சூரியநிலவு 20

அத்தியாயம் 20

தடைகள் பல வரலாம்.  தட்டிப்பறிக்க கூட்டமும் சில வரலாம். எதை கண்டும் அஞ்சாதே துணிந்து நில். முன் வைத்த காலை பின்வைக்காதே. நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் படிகள்.

அன்று காலையில் எழும்போதே, மதுநிலா ஒரு தெளிவோடு எழுந்தாள். வழக்கம்போல் மணி பார்க்க, தன் அலைபேசியை இயக்கினாள்.

அதில் தவறவிட்ட அழைப்பில், ஒரே எண்ணிலிருந்து ஐந்து முறை அழைப்பு வந்திருந்தது. அவளது புருவம் சுருங்கியது யோசனையாக.

எப்போது அழைப்பு வந்தது என பார்க்க, இரவு பத்தை கடந்து சில நிமிடங்களிலிருந்தது அந்த அழைப்பு.

“யார் அந்த நேரம் நம்மை கூப்பிட்டது?” என குழம்பி,”யாரா இருந்தாலும் மறுபடியும் கூப்பிடுவாங்க. அப்பறம் பேசிகளாம்” என அவள் புறப்படுவதில் கவனத்தை செலுத்தினாள். 

ஆரா அந்த வீட்டிற்குள் வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவள் வந்ததிலிருந்து, ஆண்கள் காலையில் நேரமே வீட்டிலிருந்து சென்றுவிட்டு, இரவு வெகுநேரம் சென்றே திரும்புகின்றனர்.  ஆராவை பார்ப்பதை தவிர்த்து ஓடிக்கொண்டிருந்தனர்.

மேகாவும் தங்கள் டெக்ஸ்டைல்ஸ் சென்றுவிடுகிறாள். வீட்டிலிருக்கும் மதுநிலா மட்டும் ஆராவிடம் சிக்கிக்கொள்வாள்.

ஆரா “சிறுவயதில் நாங்கள் அப்படி இருந்தோம், இப்படி விளையாடினோம்.” என பிரதாப்புடனான  தன் நெருக்கத்தை சொல்லி சொல்லியே, மதுவின் காதுகளில் ரத்தத்தை வரவைத்து விடுவாள்.

அவளிடமிருந்து தப்பிக்க மது, கண்ணன் மற்றும் பார்வதியுடன் சமையலறையில் புகுந்துவிடுவாள். அவர்களுடன் நேரத்தை ஓட்டினாலும், மதிநிலாவிற்கு வீட்டில் இருக்க போரடித்தது.

ஆரா வந்த நான்கு நாட்களில் மதுநிலா,  மேகாவை வற்புறுத்தித் தங்கள் டெக்ஸ்டைல்ஸிற்க்கு செல்ல தொடங்கிவிட்டாள். மேகா, ஆகாஷ் பிரதாப்பிற்கு அழைத்து,”மது டெக்ஸ்டைல்ஸ் வரேன் சொல்லி அடம்பிடிக்கறா. என்ன பண்ண தெரியலை?” என புலம்ப,

“வர்ஸு நிலாவை கூட்டிட்டு போ. நீ கூடவே இருந்து அவளை பார்த்துக்கோ.” ஆகாஷ்

“நிலாவை தனியா விட்டிடாதே. நேரத்துக்கு சாப்பிடவை. நிலா உன்னுடைய பொறுப்பு.” பிரதாப். 

ஆயிரம் கட்டுப்பாடுகளுடன்  நிலாவை அழைத்துச் செல்ல அனுமதியளித்தனர். 

இப்போது நிலா அங்குச் செல்லத்தான் கிளம்பிக் கொண்டிருந்தாள். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வர, இந்த முறை அதை ஏற்றிருந்தாள்.

அவள் ஏற்றுக்கொண்டது அந்த அழைப்பை மட்டுமா?

அந்தப்பக்கம் இருந்த சூர்யாவிற்கு வானத்தில் பறக்காத குறை.

******************

நிலாவுடன் பேச போகிற ஆர்வத்தில், இரவு தன் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு விழித்திருந்த சூர்யா, அதிகாலையே உறக்கத்தை தழுவினான்.

அவன் உறக்கம் கலைந்து எழும்பொழுது, ஏழு மணியை கடந்திருந்தது. அடித்துப் பிடித்து தன்னை தூய்மை செய்துகொண்டு நிலாவை அழைத்திருந்தான்.

நிலா அழைப்பை ஏற்று,”ஹலோ” சொல்லவும் சூர்யா வானத்தில் பறந்து, கனவுலகில் நுழைந்து விட்டான், பதில் குடுக்க மறந்து. 

