😍உணர்வை உரசி பார்க்காதே! 14😍

20211124_190527-6024b6b9

😍உணர்வை உரசி பார்க்காதே! 14😍

🌹அத்தியாயம் 14

மீத்யுகாவிற்கு இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. சஷ்டியின் இறப்பிற்கு நானே காரணமாகிவிட்டேனென்ற எண்ணமே அவளை வாட்டி வதைத்தது. 

இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சஷ்டி வீட்டிற்கு வந்தால் நன்றாக இருக்குமென்று அவள் செய்த விடயம் விபரீதமாய் முடிவடைந்து இன்னும் ஒரு பிரச்சனையை தேடி தந்தது. 

விகுஷ்கியின் அருகில் செல்லலாமா, வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தாள். 

விகுஷ்கியின் நிலையோ பரிதாபகரமாய் இருந்தது. பெண் என்றாலும் கவலையை கூறி அழுதிட முடியும். ஆண்மகன் என்பதால் அடக்கி வைத்தான். 

தங்கை வீட்டுக்கு வந்தவுடன், மீண்டும் அவளது நிலையை புரிந்துகொண்டு அவளை ஏற்று கொள்ளும் ஒரு ஆண் மகனை தேடிப்பிடிக்க வேண்டுமென்று நினைத்திருந்தான். நினைவெல்லாம் நிறைவேறாமல் போனதே!  மீத்யுகா அருகில் இருப்பதை கண்டு கொண்டான். விருக்கென்று எழுந்து நின்றான். 

கைகளை முறுக்கினான். வேகமாக அவள் அருகில் சென்றான். கதிரையில் அமர்ந்திருந்தவளை தொட்டு எழுப்பினான். அவளும் எழுந்து நின்றாள். 

பற்களை கடித்து உதட்டை சுளித்தான். ஓங்கி நான்கைந்து அறைக்களுக்கு மேல்  அறைந்தான். அறைகள் பத்தையும் கடந்தது. அத்தனையும் வாங்கிக்கொண்டாள். அவள் செய்த தவறுக்கு அந்த தண்டனையும் போதாது. 

அவன் அடியில் கண்கள் கலங்க செய்தது. வெறும் காய்கறிகள் உண்பவனுக்கு எவ்வளவு பலம் என்பது போலிருந்தது, அவன் அடியின் பலம். மீத்யுகாவின் கன்னமிரண்டும் செக்கச்சிவந்திருந்து. 

“ஸாரி விகுஷ்கி, இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல.” என்றிட, “என்ன எதிர்ப்பார்த்தியோ அதான் நடந்துருச்சே. அக்காக்கும் தங்கச்சிக்கும் இப்போ சந்தோசமா?” என்று கூறிவிட்டு மீண்டும் ஓங்கி அறைந்தான். அதையும் வாங்கிக்கொண்டாள். அவனுடைய வலிக்களுக்கு அவள் வாங்கும் அடிகளின் வலி குறைவுதான். 

மீத்யுகா, அவள் செய்த தவறை எண்ணி அழ தொடங்கினாள். தலையில் அடித்துக்கொண்டு கதறினாள். அந்த வாட் முழுவதும் மீத்யுகாவின் சத்தம்தான். விகுஷ்கியின் முன் மண்டியிட்டு நின்றாள்.

“நீலி கண்ணீர் வடிக்காம இங்க இருந்து போ. கேஸ் போடுறேன், உன் அக்காவும் நீயும் கோர்டுக்கு வந்து பாருங்க.” என்று உரத்த குரலில் கூறி விட்டு சுவற்றில் கையை ஓங்கி அடித்து கொண்டான். 

மீத்யுகாவிற்கு குற்ற உணர்வு அதிகமாகியது. நீதித்துறை செல்வதை பற்றி சிந்தனை செய்ய முடியவில்லை. கர்ப்பமாக இருக்கும் அக்காவயும் நினைக்க முடியவில்லை.குற்ற உணர்வே கொள்ளாமல் கொன்றது. 

நீதிமன்றம், வழக்கு என்று வந்தால் தமக்கையை இழுத்துவிடாமல் குற்றத்தை அவளே ஒப்புக்கொள்ளலாம் என்று எண்ணினாள். 

செவிலியர், “சார் உள்ள வந்து ஒரு வாட்டி உங்க தங்கச்சிய பாருங்க.” 

அவன் முகம் குப்பென்றானது. பத்து விரல்களுக்குள் முகத்தை பதுக்கினான். கண்கள் கலங்க  கைகளால் கண்களை கசக்கினான். 

அப்படியே வாயை பொத்திப்பிடித்தான். அவன் முனங்கல்கள் வெளியே தெரியாதவாறு அழுத்தினான். கூடப்பிறந்த தங்கை தவறியதை அவன் மனம் ஏற்க மறுத்தது.  

