இனிய தென்றலே
இனிய தென்றலே
தென்றல் – 9
ஒரு மௌனம் தீர்ந்தது சுதியோடு சேர்ந்தது
ஒரு தாளம் ராகம் சொல்ல
சந்தம் பொங்கும் மெல்ல
மாயம் அல்ல மந்திரம் அல்ல…
நம்மை யார்தான் கேட்பது
விதி தானே சேர்ப்பது
இந்த பாசம் பாவம் இல்லை
நேசம் மோசம் இல்லை
கங்கை என்றும் காய்வதும் இல்லை….
முன்தினம் வைஷாலியுடன் பேசியதை வைத்தே மகனை இறுக்கிப் பிடித்திருந்தார் தங்கமணி. அசோக் திருமணம் வேண்டாமென பிடிவாதத்தில் நின்று சாதித்தாலும் யாரும் அவன் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை.
அதிகாலையில் இருந்தே திருமண ஏற்பாடுகள் குறித்து பேசுவதும் நிச்சயத்திற்கான வேலைகளை கவனிப்பதுமாகவே இருந்தவர்களை தடுக்கும் வழி தெரியாமல் தவித்தவன், முடிவில் சென்னைக்கு புறப்பட்டு நின்று விட்டான்.
மாணிக்கம் தாத்தா, கொடுத்தவாக்கு, குடும்ப கௌரவம் இன்னும் பல காரணங்களை சொல்லித் தடுத்தவர், அதையும் மீறி மறுத்தால் குடும்பத்தை விட்டு விலகிவிடு என்று கர்ஜித்து விட, வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்து விட்டான்.
தந்தை ராமகிருஷ்ணன் அங்கு இல்லாததை காரணம் காட்டி நடப்பதை தடுத்து நிறுத்தப் பார்க்க, தாத்தாவின் கண்டிப்பான பேச்சில் அதுவும் பலமிழந்து போனது.
மாணிக்கத்தின் உத்தரவிற்கு மறுபேச்சு இல்லாமல் தனது சம்மதத்தை தெரிவித்த ராமகிருஷ்ணன், தனக்காக காத்திருக்காமல் திருமண வேலைகளை ஆரம்பிக்கும்படி சொல்லியிருந்தார்.
நாளும் நட்சத்திரமும் கூட இருவருக்கும் சாதகமாய் அமைந்து, இவர்களுக்கு சோதனையைக் கொடுத்தது. நேற்று ஒருநாள் இரவில் தொலைபேசியின் மூலம் இரு வீட்டுப் பெரியவர்களும் அனைத்தையும் பேசி முடித்து, இன்று திருமணத்திற்கு நாளும் குறித்து விட்டனர்.
கத்தி முனையில் திருமணத்திற்கு சம்மதம் சொன்ன தனது இயலாமையை எண்ணிப் பார்க்கும் பொழுதே, அசோக் மனதில் உறங்கிக் கொண்டிருந்த அழுத்தங்கள் யாவும் வெளியே வரத் தொடங்கி விட்டன.
எக்காரணம் கொண்டும் தனது இலட்சியத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது என்ற திடத்தில் நின்றவனுக்கு, எப்படியாவது வைஷாலியை சந்தித்து தன் நிலையை விளக்கி திருமணத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டுமென்ற வேகத்தில் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது.
அந்த முடிவுடன், வீட்டு வேலையாட்களின் மூலம் அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அவளைக் காண கோவிலுக்கு விரைந்தான்.
கிட்டத்தட்ட 1500படிகளைக் கொண்ட பெருமாள் கோவிலின் மலைப்பாதை அது. வழியில் தங்கிச் செல்ல இரண்டு சிறிய மண்டபங்கள் இருக்கும்.
கோவிலுக்கு மேலே செல்ல வாகன வசதி இருப்பதையும் மறந்து விட்டு, பெரியவர்களின் அதிரடி ஏற்பாட்டினை தடுக்கும் அவசரத்தில் வேகமாக படிக்கட்டுகளில் ஏற, வைஷாலியும் அதே வேகத்தில் கீழே இறங்கிக் கொண்டிருந்தாள்.
பாட்டியின் சமாதானத்தையும் மீறி, கோபமும் அழுகையும் கட்டுக்குள் நிற்காமல் அவளை கொதிப்படையச் செய்ய, அந்த ஆவேசத்தை எல்லாம் படிகளில் இறங்கும் வேகத்தில் காட்டியவள், எதிரில் அசோக் ஏறிக் கொண்டிருப்பதை பார்த்ததும் ஆணி அடித்தாற்போல் உறைந்து நின்றாள்.
இவளது அழுதமுகம், கோபப் பெருமூச்சுகள் யாவும் மேலே நடந்து கொண்டிருப்பதை அசோக்கிற்கு சொல்லாமல் சொல்லி விட, எதையும் கேட்காமல் அமைதியாய் அழுத்தமாய் அவனும் நின்று விட்டான். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரேநிலைதான்.
