m13

m13

மகிழம்பூ மனம்

மனம்-13

பிள்ளைகள்முன் கணவனிடம் பேசுவதை வழமைபோலவே, இதுவரைத் தொடர்ந்திருந்தாள் யாழினி.

குழந்தைகள் விளையாட்டுத் தனத்தோடு இருப்பதாகத் தோன்றினாலும், அவர்களின் கவனம் பெரியவர்களிடம் இருக்கும் என்பதை உணர்ந்தே, அவ்வாறு நடந்து கொண்டிருந்தாள் பெண்.

ஆனால், யுகேந்திரன் அதுபோல எண்ணாததால், யாழினியின் வார்த்தைகளைக் கேட்டு, சட்டை செய்யாமல், அலட்சியப்படுத்திச் செல்வதை கவனித்த மகள் தியா, தாயிடம் ஒரு நாள்

“ம்மா… உங்களுக்கும், அப்பாவுக்கும் இடையில ஃபைட்டா?”, என்று நேரடியாகக் கேட்டு, திகைக்கச் செய்திருந்தாள்.

ஆனாலும் குழந்தையிடம் தனது திகைப்பை மறைத்தவள், “இடையில என்ன?”, என்று மகளையே திருப்பிக் கேள்வி கேட்டதோடு, மகளை இழுத்து நெற்றியில் உச்சி முகர்ந்தவள், “இடையில… எப்பவும் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஊடால வந்து உக்கார தியா குட்டிதான்”, என்று அவளின் செயலையே, பதிலாக்கி நகர்ந்திருந்தாள்.

“போங்கம்மா…”, என்று சிணுங்கிய மகள் விடாமல், “சைலண்டா உங்களுக்குள்ள சண்டையா?”, என்ற மகளின் வார்த்தைகளைக் கேட்டு நின்றவளுக்கு, மனம் வலித்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல்,

“அப்டியெல்லாம் இல்லையே? தங்க பாப்பாவுக்கு ஏன் அப்டியெல்லாம் தோணுது?”, என்று சிரித்த முகமாகவே கேட்டிருந்தாள்.

“இல்லை! எங்க கிளாஸ்ல யாருகூடவாவது சண்டை போட்டாத்தான் இப்டி நடந்துப்போம்! அதான் கேட்டேன்மா!”, என்றுவிட்டு, அதைத் தொட்டே பேச்சை ஆரம்பித்த மகளை, திசைதிருப்புவதற்குள், திசையை மறந்து போயிருந்தாள் யாழினி..

மகளின் இதுபோன்ற செயல்களின் மீதான ஆர்வத்தை, மகளறியாமல் மடைமாற்றியிருந்தாள்.  இன்னும் தன்மகள், சிறுபிள்ளை கிடையாது என்பதை மனதில் ஓர்மைப்படுத்தியவாறு, யோசனையோடு அகன்றாள்.

ஆண் குழந்தைகள் பெரும்பாலும், அவ்வளவு நுணுக்கமாக வீட்டின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவது கிடையாது.

ஆண் குழந்தைகளின் பார்வை, மேலோட்டமானது.  உலகியலில் விசாலமானதாக இருக்கும்.

ஊடுருவி, அலசி, ஆராயும் குணம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே அவர்களிடம் இருக்கும்.

பெரும்பாலும் தாயையோ, சகோதரிகளையோ சார்ந்து வளருபவர்கள், உதவும் குணத்தோடும், மனித நேயத்தோடும், இருப்பார்கள்.

தாயின் குணம் அதுவாக இருந்தால்!

அன்றி, மாறி வளர்ந்திருப்பார்கள்.

அபினவ் இதைப்பற்றி, எதுவும் இதுவரை யாழினியிடம் கேட்கவில்லை. 

அபினவ்வின் தேடல் வேறு மாதிரியானது.

வீட்டிற்குள் அவன் நுழையும் வேளைகளில், அவனுக்கு அம்மா வீட்டில் இருக்க வேண்டும்,  அவ்வளவே!

அதிலேயே, அன்றைய தினம் அவனுக்கு வண்ண மயமாகிவிடும்!

ஆனால் பெரும்பாலான, பெண் பிள்ளைகள், வீட்டு நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனிக்கும்.

பெண் குழந்தைகளின் கவனம், எதன்மீது உள்ளது என்பதை, சரியாக கணிக்க இயலாது.

அவர்களின் கவனிக்கும் திறன், குறைவான நேரத்தில், ஜெட்டின் வேகம் கொண்டதாகவே இருக்கும்.

கவனத்தில் கொண்டதை, அத்தோடு, விட்டுச் செல்லாது.

என்ன? ஏன்? எதற்கு? என்று தனக்குள், அதுபற்றிய ஆராய்ச்சியைத் துவங்கும்.

தனக்கான விடை தேடி, முதலில் நாடுவது, பெற்றோர்களையே!

பெற்றோர் பொறுப்பாக விளக்கினால், அதன் தேடல் நீளும்!

பிள்ளைகளின் வளர்ச்சியோடு, அதன் பார்வை, விசாலப்படத் துவங்கும்!

இது ஆரோக்யமான சில பெண் குழந்தைகளுக்கு உரிய குணமிது!

சில பெண் குழந்தைகள், வெளி நபர்களை மட்டுமே ஆராய்ச்சிக் கண்ணோடு நோக்கும்!

புறம் பேசும் குணங்களுடன் கூடிய மக்களிடையே வளருபவர்கள், இத்தகைய குணங்களைப் பெற்றிருப்பர்.

