சூரியநிலவு 21

அத்தியாயம் 21

நிலா, சூர்யா உணவகத்தில் சந்தித்த தினம்.

சூர்யா, நிலாவின் சந்திப்பை தடை செய்ய முடியாத இயலாமையுடன், பிரதாப் தன்னுடைய அறையில் தஞ்சமடைந்திருந்தான். அவனால் தன் கூட்டிலிருந்து வெளிவரமுடியவில்லை.

தன் உயிர் காதலை மறைத்து நடைப்பிணமானான்.

மது, ஆகாஷை அழைத்து மேகாவுடன் பேச அனுப்பினாள். அவன் பேச தயங்க,”மேகாகிட்ட நீ பேசவேண்டிய கட்டாயத்திலிருக்க.” என மேகாவின் மனநிலையை, நேரடியாக தெரிவிக்காமல் அவனை அனுப்பினாள்.

ஆகாஷும் மேகாவின் அறையில் வைத்து அவளை பிடித்தான். அவளின் அறை கதவை அடைத்து அவளை நெருங்கினான்.

‘என்ன வேண்டும்’ என்ற கேள்வியை தாங்கிய பார்வையுடன் அவனை கண்டாள். அவளிற்கு அவனுடன் பூட்டிய அறையிலிருப்பது பயத்தை அளிக்கவில்லை. மதுவுடன் இவ்விருவர் பழக்கம் ஏற்பட்ட நாள் முதல், அவர்களை அறிந்த மேகவர்ஷினியிற்கு எதற்கு பயம் வரப்போகிறது?

நேர்கொண்டு ஆண் அவன் விழிகளை சந்தித்தாள். அவளின் பயமில்லா பார்வையில் எப்போதும்போல் மனம் மயங்கினான் காளையவன். 

“வர்ஸு நான் உன்னை விரும்புறேன். நம்ம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” என சுற்றிவளைக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்தான்.

அவனின் நேரடி கேள்வியில் என்ன பதிலளிப்பது என திகைத்தாள் பெண்ணவள்.

“என்ன ஆகாஷ், நீ என்னை விரும்புனா போதுமா? நான் உன்னை விரும்பவேண்டாமா? எப்போது திருமணத்தை வச்சுக்கலாம்னு கேட்கிற?” என புருவம் உயர்த்தினாள்.

“நீயும் என்னை விரும்புறங்குறது, உன் பார்வை எனக்கு சொல்லிடுச்சு. உன் வாய் வார்த்தை எனக்கு தேவையில்லை.” என்றான் கூர்மையாக.

இப்போது அவன் விழிகளை சந்திக்கமுடியாத பெண், தன் பார்வையை தழைத்து,”அப்படி இல்லை. நான் உன்னை விரும்பலை” குரல் பிசிறு தட்டியது.

அவள் வதனத்தை தன் கரங்களிலேந்தி, தன் முகம் பார்க்க வைத்து,”என் கண்ணை பார்த்து சொல்லு. நான் உன்னை விட்டுடறேன்.” என்றான்.

அவன் விழியை பார்த்து எங்கனம் பொய்யுரைப்பது, அவள் பேச்சற்று நின்றாள்.

“உனக்கும் என்னை பிடிக்கும். அது எனக்கு தெரியும்” என ஆரம்பித்தவன், ஏழு ஆண்டுகளுக்கு முன் கல்லூரியில் அவளை சந்தித்ததிலிருந்து, தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் விளக்கி, எந்த கஷ்டத்திலும் அவளின் நினைவு அவனை விட்டு போகவில்லை என தெரிவித்தான்.

அவனின் காதலில் உருகி கரைந்தது பெண் மனம், இருந்தாலும் தன் நிலையை நினைத்து அவனிடமிருந்து விலக முயன்றாள். அவளின் முயற்சி படுதோல்வியடைந்தது.

