4

6fa70b3e02061709004d9bcd76bd74ea

4

“ஜீவிதா.. ஜீவிதா தானே இது?” தனக்குள் கேட்டுக் கொண்டவன், மெல்ல அங்கிருந்து நகர்ந்து, அவர்கள் பேசுவது கேட்கும் அளவிற்கு இருந்த இடத்தின் அருகில் சென்று காரின் பின்புறம் நின்றுக் கொண்டான்…

“சொன்னாக் கேளு ராம்.. நான் ஒண்ணும் இந்தக் கல்யாணத்தை முழு மனசா ஏத்துக்கல ராம்.. அது உனக்கே தெரியுமே.. அந்த மனுஷனை இவ்வளவு தூரம் கொண்டு வந்து ஏமாத்தறோம்ன்னு மனசு ரொம்ப வலிக்குது.. அவ்வளவு தான்.. உன்னை ஏமாத்தற எண்ணம் எல்லாம் இல்ல ராம்? ஏன் இப்படி எல்லாம் பேசற? முடியலடா.. நான் என்ன செய்யட்டும்?” ஜீவிதாவின் அழு குரல் கேட்க,

“அப்போ கிளம்பு ஜீவி.. என் கூட வந்திரு.. நாம கிளம்பலாம்.. நேரம் ஆகுது..” ராம் அழைக்க, ஜீவிதா கண்ணீருடன் அவனைப் பார்க்க,

“என்னாலயும் உன்னை விட்டுட்டு இருக்க முடியாது.. என்னைப் புரிஞ்சிக்கோ.. நீ இல்லாம நான் உயிரையே விட்டுடுவேன்.. நீயும் இந்த கல்யாணம் நிச்சயம் ஆனதுல இருந்து, உங்க வீட்டுல இப்போ சொல்றேன் அப்போ சொல்றேன்னு சொல்ற ஜீவி.. உங்க அப்பா ஜாதி, வசதின்னு சொல்லி ஏதாவது சொல்லிடுவாங்கன்னு நீ பயப்படற சரி.. இதோ கல்யாண நாளும் வந்திடுச்சு.. இனிமே எப்போ சொல்லப் போற? அந்த ஆர்யனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகா?” கோபமாக ராம் கேட்க,

“இல்ல ராம்.. இல்ல.. என்னால உன்னைத் தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..” ஜீவிதா அழுத குரலில், அவனது மார்பில் சாய்ந்தாள்..  

“எங்க வீட்டுலயும் இந்த ஜாதியைச் சொல்லி ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.. சாட்சிக்காரன் கால்ல விழறதுக்கு பதில் சண்டைக்காரன் காலுல விழுந்துடலாம்.. அந்த ஆர்யன் கிட்ட பேசிப் பார்க்கலாம்ன்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிற.. நாம வேற என்ன தான் செய்யறது? இப்போ கூட கெட்டுப் போகல.. வா ஜீவி.. நாம ஆர்யனைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிடலாம்..” ராம் உணர்ச்சி மிகுதியில் பேசிக் கொண்டிருக்க, ஜீவிதா தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்க,

“அடேய்.. நான் என்ன சண்டைக்காரனா? அடப்பாவி.. இதைச் சொல்லி இருந்தா நானே இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேனே.. இப்போ இந்த நேரத்துல வந்து இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்குறாங்க? கூமுட்டைங்களா? உங்க லவ்க்கு நான் தான் ஊறுகாயா?” தனக்குள் சொல்லிக் கொண்டவன், மேலும் அவர்களை நெருங்கிச் சென்றான்..

“ஜீவி.. நான் உனக்காக லீவ் போட்டுட்டு இன்னும் எவ்வளவு நாள் இங்க இருக்கறது ஜீவி? என்னை ஆபீஸ்க்கு வரச் சொல்லி சொல்றாங்க? நம்ம பேசி வச்சது போல உனக்கு விசா, ப்ளைட் டிக்கெட் கூட எடுத்துட்டேன். நாளைக்கே நாம இங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு நாளைக்கு ராத்திரி ஃப்ளைட் ஏறிடலாம்.. அங்க நமக்காக வீடு எல்லாம் கூட பார்த்து ரெடி செய்து வச்சிட்டேன்.. எல்லாமே நம்ம ப்ளான் படி தானே போகுது.. இப்போ இப்படி என் கூட வரதுக்கு இஷ்டம் இல்லாதது போல அழுதுட்டு நிக்கற? உங்க வீட்ல என்ன கொஞ்ச நாள் கோபமா இருப்பாங்க.. அப்பறம் நாம நல்லா வாழற வாழ்க்கையைப் பார்த்து எல்லாரும் சரி ஆகிடுவாங்க ஜீவி.. நான் சொல்றதைக் கேளு.. இப்போ நீ கிளம்பாம அழுதுட்டு இருந்தன்னா யாராவது பார்த்துடுவாங்க.. அப்பறம் நம்மளைப் பிரிச்சிடுவாங்க.. நாம சேர்ந்து வாழவே முடியாது..” ராமின் கெஞ்சல்களைக் கேட்ட ஆர்யனுக்கு உள்ளுக்குள் மனது குத்தாட்டம் போட்டது..   

