23

23

ஆசை முகம் 23

வாசகர்கள் வாணியின் கடந்தகாலத்தை அறிந்து கொள்ள வேண்டி…

மாமா பெண், அத்தை பெண் என்பதையும் மீறி, முகில் வேணி, அபிராமி அரசி இருவரும் சிறு வயது முதலே, அதாவது இருவழிச் சொந்தத்தையும் கடந்து, மனமொத்த தோழிகள்.

இருவரது பெற்றோரும் பெண் கொடுத்து, பெண் எடுத்த வகையில் உற்ற நெருங்கிய உறவினர்களே!

அபிராமி கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.  வேணி குடும்பம் சேலத்தில் வசித்தது. 

முத்துரங்கன், அபிராமிக்கு இடையே பிறந்த நான்கு குழந்தைகளும் அதிக நாள் வாழாது இறந்திடவே, ரங்கன் மற்றும் அபியை பொத்திப் பொத்தி வளர்த்திருந்தார்கள் வில்லாயுதமும், வேதவள்ளியும்.

ரங்கனுக்கும் அபிக்கும் அதிக வயது வித்தியாசம். அதனால் ரங்கனுக்கு சுகுணாவைத் திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகள் என்றான பிறகே பள்ளிக் கல்வியை முடித்திருந்தாள் அபி.

வேதவள்ளிக்கு திடீரென உடல்நலக் குறைபாடு காரணமாக, மருமகள் சுகுணாவை நம்பி அபியை ஒப்படைக்க மனமில்லாது, தனது தமையன் மற்றும் கணவனின் தங்கை பொறுப்பில் மகளை விட்டிருந்தார்.

முதலாமாண்டு கல்லூரிக் கல்வி இனிதே துவங்கிட, தோழிகள் இருவரும் ஒருங்கே சென்று வந்தனர்.

இருவரும் நெருங்கிய உறவு என்கிற நிலையில், பார்த்ததுமே உறவுக்காரப் பெண்கள் இவர்கள் எனக் கணித்திடும் தோற்றம்.

முகில் வேணி நல்ல நிறம் என்றால், அபிராமி மாநிறத்துக்கும் சற்று குறைந்த நிறம்.

சிறு வயதிலேயே அபிராமி கண்ணாடி அணிந்திருந்தாள்.

கூர்ந்து நோக்கினால் சில வித்தியாசங்கள் புலப்படும். அவர்களோடு இருந்த நெருங்கிய தோழிகளுக்கு மட்டும் இவ்விசயம் தெரியும்.

இருவரும் வெவ்வேறு துறை என்பதால் வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

வேந்தன் முகிலைத் தவிர வேறு யாரையும் அந்த காலகாட்டத்தில் கவனத்தில் கொண்டிருக்கவில்லை என்பதால் முகிலோடு வரும் அபிராமியை கருதவில்லை.

பருவ வயதின் தாக்கம், காண்பவற்றின் தேக்கம், சமயம் கிட்டும்போது ரகசியமாகப் பேசி, சிரித்து தோழிகள் மகிழ்வதை வாடிக்கையாக்கி இருந்தனர்.

உண்மையில் முகிலுக்கு வேந்தன் மீது காதலெல்லாம் இல்லை.

ஆனால் அவனது பார்வை அவளை ஆராதித்து மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.  அவனது தொடரல் அவளை இன்பமாக வைத்திருந்தது.

மற்றபடி எழில்வேந்தன் எனும் நபரைப் பற்றிய தேடலோ, ஆசையோ, காதலோ எதுவுமே பெண்ணுக்கு அப்போது இல்லை.

ஆனாலும் கிண்டலுக்கும் கேலிக்கும் உரிய உறவாக அபிராமி இருப்பதாலோ என்னவோ, எழில்வேந்தனோடு கல்லூரியில் எழும் பேச்சுக்களை வீட்டிலும் தொடர்ந்திருந்தாள்.

கிண்டல் செய்து நகைப்பது, வேந்தன் பின்னோடு வருவதைப் பற்றிய நையாண்டியான பேச்சுகள் என தொடர்கதையாகி இருந்தது.

