தோளில் சாய வா 19

தோளில் சாய வா 19

திருமணம் நிச்சயமான விஷயத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக அலுவலகம் வந்த மாயா, வாயை திறக்கும் முன்பே,

“எப்போ பாத்தாலும் லேட்! எப்போதான் பொறுப்பு வரும் உனக்கு! மீட்டிங் ரூம் நவ்!” எச்சரித்துவிட்டு வேகமாக சென்றான் வெங்கட்.

‘அப்புறம் பேசிக்கலாம்’ என்று ஜாடை காட்டிய பத்மா, அவளையும் அழைத்துக்கொண்டு வெங்கட்டை பின்தொடர்ந்தாள்.

அவர்கள் மீட்டிங் அறைக்குள் நுழைந்தபொழுது, நாற்காலியில் சாய்ந்துகொண்டு மொபைலில் விளையாடிக்கொண்டிருந்த வினோத்தை, முறைத்தபடி சென்று அமர்ந்த வெங்கட்,

“எல்லாம் சரியா இருக்கன்னு ஒழுங்கா செக் பண்றத விட்டுட்டு என்ன பண்ற” கோவமாக லேப்டாப்பை திறந்து சரிபார்க்க துவங்க,

மொபைலிலிருந்து கண்ணை விலக்காத வினோத், “நீ எத்தன தடவ பாத்தாலும் அதே தான் இருக்கும். எதோ காலியான பிரிட்ஜ்ஜ மறுபடி மறுபடி திறந்து பார்த்தா உள்ள மேஜிக்ல ஐஸ்க்ரீம் இருக்கும்னு நம்புறமாதிரில இருக்கு!

போதும் வெங்கட் சீக்கிரமா அவனுங்களுக்கு கால் போடு, டெமோ கொடுத்துட்டு நான் கிளம்பனும்!”

“எங்கடா போற?” மாயா ஆர்வமாக கேட்க

“டேட்டிங்”

“என்ன?” அதிர்ந்த வெங்கட், “கால ஆஃபீசிவிட்டு வெளில வச்ச…பிச்சுடுவேன்! மரியாதையா டெமோ ஓகே பண்ணிட்டு அடுத்த ப்ரீஃபிங் மீட்டிங்குக்கு வந்து சேரு!”

“மனுஷனுக்கு ஆயிரம் வேல இருக்கு! எப்போவும் சும்மா மீட்டிங் மீட்டிங்ன்னு மொக்க போடாத வெங்கட்”

கடுப்பான வெங்கட், “டேய்! என்ன பார்த்தா எப்படி தெரியுது?…”

“ஷ்ஷ்!” அவனை அடக்கிய பத்மா, “ப்ளீஸ் டைம் ஆகுது” வெங்கட்டுக்கு நினைவூட்ட, அவனோ வினோத்தை முறைத்தபடி,

“டெமோ முடிஞ்ச அப்புறம் உன்ன வச்சுக்கறேன்” கோவமாக, கிளைண்ட்டிற்கு கால் செய்ய,

“என்னை வச்சுக்க என் கீர்த்து குட்டி இருக்கா!” தோளை குலுக்கியவன், நாற்காலியில் சாய்ந்துகொண்டான்.

‘ஏண்டா நீ வேற?’ என்பதுபோல் மாயா பார்க்க, அவளை பார்த்து கண்ணடித்த வினோத், “சும்மா” என்று உதடசைத்தான்.

ஒருவழியாக டெமோ முடித்தபின் லன்ச் நேரம் வந்துவிட , நால்வரும் ஃபுட் கோர்ட்டிற்கு சென்றனர்.

அனைவருக்கும் இனிப்பை வைத்தவள் “கார்த்தாலேந்து ஒரு விஷயம் சொல்ல வெயிட் பண்றேன்” என்ற அமர்ந்துகொண்டாள்.

“குட் நியூஸா?” பத்மா ஆர்வமாக,

“எனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகியிருக்கு” புன்னகைத்தவள், “மாப்பிளை யார் தெரியுமா?” பத்மாவை கேட்க,

“அவனொரு அப்பாவி!” என்றபடி வந்து அமர்ந்தான் பைரவ்.

“ஓஹ் மை காட்! யார் அந்த அப்பாவி ஜீவன்? சொன்னா ஒரு பையனோட வாழ்க்கையை காப்பாத்துவேன்” வினோத் வம்பிழுக்க

“நம்ம கம்பெனிதான்!” என்ற பைரவ், மாயாவின் இனிப்பை எடுத்து சாப்பிட துவங்கினான்.

“ஹே யாரு?” பத்மாவிற்கு ஆர்வம் தாங்கவில்லை.

