charkarainilave-7

நிலவு – 7

சுற்றும் கடிகார முள்ளில்

ஓடுவதுதான் வாழ்க்கை என்றே

நினைத்து வாழ்கிறேன்

முள் என்று நினைத்தால்

வீழ்ந்தே போவேன்..!

காலை நேரம், வேலைக்குச் செல்லத் தயாராகி பாஸ்கருக்காக காத்துக் கொண்டிருந்தாள் மிதுனா. சிறிய மாற்றமாய் அவளது காத்திருப்பு வீட்டின் உள்ளே இல்லாமல், வெளியே திண்ணையை ஒட்டிய நடைபாதைக்கு மாறியிருந்தது.

கீழே நின்றிருந்தவள், மேல் தளத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, வீட்டின் மாடியில் கட்டிடம் கட்டும் வேலை வெகுஜோராய், நடந்து கொண்டிருந்தது. கடந்த இருபது நாட்களாக, அத்தனை விரைவாய் குடித்தனம் பண்ணும் படியான சிறிய வீடு உருவாகிக் கொண்டிருக்கிறது.

மேல்தளத்தில் பாதியை மட்டுமே எடுத்துக் கொண்டு கட்டட வேலையை ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் காலை எட்டு மணிக்கே கான்கிரீட் போடும் வேலை ஆரம்பமாகி இருக்க, சிறிய பரப்பளவு என்றபடியால், அந்த நேரத்தில் வேலை முடியும் தருவாயில் இருந்தது.

அங்கே, ஒரு சித்தாளின் வேலையைத் தனதாக்கிக் கொண்டு, அந்த இடத்தில் சக்கரமாகக் சுற்றிக் கொண்டிருந்தான் தயானந்தன். மேல்தளத்தை கவனிக்கும் பார்வையில் மிதுனா, அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன மாதிரியான மனிதன் இவன்’ என்ற எந்தவொரு கணிப்பையும் அவன் மீது நிலை நிறுத்த முடியவில்லை. இருபது நாட்களுக்கு முன், தான்வேலைக்கு சென்றிருந்த சமயம், தயானந்தன் வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கு புத்தகத்தை வாங்கிச் சென்றான் என மஞ்சுளா சொல்லக் கேட்டிருந்தவள்,

“இதுல என்னம்மா இருக்கு? அது அவங்க பணம், கேட்டா குடுக்க வேண்டியது நம்ம கடமை” இலகுவாய் மகள் பேச்சை முடித்திருக்க, தாய் எந்தவொரு பதிலும் சொல்லவில்லை.

தயானந்தன், தன்னிடம் வீட்டைக் காலி செய்யச் சொல்லிக் கேட்டதை, இதுவரை மகளிடம், அவர் தெரியப் படுத்தவில்லை. அதனைச் சொன்னால், தனது மகள் நியாயம் தர்மம் என்று போர்க்கொடி தூக்கி விடுவாள், என்பதை நன்றாக அறிந்து வைத்திருந்தவர், அப்படியே மூடி மறைத்து விட்டார்.

முதல் நாள் புத்தகத்தை வாங்கிச் சென்றவன், மறுநாள், கட்டிடம் கட்டும் பொருட்கள் மற்றும் உபகரணங்களுடனும், வேலை செய்ய ஆட்களையும் தன்னோடு அழைத்து வந்திருந்தான். 

மஞ்சுளாவிடம் பேசிவிட்டு கிராமத்திற்குச் சென்ற தயானந்தன், தனது இயலாமையில் மருகிக் கொண்டு, என்ன செய்வதென்று தவித்திட, அதற்கு கிடைத்த தீர்வினைத்தான், தற்போது செயலாற்ற வந்திருந்தான்.

குடும்பத்தோடு வீதிக்கு வந்து அசிங்கப்படும் முன்பே, கௌரவமாக கிராமத்தை காலி செய்து விட்டு, சொந்த வீட்டிற்கு வருவதற்காகவே, அவசரகதியில் வீடு கட்டும் வேலையை ஆரம்பித்திருந்தான்.

