும் ஒளி💙

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

 

ஈர்ப்பு -29

தவறிழைத்தவன் எப்பொழுதுமே தப்ப மாட்டான் நிச்சயம் அவனுக்கு தண்டனை கிடைக்கும்…

அது சட்டரீதியாகவும் இருக்கலாம் அல்லது அவனின் விதிப்படியும் இருக்கலாம்

இவர்கள் முடிவெடுத்ததை போலவே, சங்கரை குடும்பத்தோடு இங்கே வர வைத்தார்கள்.

தன்னை கைது பண்ணாமல் விட்டதே பெரிய விஷயம் என்று இவர்கள் கூறிய அனைத்திருக்கும் அவனும் “சரி சரி” என்று தலையாட்டினான்.

அருணின் குடோன்களில் ஒன்றில், இவனையும் இவன் குடும்பத்தாரையும் தங்க வைத்தார்கள். அவர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் அருண்னே பார்த்துக் கொண்டான்.

ராஜ் இந்த கேஸுக்கான எஃப்.ஐ.ஆர் அனைத்தையும் தயார் செய்தான்.

ஐஜியை பார்த்து அவரிடமும் இந்த கேஸ் பற்றிய அனைத்து விவரத்தையும் கூறினான். ஏனென்றால், அவன் கைது செய்யப் போகும் அந்த நபர், யார் மீது அவன் வழக்கு தொடுத்து இருக்கிறானோ அந்த நபர், சமுதாயத்தில் ஒரு பெரிய இடத்தில் இருப்பவரின் வாரிசு. எனவே, ஸ்பெஷல் பர்மிஷன்கள் அனைத்தையுமே வாங்கி வைத்துக் கொண்டான் ராஜ்.

ஒரு நாள் திடீரென்று அந்த பெரிய நபரின் வீட்டிற்கு சென்று, அவர் மகனை கைது செய்தான்.

முதலில் மகனை ஜாமினில் எடுக்க, முயற்சி செய்து கொண்டிருந்தவர்,

அவன் வர்ஷாவைக் கொல்ல நினைத்தான் என்ற விவரம் தெரிந்தவுடன் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

அந்த பெரிய நபர் யார் என்றால், வர்ஷாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தியின் நண்பரான ஆனந்தன் என்பவர்.

ஷ்யாம் கூட, இவரின் கம்பெனிக்கு தான் ப்ராஜெக்ட் செய்ய சென்றான்.

(ஏழாம் அத்தியாயத்தில் இதைப் பற்றி குறிப்பிட்டு இருப்பேன்)

அவரின் மகனான ‘வைபவ்விற்க்கு, வர்ஷாவை கட்ட வேண்டும்’ என்று இவருக்கு ஆசை.

ஆனால், அவனோ கடைந்தெடுத்த அயோக்கியன் புகை,குடி மற்றும் பெண்கள் என அனைத்து பழக்கங்களும் உண்டு.

கிருஷ்ணமூர்த்தியும் அவனைப் பற்றிய விவரம் அறிந்ததால், அவனுக்கு தன் பெண்ணை கட்டி தர விரும்பவில்லை.

வைபவ்விற்க்கு நேர் மாறாக அவனின் தந்தை மிகவும் நல்லவர். தனக்கு ஒரு பெண் இருந்தால் இவன் போன்றவனுக்கு கட்டிக் கொடுப்போமா என்று அவரும் நண்பரை தொல்லை செய்யவில்லை.

ஆனால், தன் தந்தையின் இந்த எண்ணத்தை அறிந்த வைபவ் முதலில் எதுவும் நினைக்கவில்லை என்றாலும், ஒரு விசேஷத்தில் வர்ஷாவை பார்த்தவுடன், அவளின் அழகில் மயங்கினான் ‘அவளை எப்படியேனும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று நினைத்தான்.

இந்த முடிவு காதலினால் வந்தது அல்ல, அவளும் பணக்கார வீட்டுப் பெண், தங்களை விட அவர்களின் சொத்து மதிப்பு அதிகம் என்பதும் அவனுக்கு தெரியும், அவளும் அழகாக இருக்கிறாள். இப்படி நிறைய யோசித்து அவன் வர்ஷாவை அடைய விரும்பினான்.