வில்லாயுதம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து, மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

மனைவியை மருத்துவமனையிலும், மகளை மச்சான் வீட்டிலுமாக விட்டிருந்தாலும், தனது பொறுப்பை உணர்ந்த மனிதர்.

அவ்வப்போது நேரங் கிடைக்கும்போது மகளைக் கல்லூரியிலோ, அல்லது வீட்டிலோ சென்று சந்திப்பதை வாடிக்கையாக்கியிருந்தார்.

தங்கையின் வீடு என்பதுவேறு!

கல்லூரியில் சந்திக்க எண்ணி வந்த வேளையில், தங்கை மகளும், தன் மகளும் கல்லூரி விட்டு பேருந்து நிறுத்தம் நோக்கி வருவதைப் பார்த்திருந்தார்.  இருவரும் அவசரமாக பேருந்தை நோக்கி ஒடி வரும்போது, அவர்களின் பின்னோடு வந்த ஆடவன் அவர்களிருவரையும் நோக்கி வருவதைக் கண்டிருந்தார்.

வேணியின் கையிலிருந்த நோட்டிலிருந்து தாள் விழுந்ததையும், அதை வேந்தன் குனிந்து எடுத்ததைக் கவனிக்காததுதான் கஷ்டகாலத்தின் உச்சம்.

கையில் நீட்டிய தாளோடு வந்து, முகிலின் கையில் வேந்தன் தந்ததையும், முகில் அதைப் பெற்றுக் கொண்டதையும், அதை அவள் மார்போடு அணைத்துப் பிடித்திருந்த நோட்டிற்குள் பத்திரப்படுத்தி வைப்பதையும், அபியும் அதைக் கவனித்தாலும் எந்த பிரதிபலிப்புமின்றி இருப்பதையும் கண்டவர், பேருந்து கிளம்பியதை உணர்ந்து, இருவரும் வீட்டிற்கு வருமுன் சென்று காத்திருந்தார்.

படிக்க என இருவரும் அறைக்குள் முடங்கும்போது, பாதி நேரம் வேந்தனைப் பற்றியும், மீத நேரம் படிப்பு என இருந்த தருணங்கள் நிறையவே சென்றது.

வயதின் குற்றம் அது! அந்த வயதில் அவ்வாறான பேச்சுகள் இன்பமாகத் தோன்றிட, தவறு என்றாலும் அதைச் செய்யாமல் கடந்த இளசுகள் குறைவே!

அதேபோல முந்தைய நாளில், ஃபிளேம்ஸ் என்று எழுதி, முகில்வேணி, எழில்வேந்தன் எனும் பெயருக்குப் வேணி பார்த்தபோது மேரேஜ் என்று வந்திருந்தது.

உடனே அந்தத் தாளை நோட்டிலிருந்து கிழித்ததோடு, அதை சுக்கு நூறாக்கியபடியே, “இதுலெல்லாம எனக்கு நம்பிக்கை இல்ல-டீ”, என்ற முகிலின் கூற்றைக் கேட்ட அபி

“எனக்கும், வேந்தன் அண்ணனுக்கும் ஃபிளேம்ஸ் போட்டுப் பாரு முகில். சிஸ்டர்னு வருதானு பாப்போம்.  அப்டி வந்தா உனக்கும், வேந்தனுக்கும் இடையில கண்டிப்பா எதாவது நடக்கப் போகுதுனு எடுத்துக்கலாம்லடீ!”, என அபி ஆர்வமாகக் கூற, சிரத்தையோடு தனது கையில் இருந்த நோட்டின் கடைசிப் பக்கத்தில் போட்டுப் பார்த்தாள் முகில்.

அதில் இருவருக்கும் இடையேயான உறவு (காதலன்)லவ்வர் என வந்திடவே, அதைக்காட்டி முகில் அபியை கிண்டலடிக்க, “இதுலாம் சும்மாடீ.  இதையெல்லாம் நாம நம்பக்கூடாது”, அபி அழும் குரலில் பதற

“யாரு இப்ப அதை நம்பினா! கூல்-டீ!”, முகில்

“நீதான் ஒரு எதிர்பார்ப்புல உனக்கு மொதல்ல போட்டுப் பாத்த.  இப்ப ஒன்னும் கெட்டுப் போகலை.  ஆனா மறக்காம அந்தப் பேப்பரை சுக்கு நூறா கிழிச்சுப் போட்டுருடீ.  யாரு கண்ணுலயும் பட்டு வம்பாப் போயிறப் போகுது”, தனது வீட்டு பெரியவர்களைப் பற்றி அறிந்து கூறிட, முகிலும் நோட்டிலிருந்து பேப்பரைக் கிழிக்கத் துவங்கியதுமே, இருவரையும் முகிலின் தாய் அழைத்திருந்தார்.

