sontham – 28

actor_nani_pilla_zamindar_3539

அத்தியாயம் – 28

அந்த சந்தேகம் இருந்ததால் தான் மதுவின் கேஸில் விபத்து குறித்தான விசாரணை என்ற பெயரில் மீண்டும் கையில் எடுத்தேன். இப்போ அதில் முக்கால்வாசி நெருங்கிவிட்ட போது வருணித் தவிர மற்ற அனைவரையும் விசாரித்து உண்மையை ஓரளவு நெருங்கிட்டான்.

அவளை கெடுத்தது யாரென்ற கேள்விக்கு மட்டும் விடைகிடைத்தால் குற்றவாளியை கண்டிப்பாக கோர்டில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தரும் முடிவில் இருந்தான்.  

அந்த கனவுக்கும் மதிக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற எண்ணத்தில், “மது உயிருக்கு ஆபத்து என்றால் அந்த குரல் அவளிடமே உண்மையைச் சொல்லி இருக்கலாமே. ஆனால் அவ வீட்டில் வேறொரு உயிருக்கு ஆபத்துன்னு சொன்னதுக்கும், நடந்ததுக்கும் இடையே ஏதோ ஒரு மர்மம் மறைந்திருப்பதாக மனதுக்கு தோணுது” மாலை கண்ட கனவுபற்றி அவரிடம் கூறினான்.

அவன் சொல்லி முடிக்கும்வரை பொறுமையாக கேட்ட முகுந்தன், “உன் குடும்பத்தில் நெருங்கிய யாராவது இறந்து இருக்காங்களான்னு கேளு கௌதம். ஆத்மா என்றதும் நீங்க எல்லோரும் ஆவி, பேய் என்று பயப்படுறீங்க. ஆனால் மதுவிடம் பேசியது ஒரு நல்ல ஆன்மா” என்றவர் தூரத்தில் சென்றவனை கைகாட்டிட அவனும் கேள்வியாக நோக்கினான்.

“அவனுக்கு உடல்ரீதியாக எந்தவிதமான பாதிப்பும் இல்ல. ஆனால் மனசில் ரொம்பவே குழம்பிப் போயிருக்கிறான். அதுக்காக பைத்தியம்னு சொல்ல முடியாது. ஆனால் குழப்பம் தெளியாவிட்டால் கொஞ்சநாளில் பைத்தியம் ஆகிடுவான்” என்று அவர் சொல்ல கௌதம் அவனை உற்று நோக்கினான்.

திடீரென்று அவனை எங்கோ பார்த்த  ஞாபகம் வரவே, ‘இவன் அன்னைக்கு தேனியில் அடிபட்டபோது பிளட் கொடுத்த வருண்தானே?’ என்றவனின் மூளையில் மின்னல் வெட்டியது.

அவன் கடைசியாக சந்தேகப்பட்ட வருணின் போட்டோவை நேற்றுதான் கௌதமிடம் கொண்டுவந்து கொடுத்தான் அசோக். அந்த போட்டோவை அவன் இன்னும் பார்க்காமல் இருந்தான்.

முகுந்தனிடம், “எனக்கு அந்த பையனைத் தெரியும் ஸார். நான் கொஞ்சம் அவனிடம் பேசணும்” என்றதும் அவரும் சரியென்று தலையசைத்துவிட்டு எழுந்து செல்லவே கௌதம் எழுந்து சென்று பைக்கில் வைத்திருந்த போட்டோவை எடுத்து பார்த்தான்.

அதிலிருந்த வருணைப் பார்த்தும் அவன் சந்தேகம் உருதியாகிவிடவே, ‘கொலையாளியின் வாக்குமூலம் கண்டிப்பாக தேவை. ஒருவேளை கேஸ் விஷயம் தெரிந்து இவன் உண்மையை மறைக்க முயற்சி செய்தால் என்ன செய்வது?’ என்று யோசித்த கௌதம் அவனின் வாக்குமூலத்தை வீடியோ எடுத்துவிட முடிவெடுத்தான்.

அதே எண்ணத்துடன் வருணைத் தேடிச் சென்ற கௌதம், “ஹாய் வருண். நான் கௌதம் என்னை அடையாளம் தெரிகிறதா?” என்று தன்னை அவனிடம் அறிமுகம் செய்துகொண்டான்.

சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு, “ம்ம் அன்னைக்கு பிளட் கொடுக்க வந்தபோது பார்த்து இருக்கேன்” தெளிவாக பேசியவனை தனியே அழைத்துச் சென்றான் கௌதம்.

“நல்லாதானே இருந்தீங்க. இப்போ ரொம்ப குழப்பத்தில் இருப்பத்தாக முகுந்தன் சார் சொன்னார். அதுதான் உன்கிட்ட கொஞ்சநேரம் பேசலாம்னு வந்தேன்” என்றவுடன் வருணின் உதட்டில் கசந்த புன்னகை தோன்றி மறைந்தது.

“நான் சொன்னால் உங்களுக்கு புரியுமா?” என்றான்.

“ம்ம் கண்டிப்பா புரியும். என்னிடம் சொன்னால் உங்க குழப்பம் கொஞ்சம் தீருமே” என்றான் புன்னகையோடு.

ஏற்கனவே இருவருக்கும் இடையே நல்லவொரு நட்பு இருந்ததால், “நான் படிச்ச காலேஜில் இரண்டு பெண்கள் டிவின்ஸ். அந்த பெண்களில் ஒருத்தி ரொம்ப அமைதியானவள், இன்னொருத்தி திமிர் பிடித்தவள். பணம் இருக்கிறதென்ற திமிரில் ரொம்ப கர்வமாக நடந்துக்குவா” என்று சொல்லும்போது கௌதம் மனதில் ஸ்ரீமதி, மதுஸ்ரீ இருவரின் முகமும் தோன்றி மறைந்தது.

அவன் சிந்தனையோடு இருந்தபோது வருண் சொல்வதைக் கவனமாக கேட்கவே, “எனக்கு அவளைப் பிடிக்கும். ஆனால் அவள் போடும் உடைகள் மற்றவர் கண்ணுக்கு விருந்தாவது பிடிக்காமல் கமெண்ட் அடிப்பேன். அப்படியாவது அவ மாறுவா என்ற எண்ணம். அது என்மேல் இருக்கும் வெறுப்பை அதிகரிக்கவே அவகிட்ட காதலை சொன்னேன்” என்றவன் வகுப்பறையில் நடந்தை சொன்னான்.

“அந்த நேரத்தில் ஒரு சீனியர் அக்கா மேரேஜ்க்கு எல்லோரும் ஒன்றாக போயிருந்தோம். அங்கே டிவின்ஸ் இருவருக்கும் கார் ரேஸ் வைப்பதாக சொல்லவே இருவரும் உடை மாற்ற அறைக்கு சென்றனர்” என்றவனின் நினைவுகள் கடந்தகாலத்தை நோக்கிச் சென்றது.

***

அந்த அறைக்குள் நுழைந்தவுடன், “மது எப்போது ரேஸில் நீதானே ஜெய்ப்ப. இந்த ஒருமுறை நான் வின் பண்ண நினைக்கிறேன்” என்றாள் மதி குறும்புடன் கண்சிமிட்டி.

“என்னோடு போட்டி போட்டு உன்னால் ஜெய்க்க முடித்தால் எனக்கும் சந்தோசம் தான்” என்று மது சிரித்தபடி சொன்னாள். அப்போது எடுத்த உடையைப் பார்த்த மதியின் மனதில் அந்த எண்ணம் உதயமானது.

அவளின் வழக்கமான குறும்பு தலை தூக்கவே, “மது ஒரு கேமில் இன்னொரு கேம் விளையாடலாமா?”என்று குறும்பு மின்ன கேட்டவளை கேள்வியாக நோக்கினாள்.

“உன் உடையை நானும், என் உடையை நீயும் போட்டுக்கணும். அப்போ நீயே வின் பண்ணினாலும் அது நான் என்று எல்லோருமே நினைப்பாங்க. நம்ம ஆள் மாறியதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. உனக்கும் வெற்றி, எனக்கும் வெற்றி” என்று தன் மனதிலிருந்த திட்டத்தை கூறினாள்.

“அப்படின்னு சொல்ற? சரி விளையாடலாம். நான் உன்னை மாதிரி மேக்கப் போட்டுட்டு வரேன். நீ என்னை மாதிரி ட்ரஸ் மாத்திட்டு வா” என்று சொல்வதை அறைக்கு வெளியே நின்றிருந்த வருண் கேட்டான். 