‘இவள் என் மனைவி என்று வெளியே சொல்லிக் கொள்ளும்போது’, இவனுக்கு கெத்தாய் இருக்கும் இல்லையா.

இப்படி பலவாறு யோசித்து, அவளை திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

இப்படியாக அவளை மீண்டும் சந்திக்க ஏதேனும் வாய்ப்பு அமையாதா? என்று அவன் யோசித்துக் கொண்டிருந்த நேரம், ஆபீஸில் ஏதோ பூஜை என்று அவர் நண்பரான ஆனந்தனையும் அழைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி.

தன் தந்தையுடன் இதுதான் சமயம் என்று அவனும் ஒட்டிக்கொண்டு வந்தான். வந்த நிமிடம் முதல் அவன் பார்வை முழுதும் வர்ஷாவையே மொய்த்து கொண்டிருந்தது.

பூஜை சாமான் ஏதோ வேண்டும் என்று கேட்க, இவள் அதை எடுக்க உள்ளே சென்ற நேரம், இவனும் பின்னோடு சென்றான்.

முதலில் அவளிடம் காதலாய் பேசி தான் அவளை சரிகட்ட நினைத்தான். ஆனால், அவள் அதற்கு ஒத்துவரவில்லை என்றவுடன், அவள் அருகாமை அவன் எண்ணத்தை மாற்ற, அவளை வலுக்கட்டாயமாக முத்தமிட நினைத்தான்.

அதில் வெகுண்டவள், அவனை கன்னம் பழுக்க ஒரு அறை அறைந்தாள்.

அதில் கோபமானவன், “உன்னை எப்படியும் அடைந்தே தீருவேன்” என்று அவளிடம் சபதம் போட்டு சென்றான்.

அவன் எண்ணம் இப்படி இருக்க, ஒரு நாள் அவன் தந்தை எதர்சையாக அவனின் தாயிடம் “வர்ஷாவிற்கு வரன் அமைந்து விட்டது” என்று கிருஷ்ணமூர்த்தி கூறியதாய் கூறினார்.

இதைக் கேட்டவனுக்கு ஆத்திரம் உச்சியை அடைந்தது. “அவள் யாரை திருமணம் செய்யப் போகிறாள்” என்று அவன் தந்தையிடம் ஒன்றும் தெரியாதவன் போல் அப்பாவியாய் கேட்டான்.

மகனின் எண்ணம் புரியாதவர் சாதாரணமாகவே “ராஜேஷ் அவன் ஒரு போலீஸ் ஏ.சி.பி” என்பதை கூறினார்.

‘அவனுக்கு இல்லாதது யாருக்கும் கிடைக்கக்கூடாது’ என்ற எண்ணம் மனதில் எழ, அவளை இந்த உலகத்தை விட்டே அனுப்ப நினைத்தான்.

அதன் பின் நடந்தது என்ன என்பது உங்களுக்கே தெரியும்.

இருவேறு மனிதர்கள் ஒருவன் அவளை உயிராய் நேசிக்கிறான், இன்னொருவன் அவளின் அழகை அடைய துணிகிறான், காதலே ஜெய்க்கும் என்பதை, இன்னும் தெரிந்துக்கொள்ளவில்லை இவனை போல் சிலர். பட்டால் தான் புரியும்…

***

சிறையில்….

‘எப்படியும் தன் தந்தை தன்னை வெளியே எடுத்து விடுவார்’ என்ற நம்பிக்கையில் திமிராய் தான் நடந்து கொண்டிருந்தான் வைபவ்.

ஆனால், தான் கைதாகி வந்து ஒரு நாள் முழுதாக முடிய போகும் தருவாயிலும், அவனை ஜாமினில் எடுக்க யாரும் வராததை கண்டு சிறிது பயந்தான்.

இப்படி அவன் எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு காவலர் வந்து, அவனை பார்க்க அவன் தந்தை வந்திருப்பதாய் கூறினார்.

