AnthaMaalaiPozhuthil7

AnthaMaalaiPozhuthil7

         அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 7

        ரகுநந்தனின்  சட்டையை அபிநயாவின் பிடிமானம் இறுக்கியது. முதலில் எரிச்சலைக் கொடுத்த அவள் அழுத்தம், இப்பொழுது அவனுக்கு அவள் வலியை உணர்த்தியது.

      அவள் நெற்றியில் ரத்தம் வழிய, அவள் மெல்ல மெல்ல மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள்.  அவனுள் ஓர் பதட்டம் எழ, அவள் கன்னங்களைத் தட்டினான். மண்டபத்தில் அவளைப் பலரும், ‘அபிநயா…என்று அழைத்தது நினைவு வர, “அபிநயா… அபிநயா…” என்று அழைத்துப் பார்த்தான். பதில் இல்லை.

      கவின் மேலே இருந்து தூக்கி எறிந்த சற்று கனமான கார், அபிநயாவை பதம் பார்த்துவிட்டு தரையில் ஓடிக் கொண்டிருந்தது.

 ஹாலில் நடுவிலிருந்த  தன் மாமாவை இப்பொழுது மேலே இருந்து பயத்தோடு பார்த்தான் கவின். வழக்கமாக, காட்டு கத்தல் போடும் தன் தாயை அச்சத்தோடு தூணுக்குப் பின் மறைவாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.

   ரேவதி அசட்டையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.  அபிநயா முழுவதுமாக மயங்கி, ரகுநந்தன் மேல் சரிந்தாள்.அவன் பட்டுச் சட்டையும், வேஷ்டியும் ரத்த கறையானது.

    வீட்டிற்கு வந்ததும் இப்படி நடந்துவிட்டதில், பவானியம்மாள் பயந்துவிட்டார்.

           “ஈரத்துணி கொண்டு வாங்க.” ரகுநந்தன் பதட்டத்தோடு கூற, ரேவதி சாவதீனமாகக் கொண்டு வந்தாள். துணியைக் கட்டியும், ரத்தம் நிற்கவில்லை. தண்ணீர் தெளித்தும், அவள் மயக்கம் தெளியவில்லை.

    “அபிநயா…” என்ற அழைப்புக்குப் பலன் இல்லை. ஒருவேளை, அபி அப்படின்னு அவங்க நெருக்கமானவங்க கூப்பிடுவாங்களோ?’ என்ற எண்ணம் தோன்ற, “அபி… அபி…” என்று அவள் கன்னங்களை தட்டி  அழைத்தான் ரகுநந்தன்.

     “அபியா?” என்று ரேவதி, சுரேஷ் இருவரும் வாயைப் பிளந்தனர். “என்னடி நடக்குது இங்க?” சுரேஷ், ரேவதியின் காதை கடிக்க, ரேவதி உதட்டைப் பிதுக்கினாள்.

         எந்த அழைப்புக்கும் பதில் இல்லாமல் போக, அவளை கைகளில் ஏந்திக் கொண்டு காரை நோக்கிச் சென்றான் ரகுநந்தன்.

பவானியம்மாள் கிளம்ப, “வேண்டாம் அம்மா. நான் பாத்துக்குறேன்.” என்று கூறிக் கொண்டு சென்றான் ரகுநந்தன்.

   “எப்படி தனியாக?” என்ற  பவானியம்மாளின் கேள்வி, காற்றோடு தான் சென்றது.

      இந்த கலவரத்திலும், அவர் மனதில் ஓர் நிம்மதி பரவியது. ரகு, பொண்டாட்டியை நல்லா பார்த்துப்பான்.என்ற நம்பிக்கை அவருள் துளிர் விட்டது.

      மருத்துவமனையில், அபிநயாவுக்கு, சிகிச்சை நடைபெற, ரகுநந்தன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

       “ம்… ச்…” அவன் உதடுகள் சலிப்பை வெளிப்படுத்தியது.