“எனக்கு தெரியும்! போன மாசம் உன்ன ப்ரொபோஸ் பண்ண அந்த பையன ஓகே பண்ணிட்ட தான?” வினோத் இனிப்பை தின்றபடி கேட்க,

முகம் இறுகிய பைரவ், மாயாவை முறைத்ததை யாரும் கவனிக்கவில்லை மாயாவை தவிர.

பத்மா, “இல்ல உனக்கு ஒருத்தன் மேல க்ரஷ்ன்னு சொன்னியே அந்த பையன்தான?” என்று கேட்க, கோவத்தில் கண்கள் விரிந்த பைரவ்,

“என்ன நடக்குது இங்க? யாரு ப்ரொபோஸ் பண்ணா? நீ யாரை சைட் அடிக்கிறே ? யார் அவங்கெல்லாம்? என்கிட்டே ஒருவார்த்தை சொல்லல?”

கண்களை இருக்க மூடிக்கொண்ட மாயா “இல்ல பாஸ் உன்கிட்ட சொல்ல நெனஞ்சேன்…”

“எப்போ நம்ம கல்யாணத்துக்கு அப்புறமா?” பைரவ் கேட்டதில்,

வினோத்துக்கு புரைக்கேறி கண்ணில் நீர் தேங்க, பத்மா அதிர்ச்சியில் கண்கள் விரிய இருவரையும் பார்த்தான்.

“ஹே கங்கிராட்ஸ்!” வெங்கட் புன்னகையுடன் பைரவையும் மாயாவையும் வாழ்த்தினான்.

அவனுக்கு நன்றி தெரிவித்த பைரவ், மாயாவை சந்தேக பார்வையுடன், உற்று பார்க்க,

மாயா மெல்லிய குரலில், “நான் சொல்ல வந்தேன், ஆனா நாம வேற ஏதோ பேசப்போயி மறந்துட்டேன். சாரி பாஸ்!”

கோவத்தை கட்டுப்படுத்தி கொண்டவனோ, “ஒன்னும் அவசரமில்ல! நீ ஆற அமர பத்து வருஷத்துக்கு அப்புறம் சொல்லு” என்று கடுகடுத்துவிட்டு, பொதுவாக மூவரிடமும், “இப்போ புரியுதா அந்த அப்பாவி யாருன்னு?” என்றபடி தோளை குலுக்கினான்.

இருவரையும் வாழ்த்துவதா, அவர்களுக்குள் சமாதானம் செய்துவைப்பதா என்று தெரியாமல் குழம்பிய பத்மா,வினோத்தை பார்க்க, அவன் தீவிரமாக எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அவன் கையை தன் கைமுட்டியால் இடித்தவள், “என்னடா யோசிக்கிறே?” அவனிடத்தில் கிசுகிசுக்க,

“எங்கம்மா என்னை ஏன் இவ்ளோ அப்பாவியா வளர்த்திருக்காங்கன்னு யோசிக்கிறேன் பத்ஸ்! பாரு பிரெண்டு பிரெண்டுன்னு சொல்லிப்புட்டு சைடுல ரூட் விட்டுருக்கா! அதுவும் நம்ம பாஸ்க்கு!” உறக்கவே சொன்னவன்,

பைரவிடம், “உங்கமேல தப்பில்லை பாஸ்” என்றவன், மாயாவை கண்ணால் சுட்டிக்காட்டி, “ஒரு வார்த்தை சொன்னியா நீ?” கண்களை சுருக்கி முறைக்க,

பத்மாவும் அவனுடன் இணைந்து கொண்டாள், “அதானே ஒரு வார்த்தை சொல்லாம கமுக்கமா இருந்து இருக்கே?”

“ஹே நம்புங்கப்பா ப்ராமிசா இது அரேஞ்சிடு மேரேஜ் தான்!” மாயா பைரவை கண்ணால் துணைக்கழைக்க,

அவனோ கைகளை டிஷ்யூவில் துடைத்தபடி, “நோ! நம்பாதீங்க! ஒழுங்கா உண்மையை சொல்ல சொல்லி கேளுங்க. எனக்கு ஒர்க் இருக்கு. வீகென்ட் ட்ரீட் எனது! டைம் லொகேஷன் அப்புறம் சொல்றேன். பை!”

புன்னகையுடன் விடைபெற்றவன் ,மாயாவை பார்த்த பார்வையில் மட்டும் கொஞ்சம் கோவம் ஒளிந்திருந்ததை அவளைத்தவிர யாரும் உணரவில்லை.