தனது முயற்சியை தடுக்க வேண்டாம் என்று தனது அன்னையையும் கேட்டுக் கொண்டு, எந்த வித தடையுமின்றி வீடு கட்டும் வேலையை ஆரம்பித்து விட்டான். 

பொருட்களை இறக்கியவன், தங்களிடம் வந்து தகவல் சொல்வான் என்று வீட்டில் உள்ளவர்கள் எதிர்பார்த்திருக்க, அவன் அவ்வாறு செய்யாமல், நேரடியாக மேலே சென்று வேலைகளை ஆரம்பித்திருந்தான்.

இடைவிடாத சத்தம் கேட்க, நேரடியாகத் தானே சென்று கேட்டு வரலாம் என்று மிதுனா வெளியே வர, அந்த நேரம் தயானந்தன் கீழே இறங்கிக் கொண்டிருக்க, அவனைத் தடுத்து,

“மேலே என்ன நடக்குது சார்? எங்ககிட்டயும் சொல்லிட்டு செய்யலாம், தப்பில்ல…” வழக்கம்போல் தன் அலட்சிய பாவனையில் பேச்சை ஆரம்பிக்க,

“இது என் வீடு… உங்ககிட்ட சொல்லிட்டுதான், செய்யனும்ங்கிற அவசியமில்ல, எனக்கு…” முகமும் பேச்சும் அத்தனைக் கடுப்பைக் காட்டிப், பேசியவனின் கோபப் பேச்சில் அதிர்ந்தவள், நொடி நேரத்தில் சமன் செய்துகொண்டு,

“யார் சார் இல்லைன்னு சொன்னது? ஆனா நாங்க குடியிருக்கிற வீட்டோட பொறுப்பு, எங்களச் சேர்ந்தது. அதனால எங்களையும் மதிச்சு சொல்லலாம்” பதில் பேச்சில் அவளும் வெடிக்க ஆரம்பித்தாள்.

“எதுக்கு, இந்த வேலையையும் தடுத்து நிறுத்துறதுக்கா? ஏற்கனவே உங்கள மதிச்சு சொன்னதுக்குதான் நல்லாவே மரியாதை பண்ணிட்டீங்களே? ஊரான் வீட்டு சொத்துல கௌரவத்த காப்பாத்துற, உங்ககிட்ட விளக்கம் சொல்லனும்ங்கிற கட்டாயம் எனக்கில்ல…” அவன் விளாசிய விளாசலில், அவளும் வெகுண்டு விட்டாள்.

முதன்முறை தயானந்தனைப் சந்தித்தபோது அத்தனை உன்னிப்பாய் கவனித்துப் பார்த்திருக்கா விட்டாலும், அவனது அமைதியான பேச்சை நன்றாக உள்வாங்கி இருந்தாள்.

இப்பொழுது, அதற்கு முற்றிலும் தலைகீழாய் அவனது கொந்தளித்த பேச்சினைக் கவனித்தவள், அவன் மீதுள்ள மதிப்பை கீழிறக்கி, தன்பாணியில் பதில் கொடுக்க ஆரம்பித்தாள்.

“வார்த்தைய கொஞ்சம் அளந்து பேசுங்க மிஸ்டர்… இப்போ யார் உங்கள மரியாதை குறைவா நடத்தினா? வீடு உங்களோடதா இருந்தாலும்…” என்றவளின் பரிகாசப்பேச்சு, மஞ்சுளாவின் வருகையால் தடைபட்டது.

“என்னடி பேசிட்டு இருக்க?” மகளைக் கேட்டவர், தயாவை கேள்வியாய் நோக்க,

“தோ… எல்லா விவரமும் தெரிஞ்ச நல்லவங்க வந்தாச்சு, இவங்ககிட்ட கேட்டுவைங்க… எனக்கு இப்போ, விளக்கம் சொல்ல நேரம் இல்ல” அவளுடனான பேச்சினைக் கத்தரித்து விட்டு, வேலையைப் பார்க்க சென்று விட்டான் தயானந்தன்.

பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக சூழ்ந்து கொண்டதன் விளைவு, தயானந்தனின் சுபாவத்தை முற்றிலும் மாற்றியிருக்க, அனைவரிடமும் மருந்துக்கும் கூட அமைதியாகப் பேசுவதை மறந்திருந்தான்.