கிழித்த தாளை நோட்டிற்குள் வைத்து, அதை அப்படியே எடுத்து ஓரமாக வைத்துவிட்டு அவசரமாக அறையிலிருந்து வெளியே சென்றிருந்தனர் இருவரும்.

அடுத்து வந்த நேரத்தில் இரவு உணவு, அதன்பின் சிறிதுநேரம் தொலைக்காட்சி என அந்தப் பேப்பரை மறந்து விட்டிருந்தாள் முகில். அபிக்கும் அதைப் பற்றிய ஓர்மை வரவில்லை.

அடுத்த நாள் மாலை நேரம் வரும்வரை அதைப்பற்றிய எண்ணமே இருவருக்கும் எழவில்லை.

கல்லூரி முடிந்து கிளம்பும்போது, “அபிம்மா உன்னை ஆன்சிலரி மேம் பாக்கணும்னு சொன்னாங்களே, போயிப் பாத்தாச்சா”, என துறைத்தோழி ஒருத்தி கேட்டதும், அபி தனது கையில் இருந்த நோட்டை முகிலிடம் தந்துவிட்டு, “நீ போயிக்கிட்டே இரு.  நான் என்னானு பாத்துட்டு வந்திரேன்”, கூறிவிட்டுச் சென்றிருந்தாள்.

திரும்பி வந்த முகிலோடு இணைந்து கொண்டபோதும், தனது நோட்டை வாங்கவில்லை.

ஆசிரியர் தந்த அவளது லேப் ரெக்கார்டைக் கையில் வைத்திருந்ததால், அத்தோடு நடக்கத் துவங்கியிருந்தாள் அபி.

இருவரது லாங்க் சைஸ் நோட்டையும் முகில் எடுத்து வரும்போதுதான் அந்தத் தாள் கீழே விழுந்திருந்தது.

அதைக் கவனித்து கர்ம சிரத்தையோடு ஒருவன் பேருந்தில் எடுத்து வந்து தந்ததைக் கண்டதும், முதலில் வேந்தன் தனக்கு காதல் கடிதம் கொடுத்ததாக நினைத்துத்தான் வாங்கி தனது நோட்டிற்குள் வைத்திருந்தாள் முகில்.

கீழே விட்டு, அதை உடன் வரக்கூடிய மற்ற மாணாக்கர்கள் பார்த்தால் இன்னும் கேலிக்கு ஆளாக நேரிடும் என்றே படபடத்த உள்ளத்தோடு தனது நோட்டிற்குள் வைத்திருந்தாள்.

அதை வில்லாயுதம் பார்த்தது தெரியாமல் வீட்டிற்கு வரும் வழியில் இருவரும் வேந்தனின் புதிய கடித்தத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே, “போயி ரெஃப்ரெஷ் பண்ணிட்டு, டீயெல்லாம் குடிச்சிட்டு ரூம்ல போயி படிக்க ஆரம்பிக்கும் முன்ன லவ் லெட்டரைப் படிக்கிறோம்.  இதுவரை லவ் லெட்டர் எப்டியிருக்கும்னு தெரியாததால, இதைப் படிக்க ஒரே ஆவலா இருக்கு. என்னதான் அப்டி எழுதிருக்கான்னு பாப்போம்”, என்றபடி வர. வந்து நுழைந்ததுமே கையில் இருந்த நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட, ஏனென்று புரியாமல், ஆனால் வேந்தன் கொடுத்த காதல் கடிதத்தின் நினைவில் திகிலோடு முகிலும், அபியும்.

