UYIRODU VILAIYADU 22

UYIRODU VILAIYADU 22
(ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரிசார்ட்கள், பயணியர் விடுதிகள், தனியார் பங்களாக்கள் பலவற்றில் போதை மருந்து, பாலியல் தொழில் என்பது சர்வ சாதாரணம். இவை, ‘invite’ ஒன்லி பார்ட்டிகள்.
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு, மனித கடத்தல் பாலியல் குற்றம் புரிவோர் மேற்சொன்ன இடங்களின் பினாமி சொத்துக்கள் என்பதை மறுக்க முடியாது. கருப்பு பணத்தை மோசடி செய்ய இந்த இடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் வருவதை நிறுத்தினால், கார்டெல்கள் இயங்குவது மிகவும் கடினமாகிவிடும்.இதற்கான தனி வலைத்தளங்களும், சில பல பிரபலங்களும் கூட இதன் பின்னணியில் இருக்கிறார்கள்.
சென்னையின் மிகப் பிரபலமான நட்சத்திர ஹோட்டலுடன் இணைக்கப்பட்ட பாரில், தடைசெய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ மற்றும் எல்.எஸ்.டி மருந்துகளை விற்பனை செய்த இரண்டு இளைஞர்களைப் போதைப்பொருள் புலனாய்வு பணியகத்தின் (என்.ஐ.பி) கைது செய்தனர்.
குறிப்பாக வார இறுதி நாட்களில் அவர்கள் கூட்டமாக இருக்கும்போது. போதைப்பொருள் பெட்லர்கள் ஒரு நட்சத்திர ஓட்டல்களில் தங்கள் விற்பனை தொடங்குவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். வெளியே தெரிய வருவது சில மட்டுமே…’ என்கிறார் மூத்த என்ஐபி அதிகாரிகள், டிஎஸ்பி டி. புருஷோத்தமன்.)
அத்தியாயம் 22
சிலர் வாய் திறக்கும் போதே, அவர்கள் எத்தனை பெரிய அறிவாளி என்பது புரிந்து விடும்.
‘இவர்கள் கூட எல்லாம் என்னைப் பழக வைத்து விட்டாயே இறைவா!….’ என்று மனதிற்குள் புலம்புவது போல், அவர்கள் மூவரும் புலம்பிக் கொண்டிருந்தனர்.
சரோஜினி ஹரிச்சந்திரன்!
ஏறக்குறைய பத்து வருடமாய் அந்தக் குழுவில் இருக்கிறார். ஆறு வருடமாய் குழு தலைவராகப் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு இருக்க, ரஞ்சித் ஈடுபட்ட எல்லா ஆபரேஷன் இவர் கைட் செய்தபடி நடந்தவை.
சரோஜினி, ரஞ்சித் இருவருக்கும் தேசப்பற்றும், ஒவ்வொரு ஆபரேஷன் பற்றிய புரிதலும், நன்கு இருந்தன என்பதால் வெற்றி இவர்கள் பக்கமே.
சென்ற முறை மட்டுமே, உடல் நலம் இல்லாததால் சரோஜினி பங்கேற்க முடியாமல் போக, அவர் திரும்ப வரும் வரை குழுவை வழிநடத்த தலைமை அனுப்பிய ஆள் குருவில்லா. அனுப்பாமலே இருந்திருக்கலாம் என்பது தான் பலரின் எண்ணம்.
முந்திரிகொட்டை, அரை வேக்காடு, பச்சோந்தி இப்படியெல்லாம் இருக்கும் மனிதர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அந்த ஆந்தை.
வெற்றி, பெயர் கிடைக்கும் என்றால் அந்த ஆபரேஷன் இவருடையது. மரணம், தோல்வி, பிரச்சனைகள் வந்தால் அது மற்றவரின் தலைவலி என்று மிக அழகாய் காய் நகர்த்துவதில் கெட்டிக்காரர்.
மற்றவர் உயிர் கொடுத்து உழைக்கும் உழைப்பின் மேல் நின்று, தன் வேலைக்கான ப்ரோமோஷனுக்கு பாதை அமைத்துக் கொள்பவர்.
பதவி ஆசை மட்டும் இருந்தால் போதாதது, அதற்கான நேர்மையான உழைப்பு, கிரிட்டிக்கல் திங்கிங், மற்றவர்களை முன் நிறுத்தி, ஏற்றி விடும் ஏணியாக, வழிகாட்டும் திசைகாட்டியாக, தன்னலம் என்பதே இல்லாமல் செயல்பட வேண்டியது என்று பல விஷயம் தேவைப்படும் இடம், இது போன்ற ஆபரேஷன்.
ஒன்றுமே தெரியாமல் குழுவை வழிநடத்த வந்த இவரால் மக்களும், இன்டெலிஜென்ஸ் அதிகாரிகளும் இறந்தது மட்டுமல்ல இப்படியொரு ரகசிய குழுக்கள் பல இந்தியாவிற்குள், இந்திய மக்களே அறியாமல் செயல்ப்பட்டு வருவதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கும்.
மனித உரிமை என்று மாபியா, தீவிரவாதிகளுக்கு, குற்றவாளிகளுக்கு ஆதரவாய் சிலர் கிளம்பி இருப்பார்கள். பொதுமக்களுக்கு இல்லாத மனித உரிமை, பாதுக்காப்பு இது போன்ற ஈன பிறவிகளுக்கேன்?
பொது மக்களைக் காக்க, வெளியே தெரியாமல் செயல்படும் இது போன்ற இன்டெலிஜென்ஸ் குழுக்கள் இல்லையென்றால், பேராசை என்னும் சுனாமி, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற அரக்கன், போதை மருந்து, மனித கடத்தல், பாலியல் தொழில் என்ற பூகம்பம், அதிகார துஷ்ப்ரயோகம் என்ற விஷம் நாட்டை மட்டும் அல்ல ஒவ்வொரு வீட்டையும் ஒட்டுமொத்தமாய் தாக்கி இருக்கும்.