அலைபேசியில் பதில் வராததால், மது இரண்டு, மூன்று முறை “ஹலோ” சொல்ல, அதில் சுயநினைவடைந்த சூர்யா அவள் அழைப்பை துண்டிக்கும் முன்

“ஹலோ நிலா எப்படி இருக்க?” என்ற சூர்யாவின் உற்சாக குரல், அவளின் செவியை தீண்டியது. முதலில் யார் என தெரியாமல் குழம்பிய மது, பிறகே அவனின் நிலா என்ற அழைப்பைக் கொண்டு, அவன் யார் என்று உணர்ந்தாள்.

சிறிது நேரம் எந்த சத்தமும் வராததால், இப்போது குழம்புவது சூர்யாவின் முறை.

“ஹாய் சீனியர் நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” அவளின் சீனியர் என்ற அழைப்பில் முகம் சுருங்கினாலும்,’அவள் தன் குரலை அடையாளம் கண்டுகொண்டாள்’ என்று அகம் மகிழ்ந்தான்.

“நான் நல்லா இல்ல. உன்னோட கால் வரும்னு  காத்திருந்தது, காத்திருந்தது துரும்பா மெலிந்து போய்ட்டேன். என்னோட டிரஸ் எல்லாம் பத்தாமா போச்சுனா பார்த்துக்கோயேன்.” என சோகம்போல.

அதில் நிலா கலகல என சிரித்துவிட்டாள். ஃபோனின் அந்தப்புரம் இருந்த சூர்யாவிற்கு, பனிக்கட்டி வைத்தது போலக் குலு குலு என இருந்தது, ஆனால் இங்க அவள் பேச்சைக் கேட்ட, ஆராவிற்கு நெருப்பைக் கொட்டியது போல இருந்தது.

“என்ன சீனியர் நீங்கள், மெலிந்தால் டிரஸ் எல்லாம் லூஸா இருக்கும். நீங்க பத்தல சொல்லுறீங்க.” சிரிப்பை அடக்கமுடியாமல்.”இதிலேயே தெரியுதே நீங்க எவ்ளோ கவலைப்பட்டீங்கனு.” 

அவளின் சந்தோச சிரிப்பை ரசித்தாலும், சோகம்போல,”ஏதோ  ஞாபகத்தில் மாத்தி சொல்லிவிட்டேன்.”

“ஓகே பாஸ், நீங்க சொன்னதை நம்பிட்டேன்” நம்பாத குரலில்.

“நான் சொன்னதை நம்ப மாட்டீல, சரி நேர்லயே பார்த்து சொல்லு.  நான் நாளைக்கு காலையில் அங்க இருப்பேன்.” என்றான் அதிரடியாக.

இப்போது திகைத்தது பெண். “சீனியர் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.”

“நான் சீரியஸா தான் சொன்னேன். உன்னோட விஷயத்தில் நான் எப்பவும் விளையாட மாட்டேன் நிலா.”

“நாளைக்கு மார்னிங் அங்க வந்துருவேன், ஒரு பிசினஸ் டீல் பேச. ஒரு பத்து நாள் சென்னையில் வேலை. நீயும் பிசினஸ் பண்ணுறேன்னு சொன்ன, இது உனக்கும் நல்ல வாய்ப்பு. சோ இந்த பத்து நாள் என்கூட வா, அனுபவம் கிடைக்கும்.” என்றான்.

முதலில் மறுக்க நினைத்த பெண், பிறகு ஏதோ முடிவெடுத்ததுபோல்,”சரி வாங்க நான் உங்க கூட வரேன்.” என்று உறுதியோடு கூறி தொடர்பை துண்டித்தாள்.

சூர்யாவிற்கு மகிழ்ச்சியில், தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. உடனே சென்னை நோக்கி தன் பயணத்தைத் தொடங்கினான்.

மதுவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆரா, இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக எப்படி மாற்றலாமெனத் திட்டம் தீட்டத் தொடங்கிவிட்டாள். பிரதாப், ஆகாஷ், சூர்யா என மூன்று ஆண்களும் அவளிற்காக உருகுவது பார்த்து ஆராவின் வயிறு எரிந்தது. 

அலுவலகம் செல்லத் தொடங்கியிருந்த மதுவை அவளால் நெருங்க முடியவில்லை. மேகா தடையாக இருந்தாள். பிரதாப்பை வளைக்கலாமென்று பார்த்தால், பேச்சை கத்தரித்து சென்றுவிடுகிறான்.