          ‘வந்ததும் வராததும் இப்படி ஒரு பிரச்சனையா? எனக்கு என்னையவே பார்த்துக்க முடியாது. இதுல இனி இவளை வேற பார்க்கணுமா? யாராவது  ஏதாவது வீசினா, ஒதுங்கணுமுன்னு கூட இவளுக்கு தெரியாதா? இப்படி ரத்தம் வரவரைக்கும் அடி வாங்கிட்டு நிப்பாளா?’ அவன் அவளை திட்டி கொண்டு இருந்தான்.

   தையலிடப்பட்டு வெளியே வந்த அவள், கண்களால் தேட… “அம்மாவை நான் தான் வர வேண்டாமுன்னு சொன்னேன். அவங்க உடம்பு சரி இல்லாதவங்க.” அவன் விளக்கம் போல் கூறினான்.

   அபிநயா எதுவும் பேசவில்லை.

        சோர்வாக அமர்ந்தாள்.  அவன் அவளைத் தூக்கிக் கொண்டு வந்த அதே நினைவில் அவளை நெருங்கினான்.  அவன் நெருக்கத்தில் அவள் சிலிர்க்க, அவன் சட்டென்று நினவு திரும்பியவனாக விலகினான்.

      “குழந்தை இருக்கிற வீடு, கொஞ்சம் பார்த்து இருக்க கூடாதா? அ…” என்று அழைக்க நினைத்து, “வாத்தியாரம்மா.” என்று நக்கலாக முடித்தான் ரகுநந்தன்.

     ‘எப்படி இருக்கன்னு கேட்காம, இது என்ன என் மேல் குற்றசாட்டு? அதுவும் வாத்தியாரம்மா…என்ற ஏளன அழைப்போடு, என்று அவனை முறைத்து பார்த்தாள் அபிநயா.

         “இப்படி ஒரு வரவேற்பை உங்க பொஞ்சாதிக்கு நீங்க ஏற்பாடு பண்ணிருப்பீகன்னு நான் நினைக்கலை.” உதட்டைச் சுழித்தாள் அபிநயா.

     “நான் தான் உன் தலையில் போட சொன்ன மாதிரி சொல்ற?” ரகுநந்தன் கேட்க, “அப்ப, நான் வேணு முன்னே தலையைக் கொண்டு கொடுத்த மாதிரி நீங்க சொல்றீங்க?” அவள் சிலுப்பிக்கொண்டாள்.

     அவள் பதிலில், ரகுநந்தன் முகத்தில் புன்னகை பரவியது. அபிநயாவுக்கு தன் தலையை தான் சிலுப்பியதில், தையலிட்ட இடம் வலிக்க முகத்தைச் சுழித்தாள்.

     “வாத்தியாரம்மா… பார்த்து. தையல் வெளியே வந்திற போகுது.” அக்கறையையும் கேலியாக வெளிப்படுத்தினான் ரகுநந்தன்.

     “கிளம்புவோம்…” என்று கூறி அவன் செல்ல, “வாத்தியாரம்மா…” என்று அவன் மீண்டும் காருக்குள் ஏறியவுடன் சொல்ல தொடங்க, “என் பெயர் உங்களுக்கு தெரியாதா?” என்று கடுப்பாகக் கேட்டாள் அபிநயா.

            சற்று முன், ‘அபிநயா… அபி…என்று பல தடவை கூப்பிட்டது நினைவு வர, “உன் பெயர் தெரியாது.” தோள்களைக் குலுக்கினான் ரகுநந்தன்.

   “தெரியலைனா கேளுங்க.” என்று அவள் கடுப்போடு கூற, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்த்தது.

  “அது எப்படி வாத்தியாரம்மா முடியும்? நீங்க தான் பேரு தெரியலைனா, வாத்தியாரம்மான்னு கூப்பிட சொன்னீங்க.” என்று  நையாண்டி செய்யும் குரலில் கூறினான் ரகுநந்தன்.