“ஏன் வர்ஸு, என்னை தப்பானவனா நினைச்சியா? அதுதான் என்னோட காதலை ஏத்துக்க முடியலையா?” என்றவன், அவளிடமிருந்து விலகி,”உன்னை பார்க்கறதுக்கு முன்ன, நான் பெண்களிடம் பழகியவன்தான், இல்லைன்னு சொல்லமாட்டேன். ஆனால் யாருகிட்டயும் தப்பா பழகினதில்லை, தப்பா பேசியதில்லை. மனசார உன்னை மட்டும்தான் நேசித்தேன். நேசிப்பேன்.” கலங்கிய குரலில் ஆரம்பித்து, திடமாக முடித்தான்.

இப்போது மீண்டும் அவனின் விழிகளை நேர்கொண்டு சந்தித்து, தன் ஆள்காட்டி விரலை அவனின் இதழ்களில் வைத்து, அவனின் பேச்சை தடைசெய்து,”உன்னையோ பிரதாப்பையோ தப்பானவங்களா நினைத்திருந்தால், மதுவை உங்களுடன் பழக விட்டிருக்க மாட்டேன். நானும் பழகியிருக்க மாட்டேன். இதுக்கும் மேல், அவளை உங்களுடன் தனியே தங்க சம்மதிச்சிருக்க மாட்டேன். நானும் இங்க வந்திருக்க மாட்டேன்.” என திடமாக பேசிக்கொண்டே வந்தவளிற்கு,

இப்போது தயக்கம் மேலோங்க,”நான் பெற்றோர்கள் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்ந்தவள். நீங்க ரொம்ப பணக்காரங்க. உங்களுக்கு நான் எப்படி பொருந்துவேன்? உங்கள் வீட்டில் எப்படி சம்மதிப்பாங்க?” என்றாள் தெளிவற்ற குரலில். 

‘அவள் தன்னை தவறாக நினைக்கவில்லை’ என்பதில் ஒரு பெருமூச்சை விட்ட ஆகாஷ்,”இங்க பாரு வர்ஸு, பணக்காரங்கனு எதை வைத்து நீ சொல்லுற? இந்த சொத்தை வைத்தா? அது எப்பவேனாலும் போகும். ஆனா உன்னோட பரிசுத்தமான அன்பு, இந்த சொத்துக்களை விட பெருசு. அது அல்ல அல்ல குறையாதது. அதை எனக்கே குடுத்துட்டு.” என யாசித்தான்.

பெண் மீண்டும் தயங்கி,”உங்கள் வீட்டில்?” என இழுத்தாள்.

அவள் வார்த்தையை இழுக்க, அவன் அவளை இழுத்து தன் கை அணைப்பிற்குக் கொண்டுவந்து,”உனக்கு இந்த பயம் தேவை இல்லாதது. எனக்கு சொந்தமென்று இருக்கிறது அப்பா, பிரது, அவனோட பாட்டி, தாத்தாவும் தான். அவங்க கிட்ட நான் ஏற்கனவே என்னோட விருப்பத்தை சொல்லி இருக்கேன். அவங்களுக்கு பூரண சம்மதம்.” என்றான் அவளின் உச்சந்தலையில் தன் கன்னத்தை பதித்து.

இத்தனை நாட்கள் யாருமற்று அனாதையாக இருந்த பெண்ணிற்கு, மது தன் வாழ்வில் வந்தபிறகு, உடன் பிறவா சகோதரன் சூர்யா கிடைத்தான் என்றால், இப்போது தனக்கே தனக்காக ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது, என்று மகிழ்ந்த பெண்ணின் விழிகளில் ஆனந்த அருவி.

ஆணவனின் இறுகிய அணைப்பினில், பெண்ணவள் விரும்பியே சரண்புகுந்தாள். 

காதலை சொல்ல வார்த்தைகள் தேவையா?

****************

சூர்யா சென்னை வந்து ஒரு வாரம் ஓடியிருந்தது.

தினமும் காலையில், உணவை முடித்துக்கொண்டு சூர்யாவுடன் செல்லும் நிலா, இரவு உணவை அவனுடன் முடித்த பின்பே, வீடு திரும்புகிறாள். கோவையிலிருந்து அவனது காரை கொண்டு வந்ததால், அந்த வாகனத்திலேயே இருவரும் சென்னையை வளம் வந்தனர்.

சூர்யா அவளிற்கு உதவும் சில வாடிக்கையாளர்களை அறிமுகப்படுத்தினான். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை, சந்தித்ததை விட பார்க், பீச், மால் என சுற்றியதுதான் அதிகம்.

