ithayamnanaikirathey-11

ithayamnanaikirathey-11
இதயம் நனைகிறதே…
அத்தியாயம் – 11
விஷ்வா சமையலறையிலிருந்து சென்றுவிட்டான். இதயாவின் இதயம் தான் வேகமாக துடித்து கொண்டிருந்தது.
‘விஷ்வா முகம் வாடினா உனக்கென்ன?’ இதயா தன்னை தானே நிந்தித்து கொண்டாள்.
‘நீ வேண்டாமுன்னு சொல்லிட்டு, எத்தனையோ வருஷம் கழிச்சி உன்னை தேடி வருவான். அதுவும் உன்னை தேடி இல்லை, அவன் மகளை தேடி. இந்த லட்சணத்துல, அவன் மூஞ்சி வாடினா, ‘லிஸன் டு மீ’ அப்படின்னு குழந்தை மாதிரி கொஞ்சி அவனை சமாதனம் செய்யணுமா? வெட்கமா இல்லை உனக்கு இதயா?’ இதயா, தன்னை தானே தாறுமாறாக திட்டி கொண்டிருந்தாள்.
‘நீ எவ்வளவு இடம் கொடுத்திருந்தா, அவன் உன்னை அப்படி அப்படி… கட்டி… கட்டிபிடிச்சி… ச்சீ… ச்சீ…’ இதயாவுக்கு வார்த்தைகள் எண்ண ஓட்டத்தில் கோபத்தில் வரவில்லை.
பொங்கலுக்காக உடைத்து கொண்டிருந்த முந்திரிப்பருப்பை, கோபத்தில் சுக்கு நூறாக உடைத்து கொண்டிருந்தாள்.
‘என்னை என்னன்னவோ செய்ததெல்லாம் இல்லாம, ‘லிஸன் டு மீ, ஐ அம் வெயிட்டிங்.’ நான் மூணு வார்த்தை சொன்னா, அவன் ஆறு வார்த்தை சொல்றான். எல்லாம் நீ கொடுத்த இடம் இதயா.’ மீண்டும் ஒரு முந்திரி பருப்பை நச்சென்று உடைத்தாள்.
‘அந்த, ‘ஐ அம் வெயிட்டிங்’ இல் காதல் சொட்டுது. பெரிய ரொமான்ஸ் கிங்ன்னு நினைப்பு.’ இதயா பற்களை நறநறத்தாள்.
‘விஷ்வாவை பத்தி நான் நினைக்க கூடாது. இல்லை, இல்லை நான் நினைக்க மாட்டேன்… மாட்டேன்… நினைக்க மாட்டேன்…’ திருவிளையாடல் நாகேஷ் பாணியில் தனக்கு தானே வலியுறுத்திக்கொண்டு, முழு கவனத்தையும் சமையல் பக்கம் திருப்பினாள் இதயா.
சமையலறையில் இருந்து சென்ற விஷ்வா குழந்தைகள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவர்கள் அறியாமல், அவர்களை மெல்ல கண்காணித்தான்.
‘இருவரும் சண்டையிட்டு கொள்வார்களோ?’ என்ற ஐயம் அவனுள்.
அப்படி எதுவும் நடக்கவில்லை. அஜய், பந்தை எடுத்துக்கொண்டு, பால்கனிக்கு சென்றுவிட்டான். தியா, அவள் பார்பியோடு ஹாலில் அமர்ந்து கொண்டாள்.
விஷ்வா, தன் மகளுக்கு முன் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். தன் மகளின் மீது பார்வை செலுத்தினான். அவன் முகத்தில் குறுநகை.
தியா, விளையாடுவது போல் ஓரக் கண்களால் விஷ்வாவை பார்த்தாள்.
அவள் பார்ப்பதை பார்த்துவிட்ட விஷ்வா, தன் மகளை பார்த்து புருவத்தை உயர்த்தினான்.
தியா, விஷ்வாவை முறைத்துவிட்டு வேறுபக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
விஷ்வாவின் குறுநகை இப்பொழுது சற்று விரிந்தது. மெலிதாக சிரிக்க, அந்த சத்தத்தில் தியா தலையை திருப்பி தன் தந்தையை பார்த்து விட்டு, சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.