சிறிதாய் எட்டிப் பார்த்த பயம் எங்கோ சென்று ஒளிந்துக்கொள்ள, தந்தை வந்ததில் அதே திமிருடன் எழுந்து சென்றான்.

“வாங்க பா எங்கடா இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் ஆள காணோமேன்னு பாத்துட்டே இருந்தேன்”.

அவன் சொன்னது எதையுமே காதில் வாங்காதது போல், அவன் மீது சுமத்தப்பட்ட குற்றம் உண்மையா..? என்பதை அவர் விசாரித்தார்.

அவனும் ஆணவத்துடன் ‘ஆம்’ என ஒத்துக் கொண்டான்.

“உன்னை நலம் விசாரிக்கிறதுக்கோ, இல்ல உன்னை வெளியே எடுக்கறதுகோ நான் வரல, ஒரு சின்ன நப்பாசை, இதெல்லாம் நீ பண்ணி இருக்க மாட்டேன்னு, இப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு”.

“ஒரே புள்ளையாச்செனு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாத்தியா அது என் தப்பு. தருதலையா சுத்தும் போது எவ்வளவோ உன்னை திருத்த நினைச்சேன். ஆனா நீ திருந்தல”

“எப்ப ஒரு பொண்ண கொல்ற அளவுக்கு போயிட்டியோ, இனி நீ இந்த மாதிரி ஜெயில்ல கிடந்தால் தான் திருந்துவ, செஞ்ச தப்புக்கு தண்டனைய அனுபவிச்சிட்டு வா” என்று விட்டு திரும்பியும் பாராது விறு விறுவென சென்று விட்டார்.

***

வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றது, இவனின் மீது ஐபிசி 307 சட்டத்தின் கீழ் கொலை முயற்சி கேஸ் பதிவாகி இருந்தது.

அந்த சர்வீஸ் சென்டரில் இருந்த சிசிடிவி கேமராவில் இவன் ஷங்கரிடம் பேசிய பதிவுகள் இருந்தது.

பெரிதாய் அதில் ஒன்றுமில்லை என்றாலும், அன்று நிகழ்ச்சி நடந்ததற்கு முன்தினம் இவர்கள் சந்தித்துக் கொண்டது, அந்த பதிவில் இருந்து தெரிந்தது.

பின் சர்வீஸ் சென்டரின் வெளியே இருக்கும், சிசிடிவி கேமராவில் சங்கர் யாரிடமோ தொலைபேசியில் பேசியதும், அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது, யாரோ ஒரு நபர் வந்து அவன் கையில் ஏதோ கவரை திணித்து விட்டு செல்வதும், உணர்ச்சி மிகுதியில் அந்த கவரில் இருந்த ஒரு கட்டை வெளியே எடுத்து, அவன் பார்த்ததில் அந்த கவரில் உள்ளது பணம்தான் என்பதும், வீடியோ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது.

சங்கர் நேரிலேயே வந்து அவனின் சாட்சியை கூறினான்.

இப்படி அனைத்துமே வைபவ்விற்க்கு எதிராக இருந்தது. எனவே, அவனின் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

ஆகவே வைபவிற்கு கொலை முயற்சிக்கான அதிகபட்ச தண்டனையான பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், இனி வர்ஷாவுக்கு எவ்விதமான ஆபத்து என்றாலும் அதற்கு ‘இவன் தான் காரணம் என்று கருதி இவன் தண்டனை காலம் அதிகரிக்கும்’.

அப்படி தண்டனை காலத்திற்குப் பின் இந்த மாதிரி ஏதாவது செயல் நடந்தால், மீண்டும் சிறையில் அடைக்கப்படுவான் எனவும் நீதிபதி உரைத்தார்.

குற்றவாளிகள் ஜெயிலில் போடப்படுவது ஏன்? அங்கே அவர்கள் மனம் திறந்து நல்லொழுக்கம் பழகி, வெளிவரும் போது ஒரு நல்லவர்களாய் வருவார்கள் என்பது தான் சட்டத்தின் எதிர்பார்ப்பு.

ஆனால் அனைவரும் அப்படியா வருகிறார்கள்? அது அவரவரின் மனதை பொறுத்தது.