‘என்னத்துக்கு இப்போ முறைக்கிறான்? ஒருவேளை இதுங்க போட்டுக்கொடுத்தது…’ மாயாவின் கலக்கத்தை கலைத்த வெங்கட்,

“எப்போ கல்யாணம்னு முன்னாடியே சொல்லிடு, இதுனால வேலைல கவனம் குறையக்கூடாது, எதுவும் டிலே ஆகக்கூடாது!”

அவனை முறைத்த பத்மா, “அவ எவ்ளோ பெரிய விஷயம் சொல்றா, நீ என்னடான்னா வேலைலயே கண்ணா இருக்க?”

அவளுடன் இணைத்துக்கொண்ட வினோத் நக்கலாக,

“என்ன பத்ஸ் நீ? நம்ம வெங்கட் கல்யாணம் நடக்குற அன்னிக்கி மட்டும் ஏதாவது டெமோ, டெட்லைன்ன்னு இருக்கட்டும், கல்யாணத்துக்கு லீவ் போட்டாலும் போடுவான்…ஆஃபீஸ்க்கு லீவ் போடமாட்டான்! என்ன வெங்கட் அப்படித்தானே?”

“என்னப்பா செய்யறது? டீம்ல யாருக்குமே பொறுப்பில்லைனா, லீடா நான்தானே சமாளிக்க வேண்டி இருக்கு”, மீண்டும் மாயாவிற்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, வேகமாக தின்றுவிட்டு அடுத்த மீட்டிங்கிற்கான ஏற்பாடுகளை செய்ய சென்றுவிட, பத்மா வினோத் இருவரும் மாயாவை பிடித்துக்கொண்டனர்.

பத்மா “அந்த பொண்ணு பாத்துட்டு போன பிரச்சனை வந்தப்போ கூட நான் இத சொல்லணும்னு நெனச்சேன், பேசாம நீயும் பைரவ் சாரும் கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு. எங்க இதை சொன்னா…” தயக்கத்துடன் நிறுத்த,

புன்னகைத்த மாயா “ஏன் சொல்லல?”

“என்ன நீ கடுச்சு வச்சுருவியோன்ற பயம்தான். அதானே பத்ஸ்?” வம்பிழுத்த வினோத்,

“எனக்கென்னமோ இது இப்படித்தான் வந்து நிக்கும்னு ஏதோ ஒன்னு மைண்ட் வாய்ஸ் சொல்லிகிட்டே இருந்துது.

சரி சரி! கல்யாணம் பண்ணிக்க போற, கம்பெண்ணிக்கு முதலாளி ஆக போற, இதுநால எங்களுக்கு என்ன யூஸ்? அத மொதல்ல சொல்லு”

அதில் கடுப்பான பத்மா, “அடப்பாவி உனக்கு என்னடா யூஸ் ஆகணும்?” அவனை முறைத்துவிட்டு மாயாவிடம் “அவனை விடு டா நீ சொல்லு…”

மறுபடி மறுபடி கேட்டும் போதாமல் துருவி துருவி திருமணம் நிச்சயமான விவரத்தை நண்பர்கள் மாறி மாறி ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.

“இப்படியே பேசிட்டு இருந்தா மீட்டிங் போக லேட் ஆகிடும் பரவால்லயா?” மாயா எச்சரிக்கும்வரை பத்மா, வினோத் அலுவலக வேலைகளை மறந்தே போயிருந்தனர்.

இருப்பிடத்திற்கு திரும்பியவர்கள் வேக வேகமாக வெங்கட் சொன்ன வேலையை முடித்துவிட்டு மீட்டிங் அறையை நோக்கி விரைந்தனர்.

போகும் வழியிலும் வினோத்தின் அலப்பறைகள் ஓய்ந்த பாடில்லை.

“ப்ளீஸ் வினோத் டேட் பிக்ஸ் ஆகறவரை ஆஃபீசில யாருக்கும் சொல்லிக்கவேண்டாம்னு இருக்கோம். நீ மைக் செட் வைக்காத குறையா கத்துற”
ஓட்டமும் நடையுமாக அவனை பின்தொடர்ந்த மாயா எச்சரித்துக்கொண்டே சொல்ல,

“என்ன டேட் பிக்ஸ் ஆகணும்?” குறுக்கிட்ட வேதாவின் குரலில், மாயா உறைந்து நிற்க, சுதாரித்த வினோத்,

“அதுவா? இங்க ஒரு விஷப்பூச்சி ஊர்வம்புக்கு அலையுதாம், அதை மருந்தடிச்சு தூக்க தேதி முடிவு பண்ணப்போறோம்” தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவன், வேதாவின் முறைப்பை பொருட்படுத்தாது,

“வாங்க நமக்கு தலைக்கு மேல வேலையிருக்கு, நாம என்ன சில பேர் மாதிரி வேலைவெட்டி இல்லாம சுத்துறோமா என்ன?” என்றபடி முன்னே நடக்க, பெண்கள் இருவரும் சிரித்தபடி அவனை பின்தொடர்ந்தனர்.