வெள்ளம் பாய விடாமல், இது போன்ற மாய கரங்களின் அணை இருப்பதால் தான், நாட்டிற்குள் மக்கள் அமைதியாய் தங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது தானே!
இந்தக் கரங்கள் தடுப்பையும் மீறிக் கசியும் நீர் போன்றது தான் மீனம்பாக்கம், கோவை, பாராளுமன்றம், அமர்நாத் யாத்ரா, பாராமுல்லா, போதை மருந்து, ஆட்கடத்தல் என்று ஒவ்வொரு லிஸ்ட் பத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் நீள்கிறது.இதில் பாதிக்கப்படுவது குடும்பங்களே!… அப்பாவி பொது மக்களே!
ஏதோ கடைசி நொடியில் சரோஜினி, ரஞ்சித், ஹர்ஷன் தலையிட நடந்த மரணங்கள் விபத்தாய் மாற்றப்பட்டது.
டிமோஷன் கொடுக்கப்பட்ட குருவில்லா, சரோஜினிக்கு கீழ் பணி புரிய அனுப்பப்பட்டார். அதுவே அவருக்கு மிகப் பெரிய அவமானம் என்று இன்னமும் குதித்து கொண்டு, சமயம் வரும்போது சரோஜினியை பதவியை விட்டு விலக்க, உள் இருந்தே பல வேலைகளைச் செய்து கொண்டு இருந்தார் அந்த ஆந்தை.
ஆந்தை, அலுவலகத்தில் அவருக்கு இருக்கும் பட்ட பெயர். பெண்களை ஆந்தைபோல் வெறித்துப் பார்ப்பது, தேன் வழிவது போல் பேசி, கடலைப் போடுவதில் கெட்டிக்காரர். கண்களாலேயே துகில் உரியும் மாடர்ன் துச்சாதனன்.
வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்களுக்கும், நிச்சயம் இது போன்ற ஆந்தைகளை நன்கு தெரிந்து இருக்கும். வெளியே செல்லும் இடங்களில் இது போன்ற மனிதர்களை ஒவ்வொரு பெண்ணும் ஒரு முறையாவது தன் வாழ்வில் சந்தித்து இருப்பார்கள்.
இந்த ஆள் தன் வேலையை ஒழுங்காய் செய்தால், ஏன் பதவி பறிக்கப்படுகிறது? அது புரியாமல் உயிரைக் கொடுத்து வேலை செய்யும் சரோஜினி போன்ற பெண்ணையும், கீழே இழுத்து விட முயன்றுக் கொண்டிருந்தான்.
பொறாமை… தனக்கு கட்டளை இடும் இடத்தில் இருப்பது ஒரு பெண்ணா என்ற துவேஷம்.
இது போன்ற சூழ்நிலையையும், வேலைக்குச் செல்லும் பெண்கள் கடந்திருப்பார்கள். தந்தை, சகோதரன், கணவன், தோழன் என்று பெண்கள் தங்கள் சிறகுகளை விரிக்க ஆவண செய்யும், பக்க துணையாய் இருக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள்.
எப்பொழுது சான்ஸ் கிடைக்கும், மீண்டும் பெண்களை அடுப்படிக்கே அனுப்பலாம் என்று நேரம் பார்த்துக் காத்திருக்கும், பெண்ணை முடக்க ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கும் சில வக்கிரம் பிடித்தவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.
பெண்ணின் இடம் ரெண்டே ரெண்டு தான். ஒன்று சமையல் அறை. இன்னொன்று படுக்கை அறை என்று இன்னமும் கற்காலத்தில் வாழும் சில ஜந்துக்கள் சங்க தலைவர் இந்த ஆந்தை தான்.
“சரோஜினி!… இதெல்லாம் சரியே இல்லை…” என்றது ஆந்தை, சரோஜினி வகிக்கும் பதவிக்கு உண்டான மரியாதை எல்லாம் காற்றில் பறக்க விட்டு.
வயதில், அனுபவத்தில் பெரியவராம்!…
மற்ற இரு அதிகாரிகளுடன், ரஞ்சித் குழுவிற்கு எப்படி உதவ முடியும் என்று விவாதித்து கொண்டு இருந்த சரோஜினி, அதை நிறுத்தி விட்டு, “எது சார்?…” என்றார்.
விவாதத்தை இப்படி நடுவே புகுந்து நிறுத்தியதால், சரோஜினியின் குரலில் ஏகப்பட்ட கடுப்பு மிக நன்றாகவே தெரிந்தது.
ரஞ்சித்துக்கு உதவ காவல் துறையையோ, ராணுவத்தையோ இவர்கள் அணுக முடியாது. காரணம் இப்படியொரு குழு இந்தியாவில் இல்லவே இல்லையே!… எனவே ,இவர்கள் அதிகாரிகளை எங்கிருந்து துணைக்கு அனுப்பினால் சீக்கிரம் ரஞ்சித் குழுவிற்கு உதவ முடியும், எந்த அதிகாரி நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.
“இந்த ரஞ்சித் ஏதோ ஒரு கிராமத்தில், சொகுசாய் இருந்துட்டு, இப்படி சட்டென்று இந்த உதவி செய், அந்த உதவி செய் என்பது.” என்றது ஆந்தை.
“வாட் கம் அகைன்…. ரஞ்சித் சொகுசாய் க்ராமத்தில் இருக்காரா?..” என்றார் சரோஜினி திகைப்புடன்.
‘அட பாவி! ….’ என்று ஒரே சமயத்தில், மூவரின் மனதிற்குள் எழுந்த வார்த்தை இதுவாகத் தான் இருந்தது.
தூசி நிறைந்த காற்றானது, எப்பொழுதும் சுழன்று அடிப்பதால், குல்ஷன் மனைவி எவ்வளவு கவனமாய் சமைத்தாலும், அந்தச் சிறிய குடிசையில் தயாரித்து பரிமாறப்படும் உணவில், மணல் என்பது தவிர்க்க முடியாத உணவின் அங்கம்.