‘இவளை கொஞ்சனும்னு தோணுது. சரியான, குட்டி ராட்சசியா இருப்பா போலியே? கிட்ட நெருங்கவே விட மாட்டேங்குறாளே? சிரிச்சா பேச்சு குடுக்கலாம். அவ, அம்மாவை விட பெருசா முறைக்குறாளே என்ன பண்ணலாம்?’ அவன் தன் நாடியை தடவி கொண்டான்.
‘பொண்டாட்டியை கரெக்ட் பண்ணுவேனா? பொண்ணை கரெக்ட் பண்ணுவேனா? அம்மாவும், பொண்ணும் நம்மளை இப்படி சுத்தல்ல விடுறாளுக.’ அவன் ஒரு பெரு மூச்சை வெளியிட்டான்.
விஷ்வா, தன் மகளை பற்றி சிந்தித்து கொண்டிருந்தான்.
அதே நேரம், இதயாவின் எண்ணமும் அஜயை சுற்றியே வந்தது.
‘அஜய், ஆறு வருஷத்துக்கு முன்னாடி என்னை பார்த்தது. அப்ப, அவனுக்கு மூணு வயசு தான். என்கூட பழக மாட்டானோன்னு நினச்சேன். நல்லவேளை, அப்படிலாம் இல்லை. சீக்கிரத்தில், என் கூட ஒட்டிப்பான் போல தான் தெரியுது.’ இதயாவின் சிந்தனை அஜயை பற்றிய எண்ணத்தில் இனிதாக பயணித்து கொண்டிருந்தது.
பொங்கலுக்கு , சட்னி அரைத்து கொண்டிருந்தாள். பாசிப்பருப்பு சாம்பாரும் கொதித்து அதன் மணத்தை வீடெங்கும் பரப்பி கொண்டிருந்தது.
தன் மூக்கை உள்ளிழுத்து, “அம்மா, எனக்கு பொங்கல் கூட, ஓட்ட வடை வேணும்.” தியாவின் அதிகாரம் தூள் பறந்தது.
“வடை வச்சிருக்கேன். ஆனால், உனக்கு கிடையாது. உனக்கு உடம்பு சரி இல்லை.” என்று சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள் இதயா.
“அம்மா, அது எஸ்டர்டே!” என்று தியா சட்டென்று குரல் கொடுக்க, இதயா கரண்டியோடு ஹாலுக்கு வந்தான்.
“என்ன?” என்று இதயா மகளை மிரட்ட, “அவ, கேட்குறதை கொடு இதயா. அது தான் காய்ச்சல் சரியாகிருச்சே.” விஷ்வா, சரியான நேரத்தில் மகளிடம் நட்பு கரத்தை நீட்ட முயற்சித்தான்.
இதயாவிடம் பேசிவிட்டு தியாவை பார்த்து போரில் வெற்றி பெற்ற அளவுக்கு பெரிதாக புன்னகைத்தான் விஷ்வா.
“ஐ டோன்’ட் லைக் ரெகமண்டேஷன். எ அம்மா, சொன்னா நான் கேப்பேன்” என்று கூறிவிட்டு வேறொரு பக்கம் திரும்பி அமர்ந்து கொண்டாள் தியா.
இதயா, என்ன பேசுவதென்று தெரியாமல் நிற்க, மீண்டும் விஷ்வாவை பார்த்து திரும்பினாள் தியா.
“எ அம்மா கிட்ட நீங்க பேசாதீங்க” பட்டென்று கூறிவிட்டு, விளையாட ஆரம்பித்தாள் தியா.
விஷ்வாவின் முகம் குழப்பத்தை வெளிப்படுத்தியது. ‘தியாவிடம், நான் எப்படி நெருங்குவது? இதயாவை போல சரியான கறார் பேர்வழியோ?’ என்ற குழப்பம் அவன் முகத்தில்.
‘விஷ்வா வருத்தப்படுவானோ?’ என்று இதயாவின் மனம் அவன் பக்கம் சரிய, அவள் மூளை எச்சரிக்கை மணி அடித்தது.
‘விஷ்வை பத்தி யோசிக்க கூடாது. அதுவும் அவன் தியாவுக்காக தான் வந்திருகான். அதுதான், என்னை பல வருஷதுக்கு முன்னாடி வேணாமுன்னு சொலிட்டானே?’ ஹாலில் இருந்து சட்டென்று சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் இதயா.