இது அனைத்தும் தெரிந்தும், ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பிரதாப். தன் நிலாவை நெருங்கி, அவனது காதலை சொல்லவிடாமல், அவன் தன் அன்னைக்கு செய்து கொடுத்த சத்தியம், தடையாக இருந்தது.

அவனால் ஆராவை ஏற்கவும் முடியாமல், நிலாவை இன்னொருவருடன் பார்க்கவும் முடியாமல், இருதலை கொல்லி எறும்பைப் போல தவித்தான்.

தினமும் காலையில் சூர்யா வரும்போது பிரதாப் அங்கேதான் இருப்பான். தன்னவலை  அழைத்து செல்லும், அவனை கொலைசெய்யும் ஆத்திரம் வரும்.

ஆனால் நிலாவின் முடிவை  பிரதாப் எங்கனம் தடுப்பது. அவளின் சிறு, சிறு ஆசையை கூட, நிறைவேற்ற துடிக்கும் இவனால் அவளிற்கு தடைபோட முடியுமா?

ஞாயிற்றுக்கிழமை

அன்றும் வழக்கம்போல் சூர்யா வந்துவிட்டான், நிலாவை அழைத்து செல்ல. பிரதாப் பொறுக்கமாட்டாமல், நிலாவிடம் கேட்டே விட்டான்,”பேபி இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. ஊரில் அத்தனை பேருக்கும் லீவ். உனக்கு மட்டும் பிசினெஸ் டீலா?” என்றான் இயலாமையுடன்.

“தேவ் சென்னை வந்து ஒரு வாரம் ஆச்சு. இன்னைக்கு கொஞ்சம் ரிலாக்ஸா படம் பார்க்கலாமென்று மாயாஜால் போறோம்.” என்னமோ இத்தனை நாளும் பிஸ்னஸை மட்டும் பார்த்த மாதிரி.

“என்னாது படம் பார்க்க தியேட்டர் போறயா?” என அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

“ஆமா பேபி. பை ஈவினிங் பார்க்கலாம்.” என அவன் உறைந்த நிலையை பயன்படுத்தி சிட்டாக மறைந்துவிட்டாள்.

அவன் நினைவிற்கு வந்து பார்க்கும்போது அவன் அருகில் ஆரா மட்டுமே இருந்தாள்.

****************

ஆகாஷ் மேகாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.

“வர்ஸு பார் அவங்கயெல்லாம் படத்துக்குப் போறாங்க.”

“அதுக்கு?” புருவமுயர்த்தி வினா தொடுத்தாள்.

“நாமும் மூவி போகலாம்.”

“அவங்க போனா, நாமும் போகணுமா?”

“அப்ப‌ அப்ப, இப்படி ஜாலியா சுத்தனும். கொஞ்சம் ரொமான்ஸ் பண்ணனும். அப்பதான் மூளை ஃப்ரெஷ் ஆகும். நீயும் இருக்கையே பட்டிக்காடு.” என்றான் அவள் முகத்தில், தன் கரத்தால் கோலமிட்டு கொண்டே.

அவன் திண்டலில் உடல் சிலிர்த்தாலும், அவன் கரத்தை தட்டிவிட்டு,”நான் பட்டிக்காடா? அப்ப எவளாவது பட்டணத்து காரிய புடி போ.” என முறுக்கிக்கொண்டாள்.

“எனக்கு இந்த பட்டிக்காடுதான் வேண்டும். வேற எவளும் வேண்டாம். நீ என் டார்லிங்தான?”

“இல்லை மதுதான் உன் டார்லிங்.”

“ஹே! அது ப்ரதுவை வெறுப்பேத்த சொல்லுறது. அவன் இருக்கும்போது மட்டும்தான் டார்லிங் சொல்லுவேன். அவனை வெறுப்பேத்தி பார்க்கறது எங்களுக்கு டைம் பாஸ்.”

 “டைம் பாஸா? எங்க அண்ணனை பார்த்தால், உங்க இரண்டு பேருக்கும் எப்படி இருக்கு?” பிரதாப்பிற்காக போர் கொடி தூக்கினாள்.