இருவருக்குமே முந்தைய நாள் பேப்பரைக் கிழித்து அதை அப்படியே வைத்தது மறந்திருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் பூகம்பமே நிகழ்ந்தாற்போல மாறியிருந்தது வீடு.

முதலில், சோதனை முகிலைச் சந்தேகித்துத்தான் ஆரம்பித்திருந்தது.

வேதனை அதில் அபி வசமாகச் சிக்கியிருந்தாள்.  இருவரது பேச்சையும் யாரும் கேட்கத் தயாராக இருக்கவில்லை.

ஆனால் தாளில், அபிராமி அரசி, எழில்வேந்தன் என்று இருந்தது. பேனாவால் சில எழுத்துகள் அடிக்கப்பட்டிருக்க, உண்மையில் பெயர் என்ன என்பது எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.  அதனருகே ஃபிளேம்ஸ், பிறகு எல் என எழுதியதன் அருகே லவ்வர் என எழுதியிருந்தது.

பெயரை எல்லாம் பெரியதாக கணக்கில் கொள்ளவில்லை. லவ்வர் என எழுதியதுதான் பிரச்சனையாகி பேச்சுகள் தொடர்ந்தது.

“அவளுக்கு நீ தூதா!”, என முகிலைப் பார்த்து வில்லாயுதம் கேட்க

“…”, இல்லை என கண்ணீரோடு மறுத்தவளை விட்டுவிட்டு, அபிக்கு அர்ச்சனைகள் மட்டுமன்றி, அடி, உதை என அரங்கேறியிருந்தது.

அடியில் வலி தாளாது கதறினாலேயொழிய, விளையாட்டுக்கு எழுதிப் பார்த்தோம் என்றோ, தனக்கும் அவனுக்கும் சம்பந்தம் எதுவுமில்லை என்றோ கூறினாலும் யாரும் நம்புவார்களா?  அதனால் பதிலே பேசாமல் அனைத்தையும் பொறுத்திருந்தாள்.

முகிலைக் காட்டிக் கொடுத்தால், தனக்கு நேர்ந்த அதே நிலைதான் அவளுக்கும் கிடைக்கும் என அமைதியாகவே கடந்திருந்தாள் அபிராமி.

“படிக்க அனுப்புனா, புருசன தேடூறீகளோ”, என்றதற்கும் மேலான வார்த்தைகள் எல்லாம் நாரகாசமாக இருந்தது.

ஆனாலும் தோழியைக் காட்டிக் குடுக்கவே இல்லை.

வில்லாயுதம் மகளை தனியே அழைத்து விசாரித்தபோது, “அப்படி ஒரு விசயமே தங்கள் இருவருக்கிடையே இல்லை”, என்கிற அபியின் வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.  முகிலையும் வாயைத் திறக்காதே என்றிருந்த அபி, மிகுந்த பாதிப்பிற்குள்ளாகியிருந்தாள்.

வேதவள்ளிக்கு இன்னும் உடல்நிலை குணமாகவில்லை.  அபியை கிராமத்தில் அழைத்துச் சென்று சுகுணாவோடு விடவும் மனமில்லை. அடுத்து உடனே திருமண ஏற்பாடுகள் துவங்கிட,  உடனே மாப்பிள்ளை என யோசித்ததுமே, “ஏன் மாப்பிள்ளைக்கு வெளியே அலைய, நம்ம திருமேனிக்கும் கல்யாண வயசுதான.  அவனுக்கே கட்டி வச்சிரலாம்”, என வில்லாயுதத்தின் தங்கை, அதாவது முகில்வேணியின் தாய் முடிவெடுத்திருந்தார்.

இருவராலும் எதுவும் செய்ய இயலாத நிலை.  இருவரது பேச்சையும் யாரும் கேட்கும் நிலையில் யாருமில்லை.

தனக்கு தற்போது திருமணம் வேண்டாம், படிக்க வேண்டும் என்கிற அபிராமியின் வார்த்தைகளை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

முகில்வேணியின் அண்ணனான திருமேனிக்கே அவசர அவசரமாக அபியைத் திருமணம் முடிந்திருந்தார்கள்.

தப்பே செய்யாமல், அபிராமி அரசி திருமதி. திருமேனி ஆகியிருந்தாள்.