அன்று கிளாஸ் ரூமில் வைத்து அடித்த மதியின் மீதான கோபத்தை தீர்த்துக் கொள்ள நினைத்தவன் மதி செல்லப்போகும் காரின் பிரேக் ஒயரை பாதி மட்டும் கட் பண்ணிவிட்டான்.

அவனின் கணிப்புப்படி பிரேக் அங்கிருக்கும் சிக்னல் வரை மட்டுமே பிடிக்கும் என்பதால் தன் நண்பனிடம் சொல்லி ஒரு பைக்கை ஏற்பாடு செய்து எடுத்துகொண்டு வேறொரு காரணத்தை சொல்லிவிட்டு கிளம்பும்போது மதியும், மதுவும் கீழிறங்கி வந்தனர்.

மதியின் உடையிலிருந்த மது ஒரு காரில் ஏற, மதுவின் உடையில் இருந்த மதி வருண் பிரேக் கட் பண்ணிவிட்ட காரில் ஏறிச் செல்வதை பார்த்தவன் அனைவரிடமும் விடைபெற்று அவர்களின் பின்னோடு சென்றான்.

 அவனின் கணிப்புப்படி சிக்னலில் மதுவின் கார் முன்னாடி சென்றுவிடவே மதியின் கார் பிரேக் பிடிக்காத காரணத்தினால் மண்வழி சாலையில் காரை காட்டுக்குள் திருப்பியவளின் பின்னோடு சென்றான் வருண்.

அவளின் கார் டமார் என்ற சத்தத்துடன் மரத்தில் மோதுவதை பார்த்த வருண் தூரத்தில் யாருக்கும் தெரியாத இடத்தில் பைக்கை நிறுத்தி பூட்டிவிட்டு வருவதற்குள் ஓரளவு அடிபட்ட நிலையில் காரிலிருந்து இறங்கிய மதியால் நடக்க முடியாத அளவிற்கு கால்வலி உயிர்போனது.

அவள் வலியை பல்லைக்கடித்து பொறுத்துக்கொண்டு காருக்கு அருகில் கிடந்த சின்ன கல்லின் மீது அமர்ந்தவள், “மதுவுக்கு போன் பண்ணி வர சொன்னால் உடனே வந்துவிடுவா” என்று நினைக்கும்போது வருண் வருவதைக் கண்டவளின் முகம் லேசாக தெளிந்தது.

அந்த நேரத்தில் அவனை அங்கே எதிர்பார்க்காத மதி, “வருண் நல்லவேளை நீயே வந்துட்ட. என்னை கொஞ்சம் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போடா” என்றவளின் கண்ணில் தெரிந்த பயத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தான்.

அவனை காரணம் புரியாமல் பார்த்தவள், “என்னடா சிரிக்கிற?” என்று வலியோடு அவனிடம் கேட்டாள். 

“ஏன் மதி நீ இந்த மாதிரி யாரிடமும் கெஞ்சி இருக்கிறாயா? பணம் இருக்கின்ற திமிரில் அன்னைக்கு காதலை சொன்ன என்னை எவ்வளவு தரக்குறைவாக பேசின. ஏழைங்க என்றால் உனக்கு அவ்வளவு இளக்காரம்” என்றவன் பேசவே அவளின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது.

அப்போதுதான் தன் உடையை கவனித்துவிட்டு, “வருண் நான் மதின்னு நினைச்சிட்டியா?” என்று கேட்கவும், “ஏன் நீ மதுவோட ட்ரஸ் போட்டு இருந்தால் குழம்பிடுவென்னு நினைச்சியா மதி. இப்போ நீ இப்படி கெஞ்சும்போது அவ்வளவு சந்தோசமா இருக்கு” என்றவன் அவளின் எதிரே நின்ற வருணின் முகத்தில் பழி வாங்கும் வெறியோ ஏதோவொரு அவளை பயப்பட வைத்தது.

“நான்தான் உன் கார் பிரேக் ஒயரை கட் பண்ணிவிட்டேன்” என்றவன் இரு கரங்களில் அவளைத் தூக்கிக்கொண்டு பக்கத்தில் இருந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் நுளைந்தவனின் எண்ணவோட்டத்தை கணித்தவள், “வருண் நீ மதின்னு நினைச்சு என்னிடம் தப்பா நடந்துக்க பார்க்கிற. இது தப்பு வருண். நான் மதி இல்ல” என்று அழுத்தமாக கூறினாள்.