வெளியே சென்று சாப்பிடலாம் என்றால், உணவகத்தின் அளவுக்கு அதிகமான காரம் ஒற்றுக்கொள்ளாமல் அல்சர், கழிவுகளை வெளியேற்ற முடியாமல் வயிற்று வலி, ஒவ்வாமை என்று ஹாஸ்பிடலில், ரஞ்சித் குழு பல முறை ட்ரிப் ஏற்றும் அளவுக்குச் சென்ற நிகழ்வுகள் உள்ளன.
வீடியோ அழைப்பில் பேசும்போது சரோஜினியும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் ரஞ்சித்தும், அந்தக் குழுவும் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று.
சினிமா ஹீரோ மாதிரி இருந்தவன், எலும்பும் தோலுமாய், தெருவில் சுற்றும் பைத்தியக்காரன் மாதிரி அல்லவா தேய்ந்து போய் இருக்கிறான்.
இதற்கும் ரஞ்சித் அண்ணா விஜய் கோடீஸ்வரன். ரஞ்சித்துக்கு இந்த வேலை பார்த்துத் தான் அடுத்த வேலை சாப்பாடு என்ற நிலை கூட இல்லை. நாட்டின் மேல் உள்ள பற்றுக்காகத் தன்னையே, ஓடாய் உருக்கி உழைத்துக்கொண்டிருந்தான் அந்த வீரன்.
‘இது ரஞ்சித் குழு மட்டும் அல்ல, அண்டர்கவரில் உள்ள ஒவ்வொரு அதிகாரியும் அது எந்தச் சட்ட ஒழுங்கு, தேசிய பாதுக்காப்பு துறையாக இருந்தாலும் எதிர்கொள்ள வேண்டிய நிலை தான். இந்த அதிகாரிகளுக்கு மட்டும் உடல் என்ன இரும்பினாலா செய்யப்பட்டு இருக்கிறது?
வீட்டிற்குள் இருக்கும் நமக்கே காய்ச்சல், தலைவலி என்று வந்தால் அவதி படும்போது, சரியான உணவு இல்லாமல், நேரம் கெட்ட நேரத்தில் உறங்கி, அடிப்படை வசதி கூட இல்லாத இடத்தில் எல்லாம் பணியாற்றும் இந்த மாதிரி அதிகாரிகளின் உடல் நிலை….’ என்று எண்ணி பார்த்துப் பெருமூச்சு விட்ட சரோஜினி எழுந்த கோபத்தை கட்டுப்படுத்த வெகுவாய் போராடினார்.
பசி, தூக்கம் பாராமல், அந்தக் குடிசையில் மின்சாரம், மின்விசிறி கூட இல்லாமல் உறங்கி எழுந்து கஷ்டப்பட்டு கொண்டிருந்தவர்களைத் தான், சொகுசாய் இருப்பதாகச் சொல்கிறது இந்த ஆந்தை.
ஷர்ட் நுனி கூடக் கசங்காமல், ac அறைக்குள் இருந்து கொண்டு, உடன் பணி புரியும் பெண்களை வம்பிழுத்து கொண்டு, ஜொள் விடும் இந்தக் குரங்குக்கு என்ன தெரிய போகிறது ஒவ்வொரு பாதுக்காப்பு அதிகாரியும் நாட்டைக் காக்க படும் துயரம், வலி, வேதனை எல்லாம்!…
“என்ன செய்வது சார்… அந்த மாபியா கும்பலுக்கு அறிவே இல்லை பாருங்களேன்… இப்படி போதை மருந்து, ஆயுதம் கடத்த போகிறோம் என்பதை நம் உளவு துறைக்குச் சொல்லவில்லை என்றாலும், அட்லீஸ்ட் அங்கு இருக்கும் ரஞ்சித் கிட்டே சொல்லி இருக்கணுமா இல்லையா?” என்ற சரோஜினி குரலில் இருந்தது நக்கல் மட்டுமே.
சரோஜினி குரலில் இருந்த நக்கலை கண்டு கொண்ட, மற்ற இரு அதிகாரிகளும் மேஜை மேல் இருக்கும் கோப்பை பார்ப்பது போல் தலை குனிந்தவர்களின் கை வாயை மறைத்து இருக்க, சிரிப்பால் மின்னிய அவர்கள் கண்ணே சொல்லாமல் சொன்னது, சரோஜினி, அந்த ஆந்தையை, வைத்துச் செய்வதை அவர்கள் வெகுவாக ரசிக்கிறார்கள் என்று.
“உனக்குத் தெரியுது சரோ…. அதைக் கூட விடு. திடீரென்று இப்படி துணை அதிகாரிகள் வேண்டும் என்றால் எங்கே போவது?… அதை முன்னாடி சொல்லணும் என்ற அறிவு கூட அவனுக்கு இல்லை.” என்றது ஆந்தை.
‘யோவ்!… உன்னை ரஞ்சித் ரூம் கதவைச் சாத்திட்டு, வச்சி கும்மி எடுத்ததில், தப்பே இல்லை. கையைக் காலை உடைத்து ஆறு மாதம் ஹாஸ்பிடலில் படுக்க வச்சிருக்கணும். நீ தான் என்னைப் பெத்து பெயர் வச்சது மாதிரி, சரோவாம் இல்லை சரோ…’ என்று மனதிற்குள் தாளித்து கொண்டு, முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாய் இருந்தார் சரோஜினி.
நிறைய அலுவலகங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தான் இது போன்ற ஜொள் மன்னர்கள், தானாகவே உரிமை எடுத்துக் கொள்ளும் வழிச்சல் பார்ட்டிகள். தாங்கள் வழியும் பெண்களுக்கு இதெல்லாம் பிடிக்கிறதா, இல்லை மனதிற்குள் குமுறி கொண்டு இருக்கிறார்களா என்பதைஇ கூடத் தெரிந்து கொள்ளாமல், அப்படியே தெரிந்தாலும் இப்படி வம்பு இழுப்பதில் அல்ப சந்தோசம் அடைவதை எல்லாம் படிப்பிற்காகவும், வேலைக்காகவும் படி தாண்டும் பெண்கள் சந்தித்து தான் ஆக வேண்டும்.