இவனது களைத்த முகமும் தளர்ந்த நடையும் பார்த்து, வீட்டினில் இவனும் பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறான் என்று வைஷாலிக்கும் புரிந்து போனது.
தனது களைப்பினை தாண்டிய கடின முகத்தோடு அசோக், அவளை கூர்மையாக நோக்கிக் கொண்டிருக்க, அவனுக்கு சளைக்காத பதில் பார்வையை பார்க்க முடியாமல் அவனது இறுக்கத்தில் திகைத்துதான் போனாள் வைஷாலி.
என்ன ஒரு அழுத்தம் அந்த முகத்தில்? தன்னிடத்தில் இந்த பாவனையை காண்பிக்க நான் என்ன தவறு செய்தேன் என்றே அவளின் மனம் கூக்குரலிட, வெளியே கேட்கும் தைரியம் ஏனோ வரவில்லை.
மனம் கனிந்தவனாய், அடாவடியாளனாய், வீம்பனாய், குழப்பவாதியாய் என அவள் கண்ட, அவனது முகபாவங்கள் அனைத்தும் நிமிட நேரத்தில் மனதிற்குள் வந்துபோக, இன்னும் எத்தனை விதமான முகங்களைதான் இவனிடத்தில் எதிர்கொள்ளப் போகிறேன் என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டாள்.
அவனது கடுகடுத்த முகமும், ஊடுருவும் பார்வையும் பார்த்து, அவனைப் பற்றிய நல்ல எண்ணங்களை எல்லாம் முற்றிலும் தலைகீழாய் மாற்றிக் கொண்டாள். இந்த முகமா அவளை ஈர்த்தது?
பெண் பார்த்த நாளன்று, மல்லிகைப் பந்தலில் தன்னுடன் சிரித்தவனும், பேருந்து நிறுத்தத்தில் தன்னை கனிவாய் நோக்கியவனும் இவன்தானா? என் அன்பிற்கினியவன் என்று தான்நேசம் கொண்டதும் இவனைத்தானா? இன்னும் பல அவனா இவன் கேள்விகள் வைஷாலியைப் பந்தாட, எதற்கும் விடை கிடைக்காமல், மூச்சு முட்டிப் போனாள்.
இவளின் வெறுத்த பார்வையை பார்த்தவனுக்கும் தன்னை ஏற்றுக் கொள்வதில் இவளுக்கு இத்தனை வருத்தமா? என்ற தவறான கணிப்பில் மனம் சுணங்கி நின்றான்.
அந்த நினைவே மனமெங்கும் வலிக்கச் செய்ய மன அழுத்தத்தில் கரைந்து கொண்டிருந்தவன், அந்த பாரத்தை எல்லாம் அவளின் மேல் கொட்டிவிட தயாரானான்.
கீழே இறங்குபவளுக்கும், மேலே ஏறுபவனுக்கும் தங்களது செயல்களை தொடரவேண்டும் எனத் தோன்றாமல், மேற்கொண்டு என்ன பேசுவதென தெரியாமல் அமைதியாகி நின்றனர்.
நொடிகள் கடந்துவிட, இவன் ஏதாவது குளறுபடி செய்யும் முன் இங்கிருந்து அகன்று விடு என்று வைஷூவின் மனம் எச்சரிக்கை செய்ய, அவனைப் பார்த்து எந்த வார்த்தையும் பேசாமல் அமைதியாக படியிறங்க முயற்சித்தாள்.
“ஷாலி! ஒரு நிமிஷம் நில்லு!” குறையாத அழுத்தத்தில் இவன் தடுத்து நிறுத்த, இவளோ அவனை நேர் கொண்டு பார்க்க மனமில்லாமல் இறங்க முன்னேறிக் கொண்டிருந்தாள்.
“இப்ப நீ நிக்கலைன்னா, கையப் பிடிச்சு நிக்க வைப்பேன்!” பின்னோடு எச்சரித்த, அவனது கடினக்குரலில் அவளது நடை தானாய் நின்றது.
இருவரின் ஊடாய் தவழ்ந்து வந்த மலையமாருதமும் இவர்களை ஆறுதல் படுத்தவில்லை. காலைச்சூரியன் தன்பணியை உக்கிரமாக்க ஆயத்தமான நேரம், கண்களை கூசச் செய்யும் வெயிலில் இருவரும் நின்றிருக்க, அதுவே நேருக்குநேர் பார்த்து பேச இயலாமல் தலைதாழ்த்தச் செய்தது.
“நிழலுக்கு வா!” என சுற்றுப்புறம் பார்த்து, அருகில் உள்ள மண்டபத்தை நோக்கி அசோக் செல்ல, அவனைப் பின் தொடர்ந்தாள் வைஷாலி.
