VNE51(3)

VNE51(3)

“ஏன்டி? நான் நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலையா?” தனது தலையில் தானே தட்டிக் கொண்டு இவன் கேட்க,

“ஹலோ… என்ன கொழுப்பா? கேட்டா பதில் சொல்லணும்…” என்று அவனது சட்டையை இழுத்தவளை பார்த்து சிரித்தவன், அவளது மண்டையில் கொட்டி,

“முதல்ல எம்பிபிஎஸ் முடி… அப்புறமா பார்க்கலாம்…” எனவும்,

“யோவ்… நீயென்ன உன் கம்பெனிக்கு ஆளா எடுக்கற? எம்பிபிஎஸ் முடிச்சாத்தான் வேக்கன்சி பில் பண்ணுவேன்னு சொல்றதுக்கு?” எரிச்சலில் மரியாதையை காற்றில் பறக்க விட்டவள், கடுப்பாக கேட்க, அவன் சிரித்தான்.

“ஒழுங்கா படிப்ப முடிடி… இப்பவே கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ண போற?” என்று கண்ணடிக்க,

“நான் என்னவோ பண்றேன்… அது எதுக்கு உங்களுக்கு?” என்று கேட்க,

“நான் கேக்காம, ரோட்டுல போறவனா கேப்பான்?” குறும்பாக அவன் கேட்க,

“பேச்சை மாத்தாதீங்க… எப்ப அப்பாகிட்ட பேசப் போறீங்க?” சட்டை பட்டனை திருகியபடி கொஞ்சலாக கேட்டவளை,

“அல்ரெடி பேசி ஓகே வாங்கியாச்சுல்ல…” என்று புரியாமல் பார்த்தான் கார்த்திக்.

“பர்மிஷன் வாங்கியாச்சு… கல்யாணம் எப்ப? ச்சே… ஷ்யாம் அண்ணன் அன்னைக்கே பேசறேன்னு சொன்னார்… அப்படியாச்சும் பேச சொல்லிருக்கணும்…” என்று குறைபட,

“ம்ம்ம்… சொல்ல வேண்டியதுதானே?”

“எனக்கு வாச்ச அடிமை அதை செய்யும்ன்னு நினைச்சேன் மாமா…” ஹஸ்கியாக அவள் கூறிய தொனியில் ஜெர்க் ஆனவன், சற்று தள்ளி நின்று கொண்டான்.

“என்னடி இப்படியொரு ஹஸ்கி வாய்ஸ்ல பேசற?” சுற்றிலும் பார்த்தபடியே கேட்க, அவள் தலையிலடித்துக் கொண்டாள்.

“எப்படி பேசினாலும் உங்களுக்கு செல்ப் எடுக்கறது கஷ்டம் மாமா…” என்றவள், அவனை இடித்தவாறு போக முயல, குறும்பாக சிரித்தபடி அவளை இழுத்து சுவற்றில் சாற்றி, கதவை தாளிட்டான்.

“அட… கதவையெல்லாம் சாத்தறீங்க…” கலாய்த்தவளை, சுவற்றோடு அழுத்திப் பிடித்து,

“டீசன்ட்டா ப்ரொபோஸ் பண்ணா விட மாட்ட போல… இன்டீசன்ட்டா ஒரு ப்ரோபோசல் பண்ணட்டா?” என்று கண்களில் குறும்பு வழிய கேட்க,

“ம்க்கூம்… பண்ணிட்டாலும்…” என்றவள், அவனை அனாயசமாக தள்ளி விட்டு போக முயல,

“ஏய்… என்னை ஏத்தி விடாதடி…” என்றவன், அவளது கையை இறுக்கமாக பிடிக்க,

“ஏத்தி விட்டா மட்டும்? என்ன ஆகிட போகுது? அடேய் கார்த்திக், நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட…” என்று சிரிக்க,

“இதுக்கெல்லாம் சேர்த்து வெச்சு இருக்குடி உனக்கு…” என்றவன், அவளை இடையோடு சேர்த்துப் பிடிக்க, அவளது புன்னகை இன்னும் விரிந்தது.