“என்ன செய்வது சார்… போன முறை நடந்த கூத்துக்குப் பிறகு(நீ நடத்திய கூத்துக்குப் பிறகு) மாபியா குழு சுதாரிச்சிட்டாங்க. போன முறையைவிட, இந்த முறை அதிக ஆட்களை அனுப்ப போகிறோம் என்று சொல்லாமல் செய்யறாங்க பாருங்களேன்…” என்றார் சரோஜினி.
சூழ்நிலைக்கு ஏற்ப, உதவி கோருவதெல்லாம் மாறத் தான் செய்யும். இதுக்காகப் பெட்டிஷன் மனு போட்டு, ஒரு ஆறு மாதத்தில் உதவி ஏற்பாடு செய்கிறேன் என்று தான் சொல்ல முடியுமா?
இப்படி செல்லும் ஒவ்வொரு அதிகாரியின் உயிருக்கு அந்தந்த டீம் லீடரே பொறுப்பு. எந்த நேரத்திலும் உயிர் இழக்க நேரிடலாம் என்று தெரிந்தே தான், சரோஜினி மாதிரியானவர்கள் தங்கள் அதிகாரிகளை ஆபத்தை நோக்கி அனுப்புகிறார்கள். அந்த அதிகாரிகளும் அதை உணர்ந்தே தான் செல்கிறார்கள் என்றாலும், தான் அனுப்பிய அதிகாரி இறந்து விட்டார் என்பது குற்றஉணர்ச்சிக்கு வழிகோலும்.
தாய் நாட்டிற்க்காகச் செய்யப்படும் தியாகம் தான் என்றாலும், அப்படி குற்ற உணர்ச்சி கொண்டால் தான் இவர்கள் மனிதர்கள். அடுத்த ஆபரேஷன் நடக்கும்போது இன்னமும் கவனத்துடன் இருப்பார்கள்.
பிளாட்டோ சொன்னது போல், ‘necessity is the mother of invention/ தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ என்பது போல் அந்தந்த சூழ்நிலையே சரோஜினி போன்றவர்களின் யோசிக்கும் திறனை அதிகப்படுத்தும்.
இதைப் பற்றியெல்லாம் அறியாமல் உளறிக் கொண்டு இருக்கும் ஆந்தையைச் சரோஜினி சமாளிக்கும் பாங்கினை கண்டு, மற்ற இரு அதிகாரிகளும் வாய் விட்டே சிரித்து, கடைசி நொடியில் சிரிப்பை இருமல் மாதிரி மறைத்தார்கள்.
அதிலும் அந்த இரு அதிகாரிகளில் ஒருவரான பெண் அதிகாரி சட்டென்று தன் சுடிதாரை சரி செய்வது போல் கீழே குனிந்து சத்தம் வராமல் வயிற்றை பிடித்துக் கொண்டு மேஜை மறைவில் கண்ணில் நீர் வரும் வரை சிரித்தார்.
அந்த ஆந்தை விட்ட ஜொள்ளில், கொடுத்த டார்ச்சரில் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த அந்த அலுவலக அதிகாரி அவர்.
அனுமதி பெறாமல் போன் நம்பர் எடுத்து, இரவு ரெண்டு மணிக்கு அழைப்பு விடுவது,
‘இந்த உடை உனக்குச் சிக்குன்னு எடுப்பாய் இருக்கு.
‘யு ஆர் blooming.
நைட் தனியாகவா படுகிறே?…
அந்த ஹோட்டலுக்கு சாப்பிட போறேன் கூட வரியா?… எனக்குப் புல் மீல்ஸ் சாப்பிடணும்.
நீ பாரிஸ் பார்த்து இருக்கியா?…
என்ன சாப்பிடுறே?… உடம்பை பிட்டா வச்சிருக்கே!…
இலியானாவுக்கு இருக்கும் ஸிரோ சைஸ் இடுப்பு உனக்கு…’ என்று தினமும் நேரில், வாட்ஸாப்பில், இரவு அழைப்பு விடுத்து, ரெட்டை அர்த்தம் தெறிக்கும் ஹராஸ்மெண்ட்.
‘ஏன் என் அழைப்பை ஏற்கவில்லை, ஏன் என் வாட்ஸாப்ப் மெசேஜுக்கு ரிப்லை செய்யவில்லை?…’ என்று காலையும் விடாமல் தொடரும் தொல்லை அந்த ஆந்தை.
பணி புரியும் ஒவ்வொரு பெண்ணும் பதினொன்றுக்கும் மேற்பட்ட harassment வகைகளால் தங்கள் பணி புரியும் இடத்தில் பாதிக்கப்படுவதாக அறிக்கைகள் சொல்கிறது. கொடுமைப்படுத்துதலின் ஒரு வடிவமான துன்புறுத்தல்/harassment, சில பணியிடங்களில் துரதிர்ஷ்டவசமாய் தினமும் நிகழும் ஒன்று.
பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் செய்யத் தயங்குகிறார்கள். கொடுமைப்படுத்துதல் மற்றும் துன்புறுத்தல் நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்பலாம், ஆனால் பயம் அவர்களை உறைய வைக்கிறது.
தொடர் பாலியல் துன்புறுத்தலின் விளைவு எரிச்சல் ஆரம்பித்து, தீவிர மனச்சோர்வு வரை செல்ல வாய்ப்புண்டு. தங்கள் சுயமரியாதையையும் மன உறுதியையும் இழக்க நேரிடும்.பணிகளில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாத நிலை, சீரற்ற நேரக்கட்டுப்பாடு, வருகை குறைவு, அர்ப்பணிப்பு இல்லாமை, குறைந்த செயல்திறன் ஆகியவை ஏற்படும். இது இறுதியில் ராஜினாமா செய்ய வழிவகுக்கும். இவை அனைத்தும் நிறுவனத்தின் செயல்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கூடுதலாக, தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் கவலைகள் வெளிப்படுகின்றன.