அதிலும் தனது இந்த நிலைக்கு காரணமானவர்களே, தன் முன்பு வந்து நிற்கும் பொழுது, ஏற்பட்ட கொதிப்பிற்கு, அவர்களை கடிந்து கொண்டே தனக்குதானே ஆறுதலை தேடிக் கொண்டான்.

“என்னம்மா சொல்லிட்டுப் போறாரு? நான் இல்லாதப்போ என்ன நடந்தது?” மகளின் அழுத்தமான கேள்வியில், தடுமாறிய மஞ்சுளா,

“எதுக்காக இங்கே நின்னு பேசிட்டு இருக்க? என்னைக் கூப்பிட வேண்டியதுதானே?” அந்த நேரத்தில் கண்டிப்பான தாயாக மாறி பேச்சினை மாற்ற நினைக்க,

“நீ செய்ய வேண்டிய வேலையத்தான், நான் செஞ்சுட்டு இருக்கேன்… கேட்டதுக்கு பதில் சொல்லு” மகளின் அழுத்தப் பார்வையில், வாயைத் திறந்த மஞ்சுளா,

“அது வந்து, மிதுனா…” என இழுத்து, சென்ற வாரம், தனக்கும் தயாவிற்கும் நடந்த விவாதத்தை சொல்லி முடித்தார்.

“என்ன காரியம் பண்ணி வச்சிருக்கம்மா? உன் சுபாவத்த எப்போதான் மாத்திக்கப் போற? என்ன மாதிரி கஷ்டத்துல வந்து கேட்டிருக்காரு! கொஞ்சமும் இரக்கமில்லாம பேசியிருக்கியே?” தாயை வன்மையாக கடிந்து கொண்டவள்,

“வாம்மா… இப்பவே போயி வீட்டை காலி பண்றோம்னு சொல்லிட்டு வருவோம். பாவம் அவர் குடும்பத்த எந்த நெலையில விட்டுட்டு வந்திருக்காரோ?” தயாவின் தற்போதைய நிலவரத்தை நினைத்துப் பதறியவாறே, தாயை இழுத்துக் கொண்டு மாடிக்கு செல்ல எத்தனிக்க,

“அந்த பேச்செல்லாம் முடிஞ்சு, இப்போ ஏதோ ஒரு முடிவு எடுத்துதான், அந்த தம்பி இங்கே வந்திருக்குன்னு நினைக்கிறேன், இப்போ போய் பேசி, எந்த பிரயோஜனமும் இல்ல, மிதுனா!” மஞ்சுளா மேலே செல்வதை தவிர்க்க நினைக்க, அடங்காத கோபம் கொண்டு, மகள் வெடிக்கத் தொடங்கினாள்.

“உன் பேச்ச கேட்டு, அமைதியா போகாம, சாமான் செட்ட தூக்கி தெருவுல வீசியிருந்தா, என்ன பண்ணியிருப்ப? அப்பவும் இதே இடந்தான் வேணும்னு, ரோட்டுல குடித்தனம் நடத்தியிருப்பியா?

இப்போ அந்த நிலையிலதான் அவரோட குடும்பம் இருக்குதுன்னு நினைச்சாலே மனசு பதறுதும்மா… நீ என்னடான்னா, எவ்வளவு ஈஸியா பேச்சை மாத்துற? உன்னை திருத்த நினைக்கிறேன் பாரு, என்னை எதால அடிச்சுக்க…” என்றவள் தாயை இழுத்துக் கொண்டு தயாவிடம் போய் நிற்க, அவன் நிறைவான கோபத்தில் முறைத்துப் பார்த்தான்.

“சாரி சார்… அம்மா ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டாங்க, நாங்க எப்படியாவது வீட்டைக் காலி பண்ணிக் குடுக்குறோம், எங்களுக்கு கொஞ்சம் டைம் மட்டும், வாங்கிக் குடுங்க!” தணிந்தே அவளாகப் பேச,

“என்ன விளையாடுறீங்களா? வீட்டுல கலந்து பதில் சொல்லுங்கனு அன்னைக்கே சொன்னேன். இப்போ எல்லாமே கை மீறிப் போயாச்சு. நான் உங்களுக்கு டைம் கொடுத்தாலும், எனக்கு அவகாசம் கொடுக்க யாரும் தயாராயில்ல. இனி என்னோட குடியிருப்பு இங்கேதான்னு முடிவெடுத்துட்டேன்” வார்த்தைகளைக் கடித்துத் துப்பியபடியே வேலை நடக்கும் இடத்திற்கு, தனது கவனத்தை திசை திருப்பினான்.