மாலை வீடு திரும்பியவள் மனதின் ஓரத்தில் ஏதோ நெருட, பைரவிற்கு கால் செய்ய, அவனோ அழைப்பை துண்டித்துவிட்டான், அடுத்தமுறையும் இதே நடக்க, ‘பேசணும் எப்போ முடியுமோ கால் பண்ணு’ என்று மெசேஜ் அனுப்பிவைத்தாள்.

அன்றிரவு திருமணத்திற்கான தேதியை முடிவு செய்ய ஜோசியறிடம் சென்றிருந்த கிருஷ்ணனும் மாதவனுக்கும் வீடு திரும்பினர்.

சில தேதிகளை குறித்துக்கொண்டு வந்த அவர்கள், தங்களுக்கு தோதாக அதில் மூன்று தேதிகளை முடிவுசெய்து, வாணியிடம் அதிலொன்றை தேர்வு செய்யச்சொல்லி கேட்க, அவரோ பைரவை கேட்க,

அதில் இரண்டு தேதிகள் சரிபடாதென்று சொன்னவன். ஒரே ஒரு தேதிமட்டுமே தனக்கு சரிவருமென்று சொல்லிவிட, வேறுவழியின்றி அன்றிலிருந்து ஒன்னரை மாதம் கழித்து திருமண தேதி உறுதிசெய்யப்பட்டது.

அதுவரை மனதில் பெரிதாய் திருமணப்பேச்சு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்காத நிலையில், தேதி முடிவானது முதல் சொல்ல தெரியாத பயம் மாயாவை சூழத்துவங்கியது.

இரவு வெகுநேரமாகியும் பைரவ் தன்னை அழைக்காததால், அவனுக்கு போன் செய்ய நீண்ட ரிங்கிற்கு பின்னரே அழைப்பை ஏற்றான்.

“ஹலோ என்னாச்சு பிஸியா? ஏன் போன் பண்ணல?”

“ம்ம்”

“கோவமா பாஸ்? எனக்கு தெரியும் அதான?”

“…”

“ஹே ப்ளீஸ் ஏதாவது சொல்லு”

“எனக்கு தூக்கம் வருது பை” அழைப்பை துண்டித்துவிட்டான், தன்னை அறியாமல் கண்கள் மெல்ல கலங்க, மௌனமாக தலையணையை கட்டிக்கொண்டாள்.

சில நொடிகளில் பைரவ் கால் செய்ய,

“மாயா” கோவமாகவே வந்தது அவன் குரல்.

“ம்ம்”

“ஏன் என் கிட்ட சொல்லல?”

“எத?”

“அவ்ளோ மறைச்சுருக்கியா, எதைன்னு கேட்குற அளவுக்கு ரகசியம் இருக்கோ?” குற்றம் சாட்டினான்.

நீண்ட மூச்சொன்றை விட்டவள், “பாஸ் ப்ளீஸ்”

“யாரோ சொல்லித்தான் எனக்கு எல்லாம் தெரியனுமா? யாரது அத சொல்லு!”

“எது பாஸ்?” அவளுக்கு தெளிவாக விளங்கவில்லை

“அதான் நீ யாரையோ சைட் அடிக்கிறியாமே. அவன்தான் எவன் அது?”

“அவனா…” அவள் சிரிக்க, பைரவிற்கோ கோவம் தலைக்கேற,

“இப்போ சொல்ல போறியா இல்லையா?” அவன் கத்தியதில் கடுப்பானவள்,

“என்ன இப்போ? நான் சைட் அடிச்சா என்ன? எதுக்கு இப்போ சும்மா அப்போலேந்து மொறைச்சுட்டு இருக்க?”

“யாருன்னு கேட்டேன்!” அவன் விடுவதாக இல்லை.

“ஸ்ஸ்ஸ் அவன் பேரெல்லாம் தெரியாது, புதுசா ஜாயின் பண்ணிற்கான் அனிமேட்டர். அவன் எவ்ளோ கியூட் தெரியுமா? அப்படியே…”

“போதும்! இனிமே அவனை பத்தி எதுவும் சொல்லாத!” உத்தரவிட்டவன் குரலில் இருந்தது கோவமா? வெறுப்பா? பொறாமையா?

“ஹலோ! என்ன நீ?…புரிஞ்சுபோச்சு கல்யாணம் பிக்ஸ் ஆனதால கண்ட்ரோல் பண்ண பாக்கறே அதான?”

“நான்சென்ஸ்!”

“சென்ஸோட தான் கேக்கறேன். எதுக்கு உனக்கு இந்த கோவம்?”