“எங்க அம்மாவை விட்டுட்டு வரது தான் கஷ்டமா இருக்கு.. எங்க அம்மா ரொம்ப பாவம்.. அவங்க ரொம்ப சாது.. அவங்க இந்த அவமானம் தாங்குவாங்களா? மனசு கஷ்டமா இருக்கு..” தனது அன்னையின் முகம் வந்து போகவும், ஜீவிதா இவ்வாறு சொல்ல,

“அப்போ சரி ஜீவி.. போ.. போய் அவனை கல்யாணம் பண்ணிக்கோ..” ராம் அவளைப் பிடித்துத் தள்ள,

“இல்ல.. என்னால முடியாது..” ஜீவிதா அவனைத் தழுவிக் கொள்ள,

‘இப்போ இந்த நேரத்துல கல்யாணம் நின்னா அம்மா ரொம்ப ஏமாந்து போவாங்களே.. அவங்க அத்தனை சொந்தக்காரங்க முன்னால பொண்ணு ஓடிப் போயிட்டான்னு சொல்ல எவ்வளவு கஷ்டப்படணும்? ஆனா.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கவே முடியாம வேற ஒருத்தனை லவ் பண்றவளை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இழுத்து பிடிச்சா வாழ முடியும்? அதுவும் இந்த அளவுக்கு லவ் பண்றவங்களை பிரிச்சு என்ன செய்யறது?’ ஆர்யன்               தனக்குள் யோசிக்கத் துவங்க,

“சரி.. வா.. நாம போகலாம்..” ராம் ஜீவிதாவின் கையைப் பிடித்து இழுக்கும் நேரம், ‘ஹுக்கும்..’ என்று ஆர்யன் தொண்டையைக் கனைக்க, அந்த சத்தத்தைக் கேட்ட இருவரும் திகைத்து குரல் வந்த திசையைப் பார்க்க, அங்கு நின்றுக் கொண்டிருத்த ஆர்யனைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர்..

“ஆர்யன்..” திகைப்புடன் ராம் அழைக்க,

“ஆர்யன்..” ஜீவிதாவும் அழைக்க,

“ஆமா.. ஆர்யன் தான்.. மாப்பிள்ளை.. மாப்பிள்ளைன்னு என்னை இங்க சொல்லிட்டு இருக்காங்க..” என்று சொன்னவனின் பார்வை, ஜீவிதாவின் கையைப் பிடித்திருந்த ராமின் கையில் விழ, இருவருமே அவனைத் திகைப்பாகப் பார்த்தனர்..  

“இங்க என்ன நடக்குது?” முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு, ஆர்யன் கேட்கவும்,

“சார்..” என்று ராம் இழுக்க, ஜீவிதாவோ அதிர்ச்சியில் பேச்சிழந்து நின்றுக் கொண்டிருந்தாள்..

இருவரின் அமைதியையும் பார்த்தவன், மீண்டும், “இங்க என்ன நடக்குதுன்னு கேட்டேன்?” என்று கேட்கவும்,

“சார் நான் ராம்.. ராம்கௌதம் *** கம்பனில சீனியர் ப்ரோக்ரமரா வர்க் பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ என்னை ஆன்சைட் அனுப்பி இருக்காங்க.. நானும் ஜீவிதாவும் காலேஜ்ல இருந்து லவ் பண்றோம் சார்.. ஜீவிதா என்னோட ரெண்டு வருஷம் ஜூனியர்.. எங்க வீட்ல ஜாதியை காரணம் காட்டி எங்க லவ்வை ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.. இவளும் இவங்க வீட்ல சொல்ல மாட்டேங்கிறா. அதுக்குள்ள இவங்க வீட்டுல உங்களை பார்த்து கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க.. உங்களுக்கு நிச்சயம் பண்ணினதுக்கு அப்பறமும் இவ வீட்ல சொல்ல ரொம்ப பயப்படறா ஆர்யன்.. ப்ளீஸ் நீங்க தான் ஏதாவது செய்யணும்..” ராம் சொல்லிக் கொண்டே வர,

“அதுக்கு நான் என்ன செய்யணும்ன்னு நினைக்கறீங்க?” ஆர்யனின் கேள்வியில், இருவருமே திகைத்தனர்.