பல சிந்தனையோடு இதயாவின் கைகள் இயல்பாக உளுந்த வடையை வெந்தெடுக்க, “எல்லாரும் சாப்பிட வாங்க.” என குரல் கொடுத்தாள்.
அஜய், தியா, விஷ்வா மூவரும் சமையலறை நோக்கி வந்தனர்.
அஜயும், தியாவும் சமையலறை ஒட்டிய டைனிங் ஹாலில் இருந்த மேஜையில் அமர்ந்து கொள்ள, விஷ்வா சமையலறையில் இதயாவின் அருகே அமர்ந்து கொண்டான்.
இதயா அங்கிருந்து விலகி மேஜை அருகே அமர்ந்திருக்கும் அஜய்க்கு பொங்கலை எடுத்து வைத்து, சட்னி சாம்பார் வைத்து வடையும் வைத்து கொடுத்தாள்.
“நீயே சாப்பிடுவியா? நான் உனக்கு உருட்டி தரவா?” ஆசையாக அஜய்க்கு மட்டும் கேட்கும் விதமாக மெதுவாக கேட்டாள் இதயா.
தியாவின் கண்கள் அஜயை சற்று பொறாமையோடு பார்த்து கொண்டிருந்தது.
விஷ்வாவின் கண்கள் ஒருபக்கம் இதயாவையும், அஜயையும் நோட்டமிட்டது. அவன் இதயம் பணிந்தது.
“நானே சாப்பிடுறேன்.” அஜய் கூற, இதயா மீதமிருக்கும் வடையை எடுக்க சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
இதயாவின் கவனம் விஷ்வாவின் பக்கம் திரும்பியது. விறுவிறுவென்று விஷ்வாவின் முன்னே சென்று நின்று கொண்டாள் தியா.
‘இது என்ன எப்பப்பாரு, என் பக்கம் வந்து உட்காந்திருக்கான்? இவனுக்கு கொஞ்சமாவது இத்தனை வருட இடைவெளி ஞாபகம் இருக்கா இல்லையா?’ அவள் எண்ணிக்கொண்டிருக்கையில், விஷ்வாவை முறைத்து கொண்டிருந்தாள் தியா.
‘என்ன?’ என்று விஷ்வா தியாவை பார்த்து புருவங்களை உயர்த்தினான்.
‘என்ன?’ என்று இப்பொழுது அவனை போலவே புருவங்களை உயர்த்தினாள் தியா.
அவன் கண்கள் பெரிதாக விரிந்தது. “என்ன தியா?” என்று அவன் கேட்க, “இங்க உட்காராதீங்க” தியா பட்டென்று கூறினாள்.
“ஏன், நான் உங்க அம்மா பக்கத்துல உட்கார கூடாதா?” இப்பொழுது விஷ்வா தன் மகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு வீம்பாக கேட்டான்.
தன்னை கண்டுகொண்டதில் தியாவின் மூக்கு வெடவெடக்க, தன் இரு கைகளையும் இன்னும் இடுப்பில் அழுத்தி, விரித்து வைதிருந்த தன் குட்டி கண்களை இன்னும் பெரிதாக விரித்து தந்தையை கோபமாக முறைத்தாள்.
விஷ்வா அரும்பாடுபட்டு தன் புன்னகையை அடக்கி கொண்டான்.
‘அடியேய், உங்க அம்மாவே எனக்கு ஜுஜுபி. நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம்?’ என்று அவன் தன் மகளை பார்த்தான்.
“நான் அதுக்கு சொல்லலை. நீங்க உட்கார்ந்தா இது உடைஞ்சிரும். எ அம்மாகிட்ட அவ்வளவு டாலர்ஸ் எல்லாம் இல்லை. ரூபீஸ்ல ஈஸியா ஃபைன் கட்டிறலாம். டாலர்ஸில் கட்ட முடியாதுனு அம்மா சொல்லுவாங்க.” என்று சமயோசிதமாக சட்டென்று பேச்சை மாற்றினாள் தியா.