“பின்ன? என்கிட்டே இதெல்லாம் சொல்லாம அவங்ககிட்ட சொல்லிருக்க? நான் உன் பெஸ்ட்டி இல்லை அதான?” கடுகடுத்தவன் , “அப்படி நெனச்சு இருந்தா எவனோ ப்ரொபோஸ் பண்ணதையும் மறச்சு இருக்க மாட்ட”

“பைரவ் ப்ளீஸ் நெஜமாவே மறந்துட்டேன் டா. நம்பு” கெஞ்சினாள்

“நோ”

“நான் ஏன் மறைக்கணும் சொல்லு? எனக்கு அது பெரிய விஷயமா மனசுக்கு படலடா.”

“எனக்கு எதுவும் கேக்க வேண்டாம், உன்கூட எனக்கு இப்போ பேசவும் வேண்டாம்”

“ஓவரா இல்லையா?”

“நோ”

“என்னடா நீ இப்படி பண்றே? சாரி ஒருவாட்டி மன்னிச்சுடு ப்ளீஸ்” மறுபடி மறுபடி கெஞ்ச, அதை காதில் வாங்காமல் அவன் கடுகடுக்க, அவனை சமாதானம் செய்வதற்குள் பாதி இரவு கழிந்து விட்டது.

நாட்கள் உருண்டோட திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்க துவங்கியது.

வாணியின் வேண்டுதலின்படி அவர்கள் சொந்தவூரில் குலதெய்வ கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமணத்திற்க்கான அழைப்பிதழ் வெகுசிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டது, சென்னையில் ஏற்பாடு செய்ய பட்டிருந்த ரிசெப்ஷனுக்கு அவர்கள் கம்பெனியில் வேலை செய்யும் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.

***

பெரியோர்களும் உறவினர்களும் பாரபட்ஷம் பார்க்காமல் அறிவுரைகளை அள்ளிக்கொட்ட துவங்கினர்.

“இனிமே அவன் இவன் சொல்லக்கூடாது! அவர் இவர்னு மரியாதையா பேசணும்!”

“சமைக்க தெரியாம இருந்த… உன் மாமியார்கிட்ட வாங்கி கட்டிக்க போறே. என்ன பொண்ணு வளத்துருக்கான்னு உங்கம்மாவை திட்ட போறாங்க!”

“இனிமே இப்படி பேண்ட்டு சட்டைன்னு எப்போவும் திரியாத. ஒழுங்கா புடவை கட்ட பழகு!”

“வேலைக்கெல்லாம் போகவேண்டாம், ஒழுங்கா குடும்பத்தை பாரு இனிமே!”

ஏற்கனவே திருமணநாள் நெருங்க நெருங்க மணபெண்ணிற்கே உரிய பயமும் குழப்பங்களும் தன்னை சூழ, மொத்தமாக மன அழுத்தத்தில் இருகியவள் மேலும் மேலும் அறிவுரைகளையும் பல புதிய கட்டுப்பாடுகளையும் இடைவிடாது கேட்டு, பைரவுடன் பேசுவதை தன்னையும் அறியாமல் வெகுவாக குறைத்து கொண்டாள்.

அவள் மாறுதல்களை முதலில் உணராத பைரவ், தான் அன்று கோவித்து கொண்டதால் ஒதுக்கத்தை கடைப்பிக்கிறாளென்று நினைத்தவன் அதன் பின் நிலைகொள்ளாமல் அவளை அழைத்தான்.

“ஆழாக்கு என்ன பண்ற?”

“ஒண்ணுமில்ல சும்மா ரூம்ல இருக்கேன்”

“ரொம்ப பிசி போல மேடம பிடிக்கவே முடியல! ஒரு போன் இல்ல மெசேஜுக்கு ரெபிளை இல்ல, ஆஃபீஸ்லயும் எப்போவும் பிசின்னே சொல்ற…” கிண்டலாக சிரித்தபடி சொல்ல

“அதெல்லாம் இல்ல, கொஞ்சம் டென்க்ஷனா இருக்கு”

“எதுக்கு டென்ஷன்? வெங்கட் ரொம்ப ப்ரெஷர் பண்றானா? நான் அவன்கிட்ட பேசவா? இன்னும் ரெண்டு வாரம் தானே இருக்கு கல்யாணத்துக்கு இன்னும் நீ ஸ்ட்ரெஸ்ல இருந்தா சரிவராது”

“இல்ல வேண்டாம். இந்த வார கடைசிக்குள்ள வேலை முடிச்சுக்கொடுத்துட்டா அப்புறம் நான் பிரீ.”