பெற்றவர்களுக்கு நல்ல பிள்ளையை வளர்க்கும் கடமை இருக்கிறது, ஐயோ! செல்லம் கொடுத்து கெடுத்து விட்டேனே என பின்னால் புலம்புவதில் எந்த நியாயமும் இல்லை.

வைபவ் பிறந்தது முதலே அவனை நேர்வழியில் நல்ல முறையில் வளர்த்திருக்க வேண்டும் அவனுடைய பெற்றோர்…அதை அவர்கள் செய்யவில்லை, இந்த கடுங்காவல் தண்டனையாவது அவனை திருத்துமா? விடை காலத்தின் கையில்.

***

பெரியவர்கள் அனைவருக்கும், இந்த விவரங்கள் அனைத்தும் வழக்கு தொடர்ந்து பிறகுதான் கூறப்பட்டது.

வர்ஷாவின் தாய், தந்தைக்கு இந்த விஷயம் எந்த அளவுக்கு துன்பத்தை கொடுத்தது என்பதை சொல்லவும் வேண்டுமா?

ஏற்கனவே ராஜை பிடித்து போய் தான் தன் வீட்டு மாப்பிள்ளை ஆக்க சம்மதித்தார்கள் கிருஷ்ணமூர்த்தி, ராதா தம்பதியினர்.

மருத்துவமனையில் அவள் உயிரை காத்து, அதற்கு காரணம் யார் என்று அறிந்து, இதோ அவனை இப்பொழுது உள்ளே தள்ளியது என இவை அனைத்தையும் கேள்வியுற்றவர்கள்,

மகளை ஒரு நல்லவனுக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்ற நிம்மதியிலும், திருப்தியிலும் இருந்தார்கள்.

வர்ஷாவின் தாய் ராதாவுக்கு தான் இன்னும் இரண்டு வருடம் திருமணத்தை தள்ளி வைப்பதில் உடன்பாடு இல்லாமல் போனது, முதலில் தன் மகள் படிக்கட்டும் என்று தான் நினைத்தார்.

ஆனால் இப்பொழுது மகளின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் பொழுது, ‘அவளை சீக்கிரமாக ராஜிற்கு திருமணம் முடிக்க வேண்டும்’ என்று தான் இவர் விரும்பினார்.

அதை வெளிப்படையாக அனைவரிடத்திலும் கூறவும் செய்தார், மற்றவருக்குமே அது ‘சரி’ என்று தான் பட்டது.

இவர்களை இவ்வாறு கூறவும் வர்ஷாவுக்கு அன்று அவன் பேசியது நினைவு வந்தது ‘இரண்டு வருடம் டைம் கொடுக்கிறேன் அதற்குப் பின்னும் தன்னை பிடிக்கவில்லை என்றால் இத்திருமணத்தை நிறுத்தி விடுகிறேன்’ என்று கூறியிருந்தான்.

அந்த இரண்டு வருடம் இன்னும் ஆரம்பிக்க கூட இல்லை அதற்குள் இவளுக்கு அவன் மீது எல்லையில்லா காதல் வந்துவிட்டது. அதை நினைத்து இப்பொழுது சிரித்துக் கொண்டாள்.

பின் ராதா, “இன்னும் இரண்டு மாதத்தில் இவளின் படிப்பு முடியுது, அது முடியவும் திருமணம் வைத்துக் கொள்ளலாமா? இன்னும் ஒரு மாசத்துல எலும்பும் கூடிடும் என்ன சொல்றீங்க?” என்று கேட்டார்.

சந்திரன், லட்சுமி தம்பதிகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் ராஜை “இப்பொழுது வைத்துக் கொள்ளலாமா?”, என்று வினவ,

இவன் வர்ஷாவை பார்த்து ‘என்ன சொல்லட்டும்?’ என்று புருவம் உயர்த்தினான்.

அதற்கு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்து, தரையில் ஏதோ முக்கியமான ஒன்றை தேடிக் கொண்டிருந்தாள் வர்ஷா.