சூர்யா, மதுவின் சந்திப்பை வைத்து பிரதாப்பை நெருங்க முடிவு செய்துவிட்டாள்.

******************

சொன்ன மாதிரி, அடுத்த நாள் சூர்யா சென்னையை அடைந்தான். மதுவின் அலுவலகம் இருக்கும் பகுதியிலே, ஒரு உயர்தர விடுதியில் தங்கிக்கொண்டு, மதுவை அழைத்துத் தான் வந்து சேர்ந்த தகவலை தெரிவித்துவிட்டான். அவளும் மதிய உணவு நேரத்தில், அவனை சந்திப்பதாக சொல்லிவிட்டாள்.

மது, சூர்யாவை சந்திப்பதற்காக, மதியம் கிளம்பும்போது, மேகாவை அழைத்து,”நான் போய் நம்ம சூர்யதேவை பார்த்துட்டு வரேன்.”

“யார் அது?”

“நம்ம சீனியர். உன்னோட மானசீக அண்ணன்.”

“என்னது அவனை பார்க்க போறயா? உனக்கு என்ன பைத்தியமா பிடுச்சிருக்கு.”

“இல்ல மேகா, நான் முடிவு பண்ணிட்டேன். நான் அவரை பார்க்கத்தான் போறேன்” உறுதியாக

மேகா அவளை தடுக்க முயன்று தோற்றாள்.

“நான் சூர்யாகூட போறதை அவனுங்ககிட்ட சொன்ன, உன் லவ் மேட்டரை நான் போட்டு உடைச்சுடுவேன். ஜாக்கிரதை” என மிரட்டல் விடுத்தாள்.

அதில் திடுக்கிட்ட மேகா,”என்ன, என்ன லவ் மேட்டர்? அதுலாம் ஒன்றுமில்லை” என தடுமாறினாள்.

“அப்படிஇல்லைன்னா உன் வாய்ஸ் ஏன் தடுமாறுது. நீ ஆகாஷை விரும்புறது எனக்கு தெரியும்.” என்றாள் நக்கல் சிரிப்போடு.

மதுவை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்த மேகா,”மது அவங்க உயரம் எங்க? நான் எங்க. என்னோட ஆசை நிறைவேறாதுன்னு தெரியும்.  ஆனாலும் மனசு தடுமாறுது. நீ அவங்க கிட்ட சொல்லாத. அவங்க என்னை தப்பா நினைச்சுடுவாங்க.”

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு மேகா?”

“அவங்க பணத்தை பார்த்து, நான் அவங்களை விரும்புறேன்னு நினைச்சுட்டா.”

“ஹேய் அவன் அப்படி நினைக்க மாட்டான்.”

“ஒருவேளை அப்படி நினைச்சுட்டா. நான் உயிரோடவே இருக்க மாட்டேன். என்னோட காதல் என்னோடவே போகட்டும்.”

ஆகாஷின் வர்ஸு என்ற அழைப்பிலேயே, அவனின் மனதை புரிந்திருந்த மதுநிலா,’இது அவர்கள் பேசி தீர்க்கவேண்டியது. தான் இதில் தலையிட முடியாது.’ என முடிவு செய்து, அவளை திசை திருப்ப,

“சரி, உன்னோட காதலை பத்தி நான் சொல்லமாட்டேன். அதே மாதிரி நான் சூர்யாகூட போறதை, நீ அவங்ககிட்ட சொல்லக் கூடாது. ஜென்டில் வுமன் அக்ரிமெண்ட். டீலா? நோ டீலா?”

“ஹய்யோ! இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நான் சொல்லாமல் விட்டேன், எண்ணெய் இல்லாமல் என்னை பொரிச்சு எடுத்துடுவாங்க.” என பயந்தாள்.

மேகாவுடன் சிறிது நேரம் பேசி, அவளை சமாதானம் செய்து, சூர்யாவை பார்க்க கிளம்பினாள் மதுநிலா.

சூர்யதேவ், மதுநிலாவின் சந்திப்பு சில பிரச்சனைகளின் தொடக்கமாக இருக்கும், அதே நேரம் பல பிரச்சனைகளின் முடிவாகவும் அமைய போகிறது.

**********************

சொன்ன மாதிரி, சொன்ன நேரத்தில் மதுநிலா, சூர்யா தங்கி இருக்கும் விடுதியிலிருந்த உணவகத்தை அடைந்தாள். அவள் வரும் முன்னே அவளிற்காக சூர்யா, அங்கே காத்திருந்தான் ஒற்றை ரோஜாவுடன்.