பத்து சதவீத பெண் குழந்தைகள் மட்டுமே, மிகவும் மந்தத் தன்மையாக செயல்படும்.  உடல் ஆரோக்ய குறைபாடு, மற்றும் தாமச உணவை உட்கொள்வது, இதற்கு பெரும் காரணமாக இருக்கும்.

சில குழந்தைகள், ஆரோக்யமாக இருந்தாலும், பெற்றோர்களின் அடக்குமுறையினால், இயல்பைத் தொலைத்து அமைதியாக மாறியிருப்பார்கள்.

தியாவின் கேள்விகளுக்குப்பின், நீண்ட நேரம் யோசித்திருந்தவள், அவளின் மனதில் தோன்றும் சந்தேக விதைகளை, வெளியில் எடுத்து வீச வேண்டிய, தனது கடமையை உணர்ந்தாள்.

அதனால், யுகி தன்னிடமிருந்து விலக எத்தனித்தாலும், எதையும் வெளிக்காட்டாமல், வழமைபோல இயல்பாக கணவனுடன் பேசினாள் பெண்.

கணவனின் ஒதுக்கம், மனதில் வலித்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல், பணிகளில் தன்னை மறந்திருந்தாள்.

////////////////

பத்து நாட்களில் தங்களுக்கு ஏதுவான ஒரு வீட்டைப் பார்த்திருந்தாள் பெண். கணவனின் கவனமில்லாத நிலையை கலைக்க விரும்பாமல், மாமியாரிடம் விடயம் பகிர்ந்திருந்தாள்.

யுகேந்திரனின் கோடைகால பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தியவன், வேறு எதிலும் கவனம் செலுத்த தயாராக இல்லை.

ஆகையினால், பெரியவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று வீடு பார்த்து, அனைவருக்கும் திருப்தியாக இருக்கவே, அட்வான்ஸ் கொடுத்துவிட்டு வந்திருந்தனர்.

ஒரு நல்ல நாளில், இருவீட்டு பெரியவர்களும் வந்திருந்து, பால் காய்ச்சி, யாழினி, யுகேந்திரன் குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து தர சாமான்களையும், புதிய வீட்டிற்கு மாற்றியிருந்தார்கள்.

“வாடகை வீட்டில இருந்திட்டே, சீக்கிரமா சொந்த வீடு கட்டி, கிரஹப்பிரவேசம் வைக்க, எங்களோட ஆசியும், ஆதரவும் என்னிக்குமே உங்களுக்கு உண்டு.  வாழ்த்துகள்!”, என்று அம்பிகா, முருகானந்தம் இருவரும் மனமார, மகனையும், மருமகளையும் வாழ்த்தியிருந்தனர்.

பெரியவர்கள், வற்புறுத்தி அழைத்தமையால், தேவாவும், மரியாதை நிமித்தமாக அங்கு வந்து சென்றிருந்தான்.

‘தான் திரும்பி வராமல் இருந்திருந்தால், தற்போது இந்த மாற்றங்கள் எதுவுமின்றி, அனைவரும் ஒரே இடத்தில் சந்தோசமாக இருந்திருப்பார்கள்’, என்று தேவாவிற்கு தோன்றிய எண்ணத்தை ஒதுக்க இயலாமல், ஒதுங்கியே இருந்தான்.

மேலும் தந்தையின் பென்சன் பணத்தில் அமர்ந்து உண்ணுவது, ஏனோ மனதில் வருத்தத்தைத் தந்தது.

யாழினியை நினைத்து, தற்போது சிறு வருத்தம், சரிதா, ராஜேஷ் தம்பதியருக்கு.

இருந்தாலும், எந்த சூழலிலும், மகளை விட்டுத்தராத, அவளின் மாமனார் மற்றும் மாமியாரை எண்ணி, உண்மையிலேயே உவகை கொண்டனர்.

ஃபிளாட்டில் இருந்த பெரும்பான்மை சாமான்களை, வாடகை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதால், ஃபிளாட்டே வெறிச்சோடியிருந்தது.

தேவா, அம்பிகா, முருகானந்தம் மூவரும், பழைய ஃபிளாட்டில் இருக்க, யாழினி, யுகேந்திரன், அபினவ், தியா நால்வரும், வாடகை வீட்டில் நிரந்தரமாகக் குடிபெயர்ந்திருந்தனர்.

———————–

புதிய வீட்டிற்கு வந்தும், பொறுப்புகள் குறையாமல், குதூகலம் இல்லாதபோதும், ஈடுபாட்டோடு சிலவற்றை ஒழுங்குபடுத்தும் எண்ணத்தில், வேலைகளை இழுத்துப் போட்டு செய்யத் துவங்கியிருந்தாள் யாழினி.

“டேய் அபின்னா, சாப்பிட வா!  அப்டியே அப்பாவையும் கூட்டிட்டு வா!”, என்று தியா அழைக்க, மூவரும் காலை ஆகாரத்திற்காக, டைனிங்கில் வந்து அமர்ந்திருந்தனர்.

யுகேந்திரன், இடைநிறுத்தம் செய்த மாணவர்களின் தரவுப்பட்டியல் அனுப்புவது பற்றிய யோசனையோடு வந்து அமர்ந்திருந்தான்.

யாழினி உணவினை எடுத்து வருமுன், பரபரப்பாக, எதிர்பார்ப்புடன் இருந்த தமையனைப் பார்த்த தியா, “பீ கூல்… எதுக்கு இன்னிக்கு ஓவர் எக்ஸ்பெக்டேசன்!”