“இப்பவும் சொல்றேன் மாமா…. நீ அதுக்கு சரிபட்டு வர மாட்ட…” என்று கூறும் போதே,

“வைஷாலி, கார்த்திக் அண்ணாவ பார்த்தியா?” என்ற வெளியே பைரவியின் குரல் கேட்க, பேசிக் கொண்டிருந்த பிருந்தாவின் வாயை கையால், “உஷ்ஷ்ஷ்…” என்றபடி மூடினான்.

சொல்லி முடிப்பதற்குள்ளாக தான் இதற்கு சரிப்பட மாட்டோம் என்று அவனாகவே ப்ரூவ் செய்தவனை பார்த்து பிருந்தாவுக்கு சிரிப்பு பீறிட்டது.

“இல்ல பெரிம்மா… நான் இப்பத்தான் வந்தேன்…” என்ற அந்த வைஷாலியிடம்,

“அட பொண்ணே, எல்லா பொண்ணுங்களும் கொரியோகிராபர் கிட்ட காலைலருந்து ஸ்டெப்ஸ் கத்துட்டு இருக்காங்க… நீ என்னடா கண்ணா இப்பத்தான் வர்ற?” என்ற பைரவியிடம், அந்த வைஷாலி,

“அதை உங்க தொங்கச்சி கிட்ட கேளுங்க… கிளம்ப இத்தனை லேட் பண்றாங்க… நான் பேசாம மஹா அக்கா கூடவே இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன்…” என்று கோபித்துக் கொண்ட வைஷாலியிடம்,

“நீ இன்னைக்கு அக்கா கூடவே இருந்துக்கடா… நைட் மெஹந்தி முடிச்சுட்டு, நாளைக்கு சங்கீத்க்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ணு வைஷு…” என்று சமாதானம் செய்ய,

“அம்மா ஒத்துக்க மாட்டேங்கறாங்க…” என்று செல்லம் கொஞ்சினாள் அவனது சித்திப் பெண்.

“அவளை நான் பார்த்துறேன் கண்ணா… நீ அக்கா கிட்ட போ… கொரியோகிராபர் அங்க தான் இருக்காங்க…” என்று அவளை அனுப்பி விட்டு, “இந்த கார்த்திக் எங்க போனான்? தலைக்கு மேல வேலை கிடக்குது… இந்த பையன் எங்க போனான்னு தெரியலையே…” என்று புலம்பியபடி அவரது குரல் தேய்ந்து மறைய, இழுத்துப் பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டான் கார்த்திக்.

கதவை மெதுவாக திறந்தவன், இரண்டு பக்கமும் பார்க்க, யாரும் இல்லை.

அவளை தன்னிடமிருந்து தள்ளி நிறுத்தியவன், “அம்மா தாயே… பரதேவதை… இந்த கல்யாணம் முடியற வரைக்கும் பக்கத்துல வராத…” என்றவனை பார்த்து சிரித்தாள்.

“அதான் சொன்னேன்ல… நீங்க அதுக்கு சரிப்பட்டு வர மாட்டீங்க…” என்று கண்ணடிக்க,

“என்னை ரொம்ப ரேக்கிட்டு இருக்க… ஒரு நாள் இல்ல ஒருநாள் உனக்கு இருக்குடி…” என்றவன், “நான் முன்னாடி போறேன்… நீ ஒரு டூ மினிட்ஸ் கழிச்சு வா…” என்றவன், அவளை சட்டென இழுத்து உதட்டில் சின்னதாக மின்னல் முத்தம் வைத்து விட்டு, கண்ணை சிமிட்டி சிரித்தபடி வெளியேறினான்.

அவனை அதுவரை கிண்டல் செய்தவள், அவன் உண்மையிலேயே முத்தமிட்டானா என்ற அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அறையை கடக்கும் போது பிருந்தா ‘பே’ வென நிற்பதை கண்ட வைஷாலி,

“இங்க என்ன அண்ணி பண்ணிட்டு இருக்கீங்க? அங்க உங்களை மஹாக்கா தேடறாங்க…” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு போனாலும், ஒருவித கனவுலகில் சஞ்சரித்தபடியே தான் அதன் பின் சடங்குகளில் கலந்து கொண்டாள்.

அவளது அந்த பார்வையை அவ்வப்போது கண்ட கார்த்திக், கண்ணை சிமிட்டி சிரித்து வேறு வைக்க, அவளது முகம் சிவந்து செங்கொழுந்தானது.