முகம் சற்று வாடியிருந்தாலும், என்றுமில்லா தெளிவோடு அவனை நெருங்கினாள் பெண்.

பளீர் புன்னகையுடன் அவளை நெருங்கி, நிலாவின் கரம்பற்றி அந்த ரோஜாவை அவளிடம் சேர்த்திருந்தான்.

புக் செய்திருந்த மேசையிற்கு அழைத்துச் சென்று, ஒரு நாற்காலியை போட்டு அவளை அமரச்செய்து, அவளின் எதிரே அமர்ந்துகொண்டு, அவளை கண்களால் விழுங்கிக்கொண்ட, உணவை விழுங்கிக்கொண்டிருந்தான். அவனின் விழுங்கும் பார்வையை, உணர்ந்தாலும் அதை விடுத்து, அவனுடன் பேசிக்கொண்டே உணவை முடித்தாள். 

அருகிலிருந்த தோட்டத்தில் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தனர்.

அப்போது நிலா கல் தடுக்கிக்கீழே விழ பார்க்க, தான் விழப்போகிறோம் என்ற பயத்தில் விழி மூடி,”சூரியா” என்றழைத்திருந்தாள். சரியாக அந்த நேரம் அவள் இடைபற்றி தடுத்தது ஒரு இரும்புக் கரம். சூர்யா அவளை பிடிக்கும் முன், வேறொரு கரம் அவளை தாங்கி இருந்தது.

அந்த கரத்திற்கு சொந்தக்காரன் தன் கரங்களை விலக்காமல் இவளை முறைத்து நின்றான்.

‘தான் விழவில்லை’ என்ற நிம்மதியில் விழித்திருந்த நிலா,  எப்போதும்போல் தன்னை காக்க வந்த, தன் அருகிலிருந்தவனை கண்டு, அவளின் முகம் பூவாக மலர்ந்தது. அவள் முக வசீகரத்தில் இரு ஆடவரும் மயங்கி நின்றனர். 

“ஹே நீ இங்க என்ன பண்ணுற?” என்றாள் கூழாக.

“அதை நான் கேட்கணும். மேகா கூட இல்லாமல் உனக்கு இங்க என்ன வேலை?” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.

“அது சூர்…” என ஆரம்பித்தவள், அவனின் நெருப்பு பார்வையில்,”அது தேவ் இங்க பிசினஸ்க்காக வந்தாங்க. அதுதான் பார்க்க வந்தேன்.”

“பார்த்தாச்சுல வாப்போகலாம்” அடிக்குரலில்

“இல்ல அவர் பத்து நாள் இங்க இருப்பார். என்னை உதவி பண்ண சொல்லிக் கேட்டு இருக்காங்க. சோ..”என இழுத்தாள்.

“சோ” இவன் பார்வையில் கூர்மை கூடியது.

“சோ அவருக்கு உதவி பண்ணப்போறேன்”

அதில் ஆத்திரம் அடைந்த பிரதாப், அவள் இடுப்பிலிருந்த அவன் கரங்களில் அழுத்தத்தை கூட்டினான். அதில் வலி எடுத்தாலும், அந்த கரத்தை விலக்க  முயல வில்லை மதுநிலா. அவள் முகத்திலிருந்த புன்னகை வாடவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பே அந்த உணவகத்தை அடைந்திருந்த பிரதாப் அவர்களையே கவனித்திருந்தான். எங்கே அவர்களிடம் சென்றால் பிரச்சனையாகுமோ, என பயந்தே கோபத்தை மட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

நிலா அந்த கல்லில் தடுக்கிக்கொள்வாள், என அறிந்தே அவர்களை நெருங்கி இருந்தவன், அவள் விழும் முன் அவளை தாங்கியிருந்தான்.

பிரதாப்பை ஏற்கனவே தெரிந்திருந்த சூர்யா, அவர்கள் பேச்சிற்கு நடுவில் செல்லவில்லை. ஆனால் கொலைவெறியுடன் பிரதாப்பை  முறைத்துக் கொண்டிருந்தான்.

பிரதாப்பிடமிருந்து பார்வையை திருப்பிய மது, இருவருக்கும் முறையாக அறிமுகப்படுத்தினாள். இருவர் கரங்களும் இணைந்து குலுக்கினாலும், கண்கள் கூர்வாளாக போர் தொடுத்தது.

“நிலா எனக்குதான்” என சவால் விட்டுக்கொண்டது.

அதில் ஜெயிக்க போவது யாரோ???

******************

ஆகாஷையும் மேகாவையும், உடனே கிளம்பி வீட்டிற்கு வர சொல்லிவிட்டு, நிலவை வீட்டிற்கு இழுத்து சென்றான் பிரதாப்.