“சார்.. ப்ளீஸ்.. நீங்க தான் ஏதாவது செஞ்சு எங்களை சேர்த்து வைக்கணும்..” முதலில் சுதாரித்த ராம் கேட்கவும், ஆர்யன் கையைக் கட்டிக் கொண்டு நின்றான்..

ஜீவிதா ஆர்யனின் முகத்தைக் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, “ஜீவி.. ஏதாவது சொல்லு ஜீவி.. ஏன் பேசாம இருக்க?” ராம் ஜீவிதாவை ஊக்கவும்,

“ஆர்யன்.. உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னால உயிரோட கூட வாழ முடியாது.. இந்தக் கல்யாணம் நடந்தா எல்லாரோட வாழ்க்கையும் சேர்ந்து கெட்டுப் போகும்.. ப்ளீஸ் ஆர்யன்.. ஏதாவது செய்ங்க.. எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திடுங்க..” ஜீவிதா கையெடுத்து கும்பிடவும், ஆர்யன் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க, ராமும் ஜீவிதாவும் ஒருவரை ஒருவர் பதட்டத்துடன் பார்த்துக் கொண்ட சில நொடிகளில், ஜீவிதா பட்டென்று ஆர்யனின் காலில் விழப் போக, ஆர்யன் பதறி விலகினான்..     

“என்ன இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?” ஆர்யன் ஜீவிதாவைக் கேட்க,

“எனக்கு வேற வழி தெரியல ஆர்யன்.. என்னால இப்போ போய் எங்க வீட்ல எதுவும் சொல்ல முடியாது.. இதுல அதிகமா பாதிக்கப்படப் போறது நீங்க தான்.. ப்ளீஸ்.. என்னை மன்னிச்சுருங்க.. உங்க வீட்டுலயும் எல்லார்க்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டன்னு சொல்லுங்க.. நான் இப்போ ராமோட போகப் போறேன்.. என்னால இங்க இருக்க முடியாது..” முடிவாக ஜீவிதா சொல்லவும்,

“சரி.. இத்தனை நேரம் உங்க அம்மா பாவம் அப்படி இப்படின்னு சொல்லிட்டு இருந்தீங்களே.. இப்போ இப்படிச் சொல்றீங்க? இப்போ மட்டும் உங்க அம்மா அப்பா பாவம் இல்லையா?” ஆர்யன் கேட்க,

“எங்க அம்மா பாவம் தான்.. ஆனா.. எங்க அம்மாவுக்கு வெண்ணிலா இருக்கா.. அவங்களுக்கு அவளை ரொம்ப பிடிக்கும்.. அவ எங்க அம்மாவை நல்லா பார்த்துப்பா.. கொஞ்ச நாள்ல அவங்க சரி ஆகிடுவாங்க..” ஜீவிதாவின் பதிலில், ஆர்யன் உதட்டைப் பிதுக்கினான்..

“அவ பார்த்துப்பா சரி.. ஆனா.. நீங்க இப்படி வெளிய போயிட்டா உங்க வீட்டுல வரப் போற அவமானத்துகான பதில்? அதை விட உங்க லவ் முக்கியமா?” ஆர்யனின் கேள்வியில்,

“அப்போ என்னை உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க கூட வாழச் சொல்றீங்களா?” ஜீவிதா நக்கலாகக் கேட்க, ஆர்யன் மறுப்பாக தலையசைத்தான்..  