எந்த நிலையிலும் இவளின் நலம் விரும்பியாய் அவன் செயல்பட்டதில், இதிலொன்றும் குறைவில்லை என்றே வைஷாலியின் மனம் நொடித்துக் கொண்டது.
விருப்பமில்லாத திருமணம் நடக்கப் போகிறது என்பதை ஜீரணிக்க முடியாமல் இருவரும் மனதிற்குள் அமைதியாக உழன்று கொண்டே மண்டபத்தை அடைந்தும் பேசாமல் நின்றிருக்க, அசோக் மௌனத்தை உடைத்தான்.
“உனக்கு சம்மதமா ஷாலி!” அழுத்தமாய் வார்த்தைகள் கடிபட்டே வந்து விழ,
இதற்கு என்னவென்று பதில் சொல்வாள். தன் கைமீறிப் போய்விட்ட நிகழ்வை இனியும் ஏற்காமல் இருக்க முடியுமா என்ன? இதனை எப்படி இவனிடம் விளக்குவது என்ற யோசனைதான் இவளுக்கு.
வைஷாலியிடமிருந்து பதில் வராமல் போகவே, பெருமூச்சுடன் தன்னை சமன்படுத்திக் கொண்டவன்,
“சோ… நீ ஓகே சொல்லிட்ட, அப்படிதானே? வேணும், வேண்டாம்ங்கிற கண்ணாமூச்சி ஆட்டத்துல, நாமளே வாய கொடுத்து தோத்து போயிட்டோம் ஷாலி… இந்த தோல்வியிலதான் நாம ஒன்னு சேரணுமா?” வழக்கபோல் தனது குழப்ப பேச்சை எடுத்துவிட தயாராகி விட்டான்.
திருமணத்தை நிறுத்தி வைக்க மனம் காரணத்தை தேடிக் கொண்டிருக்க, இவளும் தன்னைப் போலவே இந்த ஏற்பாட்டை வெறுக்கின்றாள் என்ற முடிவில், இவளையும் சேர்த்து சொல்ல வைத்தே, திருமணத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்றே எண்ணினான்.
அதனை செயல்படுத்த, தான் இப்பேற்பட்ட குழப்பாவாதி, கடுமையானவன் என்று தெரிய வைக்க மேலும் வார்த்தைகளால் வதைக்க ஆரம்பித்தான்.
“இந்த கல்யாணம், உனக்கு சந்தோஷம் கொடுக்கப் போகுதா?” குத்தீட்டியாய் வார்த்தைகள் வரிசை கட்ட,
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் அசோக்? பெரியவங்க எடுத்த முடிவு. என்னால மீற முடியல…” தன்னால் முயன்ற அளவு தெளிவுபடுத்திவிட வெகுவாய் முனைந்தாள்.
“நேத்து அவ்வளவு சொன்ன… நான் அன்னபூரணிக்குதான் பேத்தி! தெரிஞ்சே தியாகி ஆக மாட்டேன்னு போல்டா பேசின… இப்போ அந்த வீரமெல்லாம் எங்கே போச்சு?” என மேலும் மேலும் இவன் குத்திக் காண்பிக்க அயர்ந்தே போனாள் வைஷாலி.
கோவிலுக்கு வந்ததில் இருந்தே அலைக்கழித்த மன உளைச்சல்களின் தாக்கம் வேறு அவளை வெகுவாய் தளர்வடைய வைத்திருக்க, அவனது குதர்க்க கேள்வியில் மனம் அடிபட்டு அவளையும் மீறி கண்கள் கரித்து வந்தது.
இனி வாழ்நாள் முழுமைக்கும் இந்த மாதிரியான குற்றம் சாட்டும் பேச்சுக்களை கேட்டுத்தான் ஆக வேண்டுமோ என்றே மனம் சஞ்சலம் கொள்ள, தன்னையும் மீறி விசும்ப ஆரம்பித்து விட்டாள்.
வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை இவனோடுதான் பயணம் செய்தாக வேண்டுமென்று உறுதியான பிறகு, இவனின் முன்பு வீராப்பென்ன? நாகரீகமென்ன? என்ற தெளிந்த மனோபாவம், இவனிடம் அனைத்தையும் கொட்டிவிட தயார் நிலையில் இருந்தது.
இவளது அழுகையில், இவன் மனம் கலங்கினாலும் அதனை பின்னுக்கு தள்ளி தனது குறிக்கோளை செயாலாற்றுவதிலேயே உறுதியாய் நின்றான்.
“ம்ப்ச்… சீன் கிரியேட் பண்ணாதே ஷாலி! கல்யாணத்தை நிறுத்திட்டா ப்ராப்ளம் ஓவர்… என்ன பண்ணலாம்? உன் யோசனை என்ன?” கடுகடுத்த குரலை மாற்றாமல் கேள்விகள் கேட்டு, அவளின் கோபத்தை வெளிவரச் செய்தான்.