      ‘இத்தனை எளிதாக அபிநயா கூட பேசுவான்!’ என்று ரகுநந்தன் நினைக்கவில்லை. அவன் அறிவோ அவன் மாற்றத்தை கேள்வியாக எழுப்பிக் கொண்டிருக்க…  மஞ்சள் கயிறு மாஜிக் எல்லாம் இல்லை. அரங்கேறிய சம்பவம், அவர்களுக்கு இடையில் ஒரு நட்பு கரம்… இல்லை ஏதோவொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறது.என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டே வண்டியைச் சாலையில் செலுத்தினான் ரகுநந்தன்.

         அபிநயா, அவனை முறைத்துக் கொண்டே வர, “ஏன், வாத்தியாரம்மான்னு கூப்பிட்டா பிடிக்கலையா?” என்று கன அக்கறை போல், கேலி வழியக் கேட்டான் ரகுநந்தன்.

       ‘ஆமான்னு சொல்லு, அப்புறம் பாரு.என்று அவன் உதடுகள் மடிய, “அப்படி இல்லை, அதுல ஒரு சின்ன பிரச்சனை இருக்கு.” என்று அவன் கேலிக்குரலை ஒதுக்கிவிட்டு கூறினாள் அபிநயா.

     அதற்குள் அவர்கள் கார் வீட்டை நெருங்க, “வாத்தியாரம்மான்னு கூப்பிடுறவங்க தப்பு பண்ணினா பிரம்பை எடுத்து அடி வெளுத்தினரணுமுன்னு எனக்கு தோணும்.” என்று கூறிக் கொண்டே, கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் அபிநயா. இறங்கி அவள் அவனைக் கேலியாகப் பார்க்க, அவள் கூறியது ஒரு நொடி கழித்தே அவனுக்குப் புரிந்தது.

அவள் தைரியத்தில் அசந்து, அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தான் ரகுநந்தன். கொடி இடை, சற்று முன் அவளைத் தூக்கியது நினைவு வர, அதுவும் எதிர்பாராமல் விழுந்த அடியில் பயத்தில் மயங்கியதை மருத்துவர் கூறியது நினைவு வர, அவன் பெருங்குரலில் சிரித்தான்.

    ‘நீ என்னை பிரம்பை வைத்து அடித்து விடுவாயா?’ என்று கேள்வி அவன் கண்களில் மீண்டும் கேலியே வழிந்தது.

     பேசிய கேலி வார்த்தைகளை எண்ணி அபிநயா அஞ்சவில்லை.

இருந்தாலும், ரகுநந்தனும் அதை இலகுவாக எடுத்துக் கொண்ட விதத்தில் அவள் மனதில் மெல்லிய தென்றல் வீசியது.

 காரிலிருந்து இறங்கினான். அவன் உயரமும், முறுக்கேறிய அவன் உடலும் , அவன் உயரத்தையும் அளவிட, அவனைத் தான் பிரம்பால் அடிப்பது போன்ற காட்சி தோன்ற, அபிநயா பெரிதாகப் புன்னகைத்தாள்.

      அவள் புன்னகையின் பொருள் புரிந்து, அவன் சிரித்துக் கொண்டான்.  

                              உள்ளே பவானியம்மாள், ரேவதியைத் திட்டிக் கொண்டிருக்க இவர்கள் சிரித்த முகமாக வருவதைப் பார்த்த ரேவதி இவர்களைக் கடுப்பாகப் பார்த்தாள்.

     ‘இந்த மகாராணியால் நான் திட்டு வாங்கிட்டு இருக்கேன். இவ, ஒரே நாளில் எல்லாரையும் அவளை கைக்குள்ள போட்டுக்கிட்டா போலியே?’ என்ற எண்ணத்தோடு தன் தம்பி முன் நின்றாள் ரேவதி.