“எனக்கும் உங்களை கல்யாணம் பண்றதுல எல்லாம் இஷ்டம் இல்ல.. எனக்கே என்ன செய்யறதுன்னு தெரியாம தான் சுத்திட்டு இருந்தேன்.. சரி..  நான் ஒண்ணு கேட்கறேன்.. இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு அதுவும் இப்போ போறேன்னு சொல்றீங்களே.. எங்க அம்மாவைப் பத்தி.. எங்க குடும்பத்தைப் பத்தி நினைச்சீங்களா? இல்ல நாளைக்கு ரிசப்ஷன்க்கு வரச் சொல்லி இன்விடேஷன நான் என் ப்ரெண்ட்ஸ்க்கு எல்லாம் கொடுத்திருக்கேனே..  அதனால எனக்கு வரப் போற அவமானத்தைப் பத்தி கொஞ்சமாவது நினைச்சீங்களா? உங்க வீட்ல சொல்லத் தான் பயம்.. சரி என்கிட்டே ஒரு மெசேஜ்ல விஷயத்தை கன்வே செஞ்சிருக்கலாமே.. ஏன் செய்யல? சரி.. ஒருவேளை நான் கல்யாண கனவு கண்டு இருந்தேன்னா என் நிலைமை? அதைப் பத்தி எல்லாம் யோசிக்கவே இல்ல தானே.. அவ்வளவு செல்பிஷ்ஷா நீங்க?” கையைக் கட்டிக் கொண்டு ஆர்யன் கேட்க, கண்களில் கண்ணீருடன்,

“இப்போ என்னை என்னச் செய்யச் சொல்றீங்க? நான் உங்ககிட்ட சொல்லாததுக்கு சாரி.. இதைத் தவிர நான் வேற என்ன செய்யறது?” ஜீவிதா கேட்டாள்.       

“இல்ல.. சாரி எல்லாம் வேண்டாம்.. உங்க வீட்ல இவரைக் கூட்டிட்டு போய் பேசிப் பாருங்கன்னு சொல்றேன்.. இதை நீங்க என்கிட்டே முன்னேயே ஒரு மெசேஜ் போட்டு சொல்லி இருந்தா கூட நான் எங்க வீட்ல சொல்லி நிறுத்தி இருப்பேன்.. இது லாஸ்ட் மினிட்.. அவங்களும் ஆயிரம் கனவுல இருப்பாங்க.. இப்படி போறதைப் பத்தி யோசிச்சிக்கோங்க.. எதுக்கும் ஒரு ட்ரை கொடுத்து தான் பாருங்களேன்.” ஆர்யன் எடுத்துச் சொல்லவும்,

“சொல்லி இருக்கலாம் தான்.. ஆனா.. எனக்கு நீங்க எங்க வீட்ல சொல்லி.. அவங்க எங்களை பிரிச்சிடுவாங்களோன்னு ஒரு பக்கம் பயமா இருந்தது.. அதுக்குத் தான் நான் உங்கக்கிட்ட சாரி கேட்கறேன்.. இப்போவும் சாரி.. நான் அவரோட போகத் தான் போறேன்.. இப்போ எங்க வீட்ல எல்லாம் பேச முடியாது.. நான் அவரோட மனைவியா பேசறேன்..” ஜீவிதா முடிவாகச் சொல்லி ராமுடன் நகர,

“சரி.. போயிட்டு வாங்க.. ஆனா.. ராம்.. எனக்கு உங்க நம்பர் வேணும்.. நீங்க இங்க எங்க இருக்கீங்க? ஆன்சைட்ன்னா எந்த ஊரு? அங்க இருக்கற அட்ரஸ் எல்லாம் வேணும்..” ஆர்யன் கூறியதைக் கேட்ட ஜீவிதா,

“எதுக்கு” என்று கேட்க,

“எனக்கும் ஒரு அக்கா இருக்காங்க.. ஒரு பொண்ணை அப்படியே போன்னு, எனக்கு முன்னப் பின்னத் தெரியாத ஒருத்தர் கூட எல்லாம் நான் அனுப்பிட முடியாது. எனக்கு அவங்க சேஃப்டி பத்தித் தெரியனும்.. உங்க நம்பர் வாங்கறது எல்லாம் கூட ஒரு சேஃப்டிக்குத் தான்.. உங்க வீட்ல எல்லாம் போட்டுக் கொடுக்க மாட்டேன்.. ஆனாலும் ஒரு ஓரத்துல மனசு உறுத்துது..” ஆர்யன் சொல்லவும், ராம் தனது நம்பர், அவன் இருக்கும் அட்ரஸ் என்று அனைத்தையும் தரவும், உடனே தனது மொபைலில் பதித்துக் கொண்டவன், அவனது நம்பருக்கு அழைக்க, அவனது செல்போன் இசைக்கவும், தலையை அசைத்தவன்,       

“ஜீவிதா.. உங்களுக்கு ஒரு ஃப்ரெண்ட்டா நான் எப்பவும் இருப்பேன்.. என் நம்பரை நீங்க டெலீட் பண்ணிடாதீங்க.. எனி டைம் எனி ஹெல்ப் ரெண்டு பேரும் என்னைக் கான்டாக்ட் பண்ணலாம்.. கீப் இன் டச் ராம்.. விஷ் யூ போத் எ வெரி ஹாப்பி மேரீட் லைஃப்..” புன்னகையுடன் ஆர்யன் சொல்லவும், ராம் அவனை அதிசயமாகப் பார்க்க, ஆர்யன் ‘என்ன?’ என்பது போல சைகையில் கேட்டான்.

