25

Wedding-Journey-tropical-beach-in-Maldives-Romantic-loving-couple-photo-Wallpaper-Hd-3840x2400-1920x1440-c58689e2

25

25                         

அருகில் இருந்த மருத்துவமனையில், ஆதிராவை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.. சித்தார்த் டாக்டரிடம் பேசிக் கொண்டிருக்க, அவனது அருகில் கண்ணீருடன் கார்த்திக் நின்றுக் கொண்டிருந்தான்..

“அவங்களுக்கு பயப்படற அளவுக்கு ஒண்ணும் இல்ல.. எதுவுமே சாப்பிடமா டிஹைடிரேட் ஆகி இருக்காங்க.. அதுனால வந்த மயக்கம் தான்.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சில ரொம்ப சோர்ந்து இருக்காங்க.. அதோட அவங்க மயங்கி விழுந்து யாருமே கவனிக்கலையா, இல்ல தூங்கறாங்கன்னு விட்டுட்டாங்களான்னு தெரியல.. ஆனா.. அவங்க மயங்கி ரொம்ப நேரம் ஆகிடுச்சு.. ட்ரிப்ஸ் போட்டு இருக்கு.. நல்லா தூங்கி அவங்களா கண் விழிக்கட்டும்.. அப்பறம் நீங்க பாருங்க..” என்று மருத்துவர் சொல்லிக் கொண்டிருக்க,

“வேற ஒண்ணும் பயப்படற மாதிரி இல்லையே..” மருத்துவரைக் கூர்மையுடன் பார்த்துக் கொண்டே சித்தார்த் கேட்க, அந்த வார்த்தையைக் கேட்ட கார்த்திக்கின் இதயம் தான் சில்லு சில்லாக உடைந்தது..

“ச்சே..ச்சே.. ஷி இஸ் கம்ப்ளீட்லி நார்மல்.. தூங்கி எழட்டும். நீங்க போய் பாருங்க.. அவங்க நார்மலாகிட்டாங்கன்னா டிச்சார்ஜ் செஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்..” என்று விட்டு அவர் நகர்ந்து செல்ல, சித்தார்த் கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தான்.. 

கார்த்திக்கின் கண்கள், வாடி, வதங்கி இருந்த ஆதிராவின் முகத்தில் தான் நிலைத்து இருந்தது.. ஆதவன் அடித்தது கன்னத்தில் வீங்கி இருக்க, விசித்திரா அவளது வாயில் அடித்ததில் உதடும் வீங்கி இருந்தது.. அதைப் பார்த்தவனுக்கு மனதில் அவ்வளவு வலி.. ஆதவனையும் விசித்திராவையும் அடித்து துவைக்க அவனுக்கு வெறியே எழ,

“ரெண்டு பேரையும் சும்மா விடக் கூடாது சித்தார்த்.. எப்படி அவளை அடிச்சிருக்கான். அதுக்கே அவனோட கையை உடைக்கணும்.. என்னோட ஆதிராவை அடிச்சக் கையை உடைக்கணும்.. அவ எல்லாம் பொண்ணா? ச்சை..” பல்லைக் கடித்துக் கொண்டே அவன் சொல்ல, சித்தார்த் அவனது தோளைத் தட்டினான்..

“ஆதிரா கிடைச்சிட்டா இல்ல.. அதுக்கு சந்தோஷப்படுங்க கார்த்திக்.. எங்களுக்கு ட்ரீட் வேணும் சொல்லிட்டேன்.. உன்னோட சேர்ந்து தங்கச்சியைத் தேடி நாங்க அலைஞ்சு இருக்கோம்..”  கேலியாகச் சொல்ல,

“கண்டிப்பா சித்தார்த்.. ஆதிரா சரி ஆகட்டும் எல்லாரும் சேர்ந்து போகலாம்..” கார்த்திக் பதில் சொல்லவும்,  

“தட்ஸ் குட்.. மத்ததை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம்.. இப்போ கண்ணைத் துடைச்சிக்கிட்டு போய் வீட்ல அவங்க அம்மா அப்பாவுக்கு சொல்லுங்க..” சித்தார்த் அவனுக்கு நினைவூட்ட,

“நான் சொல்லிட்டேன் சார்.. அவங்க கிளம்பி வந்துட்டு இருக்காங்க..” சரவணன் சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்து தலையசைத்த கார்த்திக், மெல்ல ஆதிராவின் அருகே சென்றான்..