பாலியல் துன்புறுத்தப்பட்ட நபர்களும் பல காரணங்களுக்காகக் குற்ற உணர்ச்சியைக் ஆளாகிறார்கள். நாம் பேசிய வார்த்தை, உடுத்தும் விதம்மூலம் அந்தப் பாலியல் தொல்லைகளைத் தொடங்கியவர்கள் தாங்கள் தானோ என்ற அச்சம் அவர்களைக் கூனி குறுக செய்து விடும்.
ஒருவேளை இதைப் பற்றிப் புகார் அளித்தால் கூட, தீர்ப்பின் பயம், வேலையை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் தங்கள் நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ இந்தப் பிரச்னையைச் சொல்ல முடியாமல் மனதிற்குள் உழன்று கொண்டிருப்பார்கள்.
இதன் விளைவாக, பதற்றம், கோபம், பயம் மற்றும் விரக்தி ஆகியவை தலைவலி, குமட்டல், மனச்சோர்வு, தூக்கமின்மை , உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்சனைகளும் பெண்களுக்கு ஏற்படும்.
இரவில் இப்படி கேவலமான அழைப்பு கொடுக்கும் தொல்லை தாங்க முடியாமல், உறக்கம் என்பதே கூட இல்லாமல் போக, காலை அலுவலகத்தில் இதுவே தொடர்ந்தால் ஒரு பெண்ணின் மனமானது எந்த அளவிற்கு பாதிக்கப்படும்.
கத்தி எடுத்துக் குத்துவது கூட ஒருமுறை தான் வலிக்கும்.
நொடிதோறும் கத்தியால் திரும்பத் திரும்பக் குத்தப்படுவது போன்ற அவலம், இது போன்ற பாலியல் துன்புறுத்தல்கள். இது உணர்ச்சிகளை மட்டுமல்ல, ஒரு நபரின் உடல், மன நலனையும் பாதிக்கும் திறன் கொண்டது.
இந்தச் சூழ்நிலையை வெளியே காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும், அது சிறுமியோ, பெரியவர்களோ எதிர் கொண்ட வண்ணம் தான் இருக்கிறார்கள்…’ என்று சரோஜினி சொன்னது நினைவுக்கு வரப் பெருமூச்சொன்று அந்தப் பெண் அதிகாரியிடமிருந்து வந்தது.
“நீ இப்படி கஷ்டப்படுறது பார்க்க ரொம்ப மனசுக்கு பாரமாய் இருக்கு..” என்றது ஆந்தை, சரோஜினியிடம் குரலில் வருத்தத்தைக் காட்டி.
‘தோடா!… ஆடு நனையுதேன்னு இந்தக் கிழ ஓநாய், ரொம்பவும் பீல் செய்யுதே!… இப்போ உன் கிட்டே வந்து நான் சொன்னேனா எனக்கு இந்த வேலை கஷ்டமா இருக்குன்னு?… இஷ்டப்பட்டு செய்யும் வேலையில், கஷ்டம் எங்கிருந்துடா வரும் கூமுட்டை?’
“அதனால்…. இருக்கும் ஆட்களை வைத்துக் கொண்டு அந்த ரஞ்சித்தை சமாளிக்க சொல்லிடு…” என்றது அந்த அறிவாளி.
‘அதானே பார்த்தேன்!… உனக்கு ரஞ்சித் திரும்ப வரக் கூடாது… இந்த ஆபரேஷன் தோல்வி அடைந்தால், அதை வைத்து என்னைப் பதவி இறக்கிடலாம். ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கப் பிளான் நல்லாவே தான் போடுறேடா!…’
“சார்!… அப்படி சொல்லும் அதிகாரம் நமக்கு இல்லை… இப்படி நாம் அனுப்பும் குழு, உதவி என்று கேட்டால், அவர்கள் கேட்பது இமய மலையாகவே இருந்தாலும், அதைக் கொடுப்பது தான் நம் கடமை.” என்றார் சரோஜினி.
“கேட்டுடுவானா?… யார் அப்பன் வீட்டு சொத்து இமய மலை… அதை இவனுக்குக் கொடுத்தால், அதை வைத்து என்ன சாதித்துடுவானாம்?” என்றது ஆந்தை.
சரோஜினிக்கு தலையை எங்கே முட்டிக் கொள்ளலாம் போல் இருக்க, மற்ற இரு அதிகாரிகளும் ஜன்னலைத் திறந்து கொண்டு நான்காவது மாடியிலிருந்து குதித்தாவது, தப்பி விடலாமா என்று தீவிரமாக யோசிக்கவே ஆரம்பித்து விட்டார்கள்.
“சார்!… ஜஸ்ட் figure of speech சார்… ஒப்புமை கூறுவோம் இல்லையா அதே போல் சார்… உதாரணத்திற்க்கு சொன்னேன் சார். அதுபோல் எவ்வளவு கஷ்டமான உதவியைக் கேட்டாலும், அதைச் செய்யத் தான், இங்கே ac அறையில் நாம உட்கார்ந்திருக்கோம். ஆபரேஷன் மானிட்டர் செய்வது, மனித வள, டெக் சப்போர்ட் கொடுப்பது தான் நம் வேலை சார். உதவி வரவில்லை என்று ரஞ்சித்தோ அவர்கள் குழுவில் யாராவதோ புகார் அளித்தால், தேச துரோக வழக்கில் நம்மைக் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் சார்… நம்ம பணி ஒப்பந்த பத்திரத்திலேயே இதெல்லாம் இருக்கே சார் .” என்றார் சரோஜினி.
குழந்தைக்கு இதைச் சொன்னால் கூடப் புரிந்து கொள்ளும். என்ன வேலை செய்கிறோம், எதற்கு அங்கே இருக்கிறோம் என்பது கூடத் தெரியாத வடிகட்டின முட்டாளுக்கு எல்லாம் பதவி கொடுத்தால் இப்படி தான்.
“அது எப்படி தாபாவில் நிறுத்துவாங்க?.” என்றது ஆந்தை.