தாய் தந்தையர் இல்லாமல் தங்கையை கஷ்டப்பட்டு  வளர்த்திருந்தான். அவள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டுமென்று எந்த ஒரு பெண்ணையும் ஏர் எடுத்து பார்க்காமல் அவன் காலத்தை கடத்தினான். 

தங்கையிடம் ஒரு அண்ணன் என்பதை காட்டிலும் தகப்பனாய் ஒரு நல்ல நண்பனாய் நடந்து கொண்டான். விகுஷ்கியிடம் எதையும் மறைக்காமல் கூறுவாள் சஷ்டி. விகுஷ்கியும் அப்படிதான் தங்கையிடம் எதையும் மறைக்க மாட்டான். கவலை கொள்ளும் பொழுதுகளிலும், தாய் தந்தை இல்லையென்று ஏங்கும் சந்தர்ப்பங்களிலும் விகுஷ்கியின் தோள் மீது சாய்ந்து கண் கலங்கிடுவாள். 

இன்று அவனை தனியே கண் கலங்க செய்துவிட்டு அவள் மட்டும் தனியேச் சென்றிருந்தாள். 

“சார் உள்ள வாங்க. உங்க சிஸ்டர கடைசியா ஒரு தரம் வந்து பாருங்க.” என்று செவிலியர் மீண்டும் அழைக்க, விகுஷ்கி எந்த பதில்களும் கூறவில்லை. அவன் உணர்ச்சிகள் எல்லாம் பாதாளத்துல் அடைந்து பாலாய்போனது. செவிலியரின் கேள்விக்கு எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. மலைத்துப்போய் இருந்தான். 

“சஷ்டிய பார்த்து  வாய்விட்டு அழுதுறுப்பா.” என்று கலங்கிய குரலில் கூறினார் லட்சுமி. 

விகுஷ்கியின் உதடுகள் ஒரு சிறிய அசைவு, கண்கள் சிவந்து மூக்கு விடைக்க ஆரம்பித்தது. தலையை மறுத்து அசைத்தான். லட்சுமி அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. 

மீத்யுகாவின் காலம் முழுவதும்  விகுஷ்கியின் காலில் கிடந்தாலும் அவனுடைய ஆத்திரம் அடங்குமா?  தங்கையின் உயிர்தான் திரும்ப வந்துவிடுமா? 

‘விகுஷ்கிய எப்படி சமாளிப்பேன். என்னோட ஒட்டு மொத்த வாழ்க்கையும் அவர் கைலதானே இருக்கு. சஷ்டிக்கு இப்படி நடக்கும்னு நான் எதிர்ப்பார்க்கலயே, ஐயோ! சஷ்டி நானே உன்னைய கொன்னுட்டேனே!’ 

விகுஷ்கி மெதுவாக எழுந்து கால்கள் இரண்டும் தட்டு தடுமாறி அறைக்குள் சென்று சஷ்டி படுத்திருந்த படுக்கையை பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்தி கொண்டான். 

லட்சுமியும் அருகில் இருந்தார்.  சஷ்டியை பார்த்த கணமே, “என்னமா எங்க எல்லாரையும் விட்டு போயிட்டியே! இது உனக்கு நியாயமா? நீ வீட்டுக்கு வருவேணு பார்த்துப் பார்த்து இருந்தேனே! எல்லாம் வீணா போயிருச்சே, லட்சுமி கா அந்த சட்னி பண்ணிக்கொடுங்க இந்த சட்னி பண்ணிக்கொடுங்கனு கேப்பியே, இனி நீ வர மாட்டியா பாப்பா?” என்று லட்சுமி ஒப்பாரி வைக்க ஆரம்பித்திருந்தார். 

லட்சுமியிட்ட ஒப்பாரி விகுஷ்கியின் ஆழ்மனதை ஆழமாய் நெருடியது. 

கலங்கி இருந்த கண்களை அவனது கைகுட்டையை எடுத்து கண்களை ஒற்றினான். முகத்திலிருந்த வியர்வையும் துடைத்து எடுத்தான். 

என்ன செய்து என்ன பலன்? அவன் மனதை வீழ்த்திய விசனம், மீண்டும் மீண்டும் அவன் கண்களை கலங்கடித்தது. மனதை சில்லு சில்லாய் நொறுக்கியது.

லட்சுமியின் ஒப்பாரி தொடர்ந்தது. “வாழ வேண்டிய வயசுல இப்படி போய் சேர்ந்துட்டியே பாப்பா, விகுஷ்கி தம்பி பட்ட கஷ்ட்டமெல்லாம் எனக்குதான் தெரியும். அண்ணன் உனக்காக ஏங்கி போய் இருக்கான் அவனுக்காக சரி நீ உயிர் பொழச்சி வந்திருக்க கூடாதாமா?” என்று துக்கம் பாடினார். துடுக்கு தனம் நிறைந்த சஷ்டியை படுக்கையில்  கழுத்து வரை வெள்ளை துணி போற்றப்பட்ட நிலையில் பார்ப்பது கடினமாய் இருந்தது. 