அத்தனை நேரம், அடக்கி வைத்திருந்த ஆவலை மறந்து சட்டென்று குதித்து, தியாவை அலேக்காக தூக்கி அவள் கன்னத்தில் முத்தமிட்டான் விஷ்வா.
அஜயின் கண்கள் இப்பொழுது பொங்கலை விடுத்து, விஷ்வா தியாவின் மீது படிந்தது.
தன் மகளை நெஞ்சோடு அணைத்து கொண்டான். அவன் கைகள் நடுங்கியது.
அவன் கண்கள் கலங்கியது.
‘என் மகள்’ அவன் மனம் கதறியது. மகளின் சுவாசத்தை ரசித்தான். அவள் பூப்போன்ற கன்னத்தை தன்னோடு சேர்த்து கொண்டான்.
‘நான் உன்கூட இருக்கும் பாக்கியத்தை ஏன் இறைவன் எனக்கு கொடுக்கலை?’ அவன் நெஞ்சத்தில் உதிரம் கொட்டியது.
முதலில், அவனை கூர்மையாக பார்த்த தியா பின் திமிர ஆரம்பிக்க, சுயநினைவுக்கு வந்தான் விஷ்வா.
“ஏதாவது உடைஞ்சா உங்க அம்மாக்கு பதிலா நான் ஃபைன் கட்டுறேன். சரியா?” அவன் கேட்க, அவன் கையிலிருந்து குதித்தோடி மேஜையில் அமர்ந்து கொண்டாள் தியா.
தன் மகளின் பட்டு சருமத்தில், அவன் உருகி நின்றான். அவன் முகத்தில் தெரிந்த மாற்றம், இதயாவுக்கு பல செய்திகள் கூறியது.
‘இவன் தியாவை இனி விட்டுக்கொடுக்க மாட்டான்.’ உண்மை நிலவரம் அவளுக்கு சம்மட்டியாக இறங்கியது.
“அம்மா, பொங்கல்” தியா கூற, “அப்பா வைக்கட்டுமா?” அவன் கேட்க, “அம்மா பொங்கல்.” என்று அழுத்தமாக கூறி விஷ்வாவை விடுத்து தன் தாயை பார்த்தாள் தியா.
தியாவின் அழைப்பில், அவள் அருகே சென்றாள் இதயா. அவள் உடல் மட்டுமே பணியை செய்து கொண்டு இருந்தது. மனமோ, பதிலறியா கேள்விகளுக்கு பின்னே ஒட ஆரம்பித்தது.
விஷ்வா எதுவும் பேசவில்லை. சமையலறையில் பழைய இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.
“நான் உருட்டி தரவா?” என்று இதயா கேட்க, தியாவின் கண்கள் அஜயின் பக்கம் திரும்பியது.
அஜய் அவனாகவே சாப்பிட்டு கொண்டிருக்க, “நானே சாப்பிடுறேன்.” தியா அஜயை பார்த்துக் கொண்டே கூற இதயாவின் முகத்தில் புன்முறுவல்.
‘என்னாலும் இனி அஜய்யை விட்டுட்டு இருக்க முடியுமா? ஒரு நாளில் என் வாழ்வில் இத்தனை மாற்றமா?’ இதயாவின் கைகள் நடுங்கியது.
‘குழந்தைகளுக்காக எல்லாம் மாறி விடுமா? அவன் செய்த தவறுகள்?’ அவள் மனதில் ஏமாற்றம் வந்து அமர்ந்து கொண்டது.
‘பிள்ளைகளுக்காக என்று இந்த உலகம் ஈஸியா சொல்லும். ஆனால், நான் என் தன்மானம், சுயமரியாதை எல்லாத்தையும் விட்டுட்டு இவன் காலில் விழனுமா?’ அவள் இதயம் வலித்தது.
‘என் வலி இந்த உலகத்திற்கு புரியுமா? என் வலியை மட்டுமே யோசிக்குறேனே? சங்கவி, இதில் அவ வேற…’ வழக்கம் போல் தன் வலிகளில் இருந்து, தன்னை தானே சரி செய்து கொண்டு தியாவுக்கு உணவு பரிமாறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
வெட்கங்கெட்ட மனம் மீண்டும் விஷ்வாவின் பக்கமே வெட்கமில்லமல் சென்றது. அவள் கண்கள் விஷ்வாவை தழுவியது.