    “தம்பி! கவின் தான் எல்லாம் பிரச்சனைக்கும் காரணமா? உன் பொண்டாட்டிக்கு பிடிக்கலைன்னா, நான் கவினை கூட்டிட்டு வெளிய போயிடுறேன்.” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு அவன் முன் நின்றாள் ரேவதி.

    ‘நான் என்ன பண்ணேன்? இவுக ஏன் என் தலையை உருட்டுதாக?’ என்ற எண்ணத்தோடு ரேவதியைப் பார்த்தாள் அபிநயா.

       “யாருமே கவினை ஒன்னும் சொல்லலியே அக்கா. அவன் பாவம் சின்ன பையன்.” என்று ரகுநந்தன் கூற, இப்பொழுது அபிநயா சற்று கடுப்பாக ரகுநந்தனைப் பார்த்தாள்.

     ‘கவின் அத்தனை சின்ன குழந்தை போல் இல்லையே? குறைந்தது ஏழு, எட்டு வயசு இருக்கும். இந்த செயல் அவன் வயசுக்கு ஒத்து போகலியே? ஏன் அவனை யாரும் கண்டிக்கவில்லை.என்ற கேள்வி அபிநயாவுக்குள் எழுந்தது.

    ‘அபி, இதை நீ கேட்ட இப்ப நீ செத்த டீ. ஏற்கவனேஉன் நாத்தனார் உன்னை வெட்டவா? குத்தவான்னு பாக்குறா? இப்ப பேசின, உன்னை நார்நாரா கிழிச்சு தொங்க விட்டுருவா.‘ ‘ என்ற எண்ணம் தோன்ற, தன் வாயை இறுக மூடிக்கொண்டாள் அபிநயா. 

         “அம்மா… தப்பு என் மேல மாதிரியே பேசுறாங்க.” என்று மீண்டும் ரேவதி தொடங்க, “அக்கா! தப்பு என் மேல தான். நான் கவனமா இருந்திருக்கணும்.” என்று ரகுநந்தன் கூற, அபிநயா இப்பொழுது அவனைச் சற்று ஆச்சரியமாகப் பார்த்தாள்.

         ‘மருத்துவமனையில் தன்னை கேலி செய்தவளா இவுக?’ என்ற எண்ணம் தோன்ற அவளறியாமால், அவன் மீது சற்று மரியாதை வந்து அமர்ந்தது.

     பவானியம்மாள், தமக்கையையும் விட்டு கொடுக்காமல், தன் மனைவியையும் குறை கூறாமல் பேசும் தன் மகனின் சாமார்தியசாலித்தனத்தை மனதிற்குள் மெச்சி கொண்டார்.

  ஆனால், ஏனோ ரகுநந்தனின் பதில் ரேவதிக்கு ருசிக்கவில்லை.

      “மாமா!” என்ற அழைத்துக்கொண்டு கவின் ஓடி வர, “மாமா ஆஸ்பத்திரியிலிருந்து வரேன். குளிச்சிட்டு வரேண்டா.” என்று ரகுநந்தன் கவினை தூக்காமல் விலகி சென்றான். அவன் உடையில் வேறு ரத்த கறை.

 கவின் கதறி அழுது உருள ஆரம்பித்தான். அருகே நின்று கொண்டிருக்கும் அபிநயாவை எதிரி போல் பாவித்து முறைத்து பார்த்தான் அந்த சிறு குழந்தை.

   சிறிது நேரத்தில், கவின் ரகுநந்தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

    “இன்னும் கவின் தூங்கலியா?” பவானியம்மாள் பரிதாபமாக கேட்க, “தம்பி இல்லாம அவன் என்னைக்கு தூங்கிருக்கான்?” என்று ரேவதி நிதானமாகக் கூறியபடி சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள்.