“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?” ராம் கேட்க,

“நான் சொன்னனே. எனக்கும் இந்த கல்யாணத்துல அவ்வளவு இஷ்டம் இல்ல.. அம்மாவுக்கு பிடிச்சது சோ ஓகே சொன்னேன்.. மத்தபடி ஜீவிதா மேல இண்டரெஸ்ட் எல்லாம் இல்ல.. நானே எப்படிடா கல்யாணத்தை நிறுத்தலாம்ன்னு யோசிச்சிட்டு தான் சுத்திட்டு இங்க வந்தேன்.. ஒரு ஐடியாவும் கிடைக்கல.. கடைசியில சாமிகிட்ட எல்லாம் வேண்டிக்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா? சரி அப்படியே எதுவும் செய்ய முடியாம, சாமியும் கை விரிச்சு, கல்யாணம் ஆச்சுன்னா அப்பறம் லைஃப் எப்படி போகுதோ அப்படி போயிப்போம்ன்னு விட்டுட்டேன்.. இப்போ ஐ ம் ஹாப்பி.. தேங்க்ஸ் ஜீவிதா..” ஆர்யனின் பதிலில், இருவரும் பேந்த விழிக்க,

“ஹாஹா.. ஹையோ நிஜமா தான் சொல்றேன்.. பயப்படாதீங்க.. பாருங்க.. நான் கல்யாணத்துக்கு ஒழுங்கா ஹேர் கட் கூட செய்யாம வீட்ல திட்டு வாங்கிட்டு வந்திருக்கேன் தெரியுமா? இப்போ ஜீவிதா இதைச் செய்யறது எனக்கும் ஹாப்பி தான்.. உண்மையைச் சொல்லணும்ன்னா.. எனக்கு ஜீவிதா எல்லாம் செட் ஆவாங்கன்னு தோணல பாஸ்.. அது தான் நிஜம்..” ஆர்யன் சொல்லவும்,

“ஏன்? ஜீவிதா ரொம்ப நல்ல பொண்ணு தெரியுமா?” ராம் சற்று கோபமாகக் கேட்க,

“ஓ.. இப்போ நீங்க ஜீவிதா எனக்கு செட் ஆவாங்கன்னு நின்னு ப்ரூவ் பண்ணிட்டு இருக்கப் போறீங்களா? சரி.. ப்ரூவ் பண்ணி என்ன செய்யப் போறீங்க?” அவனது நக்கலான கேள்வியில் ராம் திகைத்து நிற்க, ஜீவிதா தலையில் அடித்துக் கொண்டு,

“யாராவது பார்க்கறதுக்குள்ள இங்க இருந்து போகலாம் வா ராம்.. அவரே போங்கன்னு சொல்றாங்க இல்ல.. நீ ஒருத்தன்.. நின்னு சண்டைப் போட்டுக்கிட்டு இருக்க?” பல்லைக் கடிக்கவும், ஆர்யன் சிரித்து,

“சீக்கிரம் கிளம்புங்க.. நான் எங்க வீட்டு சைட்ல இருந்து ரொம்ப பிரச்சனை ஆகாம பார்த்துக்கறேன். போயிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க அம்மா அப்பாவைப் பார்த்துட்டு ஃப்ளாட் ஏறுங்க.. பாவம்.. யாரு மாப்பிள்ளைன்னு தெரியாம அவங்களுக்கும் மனசு நிம்மதி இல்லாம இருக்கும் இல்ல.. ஆமா.. பாஸ்போர்ட் எதுவுமே வேண்டாமா?” ஆர்யனின் இணக்கமான பேச்சில், ஆர்யனை கட்டித் தழுவிய ராம்,

“தேங்க்ஸ் ப்ரோ.. ஆனா.. பாஸ்போர்ட் எல்லாம் ஏற்கனவே என்கிட்டே கொடுத்துட்டா.. என்கிட்டே இருக்கு.. அதை வச்சுத் தான் விசா எடுத்தேன்..” எனவும்,