‘இவன் சாப்பிட வர மாட்டானா? நான் கூப்பிடணுமோ? திமிர் பிடிச்சவன். நான் இவனை சாப்பிட சொல்ல மாட்டேன்.’ அன்பும், தன்மானமும் சரிநிகராக போட்டி போட்டு கொண்டு நின்றது.
“இதயா, பாலுக்கு பாத்திரம் எடு.” அவன் கூற,”எதுக்கு?” அவள் கண்களை கடுப்போடு சுருக்கினாள்.
“நான் கார்ன் ஃபிளக்ஸ் சாப்பிட போறேன்.” அவன் கூற, பால் பாத்திரத்தை வைத்துவிட்டு, அதில் பால் ஊற்ற எத்தனித்தாள் இதயா.
“நீ ஊத்தாத, எனக்கு நீ ஒன்னும் செய்ய வேண்டாம்.” அவள் காதில் கிசுகிசுத்துவிட்டு, பாலை ஊற்றினான் விஷ்வா.
மீண்டும் மேலே ஏறி அமர்ந்து கொண்டு, “ஆன் பண்ணு.” என்று விஷ்வா அதிகாரமாக கூற, ‘இதை மட்டும் நான் ஏன் பண்ணனும்?’ இதயா மனதிற்குள் கறுவிக் கொண்டு அவன் கூறியதை செய்தாள்.
பால் கொதித்து விட, “கார்ன் ஃபிளக்ஸ் எடு. ஒரு பௌல் எடு.” மீண்டும் அதிகாரம்.
அனைத்தையும் இதயா, எடுத்து அதில் கார்ன் ஃபிளக்ஸ் போட எத்தனிக்க, “ம்… நீ போடாத. எனக்கெல்லாம் நீ சமைக்க வேண்டாம். எனக்கு நானே பண்ணிப்பேன்.” அவன் கார்ன் ஃபிளக்ஸ் போட்டுக்கொண்டே முறுக்கி கொண்டான்.
இதயா கடுப்பின் உச்சிக்கே சென்று, “இனி, பால் எடு, ஆன் பண்ணு, பௌல் எங்கன்னு என்கிட்டே கேட்க கூடாது. மொத்தத்தையும், நீயே செஞ்சிக்கோ. என்கிட்டே எதையாவது கேட்டு பாரு. அப்ப தெரியும் சேதி.” குழந்தைகளுக்கு தெரியாமல் அடி குரலில் அவள் சீறினாள்.
“ம்… அப்படியே இந்தம்மா தான், எனக்கு இத்தனை வருஷம் பொங்கி போட்ட மாதிரி. நான் எவ்வளவு சூப்பரா சமைப்பேன் தெரியுமா? பெரிய பொங்கல், வடை. இதெல்லாம் பெரிய வேலை. நான் செய்வேன் அசால்ட்டா.” அவனும் குழந்தைகளுக்கு கேட்காதவாறு சண்டையை தொடர்ந்தான்.
இருவரும் முறுக்கி கொண்டு குழந்தைகள் அருகே மேஜையில் வந்து அமர்ந்தனர்.
“அப்பா, ஏன் பப்பீஸ் குடிக்குற கார்ன் ஃப்ளேக்ஸ் இப்ப குடிக்கறீங்க. வேற வழி இல்லைனா பரவாயில்லை.” என்று அஜய் கூற இதயா விஷ்வாவை பார்த்து சிரித்தாள்.
தியாவோ, ‘பப்பீஸ் டாக் ஃபூட் தானே சாப்பிடும். ஏன் கார்ன் ஃப்ளேக்ஸ் சாப்பிட போகுது?’ என்ற எண்ணத்தோடு வடையை ருசித்து கொண்டிருந்தாள்.
“பொங்கல் ரொம்ப நல்லார்க்கு அப்பா. நீங்க வைக்குற, பொங்கல் கம் மாதிரி பிசுபிசுன்னு இருக்கும். இது சூப்பரா இருக்கு அப்பா. செம்ம டேஸ்ட். நம்ம ஊரு கோவில் பொங்கல் மாதிரி.” என்று அஜய் தன் பேச்சை தொடர்ந்தான்.