ஒருபுறம் கால்வலி உயிர் போக இன்னொருபுறம் தன் பெண்மையை அவனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்ள நினைத்து, “வருண் பிளீஸ் என்னால கால்வலி தாங்க முடியல. முதலில் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போ” என்று அவனை திசைதிருப்பிவிட முயற்சித்தாள்.

அது முடியாமல் போகவே கண்களில் கண்ணீர் வழிய அவனை கையெடுத்து கும்பிட்டு, “மதின்னு நினைச்சு என்னை கெடுத்துவிடாதே. அப்புறம் நீ பின்னாடி ரொம்ப வருத்தபடுவ. நான் மதி இல்லடா என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோ” என்று அழுகையுடன் சொல்லவே அவளின் கதறல் எல்லாம் அவனின் காதுகளுக்கு எட்டவில்லை.

அன்று ரமேஷ் எஸ்தரை கெடுத்த அதே இடத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அவளால் அவனை தடுக்க முடியவில்லை. அவனோடு நடந்த போராட்டத்தில் வயிற்றில் கம்பி குத்திவிட தன் தேவையை தீர்த்துக்கொண்டு நிமிர்ந்தான் வருண்.

அவளின் கர்வத்தை ஆணவத்தை அடக்கிவிட்ட சந்தோஷத்தில் நிமிர்ந்த வருண், “கல்யாணம் முடிந்து முறையாக உன்னை தொட நினைச்சுதான் அன்னைக்கு உன்னிடம் காதலை சொன்னேன். ஆனால் நீ என்னை அவமானபடுத்திட்ட. இப்போ உனக்கு நான்தான் புருஷன்” என்று சொல்லிவிட்டு அவளை கர்வத்துடன் பார்த்தான். 

கசந்த புன்னகையோடு அவனை பார்த்த மதி, “தப்பு பண்ணிட்ட வருண். நான் மதி இல்ல. நாங்க ரூமில் பேசியதை கேட்டு நல்ல ஏமாந்துட்ட. உன் தோழியான என்னை கெடுத்த உனக்கு குற்ற உணர்ச்சியாகவே இல்லையா? தோழமையை கேவலபடுத்திவிட்டோமே என்ற எண்ணமே உனக்கு வரலயா?” என்று கேட்டதும் திடுகிட்டான் வருண்.

அவனின் தெளிந்த மனதை தெளிவாக குழப்பிவிட்டவளை தூக்கி சென்று காரில் படுக்க வைத்துவிட்டு பயத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டான். அவன் வீட்டிற்கு செல்கின்ற வழியில் ஓரிடத்தில் வண்டியோடு கீழே விழுந்தவன் அங்கிருந்த ஒரு டீக்கடையில் முகம் கழுவ தண்ணீர் வாங்கும்போது டிவியில் ஒளிப்பரப்பானது நியூஸ்.

“தேனியில் பிரபல தொழிலதிபர் தாமோதரனின் மகளான மதுவின் கார் பிரேக் பிடிக்காத காரணத்தினால் எதிர்பாராத விதமாக மரத்தின் மீது மோதி அந்த இடத்திலேயே உயிர் இழந்தார்” என்று நியூஸ் கேட்டு வருநின் அதிர்ச்சி அதிகரித்தது.

அவனின் மனம் கடந்த காலத்தின் பிடியிலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தது.

அன்று நடந்ததை கௌதமிடம் மனம் திறந்து கூறிய வருணின் முகம் கலக்கத்தைச் சுமந்திருந்தது. ஆனால் கௌதம் எந்தவிதமான குழப்பமும் இல்லாமல் தெளிவாக இருந்தான். ஏற்கனவே அவனுக்கு உண்மை தெரியும் என்றபோதும், ‘மதியைக் கெடுத்தது யார்?’ என்ற கேள்விக்கு விடைத் தெரியாத காரணத்தினால் மதுவைக் குழப்பாமல் அவள் போக்கில் போகவிட்டான்.

கௌதம் சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே அவன் குற்றவாளியை நெருங்கிவிட்ட காரணத்தினால் இப்போது வருண் சொன்னதைக் கேட்டு அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமானது.