“செம பிளான் தான்.. ஆனா.. என்ன முன்னாலேயே என்கிட்டே சொல்லி இருக்கலாம்.. நான் இங்க வந்து இப்படி நடுராத்திரி திரியாம நிம்மதியா தூங்கிட்டு இருந்திருப்பேன்.. சரி.. சரி.. நேரமாச்சு.. கிளம்புங்க..” ஆர்யன் சொல்லவும், தான் வந்திருந்த காரில், ஜீவிதாவை ஏற்றியவன்,

“மீண்டும் தேங்க்ஸ் ப்ரோ.” ராம் சொல்ல,

“தேங்க்ஸ் ஆர்யன்.. அன்ட் சாரி.” ஜீவிதா சொல்லவும், ஆர்யன் புன்னகையுடன் தலையசைக்க, ராம் காரை எடுக்க, கார் கண்ணிற்கு மறையும் வரை பார்த்திருந்தவன், விசில் அடித்துக் கொண்டே கையைத் தேய்த்துக் கொண்டு,

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ..

இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ

ஒளி சிந்தும் இரு கண்கள்

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே

அது என்னென்று அறியேனடி

என்று பாடிக் கொண்டே, தனது அறைக்குச் சென்றவனை சேகர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. வெகுநேரமாக வெளியில் சென்றவனைக் காணாது அவனைப் பின்தொடர்ந்து வந்திருந்த சேகர், அங்கு நடந்த காட்சிகள் அனைத்தையும் பார்த்து, இறுதியாக ஜீவிதா கிளம்பவும் விக்கித்துப் போக, அவன் சுதாரிப்பதற்குள், ஆர்யனின் பாட்டும், அவனது முகத்தின் பொலிவும் அவனது கருத்தில் பதிய, குழப்பத்துடன் அவனைப் பின்தொடர்ந்து அறைக்குச் சென்றான்..

மணமேடை அலங்காரம் முடிந்திருக்க, அதைப் பார்த்து ஆர்யனின் முகத்தில் தோன்றிய நக்கலான புன்னகையைப் பார்த்து, மேலும் குழம்பிப் போன சேகர், ஆர்யன் கவனிப்பதற்குள் அறைக்குள் நுழைந்துக் கொண்டு, குழப்பத்துடன் தனது இடத்தில் படுத்துக் கொண்டான்..

சேகருக்கு பிருந்தாவை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது.. திருமணத்திற்கு என்று இத்தனை நாட்கள் பிடி கொடுக்காமல் பேசிக் கொண்டிருந்தவன், அவரது வற்புறுத்தலில், ஜீவிதாவை திருமணம் செய்ய சம்மதித்து, இன்று திருமணம் வரை வந்து இப்படியானது சேகருக்கும் ஒரு பக்கம் மனதை வருத்துவதாய் இருந்தது.. அதை விட அவ்வளவு பேசியவன், திருமணம் நின்ற பிறகு தனது நிலை என்ன? சொந்தபந்தங்களுக்கும், தனது அலுவலக நண்பர்களிடமும் பதில் சொல்ல வேண்டுமே என்று எல்லாம் சிறிது கூட யோசிக்காமல், அந்தப் பையனுடன் அனுப்பி விட்டு, இவன் பாடிக் கொண்டு வந்தது ஒருபுறம் அவனுக்கு குழப்பமாய் இருந்தது..  

‘இவன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்? இப்போ கல்யாணத்தை நிறுத்திட்டு என்ன பண்ணப் போறான்?’ என்று கண்களை மூடி யோசித்தவனின் மனதினில் மீண்டும் பிருந்தாவின் முகம் வந்து போனது.

அப்பொழுது உள்ளே வந்த ஆர்யன், சேகருக்கு தொந்தரவு செய்யாமல் மெல்ல நடந்து கட்டிலில் விழுந்து,

நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்..     

என்று பாடிக் கொண்டே கண்களை மூட, சேகரின் உள்ளம் திக்கென்று அதிர்ந்தது..

‘இவன் எப்படி இப்படி பாடிக்கிட்டு இருக்கான்? இவனுக்கு கொஞ்சம் கூட இந்தக் கல்யாணம் நின்னதுல கஷ்டமா இல்லையா?’ சேகரின் மனதினில் இந்தக் கேள்விகள் அணிவகுக்க, மெல்ல எழுந்து ஆர்யனைப் பார்த்தான்.. அவனது வழக்கத்திற்கு மாறாக ஆர்யன் நன்றாக உறங்கி இருந்தான்..