அவளது அருகில் முட்டிப் போட்டு, அவளது முகத்தை நேராக பார்ப்பது போல அமர்ந்தவன், அவளது அடிப்பட்ட கன்னத்தையும், உதட்டிலும் மெல்ல வருடியவன், அவளது தலையை மென்மையாக வருடி, அவளது நெற்றியில் இதழ் ஒற்றியவன்,

“சீக்கிரம் கண்ணத் திறந்து என்னைப் பாருடி.. அப்புன்னு கூப்பிடு கண்ணம்மா.. உன்னோட குரலை எனக்கு கேட்கணும்..” அவளது காதின் அருகில் புலம்பியவன், அவளது கையைப் பிடித்து, அவளது விரல்களை வருடிக் கொண்டே அவள் எழுவதற்காக காத்திருக்கத் துவங்கினான்..   

கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த சித்தார்த், “உங்க அண்ணாவுக்கு ஒரு ஜூஸ் போல ஏதாவது வாங்கிட்டு வாங்க சரவணா ப்ளீஸ்.. ஆதிரா எழுந்தா அவ கிட்ட அடிவாங்கவே அவனுக்கு நிறைய தெம்பு வேணும்.. இவன் ரொம்ப சோர்ந்து இருந்தா அவளுக்கு அடிக்கத் தோணாது இல்ல.. எப்படி நாம அந்த கண்கொள்ளாக் காட்சியை மிஸ் பண்றது?” சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்லவும்,

“இதோ போயிட்டு வரேன்..” என்று சரவணன் கிளம்பிச் செல்ல, சித்தார்த், கார்த்திக்கின் அருகில் சென்று அவனது தோளைத் தொட்டான்..

“கார்த்திக்.. அவ நல்லா தூங்கி எழட்டும்.. நீ வந்து வெளிய உட்காரு.. எவ்வளவு நேரம் இப்படி முட்டி போட்டு உட்கார்ந்து இருப்ப? வா.. சரவணன ஜூஸ் வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேன்.. மூணு பேரும் குடிக்கலாம்..” என்று சித்தார்த் சொல்லி அவனைக் கைப் பிடித்து எழுப்ப, கார்த்திக் மெல்ல எழுந்துக் கொள்ள, ஆதிராவைப் பிடித்திருந்த அவனது கை, இப்பொழுது ஆதிராவின் கையில் பிடி பட்டு இருந்தது.. 

அவனது விரலை அவள் இறுகப் பிடித்திருக்க, கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்க்க, அதைப் பார்த்த சித்தார்த், கேலியாக தலையை அசைத்து, “இருங்க சார் உங்களுக்கு சேர் போடறேன்.. அப்படியே கையைப் பிடிச்சிக்கிட்டு உட்காருங்க.. மேடம் தூக்கத்துல கூட உங்க கையை விட மாட்டேங்கிறாங்க..” கேலி செய்துக் கொண்டே, அவன் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட, தனது கையைப் பிடித்திருந்த ஆதிராவின் கையை மென்மையாக வருடியவன், சித்தார்த்தைப் பார்த்து புன்னகைத்தான்..

“இவ எப்போ பிடிச்சான்னே தெரியல..” சந்தோஷத்துடன் கார்த்திக் சொல்லவும்,

“சரி.. சரி.. நம்பிட்டேன்..” என்றவன்,

“தேங்க்ஸ் சரவணா.. நீயும் குடி.. உங்க அண்ணனுக்கும் கொடு..” சரவணன் கொண்டு வந்திருந்த ஜூசை வம்பு செய்துக் கொண்டே குடிக்க, சித்தார்த்திற்கு மதியிடம் இருந்து அழைப்பு வந்தது..

“அப்படியா? எப்படி? என்னாச்சு? அப்போ குழந்தை?” சித்தார்த் கேட்டுக் கொண்டே வெளியில் செல்ல, அவனைப் பார்த்தவன், மெல்ல ஆதிராவின் கையில் இருந்து தனது கையை விலக்கிக்கொண்டு,

“இவ கூட இரு சரவணா..” என்று சொல்லிவிட்டு, சித்தார்த்துடன் சென்றான்..

“ம்ப்ச்.. அந்தக் குழந்தை பாவம்..” சித்தார்த் சொல்லிக் கொண்டே, அருகில் நின்றிருந்த கார்த்திக்கைத் திரும்பிப் பார்த்தவன்,

“ஹ்ம்ம்.. சரி.. வரேன்..” என்றுவிட்டு போனை வைத்தவன், ஒரு பெருமூச்சுடன் தலையை நீவிக் கொண்டான்..

“என்னாச்சு?” கார்த்திக் கேட்க,

“ஹாஸ்பிடல்க்கு கொண்டு போற வழியிலேயே அந்த லேடி இறந்துட்டாங்களாம்..” சித்தார்த் தகவலைச் சொல்ல,

“அச்சோ.. எப்படி? ம்ப்ச்..” கார்த்திக் திகைத்தான்..