“சம்மர் வந்ததில இருந்து, பாயில் ஃபூட், கஞ்சி, கூலுனு வச்சு, ஆயில் ஐடத்துக்கு தடா சொல்லிட்டாங்களே அம்மா!”, வருத்தமாக தங்கையிடம் கூறினான் அபினவ்.

“நான் பண்ண டார்ச்சர்ல, தடாவுக்கே தடா போட்டாச்சு! பாயிலுக்கு பதிலா இன்னிக்கு ஆயிலு வந்திருச்சுல்ல!”, என்று தியா சிரிக்க

தாயின் பேச்சில் கொண்ட ஈர்ப்பால், யாழினியைப் போலவே, இமிடேட் செய்து, பேசும் பழக்கத்தை, தியா… அவளாகவே வளர்த்துக் கொண்டிருந்தாள்.

“ரொம்ப நாளுக்கு பின்ன செய்யறாங்கல்ல!  அதான்..”, என்றவன்

“அம்மா செய்யற பூரி மசால், செம யம்மியா இருக்கும்னு நினைச்சாலே, எனக்கு அப்டியொரு ஈகரா இருக்கு தியா, உனக்கு அப்டியில்லையா?”, அபி

“யம்மியா, அது டேஸ்ட் கம்மியானு, டேஸ்ட் பண்ணி சொல்லு அபின்னா(அபி அண்ணாவைச் சுருக்கி அபின்னா)”, இது மிகவும் சீரியசான குரலில் தியா

“அம்மா எப்பவுமே யம்மியா தான் செய்வாங்க!”, தாயை விட்டுக்கொடுக்காத தனயனாக, கோபக் குரலில் அபி

“யாருக்குத் தெரியும்?  இன்னிக்கு சாப்பிட்டு பாத்துத்தான் நான் சொல்வேன்.  என்னப்பா?”, என்று தனது தந்தையையும், துணைக்கு இழுத்திருந்தாள்.

‘இன்னும் பள்ளி திறக்க எத்தனை நாள் உள்ளது?’ என்று தனக்குள் யோசனை, செய்தபடி அமர்ந்திருந்த யுகியை, நோக்கி வந்த மகளின் எதிர்பாரா கேள்வியை எதிர்பார்த்திராதவன் விழித்தான்.

அதன்பின், நடப்பிற்கு வந்தவன், சுற்றம் ஆராய்ந்தான்.

“வர வர இந்த அப்பா ஓவரா ட்ரீம்லயே இருக்காங்க!”, என்று கூறியவள்,

தமையனின் காதருகே சென்று ரகசியம் பேசுவதுபோல, ஆனால் சத்தமாகவே, “எப்பப் பாத்தாலும், ஒரே ட்ரீம்தான்!

என்ன கேட்டாலும், ட்ரீம்ல இருந்து வெளிய வந்து, திருதிருன்னு ஒரு முழி முழிப்பாங்க பாரு!

பாக்க செமையா இருக்கும்!

நீ வேணா இப்ப பாரேன்!”, என தந்தையையே கலாய்த்துக் குலுங்கிக் குலுங்கி வாயில் கைவைத்து மறைத்தபடியே சிரித்துக் கொண்டிருந்தாள் தியா.

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த யாழினி, கையில் உணவுப் பொருட்களுடன், அங்கு வேகமாக வந்தவள், “தியா…!  என்னாதிது? பெரியவங்களை அப்டியெல்லாம் பேசக் கூடாது!  உன் ஃபிரண்ட்ஸ்ட பேசற மாதிரி அப்பாட்ட பேசக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல!”, என்றபடியே கொண்டு வந்ததை டேபிளின் மீது வைத்துக் கொண்டே, மகளை அதட்டியிருந்தாள்.

உட்கார்ந்த இடத்திலேயே, சற்று குனிந்து, “சாரிம்மா, இனி பேசமாட்டேன்!”, என்று சிரிப்பை மறைத்தபடியே மகள் கூற,

சுதாரித்திருந்தவன், என்ன மகள் தன்னைப் பேசினாள், எதற்காக மனைவி மகளை அதட்டுகிறாள் என்று தெரியாதபோதும், இனி அவ்வாறு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு, மகளுடன் இயல்பாக பேசத் துவங்கியிருந்தான் யுகி.

வாடகை வீட்டிற்கு வந்த ஓரிரு நாளில் சற்று இலகுவாகியிருந்தான்.  மகளின் பேச்சிற்குப்பின் சுற்றத்தில் கவனம் செலுத்தியிருந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து,  முன்புபோல கடினமுகம் காட்டாமல் முன்புபோல இருந்தவனை, “அப்பா! அம்மாகூட எப்ப பழம் விட்டீங்க?”, என்ற மகளின் கேள்வியில், ஒன்றும் புரியாமல்  ‘பழமா?’ என விழித்தவனை

“இப்படியே பாக்காதீங்கப்பா! அம்மா மட்டும், இப்ப வந்து உங்க முழியப் பாத்தாங்கன்னா, அப்புறம் வந்து என்னைத்தான் திட்டி வைப்பாங்க! அப்புறம் தனியா கூப்டு வச்சு, ஒரே அட்வைஸ் வேற!”, என்று பயப்படுபவள் போலவும், பிறகு சலிப்பாகவும், உடல்மொழியை சற்றே மாற்றி மாற்றி தன்னிடம் பேசியவளைக் கண்டவன், துணுக்குற்றிருந்தான்.