“உங்களுக்கு உங்க பிடிவாதம்தான் பெருசா? மனசாட்சி இல்லையா? இதுக்கும் மேல கல்யாணத்தை நிறுத்தி என்ன சாதிக்க போறீங்க அசோக்? என்னால முடியாது… உங்களால முடிஞ்சா செய்யப் பாருங்க…” மனமுடைந்த குரலில் அழுகையோடு தொடர்ந்தவள்,
“ஆனா, இதனால என் பாட்டி மனசொடஞ்சு போயி, அவங்க தலைகுனிஞ்சு நிக்கிறத பார்க்குற சக்தி எனக்கு இல்ல. நிச்சயமா கண்காணத இடத்துக்கு போயிடுவேன்னு மட்டும் நினைக்க வேண்டாம்.
அப்படி தனியா போய் வாழுற அளவுக்கு தைரியமும் எனக்கில்ல… அதுக்கு பதிலா தற்கொலை பண்ணிட்டு ஒரெடியா யாருக்கும் தொல்லை இல்லாம போய் சேர்ந்துருவேன்…” கோபமும் ஆவேசமும் ஒன்றாய் சேர்ந்து அவளை உஷ்ணப்படுத்த, விம்மலோடு வார்த்தைகளில் வெடித்து விட்டாள்.
இயலாமை, கோபம், அச்சம், துயரம் என அனைத்தையும் தனது பேச்சில் வெளிப்படுத்தியவள், மேலும் அழுகையில் கரைய ஆரம்பிக்க, அங்கிருந்த தூணில் சாய்ந்தபடியே சிறிய திட்டில் அமர்ந்து விட்டாள்.
துன்பத்தின் சாயலை கூட அறிந்திராதவளுக்கு இவனைப் பார்த்த நாள் முதலே குழப்பமும் துயரமும் மட்டுமே மிஞ்சுகின்றன. வெளியில் சொல்லி தோள் சாயவும் தனது பாட்டியை தவிர வேறு யாரும் இல்லாதபோது, அவளும் எவ்வளவுதான் அந்த முதியவரிடம் பகிர்ந்து கொள்வாள்.
மனதினில் இவன் மீதான நேசம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்தாலும் இவனது மறுப்பை மனதில் வைத்துதானே தானும் அமைதியாய் இருந்தது. அதை இவன் எப்பொழுதுதான் உணர்வான் என்ற கழிவிரக்கம் எல்லாம் அவளை அலைகழிக்க, மொத்தமாய் மடிந்து அமர்ந்து விட்டாள்.
வைஷாலியின் அரற்றலை கேட்டவனுக்கும் அவனுக்குள் அடங்கி இருந்த நேசம் தானாய் வெளிப்பட்டு அவளிடம் சரணடையச் செய்து விட்டது. பெண்ணின் கதறலில் மனதின் அழுத்தம் எல்லாம் எங்கோ ஒரு மூலையில் காணாமல் போய்விட்டது. இவனது உடலும் மனமும் ஒருசேர பதைத்து விட, வினாடியில் அவள் அருகே வந்தமர்ந்தவன்,
“ஹேய் ஷாலி! என்னடா இது! சாரி, சாரிடா… ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் ரியலி வெரி சாரி…” அவள் முகத்தை கைகளில் ஏந்தி கண்ணீரைத் துடைக்கவென நீட்டிய கைகளைத் தட்டி விட்டவள்,
“டோன்ட் டச் மீ!” கோபத்துடன் விலக்கி விட்டாலும் தாளமுடியாமல், மறுநொடியே தட்டிவிட்ட அவனது கைளில் தன் முகத்தை புதைத்து அழுகையை தொடர்ந்தாள்.
“உன்னோட கஷ்டம் நல்லாவே எனக்கு புரியுதுடா… ஆனா என்னால, உனக்கு ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா இருக்க முடியாது. என்னோட வீக்னஸ் தெரியும்தானே. அத மனசுல வச்சுதான் வேண்டாம்னு சொல்றேன்…” தான் சொல்ல வந்ததை மறந்து விட்டு, தன் தரப்பு நியாயத்தை மட்டுமே விளக்கியவனாய், அவளின் முகத்தை உயர்த்த, அவளுக்கோ விம்மல் நின்றபாடில்லை.
“நீங்க இப்படி கடுமையா பேசுறது, அழுத்தமா பாக்குறது சத்தியமா என்னால சமாளிக்க முடியல… எனக்கு மூச்சு முட்டுது அசோக்!” வார்த்தைகள் திக்கித் திணறியே வெளியேறி அவளது கண்ணீர் இவன் கைகளை நனைத்தது
“எனக்கு வேற வழி தெரியல… என் பாட்டி எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க… அவங்களுக்காக நான் இதுவரைக்கும் எதுவும் செய்ததில்ல… என்னைப் பத்தின கவலையே அவங்கள முடக்கிப் போட்டுடுமோன்னு பயமா இருக்கு அசோக்… அத தாங்கிக்கிற அளவுக்கு நான் தைரியமானவ கிடையாது…” என்றவள் மறந்தும் தன் நேசத்தை வெளிப்படுத்தவில்லை.