“ஹ்ம்ம்.. கடைசியா அவங்க அப்பாவுக்கு அட்ரசை அனுப்பி, வந்து இந்த அட்ரஸ்ல குழந்தையை  வாங்கிக்கச் சொல்லி கடைசியா மறுபடியும் போன் பண்ணி இருக்காங்க.. அதையே அவங்க ஆம்புலன்ஸ்ல ஏத்தறதுக்கு முன்னால மதி கிட்டயும் சொல்லி இருக்காங்க கார்த்திக்.. அந்தக் குழந்தைக்கு தேவையான எல்லாத்தையுமே ஒரு பேக்ல பேக் பண்ணி அந்த ரூம்ல வச்சிருக்காங்க.. அவங்க அப்பாவும் என்னவோ ஏதோன்னு ஓடி வந்திருக்காங்க.. குழந்தை இப்போ அவங்க கிட்ட இருக்கான்..” என்ற சித்தார்த்,

“அந்த பொண்ணு இறந்துட்டான்னு சொன்ன உடனே ஆதவன், ‘ச்சே.. இந்த நாய் ஒரு நாள் முன்ன செத்திருந்தா.. நான் ஆதிராவை தூக்கிட்டு போயிருப்பேன்’னு முணுமுணுத்தானாம்.. மதி நல்லா பேயோட்டி விட்டு இருக்கான்.. என்ன மனுஷன் அவன்?” சித்தார்த் சொன்னதைக் கேட்ட கார்த்திக் பல்லைக் கடித்தான்..

“போவான்.. போவான்.. அப்படியே விட்டுட்டு வேடிக்கைப் பார்த்துட்டு இருப்போம்ன்னு நினைச்சானோ? ராஸ்கல்.. கேஸ் கோர்ட்டுக்கு வரட்டும்.. அவனை நான் பார்த்துக்கறேன்..” கார்த்திக் கருவி விட்டு,

“எப்படி அவளை அடிச்சு இருக்கான்.. இதுல அவளைக் கடத்திட்டு போவான் வேறையா?” கடுப்புடன் கேட்க, சித்தார்த் கார்த்திக்கைத் தட்டிக் கொடுத்தான்.

“கொஞ்சம் கூட கட்டின பொண்டாட்டி மேல அன்பே இல்லையே. இவனுக்காக அந்தப் பொண்ணு எப்படி எல்லாம் பண்ணிருக்கா.. அப்போ அந்தக் குழந்தை? அதோட நிலை.. சை.. பாவம் அது.. இவங்களுக்கு பிறந்த பாவத்துக்கு அது இப்போ கஷ்டப்படணும்..” கார்த்திக் வருந்திக் கொண்டிருக்க,

“என்னவோ போங்க.. என்ன சொல்லறதுன்னே தெரியல.. அந்தக் குழந்தையை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு..” சித்தார்த் வருந்திக் கொண்டிருக்க, அந்த நேரம், பாலகிருஷ்ணன், சுதா, சதாசிவம், வித்யா நால்வரும் உள்ளே நுழைந்தனர்..

“கார்த்திக்.. ஆதிரா கண்ணு முழிச்சதும் எனக்கு கால் பண்ணுங்க.. நான் வரேன்.. அங்க மதி வரச் சொல்லி இருக்கான்..” என்ற சித்தார்த் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..

உள்ளே வந்த பாலகிருஷ்ணன், கார்த்திக்கின் அருகில் வேகமாக வர, “மாமா.. ஆதிரா கிடைச்சிட்டா..” சந்தோஷமாக கார்த்திக் சொல்லிவிட்டு, அவள் இருந்த அறையைக் காட்ட,

“அவ எப்படி இருக்கா கார்த்திக்? ஏதாவது சொன்னாளா?” வித்யா கேட்கவும், மண்டையை இடம் வலமாக அசைத்தவன்,

“அவளுக்கு ரொம்ப டிஹைடிரேட் ஆகி மயங்கி இருக்கா.. ட்ரிப்ஸ் போட்டு இருக்காங்க.. அவளா எழுந்துக்கட்டும்ன்னு சொன்னாங்க.. அவ கண்ணு முழிக்கத் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கு..” அவனது பதிலில் வித்யா உள்ளே செல்ல, அவளைத் தொடர்ந்து சுதாவும் பாலகிருஷ்ணனும் உள்ளே சென்றனர்.