இரு நாட்களுக்கு முன், டைனிங் டேபிளில் என்ன நடந்திருக்கும் என்பதை ஒருவாறு யூகித்திருந்தான், யுகி.

தன்னை உடனே மாற்றிக் கொண்டவன், “அம்மாகூட பழம்விட்டேனா? காய் விட்ருந்தாதானே, பழம் விட முடியும் தியா?”, என்று நின்றிருந்த மனைவியைப் பார்த்து, அசட்டுச் சிரிப்பை உதிர்த்து, மகளையே எதிர்கேள்வி கேட்டு சமாளித்திருந்தான்.

அருகில் இருந்த டவலை கொண்டு வந்து தந்தையிடம் தந்த மகள், “முகத்தை நல்லா தொடச்சுக்கங்கப்பா! முடியல!”, என்று கொடுத்துவிட்டு, சிரித்தபடியே அகன்றிருந்தாள்.

யுகேந்திரனுக்கோ, ‘வாண்டெல்லாம் வந்து நம்மளை வச்சு செய்யற அளவுக்கா நாம மாறிட்டோம்.  இப்ப உள்ளதுக எல்லாம் விசமா இருக்குதுங்க!’, என தன்னையே நொந்திருந்தான்.

தனது தவறுகளை மகளின் நடவடிக்கையில், பேச்சின் கிண்டலில் உணர்ந்தவன், இத்தனை நாட்கள் இதை எப்படிக் கவனிக்காமல் இருந்திருக்கிறேன் என்று தனது முட்டாள்தனத்தை நொந்தபடியே, அதன்பின் சிறியவர்கள்முன் இயல்பாகக் காட்டிக் கொள்ள முயன்றிருந்தான் யுகேந்திரன்.

ஃபிளாட்டில், இன்னும் மூன்று நபர்கள் கூடுதலாக இருந்ததால், குழந்தைகளின் பார்வை அனைவரிடம் இருந்திருக்கும்.

ஆனால் இங்கு வந்தபின்பு, பெரியவர்கள் இருவர் மட்டுமே என்பதால், அவர்களுக்கு இன்னும் தங்களின்மீதான கவனம் அதிகரித்து இருப்பதை உணர்ந்திருந்தான்.

தேவா இல்லாத வீட்டில், எந்த சங்கடமும் இல்லாமல் தனது பணிகளில் ஈடுபட்டான்.

தயக்கம் போயிருந்தது.  ஆனாலும், மனைவியிடம் பேச, தனது தேவைக்காக போய் நிற்க, எதுவோ தடையாக இருந்தது.

தடையாக இருப்பது எதுவோ, அதை அவன் உணரும்போது, அனைத்தும் சரியாகும் என்பதை அறியாமல், அறிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாமல் இருந்தான்.

—————————–

பள்ளிகள் திறக்கும் நாளும் வரவே, பிள்ளைகள் பள்ளி செல்லத் துவங்கியிருந்தனர்.  யுகேந்திரனும் வழமைபோல தனது பணியோடு ஐக்கியமாகி இருந்தான்.

மூவரும் சென்றபிறகு, வெகுநேரம் அவளுக்குரியதாக இருக்கவே, இரண்டு நாட்களில் ஓரளவு, தங்களது வீட்டில் இருந்த அனைத்தையும் ஒதுங்க வைத்திருந்தாள்.

அதன்பின் இருப்பு கொள்ளாமல், பகல் பொழுது பயங்கர சோதனையாக இருந்தது.

அன்றே தனது மாமியாரிடம், தனக்கு நேரம் கிடைக்கும் நாட்களில், பகலில் அங்கு வந்து செல்வதாகக் கூறியவள், யுகியிடமும் தகவலாகக் கூறிவிட்டு, அடுத்த நாளே அங்கு கிளம்பியிருந்தாள்.

கணவனின் அதிருப்தியான முகத்தைக் காணத் தவறியிருந்தாள் பெண்.

யுகேந்திரன், எதையும் அவளிடம் பகிரும் எண்ணத்தில் இல்லை.

பகலில் பெரியவர்களை வந்து பார்த்துவிட்டு, தன்னால் இயன்ற உதவியை, அவர்களுக்கு செய்துவிட்டு, மாலையில் பிள்ளைகள் வீட்டிற்கு வருமுன்னே வீடு திரும்பிவிடுவாள், பெண். 

அங்குமிங்கும், ஒழுங்கற்று இருந்த சாமான்களை, வரும் நாட்களில் கொஞ்சம், கொஞ்சமாக, ஒழுங்குபடுத்தும் பணியினை, ஃபிளாட்டிலும் செய்து வந்தாள் யாழினி.

அன்று காலை பதினோரு மணியளவில் வந்து, மும்முரமாக பணியில் ஈடுபட்டவளை, “எப்பப் பார்த்தாலும், எதாவது வேலை செய்யாம, கொஞ்ச நேரமாது, ரெஸ்ட் எடும்மா!”, என்ற மாமியாரின் அக்கரை கலந்த சத்தம் கேட்டவள், மனம் சக்கரையாக உணர்ந்தாலும்,

“ஒரு மணி நேர வேலதான் அத்தை, இது செய்யறதால, நான் இளைச்சிற மாட்டேன்!”, என்று சிரித்தபடியே கூறி, வேலையில் மும்முரனாள், பெண்.

“நல்ல புள்ளைம்மா!”, என்று சான்றிதழ் தந்தபடி, மதிய சமையல் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டார், அம்பிகா.