ஆகாஷும் மேகாவும் வீட்டிற்குள் நுழையும்போது, அவர்கள் கண்ட காட்சி, சோஃபாவில் அமர்ந்து நிலா, ஜாலியாக ஆரஞ்சு சாப்பிட்டுக்கொண்டிருக்க, பிரதாப் அவளை முறைத்து நின்றான்.

மேகாவின் விழிகள் ஆராதனாவை தேடியது. அவள் வழக்கம்போல் அங்கே இல்லை. மது என்று டெக்ஸ்டைல்ஸ் செல்ல ஆரம்பித்தாளோ, அன்றே ஆராவும் ஊர் சுற்ற கிளம்பிவிட்டாள்.

ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டபடி, மதுவை பார்த்து, என்ன என விழிகளில் கேள்வி எழுப்பினாள்.

அவளும் விழியசைவில் ஏதோ பதிலை கொடுத்தாள். மேகா தன் நெஞ்சில் கைவைத்து,’ஒரு நாள் கூட அவனிடம் மறைக்க முடியல, இதில் என்னை மிரட்டுற.’ என முறைத்தாள். 

அவளும் அசட்டு சிரிப்புடன்,’இதுலாம் நமக்கு ஜுஜுபி’ என கண் சிமிட்டினாள். இப்போது இடுப்பில் கை வைத்து முறைத்தாள். 

இந்த பார்வை பரிமாற்றத்தை பார்த்த ஆகாஷுக்கு,’இரண்டும் ஏதோ கூட்டுக் களவாணித்தனம் பண்ணி இருக்கு’ என புரிந்து கொண்டான்.  

இப்போது ஆகாஷ்,’என்ன பண்ணினீர்கள் இரண்டு பேரும்’ என புருவம் உயர்த்தினான். 

‘நான் ஒண்ணுமே பண்ணல’ என மேகா தலையசைத்து மதுவை கண் காட்டினாள். ஆகாஷ் நிலாவை பார்க்க,’நான் இல்லை’ என உதடு பிதுக்கினாள்.

எதையும் திருத்த முடியாது என சலிப்பாகத் தலையசைத்து பிரதாப்பை நெருங்கினான். ஆகாஷை பார்க்கவும் பிரதாப் அனைத்தையும் கொட்டிவிட்டான்.

ஆகாஷ் நிலாவை முறைக்க, அவள் செய்கையால் ஏதோ சொல்லி, உதவும் படி கேட்டுக்கொண்டாள். ‘எனக்கு இவன் கிட்ட அடி வாங்கிக் குடுக்காம விடமாட்டா போல’ என நினைத்து.

“நிலாவுக்கு அனுபவம் கிடைக்கும் தான சொல்லுறா. பத்து நாள் தானே அவள் போகட்டும்.” என பிரதாப்பை சமாதானம் செய்வதாக நினைத்து, மேலும் எண்ணெய் ஊற்றினான்.  

“டேய் ஆஷு நீ என்ன பேசுற. அவன் இவளை பார்க்குறதே சரி இல்லை. அப்படியே முழுங்குற மாதிரி பார்க்குறான். இவளும் பேசாமல் இருக்கா.” என கொதித்தான்.

“இங்க பாரு ப்ரது, நிலா இன்னமும் சின்ன பொண்ணு இல்ல. நம்ம எவளோ நாள் அவளை ப்ரோடக்ட் பண்ண முடியும். உனக்கு, சீக்கரம் ஆராதனா கூட கல்யாணம் ஆகிடும். எனக்கும் கல்யாணம் ஆகும்.” என வர்ஸுவை பார்த்துக்கொண்டே,”அப்பறம் யார் நிலாவுக்கு இருக்காங்க? இந்த சூர்யா தான் அவளுக்குன்னு இருந்தா, நம்ம மாத்தவாமுடியும்.” பிரதாப்பிற்கு நிதர்சனத்தை புரியவைக்க முயன்றான்.

ஆகாஷ் சொன்ன உண்மை அவனை உயிருடன் கொன்றுபோட்டது. ஆகாஷை அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு, தன் நிலாவை கண்களால் படம்பிடித்து, மனதில் நிறைத்துக்கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

தன் இயலாமையை நினைத்து தன்னையே வெறுத்தான்.

அவனால் ஆராவை மனைவி என்ற இடத்தில வைத்து பார்க்க கூட முடியவில்லை.

நிலாவை வேறு ஒருவருடன், நினைவே பாகற்காய் சாப்பிட்டது போல் கசந்து வழிந்தது.