“பெரிய அண்ணா, ஒன்பது வருஷமா லவ் பண்ணுவானாம். ஆனால் அதை சொல்லமாட்டானாம். அவனை வச்சுக்கிட்டு, ஒன்றும் முடியல. இப்ப நீ படத்துக்கு வரபோறயா? இல்லையா?” என ஏகுறினான்.

இருவரும் கிளம்பி நிலா சென்ற அதே படத்திற்கு சென்றனர்.

இவர்களுக்கு முன்பே பிரதாப், ஆரா ஜோடி அங்கே இருந்தனர்.

*****************

பிரதாப் சுயநினைவடைந்து, நிலாவை படத்திற்கு செல்வதை தடுக்க பார்க்க, அவள் சிட்டாக அந்த இடத்திலிருந்து மறைந்திருந்தாள்.

அதில் கனன்ற கோபத்துடன், அவன் வாயிலை நோக்கி திரும்ப, அங்கே ஆரா ஏளனப் புன்னகையுடன் அவனை நெருங்கி,”என்ன அத்தான், இப்படி பேய் அறைஞ்ச மாதிரி நிக்குறீங்க. ஏதாவது பிரச்சனையா?” என்றாள் ஒன்றும் அறியா பிள்ளைபோல்.

“இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ் (இது உனக்கு தேவையில்லாத விஷயம்)” என முகத்திலடித்த மாதிரி திரும்பி செல்ல பார்த்தான்.

அவனின் நடையை தடை செய்வதுபோல், அவன் முன் நின்று,”அத்தான் நான் வந்து இருபது நாள் ஆகப்போது. எங்கயாவது கூட்டிட்டுப்போங்க.” என கிள்ளை மொழியில் கொஞ்சினாள்.

அவள் கொஞ்சலை சகிக்கமுடியாத பிரதாப்,”நான் வரலை நீ போயிட்டு வா.” என திரும்பிச் செல்லப்போன அவன் கால்கள், அவள் கூறிய,”மாயாஜால் போகலாம் அத்தான்.” என்ற வார்த்தையில் அவனது நடை  தடைபெற்றது.

நிலாவிடம் விரைந்து செல்ல வேண்டும். இவளிடம் பேசிக்கொண்டிருக்க நேரமில்லை, என அவளையும் உடனழைத்து சென்றான்.  

உடன் ஒரு பெண்ணை அழைத்து செல்வதுகூட, அவனை துளியளவு பாதிக்கவில்லை. 

அவன் அங்கே சென்று நிலா எந்த திரையரங்கில் இருப்பாள் என்பது தெரியாமல் திகைத்தான். அவன் தொலைபேசியை எடுத்து ஏதோ செய்து கொண்டிருக்க, மீண்டும் ஆரா தான் வழிகாட்டினாள்.

“நிலா இந்த படத்துக்கு போவதாக சொன்னா.” என்று ஒரு படத்தின் பெயரை சொல்ல, அடுத்த நிமிடம் இரண்டு டிக்கெட்டுகளுடன் அங்கே நுழைந்திருந்தான்.

நிலா என்ற மந்திர பெயரை தாண்டி, அவன் மனம் வேறு எதையும் சிந்திக்கவில்லை.

இவர்கள் அங்கே நுழையும்முன், படம் தொடங்கியிருந்தது. அந்த இருட்டில் அவர்கள் இருக்கையை தேடி அமர்ந்தனர். பிரதாப்பின் விழிகள் திரைப்படத்தில் பதியாமல், தன் நிலாவை தேடி அலைந்தது. அந்த இருட்டில் அவளை தேடுவது சவாலாக இருந்தது.

தாங்கள் அமர்ந்திருந்த வரிசையிலிருந்து, மூன்று வரிசைகளுக்கு முன் அமர்ந்திருந்த நிலா, சூர்யாவை கண்டுகொண்ட ஆரா, பிரதாப்பிடம் அவர்களை சுட்டிக்காட்டி,”அது மதுதானே? அவள் கூட இருக்கிறது சூர்யதேவ் தானே?” என சந்தேகமாக வினவினாள்.