அப்போது, எதிர்பாரா விதமாகக் கிடைத்த தேவாவின் பட்டப்படிப்புச் சான்றிதழின் நகலோடு, அவனது முக்கிய ஆவணங்கள் சிலவற்றைக் கண்டவள், மாமனாரிடம் மட்டும் உண்மையைக் கூறிவிட்டு, அவளது வீட்டிற்கு செல்லும்போது, உடன் எடுத்துச் சென்றிருந்தாள் யாழினி.

நகலைக் கொண்டு, மாற்றுச் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வாங்க, விண்ணப்பிக்க எண்ணி, கையோடு எடுத்து வந்திருந்தாள் யாழினி.

இரண்டு நாட்களுக்கு முன்பு, புகைப்படம் ஒன்றையும் எடுத்து வைத்திருந்தவள், அதனையும் தனக்குத் தெரிந்த நம்பகமான நபர்களின் மூலம், விசாரித்துச் சொல்லக் கூறியிருந்தாள்.

கணவனிடம் கூற எண்ணியவளை, முகத்தை தூக்கி வைத்தே தள்ளி நிறுத்தியிருந்தான், யுகேந்திரன்.

காரணம் புரியாதவள், அதற்குமேல் அவனிடம் அதைப்பற்றி பேச முனையாமல், தானே செயலாக்கியிருந்தாள்.

யுகேந்திரன் நடவடிக்கையில் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தான்.  ஆனால், பிணக்கு எதுவும் இருப்பதுபோல காட்டிக் கொள்ளாமல், யாழினி வழமைபோல, தங்களது குடும்பத் தேவைக்காக அவனை அணுகியே வாழ்ந்திருந்தாள்.

“ஏங்க, இன்னிக்கு சாயந்திரம் வரும்போது கொஞ்சம் சாமானெல்லாம் வாங்கிட்டு வாங்க, உங்க பாக்கெட்ல லிஸ்ட் வச்சிட்டேன்”, என்ற மனைவியின் பேச்சிற்கு,

“ம்ஹூம்”, என்பதைத் தவிர, வேறொன்றும் பேசாமல் கிளம்பியிருந்தான்.

‘வேதாளம் எப்ப எந்த மரத்துல ஏறும்னே தெரியல, நாலு நாளு நல்லாத்தான் இருந்திச்சு.  இப்ப அகைன் ஏறிருச்சு!’, என நினைத்தவள், ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

பொழுதை போக்க எங்காவது வேலைக்குச் சென்று வரலாம் என்ற எண்ணத்தில், கணவனிடம் இதுபற்றிக் கேட்கலாமா என யோசித்தாள்.

பிறகு, இரண்டு ஆண்டுகளாகவே, பிஎட் படிக்க வற்புறுத்திய கணவனின் பேச்சை, கண்டு கொள்ளாமல் இதுவரை இருந்தவள், ‘வேலை வேணான்னா, படிக்கலாம்னு சொல்லிருவோம்’, என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள்.

பகலில் பெரும்பான்மை நேரம் தனிமையில் வீணாக்குவதற்கு, ஒன்று வேலை அல்லது பிஎட் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் முடிவிற்கு வந்தவள், அதைப்பற்றி கணவனிடம் பேச எண்ணியிருந்தாள்.

அன்று இரவு பிள்ளைகள் உறங்கியபின், வந்து தயங்கி நின்ற மனைவியை கேள்வியாக நோக்கிய யுகி,

“என்ன?”, யுகி

‘அதுக்குமேல துரைக்கு பேசத் தெரியாதாக்கும்!

கூட ஒரு வார்த்தை பேசினா, வாயில இருக்கிற முத்து கீழே கொட்டிருமாக்கும்!’, என கணவனை மனதிற்குள் வறுத்தவள்

“என்னை, எங்காவது வேலைக்கு சேத்து விடுங்க! இல்லைனா பிஎட்ல சேத்து விடறீங்களா?”, என்று மனதில் நினைத்த தருணத்திற்கு மாறாக, தன்னை மாற்றி தயங்கிக் கேட்ட மனைவியின் உடல்மொழியைப் பார்த்தவனுக்கு, அவனை அறியாமலேயே புன்முறுவல் வந்திருந்தது.

“ம்…”, என்றவன், “என்ன திடீர்னு?”, என்று கேள்வியை முன்வைத்திருந்தான்.

‘நீங்களுந்தான் திடீர் திடீர்னு ஈஈ… னு பாத்து சிரிக்கறீங்க!

இல்லைனா ம்மூஹூம்..னு பாத்து முறைக்கிறீங்க!

என்னிக்காது வந்து கேட்ருக்கனா?

எல்லாம் என் நேரம்’, என்று எண்ணியவள்

“பகல்ல இங்க பொழுதே போகல… அதான்!”, என்று கூறியவளை ஆழ்ந்து, நெடுநாளைக்குப்பின் நோக்கியவனை,

‘பார்வையே சரியில்ல!  என்னாச்சு வாத்திக்கு இன்னிக்கு’, என்று நோக்கியிருந்தாள் யாழினி.

தொடங்குவது சற்றே சிரமம்.  அவளே துவங்கிய சந்தர்ப்பத்தை விட்டுவிடும் அளவிற்கு யுகேந்திரன் முட்டாளல்ல என்பதை அடுத்து நிரூபித்திருந்தான்.