       அபிநயா, விழிகளை விரித்து அவர்களை பார்த்து கொண்டிருந்தாள். இது என்ன கூத்து? நான் எப்பொழுது இவனிடம் பேச? எல்லா விஷயங்களையும் இன்னைக்கு சொல்லணும்னு நினச்சேன்னே!என்று அவள் யாரும் உட்கார கூட சொல்லாததால் நிற்க, பவானியம்மாள் இவளை நெருங்கினார்.

     “ரொம்ப வலிக்குதா மா. நான் உன்னை உங்க ரூமுக்கு கூட்டிட்டு போறேன். அங்க ரெஸ்ட் எடு.” என்று அவர் கூற, அவரோடு அவர்கள் அறைக்குச் சென்றாள் அபிநயா.

       அங்கு, கவின் இவளை முறைத்து பார்க்க, “கவின் குட்டி… பாட்டி கூட வாடா.” என்று கெஞ்சினார் பவானியம்மாள்.

    கவின் எதுவும் பேசவில்லை. மறுப்பாகத் தலை அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

                          “கவின், இங்க இருக்கட்டும் அம்மா. ஒன்னும் பிரச்சனை இல்லை.” என்று குளித்து முடித்து வந்த ரகுநந்தன் இலகுவாக கூறினான்.

 பவானிம்மாள் கவினிடம் போராட, “அத்தை! நான் பார்த்திக்குறேன்.” என்று கூறினாள் அபிநயா.

    ‘மூன்றே வார்த்தைகள். பேச்சை முடித்துக் கொண்டாள். தாங்கினாள் என்று சொல்ல முடியாது. மரியாதை கொடுக்கலைன்னும் சொல்ல முடியாது.என்ற கணக்கீட்டோடு, அவர் மனம் வேண்டாம் என்று எண்ணினாலும் அபிநயாவை இந்திராவோடு ஒப்பிட்டுப் பார்த்தது.

    பவானியம்மாள், தர்மசங்கடத்தோடு வெளியே சென்றார்.

    “மாத்திரை போட்டிருக்கீங்க. சோர்வா இருக்கும். வாத்தியாரம்மா ரெஸ்ட் எடுங்க.” என்று கூறிக்கொண்டு, ரகுநந்தன் படுத்துவிட, அபிநயாவின் சிந்தனை ரேகைகள் விழித்துக் கொண்டன.

            ‘என்ன நடக்குது இங்க. ஏதோ சரி இல்லையோ? ரகுநந்தன் நல்லவன் மாதிரி தான் தெரியுது. ஆனால், புது மாப்பிள்ளை போல தெரியலையே. அப்படியே புது பொண்டாட்டி மேல, பாசம் ஒழுகலானாலும், ஒரு சராசரி மனிதனின் ஆசைகள் கூடவா இருக்காது? அவசர அவசரமாக பேசி முடித்த திருமணம், ஒருவேளை இவுகளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ?’ போன்ற பல கேள்விகள், அவள்  மனதை குடைந்தது.

        ‘நான் அனைத்தையும் கூறுமுன், இங்குள்ளவர்களின் மனநிலையை தெரிந்து கொள்ள வேண்டுமோ?’ என்று  சிந்தித்தவாறு அவள் ஜன்னலை பார்த்தபடி நின்றாள்.

     ‘படுன்னு சொல்லியாச்சு. மெத்தையில் அந்த ஓரத்தில் இடமும் கொடுத்தாச்சு. படுக்கலைனா, தாலி கட்டி கூட்டிட்டு வந்த பாவத்துக்கு நான் கெஞ்சவா முடியும்? ‘ என்ற எண்ணம் தோன்ற, அவன் தன் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

        ‘கவின் சின்ன பையன் தான். ஆனால்…என்று அவளுள் அடுத்ததாக எழுந்த கேள்வி அவளை மேலும் மேலும் குழப்பியது.

                

பொழுதுகள் விடியும்…

Leave a Reply

error: Content is protected !!