‘அடுத்த ரவுண்டு… வேலை செய்ய விடுடா டேய்…’
“ஹ்ம்ம்!… பிரேக்கில் கால் வைத்துத் தான்.’ என்று மனதிற்குள் கவுன்ட்டர் கொடுத்த சரோஜினி,
ரஞ்சித் அங்கே டிரைவர்களும் மனிதர்கள், தொடர்ந்து ஓட்டுவதால் ஏற்படும் பிரச்சனை, உடல் உபாதை என்று சொன்னதை, இங்கே சரோஜினி விளக்கிக் கூறினார். ‘Great minds think alike’ என்பது இது தானோ!…. ரஞ்சித் விளக்கிச் சொல்லாமலே தாபாவில் வண்டி நிற்கும் காரணத்தை அறிந்திருந்தார் சரோஜினி.
அதனால் தான் அவர் பல குழுவை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறார்.
“அது என்ன இந்தப் பத்து தாபா மட்டும் ஸ்பெஷல்?… அந்தக் கிராமத்திலிருந்து சென்னை வரை ஆயிரக்கணக்கான தாபா இருக்கு…இந்தப் பத்தில் தான் நிற்பாங்க என்று என்ன guarntee?”
‘யோவ்!… guarentee எல்லாம் கொடுக்க அந்தக் குழு, என்ன குக்கர் வியாபாரமா செய்யறாங்க?… இப்படி நடந்தால், அப்படி நடந்தால் என்று இதெல்லாம் மைண்ட் கேம் தானே!… செஸ் மாதிரி எதிராளியின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்கும் என்று யோசித்து செயல்படுவது தானே!…’
“சார்! …. அந்தக் கிராமத்திலிருந்து இந்தத் தபாக்களை அடைய ஏறக்குறைய பதினான்கு மணி நேரம் ஆகும் சார்… ஒரு மனித உடலின் அதிகபட்ச ஸ்டாமினா இவ்வளவு நேரம் இருப்பதே அதிகம். அதை வைத்துத் தான் இந்த இடங்களைச் சொல்லி இருக்காங்க. சப்போஸ் இந்த இடங்களில் வண்டி நிற்கவில்லை என்றால், நீங்கள் சொன்ன அந்த ஆயிரம் தாபாவில் ஏதாவது ஒன்றில் நின்று தானே ஆக வேண்டும்!… அதற்கு ஏற்றார் போல் பிளான் மாற்றுவார்கள்.
எந்தத் தாபாவிலும் நிற்கவேயில்லை என்றால் பொது மக்கள் அதிகம் இல்லாத இடமாய் பார்த்து, ஹைவெயில் அட்டாக் நடத்தி லாரியை மடக்கி பிடிப்பார்கள்.
எல்லாமே ட்ரையல் அண்ட் எரர் தான் சார்… 100 சதவீதம் நாம் வெல்வோமா, தோற்போமா என்பதற்கு எல்லாம், guarntee எதிர் பார்த்து எல்லாம் இப்படி ஆபரேஷன்னில் இறங்க முடியாது. எதுவாக இருந்தாலும் அது நம் அதிகாரிகளின் மரணமாய் இருந்தாலும் அதை ஏற்று கொள்ள தான் வேண்டும்.” என்ற சரோஜினியின் குரலில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.
சற்று நேரம் அமைதியாக இருந்த குருவில்லா, “அப்போ இந்தப் பத்து தாபாவுக்கும் ஆட்களை அனுப்புவதற்க்கு பதில், இங்கே உள்ள ராணுவ தளத்திலிருந்து, 10 drone அனுப்பலாம் இல்லையா?… இது ஆட்களை வேவு பார்க்க அனுப்புவதை விடச் சுலபம் இல்லையா?… இன் திஸ் ஏஜ் காபி டெக்னாலஜி நாம கூட அப்டேட் ஆகணும் சரோ… இன்னும் பழைய ஐடியா வச்சிட்டு யோசிப்பது வீண்.” என்றது ஆந்தை சரோஜினியை மட்டம் தட்டி விட்டதாய் நினைத்துக் கொண்டு.
“சார்!… நாம ராணுவம் கிடையாது. அவங்க கிட்டே drone இருக்கா, இல்லையா என்பதை மிக ரகசியமாய் வைத்திருப்பார்கள். நாம் சென்று கேட்டவுடன் இந்தாங்க என்று சாக்லேட் மாதிரி தூக்கி கொடுக்கமாட்டாங்க. அதற்கென்று PROTOCOL/நெறிமுறை இருக்கிறது.
India’s Harop Defence Israel நாட்டிடமிருந்து வாங்கி இருந்தோம். ருஸ்டோம்/rostom MALE or Medium Altitude Long Endurance drone, HALE or High Altitude Long Endurance drone போன்றவை இருக்கிறது. இதெல்லாம் கோடிக்கணக்கான மதிப்பு கொண்டவை. எங்கே எதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது.
இது எல்லாவற்றையும் விட, இந்தியாவில் இல்லவே இல்லாத ஒரு துறையானா நாம், எப்படி ராணுவத்திடம் உதவி கேட்க முடியும்? இதையெல்லாம் நாம் தலைமைக்கு விளக்கிச் சொல்லி, அவர்கள் ராணுவத்திடம் பேசி, அவர்கள் மீட்டிங் போட்டு அதை அனுப்புவதற்குள் எல்லாமே முடிந்து விடும். விஷயம் சற்று வெளியானாலும் நமக்குத் தான் பிரச்சனை.
மினி யுஏவி வகை, நேத்ரா டிஆர்டிஓ உருவாக்கிய குவாட்கோப்டர் மட்டுமே காவல்துறை, பாரா இராணுவ சேவைகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இவை பறக்கும் நேரமே அதிகபட்சம் இருபது நிமிடம் மட்டும் தான்.
குறுகிய விமான நேரங்களுக்கான காரணம், முக்கியமாக ஒரு ட்ரோன் அல்லது குவாட்கோப்டரைப் பறக்கத் தேவையான ஆற்றலின் அளவிற்குக் கீழே உள்ளது. கத்திகள் மிகக் குறுகியவை, எனவே அவை பறக்கத் தேவையான லிப்டை உருவாக்க உயர் ஆர்.பி.எம்மில் சுழற்ற வேண்டும்.