அவளின் வெட்கத்தை ரசித்தவன் ‘சம்மதம்’ என்று தலையாட்டினான்.

***

அதன் பின் நாட்கள் வெள்ளம் வந்த நதியாய் விரைந்து ஓட, தியாவும் இன்னும் ஒரு வாரத்தில் ப்ராஜெக்ட்டை முடிக்க வேண்டிய நிலையில் இருந்தாள்.

என்னதான் ஷ்யாம் இவளை சீண்டிக் கொண்டும், வம்பு இழுத்துக் கொண்டும் இருந்தாலும், தன் ப்ராஜெக்டில் கண்ணும் கருத்துமாய் இருந்ததனாள். அவள் அதை முடித்தும் விட்டாள்.

இருந்தும் ஷ்யாமை காண வேண்டி, அவனின் சீண்டல்களை ரசிக்க வேண்டி, ஆபீசுக்கு சென்று கொண்டு தான் இருந்தாள்.

இவள் அடிக்கடி சென்று, அவனுடன் பேசுவாள். இவனுக்கும்’ இன்னும் ஒரு வாரம் தானே இங்கு இருப்பாள் அதன்பின் இருக்க மாட்டாளே’ என தோன்ற அவனும் அடிக்கடி சென்று பேசி வருவான்.

தியா வந்த இந்த ஒன்றரை மாதத்தில், அந்த ஆபீஸில் அனைவரிடமே பழகி இருந்தாள்.காலை கம்பெனியில் உள் நுழையும் போது இருக்கும் செக்யூரிட்டி முதல், மாலை அனைவரும் கிளம்பிய பின் அனைத்தையும் சரி பார்க்கும் பியூன் வரை, அனைவரிடமும் அன்பாய் இருந்தாள்.

குறிப்பா மேனேஜருக்கு, இவளின் மேல் ஒரு தனி பிரியமே வந்திருந்தது.

அதற்கு காரணம் அவர்களுக்கு பிள்ளை இல்லை என்பது தெரிய, அடிக்கடி அவரின் மனைவியை வைத்து இவர்கள் காதல் பற்றி பேசி இவரை கிண்டல் செய்வது,

நேரம் கிடைக்கும் போது அவர்கள் வீடு சென்று சிறிது நேரம் பேசி, சிரித்து, விளையாடி என நேரம் செலவழித்து விட்டு வருவாள். எனவே அவர் மனைவிக்குமே இவள்பால் அன்பு சுரந்தது.

இப்படி அனைவரையுமே தன் அன்பால் கட்டி இழுத்தாள் அவள்.

மற்றவருக்கு இந்த நிலை என்றால் இவள் மனம் கவர்ந்தவனை நிலையை கேட்கவா வேண்டும், இப்பொழுதெல்லாம் சாருக்கு கோபம் எங்கே போனதென்றே தெரியவில்லை.

இவள் அவனை நிறையவே மாற்றி இருந்தாள்.

ஏற்கனவே அவள் மீது பைத்தியமாய் இருந்தவன், அவளுடன் செலவழித்த இந்த நாட்களில் இன்னும் முழுமையாக அவளினுள் கரைந்து போனான்.

அதுவும் அவர்களின் மதிய சாப்பாட்டு நேரம், இருவருக்குமே ரசனையாய், மகிழ்ச்சியாய் கழிந்தது.

இந்த ஒரு வாரமும் அவனே அவளை ஆபீஸ்க்கு அழைத்து வருவதாய் கூறியிருந்தான்.

நாட்கள் முடிய முடிய, அவளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், என்று இவனுக்கு தோன்றியது.

அதன்படி அன்று காலை அவளை அழைத்துச் செல்ல, அவள் வீடு நோக்கி வந்திருந்தான் அவன்.

அன்று பார்த்து இரவெல்லாம் கனவில் ஷ்யாமுடன் காதல் செய்து கொண்டிருந்தவள், சரியாய் தூங்காமல் விடியார் காலையில் தான் நன்றாய் தூங்கி இருந்தாள்.

வீட்டிற்கு வந்தவனுக்கு உட்கார வைத்து, தட்டில் இரண்டு கப் காபி எடுத்து வந்தார் லட்சுமி.