அவள் சுட்டிக்காட்டிய திசையில், திரும்பிய பிரதாப்பின் பார்வை அவர்களை எரித்துக்கொண்டிருந்தது. அவன் மனதில்,’இவளிற்கு அந்த பையனை எப்படி தெரியும்?’ என்ற கேள்வி ஓடினாலும், ஆராவின் பக்கம் திரும்பவில்லை. அவன் கேள்விக்கு விடைபோல் ஆராவே தொடர்ந்தாள்.

“எங்க சீனியர் தான் அவர். எப்பவும் மதுவின் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருப்பார். தினமும் அவளுடைய சுடிதாருக்கு பொருத்தமா, இல்லனா சிவப்பு ரோஜா கொடுப்பார். இப்படித்தான் இரண்டுபேரும் ஜோடி போட்டுக்கிட்டு அடிகடி சுற்றுவார்கள்.” என தொடர்ந்து அவனை கடுப்படிக்கும் படி பேசிக்கொண்டே போனாள்.

ஆனால் அவளின் வார்த்தை எதுவும் அவனது செவியை தீண்டவில்லை. அவனின் முன் விரிந்த காட்சி அவ்வாறு.

சூர்யா அவளது செவியின் அருகில் சென்று ஏதோ சொல்ல, நிலா செல்ல சிணுங்கலுடன் தன் உள்ளங்கைகளை மடக்கி, அவனது தோளில் குத்தினாள். அவளின் கரங்களை சிறையெடுத்த சூர்யா, ஏதோ சொல்ல நிலாவின் முகம் மாற்றத்தை காட்டியது.

அந்த இருட்டிலும் அவளது முகமாற்றத்தை கண்டுகொண்ட பிரதாப் அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல், அவர்களிடம் சென்று நிலாவை அந்த திரையரங்கை விட்டு இழுத்து சென்றான். சூர்யா அவனை தடுக்க முயற்சிக்க, எச்சரிக்கும் பார்வையுடன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்.

நிலாவை அந்த இடத்திலிருந்து கூட்டிச்செல்ல, முனைப்பாக இருந்த பிரதாப், சூர்யா ஆராவின் சைகை பேச்சை பார்க்க தவறினான். ஆராவை தன்னுடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதை மறந்தான். நிலா மட்டுமே அவனது நினைவு முழுவதும் ஆக்கிரமித்திருந்தாள்.

*****************

வீட்டுக்கு அவளை இழுத்துச் சென்ற பிரதாப், அவளிடம் எதுவும் பேசாமல் உணவு மேசையில் அவளை அமரவைத்து, பழங்களை கொடுத்து, அவளது அறைக்கு இழுத்துச் சென்றான்.

அவனது மௌனமே அவனது கோபத்தின் அளவை காட்டியது. எந்த வாக்குவாதமும் செய்யாமல் அவனை பின் தொடர்ந்தாள். 

அவளது அறைக்கு சென்று, அவளின் படுக்கையில் அமர்ந்துகொண்டு, ஒரு பார்வைதான் பார்த்தான். அடுத்த நொடி அவன் மடியில் தலை வைத்து படுத்துவிட்டாள்.

பிரதாப்பின் கரங்கள் தன்னைபோல அவளது தலையை இதமாக வருடியது. அவனது வருடலை அனுபவித்து, அந்த சுகத்தினில், அந்த நண்பகல் நேரத்தில் கண்ணயர்ந்தாள் மதுநிலா.

பிரதாப்பின் கரங்கள் அவளது தலையை வருடினாலும், அவனது பார்வை அவளது முகத்தினில் நிலைத்திருந்தாலும், அவனது மனம் சிந்தனைவசம்.

‘நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என் நிலாவை தவிர்த்து வேறொரு பெண்ணை என்னால், உடலாலும் மனதாலும் நெருங்கமுடியுமா? அவனை, நிலாவின் அருகில் பார்த்ததிற்கே  என்‌ இரத்தம் கொதித்ததே, அவனிடம் நிலாவை என்னால் கொடுக்க முடியுமா?’ என தலையை பிடித்துக் கொண்டான்.