கதிரையில் அமர்ந்திருந்த மீத்யுகாவை லட்சுமியின் ஒப்பாரி ஈர்த்து அறைக்குள், ‘போ, போ’ என்றது அவளகம். அறையின் வாசலில் இருந்து உள்ள செல்வோமா, வேண்டாமா என்று ஊசலாடுற்றாள். 

விகுஷ்கியின் வீரியம் அறிந்தவள், தங்கையின் இறப்பிற்கு காரணமாக இருப்பதால் உள்ளச் சென்றாள் தயக்கத்துடன்.

கதவு திறக்கும் சத்தம் கேட்டு மீத்யுகாவின் புறம் திரும்பினான்.  சினத்தில் சிவந்திருந்த கண்கள் அவளை கண்டதும் கோபத்தில் கொந்தளிப்பானது. “எதுக்கு டீ உள்ள வந்த, என்னையும் சேர்த்து கொன்னுடலாம்னு வந்தியா? வெளிய போடீ!” என்று சத்தமிட்டான்.

“ஒரு முறை பார்த்துட்டுப் போறேன் விகுஷ்கி, ப்ளீஸ் அலொவ் மீ, நல்லதுக்குதான் சஷ்டிக்கிட்ட வந்து பேசினேன். எனக்கு இருக்குற பிரச்சனைகளுக்கு முடிவு வேணும்னுதான் டெய்லி வந்து சஷ்டிய பார்த்துட்டுப் போவேன். இப்படியெல்லாம் ஆகும்னு நெனைச்சிகூட பார்க்கல. சஷ்டி கிட்ட கடைசியாக மன்னிப்புக் கேக்குறேன். கேட்டுட்டு உடனே வெளிய போறேன்.” என்று விகுஷ்கியின் கால்களை பற்றி இடைவிடாது கெஞ்சினாள். 

கால்களால் உதறி தள்ளினான்.  “செய்றதெல்லாம் செஞ்சிட்டு கால புடிக்கிறியா, என் தங்கச்சி நீங்க திங்கிற சோத்துல மண்ணயா அள்ளிப் போட்டா? சிஸ்டர் கிட்ட அன்னைக்கு நீ பேசும்போதே நான் கொஞ்சம் சுதாரிச்சிருக்கணும். அக்காதான் அப்படி இருக்கா நீ கொஞ்சமாவது நல்லவனு நெனச்சேன். ஆனா நீ, அதுக்கு மேல் மோசமானவ டீ. 

உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்.” விசனத்தில் அவன் மனம் இருந்தாலும், வாயில் வந்த வார்த்தைகள் வீரியமாய் இருந்தது.

கோடிக்கணக்கான வார்த்தைகள் இருந்தும் மீத்யுகாவின் வாயிலிருந்து காற்றுகூட வரவில்லை. 

சஷ்டியின் மடியில் கண்களை மூடி முகத்தை சாய்த்தான். ‘உனக்கு சாகுற வயசா சஷ்டிமா, இதுக்குதான் இவ்ளோ கஷ்டப்பட்டு உன்ன வளர்த்தேனா, எவ்ளோ ட்ரீட்மண்ட் பார்த்தோம். ஒரு ட்ரீட்மண்டும் கை குடுக்கலயே. பேசாம நானும் உங்கூட வரட்டுமா?’ என்று விகுஷ்கியின் மனம் கலங்கி, மூடி இருந்த கண்கள் லேசாக துயர் பாடியது. 

மறுபுறம் மீத்யுகா கண்களில் நீர் வழிய வழிய, ‘ஸாரி சஷ்டி, இப்படி நடக்கும்னு தெரிஞ்சா உங்கிட்ட அப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டேன். சுயநினைவுக்கு கொண்டு வரணும்தான் உன் உணர்ச்சிகள தூண்டற மாதிரி பேசினேன். நீ சாகணும்னு எனக்கு ஆசை இல்ல சஷ்டி. இப்போ உன் அண்ணன் முன்னாடி என்னைய குற்றவாளி ஆகிட்டு போயிட்ட. உன் அண்ணன கட்டுனு பாவத்துக்கு நான்தான் செத்துருக்கணும். இருக்கும் பிரச்சனைக்கு உன்னைய வச்சு முடிவு கட்டும்னு நெனச்சேன். இப்போ இன்னொரு பிரச்சினையும் சேர்ந்துட்டு’ நடந்ததெல்லாம் கனவாய் இருந்தாள் நன்றாக இருக்கும். மனதளவில் மன்னிப்பு வேண்டினாள் மீத்யுகா.