மேற்கொண்டு அவர்களுடன் நின்று பேசினால் வரம்பு மீறி, கோபத்தில் வார்த்தைகளை விட்டு விடுவோமோ என்ற அச்சமும் வந்து, அவனை அங்கிருந்து விலகச் செய்திருந்தது.

தாயும் மகளும் பத்து நிமிடம், தயாவிடம் பேசுவதற்கு என நின்றிருக்க, வேலை செய்யும் இடத்தில் பெண்களை நிற்க வைக்க விரும்பாதவன்,

“வர்ற மாசத்துல இருந்து வாடகைய ஆயிரம் ரூபாய் சேர்த்து குடுக்கணும். பாங்க்ல போட வேணாம். எங்கம்மா கையில கொண்டு வந்து குடுங்க, இப்போ கிளம்புங்க…” அமைதியாக உத்தரவைப் போட, அதிர்ந்து அவனை உற்றுப் பார்த்தாள் மிதுனா.

முகமும் உதடும் அழுத்தத்தை காண்பிக்க, கண்களோ அமைதியான கண்டிப்பை காட்டிக் கொண்டிருந்தது. அவனது உயரத்திற்கேற்ற கிராமத்து உடற்கட்டு, அவனின் உள்ளத்து இறுக்கத்தை வெளிப்படுத்திட, வேலை செய்பவர்களிடத்தில் தகிக்கும் அனலாய் பேச்சில் காய்ந்து கொண்டிருந்தான்.

 

“இது அநியாயம் தம்பி, எங்களால எப்படி முடியும்” வழக்கமான பல்லவியை, மஞ்சுளா பாட ஆரம்பிக்க,

“வாடகைய குடுக்க இஷ்டமில்லன்னா, வீட்டைக் காலி பண்ணிக் குடுங்க… யாருக்கும் பாவம் பார்க்க, நான் தயாரா இல்ல” என்றவனின் வெட்டிவிட்ட பேச்சில், தாயும் மகளும் நொந்தபடியே கீழே வந்தனர்.

‘படுபாவி! உனக்காக பரிதாபப்பட்டு வந்ததுக்கு தண்டனையா, வாடகைய ஏத்திட்டியே…’ மனதோடு மிதுனாவும் முனுமுனுத்தாள்.

தயானந்தனுக்கும், தன்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துவிட்ட நிறைவு. ஆனால் மிதுனாவிற்கோ, தனது தாயின் பேச்சிற்கு, தான் பலியாடாகி விட்ட உணர்வு. தெரிந்தோ தெரியாமலோ தயாவின் கோபத்திற்கு, அன்றே வடிகால் ஆகியிருந்தாள் மிதுனா.

அன்றிலிருந்து தயானந்தனின் நடமாட்டத்தைப் கவனிக்க ஆரம்பித்தவள், இதோ இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். இரவில் கட்டிடம் கட்டும் இடத்தில் ஏனோதானோ என்று படுத்துக் கொள்பவன், காலை வேளையில், தனது ஆத்திர அவசரத்திற்கு மட்டுமே கீழே பின்கட்டிற்கு வருகிறான்.

தினந்தோறும் குளியலைக் கூட, வெளியே சென்று முடித்துக் கொள்வதாக, வேலை பார்க்க வரும் சித்தாள் கூறியதாக தன்அன்னை சொல்லக் கேட்டிருக்கிறாள்.

மிகக் குறுகிய காலத்தில், சந்தியா காலத்தின் சாந்த சொருபீயானவன், நரசிம்மனின் விஸ்வரூப தரிசனமாய், கோப அவதாரம் எடுத்ததை இவனிடம்தான் கண்டு கொண்டாள் மிதுனா.