“பெரியவங்க முடிவெடுத்ததுக்கு என்னால ஒரு அளவுக்கு மேல மறுப்பு சொல்ல முடியல, புரிஞ்சுக்கோங்க அசோக்…” அழுகையினுடனே தன் நிலையை தெளிவுபடுத்தினாள்.
“எனக்கும் அப்படிதான்! எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் ஷா! ஆனாலும் கைமீறிப் போயிடுச்சு…” உள்ளார்ந்த குரலில் அவனும் பதிலளித்து,
“ரெண்டு பேரும் ஒரே நிலையில இருக்கோம்… ஐ யாம் சாரி ஷா!” மீண்டும் மன்னிப்பை வேண்டி,
“உனக்கு சம்மதமா ஷாலி!” வார்த்தைகளுக்கும் வலிக்குமோ என்று மென்மையாக கேட்டவனை, கேள்வியின் அர்த்தம் புரிந்து எதிர்நோக்க முடியாமல் நிலம் நோக்கினாள் வைஷாலி.
இதே கேள்வியை கடுமையாய் கேட்டபொழுது எழுந்த வலியெல்லாம் இப்பொழுது இவன் கேட்ட மென்மையில் காற்றோடு கரைந்தேதான் போனது. மனம் அவனது கனிவில் அமிழ்ந்து விட, இயல்பான வைஷாலி மெல்ல வெளியே எட்டிப் பார்க்க ஆரம்பித்தாள்.
“சம்மதம் சொல்லிட்டுதான், இங்கே வந்து அழுதுட்டு இருக்கேன்” என்று மூக்கை உறிஞ்ச,
“ம்ப்ச்… உன் மனசு என்ன சொல்லுது ஷாலி!”
“அதான் நேத்தே சொல்லிடுச்சே! உங்க வீர விளையாட்டு எல்லாம் விட்டுட்டு வந்தா யோசிக்கலாம்னு” முறுக்கிக் கொண்டு சொன்னாலும், சீண்டலுடன் மெதுவாக வெளிவந்தது.
“ஜோக்ஸ் அபார்ட்… என்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி ஆகிட்டியா? என்னோட லைஃப் பார்ட்னரா வர உனக்கு சம்மதமா?” அவளின் மென்மையான குரலுக்கு மயங்கிய மகுடியாக, அதே தோரணையில் உற்சாக மனதோடு சிரித்தபடியே கேட்டான்.
“நீங்க டோட்டலா, உங்கள மாத்திகிட்டாதான் என்னால எஸ் சொல்லமுடியும்” வீம்பான முடிவில் வைஷாலி நிற்க,
“நீ சொல்றது என்னமோ அக்ரிமென்ட் மேரேஜ் மாதிரி இருக்கு. யாரும் யாரையும் வலுக்கட்டாயமா மாத்த வேண்டாம் ஷாலி…” சாதாரணமாக பேச ஆரம்பித்தவன்,
“என் பழக்க வழக்கங்களை மறக்க வைக்கிற உன்னோட அருகாமை எனக்கு கிடைச்சா போதும்ங்கிற முடிவுக்கு நான் வந்துட்டேன். அது நம்ம மேரேஜ் மூலமா கிடைக்குதுன்னா ஓகே, எனக்கு பரிபூரண சம்மதம்.
எனக்கே எனக்கான தோழியா, உன் கைபிடிச்சு வலம் வர்ற சந்தோஷ நாட்களை நான் ரொம்பவே ஆசையா எதிர்பாக்குறேன் ஷா!” நெகிழ்ந்த குரலில் தன்ஆசைகளை சொல்லி முடிக்க, வைஷாலி தடுமாறிப் போனாள்.
ஷாலியில் இருந்த உரிமையும், ஷா-வில் இழையோடிய மென்மையும் சேர்ந்து அவளை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது. இதயத்துடிப்பின் இசையை இன்றுதான் ஆழ்ந்து கேட்கிறாள். அத்தனை படபடப்பு அவளிடத்தில்…
அவனது கனிவான பேச்சும், அருகாமையும் வைஷாலியை உணர்வுக் குவியலாய் மாற்றிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் புதுவித அனுபவத்தை தர, அதை எதிகொள்ள முடியாமல் தள்ளாடினாள் வைஷாலி.
இருவரின் உணர்வுகளும் தெளிந்த நீரோடையாய் பாயத் தொடங்கியிருக்க, அவளின் சம்மதத்தை வேண்டி இவனும் கை நீட்டினான். சட்டென்று தட்டி விட்டவள் நொடியில் அவனது இளகிய முகம் கண்டு, தன்னையும் மீறி அவனது கைகளை தன் கைகளோடு இணைக்க, அப்படியொரு அழுத்தம் அந்த இணைந்திருந்த கைகளில்….