ஒன்றை இவன் கையில் கொடுத்து விட்டு, மாடி ஏறப்போனார்.

“காபி யாருக்கு அத்தை?”.

வர்ஷாவுக்கும், ராஜுக்கும் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவெடுத்த நாளிலிருந்து இவனும் தியாவின் தாய், தந்தையை ‘அத்தை, மாமா’ என்று தான் அழைத்து வருகிறான்.

“ராஜ் தான் கேட்டான் பா’.

“நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க நானே எடுத்துட்டு போய் அவனுக்கு கொடுத்துடறேன்”.

‘சரியென’ அவரும் அவனிடத்தே காப்பியை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

மேலே சென்று அவன் ராஜின் அறை கதவை திறந்து உள்ளே செல்ல, போடவேண்டிய காக்கிசட்டையை அயன் பண்ணிக் கொண்டிருந்தான் அவன்.

“வாடா மச்சி என்னடா இவ்வளவு காலைல.”

“ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்குடா.”

“ஆபீஸ்ல வேலை இருக்குனு இங்க வந்துட்ட.”

“தியாவ கூட்டிட்டு போலாம்னு வந்தேன்.”

“ஏன் எப்பவும் ஸ்கூட்டியில் தானே வருவா ஸ்கூட்டி ரிப்பேரா என்ன?”

“டேய் போலீசு, ரொம்ப கேள்வி கேட்டா அப்புறம் இன்னும் ரெண்டு மாசத்துல என் தங்கச்சி கிட்ட பேசி, கல்யாணத்தை நிறுத்திடுவேன் பாத்துக்க.”

“நீ அப்படி பண்ணினா நான் என்ன சும்மா இருப்பேன் நெனச்சிட்டு இருக்கியா? எனக்கு ஆச்சு பிக்ஸ் பண்ண கல்யாணத்தை தான் தள்ளிப் போடுவ, என் தங்கச்சி கிட்ட பேசி உனக்கு கல்யாணமே ஆக விடாம பண்ணிடுவேன் பாத்துக்கோ”.

“என் வாழ்க்கையில தேவையில்லாம விளையாடுறாதடா, சரி நான் கீழே போய் வெயிட் பண்றேன், நீ ரெடி ஆயிட்டு வா”, என காபியை அவன் கையில் கொடுத்து விட்டு வெளியே சென்றான்.

வெளியே வந்தவன் எதிரேயிருந்த, தியாவின் அறையை பார்த்தான்.

‘உள்ளே செல்லலாமா? வேணாமா’ என்னை எண்ணிக் கொண்டே, கதவில் கை வைக்க அது ‘தடார்’ என திறந்து கொண்டது.

அவனை வரவேற்றது என்னமோ காலியான அறை தான்.

‘என்னடா இது ஆள காணோம் எங்க போனா’ என இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பாத்ரூம் கதவை திறந்து வெளியே வந்த, தியாவின் கோலம் கண்டு உறைந்தான்.

அன்று அவள் ஜீன்ஸ் அதற்கு ஏற்ற ஷர்ட் போடலாம் என்று நினைத்திருந்தாள்.

குளியலறையில் இருந்து ஜீன்ஸ் போடுவது கடினம் என்பதால் குளியல் அறைக்கு துண்டும் ஷர்ட்டும் மட்டும் எடுத்து சென்றாள்.

எப்பொழுதும் கதவை நன்றாய் தாழிட்டு செல்பவள்,இன்று அவசரத்தில் சரியாய் தாழிடாமல் சென்றிருந்தாள்.

குளித்து முடித்து பாதி உடை அணிந்த நிலையில் வெளியே வந்தவளுக்கு அவள் மனதின் நாயகன் காட்சி தர, ‘கனவில் நிதமும் தன்னை இம்சிக்கும் மன்னவனின் நிழல் பிம்பம் தான்’ என்று தடதடக்கும் நெஞ்சுடன் அவனை நெருங்கினாள் தியா.