“என்ன ஃப்ரீ? சண்டே ஊருக்கு கிளம்பனும் அதுக்குள்ள எவ்ளோ வேலை இருக்கும். விடு நான் அவன்கிட்ட பேசிக்கறேன்”

“ப்ளீஸ்!” கத்தியவள் நொடியில் மௌனமானாள்.

“என்னாச்சு?”

“தெரில கடுப்பபா இருக்கு. கல்யாணம்னா ஜாலியா இருக்கும்னு நெனச்சேன்…” மீண்டும் மௌனமானாள்.

அவள் மௌனமும் தயக்கமும் அவனுக்கு புதியதாய் தோன்றியது, “ இப்போ என்னாச்சு? உனக்கு சந்தோஷமா இல்லையா? கல்யாணம் செஞ்சுக்க பிடிக்கலையா?” சொல்லிமுடிக்கும் முன்பே அவன் குரல் உடைந்தது.

“அதெல்லாம் இல்ல பாஸ்! நெறய சொல்றாங்க இதபண்ணாத அதை பண்ணாத, இங்க இப்படித்தான் உட்காரனும் அப்படிதான் பேசணும்னு. பொழுது விடிஞ்சா கிளாஸ் எடுக்கறதுக்குன்னே யாரவது வந்துடறாங்க.

பைத்தியம் பிடிக்குது, யார்கூடவும் பேசாம தனியா எங்கயான ஓடிடலாம் போல இருக்கு. ஒருநாளாவது யார்கூடவும் பேசாம எங்கயான தனியா போயி உட்காந்துக்கணும்.

கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்சம் ரிலேக்ஸ் ஆகலாம்னு நெனச்சேன். எங்க..ஒன்னும் முடியல.

அதான் பேச தோணல ரூம்க்கு வந்தா தோபால்னு பெட்ல விழுந்து தூங்கிடறேன் தெரியுமா…” படபடவென மனதில் அதுநாள்வரை இருந்த மொத்த எண்ணங்களையும் கொட்ட துவங்கினாள்.

அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்தவன் சில நிமிடங்களில் அவள் மெல்ல மெல்ல மௌனமாகி, மெல்லிய சுவாச சத்தம் கேட்க, பேசியபடியே அவள் உறங்கிவிட்டதை உணர்ந்தவன் புன்னகையுடன் அழைப்பை துண்டித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த மாயாவை அழைத்த பைரவ், பதட்டமான குரலில் “அவசரமா வா! கம்பெனிக்கு வெளில வெயிட் பண்றேன்” அவள் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தான்.

என்னவோ ஏதோ என்று பதறி எழுந்தவள், வெங்கட்டிடம் சொல்லிவிட்டு விரைந்தாள்.

தனது காரில் கண்களை மூடி சாய்ந்திருந்தான் பைரவ். கதவை திறந்தவள்,
பதட்டமாக ஏறி அமர்ந்தாள்,

“என்னாச்சு பாஸ்? ஆர் யு ஓகே?” அவள் இதயத்துடிப்பு இரட்டிப்பாக எகிறியது.

அவளை ஒருமுறை உற்றுப்பார்த்தவன், “எதுவும் கேட்காத ப்ளீஸ், கொஞ்சநேரம்” காரை கிளப்பியவன் வேகமெடுத்தான்.

சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள், கார் சென்னை புறநகரை தாண்ட பதட்டம் அதிகமாக, “எங்க போறோம்? என்னாச்சு? ஏதாவது சொல்லேன்”

“ப்ளீஸ் பேசமா வா” என்றவன் மெல்லிய வயலின் இசையை பிளே செய்து, “கண்ணமூடிக்கிட்டு இத கேட்டுகிட்டு வா!”

“ஹே எனக்கு வேலை இருக்கு, எங்க போறோம்? லேட் ஆனா வெங்கட் திட்டுவான்”

“ஒன்னும் திட்டமாட்டான். அவனுக்கும் பாஸ் நான்தானே? நானே உன்கூடத்தானே வரேன்? சும்மா இருப்பியாம் நல்ல பொண்ணா”

அதன்பின் அவள் கேள்விகளுக்கு பதில் தராமல் அவன் புன்னகையுடன் காரை ஓட்ட, அவனிடம் பேசி ப்ரயோஜனம் ஒன்றுமில்லை என்று உணர்ந்தவள் கண்களை மூடி சாய்ந்துகொண்டாள்.

காரை ஒரு ரிசார்டின் முன் நிறுத்தியவன், “வா” என்றுவிட்டு முன்னே நடக்க, அவனை பின்தொடராமல் நின்றவள், “ஹலோ என்னைத் இதெல்லாம்? நான் வரமாட்டேன். என்ன விஷயம்” அவனை முறைக்க,

அவளை வினோதமாக பார்த்தவன் சிரித்துவிட்டான், “லூசு ஓவரா யோசிக்காம வா” அவள் கையை பிடித்து இழுத்துச்செல்ல, முணுமுணுத்தபடி அவனுடன் ரெசார்ட்டினுள் நுழைந்தாள்.