“வேலைக்கெல்லாம் ஒன்னும் போகவேணாம். படிக்கனும்னா சொல்லு, பிஎட்கு  ட்ரை பண்ணலாம்”, என்றவன்

“காலேஜ்லதான் சேப்பீங்களா?”, என்ற மனைவியின் தயக்கமான கேள்விக்கு,

“அதுசரி வேலைக்கு விடாம, காலேஜ்ல சேத்தா,  போயி படிக்கணுமேனு கஷ்டமா இருக்கா!

ஒழுங்கா படிப்பியா, இல்லை… பார்க், பீச் போயிட்டு வரமாதிரி, சும்மா பொழுதை போக்கிட்டு, பெஞ்ச தேய்ச்சிட்டு வர எண்ணமா?”, என்றவனை

‘வாத்திக்கு வாய்க் கொழுப்பப் பாரேன்!

அம்மாடி… என்ன பார்வை இது! 

இதுக்குமேல இங்க நின்னா கண்டிப்பா ஸ்டார்ட் ஆகிரும் ட்யூசன்!’, என்று நினைத்தபடியே

“அதெல்லாம் நான் நல்லா படிப்பேன்”, என்றவளை

“சரி, ஏற்பாடு பண்ணறேன்!”, என்று கூறியவனிடம், தலையை மட்டும் அசைத்து ‘சரி’ என்று விட்டு அங்கிருந்து வேகமாக அகன்றிருந்தாள் பெண்.

‘அதுக்குள்ள, இவளுக்கு அப்டி என்ன தலைபோற அவசரம்?

பேசிட்டு இருக்கும்போதே ஓடிட்டா!’, என்று மனதில் தோன்றிய ஏக்கத்தை தனக்குள் மறைத்தபடியே, வந்து படுத்திருந்தான்.

மறுபுறம் சென்றவள், ‘அப்பாடி, வாத்திட்டே விசயத்தைக் கொண்டு போயச்சு.  இனி ஃப்ரியா வுடு யாழு’, என்று தனக்குள் தட்டிக் கொடுத்தவள், நிம்மதியாக உறங்கச் சென்றாள்.

////////////////

இதற்கிடையில், தனது மாமனாரின் அறிவுரையை ஏற்று, தனது தாலியை உண்டியலில் போடும் முடிவிற்கு வந்தவள், தனக்கு உண்டான சந்தேகங்களை, மாமியிடம் முன்வைத்திருந்தாள்.

“அத்தை, அன்னிக்கு ஒரு நாள் மாமா, என் தாலிய கோவில் உண்டியல்ல போடறதுன்னா போடச் சொன்னாங்கல்ல.  அதையே, ஏன் இவங்களை(யுகேந்திரன்) கல்யாணம் பண்ணும்முன்ன செய்யல?”, என்று கேட்டவளைப் பார்த்து

பெருமூச்சொன்றை இழுத்து விட்டு, தன்னை நிதானப்படுத்திய அம்பிகா, “அதுவா, சொல்லுறேன்…”, என்று நீட்டி முழங்கி கூறத் துவங்கினார்.

“தேவா அப்ப என்ன ஆனான்னு, எதுவும் சரியா தெரியாம, அந்தத் தாலிய உண்டியல்ல போடக்கூடாதுல்ல.  அதான் அதைப்பத்தி அப்ப யோசிக்கலை. 

அப்பவே அவனைப் பாத்திருந்தாக்க, கழட்டி உண்டியல்ல போட்டுட்டு, இவனை விட்டு வேற தாலி வாங்கிக் கட்டச் சொல்லிருக்கலாம்.

இவந்தான் வனவாசம் போயிருந்தானே!”, என்று கலங்கிய கண்களை, சேலைத் தலைப்பில் துடைத்துக் கொண்டவர்,

“உயிரோட இருக்கிறவங்களுக்கு, உடம்பில எதாவது பிரச்சனையின்னா, அதாவது பையனுக்கு எதாவதுன்னா, அவம்பொண்டாட்டி நேந்துக்கும்.

‘எம்புருசனுக்கு உயிர்பிச்சை கொடுத்து, எம்மாங்கல்யத்தை காப்பாத்து, நான் அவரு கட்டின தாலிய உனக்கு காணிக்கையா தரேன்னு! வேண்டிக்குவாங்க’, அம்பிகா.

“அப்டித்தான் பெரும்பாலும் கோவில் உண்டியல்ல தாலிய போடுவாங்களா அத்தை”, யாழினி.

“ஆமா, ஆனா நம்ம வீட்ல நடந்த கூத்து, இதுவரை நான் எங்கேயும் கேள்விப் பட்டதில்லை”, என்று அங்கலாய்ப்போடு கூறினார்.

“இப்ப நான் என்ன நினைச்சு அதைக் கழட்டிப் போடணும் அத்தை”, என்று கேட்க

“சின்னஞ் சிரிசா, நல்லா வாழாம, அல்பாயுசுல செத்துட்டா, பொண்ணுக்கு அமங்கல காரியம் பண்ணி கழட்டுற தாலிய, அதுக்கப்புறம் வேற எந்த நல்லதுக்கும், அதைத் தங்கமா உருக்கிக்கூட பயன்படுத்தமாட்டாங்க!

இவன் உன்னைய அம்போன்னு விட்டுட்டுப் போனவன்…! என்னத்தை நினைச்சு போடப்போற! 

கடவுளே, இனியாது எம்புருசன், புள்ளையோட, எந்த சஞ்சலமோ, குறுக்கீடோ, வராம, சந்தோசமா வாழனும். 