ஏதோவொரு வேலையாக அவளருகில் வந்த கார்த்திக்,

“ஒய்… என்னடி இப்படி பே’ன்னு முழிக்கற? இன்னொரு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கனுமா?” என்று கிண்டலாக கேட்க,

“தெய்வமே… ஆளை விடுங்க…” என்று அவள் ஓட, அருகில் வந்த ஷ்யாம்,

“டேய் மச்சான்… உன் பார்வையே சரியில்லையே… என்னடா நடக்குது இங்க?” என்று கலாய்க்க,

“என்ன நடக்குது? ஆடு மாடு கோழி… எல்லாம் தான்…” என்று பதிலுக்கு அவன் கடிக்க,

“ம்ஹூம்… எலி ஹாப் பேன்ட் போட்டுட்டு போகுது… சம்திங் சம்திங்…” அருகிலிருந்த இன்னொரு நண்பன் ஷ்யாமுக்கு எடுத்துக் கொடுக்க,

“ஹரஹர மகாதேவகி…” என்றான் ஷ்யாம் குறும்பாக கண்ணடித்து! அவனது அந்த ஹரஹர மகாதேவகிக்கான அர்த்தம் அவனது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியுமாதலால் அனைவருமே வாய்விட்டு சிரித்தனர்.

“ஓஹோஓஓ….”

“சுவாமிஜி…” கோரசாக கத்தியவர்கள், “அப்படீன்னா அப்படியா சுவாமிஜி?”

“அப்படிதான்னு சுவாமிஜியோட ஞான திருஷ்டி சொல்லுது பக்தா…” என்றவன், “அப்படீனா அப்படியான்னு இந்த பக்தா கிட்ட கேட்டுடு பக்தா…” என்று சில்மிஷமாக சிரிக்க, கார்த்திக் புறம் திரும்பியது அந்த கூட்டம்.

“அப்போ அப்படிதானா கார்த்திக்?” என்று அவர்கள் சிரிக்க,

“யோவ்… என்னய்யா? அப்படியா இப்படியான்னு? ஒண்ணுமே புரியல…”

“அப்படிதானான்னு தானே கேட்டோம்… இப்படியான்னு கேக்கவே இல்லையே சின்ன குருஜி?” என்று பாஸ்கர் கிண்டலடித்தான். பாஸ்கர் நண்பர் குழுவில் ஒருவன்.

“பாஸ்… லைட்டை ஏன்யா என் பக்கம் திருப்பறீங்க? இப்ப மச்சானை மட்டும் டார்கெட் பண்ணுங்கய்யா…” என்றவன், அந்த கூட்டத்திலிருந்து தப்பித்தான்.

அவனை எல்லோருடைய சிரிப்பும் தொடர்ந்தது.

ஷ்யாமின் கல்லூரி நண்பர்கள், பள்ளி நண்பர்கள் என சுற்றிலுமிருக்க, கார்த்திக்கின் நண்பர்களும் இருக்க, இருவருமே எந்த தளைகளுமில்லாமல் அந்த நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளுக்குள் எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும், திருமண வைபவமும், நண்பர்கள் அருகாமையும் ஷ்யாமை வெகுவாக உற்சாகத்தில் ஆழ்த்தியிருந்தது.

அதிலும் முதல் நாள் பார்ட்டியிலிருந்தே முழுவதுமாக சந்தோஷத்தில் ஆழ்ந்து விட்டிருந்தான். உடன் ஒவ்வொன்றிலும் கார்த்திக். இயல்பாகவே ஷ்யாம் அதிகபட்சமாக போய்விட மாட்டான் என்றாலும் உடனிருந்த கார்த்திக் அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டே இருந்தான். கார்த்திக் எதையும் மிஸ் பண்ண மாட்டான் என்றாலும் அளவு தான்.

அப்போதிலிருந்தே கார்த்திக்கின் எச்சரிக்கை பார்வையை புன்னகையோடு அங்கீகரித்துக் கொண்டான் ஷ்யாம்.

அதே மனநிலையோடு அத்தனை கலாட்டாக்களிலும் பங்கேற்றவன், சங்கீதத்தில் நண்பர்களோடு சேர்ந்து கொண்டு டான்ஸிலும் கலக்கினான்.