இந்த ராணுவ தளத்திலிருந்து இந்தத் தாபாக்கள் அதைத் தாண்டிய இடங்களுக்கு இவற்றைச் செலுத்துவது முடியாத காரியம். அதுவும் பத்து drone வானத்தில் பறந்தால், அதை உடனே வீடியோ எடுத்து அப்லோட் செய்ய ஒரு கூட்டமே தெருவில் இருக்கு.
மணல் புயல் அதிகமாய் அடிக்கும் இடம் இவை. சூறாவளி காற்றை மணல் புயலை எல்லாம் இந்த டிரோன்களால் எல்லாம் சமாளிக்க முடியாது. இப்படி நிறைய இருக்கு சார் இதில்…” என்றார் சரோஜினி விம், சபீனா போட்டு விளக்காத குறையாய்.
“சரி…சரி நீ யோசிச்சு பிளான் போட்டுச் சொல்லு…. எனக்கு இந்த ரஞ்சித்தால் தலைவலியே வந்துடுச்சு… பிரேக் எடுத்துட்டு, காபி குடிச்சுட்டு வரேன் …” என்றவன் கிளம்ப, பிடித்து வைத்திருந்த மூச்சை மூவரும் வெளியிட்டார்கள்.
அந்த அறையிலிருந்து வெளியேறிய அந்த ஆந்தையின் முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண் அதிகாரி. கண்களில் அப்பட்டமான கோபம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.அவர் கையை ஆதரவாகப் பற்றியது சரோஜினியின் கரம்.
அதே சமயம் விமானத்தில் பறந்து கொண்டிருந்த சம்யுக்தா, ஜன்னல் வழியாக வெளியே தெரிந்த வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். சம்யுக்தா கரத்தை ஆதரவாகப் பற்றிக் கொண்டிருந்தது ஈஸ்வரின் கரம்.
ஹேமா, ஈஸ்வர் எவ்வளவு சொல்லியும், சம்யுக்தாவின் இந்த யோசனை நிற்பதாயில்லை.
“எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் சம்யு… உன்னையே வருத்திக் கொள்ளாதே!…” என்ற ஈஸ்வரின் பேச்சு செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆனது.
சம்யுக்தா கண்களில் குழப்பம், யோசனை என்று ஆயிரம் இருந்தது. விடுவிக்க முடியாத ஏதோ ஒரு புதிரை விடுவிக்க முயலும் தோரணை. தெரிந்திருக்க வேண்டிய ஏதோ ஒன்று தெரியாமல். புரிந்திருக்க வேண்டிய ஏதோ ஒன்று ஆட்டம் காட்டி கொண்டிருக்க, அது எண்ண என்ற தீவிர யோசனையில் இருந்தாள்.
self analysis. தன்னை சுற்றி பல வருஷங்களாய் குறிப்பாய் கடந்த எட்டு மாதத்தில் நடத்த பல விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று முரணாகத் தோன்ற, மூன்றாவது நபரின் இடத்திலிருந்து சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள் சம்யுக்தா.
தன் தாயின் மரணத்திற்கு முன், மரணத்திற்கு பின் என்று தன் வாழ்க்கை பாதை மாற்றப்பட்ட நொடியிலிருந்து பல விஷயங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
‘தன் ஒருத்திக்கே இத்தனை பாதுக்காப்பு அப்பா கொடுத்திருக்கிறார் என்றால் அது எதற்கு? இவர்களும், விக்ரமும் தன் பாதுகாப்பில் இத்தனை அக்கறை காட்ட வேண்டிய அவசியம் என்ன?… தன் தாயின் மரணம் விபத்து தானா?
மரணத்திற்கு முன் சில வாரமாய், அம்மா ஏன் அமைதியின்றி இருந்தார்கள்?. சதா யோசனையில் ஏன் இருந்தார்கள்?… நானும் ஹேமாவும் டூர் கிளம்பிய பிறகு என்ன நடந்தது?… எப்படி பராமரிப்பு பணி நடந்து கொண்டிருந்த ரெண்டாவது பங்களா, அம்மாவுக்கு விபத்து நடந்த அதே நாளில் தீக்கிரையானது?
சிலிண்டர் வெடித்து விபத்து என்று சொன்னார்களே!… பராமரிப்பு பணி நடக்கும் பங்களாவில் எப்படி சிலிண்டர் வந்திருக்க முடியும்?… டூர் கிளம்புவதற்கு முன் நாள் கூட நானும் ஹேமாவும் அங்குச் சென்று சுற்றி பார்த்தோம்… அப்பொழுது நெருப்பு பற்றக்கூடிய எந்தப் பொருளுமே அங்கே இல்லையே!.
அம்மா எப்பொழுதுமே ஸெல்ப் டிரைவிங் தானே செய்வார்கள்? விபத்து நடந்த அன்று டிரைவர் ஏன் காரை ஒட்டிச் சென்றார்? டீக்குடிக்க ரோட்டோரமாய் காரை நிறுத்தி விட்டு, இறங்கி சென்ற ரெண்டே நொடியில் பெட்ரோல் ஏற்றி வந்த டேங்கர் லாரி, ரோட்டை விட்டு வெகுதொலைவில் நிறுத்தியிருந்த கார்மேல் எப்படி மோத முடியும்?
கார் ஒட்டி வந்த டிரைவரும் ஒரே வாரத்தில் மஞ்சகாமாலை வந்து இறந்து விட்டதாக வந்த தகவல் உண்மை தானா?… பதினைந்து வயதில் இதையெல்லாம் யோசித்து பார்க்கவில்லையே!. அன்னை இறந்து விட்டார் என்ற ஒற்றை புள்ளியில் எண்ணம், சொல், செயல் எல்லாம் உறைந்து தானே போய் இருந்தது.
தன் தாயின் மரணத்திற்கும், அப்பா இப்படி என்னைச் சுற்றி இரும்பு கோட்டையே கட்டி இருப்பதன் அவசியம் என்ன?