“அன்னைக்கு நான் ரூமில் பேசும்போது கேட்டது உண்மைங்க. மது மதியாக மாறியதும், மதி மதுவாக மாறியதும் உண்மை. ஆனால் அதை நான் செயல்படுத்தும்போது அவள் எப்படி மதுவாக மாறிப்போனாள்? இந்த கேள்விக்கு விடை தெரியாமல் குற்ற உணர்ச்சி அதிகமாச்சு. ஒருவேளை மதி கோபத்தில் தன்னை குழப்பி விடுகிறாளோ என்ற எண்ணத்தில் அவளை காரில் படுக்க வெச்சிட்டு அங்கிருந்து கிளம்பிட்டேன்” இப்போது கௌதம் சந்தேகத்துடன் வருணைப் பார்த்தான்.

“அந்த கடையில் நியூஸ் பார்த்தபிறகு நான் செய்த தவறு எவ்வளவு பெருசுன்னு புரிஞ்சிது. அன்னைக்கு காலேஜில் நடந்த பிரச்சனையில் அவ எனக்காக தன் அக்காவையே எதிர்த்து நின்றாள். அது நடப்பதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னாடிதான் அவ வேறொருத்தரை மனதார விரும்பும் விஷயமே எனக்கு தெரிந்தது” என்றவன் தலை தலையாக அடித்துக்கொண்டு அழுதான். கௌதம் அவனை தடுக்க முயற்சிக்கவில்லை.

“தன் காதலியை வேறொரு ஆண் கெடுத்து கொன்ற விஷயம் தெரிந்தால் அவன் மனசு என்ன பாடுபடும். ஆத்திரத்தில் அறிவிழந்து இப்படியொரு கேவலமான விஷயத்தை பண்ணிட்டேன்னு நினைக்கும்போது சாகலாம்னு தோணும்” என்று சொல்லவே கௌதம் சிந்தனையோடு அவனைப் பார்த்தான்.

“ஒரு தோழியை தனக்கு நல்லது நினைத்தவளை இப்படி பண்ணிட்டேனே என்ற எண்ணத்தில் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்தேன். ஆனால் அப்பாவும், அம்மாவும் என்னை காப்பாத்திட்டாங்க” என்றவன் மனதிலிருந்த விசயங்களைக் கொட்டி தீர்த்தான்.

ஆரம்பத்தில் அவன் பேசும்போது இல்லாத சந்தேகம் இப்போது உறுதியாகிவிடவே அப்போதுதான் அவனின் மனம் எதனால் என்று தெளிவாக புரிந்துகொண்டு, “உங்க குழப்பம் தீர்ந்துவிடும்” என்று  ஆறுதல் சொல்லிவிட்டு எழுந்தவனின் மனமோ அவனை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தர நினைத்தது.

என்னதான் மதியை அவன் விரும்பவில்லை என்றபோதும் இறந்தது ஒரு உயிர் என்ற அடிப்படையில் வருணுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனதில் உதித்தது.

அதே நேரத்தில் தன் அறையில் அடைந்து கிடந்த மதுவின் நினைவுகள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. அன்று ரேஸ் ஓட்டுவதற்கு காரில் ஏறி அமர்ந்து சிக்னலை கடந்தபிறகு மதிக்கு அழைத்துப் பேசிவிட்டு போனை வைத்த மதுவை சுற்றி வந்தது ஜாதிமல்லியின் வாசனை!

இந்தமுறை தான் அந்த சக்திக்கு கட்டுபட்டு தேவையில்லாமல் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள கூடாதென்ற எண்ணத்தில் தன் சிந்தனை செயல் இரண்டையும் வேறுபுறம் திருப்பிவிடும் முயற்சியில் ஈடுபட்டாள். கிட்டத்தட்ட வழக்கத்திற்கு முன்னாடி அந்த இடத்தை சேர்ந்து அடைந்தாள். அங்கிருந்த அனைவருமே மதி மதி என்று ஆர்பரித்தனர்.

ஜாதிமல்லியின் வாசனை அவளை காரிலிருந்து கீழே இறங்கவிடாமல் செய்யவே, ‘ஐயோ’ என்று தலையில் அடித்துகொண்டாள். ஆனால் மதி குறிப்பிட்ட நேரத்தை கடந்தபிறகு வராமல் இருக்கவே, ‘ஒருவேளை அவளுக்கு ஏதாவது நடந்திருந்தால்? அன்னைக்கு அந்த குரல்கூட சொன்னதே!’ என்ற எண்ணம் எழுந்தவுடன் எதைபற்றியும் யோசிக்காமல் மதியைத் தேடி சென்றாள்.