இறுக்கிப் பிடித்திருந்த கைகளில் தன்னை, தன் உணர்வுகளை எல்லாம் அவனுக்குள் கடத்த ஆரம்பித்திருந்தாள் வைஷாலி.
ஆழ்ந்த அணைப்பு இல்லை, உயிரை உருகச் செய்யும் இதழ் பரிமாற்றம் இல்லை… இத்தனை ஏன்? காதலை ஒருவருக்கொருவர் பகிரங்கமாய் சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஆனால் சொல்லாத காதலை உணர்ந்தனர்.
உணர்த்தப்படுவதை விட, தானே உணர்ந்து கொள்வதும் இவர்களின் காதலில் சேர்த்தியாகிப் போனது. நொடிக்குநொடி அவர்களின் அன்பின் ஆழத்தை கைகளின் அழுத்தத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருந்தனர்.
இவளது அழுத்தத்திற்கு ‘வைஷாலி!’ என்று இவனும் அழுத்தம் கொடுக்க, அவளது கரைகாணாத உணர்வுகள் எல்லாம் கரை சேர்ந்த ஆயாசம் மனதிற்குள்….
இந்தளவிற்கு அவள் உணர்ச்சி வசப்படுவாள் என்று அசோக் எதிர்பார்க்கவில்லை. ஏன் இவளும் கூடத்தான்…. பதிலுக்கு பதில் பேசி இவனை வாயடைக்க வேண்டுமென்றுதானே அவன் பின்னே வந்தாள். ஆனால் முடிவில் வீழ்ந்ததென்னவோ இவள்தான்.
அவளின் உணர்வுகளை வெளிப்படுத்தி அவளை வெளிச்சம் போட்டு காட்டிய அவளது கண்ணீர், தன்னை சொந்தமாக்கிக் கொள்ளப் போகிறவனை அசைத்தே பார்த்து விட்டது.
அவனுக்கும் தான்நினைத்து வந்ததும் அதற்கு நேர்மாறாக இப்பொழுது நடந்து கொண்டிருப்பதையும் கூட உணர முடியாத மோன நிலையில் தன்னையும் மறந்து தவித்து நின்றான்.
அவளைத் தாக்கிய உணர்வுப் போராட்டம் அவனையும் விட்டு வைக்கவில்லை. அவனும் உணர்வுகளின் ஆதிக்கத்தில் ஏதோ ஒரு மாய சக்திக்கு கட்டுப்பட்டவனைப் போல் அவளிடம் பிதற்ற ஆரம்பித்தான்.
“எனக்கு நீ, உனக்கு நான்னு இருப்போம்… போதுமே இந்த கண்ணாமூச்சி விளையாட்டு. கமான் ஷா…” இணைந்திருந்த கைகளின் மேல் மற்றொரு கையை இவன் வைக்க, அப்பொழுதும் வைஷாலி, தன் உணர்வுப் பிடியில் இருந்து மீண்டு வந்தாளில்லை.
“நமக்கான வாழ்க்கை, நமக்கு மட்டுமே!” என்றிவன் அழுத்தம் கொடுக்க
“நெஜமாவா அசோக்..!” அகலாத பார்வையில் அவனைப் பார்க்க,
“ம்… நெஜம்தான்டா… நமக்கான புரிதல் போதுமே, நாம மகிழ்ச்சியா வாழ…” அர்த்தப் புன்னகையில் விளக்கியவனின் கைகளை மேலும் இறுக்கிக் கொண்டாள்.
இது பொய்யில்லையே, நிஜம்தானே என்ற அலைப்புறுதலை தாண்டிய மகிழ்ச்சி அவள் மனதில்….
“ஷாலி”
“ஷா” என இருமுறை அழைத்தும், கைகளின் அழுத்தத்தை குறைக்காமல் இன்னமும் உணர்வுகளின் தாக்கத்தில் இருப்பவளை சகஜமாக்க,
“ஆமா… என் இஷ்டத்துக்கு மலையுச்சியில உட்கார்ந்து, இவ்ளோ சொல்லிட்டு இருக்கேன்… நீ ஒண்ணுமே சொல்ல மாட்டியா?” என்றவனின் குரலில் இப்பொழுது சீண்டல் எட்டிப் பார்த்தது.
“ஹாங்…” என விழித்தவள், “என்ன சொல்லணும்?” தடுமாற்றம் குறையாத பேதையாக அவனிடமே கேட்க,
“டூ பிகின் வித் ஐ லவ் யூ சொல்லலாம்…” என்றதும் திகைத்து,
“இங்கேயா..? இந்த இடத்துலயா?” சுற்றும் முற்றும் பார்த்து முகத்தை சுருக்க
“யெஸ்… இங்கேயே, இப்போவே… யாரும் இல்ல… கமான், டெல் மீ..!” அவளை உசுப்பேற்ற,
இவளும் சொல்லி விடலாமென்று முயற்சித்தாலும் வார்த்தைகள் என்னவோ முரண்டு விட்டு முடங்கின.