‘என்னைத் தவிர வேறு யாரால் என் நிலாவை, நன்றாகப் பார்த்துக் கொள்ளமுடியும்? என்னால் என் நிலாவை விட்டு விலக முடியாது.” என பைத்தியம் பிடித்தது போல், புலம்பிக் கொண்டிருந்தது அவனின் மனம்.

அவனின் சிந்தனை அன்று துபாயில் ஆகாஷுடன் நடந்த உரையாடலிற்குச் சென்றது.

**********

அன்று விடுதி அறையில் வைத்து நிலாவை குழப்பி, அவளை அணைத்து, முத்தமிட்டுவிட்டு, அந்த அறையை விட்டு வெளியே வந்த பிரதாப்பை, அவர்களது அறையில் வைத்து ஆகாஷ் கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டான்.

“பிரது என்ன நடக்குது இங்க? நீ ஏன் நிலாகிட்ட துபாய் வந்ததிலிருந்து சரியா பேசுறதில்லை? என்ன பிரச்சனை உங்களுக்கு நடுவில்”

“அதுலாம் ஒன்றும் இல்லை” என பிரதாப், ஆகாஷிடம் இருந்து நழுவ பார்த்தான்.

விடா கொண்டதாக ஆகாஷ்,”உன்னை பத்தி முழுசா தெரிஞ்சவன் நான், என்கிட்ட பொய் சொல்லாத. என்ன பிரச்சனை” என்றான் கூர்மையாக.

அதற்கு மேலும் மறைக்க முடியாத பிரதாப், அவளை முதன்முறை சந்தித்ததில் தொடங்கி, வெற்றியிடமிட்ட சவால், வெற்றியுடனான நிலாவின் திருமணச்செய்தி, அடுத்தடுத்து அவன் தலையிலிறங்கிய இடி, அதனால் அவளுக்கு இழைத்த துரோகம், தற்பொழுது அவனது மனம் கட்டுப்பாட்டை இழந்து தவிப்பது, என சிலதை தவிர்த்து  ஆகாஷின் தோளில் இறக்கி வைத்தான். 

அவன் கூறியதில் சில விஷயங்கள் அதிர்ச்சியளித்தாலும், பிரதாப்பின் மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்த ஆகாஷ், என்ன செய்வது என சிந்திக்க ஆரம்பித்தான்.

ஒரு முடிவெடுத்தவனாக,”பிரது, உன் மனசில் நிலா இருந்தது அம்மாவிற்கு தெரியாதபோது, வாங்கிய சத்தியம் அது. இப்போது அம்மா இருந்திருந்தால், உன் மனசில் இருக்கும்,  நிலாவை தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. நீ நிலாவிடம் உன் மனசையும், உன்னோட நிலையையும் விலக்கி சொல்லு. அப்புறம் என்ன பண்ணறதுன்னு முடிவு பண்ணலாம்.” 

“இல்ல நான் நிலா கிட்ட என்னோட மனசை சொல்லமாட்டேன். ஒருவேளை நிலா என்னை தவறாக நினைத்தால், என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. நிலா  அட்லீஸ்ட் தோழியாகவாவது எனக்கு கடைசிவரை வேண்டும்.” என்றான் வருத்தமாக.

ஆகாஷ், நிலாவிடம் பிரதாப்பின் மனநிலையை கூற சொல்லி எவ்வளவோ கெஞ்சியும், பிரதாப் அதற்கு சம்மதிக்கவில்லை.

இது அனைத்தையும் மதுநிலாவை மடியில் படுக்க வைத்து யோசித்துக் கொண்டிருந்தான்.

‘நான் தவறு செய்கிறேனா?’ என அவன் மனதில் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருந்தது. 

சூர்யாவிடம் இப்போது நெருக்கம் காட்டும் நிலா, அவனை கரம் பிடிப்பாளா?

பிரதாப்பின் உயிர்க்காதலை தெரிந்துகொண்டு, அவனை கரம் பற்றுவாளா?

நிலா சூர்யாவின் நெருக்கத்தை பார்த்து கொதிக்கும் பிரதாப், அவனது காதலை தெரிவிப்பானா?

நிலாவின் விருப்பம் என, தன் காதலை மறைத்து ஆராவை கை பிடிப்பானா?

விடை விரைவில்