உண்மையில் எல்லாம் விளையாட்டாகவே இருந்தது. ஆனால் இவ்வளவு விபரீதங்களை இப்பேச்சு கொண்டு வந்திடும் என அறியாமலேயே பெரும் இழப்புகளை அடுத்தடுத்து சந்தித்தாள் அபி.

முகிலிடம் அபி, “பேசாம இருடீ.  நாந்தான் தெரியாம மாட்டிக்கிட்டு கல்யாணம்வரை வந்துட்டேன்.  இப்ப நீ வந்து உண்மையச் சொன்னா, உன்னை காலேஜ்ல இருந்து நிறுத்தினதோட, உன்னையும் புடிச்சு யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சிருவாங்கடீ”, என்றிருக்க, மனம் ஒப்பாதபோதும் அமைதியாகியிருந்தாள் முகில்.

முகில்வேணியை, “நீ படிச்சுக் கிழிச்சது போதும்.  பேசாம அப்டியே டிஸ்டன்ஸ்ல கண்டினியூ பண்றதுக்கு ஏற்பாடு பண்ணறேன்”, என அதையும் மாற்றியிருந்தனர்.

ஆரம்பத்தில் 

திருமேனியிடம் மட்டும் சில மாதங்களுக்குப் பிறகு விசயத்தைப் பகிர்ந்திருந்தாள் அபி.

திருமணத்திற்குப் பிறகும் குசுகுசுவென இருவரது பேச்சுக்களும் தொடர்ந்தன.

அவர்கள் இருவருமே வழமைபோல தங்களுக்குள் எதையேனும் பேசுவது, சிரிப்பது என நாள்கள் விரைந்தது.

அபி இதற்கிடையே கருவுற்றாள்.  முகில்வேணி தோழியை நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டாள்.

நாள்கள் விரைந்தது.  

ஆனாலும் விதி, அபியின் கணவனை ஒரு விபத்தில் மிகவும் கோரமாகப் பறித்துக் கொண்டது.

மருமகனின் இறப்பினைக் கேட்டதுமே மனமுடைந்திருந்தார் வில்லாயுதம்.

அதன்பின் அனைத்தையும் அபியின் தாய்தான் எடுத்துச் செலுத்தினார். அபியின் அவசரத் திருமணம் எதற்காக, தற்போது அபியின் நிலை எதனால் என எந்தக் கேள்விக்கும் மனைவிக்கு விளக்கம் தரத் தயாராக இல்லை வில்லாயுதம். முத்துரங்கனுக்குகூட தெளிவாக விசயம் பகிரப்படாமல் எல்லாம் முடிவுக்கு வந்திருந்தது.

அபியின் தாய் மருத்துவமனையில் இருந்ததால் எதுவும் விசயம் தெளிவாகத் தெரியாத நிலை.

அபிக்கு, மகப்பேறு நேரம் நெருங்கிட, உருவத்தில் தனது அத்தையைப் போன்று பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

புண்ணியான தினத்தில், குழந்தைக்கு பெயர் சூட்டுவதை விட்டுவிட்டு, அபிக்கு அடுத்த திருமணத்திற்கான பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அபி எவ்வளவோ மறுத்தும் வில்லாயுதம் செவி சாய்க்கவில்லை.

பெண் மீதான நம்பிக்கையின்மை அவ்வாறு முடிவெடுக்கத் தூண்டியிருந்தது.

வேதவள்ளியும் கணவனிடம் மன்றாடிப் பார்த்தார்.  எதற்கும் அசைந்து கொடுத்தாரில்லை.

குழந்தையை வளர்த்துக் கொண்டு அப்படியே இருந்து விடுவதாக அபிராமி எடுத்துக் கூறியும், அங்கு அவளின் பேச்சுகள் காது கொடுத்துக் கேட்க யாருமில்லை.

திருமணத் தேதி நெருங்கவே, தோழி முகிலுக்கு விசயம் சொன்னவள், அவள் வருமுன்னேயே தற்கொலை செய்து கொண்டிருந்தாள்.

அதுவரை பொறுமை காத்தவள், தோழியின் மரணத்தைக் கண்டு வெகுண்டிருந்தாள் முகில்.