“என்ன? ட்ரை பண்ணுடா… நல்லா சத்தமா.. நல்லா ஃபீலோட சொல்லு ஷா!” என்றவன் காதினை தீட்டிக் கொள்ள,
இவளால் வாயை திறக்க முடியவில்லை. அந்த சமயம்தான் பேசக் கற்றுக் கொள்ளும் குழந்தையை போல, மிகப் பிரயத்தனப்பட்டு, தொண்டையை செருமிக் கொண்டு அவள் பேசிய வார்த்தை என்னவோ, சற்றும் சம்மந்தம் இல்லாதது.
“ஐ யாம் சாரி அகி… நான் பெரிய காதல் தீவிரவாதியும் இல்ல… அப்டி சொன்னா மட்டுமே புரிஞ்சுக்குற அளவுக்கு நீங்க அம்மாஞ்சியும் இல்ல…” பாவமான குரலில் அவனது ஆசைக்கு மூடுவிழா நடத்திவிட, அவனோ அடக்க முடியாமல் பெருங் குரலெடுத்து சிரித்தான்.
“ஐயோ சிரிக்காதீங்க… அவஸ்தையா இருக்கு” முகத்தை மூடிக்கொண்டு இவள் சிணுங்கிவிட,
“இதுதான் ஷா, நீயும் நானும்… இந்த ஜென்மத்துக்கு அந்த வார்த்தை நம்ம ரெண்டுபேர் வாயில இருந்தும் வராது” சிரித்துக் கொண்டே சொன்னவன்,
“அது என்ன அகி… நைஸ் நேம்… பட் நிறைய பேர் ஏகே-ன்னு சொல்வாங்க?” கேள்வியாய் அவளை பார்க்க,
“நீங்க மட்டும் என்னை ஒரு எழுத்துல சுருக்கலாம். நான் ரெண்டு எழுத்துல உங்களை சுருக்க கூடாதா? ஏகே கோர்ட் வேர்ட் கூட அப்பப்போ எட்டி பார்க்கும் வாய்ப்பிருக்கு பாஸ்” அவனிடம் தனக்கான உரிமையை காட்டி விட்டாள்.
“அதான் பட்டா போட்டு கையில கொடுக்கப் போறாங்களே! என்ன வேணா பண்ணிக்கோ… மூச்சு விடவும், உக்காந்து சாப்பிடவும் மட்டும் எனக்கு பெர்மிட் பண்ணு. அது போதும்”
“அவ்வளவு நல்லவரா பாஸ் நீங்க?” விழிவிரித்து தொடரப் போனவளை,
“டைம் ஆகுது ஷா… வா கோவிலுக்கு போகலாம்” எழுந்தபடியே தன்கைகளை நீட்டி அழைக்க,
“ஹுஹும்… இப்படியெல்லாம் கை பிடிச்சிட்டு போனா பாட்டி திட்டுவாங்க… இப்ப அவங்ககூட கோவிச்சுட்டு நான் கீழே வந்துட்டேன். அந்த கோபத்துல இதுவும் தெரிஞ்சா இன்னும் திட்டு விழும்” வெகுளியாக புலம்பியபடியே எழுந்து அவனுடன் நடக்க ஆரம்பித்தாள்.
“ஏன் ஷா… நீ எப்பவும் இப்படிதானா? இல்ல உன் பாட்டி விசயத்துல மட்டும் இப்பிடியா?” அடக்கப்பட்ட சிரிப்பில் அசோக் சந்தேகம் கேட்க,
“அது என்னமோ அவங்க மனசு வேதனை படுற மாதிரி எதுவும் செய்ய நினைக்க மாட்டேன். அப்பிடியே பழகிப் போயிடுச்சு” பேசியபடியே அவனுடன் மலையேற ஆரம்பித்தாள் வைஷாலி.
இருவரும் பேசிக்கொண்டே அத்தனை மெதுவாக அன்னநடை பயின்று மேலேற, வைஷாலியின் பேச்சு முழுவதும் அவளது பாட்டியில் வந்து முடிந்தது.
இருவரும் தங்களின் சுமூக நிலையை அடிக்கடி ஒருவரையொருவர் கிள்ளிப் பார்த்தும் உறுதி செய்து கொண்டனர். வாழ்க்கையின் ஆரம்பமே போர்க்களமாக இருக்கின்றதே என பயந்தவளும், வெட்டி விட்டு ஒளிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவனும் சேர்ந்து சிரித்தது உலக அதிசயம்தான்.
இருவரையும் எப்படி சமதானம் செய்வது எனத் தவித்திருந்த பெரியவர்களுக்கு, புன்சிரிப்புடன் இவர்கள் வருவதை பார்த்து அத்தனை ஆனந்தம்…
நண்பகலில் இருவரும் சேர்ந்தே நிச்சய மோதிரத்தை நகைக் கடைக்கு சென்று வாங்கி வர, மாலையில் அன்னபூரணி வீட்டில் முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.