தொலைவில் இருந்து அவனது நிலையை எண்ணி, ‘அய்யோ பாவம்’ என பரிதவித்துக் கொள்ளும் தனது மனது, அருகினில் அவனைக் காணும் பொழுது, ‘காரணமில்லாமல் என்னிடம், உன் கோபத்தைக் காட்டி, பழி வாங்கி விட்டாயே’ என்று சண்டை போடத் தோன்றும்.

இந்த விசித்திர நிலையில் சிக்கித் தவிப்பவளுக்கு, இதன் காரணம் என்னவென்று புரியவில்லை. ஆனாலும் அவனை தினமும் ஏதோ ஒரு சாக்கிட்டு, தூரத்தில் இருந்து பார்ப்பதையும் மிதுனா நிறுத்தவில்லை.

“என்னக்கா, நேரமாச்சா?” கேட்டுக் கொண்டே பாஸ்கர் ரெடியாகி வந்து நிற்க, தம்பியின் பேச்சில் நடப்பிற்கு வந்தவள்,

“பார்த்துடா பாஸ்கி! உன் அக்கறையில கண்ணு பட்டுறப் போகுது. நான் திட்டுற திட்டுக்கு, எருமமாட்டுக்கு கூட சொரணை வந்துரும், ஆனா, நீ சுகமா காது குளிர கேட்டுட்டு, சாவகாசமாதான் வர்ற… உன்னயெல்லாம் எதுல சேர்க்க?” அலுத்துக் கொண்டவள், அவனுடன் வேலைக்கு புறப்பட்டாள்.

             **********************************

கட்டிடம் ஆரம்பித்த நாளிலிருந்து சரியாக நாற்பதாவது நாள் தயானந்தன், தனது குடும்பத்தோடு மாடியில் குடிவந்து விட்டான். கிரஹப்பிரவேசத்திற்கு, குடித்தனக்காரர்களை அழைக்க, தனது மகளுடன் வந்த மரகதம், பகைவனுக்கும் அருள் செய்யும் தனது சுபாவத்தை அங்கேயும் அரங்கேற்றினார்.

“நீங்க மாசமாசம் தவறாம போட்ட வாடகைப் பணம்தான், இப்போ, வீடு கட்ட எங்களுக்கு கை கொடுத்திருக்கு. நீங்க உங்க கடமைய செஞ்சிருந்தாலும், அதுதான், எங்க குடும்பத்துக்கே, நம்பிக்கை குடுத்திருக்கு” தனக்கே உரிய அமைதியுடன் பேசிய மரகதத்தை, இடைவெட்டிய மஞ்சுளா,

“அதுக்குதான் உங்க புள்ள ஆயிரம் ரூபா வாடைகைய ஏத்தி, நன்றிய காமிச்சுட்டாரே! அதுவும் உங்க கையில குடுக்கச் சொல்லி, ஆர்டரும் போட்டிருக்காரு” என்று குத்திப் பேச,

“இத பத்தி இன்னும் அவன், என்கிட்டே சொல்லல. வயசுபுள்ள, வெளியனுபவம் புதுசு… எதுவும் தப்பா பேசியிருந்தா, மனசுல வச்சுக்க வேணாம், என்ன எதுன்னு அவன்கிட்ட விவரம் கேட்டு சொல்றேன்” தனது பாணியில் பதிலைச் சொல்லிக் கிளம்பி விட்டார்.

புதுவீட்டு வைபவத்திற்கு அழைப்பை விடுத்தும், மிதுனாவின் வீட்டில் இருந்து யாரும் செல்லவில்லை. மாதந்திர பிரச்சனை, மிதுனா செல்வதற்கு தடையாக இருக்க, அவளும் வேலைப்பளு மற்றும் உடல் அசதியினால், அன்னையிடம் அங்கே சென்று வந்ததைப் பற்றி விசாரிக்கத் தவறி இருந்தாள்.