அதுக்குத் தடையா, எதுவும் வரக்கூடாது, அப்டினு நினைச்சு கழட்டிப் போடு!”, என்று கூறியவர்

“நல்லா வாழ்ந்து, சீரும் சிறப்புமா இருந்து, மறைஞ்சவங்களோட தாலிய மட்டும், அப்டியே வச்சிருந்து, அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கு, கொடுத்து கட்ட சொல்லுவாங்க!

இது சில இடங்கள்ல மட்டுமே செய்யறாங்க!

பெரும்பாலும், அம்மா கழுத்துல இருந்த தாலிய, அவங்க பையன்களுக்கு மோதிரமா மாத்தி தருவாங்க!

ஆனா, அதை அவங்கவீட்டுப் பொண்ணுங்களுக்கு தர மாட்டாங்க!  பையனே இல்லாத வீடா இருந்தாலும், அந்தப் பொண்ணு பயன்படுத்தனா, விருத்தியா இருக்காது.

ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு மாதிரி பண்ணுவாங்க!

இப்பல்லாம் தாலிய, ஒரு பொருட்டா நினைக்காம, கழட்டி வச்சுட்டு, பாசி மணிய உடுப்புக்கு ஏத்தமாதிரி போட்டுக்குதுங்க!”, என்று தான் கண்ட சில சென்னைவாசிகளின் வழக்கத்தைப் பற்றியும் மருமகளிடம் கூறியிருந்தார் அம்பிகா.

மாமியாரிடம் விளக்கம் பெற்றவள், அவருடன் சென்று, ஒரு நல்ல நாளில், கோவில் உண்டியலில் தனது தாலியைச் சேர்ப்பித்து இருந்தாள்.

///////////////

மாமியாருடன் சென்று வந்ததால், அதைப்பற்றி யுகேந்திரனிடம் எதுவும் பேசவில்லை.

அதுவரை செயின் மட்டுமே கழுத்தில் அணிந்திருந்தவள், அதன்பின் மஞ்சள் சரடில் மஞ்சள் கிழங்கை கட்டி அணிந்திருக்கவே, புதிய வசீகரம் பெண்ணுக்கு வந்திருந்தது.

ஏதோ ஒரு வித்தியாசம் என்பது மட்டுமே யுகேந்திரனுக்கு புரிந்தது.

அது என்ன? எதனால்? என்பதைக் கேட்க, அவனின் தன்முனைப்பு இடங்கொடுக்கவில்லை.  யூகித்து அறிய, உண்மையிலேயே அதுபற்றிய ஞானம் இல்லை.

யாழினியும், ‘கேட்காதவனிடம், என்னத்தைக் கூற!’ என்று விட்டுவிட்டாள்.

வாரயிறுதி விடுமுறை நாளாக இருக்கவே, மூவரும் தாமதமாகவே எழுந்து வந்தனர்.

அதுவரை பள்ளி செல்லும் அவசரத்திலும், பிற வீட்டுப் பாட வேலைகளிலும் கவனம் செலுத்திய தியா, அன்று காலையில் தலைக்கு ஊற்றி, நெற்றிக் குங்குமம் இட்டு, முடி நுனியில் முடிச்சிட்டு, அடுக்களையில் பணியாக இருந்த தனது தாயை பார்த்தவளுக்கு, ஏதோ ஒரு வித்தியாசம் தாயிடம் தெரிந்தது.

ஆனால் அது என்ன என்பதை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து கணிக்கும்முன், “என்னம்மா! இன்னிக்கு செம க்யூட்டா எப்பவும் விட அழகா இருக்கீங்க!”, என்று பல்விளக்காமல் தாயின் கன்னத்தில் முத்தமிடப்போக,

“பிரெஷ் பண்ணாம கிஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?”, என்று கண்டித்தவளை, கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் பதித்துவிட்டே விலகியிருந்தாள் தியா.

“யூ… நாட்டி..!”, என்று விரட்டிய தாயை

“என்னம்மா யூஸ் பண்ணீங்க?  எனக்கும் யூஸ் பண்ணக் குடுங்கம்மா?”, என்று அவளது பேச்சிலேயே குறியாக இருந்தவளை

“எப்பவும் போலத்தான் தியா இருக்கேன்.  இன்னிக்கு என்ன புதுசா திரியறேங்கற!”, என்று சலித்தவள், “போ.. முதல்ல பிரஷ் பண்ணிட்டு வா!”, என்று விரட்டிவிட்டாள்.

தந்தையிடம் சென்றவள், “அவங்களுக்கு மட்டும், ஏதோ ஸ்பெசலா வாங்கிக் கொடுத்து, கவனிக்கற மாதிரி தெரியுது? இதெல்லாம் சரியில்லை!  ஆமா… சொல்லிட்டேன்!”, என்று  தந்தையை நோக்கி, குற்றப்பத்திரிக்கை வாசித்தவள், எதிர்பாராத நிலையில் அமர்ந்திருந்த யுகேந்திரனைத் திணறடித்தாள்.

முதலில் திணறியவன், மகளின் பேச்சின் முடிவைக் கேட்டு, வாய்விட்டு நீண்ட நாட்களுக்குப்பின் சிரித்துவிட்டான் யுகேந்திரன்.

‘அவளை ஒழுங்கா பாத்தே பல நாளாச்சு!

அது தெரியாம வாயில வர்றதையெல்லாம் வந்து, வாண்டு சொல்லுது!’ என்று எண்ணியவாறே சிரித்துக் கொண்டிருந்தான்.