அங்கு ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் எதையோ பேசியவன் மாயாவை கண்காட்ட, வேறொரு பெண்ணை அழைத்த ரெசெப்ஷனிஸ்ட்,

“ப்ரீ வெட்டிங் கபிள் ஸ்பா” என்று சொல்ல, திருதிருவென விழித்த மாயா பைரவை பார்க்க, புன்னகைத்தவன், அவள் காதருகில்,

“எனக்கும் ஸ்ட்ரெஸ் தாங்கல. அதான் ஜாலியா ஒரு குட்டி ரிஃப்ரெஷ்மென்ட்!” என்று கண்ணடித்து, அவளை அழைத்து செல்ல

“நமக்கே ஸ்ட்ரெஸ்ன்னா நம்ம வீட்ல இருக்கவங்க பாவம்ல எவ்ளோ அலைச்சல்…” அவள் ஆதங்கப்பட,

“அவங்க எல்லாருக்கும் சென்னைலயே ஸ்பா ஏற்பாடு பண்ணியாச்சு, பட்டாளமே அங்கதான் இருக்கு. இது நமக்கு ஸ்பெஷல்!”

“என்ன ஸ்பெஷல்?” ஆர்வமாக அவனுடன் சென்றவள், அவர்கள் நுழைந்த அறையை கண்டு விழிகள் விரிய நின்றுவிட்டாள்.

மெல்லிய வெளிச்சத்தில், இதமான இசை ஒலிக்க, பெரிய அறையில், இரு மசாஜ் படுக்கைகள் போடப்பட்டிருக்க அதனை சுற்றி வாசனை மெழுகுவத்திகள் ஏற்றப்பட்டிருக்க, அந்த சூழலே மனதிற்கு இதமாய் இருப்பதை உணர்ந்தாள்.

“என்ன இது ரெண்டு பேருக்கும் ஒரே ரூமா?” அரண்டவள் அவனை பார்க்க, சிரித்தவன்,

“கண்டதையும் யோசிக்காத பேசாம ரிலாக்ஸ் பண்ணோமா ஜம்முன்னு கல்யாணத்துக்கு ரெடி ஆனோமான்னு இருக்கணும். இனி கிளம்புற வரை மூச்!” கொஞ்சலாய் மிரட்ட, ஏனோதானோ என்று சம்மதிவள், ஸ்பா முடிந்து வீடு திரும்பும் பொழுது நிஜமாகவே மனமும் உடலும் மிகவும் லேசாக இருப்பதை உணர்ந்தாள்.

“சூப்பர் பாஸ்! என்னமா மசாஜ் பண்றங்க! தூங்கவே தூங்கிட்டேன். நானே நெனச்சாலும் வேற எதுவும் யோசிக்க முடியல. தேங்க்ஸ்!”

“நீ ஹேப்பினா நானும் ஹேப்பி!” புன்னகைத்தவன், “வீட்ல டிராப் பண்ணிடறேன். வெங்கட்கிட்ட லீவ் சொல்லிட்டேன்”

“ஏன் பாஸ் வேலை இருக்கு, ஆபீஸ்ல விட்டுடு நான் வேலைமுடிச்சுட்டு கிளம்பிப்பேன்”

“ஒரு ஆணியும்…ம்ம்” அவன் முறைக்க,

“கம்பெனி உன்னுது, பின்னாடி ப்ராஜெட் டிலே ஆனா என்ன கேட்காத சொல்லிட்டேன்!” என்றவள் அமைதியாக சாலையை வேடிக்கைபார்க்க ,

“அப்படி பொறுப்பை என்கிட்டே விட்டுடு. சரி நாளைக்கு ஷாப்பிங் போகணும்ன்னு வாணிமா சொன்னாங்க. கால் பண்ணி பேசிக்கோ”

“ஓகே நான் அவங்ககிட்ட பேசி பிளான் பண்ணிக்கிறேன்”

சிலநொடிகள் ஏனோ அமைதி நிலவ, மாயா கார் ரேடியோவில் அலைவரிசையை மாற்ற துவங்கினாள். மெல்ல அவள் கையை பற்றியவன்,

“மாயா…கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது!”

“பிடிக்கல” வேகமாக வந்த பதிலில் பற்றியிருந்த கையை விலக்கியவன்,
“சாரி” என்று சாலையை வெறிக்க,

“ஹே நான் இத சொல்லல டா!” கியர் மீதிருந்த அவன் கையை பற்றிக்கொண்டாள்.