தயாவின் குடும்பம் இங்கே வந்த முதல் நாளில் இருந்தே, தனது அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டத் தொடங்கி விட்டார் மஞ்சுளா. இதனால் பேச்சு வார்த்தை என்பது பெயரளவில் கூட இல்லாமல் போயிருந்தது. மாத வாடகையை கொடுக்க சென்ற மிதுனாவிடமும்,

“எப்பவும் போல பாங்க்ல போட்டுடுமா… ஒரு சேமிப்பா இருந்தா அவசரத்துக்கு உதவியா இருக்கும். என் மகன்கிட்ட நான் சொல்லிட்டேன்” மரகதம் சொல்லிவிட,

அவளும் சரியென்று தலையாட்டும் நேரத்தில், பின்னோடு வந்த தயானந்தன், அதையும் சந்தேகக் கண் கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தான்.

“மாசமாசம் அவங்க கரெக்டா போட்றாங்களானு கேட்டுக்கோம்மா… பணம் போட்ட ரசீத இங்கே கொண்டு வந்து குடுக்கச் சொல்லு” மிதுனாவை முன்னிறுத்தியே ஜாடை பேசி, அவர்கள் மீதுள்ள நம்பிக்கையற்ற தன்மையை வெட்ட வெளிச்சமாக்கினான்.

“இவ்வளவு நம்பிக்கை இல்லாதவங்க, கையில வாங்கிக்கலாமே? உங்களுக்காக நாங்க நல்லவங்க, நாணயமானவங்கனு, நெத்தியில பட்டை போட்டா ஓட்டிக்க முடியும்” பதில் பேச்சில், இவள் சுழற்றியடிக்க,

“ஸ்ட்ரிக் ஆபீசரா பந்தா காட்டி பேசினா, நீங்க சொன்னதுக்கு சரின்னு சொல்லி ஒதுங்கிடுவோமா? சத்தமில்லாம ரசீத கொண்டு வந்து கொடுக்குறத விட்டுட்டு, இத்தன ஆர்பாட்டம் தேவையா?” மேலும் தயா சீண்டிப் பேசவும், மிதுனாவின் முகத்தில் ரௌத்திரம் குடி கொண்டது.

“பொம்பள புள்ளகிட்ட வார்த்தைய வளர்க்கிறது என்ன பழக்கம் தம்பி? ரசீது கேட்டு வாங்குறது என் பொறுப்பு போதுமா?” மரகதம் இடைபுகுந்து இருவரையும் சமாதனம் செய்து வைத்தார்.

சரியான பதிலடி கொடுக்க முடியாமல் போனதில், கடுகடுத்த முகத்துடன், கோபத்தில் தரையில் கால்களை உதைத்துக் கொண்டு சென்றவளைப் பார்த்தவனுக்கு, தனது கடினத் தன்மையையும் மறந்து மெல்லிய குறுநகை பூத்தது.

அன்றிலிருந்து எந்தவொரு வேலைக்காகவும் இருவரும் சந்தித்துக் கொள்ளும் அவசியமில்லாமல் போனது.

உன்விழி சொல்லும் சிறு கதை

ஒன்று இன்று தொடராக மலர்கின்றதோ

சுகம் என்ன அதன் சுவை என்ன..?

           *****************************************

புரோக்கர் சங்கர் அனைத்து விதத்திலும் உதவியாக இருக்க, அவர் சிபாரிசில் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர்(மினரல் வாட்டர்)மொத்த சப்ளை வேலையில் சேர்ந்திருந்தான் தயானந்தன். வேலைக்கான நேர வரையறை இல்லாமல் ஓடிகொண்டே இருக்க பழக்கிக் கொண்டான்.

நிறுவனத்தின் மினிசரக்கு லாரியை கையாளத் தொடங்கியிருக்க, அவனது வேகமும், விவேகமும் வேலை செய்யும் இடத்தில் அனைவரையும் ஈர்த்து விட்டது. ‘கொக்குக்கு ஒன்றே மதி’ என்பது போல் அவனது எண்ணம் எல்லாம் உழைப்பு மற்றும் வருவாய் என்றாக, அதன் பின்னே இடையறாது ஓடத் துவங்கினான்.