“எப்படிடா இருக்கா? ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்களா?” அவனது தலையை ஆதரவாகத் தடவி சதாசிவம் கேட்க,

“அடிச்சு இருக்காங்கப்பா.. அவ கன்னம் எல்லாம் வீங்கி இருக்கு.. உதடு வீங்கி இருக்கு.. அவ அந்த நேரம் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பா?” மனமாறாமல் அவன் புலம்ப, அவனைத் தட்டிக் கொடுத்தவர்,

“அவ பத்திரமா மீண்டு வந்தாளேன்னு சந்தோஷமா யோசிடா.. எப்படி நடந்தது?” என்று அவர் கேட்கவும், குழந்தை வெளியில் வந்தது முதல், தனக்கு விசித்திரா கால் செய்தது வரை கூறியவன்,

“அந்த பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டாப்பா.. இவங்க பண்ணின தப்புக்கு அந்தக் குழந்தை இப்போ தனியா நிக்குது..” என்று வருந்தியவன்,

“அன்னைக்கு நான் போனை எடுத்து இருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது இல்ல.. எல்லாம் என் மேல தப்பு..” தலையைப் பிடித்துக் கொண்டு அனைத்தையும் போட்டு குழப்பிக் கொண்டான்..

“எல்லாம் நேரம்டா.. ஒருவேளை நீ போனை எடுத்த அப்பறம் அவ வெயிட் பண்ணி இருந்தா கூட.. அன்னைக்கு அவளைக் கடத்தனும்ன்னு முடிவு பண்ணி இருந்தா அதைக் கண்டிப்பா செஞ்சிருப்பாங்க.. அவ்வளவு தான்.. ஏதோ கெட்ட நேரம் இதோட முடிஞ்சிருச்சு.. விடு..” என்று அவனைச் சமாதானப்படுத்தியவர்,

“இப்போவாவது என் மருமகளை நீயா எனக்கு அறிமுகப்படுத்துவியா மாட்டியா? சரவணன் அவன் ஃப்ரெண்ட்ட தான் எனக்கு காட்டினான்.. உள்ள போய் அவளைப் பார்க்கலாமா?” என்று கேட்க,

“எனக்கும் எங்க அண்ணியைக் காட்ட மாட்டேங்கிறான்பா..” சரவணன் குற்றப்பத்திரிக்கை வாசிக்க,

“நான் அவளை உனக்கு இன்ட்ரட்யூஸ் செய்யனுமா?” என்று கேட்டவன், ‘வாங்க..’ என்று அவரை அழைத்துக் கொண்டு சென்றான்..

உள்ளே செல்லும்பொழுது பாலகிருஷ்ணன் அவளது கன்னத்தை வருடிக் கொண்டிருக்க, சுதா கண்ணீருடன் அவளது தலையை வருடிக் கொண்டிருந்தார்.. சதாசிவம் உள்ளே செல்லவும்,

“நீங்க ரெண்டு பேரும் அவளைப் பார்த்துக்கோங்க.. நான் ஒரு முக்கியமான வேலையா போயிட்டு ஒரு அரை மணி நேரத்துல வரேன்.. வண்டி சாவியைத் தா..” சரவணணிடம் சொல்லிவிட்டு, அவசரமாகக் கிளம்ப,

“எங்கடா இந்த நேரத்துல?” சரவணன் கேட்க,

“சும்மா தான். ஒரு அரைமணி நேரதுல வரேன்… அவளைப் பார்த்துக்கோங்க..” என்றவன் அவசரமாக வெளியில் கிளம்பிச் சென்றான்..             

அனைவரும் உள்ளே வரவும், “கார்த்திக்..” பாலகிருஷ்ணன் அவனைத் தேடிக் கொண்டே அழைத்து, அவனைக் காணமல்,

“மாப்பிள்ளை எங்கே?” என்று சதாசிவத்திடம் கேட்க,

“அவன் எங்கயோ அவசரமா வெளிய போயிருக்கான் சம்மந்தி.. எங்கன்னு தெரியல..” என்று சொல்லவும், அங்கு வந்த நர்ஸ் ஆதிராவைப் பரிசோதித்து விட்டு,  

“அவங்க கொஞ்சம் தூங்கட்டும்.. கண்ணு முழிச்சதும் பார்க்கலாம்.. எல்லாரும் வெளிய வெயிட் பண்ணுங்க.. இங்க கும்பல் சேர வேண்டாம்..” என்று சொல்லவும், அனைவருமே வெளியில் வந்து அமர்ந்தனர்.

ஆதிரா கண் விழிப்பதற்காக அனைவருமே காத்திருக்க, சித்தார்த் உள்ளே நுழைந்த நேரம், அதியமானும், ஆதிராவைப் பார்க்க அங்கு வந்து சேர்ந்தான்..

அங்கு நின்றுக் கொண்டிருந்த சரவணனைப் பார்த்த அதியமான், “கார்த்திக் எங்க சரவணா?” என்று கேட்க,

“அண்ணா எங்கயோ ரொம்ப அவசரமா ஓடிப் போனான் சார்.. எங்கன்னு தெரியல..” சரவணனின் பதிலில்,

“ஒருவேளை ஆதிரா கண்ணு முழிக்கும்போது அழகா இருக்கணும்ன்னு, குளிச்சு டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு வரப் போயிருக்கானோ?” சித்தார்த்தின் கேலியில் கலுக்கென்று சிரித்த சதாசிவம்,

“செஞ்சாலும் செய்வான் சார்.. நிஜமாவே என் பையன் கார்த்திக்கான்னு இருக்கு.. எல்லாம் ஆதிரை செய்த மாயை..” என்று சதாசிவம் சொல்லவும், சுதாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது..