பிறந்த பெண் குழந்தையை தூக்கி தன்னோடு அரவணைத்துக் கொண்டவள், “பெத்த புள்ளைய முதல்ல வெளி ஆளுங்களை விட வீட்டுல உள்ளவங்க நம்பணும்.  தப்பாவே பொண்ணு எதாவது பண்ணியிருந்தாலும் கூப்பிட்டு என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கணும். அடுத்து எடுத்துச் சொல்லியிருக்கலாம்.  ஆனா என்ன நடந்துதுனே கேக்காம உங்க இஷ்டத்துக்கு நீங்களா ஒரு முடிவு பண்ணி, கடைசியில அபியக் கொன்னுட்டீங்க.  இனி இந்தக் குழந்தையையும் இங்க விட்டா, இதுக்கும் அதே நிலைமைதான்.  அதனால இனி இந்தக் குழந்தை உங்கட்ட இருக்கறதைவிட, எங்கிட்டயே இருக்கட்டும்”, என அண்ணன் மகளை தன்னோடு தூக்கிக் கொண்டவள்,

குழந்தையை வாங்க வந்தவர்களிடம், “எழில்வேணி எங்க அண்ணன் மக! எப்டிப் பாத்தாலும் அவ எங்க வீட்டுப் பொண்ணு” என்றதுமே அனைவரும் புரியாமல் நோக்க, “பிறந்த புள்ளைக்கு பேரு வைக்கக்கூட நேரமில்லாம, பச்ச உடம்புக்காரிக்கு அடுத்த கல்யாணத்துக்கு நாள் பாத்தீங்கள்ல.  அதான் நானே குழந்தைக்குப் எழில்வேணினு பேரு வச்சிட்டேன்” என்றவள்,

“நான் விளையாட்டா பண்ண தப்புக்கு, என்ன நடந்ததுன்னே தெரியாம நீங்களா ஒரு முடிவெடுத்து கடைசியில அபிய கொன்னுட்டீங்க.  அந்த லூசும் நான் சொல்ல வந்தப்பல்லாம், சொல்லாத சொல்லாதன்னே எல்லாத்தையும் அது தலையில இழுத்துப் போட்டுட்டு கடைசியில என்னையும், இந்த பச்சப் புள்ளையையும் அம்போனு விட்டுட்டுப் போயிச் சேந்துட்டா.

நியாய, அநியாயம் தெரியாதவங்களை நம்பி குழந்தையை உங்ககிட்ட விட மனசில்ல எனக்கு. இனி எங்க அண்ணன் மகதான் எனக்கு எல்லாமே! நானே அவளை வளத்து ஆளாக்கிக்குவேன்”, என்று குழந்தையைத் தர மறுக்க, இரு குடும்பங்களுக்கும் இடையே பிரிவினை துவங்கியது.

முகிலை அப்படியே விட இயலாது என்பதாலும், முகிலுக்கு திருமணம் செய்து வேறு வீட்டிற்குச் செல்லும்போது குழந்தை தடையாக இருக்கும் என எண்ணியதாலும், பெற்றோர் இருவரும் யோசித்து, முகிலுக்கு விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆனாலும் வருடம் கடந்திருந்தது.  பெரியவர்கள் வேணிக்குத் தெரியாமல் பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்.

திருமணத்திற்கு மறுத்தவளை கட்டாயத் திருமணம் செய்வித்ததோடு, குழந்தையை அபியின் தாயான வேதவள்ளியிடமே ஒப்படைத்திருந்தனர்.

அதற்குமேல் புகுந்த வீட்டினரின் அடக்குமுறையும், பெற்றோரின் ஒத்துழைப்பும் இல்லாததால் எழில்வேணியை இழக்கும் நிலைக்கு வந்திருந்தாள் முகில்வேணி.

உண்மை தெரிந்த பிறகு புலம்பி ஆவதென்ன?  அதன்பின் அவர்கள் குடும்பத்தோடு மல்லுக்கட்டி ஆவதென்ன? வார்த்தைகள் மனித மனங்களை கத்தியின்றி கூறுபோடும் வித்தை அறிந்தது. அதனால்  உறவுகளும் அந்நிகழ்விற்குப்பின் பிரிந்திருந்தது.