வைஷாலியின் பிறந்தநாள் பரிசாக பிளாட்டினம் கைச்செயினை, அசோக் தன்கைகளால் அவளுக்கு அணிவித்து விட, அன்றைய சந்தோஷ அதிர்வுகள் நீண்டுகொண்டே போனது.
“நேத்து நைட் உங்க கார்ல ஏறாம இருந்திருந்தா என்ன ஆகியிருக்கும் அகி?” மீளாத மகிழ்ச்சியில் வைஷாலி கேட்க,
“சிம்பிள் ஷா! என்னோட ஆன்ட்டி வைரஸ் வேலிடிட்டி இன்னும் கொஞ்சநாள் கூடிப் போயிருக்கும்…” சிரிக்காமல் அவளை சீண்ட,
“நான் அவ்வளவு மோசமான வைரஸா?” இவள் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு மிரட்ட,
“வொய் நாட்? இந்த ஒருமணி நேரத்துல எத்தன தடவ, நான் பல்லைக் கடிச்சு பொறுமையா இருக்குறது… ஷப்பா செம கடிப்பா…” முகத்தை சுருக்கி பழிப்பு காட்டி அவளின் முறைப்பை பரிசாக வாங்கிக் கொண்டான்.
காலையில் அனலாய் கொதித்தவன், மாலையில் மங்கையின் அருகில் பனியாய் உருகி நின்றான். வேண்டாம் என்று விலகிப் போனாலும் இணைத்து வைத்தது விதியின் செயலன்றி வேறு எதைச் சொல்ல…
வைஷாலியுடனான ஒவ்வொரு வார்த்தையிலும் அசோக்கின் அன்பு மட்டுமே பிரதிபலிக்க, அதனை கண்டு ஆனந்தமும் பெருமையும் அன்னபூரணி பாட்டிக்கு…
நிச்சயத்தை முடித்துக்கொண்டு சென்னைக்கு பயணப்பட்டவன் திருமணத்தன்று வருவதாக விடைபெற்று சென்றான்.
திருமணத்திற்கான ஆடைகள், நகைகள் எடுக்கும் பொறுப்பை முழுக்க அன்னையிடம் அவன் ஒப்படைக்க, தங்கமணி மருமகளை துணைக்கு அழைத்துக் கொண்டு அவளுக்கு பிடித்தமானதையே மணமக்களுக்கு தேர்ந்தெடுத்தார்.
வேலைபளுவின் காரணமாக தொலைபேசியில் கூட அசோக் பேசவில்லை. ஒரே ஒருமுறை மட்டும் வீட்டுத் தொலைபேசியில் அழைத்து வைஷாலியிடம் பேசினான்.
“ப்ராஜெக்ட் முடியுற டைம் ஷா! மேரேஜ்க்கு கன்டினியூஸ் லீவ் அப்ளை பண்ண இப்போ நான் ஆபிஸ் போய் ஆகணும்டா… சோ என்னை எதிர்பார்க்காம எல்லாமே நீங்களே பார்த்துக்கோங்க…” தன் நிலைமையையும் தயங்காமல் விளக்கிவிட, காரியங்கள் யாவும் அதன் போக்கில் தடையின்று நடந்தன.
மனபாரங்களுடன் திருமணத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்று மருகிய இருவரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் திருமண வாழ்வை வரவேற்க காத்திருக்க தொடங்கினார்.
துறையூர் கிராமத்தை ஒன்றுகூட்டி திருமணத்தை திருவிழாவாகவே நடத்தி விட்டார் அன்னபூரணி பாட்டி. தனது செல்லப் பேத்தியின் மகிழ்ச்சியை பார்க்க பார்க்க கண்கள் பனித்துப் போனது அவருக்கு… அசோக்கின் குடும்பத்தாருக்கும் அளவில்லா சந்தோசம்.
வாசலில் குபேரன் பொம்மை பன்னீர் தெளிக்க, மங்கள வாத்தியம் விண்ணை முட்ட, பெரியவர்கள் ஆனந்தக் கண்ணீருடன் ஆசீர்வாதம் செய்ய, நிச்சயித்த சுபமுகூர்த்த தினத்தில், வைஷாலியின் சங்கு கழுத்தில் பொன்மஞ்சள் தாலி பூட்டி தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் அசோக்கிருஷ்ணா…
புதுமணத் தம்பதிகளுக்கு இனிய இல்லறம் அமைய திருமண நல்வாழ்த்துக்களை கூறுவோம் நண்பர்களே…
(மதனன்-அன்பிற்கினியவன், கெளடிய வைணவ மரபில் கிருஷ்ணனின் பெயர்களில் ஒன்று)
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ…
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்…
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்…
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்…
வைபோகம் உன்னோடுதான்…