“தம்பிக்கு ஆதிரான்னா உயிரு..” மன நிறைவுடன் சொல்ல,

“இல்ல.. அப்படி எல்லாம் அவரு போயிருக்க மாட்டார். அவளுக்கு ஏதாவது வாங்கப் போயிருப்பார்..” பாலகிருஷ்ணன் சொல்லவும்,

“ஓ…” என்று அனைவரும் ராகம் பாட, அனைவரின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.. அனைவருமே ஆதிரா கண்விழிக்க காத்திருக்க, சில மணித்துளிகள் கடந்து, அவர்களிடம் வந்த நர்ஸ்,

“அவங்க கண்ணு முழிச்சிட்டாங்க..” என்று சொல்லவும், சுதாவும் பாலகிருஷ்ணனும் அவசரமாக உள்ளே செல்ல, சதாசிவம் ஆதிராவைப் பார்த்தாலும், அவரது கண்கள் கார்த்திக்கைத் தேடத் துவங்கியது..

‘அவ கண்ணு முழிக்கிற நேரத்துக்கு எங்க போனான் இவன்?’ என்று தனக்குள் புலம்பிக் கொண்டார்.. இரண்டு நாட்களாக கார்த்திக் தவித்த தவிப்பை பார்த்துக் கொண்டிருந்தவர், அவள் கண் விழிக்கும் பொழுது, அவன் அங்கு இல்லாதது அவருக்கு சற்று ஏமாற்றமாய் இருந்தது..

ஆதிராவின் கண்கள் அங்கு இருந்த அனைவரின் முகத்திலும் பதிந்து, அந்த சோர்ந்த விழிகளில் ஏமாற்றம் பரவுவதை, சித்தார்த் பார்த்துக் கொண்டிருந்தான்..

“கார்த்திக்கை தேடறா போல..” அதியமான் சொல்ல,

“ஆமா.. இப்போ பார்த்து அவன் எங்க போனான்.. பாவம் அவ முகமே வாடிப் போச்சு.. இவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல..” சித்தார்த் திட்டினான்.    

“அம்மாடி.. தங்கமே.. எப்படிடா இருக்க?” அவளது கன்னத்தை வருடி பாலகிருஷ்ணன் கேட்க,

“ஹ்ம்ம்..” என்று மண்டையசைத்தவளின் கண்கள், மீண்டும் ஒருமுறை அங்கிருந்தவர்களைச் சுற்றி வர, அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது..

“என்னடா ரொம்ப பயந்துட்டியா?” அவளது கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே சுதா மறுபுறம் வந்து அவளை அணைத்துக் கொண்டுக் கேட்க,

“ஹ்ம்ம்.. ரொம்ப பயந்துட்டேன்..” என்று சொன்னவளை சுதா அணைத்துக் கொண்டார்..

“நீ பேசாம எங்கக் கூட வீட்டுக்கு வந்திரு.. இங்க எல்லாம் நீ இருக்க வேண்டாம்.. இனிமே எல்லாம் உன்னை விட்டு எங்களுக்கு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க முடியாது.. வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்.. ரெண்டு நாளா நாங்க உயிரைக் கையில பிடிச்சிட்டு இருந்தோம்..” சுதா புலம்ப, அவளைக் ஆசையுடன் பார்த்துக் கொண்டே, கண்கள் தளும்ப பாலகிருஷ்ணன் நின்றுக் கொண்டிருந்தார்..

“நானும் தான்.. உங்களை எல்லாம் பார்ப்போமான்னு கொஞ்சம் பயம் வந்திருச்சு..” வறண்டிருந்த தொண்டையை சரி செய்துக் கொண்டே ஆதிரா சொல்ல, மீண்டும் அவளது விழிகள் வாயில் கதவை நோக்கிச் சென்று விட்டு ஏமாற்றத்துடன் திரும்ப, சித்தார்த் அதைப் பார்க்க பொறுக்காமல் கார்த்திக்கிற்கு அழைத்தான்..