ஹல்டியும் மெஹந்தியும் மஹாவின் வீட்டில் நடக்க, சங்கீத் உத்தண்டியிலிருந்த பீச் ரிசார்ட்ஸில் நடந்தது. அங்கேயே மிக ஆடம்பரமான அரண்மனையை போன்ற செட்டை வடிவமைத்து இருந்தனர்.

அதிலும் ஒரு பாடலுக்கு ஷ்யாமும் மஹாவும் மட்டும் ஆடுமாறு கொரியோக்ராபர் வடிவமைத்து இருக்க, மஹா முடியவே முடியாதென மறுக்க, விடாப்பிடியாக, வம்படியாக அவளை ஆட வைத்தான் ஷ்யாம்.

‘ஒரே ஓர் ஊரில், ஒரே ஓர் ராஜா…’ பாதி தமிழும் பாதி தெலுங்குமாக ஒலிக்க, விசில் பறந்தது.

பாடலை பயிற்சி செய்யும் போதே அவளை வம்பிழுத்து கொண்டு தானிருந்தான்.

“குல்ஃபி… பாட்டுல ஒரு பிரெஞ்ச் ஐட்டம் வருமே… அதையும் ப்ராக்டிஸ் பண்ணலாமா?” என்று அவளது காதில் கிசுகிசுக்க, அவனை முறைத்தபடிதான் ப்ராக்டிஸ் செய்தாள்.

“இப்படியே பேசிட்டு இரு… உன் மண்டைல நறுக்குன்னு கொட்டி வைக்கறேன்…” பல்லைக் கடித்துக் கொண்டு கூற,

“நீ ரொம்ப லொள்ளு பண்ற குல்ஃபி… இதுக்காகவே அங்க வெச்சு அந்த சீனையும் செஞ்சு காட்ட போறேன்…” என்று கிண்டலாக கூற, கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் கண்ணீரில் மிதக்க ஆரம்பித்து இருந்தது.

இவன் சொன்னால் செய்து காட்டி விடுபவனாயிற்றே… அத்தனை பேருக்கு முன்னும் ஏதாவது செய்து விடுவானோ என்ற பயத்தில் கண்கள் கலங்க, அதை பார்த்தவன், தலையிலடித்துக் கொண்டான்.

“இப்படியே அழுமூஞ்சியா இரு… உன் பேரன் பேத்தி நம்ம கல்யாண ஆல்பம் பார்க்கும் போது, இந்த கிழவி ஏன் அழுகறான்னு தான் கேக்க போறாங்க…” என்று சிரிக்க,

“அதெல்லாம் கேக்க மாட்டாங்க…” என்று உதட்டை சுளித்துக் கொண்டாள்.

“சப்போஸ் கேட்டாங்கன்னா?”

“அதான் கேக்க மாட்டாங்கன்னு சொல்றேன்ல…”

“நானே சொல்லிக் கொடுப்பேன்டி…” என்று ஷ்யாம் சிரிக்க,

“நீ இப்படியே வம்பிழு… நைட்டோட நைட்டா நான் கல்யாணமே வேண்டாம்ன்னு ஓடிர போறேன்…” என்று கடுப்பாக கூற,

“நீ எங்க போனாலும் என் கண்லருந்து தப்பிக்க முடியாது குல்ஃபி… ஈவன் எனக்கு தெரியாம நீ விஜியை பார்க்கனும்ன்னு நினைச்சாலும்…” என்றவனை வெறித்துப் பார்த்தான். அவனது முகத்திலிருந்த புன்னகை வாடவில்லை. ஆனால் அது செயற்கையான புன்னகை என்பதை மஹா கண்டுகொண்டாள்.

ஆனால் ஷ்யாமுக்கு தெரியாமல் அவனை பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லையே! அவன் இல்லாமல் பார்த்தாள் அவ்வளவுதானே… அதிலும் ஒரு நன்மையாக விஜி குணமாகி இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்ததை விட எத்தனையோ பேசியும் இருக்கிறானே! அதையெல்லாம் விஸ்ராந்தையாக அமர்ந்து இருவருமாக பேச வேண்டும் என்று நினைத்தாள், ஆனால் அதற்குள்ளாக திருமண கொண்டாட்டங்கள் இழுத்து கொண்டதல்லவா!

Leave a Reply

error: Content is protected !!