என்னதான் ‘அது நிழல் பிம்பம்’ என்று மனதுக்கு தோன்றினாலும் இந்த நிலையில் தன்னை கண்டு விட்டானே என பெண்ணவளுக்கு கூச்சம் வந்து ஒட்டிக் கொண்டது.

இதயம் துடிக்கும் ஓசை வெளியில் கேட்க, அவனை நெருங்கி நின்று “இங்க பாருங்க மிஸ்டர் ஷ்யாம் என்னதான் கனவா இருந்தாலும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு, டிரஸ் பண்ற நேரம் இப்படியா வந்து நிப்பீங்க”.

அவள் பேசவும் தான் இவனுக்கு உணர்வு வர, அவசரமாய் அங்கிருந்து நகர்ந்து கதவை சாத்தினான்.

அவன் அப்படி சென்று கதவை சாற்றவும் தான், அவள் பார்த்தது அவனின் பிம்பமல்ல அவனே நின்றிருந்தான் என்பது புரிந்தது பேதைக்கு.

வேகமாய் ஓடிச் சென்று, கதவை உள்ளே தாழிட்டு, தலையில் அடித்துக் கொண்டு நின்றாள்.

வெளியே சென்று கதவு அடைத்தவனுக்கு, ‘மூச்சு முட்டுவது’ போன்ற உணர்வு இதயம் தாறுமாறாய் துடித்தது.

அதற்குள் ராஜ் தயாராகி வெளியே வர, இவன் நின்றிருந்ததை பார்த்து.

“ஏன்டா இப்படி முழிச்சிட்டு நிக்கிற” என்றான்.

அவனிடம் எதுவும் கூறாது தன்னை நிதானித்துக் கொண்டவன், “ஒன்னும் இல்லடா அது தியா கிளம்பிட்டாளானு பார்த்தேன், கொஞ்சம் லேட் ஆகும் போல, சரி வா கீழே போய் வெயிட் பண்ணலாம்”, என அவனை கீழே அழைத்து சென்றான்.

இவன் கீழே சென்று, வெகு நேரம் ஆகியும் தியா கிளம்பி வரவில்லை.

அவள் அம்மா தான் சென்று அவளை அழைத்து வந்தார்.

அப்பொழுதும் ‘பேய் அறிந்தால்’ போலே வந்து சேர்ந்தாள் அவள்.

“என்னடி மச மசனு நிக்கிற வா சீக்கிரம் வந்து சாப்பிடு தம்பி அவ்ளோ நேரமா உனக்காக வெயிட் பண்ணுது தெரியுமா”, என லட்சுமி அவளைக் கடிய.

“இல்லம்மா எனக்கு பசி இல்ல எனக்கு வேணாம்”.

“சாப்பிட்டு வா தியாமா…”, ஷ்யாம் தான் கூறினான்.

அவனை ஏறெடுத்து பார்க்க முடியவில்லை அவளால் எதுவும் பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய் சாப்பிட்டு வந்தாள்.

இருவரும் காரில் கிளம்பினார்கள். அங்கே பலத்த மௌனமே குடி கொண்டது.

அந்த மௌனத்தை கலைத்தது ‘க்ரீச்’ என்ற ஒலி, ‘ஆம்’ ஷ்யாம் தான் வண்டியை அவ்வாறு ஓரம் கட்டி இருந்தான்.

தியா படபடத்த இதயத்துடன் அவன் என்ன கூற போகிறானோ என்று அமைதியாக இருந்தாள்.

இவனோ அவள் அமைதியை பார்த்துக் கொண்டிருந்தான்….

அது எதிர்பாராமல் நடந்த செயல் யார் மீது குற்றம் சொல்ல முடியும்? சரியாய் தாழ் போடாமல் சென்றாளே என்று இவளை குற்றம் சொல்ல முடியுமா? ஒரு பெண்ணின் அறை என்று கூட யோசிக்காமல் நம் தியா தானே என்று உள்ளே சென்ற இவனின் குற்றமா? காதலில் குற்றம் உண்டோ…?

(போன எபிக்கு லைக் அண்ட் கமெண்ட்ஸ் போட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி🙏 இனி அடுத்த எபில சந்திக்கலாம்…பை….. பை…)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!