விஷ்வா இப்பொழுது தன் மகனை முறைக்க, “வடை செம்ம சூப்பர் அப்பா. நீங்க இதெல்லாம் மிஸ் பண்ணாதீங்க.” என்று அஜய் வடையை ருசித்தபடி ரசனையோடு கூறினான்.
“டேய், ஒரு பொங்கல் வடையில் நீ ரொம்ப பேசுற. நான் உனக்கு எத்தனை நாள் என்னவெல்லாம் செஞ்சிருக்கேன்.” என்று விஷ்வா தன் மகனை பார்த்தபடி கோபமாக கேட்க நினைத்து பரிதாபமாக கேட்டான்.
இதயாவின் கவனம் இப்பொழுது விஷ்வாவின் மீது இருந்தது .
‘நான் செய்தால் இவன் சாப்பிட மாட்டானா?’ இதயாவின் கண்களில் ஏக்கம், ‘இவ என்னை ஒரு வார்த்தை சாப்பிட சொன்னா குறைஞ்சி போயிருவாளா?’ அவன் கண்களிலும் ஏக்கம்.
‘விஷ்வாவுக்காக பார்த்து பார்த்து செய்தேனே? திமிர் பிடிச்சவன். உடம்பு முழுக்க கொழுப்பு. பொங்கி வச்சா எடுத்து போட்டு சாப்பிட வேண்டியது தானே?’ சாப்பிடாமல் தட்டில் உள்ள பொங்கலை அதை பார்த்தபடியே அங்கும் இங்கும் உலப்பிக் கொண்டிருந்தாள் இதயா.
‘நான் சாப்பிடலைன்னு இவளும் சாப்பிடலை போல. மனசு முழுக்க காதல். ஆனா உடம்பு முழுக்க கொழுப்பு. இதயா என் கிட்ட தனியா சாப்பிட சொல்லாம நான் இவ சமைச்சதை சாப்பிட மாட்டேன்.’ என்று பிடிவாதமாக எண்ணியபடி, கார்ன் ஃப்ளேக்ஸை வேண்டா வெறுப்பாக பார்த்து கொண்டிருந்தான் விஷ்வா.
வடை பொங்கலை கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, “இவ்வளவு ருசியா நீங்க செய்யலை அப்பா. ஒரு நாள் நீங்க செஞ்ச பொங்கலை சாப்பிட வந்த கொரோனா, அந்த பிசுபிசுப்பில் மாட்டி மூச்சு விட முடியாம செத்து போச்சு அப்பா.” அஜய் கேலியோடு கூற, தியா “க்ளுக்…” என்று சிரித்தாள்.
தங்கையின் சிரிப்பில், அஜய் இப்பொழுது ஹீரோ போல உணர்ந்தான்.
“நீங்க போட்ட வடை, போண்டா மாதிரி இருந்தது. அதிலிருந்து நம்ம எவ்வளவு எண்ணெய் டம்பளரில் எடுத்தோம்?” அஜய் பாதி உண்மையும், பாதி கேலியும் கலந்து கூறினான்.
‘தன் தாயிடம் அதிகம் நெருங்கும் விஷ்வாவை விட தன் தாயிடமிருந்து சற்று விலகி நிற்கும் அஜய் மேல்’ என்று நினைத்தாளோ என்னவோ, தியா அஜயை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள்.
“அம்மா, எல்லாமே சூப்பரா பண்ணுவாங்க.” தியா கூற, அஜய் ஆர்வமாக தலை அசைத்தான்.
“அப்ப, இனி நாம அம்மா கூடவே இருந்திருவோமா?” அசட்டையாக தான் வந்த நோக்கத்தை கேட்டு தோள்களை குலுக்கினான் விஷ்வா.
கேள்வி ஒன்று தான். ஆனால், மனநிலை?
கேள்வியை அசட்டையாக கேட்டுவிட்டாலும், தான் சாதாரணமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், ‘தியா, அஜய் இவர்களின் மனநிலை என்ன?’ என்று அறியும் ஆவலோடு அவர்களை பார்த்த விஷ்வா, ஒரு தவறையும் செய்துவிட்டான்.
அதுவே அவன் நோக்கத்திற்கு இடையூறாக இருக்க போவது தெரியாமல்!
இதயம் நனையும்…