யுகேந்திரனின் சிரிப்பு சத்தத்தில், வெளி வந்து நோக்கியவள், மகள் இன்னும் அங்கு நிற்கவே, “தியா… இன்னு பல்லு விளக்கப் போகலையா? வர வர ரொம்ப கெட்ட பிள்ளையா மாறிட்டு வர!”, என்று தாய் கூறவே

தலைக்குமேல் இருகையை உயர்த்தியபடியே, அங்கிருந்து குனிந்தபடியே, நகன்றவளை ஒரு பார்வையும், நீண்ட நாட்களுக்குப்பின் சத்தமாகச் சிரித்து, மறந்து நின்ற கணவனையும் கண்டவளுக்கு, மகிழ்ச்சி மனதோடு ஒட்டிக் கொண்டது.

நீண்ட நாட்களுக்குப்பின் கணவனின் மகிழ்ச்சி, அவளையும் தொற்றியிருந்தது.

எதுவுமே நடக்காததுபோல பல்விளக்கி வந்து அமர்ந்த மகளை பார்த்த யுகேந்திரனுக்கு, தனது கேள்வியை, மகளின் மூலமாகவாவது அறிந்து கொள்ளும் ஆசையில் இருவரையும் கவனித்தும், கவனியாமல் இருப்பதுபோல, காதைக் கழட்டி வைத்துவிட்டு, தனது பணிகளில் மூழ்கியிருப்பதாக பாவனை செய்திருந்தான்.

விவரம் அறிந்த நாள் முதலே, தாயை மட்டுமே போட்டியாக எண்ணி வளருபவள், தியா.

ஆம், யாழினி ஒரு புதிய சுரிதார் அணிந்தால், உடனே அதே டிசைனில், அதே கலரில் அவளுக்கும் வேண்டுமெனத் தந்தையை ஒருவழியாக்குவாள்.

யாழினி, ஒன்றை அழகாக எழுதினால், “எனக்கு உங்களை மாதிரி அழகா எழுத வரமாட்டுது”, என்று அழத்துவங்கி அவள் எழுத்தை சரி செய்யும் வரை ஓய்ந்ததில்லை.

காது குத்தாமல் இருந்தவள், ‘ம்மாக்கு தொங்குத மாதிதி, பாப்புக்கும் வ்ஏணும்?’ என்று தந்தையிடம், தனது காதைப் பிடித்துக் காட்டி, ஒன்றரை வயதில் கேட்க,

பெரியவர்கள் அனைவரும் தியாவின் மழலைப் பேச்சிலேயே, ‘இப்பவே இத்தனை விவரமா? புழைச்சிக்குவடீ!’ என்று பாராட்ட,

யுகேந்திரனுக்கோ, தியா கேட்ட உடனே, காது குத்துவிழாவிற்கு ஏற்பாடு செய்து, மகள் கேட்டமாதிரி காது குத்தி அழகு பார்த்திருந்தான்.

இதில் பாதிக்கப்பட்டவன், அபினவ் மட்டுமே.

காது குத்திய மூன்றாவது நாளிலேயே, கழட்டிய கம்மலைக் கூட ஏன் என்று கேட்காத,  அப்பாவிப் பையனாக இருந்தான்.

தியாவின் அழுகையை விட, காதில் தொங்கட்டான் போட்ட மகிழ்ச்சியில், உலாவிய மகளின் சந்தோசமே பெரிதாகத் தோன்றியது, யுகேந்திரனுக்கு.

அது இன்று வரை அனைத்திலும் தொடர்கிறது.

தேவாவின் வருகைக்குப்பின் யாழினிக்கு எதுவும் வாங்கித் தராததால், இதுவரை வராத பிரச்சனை, இன்று புதியதாக ஆரம்பித்து இருந்தது.

ஆனால் யுகேந்திரன் வாங்கித் தராமலேயே, யாழினியின் வதனத்தில் வந்திருந்த புதிய சோபையான தோற்றம், எதனால் என்பதை அவளுமே உணரவில்லை.

///

யாழினியும், யுகேந்திரனிடம் தியாவின் ஒப்பிடுதல் மற்றும் அடத்தை வளர்க்காமல் இருக்க, வழிமுறை கூறியிருக்கிறாள்.

‘பொம்பளைப் பிள்ளை எது கேட்டாலும், இப்டி உடனே, உடனே, வாங்கிக் கொடுத்து பழக்காதீங்க!

அவளுக்கு வேணுங்கறதை மட்டும், வாங்கிக் கொடுத்து பழக்குங்க!

ரொம்ப வாயடிக்கறா?  இது தப்பு! நான் சொல்றதைவிட நீங்க சொன்னா, டக்குனு கேட்டுக்குறா!

அதனால எடுத்துச் சொல்லி புரியவைங்க!’, என கணவனிடம் அவ்வப்போது எடுத்துச் சொல்லியிருக்கிறாள்.

யாழினி பெரும்பாலும், எந்த அழகு சாதனப் பொருட்களும் பயன்படுத்தாதவள்.

அப்டியிருக்க, என்ன புதிய வித்தியாசம் என கண்டுபிடிக்க இயலாமல், காத்திருந்தவன் கண்களுக்கு, மனைவியின் வித்தியாசம் எதனால் என்று புரியவில்லை?

—————-

யுகியின் யூகத்தால், விடயம் அவனே அறிந்து கொண்டானா?

தியா கண்டுபிடித்தாளா?

 

அடுத்த அத்தியாயத்தில்….

error: Content is protected !!