சஷ்டி மடியில் விழுந்த விகுஷ்கிக்கோ மேலும் மேலும் கண்கள் கலங்கிகொண்டே இருந்தன. அவன் கண்களை திறக்காமல் மூடியே இருந்தான். தலை சாய்ந்திருந்த இடமுழுவதும் துயர்நீரினால் நிரம்பி நனைந்திருந்தது. ‘என்னைய  அனாதையா விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு, நீ இல்லாம உன் அண்ணன் எப்படி இருப்பான்.  இதெல்லாம் யோசிக்காம என்னைய விட்டுட்டு போயிட்ட, எவ்ளோ சாமி இருந்தும் எவ்வளவோ வேண்டுதல் செஞ்சும் ஒரு சாமிகூடவா கண்ண திறக்கல? இதுக்கு காரணமானவங்கள சும்மா விடமாட்டேன் சஷ்டிமா.’ என்று மனதளவில் வைராக்கியம் வைத்தான். 

சில நிமிடங்கள் மூவரின் கவலைகளும் கண்ணீரோடு கலந்திருந்தது.

மெதுவாக பாவையின் கை அவன் தலையை வருட, அவனுக்கு மீத்யுகா பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவது போல் உணர்வை கொடுக்க, “எடு டீ கைய!” என்று சற்று தலையை தூங்கிவிட்டு  சத்தமிட்டான். 

மீத்யுகாவும் லட்சுமியும் வாயை பிளந்து பார்த்துக்கொண்டிருந்தனர். “அப்போ நான் கைய எடுக்கட்டுமா,  வைக்கட்டுமா அண்ணா?” என்று சஷ்டியின் ஈனக் குரல் மூவரையும் உலுக்கியது.  

“அப்போ சஷ்டி சாகலயா?” என்பது போலிருந்தது மூவரின் முகபாவமும் இருந்தது. கடல், காற்று, ஆகாயம் பூமியின் சுழற்சி அனைத்துமே ஒரு நிமிடம் நின்று மீண்டும் இயங்கியது போல் இருந்தது. ஏக்கத்தோடு உதடுகள் நடுங்க பெருமூச்சை விட்டான் விகுஷ்கி. 

மீத்யுகாவும் லட்சுமியும் சஷ்டியின் கை உயரும் போதே வாயை பிளந்தனர். அதை விகுஷ்கி கவனிக்கவில்லை. 

சஷ்டியின் குரல் கேட்டு விகுஷ்கி அன்னார்ந்து பார்க்கா, சஷ்டியின் விழி மடல்கள் திறந்திருந்தன. 

“சஷ்டி மா, சஷ்டி!” என்று விகுஷ்கியின் குரல் ஓங்கி ஒலித்தது. தங்கையின் குரல் கேட்ட மகிழ்ச்சியில் அவளை அன்போடு கட்டியணைத்தான். 

“உனக்கு ஒண்ணும் ஆகலதானே சஷ்டி மா, என் சஷ்டி உயிரோட இருக்கா! என் தங்கச்சிக்கு எங்கிட்ட வந்துட்டா, டாக்டர், டாக்டர்!” என்று சத்தமாக கத்தினான். சஷ்டியின் முகத்தை தொட்டுத் தொட்டுப் பார்த்தான்.

“என் தங்கச்சி பொலச்சிட்டா, மெடிகல் மிராக்கல் நடந்துட்டு,  தேங்க் காட்!” என்றிட கண் கசிந்துருகி ஓடியது. சஷ்டியின் கையை கவலையோடு பற்றிக்கொண்டான். 

“லட்சுமி மா, டாக்டர் கூட்டிட்டு வாங்க.” என்றான். லட்சுமி வெளியே செல்ல, மீத்யுகாவும் வெளியே சென்றாள். சஷ்டி சாகவில்லை, உயிருடன் இருக்கிறாள் என்பதே போதுமாயிருந்தது மீத்யுகாவிற்கு.

அவளின் செயலுக்கு பலன் கிடைத்திருக்க, அதற்கு மேல் அவ்விடத்தில் மீத்யுகாவிற்கு இருக்க பிடிக்கவில்லை. எப்படியும் வீட்டிற்குதான் வந்தாக வேண்டுமென்று வீட்டிற்கு கிளம்பினாள். 

அறைக்குள்ளே, “நீ நல்லாதானே சஷ்டி மா கியூர் ஆகிட்டு வந்த, திடீர்னு உனக்கென்னாச்சு, டாக்டர் ஏன் நீ… நீ தவறிட்டதா சொன்னாங்க? டாக்டர் அப்படி சொன்னதும் செத்துரலாம்னு தோணிச்சு.” என்று சலனத்துடன் கேட்டான். 

அதற்கு சஷ்டியின் பதில்கள் என்னவாக இருக்கும்? 

***

உணர்வுகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!