புது இடத்தில் உறக்கம் வராமல் தடுமாறுவது ஆரியனுக்கு பழக்கமான ஒன்று.. அப்படி இருக்க, இன்று அவன் எந்தக் கவலையும் இல்லாமல் உறங்குவதைப் பார்த்தவன், ஒரு முடிவிற்கு வந்தவனாய், விடியலை எதிர்நோக்கி, சமாளிக்கக் காத்திருந்தான்..

நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்த வேளையில், கண்விழித்த பூரணியும், சுபத்ராவும், வேகமாக கிளம்பித் தயாராகி, ஜீவிதாவை எழுப்பி தயார் செய்வதற்காக அவர்கள் இருந்த அறைக்கதவைத் தட்ட கை வைக்க, அது அப்படியே திறந்துக் கொண்டது..

“என்ன பூரணி? இதுங்க ரூம் கதவைக் கூட தாழ் போடாம தூங்கி இருக்காங்க? இல்ல எல்லாரும் எழுந்துட்டாங்களா? ஆனா.. ரூம்ல லைட்டே எரியலையே..” சுபத்ரா கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்து, லைட்டைப் போட, வெண்ணிலாவும், அழகு நிலையப் பெண்ணும் கீழே உறங்கிக் கொண்டிருக்க, மேலே கட்டில் காலியாக இருந்தது..

சுபத்ரா விளக்கைப் போடவும், அழகு நிலையப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர, வெண்ணிலாவோ, கண்களில் வெளிச்சம் படவும், தனது தாவணியைத் தூக்கி கண்களில் போட்டுக் கொண்டு, தனது உறக்கத்தைத் தொடர, பூரணி அவளைப் பார்த்து இதமாகப் புன்னகைத்தார்..

“இவங்கள டிஸ்டர்ப் பண்ணாம ஜீவி குளிக்க போயிட்டா போல இருக்கு..” பூரணி சொல்லிக் கொண்டே பாத்ரூம்மின் அருகில் செல்ல, அந்தக் கதவு வெளிப்பக்கமாக மூடி இருக்க, அதைப் பார்த்து திகைத்தவர், அவசரமாக வந்து வெண்ணிலாவை எழுப்பினார்..

“நிலா.. ஏய் நிலா.. எழுந்திருடி.. ஜீவிதா எங்க போனா?” அவளை உலுக்கிக் கொண்டே கேட்க,

“ஜீவிதாக்கா அங்க தானே மேடம் தூங்கிட்டு இருந்தாங்க.. ஒருவேளை வெளிய போயிருப்பாங்களோ?” அந்த அழகு நிலையைப் பெண் சொல்ல,

“அக்கா மேல கட்டில்ல தானேம்மா தூங்கிட்டு இருக்கா.. என்னை எதுக்கு இப்போ எழுப்பறீங்க? அக்கா ரெடி ஆன உடனே என்னை எழுப்புங்க..” தூக்க கலக்கத்தில் தலையை சொறிந்துக் கொண்டே கூறியவளின் கண்களை ஈரம் செய்துத் துடைத்த பூரணி,

“நிலாக் குட்டி.. அக்கா அங்க கட்டில்ல இல்லடா.. எங்க போனான்னு தெரியுமா? மாமா கிட்ட பேச போறேன்னு ஏதாவது சொன்னாளா?” சுபத்ரா கேட்க,

“இல்ல பெரியம்மா.. நான் தூங்க வந்த பொழுது அக்கா கட்டில்ல தானே இருந்தா.. காபி குடிக்கப் போயிருப்பாளோ?” என்று யோசிக்க, அழகு நிலையப் பெண்ணும் அதையேச் சொல்லவும், சுபத்ரா, பூரணி இருவருக்குமே பதட்டம் தொற்றிக் கொண்டது..

“அக்கா.. இவங்க ரெண்டு பேருக்குமே சரியா தெரியல.. வாங்க நாம வெளிய தேடலாம்..” பூரணி சொல்லவும், இருவரும் வெளியில் செல்ல, வெண்ணிலா பதட்டத்துடன், திலீப்பைச் சென்று எழுப்பினாள்.

“அண்ணா.. அண்ணா.. டேய் அண்ணா..” திலீப்பை பிடித்து அவள் உலுக்க, அதற்குள் பூரணியும், சுபத்ராவும், வெளியில் சென்று பார்த்துவிட்டு, அவனிடம் வந்திருந்தனர்..