“இருக்கும் ஆதிரா.. இருக்கும்.. எங்களை எல்லாம் எப்படி பயமுறுத்திட்ட தெரியுமா?” சொல்லி முடிப்பதற்குள் சரவணனின் தொண்டை அடைக்க,

“நீ பயந்தியா? நான் நம்பிட்டேன்..” கேலியாக பேச முயன்றவளை முறைத்தவன்,  

“கொழுப்பு ஆதிரா உனக்கு.. நான் அப்போ தானே ஆபீஸ் விட்டுக் கிளம்பினேன்.. எனக்கு போன் பண்ணி இருக்கலாம் இல்ல. உன்னை யாரு கண்டவன் வண்டியில ஏற சொன்னது? இனிமே நீ ஒண்ணும் தனியா ஆபீஸ் போக வேண்டாம்.. நானே உன்னை கூட்டிட்டு போயிட்டு வரேன்..” சரவணன் கோவிக்க,  

“சாரிடா.. அன்னைக்கு எனக்கு என்னவோ ரொம்ப நேரம் தனியா நின்னது கஷ்டமா இருந்தது.. தெரிஞ்சவங்கன்னு தானே ஏறினேன்.. இப்படி செய்வாங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்?” அவளது உதடுகள் அழுகையில் துடிக்க, அதைப் பார்த்த சதாசிவம்,  

“டேய் சும்மா இரு சரவணா.. அவ பாவம்.. அவ நல்லபடியா கிடைச்சதே போதும்..” என்று அவனை அடக்க, அவரைப் பார்த்தவள், புன்னகைக்க முயன்றுத் தோற்று, கண்கள் மீண்டும் உடைப்பெடுத்து, வாயில் கதவை நோக்கி அவளது விழிகள் தழுவி மீண்டது..

“என்னடாம்மா? ஏண்டா அழற? உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” சுதா அவளது தலையை மென்மையாக வருடிக் கொடுத்து அணைத்துக் கொள்ள, தாய்க் கோழியின் இறகில் அண்டிக் கொள்ளும் குஞ்சுப் பறவையாக அவள் அவரது அணைப்பினில் இருந்தாள்..

ஆதிரா விழிப்பதற்குள் அவளிடம் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று எண்ணியபடி வேகமாக வண்டியை விரட்டி மருத்துவமனைக்கு வந்த கார்த்திக், வண்டியை நிறுத்திவிட்டு, ஓட்டமும் நடையுமாக ஆதிரா இருந்த அறைக்கு வர, அவனைப் பார்த்ததும், அவன் அருகே ஓடிச் சென்ற சித்தார்த்,

“எங்கடா போன? ஆதிரா கண்ணு முழிச்சிட்டா.. உன்னை தான் தேடறான்னு நினைக்கிறேன்.. எவ்வளவு தடவ போன் செய்யறது? அவ கண்ணு முழிக்கிற நேரத்துல நீ எங்க போன?” என்று கேட்க,  

“அப்படியா? முழிச்சிட்டாளா?” என்று கேட்ட கார்த்திக், மகிழ்ச்சியில் கண்கள் கலங்க, அந்த அறைக்குள் ஆவலாக நுழையப் போனவன், சுதாவின் அணைப்பினில் இருந்தவளை, கதவில் சாய்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான்.  

அப்பொழுது அவளுக்கு மருத்துவமனையின் உணவாக சூப்பை, நர்ஸ் கொண்டு வந்துத் தரவும், அதை வாங்கிய சுதா அவளுக்கு மெல்ல ஊதி ஊதி வாயில் கொடுக்க, அதை உண்டுக் கொண்டிருந்த அந்தக் காட்சியை மனம் கனியப் பார்த்துக் கொண்டிருந்தான்..

இதழில் புன்னகை விரிய, கண்களில் கண்ணீர் இதோ அதோ என்று தளும்பிக் கொண்டிருக்க, கதவில் அவன் சாய்ந்து நின்ற நிலையைப் பார்த்து, அவனது தோலை அழுத்திய சித்தார்த், “உள்ள போகலையா?” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவன், ஆதிராவின் முகத்தை விழிகள் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

சூப்பை உண்டுக் கொண்டிருந்தவளின் விழிகள் மீண்டும் வாயில் பக்கம் வந்த பொழுது, அங்கு நின்றிருந்த கார்த்திக்கைப் பார்த்தவளின் உதடுகள் துடிக்க, சிறு பிள்ளை போல அவளது கைகள் அவனை நோக்கி நீண்டது..

அவள் அவ்வாறு கையை நீட்டவுமே, அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவன், மின்னல் வேகத்தில் அவளது அருகில் சென்று, அவளது கையைப் பிடித்துக் கொள்ள, அவனது கையை உதறி, பட்டென்று அவனது கையில் அடிக்க, ட்ரிப்ஸ் போடப் பட்டிருந்ததால், ‘ஹா..’ வலியில் சிணுங்க, கார்த்திக்கை அடித்ததைப் பார்த்த சுதா,

“கழுதை மாப்பிள்ளையை அடிக்கிறா..” என்று நகரப் போக, அவரது முன்பு கையை நீட்டிய சதாசிவம்,

“வேண்டாம் சம்மந்திம்மா.. அது அவங்களுக்குள்ள.. விடுங்க.. அடிச்சு பிடிச்சு ரெண்டும் கொஞ்சிக்குவாங்க..” எனவும்,

“அது எப்படி மாப்பிள்ளையை..” என்று அவர் இழுக்க,

“இல்ல.. அதெல்லாம் அவன் பார்த்துப்பான்..” என்று உறுதியாகச் சொல்லவும், இருவரையும் வேடிக்கைப் பார்த்தனர்..   