ஆதரவில்லாத குழந்தை எழிலுக்காக வயதான வில்லாயுதமும், வேதவள்ளியும் வாழத் துவங்கினர்.

தனது தவறை காலங்கடந்து உணர்ந்த அபியின் தந்தை, மனஉளைச்சலால் சில ஆண்டுகளிலேயே மரணமெய்திட, வேதவள்ளி தன் பேத்தியை நன்றாகவே வயோதிகத்திலும் கவனித்துக் கொண்டார்.

அவருடைய மறைவிற்குப் பிறகே முத்துரங்கன் தங்கை மகளின் மீதான பொறுப்பை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருந்தார்.

…………………………

திருமாறன் தன்னோடு பகிர்ந்து கொண்டதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள் வாணி.

வீட்டிற்கு வந்தவள் வேந்தனை எதிர்பார்த்திருந்து திருமாறன் வந்து தன்னைச் சந்தித்ததோடு, தனது திருமணத்தை நிறுத்தியது அவன்தான் என்று தன்னிடம் கூறியதையும், அதன்பின் தன்னைத் திருமணத்திற்கு கேட்டதையும் வேந்தன் அறிந்து கொள்ள வேண்டி கூற நினைத்தாள்.

அப்போது, திருவின் அறியாமையை எண்ணியதும் நகைப்பு தோன்றிட, விசயத்தை வேந்தனிடம் சிரித்தபடியே, வேந்தனைக் காண வெட்கம் தன்னைத் தடுத்திட நாணமேறிய வதனத்தோடு கூறினாள்.

வேலை அசதியோடு வந்தவனுக்கு, திருவைப் பற்றிப் பேசத் துவங்கியதுமே எரிச்சல் வந்திருந்தது.

ஆனால் அவன் வாணியைக் காண வந்தது, அடுத்து அவளது திருமணத்தை அவன் நிப்பாட்டியதாக வாணி சிரித்தபடியே தன்னிடம் பகிர்ந்தது அனைத்துமே பெண்ணது நிலையை வேந்தனுக்குள் மாற்றி நினைக்கச் செய்திருந்தது.

திருவை திருமணம் செய்ய விரும்பியதால் உண்ட சந்தோசத்தால் எழுந்த சந்தோச நகைப்புடன் கூடிய வெட்கம் என தவறாக யோசிக்கச் செய்திட, வாணி தன்னை விட்டுப்போகும் உணர்வில் ஆற்றாமையோடு, சுறுசுறுவென கோபம் வந்திருந்தது.

கோபத்தைக் கட்டுப்படுத்தினாலும், என்ன பேசுகிறோம் என்கிற உணர்வை இழந்திருந்தான்.

அடுத்து அவன் தன்னைத் திருமணத்திற்கு கேட்டதை பெண் கூறியதும், வேந்தன் தனது கட்டுப்பாட்டை இழந்து, பெண் அடுத்து பேச வருமுன்னே, வாணிக்கும் அதில் விருப்பமோ என தவறாக எண்ணியவன், அவளது விரும்பத்தை தன்னிடம் பகிர்ந்து கொண்டிருந்ததை நினைவில் கொள்ளாது, “அவனை மேரேஜ் பண்ணிக்க என்னோட ஹெல்ப் எதுவும் வேணுமா என்ன?”

வேந்தனது பேச்சில் நிமிர்ந்து வேந்தனை நோக்கியவள், அதற்குமேல் எதுவும் பேசமுயலவில்லை.

வேந்தனது வார்த்தையில் இருந்த கடினத்தன்மையை அவள் இருந்த நிலையில் உணர முடியவில்லை.

வேந்தனது பேச்சில் அமிலத்தை வாரியிறைத்த உணர்வு மட்டுமே பெண்ணுக்குள் உண்டாகி அவளை வேந்தன் மீது வெறுப்பை உண்டாக்கியிருந்தது.

……………

சத்ரு…

பதற்றம்

கோபம்

வருத்தம்

வஞ்சினம்

பொறாமை

கவனமின்மை

தெளிவின்மை

புரிதலின்மை

காதலின் சத்ரு!

…………………………

Leave a Reply

error: Content is protected !!