இருவரும் வேர்த்து வழிய பதட்டத்துடன் நிற்க, கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்தவன், “என்ன பூனை என்ன ஆச்சு?” என்று கேட்டு, மற்ற இருவரின் முகத்தையும் பார்க்க, அவனது குரல் கேட்டு கண் விழித்த பார்த்தீபனும், இருவரையும் கேள்வியாகப் பார்த்து,

“என்ன ஆச்சு? ஏன் இப்படி பேயடிச்சா போல நின்னுட்டு இருக்கீங்க?” என்று கேட்கவும், சுபத்ரா கண்ணீருடன்,

“என்னங்க.. ஜீவிதாவைக் காணும்.. அவ ரூம்ல இல்ல.. வெளிய மண்டபத்துலயும் இல்ல..” என்று சொல்லவும்,

“என்ன பேசற? இந்த நேரத்துல அவ எங்க போகப் போறா? அவ பாத்ரூம்ல எங்கயாவது இருக்கப் போறா.. ஒழுங்கா பாரு..” கடுப்புடன் பார்த்திபன் சொல்லவும்,

“இல்ல பெரியப்பா.. அக்கா அங்க இல்ல.. நீங்களே வந்து பாருங்க..” வெண்ணிலாவின் பதிலில், திலீபன் வேகமாக அவர்கள் அறைக்குள் நுழைய, அவனது பின்னோடு சென்ற பார்த்திபனும் அறையில் தேடிவிட்டு, பதறியபடி வெளியில் செல்ல,

“அக்கா எங்க போனா வெண்ணிலா? உன்கிட்ட ஏதாவது சொன்னாளா?” திலீபன் கேட்க,

“தெரியலைண்ணா.. நான் தூங்கின அப்போ மேல கட்டில்ல தூங்கிட்டு தான் இருந்தா.. நானும் படுத்துட்டேன்..” அவள் குழப்பமாக, கண்ணீருடன் சொல்லவும்,

அவள் சொல்வதைக் கேட்டு, அவள் அருகில் வந்தவர், “அவ உன்கிட்ட வேற ஏதாவது சொன்னாளா? இல்ல செய்தாளா?” பார்த்தீபன் கேட்க,

“இல்ல பெரியப்பா.. அவ என்கிட்ட ஒண்ணுமே சொல்லல..” என்றவள், சட்டென்று நினைவு வந்தவளாக,

“ஆனா பெரியப்பா.. நேத்து மாமா வரதுக்கு முன்ன.. அவ போனைப் பார்த்து அழுதுட்டு இருந்தா.. நான் கூட எங்களை எல்லாம் விட்டுட்டு போகப் போறதுனால அழறியான்னு கேட்டேன்.. அதுக்கு என்னைத் திட்டி பேசாம உட்காருன்னு சொன்னா.. அப்பறம் அவ எதுவுமே பேசல பெரியப்பா.. எதுவுமே சொல்லல..” அவளது குழப்பமான பதிலில், அவரது மனதில் எதுவோ குடைவதாய்..

தலையை உலுக்கிக் கொண்டவர், “திலீபா.. எதுக்கும் நீ மேல எல்லாம் தேடிட்டு வா.. தூக்கம் வரலைன்னு அவ எழுந்து உலாத்த போயிருக்கப் போறா.. இல்ல மாப்பிள்ளை கிட்ட பேசப் போயிருக்கப் போறா.. நீ இந்தப் பக்கம் போய் தேடு.. நான் அந்தப் பக்கம் போய் தேடறேன்..” என்ற பார்த்திபனும் ஒரு பக்கம் சென்றுத் தேட, மறுபக்கம் திலீபன் தேட, அவனுடன் வெண்ணிலா செல்ல, கீழே இருந்த இடங்களில், பூரணியும், சுபத்ராவும் தேடத் துவங்கினர்..

“அக்காவோட போனுக்கு போன் பண்ணிப் பாருண்ணா..” வெண்ணிலா சொல்லவும், திலீபன் தனது மொபைலை எடுத்து ஜீவிதாவிற்கு அழைக்க, அதே நேரம் பூரணியின் ஆலோசனையில், ஜீவிதாவிற்கு அழைக்க தனது மொபைலை எடுத்த சுபத்ரா, அதில் அவளிடம் இருந்து வந்திருந்த செய்தியைப் பார்த்தவர், கைகள் நடுங்க, தனது கணவரிடம் ஓடிச் சென்று காட்டி, கதறத் துவங்கினார்..