அவள் அடிக்கவும், அவளது கையை மெல்ல வருடியவனைப் பார்த்தவள், “ஏன் அன்னிக்கு போனை எடுக்கல?” என்று கேட்க, அவளது கையை மெல்ல வருடிய படி, அருகே முட்டி போட்டு அமர்ந்து, அவளது அந்தக் கையில் முத்தமிட, தனது கையை அவனிடம் இருந்து உருவிக் கொண்டவள், அவனது கன்னத்தில் பட்டென்று அடித்து, மீண்டும் வலியில் ‘ஹா..’ என்று சிணுங்க, கார்த்திக் அவளது கையை புன்னகையுடன் வருடினான்.

“இனிமே அப்படி பார்ட்டில போய் தண்ணியடிப்பியா?” அவள் கேட்க, இதழில் புன்னகையுடன் கார்த்திக் மாட்டேன் என்று தலையசைக்கவும், மீண்டும் கன்னத்தில் ஒரு அடியைக் கொடுத்து,

“நான் எப்போ போன் செஞ்சாலும் எடுப்பியா?” அவளது கேள்விக்கு, அதே போலவே அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே, ‘சரி’ என்று தலையசைக்க, மீண்டும் அவனது கன்னத்தில் ஒன்று வைத்தவள்,

“எவன் பக்கத்துல இருந்தாலும் பரவால்ல.. நான் போன் பண்ணினா ஒரே தடவையில எடுக்கணும்.. அது அந்த ஜட்ஜே இருந்தாலும்..” கண்ணீருடன் அவள் கேட்க, தொண்டையடைக்க கார்த்திக்கும் தலையை மேலும் கீழுமாக அசைத்து, அவளது கையை தனது கன்னத்தோடு அழுத்திக் கொண்டவன், அதில் இதழ் பதித்து, அவளது முகத்தையே ஆசைத் தீரப் பார்த்துக் கொண்டிருந்தான்..    

“இனிமே நீங்க தான் என்னை ஆபிஸ்க்கு கூட்டிட்டு போயிட்டு கூட்டிட்டு வரணும்..” அவனது கன்னத்தில் வருடியபடி அவள் கேட்க, விம்மல் வெடிக்க கார்த்திக் மண்டையை மேலும் கீழும் அசைக்க,

“அப்பு.. ஐ மிஸ்ட் யூ..” என்றவள், அவனைத் தன்னருகே இழுத்து, அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனது  தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்..

அவளது தலையை வருடியவன், “ரெண்டு நாளா ரொம்ப நொந்துட்டேன்டி..” கார்த்திக் சொல்ல,

“ஐ மிஸ்ட் யூ அப்பு.. ஐ மிஸ்ட் யூ.. ஐ லவ் யூ அப்பு.. எனக்குத் தெரியும்.. நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்கன்னு எனக்குத் தெரியும்.. உங்களைப் பார்க்காம ரொம்ப கஷ்டமா இருந்தது..” என்றவள், அவனிடம் இருந்து விலகி, அவனது முகத்தைக் கைகளில் தாங்கி,

“என்னோட கொலுச அந்த ஆளு கழட்டிட்டு போயிட்டான் அப்பு.. எனக்கு அந்த கொலுசு வேணும்.. அந்த கொலுசு என் காலுல இல்லாம எனக்கு என்னவோ மாதிரி இருக்கு..” சிறு பிள்ளை போல அவள் அழ, அவளது கன்னத்தில் இருந்த ஒரு கையை எடுத்தவன், கட்டை விரலால் அவளது கன்னத்தை வருடிக் கொண்டே, தனது பேன்ட் பாக்கெட்டில் கையை விட, அனைவரும் அவர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்..