தயானந்தன் வேலைக்குச் சேர்ந்த புதிதில், அவனைப் பற்றி, சங்கர் சொன்ன தகவல்களை ஊர்ஜிதம் செய்து கொள்ள, நிறுவனத்தின் பொறுப்பாளர், கடைப் பையன் குமரனை அனுப்பி, வீட்டைப் பார்த்துவிட்டு வரச் சொல்ல, அங்கே அவன் பார்த்து மிதுனாவைத்தான்.

ஞாயிற்றுக் கிழமை விடுப்பில், சாவகாசமாய் அமர்ந்திருந்தவள், புதியவன் ஒருவனைக் கண்டதும், என்ன விஷயம் என்று கேட்க,

“இங்கே தயானந்தன்னு யாராவது இருக்காங்களாக்கா?, எங்க முதலாளி விவரம் கேட்டுட்டு வரச் சொன்னாங்க வெள்ளந்தியாக பையன் சொன்னதும், அவளுக்கு சட்டென்று தயானந்தனின் கடுகடுத்த முகம் நினைவிற்கு வர,

‘இப்போ, இந்த சிடுமூஞ்சி சிங்கிளுக்கு நல்லவன்னு நாம சர்டிபிகேட் வேற குடுக்கணுமா?’ மனதோடு நொடித்துக் கொண்டவள், வந்தவனுக்கு பதில் சொல்ல விரும்பாமல், பாஸ்கரனை அழைத்து விசயத்தை பேசி அனுப்பிட விடச் சொன்னாள்.

“ஆமாடா, வீட்டுக்காரர்தான் என்னவாம் இப்போ?” ஏனோதானோ என்று பாஸ்கரனும் பதில் சொல்லிட,

“அட யக்கா… உன் வூட்டுக்காரர் பேர சொல்லவா, அண்ணாத்தய கூப்பிட்டே?” பாஸ்கர் சொன்னதை, அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அவளைக் கேலி பேச,

“அடேய்… அவர் ஹவுஸ் ஒனர்டா, எங்கவீட்டு அரைகுறைக்கு, நீ போட்டி போடுவ போல” தலையில் கைவைத்தபடியே, தம்பி பதில் சொன்ன லட்சணத்தைக் கடிந்து கொண்டு, அவனைப் பற்றிய விசாரிப்பிற்கு நல்லபடியாகவே பதில் சொல்லி அனுப்பி வைத்தாள்.

‘ச்சே… இவன போயி என் வாயல நல்லவன்னு சொல்ல வச்சுட்டானே… இந்த முசுடுகிட்ட எந்த பொண்ணு மாட்டி மூக்கு சிந்தப் போறாளோ?’ என்று நினைவே, அவளுக்கு சலனத்தைக் கொடுத்தது.

தயானந்தன் மீதான பரிதவிப்பும் கோபமும், தராசின் சமநிலையைப் போல் இருக்க, அவன் மீது எந்நேரமும் கடுப்பைச் சுமந்து கொண்டு, வளைய வந்தாள்.

“அண்ணா, அந்த அக்கா உன்னை பத்தி நல்லவிதமா சொன்னாலும், செம கோபம் போல, உம்மேலே!” குமரன் தப்பாமல் தயாவிடம் வத்தி வைத்து விட,

“அது எப்போ ஒழுங்கா பேசியிருக்கு, யாரா இருந்தாலும் பேசி விரட்டி விட்டுட்டுதான், வேற வேல பாக்கும். தலக்கணம் பிடிச்சது” அவள் மேல் இருந்த கோபத்தில், முனுமுனுத்தபடியே, அவனுக்கு சமாதானம் சொல்லி, அத்தோடு அதை மறந்தும் விட்டான்.

உன்விழி சொல்லும் சிறு கதை

ஒன்று இன்று அரங்கேறத் துடிக்கின்றதோ

சுகம் என்ன அதன் வடிவென்ன..?

நாட்கள் மாதங்களாக செல்ல, கடுப்புடன் திரியும் கடுவன்பூனையாக இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக தனது சுபாவத்தை மாற்றிக் கொண்டு சகஜமாக நடமாட ஆரம்பித்தான்.

அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், அது வாழ்க்கை அல்லவே? அவனின் அமைதியை சீர்குலைத்து, அவனது சுயத்தை சோதிக்கும் சவால்களும் வந்து நின்றன.