மென்மையாக புன்னகைத்தவன், “பின்ன?” ஒரு நொடி அவளை திரும்பி பார்த்து கேட்க,

“பின்ன என்ன? இதுவரைக்கும் இப்படி ஃபார்மலா கேட்டுத்தான் பேசிருகியா? இப்போ என்ன?”

“அப்படியே மேடம்மட்டும் காதுகிழிய பேசறமாதிரி! நீயும் தான் பேசறதே இல்ல ஒரு மெசேஜுக்கு ரிபிளை பண்றியா?” முறுக்கிக்கொண்டான்.

“என்னமோ சொல்லத்தெரியாத டென்சன், எனக்கும் இதெல்லாம் புதுசுதான?”

“என்கிட்டே ஷேர் பண்ணதான ஹெல்ப் பண்ண முடியும்?”

“விடு பாஸ் தானா சரியாயிடும்! சரி என்ன கேட்க வந்த?” நினைவூட்டினாள்.

“நமக்குள்ள ஒரு கெமிஸ்ட்ரி மிஸ் ஆகுது…”

“என்ன பண்ணனும்?”

“முயற்சிக்கலாம்…”

“எப்படி பாஸ்?”

“ஒன்னு குடேன்” கன்னத்தை அவளிடம் காட்ட, அவளோ பட்டென்று அடித்துவிட அதிர்ந்தவன்,

“அடியே!”

“அடிச்சுட்டேனே!”

“போடி!” கோவமாக முகத்தை திருப்பிக்கொண்டவன், சத்தம் வராமல் எதோ முணுமுணுக்க,

“என்னடா? உரக்கத்தான் சொல்லேன்!”

“அடிக்கவா சொன்னேன்?” முறைத்தவன், “இதுக்கு சும்மாவே இருந்துப்பேன்!” அலுத்துக்கொண்டான்.

“நீ தானே கொடுண்ணே?” அவள் முறைக்க,

“கன்னத்தை காட்டினா உங்க ஊர்ல அடிப்பீங்களா?”

“பின்ன என்னத்துக்கு காட்டின?”

“கிஸ்டி!” அலுப்பாய் தலையை குலுக்கிக்கொண்டான்.

“ஐயோ சாரி பாஸ்” என்றவள், நொடியும் தாமதிக்காமல் ஒன்றிற்கு மூன்றாக அவன் கன்னத்தில் முத்தம் தந்து, “ஓகே வா?” அவன் முகத்தை ஆர்வமாக பார்க்க,

அவன் முகத்தில் ஏமாற்றம்

“ஏன் பாஸ் என்னாச்சு?”

“என்னடா பீலிங்கே வரல?” எனோ சோகமானவன், “உனக்கு ஏதாவது வந்ததா?”

“எனக்கும் வரலை” உண்மையை சொன்னாள்.

“சரி விடு, மறுபடி முயற்சிப்போம்” என்றவன் அவள் உணரும் முன்னே அவள் கன்னத்தில் நச்சென்று முத்தம் தந்து அவளை ஆர்வமாக பார்க்க,

அதிர்ச்சியில் விழிகள் உறைந்தவள், என்னவோ முகத்தை சுருக்கி, கண்களை குறுக்கி விளங்கமுடியா முகபாவத்தை காட்ட. பதறியவன், காரை சாலையோரம் நிறுத்தி அவள் முகம் பார்க்க,

“ஏன் கார நிறுத்தின?” மௌனம் கலைந்தவள் விழிக்க,

“என்னடா கோவமா? சாரிடா” தலை கவிழ்ந்து கொண்டான்.

“அடச்சே! நானே வெக்கம் வருதான்னு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன், நீ தான் நடுவுலே புகுந்து…” அவள் முடிக்கும் முன்பே சிரிக்க துவங்கியவன்,

“அதெல்லாம் உனக்கு வராது, வீணா ட்ரை பண்ணாத! மனுஷனுக்கு பக்குன்னு ஆகுதுல்ல!” என்றவன் மேலும் அவளை கிண்டல் செய்து சிரிக்க, மாயாவோ வெட்கம் வராத கடுப்பில் அவனை மொத்தியெடுத்துவிட்டாள்.

***

திருமணத்திற்கு ஒருவாரம் முன்னதாக பைரவும் வாணியும் அவர்கள் ஊருக்கு சென்று திருமண ஏற்பாடுகளை செய்யத்துவங்கினர். அவர்கள் சென்ற இரண்டு நாட்களில் மாயாவும் அவள் குடும்பத்தினரும் அவன் ஊருக்கு புறப்பட்டனர்.

 

Leave a Reply

error: Content is protected !!