கார்த்திக் வந்ததும், அங்கிருந்த அனைவரும் அவர்களுக்கு தனிமை அளித்து சற்று தள்ளி நின்றாலும், இருவரையும் பார்க்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்க, தனது பாக்கெட்டில் கையை விட்டு, அவன் வாங்கி வந்திருந்த புது கொலுசு எடுத்து,

“இங்கப் பாரு..” என்று அவன் காட்டவும், விழிகளை விரித்தவள்,

“என்னோட அப்புன்னா அப்பு தான்..” மகிழ்ச்சியில் அவனது கன்னத்தில் முத்தமிட்டு,

“என் காலுல போட்டு விடுங்க.. சீக்கிரம்.. சீக்கிரம்.. அப்பா இப்போ தான் எனக்கு உயிரே வந்தா மாதிரி இருக்கு..” என்று அவளது காலைத் தூக்கிக் காட்ட,

“நீ எழுந்தா கேட்பன்னு எனக்குத் தெரியும்.. அது தான் நீ முழிக்கிறதுகுள்ள வந்துடணும்ன்னு அவசரமா ஓடிப் போய் வாங்கிட்டு வந்தேன்..” என்றவன், மெல்ல அவளது காலின் அருகே சென்று அமர்ந்தவன், மென்மையாக அவளது காலை எடுத்து, தனது மடியில் வைத்துக் கொண்டு, கொலுசை போட்டவன்,

அவளைப் பார்த்து புன்னகைத்து, மென்மையாக அவளது பாதத்தைப் பிடிக்க, ஆதிரா அவனை அருகே அழைத்து, அவனது தலை முடிக்குள் கையை நுழைத்து, மெல்ல வருடிக் கொடுக்க,

“ரெண்டு நாளா உயிரே என்கிட்டே இல்ல.. உன்னைப் பார்க்கற வரை எப்படி இருந்தது தெரியுமா?” அவளது இடுப்பைக் கட்டிக் கொண்டு, சாய்ந்து அமர்ந்திருந்த அவளது மடியில் சாய்ந்தவன், இரண்டு நாட்களாக அடைத்துக் கொண்டிருந்தது அனைத்தையும் அழுகையாக அவன் கரைக்க, அவனது தலையை வருடிக் கொண்டே, அவன் அழுது ஓயும் மட்டும் அவள் அமைதியாக அமர்ந்திருந்தாள்..

சிறிது நேரம் அவனை அழ விட்டவள், “அப்பு.. அழுதது போதும்..” என்று அவனது முகத்தை நிமிர்த்தியவளின் கண்களிளும் கண்ணீர் வழிய, அவளது குரலை வைத்தே வேகமாக நிமிர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டவன்,

“இல்லடா அழல.. ரெண்டு நாளா மனசுல இருந்தது.. அது தான்..” என்றவன்,

“அவன் உன்னை ரொம்ப அடிச்சிட்டானா?” அவளது கன்னத்தை வருடியபடி கேட்க,    

“அவனை விடுங்க.. சரியான இவன் அவன்.. அவனை சும்மா விடாதீங்க அப்பு.. கோர்ட்ல அவனுக்கு பெரிய தண்டை வாங்கித் தரணும்.. அதோட அவளையும்..” வேகமாக சொல்லிக் கொண்டே வந்தவள்,

“அந்த குழந்தை பாவம் இல்ல.. நான் தான் அவனை வெளிய அனுப்பி அவங்களை மாட்டி விட்டேன்..” எனவும், அவளது முகத்தை நிமிர்ந்து ஆச்சரியமாகப் பார்த்தவன்,

“அந்த விசித்திரா தான் எனக்கு நீ இருக்கற இடத்தை கால் செய்து சொன்னா” என்று சொல்லவும், ஆதிரா ஆச்சரியமாக அவனைப் பார்க்க, கண்களை மூடித் திறந்தவன், அவளது நெற்றியில் இதழ் ஒற்றவும், புன்னகையுடன் அவனது தலையை கலைத்து விட்டு, 

“அது எப்படி அப்பு நான் இருக்கற இடத்துக்கு எல்லாம் கரக்ட்டா வந்தீங்க? அதோட அந்த பாடி நான் இல்லைன்னு காலை வச்சே கரெக்டா கண்டுப்பிடிச்சிட்டீங்க தானே.. நான் வீடியோல பார்த்தேன்..” அவனது முகத்தை கைகளில் தாங்கி பெருமையுடன் கேட்க,

“ஆமா.. என் கண்ணம்மாவோட காலை எனக்குத் தெரியாதா? அதைத் தொட்ட உடனே நான் கண்டுப்பிடிச்சிட்டேன்.. அது நீ இல்லைன்னு.. யாரை ஏமாத்தறான்? உன்னோட கொலுசை கழட்டி போட்டா.. நாங்க நம்பிருவோமா? இருந்தாலும் நான் உனக்கு ஆசையா வங்கிப் போட்ட கொலுசை அது காலுல பார்த்து கொஞ்சம் மனசு வலிச்சது..” என்று சோகமாகச் சொல்ல,

“அது தானே.. நீங்க எங்க நம்பினீங்க. ஏமாந்த கோலிங்க..” என்று சிரிக்க, கார்த்திக் முகம் கனிய அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்..                 

Leave a Reply

error: Content is protected !!