ஒன்றும் இல்லாததை நிழலை, நாம் தான் பூதம் என்று நினைக்கிறோமா?… ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்…’ என்று சொன்ன கதையாகத் தானே இருக்கிறது என் நிலை.’ என்று எண்ணி குழம்பிய சம்யுக்தா, ஈஸ்வரை பார்க்க, அவன் செல்வத்துடன் ஏதோ விவாதித்து கொண்டிருந்தான்.
ஈஸ்வரை கண்டதும் அது வரை இருந்த குழப்பம், பிரச்சனை எல்லாம் கூடத் தூரமாய் செல்வது போல் தோன்றியது சம்யுக்தாவிற்கு. சம்யுக்தாவின் குழப்பமான மனநிலைக்கு ஈஸ்வர் மருந்தாகி போனான்.
ஈஸ்வரை பார்த்துக் காரணமே இல்லாமல் சிரித்து, சிவந்து கொண்டிருந்தாள் சம்யுக்தா.
செல்வத்திடம் பேசியவாறே திரும்பிப் பார்த்த ஈஸ்வர், சம்யுக்தா தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டு, அடுத்த நொடி கண்ணடித்து, பறக்கும் முத்தம் ஒன்றையும் அனுப்பி வைக்க, முகம் சிவந்து வேறு பக்கம் பார்ப்பது போல் திரும்பிக் கொண்டாள் சம்யுக்தா.
‘இவனுக்கு மட்டும் நான் எப்படி தான் நான் பார்க்கிறேன் என்பது தெரியுமோ!… செல்லத் திருடு… இத்தனை பேர் இருக்கும்போது என்ன வேலை செய்யறான் பாரு…’ என்று இன்பமான அலுப்பு தோன்ற, அவளையும் அறியாமல் புன்னகைத்து கொண்டிருந்தாள்.
ஈஸ்வர் பார்க்காதபோது, அவனை ரசிப்பதும், அவன் பார்வை தன் பக்கம் திரும்பும்போது வேறு எங்கோ பார்ப்பதும் என்று காதலர்களுக்கே உண்டான விளையாட்டு அங்கு அரங்கேறி கொண்டிருந்தது.
‘யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.’
நான் அவளைப் பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள் என்ற திருக்குறளின் வரிகளை அங்கே மெய்ப்பித்துக் கொண்டிருந்தனர் அந்தக் காதலர்கள்.
கூட்டத்திற்கும் நடுவிலேயும் தங்களுக்கு என்று தனி பிரபஞ்சம் சிருஷ்டித்து கொள்ள காதலர்களுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்.
இது கூட்டு குடும்பங்களிலும் அன்றாடம் நிகழும் ஓரங்க நாடகம் தான். கூட்டு குடும்பங்களில் தனிமை கிடைப்பது அரிது என்னும்போது கண்களாலேயே காதல் பேசி அதில் நிறைவு அடையும் தம்பதிகள் தான் அநேகம்.
பிள்ளைகள் அருகில் இருக்கும்போது, கணவனின் தேடலுக்குப் பதிலை மனைவிகளின் கண்கள் அளிக்கும் விதமே அலாதி தான்.
கண்களால் காதல் பேசி, வாழ்க்கையை வர்ணமயமாக்கி கொள்ளும் முறை இந்திய பெண்களுக்கே உரித்தானது.
குடும்பத்தில் ஆயிரம் வேலைகளுக்கு நடுவே கூட, யாரும் அறியாமல் காதல் கவிதையே எழுதி விடும் அந்தப் பாங்கினை எதைக் கொண்டு வர்ணிக்க முடியும்.
கணவனின் கண்களில் உள்ள மின்னலை, அறியும் மனைவியர்களுக்கும், காதலனின் கண்களில் உள்ள ரகசியத்தை, உணரும் காதலிகள் மட்டுமே அறிய கூடிய வார்த்தைகள் அற்ற மொழி இது.
‘சம்யு!… இப்படி நீ காரணமே இல்லாமல், லூசு மாதிரி சிரித்து கொண்டிருப்பதை பார்ப்பவர்கள், உன்னை நிச்சயமா நட் போல்ட் கழன்ற கேஸ் என்று தான் நினைப்பாங்க… ஏன்டீ இப்படி, டூத் பேஸ்ட் விளம்பரத்துக்குச் சிரிக்கிறவ மாதிரி, ஈன்னு இளிச்சுட்டு இருக்கே!…’ என்று மனசாட்சி மண்டையில் தட்ட, அப்பொழுதும் சம்யுக்தாவால், தன் உள்ள பூரிப்பை, மன நிறைவை புன்னகையாக வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.
காரணமே இல்லாமல் சிரிப்பது ஒன்று காதலிலும், இன்னொன்று பைத்தியத்திலும் மட்டுமே சாத்தியமாகும். காதலும் ஒரு விதமான பைத்தியம் தானே.
‘த்தூ!… இது தேறாத கேஸ்…’ என்று நொந்து போய், உள்ளே போய் விட்டது மனசாட்சி சம்யுக்தாவின் மனசாட்சி.
மீண்டும் ஈஸ்வர் பக்கம் தன் பார்வையை திருப்பிய சம்யுக்தா, ஈஸ்வரை சந்தித்ததிலிருந்து, இன்று வரை உள்ள ஆறு மாதங்களை அசை போட ஆரம்பித்தாள்.
ஆறு மாதம்…
அவளின் வாழ்வில் மீண்டும் சொர்கமாய் இருந்த ஆறு மாதம்.
ஈஸ்வரின் மீது காதல் வந்து, அவனாகவே அவள் மாறிப் போன அந்த ஆறு மாதம்.
நேரம் போவது தெரியாமல், ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொண்டிருந்த காதலர்களுக்குக், நொடியாய் கரைந்து போன ஆறு மாதம்.
இனி சம்யுக்தா வாழ்வில், எண்ணி மகிழ இருக்க, கடைசியாய் மிஞ்சப் போவது இந்த ஆறு மாதம் மட்டும் தான் என்பதை அவளிடம் யார் சொல்வது ?
ஆட்டம் தொடரும்…